இலங்கை யுத்தம் அலை அலையாய் அகதிகளை உருவாக்குகிறது
By Nanda Wickramasinghe
21 August 2006
Back to screen
version
இலங்கை இராணுவத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட தற்போதைய
மோதல்கள், ஒரு சமூகப் பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மாவிலாறு
தண்ணீர் அனைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதன் பேரில், கொழும்பு அரசாங்கம் "மட்டுப்படுத்தப்பட்ட, மனிதாபிமான
நடவடிக்கை" என போலியாகக் கூறிக்கொண்டு ஜூலை 26ம் திகதி முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையால் 160,000
க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
புலிகளின் பிரதான இலக்குகள் மீது தொடர்ச்சியான விமான மற்றும் ஆட்டிலறித்
தாக்குதல்களை முன்னெடுப்பதற்கான சாக்குப்போக்குகள் எதிரிகளின் எதிர்த் தாக்குதலைத் தூண்டிவிட்டுள்ளன. கடந்த
வாரம் பூராவும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அரசாங்க நிலைகள் புலிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு
உள்ளாகியுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு அருகில் ஞாயிறுவரை நடந்த மோதல்களில் குறைந்தபட்சம் 130 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன்
பலர் காயமடைந்துள்ளனர். இராணுவம் நூற்றுக்கணக்கான LTTEயினரைக்
கொன்றுள்ளதாக கூறிக்கொண்ட போதிலும், சுயாதீனமான தகவல்கள் எதுவும் கிடையாது.
பத்தாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர். புலிகளின்
தாக்குதல்களைத் தடுப்பதற்காக இராணுவம் கண்மூடித்தனமாக விமான மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களையும் நடத்துவதால்
இந்த இடம்பெயர்வுகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. தீவின் வடக்கு மற்றும் கிழக்கு யுத்தப் பிராந்தியங்கள் ஏற்கனவே
இரு தசாப்த கால யுத்தத்தாலும் அதே போல் 2004 டிசம்பர் சுனாமி தாக்கியதாலும் பாழாகிப்போயுள்ளது.
உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை
ஏற்கனவே 312,000 ஆக உள்ளது.
கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த இராஜபக்ஷ
தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே இந்த வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. பல மாதங்களாகவே இராணுவமும்
மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளும், 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை கீழறுக்கவும்
மற்றும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களைத் தூண்டவும் ஒரு மூடிமறைக்கப்பட்ட யுத்தத்தில் ஈடுபட்டுவந்துள்ளன. மோசமடைந்தவரும்
நிலைமைகளுக்கு மத்தியில், ஏப்பிரலில் இருந்து ஜூலை மாதம் வரை 50,785 பேர் இடம்பெயர்ந்துள்ளதோடு மேலும்
7,439 பேர் அருகில் உள்ள தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஜூலை கடைப்பகுதியில் இருந்து, இந்த தொகை நாடகபாணியில் அதிகரித்து வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் 80,000 ற்கும் மேற்பட்ட மக்கள் இப்போது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கந்தளாய் மற்றும
சேருபுர ஆகிய பிரதேசங்களிலும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள வாகரையிலும் அமைக்கப்பட்டுள்ள
முகாங்களில் குவிந்து கிடக்கின்றனர். இந்த அகதிகளில் சுமார் 50,000 பேர் ஆகஸ்ட் 2 முதல் 4ம் திகதி வரை நடந்த
மோதல்களில் அழிந்துபோன கிழக்கு நகரான மூதூருக்கு அருகில் இருந்த வந்த அகதிகளாவர்.
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் இல்லத்தின் அலுவலர்கள் (யூ.என்.எச்.சீ.ஆர்.),
அனைத்து புதிய அகதிகளுக்கும் இடம் கொடுப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
யூ.என்.எச்.சீ.ஆர். பேச்சாளர் ஜெனீஃபர் பகோனிஸ், உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 11
அன்று, அதாவது மூன்று நாட்களுக்குள் 21,000 இலிருந்து 50,000 வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐ.நா. முகவரின் படி, தங்குமிடங்கள் பற்றாக்குறையின் காரணமாக சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கலாச்சார அபிவிருத்திக்கான முஸ்லிம் ஸ்தாபனம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின்
அப்துல் முஜீப், "மக்கள் இங்கு வருவதற்காக மோதல்களுக்கு மத்தியிலும் கிராமம் கிராமமாக நடக்கின்றனர்" என அல்
ஜஸீராவிற்கு ஆகஸ்ட் 9 அன்று தெரிவித்தார். ஒரு முகாமில் உள்ள 6,000 பேருக்கு 20 மலசலகூடங்களே உள்ளன.
