:
இலங்கை
Sri Lankan government intensifies military
offensive against LTTE
இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை உக்கிரப்படுத்துகிறது
By Sarath Kumara
11 August 2006
Back to screen version
செவ்வாய்க் கிழமை மாவிலாறு அணைக்கட்டின் மதகு திறக்கப்பட்ட போதிலும், இலங்கை
இராணுவம் கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை உக்கிரப்படுத்தியுள்ளமையானது,
அரசாங்கத்திற்கு 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை நிலை நிறுத்தும் நோக்கம் கிடையாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஜூலை 26, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நீரோட்டத் திசையில் வாழும் ஆயிரக்கணக்கான
விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதன் பேரில் அணையை திறப்பதற்காக "மனிதாபிமான அடிப்படையில்" "மட்டுப்படுத்தப்பட்ட"
இராணுவ நடவடிக்கை தேவை எனக் கூறி அதற்காகக் கட்டளையிட்டார். எவ்வாறெனினும், இந்த "தண்ணீர் விவகாரம்",
புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதையும் மற்றும் கிழக்கில் அதன் பிடியைப் பலவீனப்படுத்துவதையும் இலக்காகக்
கொண்ட இராணுவத் தாக்குதலுக்கு ஒரு சாதாரணமான சாக்குப் போக்கேயாகும்.
கடந்த மூன்று வாரங்களாக, பிரச்சினைக்குரிய பிரதேசத்தை சூழ அமைந்துள்ள புலிகளின்
நிலைகளின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துவதற்காக, அணைக்கட்டின் மதகை மூடுவதன் மூலம் புலிகளால் வழங்கப்பட்ட
சந்தர்ப்பத்தை இராணுவம் பற்றிக்கொண்டது. கடந்த ஞாயிறன்று, நோர்வே சமாதான அனுசரணையாளர்களுடன் நடத்திய
கலந்துரையாடலை அடுத்து, அணையைத் திறப்பதற்கு புலிகள் முன்வந்த போதிலும், அரசாங்கம் இந்தப் பிரேரணையை
நிராகரித்துவிட்டது. இராணுவத்தின் செல் தாக்குதல்களால் தண்ணீரைத் திறப்பதற்காக சென்ற புலிகளுடன் இலங்கை கண்காணிப்புக்
குழுவின் பிரதிநிதிகளால் செல்ல முடியாமல் போனது.
செவ்வாய் கிழமை, மனிதாபிமானக் காரணங்களுக்காக தாம் அணையைத் திறந்துள்ளதாக
புலிகள் அறிவித்துள்ளனர். அன்று மாலை, இந்தக் கூற்றை மறுத்த அரசாங்கம், "இராணுவத்தின் செல்வாக்கிலேயே
தண்ணீர் திறக்கப்பட்டதாக" வலியுறுத்தியது. யார் பொறுப்பாளியாக இருந்தாலும், புதனன்று, சேருநுவர பிரதேசத்தில்
உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் விநியோகமாகியது.
அணை திறக்கப்பட்டமை பதட்ட நிலைமைகளை குறைக்கும் என கண்காணிப்புக் குழுவின்
அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்த போதிலும், நிலைமை மறுபக்கமாக உள்ளது. அணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற
இராணுவம் முயற்சிக்கின்ற நிலையில், கடந்த இரு நாட்களாக மாவிலாறு பிரதேசத்தில் கடுமையான மோதல்கள்
நடைபெறுகின்றன. புலிகளின் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதானது 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை வெளிப்படையாக
மீறுவதாகும்.
தற்போது தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில், இராணுவத் தாக்குதலுக்கான
அரசாங்கத்தின் சாக்குப் போக்கு மாறியுள்ளது. பாதுகாப்பு பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல பிரகடனம்
செய்ததாவது: "அணைக்கட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதே எமது கருத்தாகும். அது
பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்குமானால், அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது அதை
மூடலாம் திறக்கலாம். தண்ணீர் எந்தவிதத்திலும் தடைப்படுவதை நாம் விரும்பவில்லை. ஆகவே படையினர் அங்கும் அதைச்
சூழவும் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவார்கள்.
இன்று டெயிலி மிரர் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தியில்
குறிப்பிட்டிருந்ததாவது: "ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கந்தளாய் மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். சில
சிப்பாய்கள் முகங்கொடுத்துள்ள மோசமான நிலைமை காரணமாக அவர்கள் கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்." ஒரு
உள்ளூர் ஆஸ்பத்திரியின் பொறுப்பாளரான டி.ஜி.எம். கொஸ்டா, மூன்று வாரகால மோதலில் காயமடைந்த
பெருந்தொகையானவர்களுக்கு தனது ஊழியர்கள் சிகிச்சையளிப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
புலிகள் தமது போராளிகளில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்த அதே வேளை, 40
படையினரைக் கொன்றதாகவும் மேலும் 120 பேரை காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். பொதுமக்கள் உள்ள
பிரதேசத்தின் மீது செல் வீசுவதோடு தாக்குதல் தொடுப்பதாகவும், இதனால் 50 பேர் உயிரிழந்தும் மற்றும் 200
பேர் காயமடைந்துமுள்ளதாக பாதுகாப்புப் படையினர் மீது புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை
இராணுவம் மறுக்கவில்லை. ஆனால் "ஜனத்தொகை உள்ள பிரேதசங்களுக்கு ஆயுதங்களை நகர்த்துவதாக" புலிகள் மீது
இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. லெபனானில் இஸ்ரேல் போல் அல்லது ஈராக்கில் அமெரிக்கா போல், இலங்கை
இராணுவமும் அப்பாவி மக்களை கொலை செய்வதை நியாயப்படுத்துவதற்கான சாக்குப் போக்காக "மனிதக்
கேடயத்தைப்" பயன்படுத்துகிறது.
மாவிலாறில் முதல் இருந்த நிலையில் இருந்து புலிகளின் இலக்குகள் மீது தமது குண்டுத்
தாக்குதல்களை விமானப் படை தொடர்கிறது. புதனன்று இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் ஜெட் விமானங்கள் சாம்பூர்,
முதூர் கிழக்கு மற்றும் வெருகல் பிரதேசங்களை சேதப்படுத்தியது. புலிகளின் படி, வெருகல் பிரதேசத்தின் மீது தொடுத்த
விமானத் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதே பிரதேசத்தில் நேற்று மேலும் தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளன. இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள், கிழக்கு முழுவதிலும் பிரதான மூலோபாய நிலைகளில் இருந்து
புலிகளை அகற்றும் அரசாங்கத்தின் இலக்கையே கோடிட்டுக் காட்டுகிறது.
ஜனாதிபதி இராஜபக்ஷ தான் ஆக்கிரமிப்பு யுத்தத்தை முன்னெடுக்கவில்லை என தொடர்ந்தும்
வலியுறுத்தும் அதே வேளை, அவரது பிரதான அரசியல் பங்காளியான சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி.), யுத்த நிறுத்தத்தை கிழித்தெறியுமாறும் புலிகளை இராணுவ ரீதியில் அழிக்குமாறும் வெளிப்படையாக
அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. புதன் கிழமை பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜே.வி.பி.
பேச்சாளர் விமல் வீரவன்ச, சாம்பூர் பிரதேசத்தில் புலிகள் இருப்பதானது திருகோணமலை துறைமுகத்தைச் சூழ உள்ள
பிரதான இராணுவ நிலைகளுக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, அங்கிருந்து புலிகளை வெளியேற்றுமாறு இராணுவத்திற்கு அழைப்பு
விடுத்தார்.
2004ல் புலிகள் அமைப்புக்குள் ஒரு பெரும் பிளவு ஏற்பட்டதில் இருந்து, கிழக்கில்
புலிகளுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்த் தாக்குதலொன்றை நடத்துமாறு அழுத்தம் கொடுத்து வந்த இராணுவத்தின் சில
பிரிவினரின் உணர்வையே வீரவன்சவின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாக, புலிகளில் இருந்து
பிரிந்த கருணா குழு, புலிகள் மீதான ஆத்திரமூட்டல் தாக்குதல்களில் இராணுவத்துடன் மறைமுகமாக செயற்பட்டு
வருகின்றது. சாம்பூர் பிராந்தியத்தில் உள்ள புலிகளின் நிலைகள் மீண்டும் மீண்டும் பிரதான இலக்காக அடையாளம்
காணப்பட்டன. திருகோணமலை, கிழக்குக் கடற்கரையில் ஒரு பிரதான ஆழ் கடல் துறைமுகமாக இருப்பதோடு வடக்கில்
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு துருப்புக்களை விநியோகிக்கும் அத்தியாவசியமான இணைப்பாகவும் உள்ளது.
யுத்தம் ஏற்கனவே விரிவடைந்து கொண்டிருக்கின்றது. கடந்த வாரம், மாவிலாறு
பிரதேசத்திற்கான இராணுவ விநோயோகப் பகுதிகளை குறுக்கே வெட்டும் முயற்சியாக மூதூர் நகரின் சில பாகங்களை
புலிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இராணுவம் இதற்கு அழிவுகரமான விமான மற்றும் ஆட்டிலரித் தாக்குதல்கள்
மூலம் பிரதிபலித்ததோடு இந்தத் தாக்குதல்களில் டசின்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 40,000 பேர்
வீடுகளை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர். அகதிகளில் பெரும்பாலானவர்கள், தேவையான உணவு, தங்குமிடம் அல்லது
மருத்துவ உதவிகளும் இன்றி கந்தளாயில் வரையறைக்குட்பட்ட நிலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
செவ்வாயன்று, கொழும்புத் தலைநகரில் ஒரு கார்க் குண்டு வெடித்தது. அது
அரசாங்கத்துடனும் இராணுவத்துடனும் கூட்டு வைத்துள்ள ஒரு தமிழ் துணைப்படைக் குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக்
கட்சியின் அலுவலரான சங்கரப்பிள்ளை சிவதாசனை புலிகள் இலக்கு வைத்துள்ளதாகத் தோன்றியது. சிவதாசன் கடுமையான
காயங்களுடன் உயிர்தப்பிய போதிலும், மூன்று வயது குழந்தை உட்பட ஏனைய இருவர் கொல்லப்பட்டனர். மேலும்
எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.
2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது, பெரும் வல்லரசுகளும்
அதே போல் கொழும்பில் உள்ள கூட்டுத்தாபன தட்டுக்களின் குறிப்பிடத்தக்க பிரிவினரும், 20 வருடகால யுத்தத்திற்கு
முடிவுகட்டும் வழியாக சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளித்தனர். இந்த யுத்தம், இலங்கையிலும் மற்றும் இந்தியத்
துணைக்கண்டம் பூராவும் அவர்களது பொருளாதார நலன்களுக்குத் தடையாக இருந்து வருகின்றது. நான்கு ஆண்டுகளின்
பின்னர், "சர்வதேச சமூகம்" குறிப்பாக புஷ் நிர்வாகம் அமைதி காப்பதானது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராணுவ
தாக்குதலை பெரும் வல்லரசுகள் மெளனமாக ஆதரிப்பதையே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்புக்குள், முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் யுத்த முனைப்புக்களுக்குப்
பின்னால் அணிதிரண்டுள்ளன. ஜே.வி.பி. போன்ற வெளிப்படையான யுத்த பரிந்துரையாளர்கள் மட்டுமல்ல, இலங்கை ஆளும்
வட்டாரத்தின் "தாரான்மை" எதிர்ப்பையும் விஞ்சி, எதிர்க் கட்சியும் இராணுவவாத மற்றும் இனவாத ஆர்பரிப்புக்களுடன்
சேர்ந்துகொண்டுள்ளது. நேற்றைய டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு இதற்கான ஒரு சிறந்த
உதாரணமாகும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக "சமாதான முன்னெடுப்பிற்கு" பிரச்சாரம் செய்த இந்த
செய்திப் பத்திரிகை, இராணுவத்தின் அண்மைய நடவடிக்கைகளுக்காக அதைப் பாராட்டத் தொடங்கியுள்ளது.
வருத்தத்துடன் சமாதானப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை, இந்த ஆசிரியர்
தலைப்பு லெபனானின் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திற்கு ஊக்கமூட்டுகிறது. அது பிரகடனம் செய்துள்ளதாவது:
"ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தை வெளியேற்றுவதற்காக லெபனானுக்குக்குள் இஸ்ரேலின் படையெடுப்பின் மனித துன்பமானது
பூகோள ரீதியில் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் இராணுவம் இலக்கை அடைய முடியாமல் இருக்கலாம்.
பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் ஒரு இடத்தில் நசுக்கப்படும் போது, அவர்கள் தமது குற்றச் செயல்களை இன்னொரு
இடத்தில் செய்கின்றளவுக்கு இன்று இந்த நாட்டில் பயங்கரவாதத்தின் வலையமைப்பு பரந்தளவில் விரிவடைந்துள்ளது.
"ஆகையால், அரசாங்கம் ஒரு காத்திரமான கொள்கையை முன்னெடுப்பதை தேர்ந்தெடுத்தால்,
அது சரியாக தயார் செய்யபட்டிருக்க வேண்டும். மற்றும் மக்களின் பரந்த பிரிவினரின் ஆதரவு சாத்தியமானளவு பெற்றுக்கொள்ளப்பட
வேண்டும். உண்மையில், இலக்கை அடைவதற்கான வேறு அணுகும் வழிகள் இல்லையெனில், இத்தகைய நடவடிக்கையின் போது
தமது ஆதரவை வழங்குவதைப் பற்றி அக்கறை செலுத்துவது அனைவரதும் கடமையாகும்." யுத்தத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக,
அது முன்னர் செய்திருக்கக் கூடிய விதத்தில், மீண்டும் இராணுவ மோதலுக்குச் செல்வதை டெயிலி மிரர்
பகிரங்கமாக ஆதரிக்கின்றது.
சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆழமடைந்து வரும் நிலைமையின் மத்தியில்,
மீண்டும் யுத்தத்தை நோக்கிய முனைப்புக்குப் பின்னால் ஆளும் கும்பலின் அனைத்து தட்டுக்களும் கைகோர்த்துக் கொள்கின்றன.
1948ல் சுதந்திரத்தில் இருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆளும் வர்க்கமானது தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதன்
பேரில் இனவாத உணர்வுகளை கிளறிவிடுவதன் மூலமே சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமை சம்பந்தமாக வளர்ச்சியடையும்
எதிர்ப்புக்கு பதிலளித்துள்ளது. ஏற்கனவே 65,000 உயிர்களை பலியெடுத்த, உடன்பிறப்புக்களை கொல்லும் யுத்தத்திற்கு,
உழைக்கும் மக்கள் தவிர்க்க முடியாத விதத்தில் தம்மை அர்ப்பணிக்க தள்ளப்படுவார்கள். |