WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
On eve of Lebanon ceasefire deadline: US, Israel face
political debacle
லெபனான் போர் நிறுத்த காலக் கெடுவிற்கு முன்பு: அமெரிக்கா, இஸ்ரேல் அரசியல்
வீழ்ச்சியை எதிர்கொள்ளுகின்றன
By the Editorial Board
14 August 2006
Use this version
to print | Send this link by email
| Email the author
பதிவிறக்கம் செய்யப்பட்டு விநியோகிப்பதற்கு இந்தக் கட்டுரை
PDF துண்டுப் பிரசுர
வடிவில் கிடைக்கிறது.
உள்ளூர் நேரத்தில் காலை 7 மணிக்கு லெபனானில் ஐ.நா.உத்தரவின்படி போர் நிறுத்தம்
தொடங்கவுள்ளது. புஷ் நிர்வாகம் முன்னதாக கொடுத்திருந்த வரைவுத் தீர்மானத்தின் திருத்தங்களை அமெரிக்காவும்,
இஸ்ரேலும் ஏற்றபின்னர் தீர்மானம் வெள்ளி மாலை பாதுகாப்பு குழுவினால் இசைவிற்கு உட்பட்டது. போர் பூசல்கள்
நிறுத்தப்படுவதில் உடனடி விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை; செயல்படுத்தப்பட்டால் போர்நிறுத்தம்
நீடிக்குமா என்றும் தெரியவில்லை. ஆனால் ஐயத்திற்கு இடமின்றி இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டிற்கும் ஒரு
பெரிய அரசியல் சங்கடமாகும்.
ஐ.நா.வாக்கெடுப்பிற்கு சில மணி நேரம் முன்புதான், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள்
(IDF)
லெபனான் முழுவதும் இன்னும் கூடுதலான வகையில் அழிக்கவும் லிட்டனி ஆற்றிற்கு தெற்கே உள்ள நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கும்
முயன்றவகையில் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியது. இராணுவமானது தெற்கில் ஆக்கிரமிப்புப் படைகளை
மும்மடங்காக்கி 30,000 பேர்களாக ஆக்கியுள்ளது; பெய்ரூட் உட்பட, நாடு முழுவதும் பல இலக்குகளில்
குண்டுகளை வீசியுள்ளது. ஆனால் ஒரு மாதமாக நீடித்துள்ள போரில் நடந்தது போலவே,
IDF கடுமையான
எதிர்ப்பை ஹெஸ்பொல்லாவிடம் இருந்து எதிர் கொண்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்திற்கு சனிக்கிழமை பெரும் குருதி
சிந்திய ஒரு நாளாகும்; 24 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் காயமுற்றனர், ஒரு போர் ஹெலிகாப்டர்
முதல் தடவையாக வானில் இருந்து வீழ்த்தப்பட்டது.
வெளிப்படையான அமெரிக்க ஆதரவுடன், இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு
ஹெஸ்பொல்லாவை தகர்த்து லெபனானை ஒரு காப்புநாட்டு தகுதிக்கு உட்படுத்தி, சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான
பரந்த போருக்கான சூழ்நிலையை தோற்றுவிக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய உந்துதலில் சற்றே ஓய்வெடுக்கும்
தன்மையைத்தான் இந்த போர் நிறுத்தம் கொண்டுள்ளது என்பதை ஐயத்திற்கு இடமின்றிக் காட்டுகிறது.
லெபனான் மீதான தாக்குதல் அமெரிக்க-இஸ்ரேலிய போர் நோக்கங்களுக்கு ஒரு
பின்னடைவை விளைவித்துள்ளது என்ற உண்மை இருப்பினும், இரு நாடுகளையும் மேலும் தனிமைப்படுத்தியுள்ளமையானது,
மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அவர்களுடைய அரசாங்கங்களுக்கு மக்களுடைய எதிர்ப்பை எரியூட்டியுள்ளது.
ஹெஸ்பொல்லாவை IDF
அழித்த பின்னர்தான் போர்நிறுத்தம் என்று வாதிடுவதில் கடந்த மாதம் முழுவதும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள்
நேரத்தை செலவிட்டன. ஆனால் இப்பொழுது ஒரு குறுகிய காலத்தின் உறுதியான முடிவு வந்துவிடும் என்ற இஸ்ரேலிய
எதிர்பார்ப்புக்கள் பயனற்றுப் போய்விட்டன. ஆயிரத்திற்கும் அதிகமான சாதாரண மக்கள் கொல்லப்பட்டு ஒரு
மில்லியன் மக்கள் அகதிகளாக போன வகையில் ஒரு மாத காலம் நீடித்த கடுமையான தாக்குதலை நடத்திய
பின்னரும் கூட, இஸ்ரேலிய இராணுவத்தினால் லெபனிய பகுதியில் கணிசமான இடத்தைப் பெற இயலவில்லை என்பதை
நிரூபித்தது.
பல வாரங்களாக, இஸ்ரேலிய படைகள் இஸ்ரேல், லெபனான் எல்லைக்கு அருகே
உள்ள முக்கியமான சிறுநகரங்கள், பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளன. லிட்டனி ஆற்றுக்கு
தென்புறத்தில் லெபனிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக இராணுவம் கூறியபோதிலும், முக்கிய நகரங்கள் இன்னும் இஸ்ரேலிய,
ஹெஸ்பொல்லா படைகளுக்கு இடையே போர்க்களங்களாக உள்ளன. பின்ட் ஜேபெயில் போன்ற நகர மையங்களை
கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் கூறியது குறுகிய கால வெற்றியாக போய்விட்டது; ஏனெனில் அதன் படைகள் கடுமையான
எதிர்ப்பை ஒட்டி பின்வாங்கிவிட்டன. தெற்கு லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா ராக்கெட்டுக்களை தொடர்ந்து
ஏவிக் கொண்டிருக்கிறது; ஞாயிறன்று குறைந்தது 250 ராக்கெட்டுக்கள் ஏவப்பட்டன; ஒரே நாளில் இஸ்ரேல் மீது
ஹெஸ்பொல்லா ராக்கெட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் வீசப்பட்டது இதுதான்.
இந்நிலைமை புஷ் நிர்வாகத்தை போர்நிறுத்தத்திற்கான முந்தைய எதிர்ப்பை
கைவிடுமாறு கட்டாயப்படுத்திவிட்டது. சனிக்கிழமையன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது போல்,
"திரு புஷ் விடுமுறையில் இருக்கும் டெக்சான் கிராபோர்டில் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி இஸ்ரேல் ஒரு இராணுவ
வெற்றியை அடைவது இயலாதது போல் தோன்றுகிறது என்றும் இந்தக் கருத்தை ஒட்டி அமெரிக்கர்கள்
போர்நிறுத்தத்தில் பின்வாங்கிய நிலையைக் கொள்ள வேண்டியதாயிற்று என்று கூறினார்."
முந்தைய இஸ்ரேலிய அமெரிக்க கோரிக்கைகளைவிட குறைந்த தன்மையைத்தான்
ஐ.நா. தீர்மானம் கொண்டுள்ளது. 15,000 லெபனிய இராணுவத்தினரும், 15,000 சர்வேதேச படைகளும்
இணைந்த தொகுப்பு ஒன்று தெற்கு லெபனானில் ஐக்கியநாடுகள் இடைக்கால படை (United
Nations Interim Force in Lebanon)
UNIFIL என்ற
பெயரில் செயல்பட உள்ளது. எந்த சர்வதேச தொகுப்பும் நேட்டோவின் கீழ்,
UNIFIL
கட்டுப்பாடு இன்றி அமைக்கப்பட வேண்டும் என்று ஓல்மெர்ட் அரசாங்கம் முன்பு வலியுறுத்தியிருந்தது; ஏனெனில்
UNIFIL
அமைப்பு தொடர்ந்து ஹெஸ்பொல்லாவை கட்டுப்படுத்த முடியாததினால் இஸ்ரேலிய அரசாங்கங்களால் அதிருப்திக்கு
உட்பட்டிருந்தது.
மேலும், பிரெஞ்சுத் தலைமையிலான சர்வதேசப் படைகளும் ஐ.நா. சாசனம், அத்தியாயம்
ஏழின் கீழ் ஹெஸ்பொல்லாவை கட்டாயமாக ஆயுதங்களை களைய வைக்கவும் இராணுவ முறையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை
செயல்படுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வகையில் செயல்படாது. மாறாக அத்தியாயம் 6ன் கீழ் சற்றே
குறைந்த வலியுறுத்தல் விதிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னொரு மாற்றத்தின்படி, இஸ்ரேலிய படைகள்
சர்வதேச படைகள் நுழைவதுடன் இணைந்த முறையில் திரும்பப் பெற வேண்டும். தீர்மானத்தில் படைகள் திரும்ப பெறுவது
பற்றிய கோரிக்கைகள் கூடாது என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னதாக வலியுறுத்தியிருந்தன.
ஆனால், போர்நிறுத்த தீர்மானம் எவ்விதத்திலும் உண்மையான சமாதானம் ஒன்றிற்கு
அடிப்படையை கொடுக்கவில்லை. லெபனிய இறையாண்மையை மீட்பது பற்றிய குறிப்பு ஏதும் இல்லை என்பதுடன்
இஸ்ரேலின் போர்க்குற்றங்களையும் இது கண்டிக்கவில்லை.
IDF தெற்கில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ஐ.நா. படைகள்
வந்து சேரும் வரை, தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும்; இதற்கு பல வாரங்கள் பிடிக்கலாம்.
ஐ.நா.வின் இகழ்விற்குரிய முறையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு இடம் அளித்துள்ளதை
நிரூபிக்கும் வகையில், ஹெஸ்பொல்லா அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது;
அதே நேரத்தில் இஸ்ரேலின் "தாக்குதல் இராணுவ நடவடிக்கைகள்" நிறுத்தப்பட வேண்டும் என்ற வெறும்
அழைப்புத்தான் விடப்பட்டுள்ளது. இது IDF
க்கு தடையற்ற முறையில் அதன் செயற்பாடுகளை தொடர அனுமதிக்கும்; இது "தேசிய பாதுகாப்பு" என்ற
பெயரில் எப்பொழுதுமே நியாப்படுத்தப்பட்டுள்ளது.
போர்நிறுத்த தீர்மானம் ஓல்மெர்ட் அரசாங்கத்திற்கும்
IDF க்கும்
இடையே உள்ள கடுமையான பிளவுகளை இன்னும் கூடுதலாக ஆக்கியுள்ளது. இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கினரிடையே ஒரு
கூட்டு லெபனிய-ஐ.நா. படைத்தொகுப்பு ஹெஸ்பொல்லாவை ஆயுதங்களை களைய தயாராக இருக்கும் அல்லது
அத்திறனுடையது என்ற நம்பிக்கை இல்லை; அதே போல் தெற்கு லெபனானில் அது மீண்டும் தலையெடுப்பதை
தவிர்ப்பதற்கும் அத்தொகுப்பிற்கு திறன் இருக்காது என்று நம்பப்பபடுகிறது. தற்போதைய சூழ்நிலையில் இஸ்ரேலிய
படைகள் பின்வாங்குவது என்பது லெபனானிலும் மத்திய கிழக்கு முழுவதும் சியோனிச அரசாங்கத்திற்கு ஒரு தோல்வி
என்றுதான் கருதப்படும்.
ஹெஸ்பொல்லாவை அழித்தொழிப்பது என்பது இஸ்ரேலினால் முடியமற் போனமை
IDF
தோல்வியை காணாது என்ற கட்டுக்கதையை அழித்துவிட்டது; இதுதான் இஸ்ரேலிய வரலாற்றில் முக்கிய பங்கை
ஆற்றியுள்ளது. இதன் அரித்த தன்மை ஆளும் உயரடுக்கு முழுவதற்கும் அதிர்ச்சி அலைகளை வழங்கியுள்ளது. இஸ்ரேலிய
செய்தி ஊடகத் தகவல்களின்படி, இப்பொழுது அரசாங்கத்திற்கும்
IDF மூத்த
கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நம்பிக்கை முற்றிலும் முறிந்துவிட்டது.
தளபதி உதி ஆடமை லெபனானில் தளபதி என்னும் பதவியில் இருந்து ஓல்மெர்ட்
அகற்றியதை தொடர்ந்து அழுத்தங்கள் வெளிவந்துள்ளன. பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டிருந்த போரை நடத்த
அனுமதிக்காததற்காக அரசாங்கத்தை ஆடம் வெளிப்படையாகக் குறைகூறிய பின் அவர் பதவி நீக்கம் வந்தது.
இஸ்ரேலிய தகவல்களின்படி, IDF
லெபனான் மீது மகத்தான தாக்குதலை, சிறிதளவு விமானத் தாக்குதலில் தொடங்கி, நிலம் மற்றும் கடல்வழியே
படையெடுப்பு நடத்தி, நாட்டை இரு பிரிவுகளாக்கி வடக்கில் இருந்து லிட்டனி ஆற்றின் தென்புற ஹெஸ்பொல்லாவின்
நிலைகளைத் தாக்க வேண்டும் என்ற கருத்து இருந்தது.
இத்திட்டங்கள் ஹெஸ்பொல்லா ஜூலை 12 அன்று இரு இஸ்ரேலிய இராணுவத்தினரை
சிறைப்பிடிப்பதற்கு முன்னரே உருவாக்கப்பட்டிருந்தன; இராணுவத்தினர் பிடிக்கப்பட்டதை போலிக்காரணமாக
ஓல்மெர்ட் அரசாங்கம் பற்றி எடுத்துக் கொண்டது. இன்று நியூ யோர்க்கர் வலைத் தளத்தில் வந்துள்ள
கட்டுரை ஒன்றில் மூத்த செய்தியாளரான செமர் ஹெர்ஷ் அமெரிக்க தொடர்பின் பரப்பை பற்றிக்
குறிப்பிட்டுள்ளார்.
"இஸ்ரேலின் திரும்பத் தாக்குதல் நடவடிக்கைகளை திட்டமிடுவதில், புஷ் நிர்வாகம்
நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தது. ஜனாதிபதி புஷ்ஷும் துணை ஜனாதிபதி டிக் செனியும் இஸ்ரேலிய
விமானப்படையின் தாக்குதல்கள் ஹெஸ்பொல்லாவின் பலத்த பாதுகாப்புடைய நிலவறை ஏவுகணை, கட்டுப்பாடு,
ஆணைகள் வெளியிடுதல் ஆகியவற்றை கொண்டுள்ள லெபனான் வளாகங்களின் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தால்
இஸ்ரேலின் பாதுகாப்பு அக்கறைகளின் சுமை குறைந்திருக்கும்; மேலும் அது ஈரானின் அணுசக்தி நிலையங்களை
அழிப்பதற்கான தவிர்க்க முடியாத அமெரிக்க போர்த்தாக்குதல் திறனுக்கு ஒரு முன்னோடியாகவும் அமைந்திருக்கும்;
இத்திட்டங்கள் பலவும் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளன." என்று அவர் எழுதியுள்ளார்.
ஒருவரை ஒருவர் வசை பாடிக்கொள்ளுவது இஸ்ரேலின் கடிமா-தொழிற்கட்சி கூட்டணி
அரசாங்கத்தில் வெளிப்படையான பூசலுக்கும் வழிவகுத்துள்ளது. சென்ற புதன்கிழமை மந்திரிசபை கூட்டத்தில்
நடந்தவற்றை ஹாரேட்ஸ் கூறியுள்ள விதமாவது: "பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் மற்றும் பாதுகாப்பு
மந்திரி பெரெட்சிற்கும் இடையே பிளவுகள் வந்துள்ளன. வெளியுறவு மந்திரி சிபி லிவ்னி மற்றும்
IDF தலைமை
தளபதி டான் ஹாலுட்சிற்கும் இடையே பிளவுகள் வந்துள்ளன. இதைத்தவிர மோசட்டின் தலைவரான மெயிர்
டாகனுக்கும் உளவுத்துறைப் பிரிவின் தலைவரான அமோஸ் யாட்லினுக்கும் இடையே பூசல் வந்துள்ளது. இதைத்தவிர
பெரட்சிற்கும் அவருக்கு முன்பு பதவியில் இருந்த ஜாவும் மோபசிற்கும், மோபசிற்கும் ஆவி டிச்சருக்கும் இடையேயும்
பிளவு மூண்டுள்ளது. கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் நிலைமையை சுருக்கமாக கூறும் வகையில் "ஒவ்வொருவரும்
குறைந்த பட்சம் ஒரு பூசலிலேனும் தொடர்பு கொண்டிருந்தனர்." என்று கூறினார்.
போருக்கான மக்கள் ஆதரவும், இராணுவ நிலைமை சீர்குலைந்த அளவில் ஊசலாடத்
தலைப்பட்டது. ஹாரெட்சின் கருத்துக் கணிப்பின்படி, ஓல்மெர்ட் மீது திருப்தி அடைந்துள்ளவர்கள் 48
சதவிகிதம்தான்; போர்த் தொடக்கத்தில் இது 75 சதவிகிதமாக இருந்தது. மெரெட்ஸ் கட்சி, சமாதானம்
இப்பொழுது கட்சி போன்ற போருக்கு ஆதரவு கொடுக்கும் தாராளவாத சியோனிசக் குழுக்கள், இப்பொழுதே
தூதரக முறை மூலம் நெருக்கடிக்குத் தீர்வு காணவேண்டும் என்பதற்கு ஆதரவாக வேளி வந்துள்ளன. லிக்குட்டும் மற்ற
வலதுசாரிக் கட்சிகளும் போர் முடிவுற்றதும் அரசாங்கத்திற்கு தாங்கள் கொடுத்துவரும் ஆதரவும் நிறுத்தப்பட்டுவிடும்
என்று அறிவித்துள்ன. இஸ்ரேலிய செய்தி ஊடகத்தின் சில பிரிவுகள் ஆளும் கூட்டணி விரைவில் சரியக்கூடும் என்று ஊகத்
தகவல்களை கூறுகின்றன.
இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சர்வதேச தோற்றம் மிகப் பெரிய
அளவில் வீழ்ச்சியுற்றுள்ளது. ஒரு சட்டம், ஒழுங்கற்ற, கொலைகார ஆட்சியாக, லெபனானில் தொடர்ந்து பல
போர்க்குற்றங்களை செய்துவரும் ஆட்சியாக இஸ்ரேல் கருதப்படுகிறது. திரை மறைவில் இருந்து கயிறுகளை இழுத்து
காட்சிகளை அளிக்கும் குற்றவாளித்தன்மை பொருந்திய ஆட்சியாக அமெரிக்கா காணப்படுகிறது. அமெரிக்கா
அளித்திருந்த ஆயுதங்களை கொண்டு இஸ்ரேலிய குண்டுகளும் ஏவுகணைகளும் லெபனான் நாட்டை அழித்துக் கொண்டிருந்த
அதேவேளை, பெய்ரூட்டில் நின்று கொண்டு, "ஒரு புதிய மத்திய கிழக்கின்" பிறப்பு என்று கொண்டலிசா ரைஸ்
கூறிய தோற்றத்தை எதுவும் அழித்துவிடாது
இந்த தோல்வியுற்ற அகந்தைச் செயலின்மூலம் இஸ்ரேல், மத்திய கிழக்கு,
அமெரிக்கா மற்றும் உலகிற்கு மகத்தான உட்குறிப்புக்கள் உள்ளன. மிக ஆழ்ந்த விளைவுகள் உடனடியாக
உணரப்பெறமாட்டா. ஆனால் அவை இஸ்ரேலிய சமுதாயத்தை ஆழ்ந்த முறையில் உறுதியிழக்கச் செய்யும், சியோனிச
எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தடுப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும், அமெரிக்க நட்புடைய எகிப்து, ஜோர்டான்
மற்றும் செளதி அரேபியா போன்ற நாடுகளை தீவிரமாக வலுவிழக்கச் செய்யும் என்பதுடன் புஷ் நிர்வாகம்,
அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உலகந்தழுவிய இராணுவவாத கொள்கைகள் அனைத்தையும் இழிவிற்கு உட்படுத்தும்.
இது, ஒரு புதியதும் இன்னும் பரந்த வகையிலான போர்கள் வரக்கூடிய ஆபத்து
நீங்கிவிட்டது என்ற பொருளைத் தரவில்லை. ஏற்கனவே ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் சரிவுற்றுள்ள நிலையை
கண்டுள்ள அமெரிக்கா உலக மேலாதிக்கத்திற்கான வழிவகையில் சிக்கியுள்ளது; சிரியாவின் ஆட்சியை அகற்றி ஈரான்
மீதான போர்த் தயாரிப்புக்களில் ஈடுபடவேண்டும் என்ற அது எதிர்பார்த்துக் கொண்டிருந்த அடிப்படை
நோக்கத்தை தொடரும் என்றே எதிர்பார்க்கலாம். தன் பங்கிற்கு, குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும்
மற்றவர்களுக்கு எதிராக பொதுவாகவும் இஸ்ரேல் வன்முறையை தீவிரப்படுத்தலாம்.
ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை இப்பொழுது வந்துள்ளது; இதில் சியோனிச
அரசாங்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் திவால் மற்றும் ஒழுக்கநெறி திவால் தன்மை உலகின்
பார்வையில் நன்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
லெபனானில் இந்தக் காட்டிமிராண்டித்தனமான போருக்கு மூலகர்த்தாவாக இருந்தவர்கள்
அவர்களுடைய குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும். முக்கிய வல்லரசுகள், ஐ.நா. அல்லது மற்ற ஏகாதிபத்திய
ஆதிக்கத்திற்கு உட்பட்ட அமைப்புக்களினால் இத்தகைய பொறுப்பை வலியுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக் மற்றும் ஐ.நா. அனைத்துமே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த
சதி செய்துள்ளதுடன், போர்நிறுத்தத்தை தள்ளிப்போட்டு இஸ்ரேல் இன்னும் இறப்புக்களையும் இழப்புக்களையும் லெபனானில்
சுமத்த அனுமதித்தன; மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் மிருகத்தனமான சாராம்சம் மிக அப்பட்டமான
முறையில் இவ்வாறு நிரூபணம் ஆகியுள்ளது.
டெல் அவிவ் மற்றும் வாஷிங்டனிலும் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக்
கூடிய ஆற்றல் படைத்த ஒரே அமைப்பு சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். மத்திய கிழக்கில் உள்ள
நெருக்கடிக்கு ஜனநாயக மற்றும் சமாதான முறையில் தீர்வு காண்பதற்குரிய ஒரே அடிப்படை ஏகாதிபத்திய மற்றும்
சியோனிச சக்திகளுக்கு எதிர்ப்பில் இப்பிராந்தியத்தை சோசலிச மறு ஒழுங்கமைத்தல் செய்வதற்கான உழைக்கும்
மக்களின் ஒன்றுபட்ட போராட்டமாகும்.
See Also:
தெற்கு லெபனானை "இனத்தூய்மைபடுத்துதலை"
இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன
Top of page |