குப்பைகள் குவிந்து வருவதோடு சூழ உள்ள நிலங்களிலும் அவை சிந்துகின்றன.
கந்தளாய்க்கு அருகில் உள்ள மிகப் பெரும் முகாமான பேரதுவெளி முகாமில், சுமார்
14,000 பேர் தார் பூசிய துணிகள், பிளாஸ்டிக் சீட்டுகள் மற்றும் தங்களால் தேடிக்கொள்ளக்கூடிய எதையாவது
பயன்படுத்தி அதன் கீழ் வாழ்கின்றனர். அவர்கள் முகாமைக் கடந்து ஓடும் ஒரு சேற்று நீரோட்டத்தில் இருந்தே
தண்ணீரைப் பெறுகின்றனர். அகதிகள், குறிப்பாக சிறுவர்கள் சுகவீயீனமடைவதாக அலுவலர்கள் கவலை கொண்டுள்ளனர்.
கிறிஸ்தவ சிறுவர் நிதியத்தின் பேச்சாளர் மார்க் நொஸ்பச் ஊடகங்களுக்குக்
குறிப்பிட்டதாவது: "இங்குள்ள பல சிறார்கள் தீவிராமன சுவாச நோயை உடையவர்கள். மற்றும் சொறி சிரங்கு மற்றும்
வயிற்றுப்போக்கு போன்றவை ஆரம்பிப்பதையும் நாம் காண்கின்றோம்." முகாம் நிரம்பி வழிவதாகவும் மற்றும் உணவு,
மருந்து மற்றும் நுளம்பு வலை போன்ற அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர்
தெரிவித்தார். அகதிகளில் குறைந்தபட்சம் 4,000 சிறுவர்கள் அவர்களது பெற்றோர் இன்றி உள்ளனர்.
மூதூரில் இருந்து வந்த அப்துல் ஹஜீன் தனது அனுபவத்தை தெளிவுபடுத்தினர்:
"ஏனையவர்களுடைய வீடுகளுடன் என்னுடைய வீடும் அழிந்துபோய்விட்டது. நாங்கள் ஒரு பாடசாலைக்குள் தஞ்சம்
புகுந்தோம், ஆனால், அதுவும் தாக்குதலுக்குள்ளாகியது." அவர் கந்தளாய் முகாமை அடைவதற்காக நான்கு நாட்கள்
சுமார் 30 கிலோமீட்டர்கள் நடந்தார்.
இன்னொரு மூதூர் வாசியான சலாம், தான் மீண்டும் வீடு திரும்பப் போவதில்லை என்றார்.
"அங்கு பாதுகாப்பு கிடையாது. முஸ்லிம்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்? அரசாங்கமோ அல்லது புலிகளோ
அதை செய்யப் போவதில்லை." மூதூர்வாசிகளில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாகும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள அகதிகள் எதிர்கொண்டுள்ள நிலைமை மிகவும்
மோசமானதாகும். ஒரு மதிப்பீட்டின்படி, மாவிலாறுக்கு அருகில் உள்ள ஈச்சிலம்பற்றின் மீது விமானப் படை குண்டுத்
தாக்குதல் நடத்தியதை அடுத்து 30,000 தமிழ் பொதுமக்கள் வாகரைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். வாகரையில் வசதிகள்
பற்றாக்குறையால், பலர் இன்னும் 60 கிலோமீட்டர்கள் நடந்து நடந்த மட்டக்களப்பு நகரை அடைந்துள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள நிலைமைகள் இராணுவத் தடையால் மேலும்
மோசமாகி வருகின்றது. இந்தத் தடை தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. யூ.என்.எச்.சீ.ஆர்.
பேச்சாளர் ஜெனீஃபர் பகோனிஸ், "கடுமையாக அமுல் செய்யப்படும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மனிதாபிமான
அமைப்புக்களால் செல்ல முடியாத பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கு நலன்புரி சேவையாற்றுவதிலேயே இப்போது
எமது அமைப்பு கடுமையாக அக்கறை செலுத்துகிறது" எனத் தெரிவித்தார். பல இடங்களில் உணவு மற்றும் தண்ணீர்
விநியோகம் ''கவலைக்கிடமான வகையில் குறைந்த மட்டத்தில்" உள்ளது என அவர் தெரிவித்தார்.
