World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On-the-spot report from Sri Lanka's war-torn Jaffna peninsula

இலங்கையின் யுத்தப் பிராந்தியமான யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து ஒரு நேரடி அறிக்கை

By our correspondents
18 August 2006

Back to screen version

வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த வாரம் பூராவும் உக்கிரமான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறுவது என்ன என்பது பற்றி மிகவும் குறைவான செய்திகளே, இராணுவம் மற்றும் அரசாங்க அறிக்கைகளில் தங்கியிருக்கும் கொழும்பு ஊடகங்களிலும் மற்றும் மிக சொற்ப நிருபர்களைக் கொண்டுள்ள சர்வதேச ஊடகங்களிலும் வெளி வந்துள்ளன.

மோதல்களின் அளவும் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தெளிவாகத் தெரியவில்லை. இராணுவப் பேச்சாளர் மேஜர் உபாலி இராஜபக்ஷவின் படி, 106 படையினரும் குறைந்த பட்சம் 700 புலிகளும் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளனர். புதனன்று புலிகளின் தாக்குதலுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலில் படையினருக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்ததாக அவர் நேற்றுத் தெரிவித்தார். இத்தகைய கூற்றுக்களை புலிகள் வழமைபோல் நிராகரித்துள்ளனர்.

அரசாங்க அதிகாரிகள் உடனடியாக இந்தப் பிரதேசத்தில் இரக்கமற்ற நடவடிக்கைகளை அமுல்படுத்தினர். உள்ளூர் தமிழ் மக்களை அடக்கவும் அச்சுறுத்தவும் படையினரால் பயன்படுத்தப்படும் சோதனை நிலையங்கள், தேடுதல் வேட்டைகள் மற்றும் அடையாள அட்டை சோதனைகள் போன்றவற்றால் நிறைந்த நிர்வாகத்திற்கு திக்குமுக்காடச் செய்யும் ஊரடங்குச் சட்டமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. குடாநாட்டின் சில பகுதிகளில், திங்கள் முதல் இந்த ஊடரங்கு சட்டம் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மட்டும் தளர்த்தப்பட்டிருந்தது. வியாழக்கிழமையும் இந்த ஊடரங்கு சட்டம் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்டிருந்தது.

இங்கு உணவுப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அரிசி, மா, இறைச்சி, மீன் மற்றும் பழ வகைகள் போன்ற அடிப்படைப் பொருட்கள் அரிதானவையாக உள்ளன. யாழ்ப்பாண அரசாங்க அதிபரான கே. கனேஷ், மாவட்டத்திற்கு உடனடியாக 5,000 மெற்றிக் தொன் அடிப்படை உணவுப் பொருட்களை அனுப்பிவைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். எவ்வாறெனினும், தெற்குக்கான பாதை இணைப்புக்கள் மோதல்களின் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு விநியோகமும் கடல் அல்லது ஆகாய மார்க்கமாகவே கொண்டுவரப்பட வேண்டும்.

வளர்ச்சியடைந்துவரும் அகதிகளின் அலையால் ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடி குவிந்து வருகின்றது. தீவின் கிழக்குப் பகுதிகளில் நடந்த முன்னைய மோதல்களைப் போல், இராணுவம் விமானத் தாக்குதல்கள், பல்குழல் ஏவுகனைகள் மற்றும் ஆட்டிலறிகளைப் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் பொதுமக்கள் உயிழப்புக்கள் அதிகரிப்பதோடு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரத் தள்ளப்பட்டுள்ளனர். அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர், (UNHCR) தற்போதைய மோதல்களின் காரணமாக 135,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக மதிப்பிட்டுள்ளார்.

மருந்துக் கடைகளில் 300 மீட்டர்களுக்கு வரிசை நீண்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் மின்சாரமோ எரிபொருளோ கிடையாது. ஒரு சில தொலைபேசிகளே இயங்குகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், பின்வரும் அறிக்கையை தருவதற்காக ஒரு தனிநபரின் வீட்டில் தொலைபேசிக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. இந்த நடைமுறை நாளுக்கு நாள் வழக்கமாகி வருகின்றது. தொலைபேசி அழைப்புக்காக வழங்கப்பட்ட காலம் வரையறுக்கப்பட்டிருந்ததால் இந்த அறிக்கை மிக சுருக்கமானதாக இருந்த போதிலும், இந்த அறிக்கையானது பிரதேசம் பூராவும் உள்ள மக்கள் முகம் கொடுத்திருப்பது என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையைக் கொடுக்கின்றது.

* * *

புலிகள் முகமாலை, நாகர்கோவில், மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி உட்பட பல நிலைகளில் இருந்து ஆகஸ்ட் 11 மாலை 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர்.

யாழ்ப்பாண நகரில் இருந்து ஏழு கிலோமீட்டர்களில் அமைந்துள்ள அல்லைப்பிட்டி கிராமம், இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு உள்ள சிறிய தீவாகும். புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான மோதல்கள் தொடங்கியவுடன், அகதிகளான உள்ளூர் கிராமத்தவர்கள் புனித பிலிப் மேரி தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர். புலிகள் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றியதுடன், அரசாங்கப் படைகள் பல கிலோமீட்டர்களுக்கு பின்வாங்கத் தள்ளப்பட்டன.

