:
இலங்கை
Fighting in eastern Sri Lanka spreads to the
town of Muttur
கிழக்கு இலங்கையில் மோதல்கள் மூதூர் நகர் வரை பரவியுள்ளது
By Wije Dias
4 August 2006
Back to screen
version
இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து
கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் கணக்கிட்டது போல், மாவிலாறு மதகைக் கைப்பற்றுவதற்கான
இராணுவத்தின் ஆத்திரமூட்டல் முயற்சியானது, புலிகள் இராணுவத் தாக்குதல்களுக்கு எதிர் தாக்குதல்களை தொடுத்து
விநியோகப் வழிகளை தடை செய்ய முயற்சிக்கும் நிலைமையின் கீழ், கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கான
விரிவான யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.
ஜூலை 26ல் இருந்து, ஆயிரக்கணக்கான துருப்புக்களை ஈடுபடுத்தி புலிகளின் நிலைகள் மீது
அடுத்தடுத்து குண்டுகள் வீசிய போதிலும், இன்னமும் மதகைக் கைப்பற்ற இராணுவத்தால் முடியாமல் உள்ளது. கடந்த இரு
நாட்களாக, மூதூர் நகரைக் கைப்பற்றுவதற்கான மோதல் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. மூதூர் நகர், திருகோணமலையில்
உள்ள பிரதான துறைமுகத்திற்கும் மற்றும் மாவிலாறு அணைக்கட்டு மதகிற்கும் இடையிலான பாதையில் அமைந்துள்ளது.
ஊடக அறிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, குறைந்த பட்சம் 200 புலி
போராளிகள் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த நகருக்குள் புதன் கிழைமை நுழைந்து, நகரின் மத்திய பகுதியை
நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மூதூர் நகர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதை இராணுவம்
மறுக்கின்ற அதேவேளை, இந்த மறுப்பு 36 மணித்தியாலத்தின் பின்னரே வெளியிடப்பட்டதோடு நிலைமை தெளிவற்றதாக
உள்ளது.
புதன் கிழமை பி.பி.சி. தமிழ் சேவையுடன் உரையாடிய அப்துல் ரவுப், நூற்றுக்கணக்கான
புலி உறுப்பினர்களை மூதூரின் எல்லாப் பகுதிகளிலும் கண்டதாகத் தெரிவித்துள்ளார். புலிகளின் முற்றுகைக்குள்ளாகியுள்ள நகரின்
நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள முகாம்களுக்குள் இராணுவம் பின்வாங்கியுள்ளதாக அவர் கூறினார். மூதூர் இறங்குதுரையை
புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் மீண்டும் வலிமையூட்டுவது இராணுவத்திற்கு கடனமானதாகியுள்ளது எனவும் இன்னொரு கண்கண்ட
சாட்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளிவரும் டெயிலி மிரர் பத்திரிகை, "மத்திய பஸ் தரிப்பு,
தொலைத் தொடர்பு திணைக்களம் மற்றும் நகரின் மத்தியிலும் இருந்த பொலிஸ் காவலரன்கள், புலிகளின் தாக்குதலின் காரணமாக
அப்புறப்படுத்தப்பட்டதாக," பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி தெரிவித்திருந்தது. சாதாரண மொழியில்
சொன்னால், எந்தவொரு எதிர்ப்பும் காட்டாமல் பொலிஸ் தமது காவலரன்களை கைவிட்டுள்ளது.
அவநம்பிக்கையான நிலையில், கட்டுப்பாட்டை மீண்டும் எடுக்கும் முயற்சியில் இராணுவம்
கண்மூடித்தனமாக செல் வீச்சு நடத்தத் தொடங்கியுள்ளது. திருகோணமலை கடற்படைத் தளத்தில் இருந்து உக்கிரமான
செல் வீச்சுக்கள் நடத்தப்பட்ட நிலையில், மூதூர் பகுதியில் இருந்து பொது மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு தேவாலயங்கள்,
பள்ளிகள் மற்றும் பாடசாலைகளிலும் அகதிக்ளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த இடங்கள் அகதி நிலையங்களாக தெளிவாகக் குறிக்கப்பட்டிருந் போதிலும், பல
நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளும் தஞ்சம்
புகுந்திருந்த அரபு கல்லூரியை ஒரு ஆட்டிலரி செல் தாக்கியது. குறைந்த பட்சம் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளதோடு
பெருமளவிலானவர்கள் காயமடைந்துள்ளனர். மோட்டார் குண்டு புனித அந்தோனியார் தேவாலயத்தில் விழுந்ததில் எட்டு
வயது சிறுவன் உயிரழந்தான். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற அம்புலன்ஸ்ஸும்
தாக்கப்பட்டது. இதில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு சாரதி பின்னர் உயிரழந்தார்.
மூதூரில் உள்ள ஒரு பொது சேவையாளரான ஜே.எச். பாரிஸ் ராய்ட்டருக்கு
குறிப்பிட்டதாவது: "பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு தண்ணீரோ மின்சாரமோ கிடையாது.
கால்நடைகள் வீதிகளில் செத்துக் கிடக்கின்றன. பள்ளிவாசலில் உள்ளவர்கள் எங்களை பாதுகாப்பாக முஸ்லிம் கல்லூரியில்
போய் இருக்கச் சொன்னார்கள். செல் விழும்போது நாங்கள் வெளியில் இருந்தோம்." இந்தத் தாக்குதலில் அவரது
மகன் காயமடைந்துள்ளார்.
இந்த செல் தாக்குதலுக்கு புலிகள் மீது குற்றஞ்சாட்ட அராசங்க மற்றும் இராணுவப்
பிரதிநிதிகளும் முயற்சித்தனர். ஆயினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா) தலைவர் ரவுப் ஐக்கீம்,
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முதூர் நகரில் உள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய அகதி முகாம்கள் மீது
இராணுவம் செல் வீசுவதாக நேற்று குற்றஞ்சாட்டினார். புலிகளுக்கு எதிரான ஹக்கீம் தெரிவித்ததாவது: "பொது
மக்களை கொன்றதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்... பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட
தாக்குதல்களிலேயே பொது மக்கள் இறந்துள்ளனர்." அவர் உடனடியாக மோதல்களுக்கு முடிவுகட்டுமாறு வேண்டுகோள்
விடுத்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்குள் நடந்த மோதல்களில் 15க்கும் 20க்கும் இடைப்பட்ட
எண்ணிக்கையிலான பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை.
நேற்று புலிகள் 40 படையினரை கொன்றதாக கூறியதோடு சடலகளை கையளிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவித்தது.
இந்தக் கூற்றை நிராகரித்த இராணுவம், கடந்த வாரத்தில் ஒரு சில சிப்பாய்களையே இழந்ததாகவும் எதிரிகளில் 70
பேரைக் கொன்றதாகவும் கூறியது. ஊடகங்கள் அரசாங்கம் தனது இராணுவத் தாக்குதல்களை தொடங்கியதில் இருந்து
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 150 ஆகக் காட்டின.
சாத்தியமான வகையில் ஒரு பளபளப்பான சித்திரத்தை தீட்ட ஊடகமும் அரசாங்கமும் மற்றும்
இராணுவமும் முயற்சித்த போதிலும், தாக்குதல்கள் திட்டமிட்ட முறையில் நடைபெறவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மாவிலாறு
மதகை உடனடியாக திறக்கத் தவறிய இராணுவம், இப்போது தமது நிலைகள் மீதான புலிகளின் ஒருமுகப்படுத்தப்பட்ட எதிர்த்
தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கின்றது. மூதூரில் பொது மக்கள் மீதான இந்த செல் வீச்சுக்கள், பின்வாங்குவதை விட
விளைவுகளை பாராமல் முன்செல்ல அரசாங்கம் முயற்சிப்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும்.
சமாதானத்தை விரும்பும் மனிதனாக தன்னைக் காட்டிக் கொண்ட போதிலும், ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷ, கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் சிங்களப் பேரினவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் ஒரு குறுகிய வெற்றியை பெற்றதில் இருந்தே ஒரு யுத்த
கொள்கையையே கடைப்பிடித்து வந்துள்ளார். இராணுவமும் மற்றும் அத்தோடு இணைந்த கருணா குழு போன்ற புலிகளுக்கு
எதிரான துணைப்படைகளும், புலிகளை பலவீனப்படுத்தி அவர்களை பதில் தாக்குதல் நடத்தச் செய்வதை இலக்காகக்
கொண்டு ஆத்திரமூட்டல் பிரச்சாரங்கள் மற்றும் படுகொலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளன.
பல மாதங்களாக, புலிகளுக்கு எதிராக குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இராணுவத்
தாக்குதல்களை முன்னெடுக்குமாறு ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஏனைய சிங்களத் தீவிரவாதிகளும்
அரசாங்கத்தை நெருக்கி வந்தன. சமாதானப் பேச்சுக்கள் எந்தவிதத்திலும் புதுப்பிக்கப்படுவதை விடாப்பிடியாக
எதிர்க்கும் இந்த இனவாத தட்டுக்கள், 2004ல் கருணா குழு பிரிந்ததை அடுத்து, கிழக்கில் புலிகளை பலவீனப்படுத்துவதில்
இராணுவம் முன்னேற்றம் காண வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளன.
மாவிலாறு மதகு மூடப்பட்டமை, நீண்ட காலமாகக் கலந்துரையாடப்பட்டு வந்துள்ள இந்த
மூலோபாயத்தை முன்னெடுக்க இராணுவத்திற்கு ஒரு வசதியான சாக்குப் போக்கை சாதாரணமாக ஏற்படுத்திக்
கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேற்றப்படாமையினால் தமது துன்பங்களை வெளிப்படுத்தி
எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உள்ளூர் கிராமவாசிகள் இந்த மதகை மூடிவிட்டுள்ளதோடு, இந்த விவகாரம்
பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என புலிகள் வலியுறுத்தி வந்துள்ளனர். எந்தவொரு
பேச்சுவார்த்தையையும் நிராகரித்த இராஜபக்ஷ, நீரோட்டத் திசையில் வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தண்ணீர்
வழங்குவதற்கான அவசர "மனிதாபிமான" நடவடிக்கையாக இராணுவத் தாக்குதல்களுக்கு கட்டளையிட்டார்.
நேற்று சற்றே பின்வாங்கிய, பாதுகாப்புப் பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, மாவிலாறு
நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு கதவு திறந்துள்ளதாக பிரகடனம் செய்தார். எந்தவொரு நிபந்தனைகளும்
இன்றி மதகை புலிகள் திறக்குமளவிற்கு இராணுவம் பிரசேத்தில் இருந்து வெளியேறும் என அவர் தெரிவித்தார். "புலிகள்
தயார் என்றால் உடனடியாக பேச்சுக்களை தொடங்க நாங்களும் தயார். நாங்கள் மீண்டும் யுத்தத்திற்குத் திரும்ப
விரும்பவில்லை," என அவர் பிரகடனம் செய்தார்.
இந்த சிடுமூஞ்சித் தனமான கருத்துக்களில் எவரும் நம்பிக்கை வைக்க வேண்டியதில்ல. மதகை
கைப்பற்றுவத்றகான இராணுவ நடவடிக்கைக்கு இராஜபக்ஷ கட்டளையிட்டு ஒரு வாரம் கடந்துள்ளதோடு 150 உயிர்கள்
பலியாகிய பின்னர், அரசாங்கப் பிரதிநிதி ஒருவர், அரசாங்கம் யுத்தத்தை விரும்பவில்லை, விவகாரத்தைப்
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என இப்போது அறிவிக்கின்றார். இந்த தலைகீழ் மாற்றத்திற்கான தெளிவான காரணம்,
மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக நோர்வே தூதர் ஜோன் ஹன்சன் இன்று கொழும்பு வந்திருப்பதாகும்.
ரம்புக்வெல்லையின் கருத்துக்கள் தற்போதைய மோதலுக்கு புலிகள் மீது குற்றஞ்சாட்டும் பண்பற்ற முயற்சியாகும்.
இலங்கை பூராவும் உள்ள கிராமப்புற ஏழைகளும் விவசாயிகளும் நன்கு தெரிந்துகொண்டுள்ள
வகையில், இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு அவர்களது நல் வாழ்க்கை பற்றி கொஞ்சமேனும் அக்கறை கிடையாது.
அண்மையில் வெளியான மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையின்படி, மாத்தறை, மாத்தளை,
ஹம்பந்தொட்ட, குருணாகல், பதுள்ள மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சராசரி வருமானம், மாதம் சுமார் 21
அமெரிக்க டொலர் பெறுமதியான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுக்கு கீழ்ப்பட்டதாகும். அரசாங்கம் இந்த
ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடிகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்காகவே இனவாதப் பதட்டங்களை கிளறுவதோடு
நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடிக்கின்றது.
இராஜபக்ஷ அரசாங்கத்தின் இத்தகைய போக்கு, சிங்களப் பேரினவாத பங்காளிகளின்
அறிக்கைகளில் இருந்து மேலும் தெளிவாக அம்பலத்திற்கு வந்துள்ளது. புதன்கிழமை ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய
ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச, மாவிலாறு மதகைக் கைப்பற்றுவதற்காக இராணுவ
அதிகாரத்தை பயன்படுத்தியதை பாராட்டியதோடு, எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி 2002ல் ஸ்தாபிக்கப்பட்ட
யுத்த நிறுத்தத்தின் விதிகளுக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த நோர்வேயின் பிரதான அனுசரணையாளரான
எரிக் சொல்ஹெயிம் இந்த வாரம் வெளியிட்ட கருத்துக்களை கண்டனம் செய்தார். புலிகளுக்கு எதிரான ஒட்டு மொத்த
யுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வீரவன்ச, யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒரு செல்லுபடியற்ற கடிதம் என பிரகடனம்
செய்ததோடு அதிலிருந்து உத்தியோகபூர்வமாக விலக வேண்டும் என அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். |