உதவி அமைப்புக்களின் விமர்சனங்களுக்கு மத்தியில், ஐ.நா. செயலாளர் நாயகம் கோபி
அண்ணான் ஆகஸ்ட் 16 அன்று நேரடியாக ஜனாதிபதி இராஜபக்ஷவை தொடர்புகொண்டு, புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிக்கு நிவாரண ஊழியர்களை அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும்
இதே பிரச்சினைக்காக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அழுத்தம் கொடுத்தனர். அரசாங்கம் கடந்த
வெளியன்று வாகரைக்கு அருகில் உள்ள புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை
மட்டுமே அனுமதித்தது.
வடக்கில், யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆகஸ்ட் 11 மோதல்கள் வெடித்ததில் இருந்து
40,000 ற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 15,000 முதல் 20,000 வரையான
மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலான கிளிநொச்சிப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். யூ.என்.எச்.சீ.ஆர். அறிக்கையின்படி,
சுமார் 9,500 பேர் மரங்களுக்கு கீழ் வெட்டவெளியில் வசிக்கின்றனர். அல்லது சமூக நிலையங்களில் வசிக்கின்றனர்.
சேரன் செல்லைய்யா, 85, மோதல்களில் இருந்து தப்புவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள்
கிளிநொச்சியூடாக நடந்து செல்வதாக புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையத்திற்கு ஒரு வாரத்திற்கு
முன்னர் தெரிவித்திருந்தார். வீதியில் கூட்டம் நிறைந்திருந்ததாகவும், தனது மகனால் மோட்டார் சைக்கிளை ஓட்ட
முடியாமல் தள்ளிக்கொண்டு நடந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார். தவமனிதேவி மஹாலிங்கம், 56, நாட்டின் உள்நாட்டு
யுத்தத்தின் விளைவாக, நான்காவது முறையாக தான் இடம்பெயரத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
அரசாங்கக் கட்டுப்பாட்டிலான யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் ஒரு அழிவு உருவாகி
வருகின்றது. பலாலி விமானத் தளத்தின் மீது புலிகள் செல் தாக்குதலை நடத்தியதை அடுத்து வடக்கு மாவட்டத்திற்கான
அனைத்து பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் ஊடாக செல்லும்
பாதை இணைப்பும் மூடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாண நகருக்குள்
நிற்பதோடு கடல் மார்க்மாக வெளியேறுவதற்கான நீண்ட பட்டியலிலும் இணைந்துள்ளனர்.
அரிசி, சீனி மற்றும் மரக்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளும்
ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளன. பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணை உட்பட எரிபொருள்கள், மிகவும்
குறைந்தளவிலேயே விநியோகிக்கப்படுகின்றன. பிரதேசத்தில் பெரும்பகுதி தொடர்ந்தும் மின்வெட்டுக்கு இலக்காகியுள்ளது.
வங்கிகள் தமது பணத்தை பாதுகாப்புக்காக பலாலி தளத்திற்கு நகர்த்தியதை அடுத்து, கடந்த வெள்ளியன்று வங்கிகள் பணம்
மீளப்பெறுகையை 1,000 ரூபாய்கள் (10 அமெ. டொலர்கள்) வரை மட்டுப்படுத்தியுள்ளன.
இராணுவம் பிரதேசம் பூராவும் பாதுகாப்பு கெடுபிடிகளை இறுக்கியுள்ளது. ஊரங்குச் சட்டம்
தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதோடு கடந்த வாரக் கடைசியில் ஒரு நாளைக்கு ஐந்து மணித்தியாலங்கள் மட்டுமே
தளர்த்தப்பட்டன. பெரும்பாலான ஊழியர்களால் கடமைக்கு சமூகமளிக்க முடியாமையினால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்
மருத்துவ சேவைகள் கடுமையாக தடைப்பட்டுள்ளன. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது அத்தியாவசியப்
பொருட்களைப் வாங்குவதற்காக, அருகில் உள்ள தீவுகளில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு செல்லும் ஒரு
குடும்பத்தில் ஒருவரையே இராணுவம் அனுமதிக்கின்றது.
உதவி அமைப்புக்களும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்க அலுவலர்களும்
கேட்டுக்கொண்டதன் பின்னரே, 4,000 தொன் உணவு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை சர்வதேச
செஞ்சிலுவை சங்க கண்காணிப்பின் கீழ் புதன் கிழமையளவில் யாழ்ப்பாணத்தை அடையும் விதத்தில் கப்பல் மூலம் அனுப்பி
வைப்பதாக இறுதியாக கடந்த வாரக் கடைசியில் அரசாங்கம் அறிவித்துள்ளது. |