அடுத்தநாள் விடியற் காலை, தேவாலயத்தின் முன்னால் விழுந்த ஷெல்களால் நான்குபேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். தீவின் பல இடங்களிலும் ஆட்டிலரி குண்டுகள் விழுந்து வெடித்ததில் ஏனையவர்கள் கொல்லப்பட்டனர். அல்லைப்பிட்டியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இராணுவம் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பலாலி இராணுவ தளத்தில் இருந்து குண்டுவீசிக் கொண்டிருந்தது. இறுதியாக புலிகள் வெளியேறியதுடன் கடற்படை மீண்டும் திரும்பியது.

சுமார் 213 குடும்பங்கள் அல்லது 750 பேர், அருகில் உள்ள ஊர்காவற்துறையில் உள்ள புனித மரியாள் தேவாலயத்தை வந்தடைந்தனர். இங்கு ஐந்து வயதுக்கு கீழ்பட்ட 66 சிறுவர்களும் இரண்டு வயதுக்குட்பட்ட 38 குழந்தைகளும் உள்ளனர். அல்லைப்பிட்டி மீது மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என அஞ்சிய மக்கள் அங்கிருந்தும் இடம்பெயர்ந்தனர்.

அகதிகளின்படி, இந்த மோதல்களில் குறைந்தபட்ஷம் 74 பேர் கடுங்க காயமடைந்துள்ளனர். இவர்களில் 57 பேர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலும் மற்றும் 17 பேர் ஊர்காவற்துறை ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறுகின்றனர். தேவாலயத்தை அடைவதற்கு முன்னதாக, பெரும்பாலானவர்கள் ஞாயிறு இரவுவரை சாப்பாடோ அல்லது தண்ணீரோ இன்றி ஒழிந்திருந்தனர். மக்களை அல்லைப்பிட்டியில் இருந்து வெளியேற விடாமல் மண்கும்பான் கிராமத்தில் இருந்த கடற்படையினர் தடுத்தனர்.

தேவாலயத்தில் இருந்த அகதிகளுக்கு உணவோ அல்லது விநியோகத்தையோ அரசாங்க அதிகாரிகள் செய்யவில்லை. அவர்கள் கிராமத்தவர்கள் தந்த உணவு மற்றும் ஏனைய உதவிகளில் தங்கியிருக்கத் தள்ளப்பட்டனர். கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புக்களும் அவர்களுக்கு உதவின. பலருக்கு மலசலகூட வசதிகள் மிகவும் பற்றாக்குறையாக இருந்ததோடு தேவாலய நிர்வாகம் தொற்று நோய் ஏற்படும் அபாயம் பற்றி அச்சமடைந்துள்ளது.

காயமடைந்தவர்களின் ஒருவர், தனது மாமா, மாமி, தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் செல் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். அவரது அப்பாவின் கால் மீது சுவர் இடிந்து விழுந்ததால் நடக்க முடியாமல் உள்ளார். அவரது சகோதரரின் காலில் செல் துண்டு ஒன்று துளைத்துள்ளது. பெரும்பாலான வீடுகள் செல் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.

"இராணுவம் கிராமத்தை மீண்டும் கைப்பற்றிய போது அவர்கள் எங்கள் அனைவரையும் படம் எடுத்தனர். அவர்கள் எங்களை புலி உறுப்பினர்கள் என சந்தேகித்ததோடு எங்களை விசாரணையும் செய்தனர். சிலரை அடித்தனர். எங்களால் மீண்டும் அல்லைப்பிட்டிக்கு செல்ல முடியாது. அங்கு நாங்கள் பல ஆபத்துக்களை சந்தித்தோம்," என ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

ஒரு குடும்பப் பெண் தெளிவுபடுத்தியதாவது: "எங்களுக்கு இரவில் குண்டு சத்தங்கள் கேட்டன. பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு எங்கு ஓடுவது என்று தெரியவில்லை. புலிகள் எங்களை எங்கும் போகவேண்டாம், பங்கர் அமைத்து இருங்கள் என்றனர். நாங்கள் இரண்டு நாட்களாக சாப்பாடு இன்றி பங்கருக்குள் இருந்தோம். பின்னர் ஒரு பிதா எங்களை இங்கு பஸ்ஸில் அழைத்து வந்தார்."

ஊர்காவற்துறையில் உள்ள மக்கள் சாப்பாடு இன்றி காலத்தை கடத்துகின்றனர். அங்கு மரக்கறிகள் கிடையாது. மக்கள் உப்புடன் சோறு சாப்பிடுகின்றனர் அல்லது கொஞ்சம் கருவாட்டுடன் சோறு சாப்பிடுகின்றனர். அது கடினமான கஸ்ட நிலைமையாகும்.

காரை நகரில் உள்ள சில பெண்கள் மீன்பிடிக்க செல்ல முயற்சித்தனர். தாம் பெண்கள் என்பதால் கடற்படை அவர்களை ஒன்றும் செய்யாது என அவர்கள் நினைத்தனர். ஆனால் படையினர் அவர்களை தடிகளால் தாக்கியதுடன் விரட்டியடித்தனர்.

யுத்தத்திற்கு முடிவுகட்டுவதே அனைவரதும் தேவையாகும். ஆனால் புலிகளோ அல்லது அரசாங்கமோ மோதல்களை நிறுத்துவர் என எவரும் நம்புகிறார்கள் இல்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved