World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan government justifies the massacre of school students பாடசாலை சிறார்களைப் படுகொலை செய்ததை இலங்கை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது By Vilani Peiris இலங்கை அரசாங்கம், திங்களன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படை பெருந்தொகையான பாடசாலை சிறார்களை வேண்டுமேன்றே தாக்கிப் படுகொலை செய்ததற்கான குவிந்துகொண்டிருக்கும் சான்றுகளுக்கு, இன்னும் கூடுதலான பொய்களைக் கூறுவதன் மூலமும் மற்றும் மேலும் போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதன் மூலமும் விடையிறுக்கின்றது. போர்விமானங்கள் திங்கட்கிழமை காலை முன்னைய அனாதை இல்லத்தை சேதப்படுத்தியதை அடுத்து, இந்தத் தாக்குதலால் 61 மாணவர்கள், பெரும்பாலும் மாணவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 129 பேர் காயமுற்றுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். சுற்றி இருக்கும் பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் இரண்டு நாள் முதலுதவிப் பயிற்சி பெறும்போது, புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வல்லிபுனத்தில் உள்ள கட்டிடங்களில் இரவு உறங்கிக்கொண்டிருந்தனர். உடனடியாக இக்குற்றச்சாட்டுக்களை மறுத்த இராணுவம், விமானப்பபடையானது புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றையே தாக்கியதாகவும் புலிப் போராளிகளையே கொன்றதாகவும் பிரகடனம் செய்தது. எவ்வாறெனினும், அதே தினம் இலங்கையின் கண்காணிப்புக் குழுவின் தலைவரான உல்்ஃப் ஹென்ரிக்சன், தனது குழு அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டதாகவும், இறந்தவர்கள் மிக இளவயதான பாடசாலை சிறார்களே என்பதை உறுதிபடுத்தியதாகவும் தெரிவித்தார். அவர்கள் அங்கு இராணுவ நிலைகளையோ அல்லது இராணுவக் கருவிகளையோ காணவில்லை என்றும் அவர் அறிவித்தார். அருகில் இருந்த ஐ.நா.குழந்தைகள் அவசர நிதி அமைப்பின் (யுனிசெஃவ்) அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் உடனடியாக குண்டுவீசப்பட்டிருந்த வளாகத்திற்கு விரைந்து எரிபொருள், மருத்துவ வசதிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், 40க்கும் மேற்பட்ட இளம் மாணவிகள் கொல்லப்பட்டுள்ளதோடு 100 சிறார்களுக்கு மேல் காயமுற்றுள்ளதுடன் அவர்களுள் பலரின் நிலைமை மோசமாக இருக்கிறது என்றும் யுனிசெஃவ் கூறியுள்ளது. யுனிசெஃவ்வின் பிரதிநிதியான ஜொனா வான் ஜெர்டன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: "தற்போதைய நிலையில், இவர்கள் புலி உறுப்பினர்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் எங்களிடம் கிடையாது," என்று கூறினார். குவிந்துவரும் எதிர்ப்பை தணிக்கும் வகையில் அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை பேச்சாளர் கேஹேலிய ரம்புக்வெல்ல செவ்வாயன்று கொழும்பில் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். ரம்புக்வெல்ல ஒரு அரசாங்க அமைச்சராவார். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தன்னும் கொஞ்சமும் அனுதாபம் காட்டாத ரம்புக்வெல்ல, முன்னாள் அனாதை இல்லம் புலிகளின் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டியதோடு, இவ்விடத்தில் பயிற்சி பெற்ற சிறார்கள், கடந்த வாரக் கடைசியில் இலங்கை ஆயுதப் படைகளுக்கு எதிராக முகமாலையில் நடந்த தாக்குதலிலும் ஈடுபட்டிருந்ததாக மேலும் தெரிவித்தார். ரம்புக்வெல்லவோ அல்லது இராணுவ பேச்சாளரான அதுல ஜயவர்த்தனவோ, தங்கள் கூற்றுக்கு ஒரு சிறிய ஆதாரத்தைக் கூட முன்வைக்கவில்லை. கூடியிருந்த செய்தியாளர்களுக்கு குண்டுவீசப்படும் முன்னும் வீசப்பட்ட பின்னும் தாக்கப்பட்ட பகுதியின் விமானப் புகைப்படங்கள் காட்டப்பட்டன. ஜப்பானிய கியோடோ இணையத்தளம் இதைப் பற்றி கூறியுள்ளதாவது: "தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்கள் தெளிவாகப் பிரித்து அறியமுடியாத நபர்கள் ஓடிக் கொண்டிருப்பதைத்தான் காட்டுகிறன. அரசாங்கப் பேச்சாளர்கள் இவர்களையே புலி காரியாளர்கள் என்று விவரிக்கின்றனர்." செய்தி ஊடகத்திடம் பிரிகேடியர் ஜயவர்தன கூறுகையில், "காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காக இருக்கும் வகையில் இந்த முகாம் இருந்தது" என்றார். பல ஆண்டுகளாக இப்பகுதியை இராணுவம் கண்காணித்து வந்ததாகவும், உளவாளிகளிடம் இருந்து உட்பட பல வாரங்கள் உளவு சேகரித்த பின்னரே இலக்கை நன்கு பகுத்தாய்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். கண்காணிப்புக் குழு, யுனிசெஃவ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அளித்த சான்றுகள் பற்றி விளக்கம் தர அவர் அக்கறை காட்டவில்லை. புலனாய்வு அறிக்கைகள் அவ்வளவு துல்லியமாக இருந்தால் இராணுவம் ஏன் வேண்டுமேன்றே பாடசாலை சிறார்களைக் கொன்றது என்பது பற்றியும் அவர் விளக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இராணுவ உளவுத்துறையின் துல்லியத்தன்மையை வெளிப்படுத்த விரைந்த வேகத்தில், பல வாரங்களாக அல்லது நீண்டகாலமாக, அதாவது இந்த "பயிற்சி முகாமைச்" சூழ எங்கும் மோதல்கள் தொடங்குவதற்கு முன்னர் இருந்தே இராணுவம் புலிகள் மீது தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டிருந்தது என்பதை பிரிகேடியர் தன்னையும் அறியாமலேயே உறுதிப்படுத்திவிட்டார். விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதன் பேரில் மாவிலாறு அணைக்கட்டின் மதகைத் திறந்துவிடுவதற்காக மட்டுமே "மட்டுப்படுத்தப்பட்ட மனிதாபிமான" நடவடிக்கையாக ஜூலை 26ம் திகதி புலிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்ததாக ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் கூறி வந்ததது. உண்மையில், இராணுவம் இன்னும் பரந்த அளவில், வல்லிபுனம் அனாதை இல்லம் உட்பட புலிகளின் ஏனைய இலக்குகளையும் தாக்குவதற்கான ஒரு நீண்டதும் பரந்ததுமான யுத்தத்திற்கான திட்டங்களை ஏற்கனவே கொண்டிருந்தது. எவ்வாறெனினும், சிறுவர்களை படையில் சேர்ப்பதற்காக புலிகளுக்கு எதிரான வசைமாரிகளை பொழிந்த அமைச்சரிடம் இருந்து இன்னும் உறைய வைக்கும் கருத்துக்கள் வந்தன. "ஒரு முறை ஆயுதங்களுடன் பயிற்சி பெற்ற பின் அவர்களை சிறார்களாக கருத முடியாது. ஒரு சிறுவன் இராணுவ சிப்பாய்களை சுடுவதற்குத் துப்பாக்கியுடன் வந்தால், அவர்கள் அச்சிறுவனை அணைத்துக் கொள்ளுவர் என எதிர்பார்க்க முடியாது. இது போன்ற நேரத்தில், அவர்கள் எதை இலக்காகக் கொண்டுள்ளனர் என்பதைப் பார்க்காமல் அவர்களுடைய வயதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது," என ரம்புக்வெல்ல பிரகடனம் செய்தார். விடயத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றால், திங்கள் கிழமை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளில் எவரும் இலங்கைத் துருப்புக்களை தாக்கியிருக்கவில்லை. இந்த மாணவிகள் இராணுவப் பயிற்சி பெற்று வந்தனர் என்பதற்கான சான்றுகள் ஏதும் கிடையாது. தோலுரித்துக் கூறவேண்டும் என்றால், ரம்புக்வெல்லவின் வாதம் இவ்வாறு முன்செல்கிறது: புலிகள் சிறுவர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கின்றனர். வல்லிபுனம் அனாதை இல்லத்தில் சிறுவர்களே இருந்தனர். எனவே அது ஒரு நெறிமுறையான இலக்கேயாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், சிறுவர்கள் அதே போல் ஆண்களும் பெண்களுமாக முழு வெகுஜனங்களும் எதிரிகளாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதாகும். இஸ்ரேல் அரசாங்கமும் தெற்கு லெபனானில் தமது போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு இதே தர்க்கத்தையே பயன்படுத்துகிறது. "ஹிஸ்புல்லாவின் உட்கட்டுமானத்தை" தகர்த்தல் என்ற அடிப்படையில், இராணுவம் கிராமங்களையும் நகரங்களையும் மற்றும் மாநகரங்களையும் தரைமட்டமாக்கியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்துள்ளது. கானா நகர் மீது குண்டு வீசி, சிறுவர்கள் உட்பட குறைந்தது 28 பேரையாவது கொலை செய்ததை அடுத்து, ராக்கட்டுகளை ஏவுவதற்காக ஹிஸ்புல்லா குழுவினர் அந்தக் கட்டிடங்களை பயன்படுத்தியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்தும் கூறிவருகின்றனர். ஆனால் செய்தியாளர்களும், உதவிப் பணியாளர்களும் கொடுத்துள்ள சான்றுகளோ அதற்கு முற்றிலும் எதிரானவையாக உள்ளன. இலங்கை இராணுவம் இஸ்ரேலியப் போர் இயந்திரத்தின் சுடுதிறனைக் கொண்டிருக்காவிட்டாலும், அதே வழிமுறைகளே பின்றபற்றப்படுகின்றன. முழு மக்களையும் பீதிக்கும் பயங்கரத்திற்கும் உள்ளாக்குவதன் பேரில் புலிகளின் இலக்குகள் என்று சொல்லப்படுவதன் மீது கண்மூடித்தனமான ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆகஸ்ட் துவக்கத்தில் கிழக்கு நகரான மூதூரினுள் புலிகள் நுழைந்து, மாவிலாறுப் பகுதிக்கான இராணுவ விநியோகத்தை வெட்ட அச்சுறுத்தியதை அடுத்து, இராணுவம் அழிவுகரமான ராக்கெட் மற்றும் பீரங்கி குண்டுமாரிகளை பொழிந்தும், பொதுமக்களை கொன்றும் மற்றும் 30,000த்தில் இருந்து 40,000 வரையான மக்களை இடம் பெயரச் செய்வதன் மூலம் பதிலளித்தது. யுனிசெஃவ் முன்வைக்கும் சான்றுகளுக்கு ரம்புக்வெல்ல கொடுக்கும் பதில்கள், புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்ப்பதாக குற்றஞ்சாட்டும் முன்னைய யுனிசெஃவ் அறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டுவதாக உள்ளன. "அவர்கள் [பாதிக்கப்பட்டவர்கள்] சிறுவர்கள், அவர்கள்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று எங்களிடம் யுனிசெஃவ் கூற முடியாது" என்று கூறிய அவர், கண்காணிப்புக் குழுவுக்கும் யுனிசெஃவ்வுக்கும் சந்தேகம் இருந்தால் அரசாங்கம் அவர்களை அந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நகைப்புக்கிடமான முறையில் மேலும் கூறினார். அரசாங்கம் இப்பொழுது எவரையும் புலிகளின் பகுதிக்கு அழைத்துச் செல்லும் நிலையில் இல்லை என்ற உண்மை ஒருபுறம் இருக்க, கண்காணிப்புக் குழு மற்றும் யுனிசெஃவ் பிரதிநிதிகள் ஏற்கனவே அவ்விடத்தைப் பார்வையிட்டு தங்கள் தீர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அட்டூழியம் அரசாங்கத்தின் குற்றத் தன்மையை மட்டுமன்றி, அது முன்னெடுக்கும் யுத்தத்தை கொழும்பு ஊடகங்கள் அடிமைத்தனமாக ஆதரிப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் ஊதுகுழலாக செயற்படும் வலதுசாரி பத்திரிகைகள், அவர்களின் பொய்களை விமர்சனமின்றி மீள் வெளியீடு செய்வதோடு விடுதலைப் புலிகளை சம்பிரதாயப் பூர்வமாக "புலி பயங்கரவாதிகள்" என கண்டனம் செய்கின்றன. நேற்றைய î ஐலண்ட் பத்திரிகை, "அரசாங்கம் முல்லைத்தீவு குண்டுவீச்சு பற்றிய கண்காணிப்புக் குழுவின் கூற்றை நிராகரிக்கின்றது" எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. லக்பிம செய்தித்தாளும் இந்த சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிடும் போது, "சிறுவர் போராளிகள் பயிற்சி முகாமின் மீது விமானத் தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு தாராளவாத மாற்றீடாக காட்டிக் கொள்ள முயலும் டெயிலி மிரர் பத்திரிகை, "முல்லைத்தீவில் 60 இளைஞர்கள் உயிரிழந்தது பற்றி மர்மம் சூழ்ந்துள்ளது" என்ற தலைப்பில் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட ஒரு கட்டுரையில், கொல்லப்பட்டவர்கள் "சிறுவர் போராளிகளாக" இருக்கக் கூடும் என்ற ஆதாரமற்ற ஊகங்களை வெளிப்படுத்தியுள்ளது. யுனிசெஃவ் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும் கூட, இந்நாளேடு ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டது. நேற்று வெளியிட்ட ஒரு கட்டுரையிலும், "யுனிசெஃவ்வுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான எதிர் குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறுவர் கொலை" என்று அறிவித்துள்ளது. எந்தவொரு ஊடகமும் படுகொலைகளைப் பற்றி சுயாதீனமான மதிப்பீட்டை செய்ய முற்படவில்லை. புலிகள், அதே போல் யுனிசெஃவ்வின் கருத்துக்கள் பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செய்தி வெளியிடுவது கூட, தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அச்சுறுத்துமளவிற்கு அரசாங்கத்தைத் தூண்டியுள்ன. "அனைத்து செய்தி ஊடக அமைப்புக்களும் வழிகாட்டியை அறிமுகப்படுத்தும்" திட்டங்களைப் பற்றி விளக்குவதற்காக, ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ தனியார் மற்றும் அரசாங்க ஊடகங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்ததாக டெயிலி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த மாதம் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டம் ஒன்றில் ஆயுதப் படைகளின் சிரேஷ்ட தளபதிகள், பத்திரிகை செய்திகளில் "புலிகளின் பிழையான தகவல்கள்" வெளியிடப்படுவதாக இராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்ததை அடுத்தே இந்தப் பிரேரணை வெளித்தோன்றியுள்ளது. கொழும்பில் உள்ள அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களில் எதுவும், முல்லைத்தீவு குண்டு வீச்சை அதற்கே உரிய பெயரில் அழைக்கவில்லை. இது அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உள்ள பொறுப்பாளிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட வேண்டிய ஒரு யுத்தக் குற்றமாகும். |