World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The president gives a press conference

ஜனாதிபதி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றுகிறார்

By David North
16 August 2006

Back to screen version

போரில் புஷ் என்ற தன்னுடைய புத்தகத்தில் வாஷிங்டன் போஸ்ட் இன் பொப் வூட்வார்ட் ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார்: "நான் தளபதி அல்லவா --இது பற்றி நான் விளக்க வேண்டிய தேவையில்லை-- நான் ஏன் பலவற்றை கூறுகிறேன் என்பது பற்றி எவருக்கும் விளக்க வேண்டியதில்லை. ஜனாதிபதியாக இருப்பதில் இது ஒரு ருசிகரமான விஷயம். தாங்கள் ஏன் சிலவற்றை கூறுகிறோம் என்று மற்றவர்கள் என்னிடம் விளக்க வேண்டும்; ஆனால் நான் எவருக்கும் எந்த விளக்கமும் கொடுக்க கடமைப்பட்டிருப்பதாக உணரவில்லை."

உண்மையில் தன்னுடைய வாயில் இருந்து வரும் சொற்களில் பெரும்பாலானவை ஏன் வருகின்றன என்பதை புஷ்ஷே அறிவாரா என்பதை அவரின் உரையை கேட்பவர்கள் வியந்தால் அதற்கு அவர்கள் மன்னிக்கப்படவேண்டும். நனவுடன் கூடிய மூளைச் செயற்பாட்டிற்கும் உடலியல் செயற்பாட்டினால் ஜனாதிபதி உருவாக்கி கூறும் சொற்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதற்கு அதிக சான்றுகள் இல்லை. ஒரு தயாரிக்கப்பட்ட உரையில் இருந்து பேசினால் போதும் என்று இருந்தாலும்கூட, அது புஷ்ஷின் அறிவார்ந்த திறன்களுக்கு பெரும் சுமையாக இருப்பது போலத் தோன்றும்.

ஜனாதிபதி திங்களன்று நிகழ்த்திய செய்தியாளர் கூட்டம் பெரும்பாலும் இத்தன்மையைத்தான் கொண்டிருந்தது. ஆரம்ப உரையை சற்று சிரமத்துடன்தான் வாசித்தார்; அடிக்கடி சொற்களை சிதைத்தும், நிலை தழும்பியதாகவே உரை இருந்தது. பின்னர் நிருபர்களுடன் நேரடிக் கருத்து பறிமாற்றம் நடந்தபோது, பல சமயங்களிலும் இடைமறித்து வினா என்பதை என்ன என்று மறந்து விட்டதாக புஷ் ஒப்புக் கொள்ள நேரிட்டது. இஸ்ரேலிய-ஹெஸ்பொல்லா போரின் விளைவு பற்றிய அக்கறைகளுக்கு தெளிவான விளக்கம் கொடுப்பதற்கு பதிலாக, புஷ்ஷின் சிதைவுற்ற, சுற்றிவளைத்த தன்மையுடைய, பலநேரமும் அபத்தமான, எப்பொழுதும் நேர்மையற்ற கருத்துக்கள், ஆளும் உயரடுக்கில் அறிவார்ந்த பிரிவினர் எதார்த்தத்தை புரிந்துகொள்வது தொடர்பான ஜனாதிபதியின் உணரும் திறன் பற்றி கவலைகள் கொள்ளுவதை அதிகப்படுத்தத்தான் செய்தது.

புஷ்ஷின் அறிக்கைகளில் எப்பொழுதும் இருப்பதை போலவே, தன்னுடைய பார்வையாளர்களை இணங்கவைக்க அல்லது நம்பவைக்க வேண்டும் என்ற முயற்சியே இல்லை. அவருடைய ஆரம்ப அறிக்கை தர்க்கரீதியாக அமைக்கப்பட்ட வாதத்தை கொடுக்கவில்லை. உண்மையை சிறிதும் ஆதாரம் கொண்டிராத கருத்துக்களைத்தான் அவர் பேசினார். இந்த அறிக்கைகள் பொதுவாக அபத்தமாக இருந்ததுடன் மிகப் பிற்போக்குத்தனமான, பின்தங்கிய, அறியாமை நிறைந்த, வெளிப்படையாகக் கூறினால், அமெரிக்க மக்களின் முட்டாள்தனமான பிரிவுகளின் தரத்தைத்தான் கொண்டிருந்தது.

பெரும் மந்த நிலைக்கு நடுவே 1933 ஆண்டில் புகழ் பெற்ற தன்னுடைய ஆரம்ப உரையில், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், "நாம் உண்மையில் அச்சப்பட வேண்டியது அச்சம் ஒன்றிற்குத்தான் -- பெயரற்ற, காரணமற்ற, நியாயமற்ற அச்சத்திற்குத்தான்..." என்று வலியுறுத்திக் கூறினார். ஆனால் ஜோர்ஜ் புஷ்ஷின் சொல்லாட்சி முழுவதுமே ரூஸ்வெல்ட் இகழ்வுபடுத்தியிருந்த பொருளான காரணமற்ற பயத்தை தூண்டும் வகையில்தான் அமைந்திருந்தது. திங்கட் கிழமை ஐந்து நிமிடங்கள் நீடித்த இவருடைய ஆரம்ப உரையில், புஷ் "பயங்கரவாதம்", "பயங்கரவாதிகள்" என்ற சொற்களை 23 தடவை பயன்படுத்தினார்.

புஷ்ஷின் பேச்சில் இந்த இரு சொற்களும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களுக்கு உண்மையிலோ கற்பனையிலோ உள்ள அனைத்து மாற்றுக் கருத்து உடையவர்களுக்கும் மற்றும் எதிரிகளுக்கும் பொருத்தமானதாகின்றது. எப்பொழுதும் பயங்கரவாதம்/பயங்கரவாதிகள் என்ற சொல்லை பொதுவான அடைமொழியாக பயன்படுத்துவது உண்மையிலேயே அத்தகைய சொற்களின் ஸ்தூலமான முக்கியத்துவத்தை இழந்துவிட்டது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உலகளாவிய தன்மை பற்றி ஜனாதிபதி இவ்வாறு சுருக்கிக் கூறினார்: "பயங்கரவாதத்தை எதிர் கொள்ளுவது என்றால் என்ன என்பது பற்றி, உலகம் காணவேண்டும் என நான் கருதுகின்றேன். இதுதான் 21ம் நூற்றாண்டின் சவாலாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அதாவது சிந்தனையாளர் குழு ஒன்று தன்னுடைய குறிக்கோளை அடைவதற்கு அச்சுறுத்தலை பயன்படுத்துவது என்பதுதான் பெரும் அறைகூவலாகும்."

புஷ் ஒன்றும் அமெரிக்க வரலாற்றை பயின்ற மாணவர் அல்ல; ஆனால் அவருடைய விதத்தில், அவருடைய அரசியல் ஆலோசகர்கள் வழிப்படி, அமெரிக்க அரசியல் மரபின் இழிவான கூறுபாடுகளை அவர் பெருக்கிக் கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றாளர் ரிச்சார்ட் ஹோப்ஸ்டாட்டெர் "அமெரிக்க அரசியலில் இருந்த பெரும் சித்தப்பிரமைத்தன்மை (அறிவுப்பிறழ்ச்சித்தன்மை) பற்றி" கவனத்தை ஈர்த்தார்; அத்தன்மை "உலகத்தை பார்க்கும் ஒருவிதம் எனவும், தன்னை அவ்வாறு வெளிப்படுத்துதலும்'' ஆகும்.

அமெரிக்க அரசியலில் இத்தகைய "சித்தப்பிரமைத்தன்மை" என்பது ஒரு தனிமனித மூளையின் சிதைவுத் தன்மை பற்றி மருத்துவரீதியாக வரையறுக்கப்படுவதுடன் சமன்படுத்திவிட முடியாதது என்று ஹோப்ஸ்டாட்டெர் வாதிடுகிறார். அரசியல் மற்றும் தனிப்பட்ட சித்தப்பிரமைத்தன்மை இரண்டுமே "கூடுதலான வெறிகொடுப்பதாகவும், கூடுதலான சந்தேக உணர்வையும், ஆக்கிரோஷ தன்மை கொண்டுள்ளதாகவும், தன்னை பெரும் உயர்நிலையில் கொண்டு உபதேச உரையை பிறருக்கு கொடுக்கும் வகையில் வெளிப்படுத்தினாலும்கூட, மருத்துவரீதியான சித்தப்பிரமைத்தன்மை மனச்சிதைவாளர் தான் வாழுவதாக நம்பும் விரோதமான, சதிப் போக்கு உடைய உலகம் குறிப்பாக தனக்கு எதிராக செயல்படுவதாகவும் காண்கிறார்; ஆனால் அரசியலில் அத்தகைய சிதைவுடையவர்களின் பிரதிநிதியோ இது தன்னைப் பாதிக்கிறது என்று மட்டும் இல்லாமல் மில்லியன் கணக்கான மக்களையும் கொண்டுள்ள ஒரு நாடு, பண்பாடு, வாழும் வகைக்கு எதிராக அத்தகைய போக்கு இயக்கப்படுகிறது என்பதாக உணர்கிறார்.

புஷ் நிர்வாகத்திற்கு முன்னர், அமெரிக்க வலது அரசியலின் வடிகட்டிய சாராம்சத்தின் வெளிப்பாடாக மக்கார்த்தியிசம் (McCarthyism) இருந்தது; "ஒரு சர்வதேச கம்யூனிஸ்ட் சதி" என்ற அறைகுறை வெறித்தன பயத்தை மக்களிடையே தூண்டிவிடும் விளைவை கொண்டுள்ள ஒரு பரந்த அடித்தளத்தை தோற்றுவிக்க முற்பட்டது. ஜூன் 1951ல், "ஒரு பெரிய சதியினால், இதுகாறும் மனித வரலாற்றில் இருந்த முந்தைய எந்த சதியையும் குள்ளமாக்கிவிடும் அளவிற்கு மகத்தான தன்மையை கொண்ட சதியினால்" அமெரிக்கா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று மக்கார்த்தி அறிவித்தார். இச்சதியின் தன்மை எந்த அளவிற்கு இருண்டிருந்தது என்றால், இறுதியில் அது வெளிப்படுத்தப்பட்டபோது அதை தோற்றுவித்தவர்கள் அனைத்து நாணயமான மனிதர்களின் சாபங்களை எப்பொழுதும் பெறும் தகுதியுடையவர்களாக இருப்பர்."

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உச்ச கட்டத்தில் இருந்தபோது அவருக்கு புகழ் ஈட்டிக்கொடுத்த, விஸ்கான்சனின் இளைய செனட்டருடைய நாவன்மை மற்றும் வனப்புரை இரண்டும் புஷ்ஷிற்கு அப்பாற்பட்டவையாகும். ஆனால் மக்கார்த்தியிசம் பயன்படுத்திய அரசியல் வழிவகைகள் பலவும், எல்லாவற்றிற்கும் மேலாக பயம், அறியாமை என்பவற்றை பயன்படுத்தும் முறை, புஷ் நிர்வாகத்தால் "பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போர்" என்பதில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

லெபனான் போரைப் பொறுத்தவரை புஷ் கூறியதெல்லாம், தொடர்ச்சியான அரசியல் தவிர்ப்புக் கருத்துக்களும், பச்சைப்பொய்களும்தான். "லெபனான் மற்றும் இஸ்ரேலில் உள்ள சாதாரண மக்கள் தற்போதைய வன்முறையினால் கஷ்டப்டுகின்றனர் என்பதை அமெரிக்கா அறிந்துள்ளது" என்று இருநாடுகளுக்கும் இடையே போரின் விளைவால் ஏதோ சமமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது போல் அவர் பேசினார். இல்லாவிடின், இக்கஷ்டம் பற்றி அமெரிக்கா "உணர்ந்து விட்டதால்" இஸ்ரேலிய இராணுவம் ஹெஸ்பொல்லாவை முற்றிலும் அதன் தலைவர்களுடன் அழித்துவிடும் என்ற எதிர்பார்ப்புக்களாலும், நம்பிக்கைகளாலும் மூன்று வாரங்கள் பின்னடித்து அமெரிக்கா போர்நிறுத்தத்தை கொண்டுவந்ததின் தாமதத்தினால் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்துவிட்டது போல அவர் கருத்து இருந்தது. அமெரிக்காவில் தயாரித்த விமானங்களால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குண்டுகளால் பெய்ரூட்டின் மீது குண்டு மழைபொழிகையில் புதிய மத்திய கிழக்கின் பிறப்பு பற்றிய கொண்டலிசா ரைசின் அறிவிப்பானது நூறாயிரக்கணக்கான அராபியர்களினதும் முஸ்லீம் மக்களினதும் ஒன்றிணைந்த நினைவின் ஒரு பகுதியாகிவிட்டது.

"இஸ்ரேல்மீது காரணமின்றி ஹெஸ்பொல்லா தாக்குதல் நடத்தியதுதுதான் இந்தப் பூசலை தொடக்கியது" என்னும் புஷ்ஷின் வலிமையான கருத்து ஓர் அப்பட்டமான பொய்யாகும். 1978ல் இருந்து பல்லாயிரக்கணக்கான லெபனிய மக்களின் இறப்பை ஏற்படுத்திய, லெபனானை ஆதிக்கத்திற்குட்படுத்தும் நீடித்த குருதிபடிந்த வரலாற்றை இஸ்ரேலின் இராணுவம் மேற்கொண்டது என்பதை ஒதுக்கி வைத்துவிட்டதுடன், இக்கருத்து லெபனிய பிராந்திய இறைமையை கணக்கிலடங்கா முறையில் இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பு இருந்தே மீறியதையும் கருத்திற் கொள்ளவில்லை.

லெபனிய பகுதியின் வான்வழியே வாடிக்கையாக நிகழ்ந்த அந்த அத்துமீறல்களை தவிர, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஹெஸ்பொல்லாமீது ஓர் இராணுவத் தாக்குதலை நடத்தும் திட்டத்தை ஆய்ந்தும் பலமுறை பரிசீலித்தும் வந்தன என்ற உண்மையும் தகவல்கள் மூலம் வெளிவந்துள்ளன.

புஷ்ஷின் செய்தியாளர் கூட்டத்திற்கு சில நாட்கள் முன்பு, நியூ யோர்க்கரில் வெளிவந்த கருத்துச் செறிவு நிறைந்த வர்ணனையாளர் சேமர் ஹெர்ஷ் எழுதியுள்ள நீண்ட கட்டுரை ஒன்றின்படி, புஷ் நிர்வாகம் "இஸ்ரேல் கொடுக்க வேண்டிய பதிலடித் தாக்குதல்கள் பற்றி திட்டமிடுதலில் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தது."

இரண்டு இஸ்ரேலிய இராணுவத்தை ஹெஸ்பொல்லாக்கள் பிடித்தது போருக்கான ஒரு போலிக் காரணம் ஆகும். ஹெர்ஷ் எழுதுகிறார்: "இஸ்ரேல், மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் தற்போதைய சிந்தனைப் போக்கு பற்றி நன்கு அறிந்துள்ள மத்திய கிழக்கு விவகார வல்லுனர் ஒருவரின் கருத்தின்படி, ஹெஸ்பொல்லாவை தாக்கும் திட்டம் ஒன்றை இஸ்ரேல் ஜூலை 12 கடத்தலுக்கு வெகுநாட்களுக்கு முன்னரே தயாரித்து அதைப் பற்றி புஷ் நிர்வாக அதிகாரிகளிடமும் கூறியிருந்ததாக தெரிகிறது."

இஸ்ரேல் ஒரு பெரிய அளவு இராணுவ நடவடிக்கைகளை இரண்டு இடைத் தொடர்புடைய காரணங்களுக்காக விரும்பியது. முதலாவது, ஹெஸ்பொல்லா தகர்ப்பு என்பது லெபனானில் ஈரானியச் செல்வாக்கின் முக்கிய தளத்தை அகற்றிவிடும். இரண்டாவது, ஈரானிய ஆயுதங்களினால் ஹெஸ்பொல்லா வலிமை பெற்றிருக்கும் வரை, எதிர்பார்க்கப்படும் ஈரானுக்கு எதிராக புஷ் நிர்வாகம் தயாரித்து வரும் போர்த்திட்டத்திற்கு ஒத்திகை பார்ப்பது போலும் இஸ்ரேலிய நடவடிக்கை அமையும்.

போரின் ஆரம்பத்திற்கான காரணத்தைப் பற்றி புஷ் கூறியதை செய்தியாளர் மாநாட்டில் எந்த நிருபரும் சவாலுக்கு உட்படுத்தவில்லை; ஹெர்ஷ் கொடுத்துள்ள தகவலை வைத்துக் கொண்டு அவர்கள் ஜனாதிபதியை சவாலுக்கு அழைக்கவும் இல்லை. கூடியிருந்த செய்தியாளர் எனக்கூறிக்கொள்ளும் கூட்டத்தில் ஒருவருக்குக் கூட புஷ்ஷின் அப்பட்டமான பொய்களுக்கு சவால் விடும் தைரியமோ, நேர்மையோ இல்லை.

ஒரு அரைமணி நேர செய்தியாளர் கூட்டத்தில் புஷ் திரட்டிக் கூறிய பொருளற்ற அரசியல் வெற்றுப் பேச்சுக்களையெல்லாம் பட்டியலிடுவதற்கு, ஒரு நீண்ட கட்டுரையே தேவைப்படும். ஆனால் இரண்டு அறிக்கைகள் மிகவும் பளீரென்று வெளிப்பட்டிருந்தன.

"ஓர் இலக்கைக் கொண்டு, ஆனால் நிரபராதியான சாதாரண குடிமக்களை கொன்றபோது இஸ்ரேல் வேதனையுற்றது" என்று ஜனாதிபதி கூறினார். "அவர்களுடைய சமுதாயம் துன்புற்றது" எப்படிப்பட்ட உணர்வு! கொலைகாரர்கள் இறந்தவர்களின் சடலங்களை பார்த்து அழுதனராம். இது அவர்களுடைய மனிதாபிமானத்தின் வெளிப்பாடல்லவா?

அமெரிக்காவிற்கு இவர் அளித்துள்ள மற்றொரு உயர் ஒழுக்கநெறிக் கருத்து பற்றியும் புஷ் குறிப்பிட்டார்: "தேசிய அரசுகளின் படைகளோடு நாம் போராடவில்லை; தங்களின் அரசியல் நோக்கத்தை அடைவதற்காக நிரபராதியான மக்களை கொல்லும் பயங்கரவாதிகளுடன்தான் நாம் போரிடுகிறோம்."

எந்த நிருபருக்கும் "தேசிய அரசு" என்பதற்கு வரையறை கொடுக்குமாறு ஜனாதிபதியை கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. 1999ல் இரண்டு மாதங்களுக்கு அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியிருந்த சேர்பியாவை புஷ் எப்படி வர்ணித்திருப்பார்? அல்லது அப்படிப்பார்த்தால் ஈராக்கை எப்படி வர்ணித்திருப்பார்? "தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக நிரபராதிக் குடிமக்களை கொல்ல" தயாராக இருப்பவர் என்று பயங்கரவாதியை இவர் விளக்குகையில், ஏன் இந்த பயங்கரவாத முத்திரை இஸ்ரேலிய பிரதம மந்திரிக்கும், அல்லது தற்போதைய அமெரிக்க ஜனாபதியையும் இத்துடன் இணைத்துக்கொண்டு இடக்கூடாது என்றும் அவர்கள் கேட்டிருக்கவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved