World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Slaughter in Lebanon enters fourth week

What way forward in the struggle against war?

லெபனான் படுகொலைகள் நான்காம் வாரத்தில் நுழைகின்றது

போருக்கு எதிரான போராட்டத்தில் எந்தப்பாதையில் முன்னோக்கிச் செல்வது?

Statement of the Socialist Equality Party
2 August 2006

Back to screen version

இக்கட்டுரை PDF துண்டுப்பிரசுரத்தில் வினியோகிப்பதற்கு கிடைக்கும்

லெபனிய மக்களுக்கு எதிரான மிருகத்தனமான அமெரிக்க-இஸ்ரேலிய போர் நான்காம் வாரத்தை தொடரும் நிலையில், அப்பாவி குடிமக்கள் மீதான படுகொலை விரைவில் முடிவுறும் என்பதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதற்கு மாறாக, விமானத் தாக்குதல், பீரங்கிக் குண்டு வீச்சுக்களின் ஆதரவுடன், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), லிட்டனி ஆற்றிற்கும் இஸ்ரேலிய எல்லைக்கும் இடையில் உள்ள முழு மக்கட்தொகையினரையும் கொன்றுகுவிப்பதன் மூலமோ அல்லது விரட்டியடிப்பதன் மூலமோ, அந்த ஆற்றை நோக்கி 18 மைல்கள் முன்னேறும் வெளிப்படையான நோக்கத்துடன், இன்னும் கூடுதலாக லெபனானிற்குள் ஊடுருவ அழுத்தம் கொடுக்கின்றன.

இஸ்ரேலிய தரைப்படைகள் சிரியாவுடனான லெபனானின் எல்லைக்கு அருகே உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும் நுழைந்துவிட்டன.

தெற்கு லெபனான் மற்றும் தெற்கு பெய்ரூட்டின் பெரும்பகுதிகளை தரைமட்டம் ஆக்கிவிட்ட குண்டுவீச்சுக்கள், நாட்டின் உள்கட்டுமானத்தின் பெரும்பகுதியை முடக்கிவிட்ட நிலை, 700 உயிர்களை கவர்ந்தது, ஆயிரக்கணக்கான மக்களை காயப்படுத்தியது, கிட்டத்தட்ட முக்கால் மில்லியன் மக்களை அகதிகளாக்கியது என்ற கடந்த மூன்று வாரக் கொடூரங்கள் இன்னும் கூடுதலான படுகொலைகளுக்கு ஒரு முன்னோடிதான் என்று நம்புவதற்கு தக்க காரணங்கள் உள்ளன. கானா எனும் சிற்றூரில் நடந்த, பெரும்பாலனவர்கள் சிறார்களாக இருந்த 60 பேர் கொண்ட கூட்டத்தின் உயிரைக் குடித்த போர்க்குற்றம், வரவிருக்கும் நாட்களிலும், வாரங்களிலும் பிராந்தியம் முழுவதிலும் மீண்டும் நிகழ்த்தப்படும்.

இஸ்ரேலிய அரசாங்கம் ஏற்கனவே கானாப் படுகொலையை அடுத்து தற்காலிகமாக குண்டுவீச்சை 48 மணிநேரம் நிறுத்திவைத்திருந்ததற்கு முற்றுப் புள்ளி வைத்தது; அதுவும் கூட நினைத்த இடங்களில் தாக்குவதின் மூலம் அசட்டை செய்யப்பட்டிருந்தது. புதன்கிழமை காலை லெபனானுக்கு எதிரான முழு அளவிலான விமானத் தாக்குதல்கள் மீண்டும் தொடரலாயின. முதற் தடவையாக இஸ்ரேலிய போர்விமானங்கள் லிட்டனிக்கு வடக்கே கூட துண்டுப் பிரசுரங்களை பொழிந்து அங்குள்ள கிராமவாசிகளும் உடனே தங்கள் வீடுகளை விட்டுக் குடிபெயராவிட்டால் குண்டுத்தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தன.

பால்பெக் நகரத்தின் அருகேயுள்ள பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய ஹெலிகாப்டரின் குண்டுவீச்சுப் பிரிவுகள் முந்தைய தாக்குதலில் காயமுற்றிருந்த மக்கள் நிறைந்திருந்த மருத்துவமனை ஒன்றை தாக்கியதாக சாட்சிகள் கூறுகின்றனர்.

அரசாங்கத்தின் பாதுகாப்பு மந்திரிசபையில் ஓர் உறுப்பினராக உள்ள இஸ்ரேலிய வணிக மந்திரியான Eli Yshai, இராணுவ வானொலியில் இவ்வாரம் போர்நிறுத்தத்திற்கு ஐ.நா. வாக்களிக்கும் என்ற ஆபத்து இல்லை என்றும், அவ்வாறு செய்தாலும்கூட இஸ்ரேல் அதை அசட்டை செய்துவிடும் என்றும் கூறினார்.

"ஐ.நா. ஒரு போர்நிறுத்த முடிவு எடுத்தால் இஸ்ரேல் ஒன்றும் பெருங்கவனத்துடன் எழுந்து நின்று தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கிடையாது" என்று அவர் அறிவித்தார். "எமது வரையறைகளுக்குட்பட்டுத்தான்" நமது அரசாங்கம் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ளும் என்றும், "எமது அமெரிக்க நண்பர்கள் எப்படியும் அத்தகைய விஷயத்தை தடுப்பதிகாரம் மூலம் தடுத்துவிடுவர்" என்றும் அவர் கூறினார். எத்தீர்மானத்தையும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர் என்னும் முறையில் வாஷிங்டன் தடுப்பதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திவிடும் அதிகாரத்தை குறித்து அவர் அவ்வாறு குறிப்பிட்டார். அவரும் ஏனைய இஸ்ரேலிய அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு போர் இன்னும் குறைந்தது பல வாரங்களாவது தொடரும் என்ற குறிப்பைத்தான் காட்டினர்.

இஸ்ரேலிய ஆட்சியானது, வாஷிங்டனில் உள்ள தன்னுடைய புரவலர், லெபனான் போரில் தனக்கு ஆதரவை தொடர்வார் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதற்கு பல காரணங்களும் உண்டு. புஷ் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆதரவு என்பதை மட்டும் தந்து கொண்டிராமல், லெபனானின் ஷியைட் ஹெஸ்பொல்லா இயக்கத்தை தகர்க்கும் தீர்மானிக்கப்பட்ட நோக்கத்தை அடைவதற்கு இஸ்ரேலை இன்னும் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கத்தை அதிகமாக தூண்டும் என்பதற்கான அடையாளங்கள் உள்ளன.

இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலின் காட்டுமிராண்டித்தனமான தன்மையையும்விட உலக மக்களின் கருத்துக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பது என்னவெனில், இஸ்ரேலால் பாதிப்பு அனுபவிக்கப்பட்ட ஒவ்வொரு இழப்பிற்கும், 30 லெபனிய குடிமக்களின் உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ள மற்றும் தண்டனையாக சுமத்தப்பட்டுள்ள மற்றும் லெபனானை பல தசாப்தங்கள் பின்னிருந்த நிலைக்கு தள்ளுவதை இயக்கிவிட்ட ஒரு போருக்கு வாஷிங்டன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பதாகும்.

புஷ் நிர்வாகத்தின் முந்தைய முக்கிய அதிகாரிகளான முன்னாள் வெளியுறவுத்துறை துணை அமைச்சரான ரிச்சார்ட் ஆர்மிடேஜ், புஷ்ஷின் முதல் பதவிக்காலத்தில் கொள்கை மற்றும் திட்டப்பிரிவின் தலைவராக வெளியுறவுத்துறையில் இருந்த ரிச்சார்ட் ஹாஸ் போன்றவர்கள்கூட பாரபட்சமற்ற ராஜதந்திரத்தை கையாள்கின்றோம் என்ற பாசாங்கை கூட காட்டிக் கொள்ள முடியாத நிலையில் நிர்வாகம் தோற்றுள்ளதை கண்டு பெரும் ஏமாற்றத் திகைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் மீண்டும் புஷ்ஷும் மற்ற உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளும் லெபனானில் உடனடியான போர்நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், "நீடித்த சமாதானம்" வேண்டும் எனக் கூறுகின்றனர். இதன் பொருள் தங்களுடைய போர் நோக்கங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் அடைந்த அடிப்படையில்தான் போர் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்பதேயாகும். இத்தகைய "போர்நிறுத்தங்கள்தாம்" போலந்து, பிரான்ஸ் மற்றறும் ஏனைய இடங்களில் 1930களிலும் 1940களிலும் மூன்றாம் ரைகினால் (நாசி பாராளுமன்றம்) சுமத்தப் பெற்றிருந்தன.

வேண்டுமேன்றே எதையும் காணக்கூடாது என்று இருப்பவர்களை தவிர ஏனையவர்கள் அனைவருக்கும் ஜூலை 12 அன்று இரண்டு இஸ்ரேலிய வீரர்களை ஹெஸ்பொல்லா சிறைப்படுத்தியது ஒன்றும் தற்போதைய போருக்குக் காரணம் அல்ல என்றும் அது நீண்ட காலமாக திட்டமிடப்பட்டிருந்த ஆக்கிரோஷ போருக்கு ஒரு போலிக் காரணம்தான் என்றும் இப்பொழுது அனைவருக்கும் தெளிவாகும். இது இஸ்ரேலிய அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டு நடந்தேறியபின் வாஷிங்டன் தன்னுடைய ஆசிகளை வழங்கிய போரும் அல்ல. மாறாக, மத்திய கிழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கின் மீதான போருடன் ஆரம்பித்த அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடானது ஆழ்ந்து, அகன்று விரிவடையும் தன்மையைத்தான் இது பிரதிநிதித்துவம் செய்கின்றது.

இப்போரின் நோக்கங்கள் ஹெஸ்பொல்லாவிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பது என்பது மட்டும் அல்ல; மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில், "பயங்கரவாதத்தின் மீதான பூகோளப் போர்" என்று அழைக்கப்படுவதை பயன்படுத்தி இப்பகுதிகளில் குவிந்துள்ள எண்ணெய் இருப்புக்கள் அனைத்திலும் வாஷிங்டனின் இரும்புப் பிடியை நிறுவுதலை நோக்கமாக கொண்டுள்ள ஒரு கொள்கையை நியாயப்படுத்தும் அமெரிக்க மூலோபாய இலக்குளை பெருக்குபவைதான் இவை. எனவே இப்போர் பூகோள மேலாதிக்கத்தை அடைவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய இலக்காகவே பார்க்கப்படுகிறது.

லெபனானுக்கு எதிரான போருக்கு புஷ் நிர்வாத்தின் நிபந்தனையற்ற ஆதரவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுகாறும் அதன் உண்மையான இலக்குகளை வரலாற்று வகையில் மூடிமறைத்து வைத்திருந்த ஜனநாயக மற்றும் சமாதான பாசாங்குகளை கூடக் கைவிட்டுவிட்டது. போரும், நிரபராதியான குடிமக்களை படுகொலை செய்வதும் வெளிநாட்டுக் கொள்கையின் முறைமையான கருவிகள் என்று மீண்டும் ஆக்கப்பட்டுவிட்டன.

புஷ்ஷும் செனியும் "முன்னரே தாக்கித் தனதாக்கும் போர்", "21ம் நூற்றாண்டின் புதிய போர்கள்" என்றெல்லாம் கூறினாலும், அவை அனைத்தும் இப்பொழுது அவற்றின் உண்மையான வெளிச்சத்தில் பார்க்கப்பட முடியும். ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பு என்பது, அமெரிக்க பெருநிறுவன, பெருநிதிய உயரடுக்குகளின் உலகந்தழுவிய நலன்களை பாதுகாக்க இராணுவ வன்முறை, பயங்கரம் ஆகியவற்றை பரந்த அளவில் பயன்படுத்துவதின் ஆரம்பம் மட்டுமேயாகும்.

லெபனானுக்கு எதிரான இஸ்ரேலிய போருக்கான அமெரிக்க ஆதரவு என்பது சிரியாவிலும் ஈரானிலும் "ஆட்சி மாற்றங்களை" கொண்டுவர இருக்கும் வருங்கால இராணுவ நடவடிக்கைகளுக்கான படிக்கல்லாகும். தன்னுடைய பூகோள அபிலாஷைகளுக்கு சவாலை சிறிதேனும் கொடுக்கும் திறனுடைய எந்த ஆட்சியையும் அனுமதிப்பதில்லை என்று வாஷிங்டன் எண்ணுகிறது.

இரண்டாம் உலகப் போரையும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாசிசத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் நிகழ்த்தப்பெற்ற கொடூரங்களையும் பின்தொடர்ந்து, உலகின் வல்லரசுகள் மேலும் தேசிய நலன்களை பெருக்குவதற்கு இராணுவ வலியத்தாக்குதலை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை கொண்டன. "எமது தலைமுறையிலேயே இருமுறை மனிதகுலத்திற்கு சொல்லமுடியா துன்பத்தை கொண்டுவந்த போர் என்னும் கொள்ளை நோயில் இருந்து வருங்கால தலைமுறைகளை காப்பாற்றுவதற்கு" என்று அதன் சாசனத்தில் கூறப்பட்ட முறையில் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது; "பொது நலன்களை தவிர வேறு எதற்காகவும் ஆயுத வலிமை பயன்படுத்தப்பட மாட்டாது" என்றும் உறுதியெடுத்துக் கொள்ளப்பட்டது.

இத்தகயை உயர்ந்த வார்த்தைகள் இப்பொழுது உயிரற்ற எழுத்துக்களாகி விட்டன. உலகின் தலையாய சக்தியினால், அரசியல் நோக்கங்களை அடைவதற்கு ஏற்கத்தக்க வழிவகை என்று மீண்டும் போர்புரிதல் ஏற்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி ஊடகங்களில் பாசாங்குத்தனமான முறையில் சிறு குழந்தைகளின் படுகொலைகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பபட்டாலும், நடைமுறையில் அவை "போரை உடனொத்து நிகழ்ந்த பாதிப்பு" என்று உதறித் தள்ளப்பட்டுவிடுகின்றன; அதாவது மூலோபாய குறிக்கோள்களை அடைவதற்கு தவிர்க்கமுடியாமல் கொடுக்கும் மற்றும் ஏற்கப்படும் விலையென்று கொள்ளப்பட்டு விட்டது

ஓர் உண்மையான அர்த்தத்தில், வரலாற்றுக் கடிகாரம் பின்நோக்கி சுழற்றப்பட்டுவிட்டது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, 1930களில் உலக விவகாரங்களை, ஆக்கிரமித்திருந்த சர்வதேச சட்ட ஒழுங்கற்றநிலை, வலியத்தாக்குதல், இராணுவவாதம் ஆகியவை ஒரு பரந்த பழிவாங்கும் தன்மையுடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இது ஒன்றும் புஷ், செனி, மற்றும் "நவீன பழமைவாதிகள்" எனும் சதிக்கூட்டம் அமெரிக்க அரசாங்கத்தின் மீது சுமத்தும் வெறுமனே நெறி பிறழ்ந்த பிற்போக்கு கொள்கை பற்றிய விஷயம் அல்ல. எதிர்க்கட்சியென கூறிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சியினரும் இஸ்ரேலின் போருக்கான தங்களின் ஆதரவில் நிர்வாகத்தையும் விஞ்சும் அளவிற்கு முயலுகின்றனர்; சில நேரம் நிர்வாகத்தை வலது புறத்தில் இருந்தும் விமர்சிக்கின்றனர். நியூ யோர்க்கின் ஹில்லாரி கிளின்டன் போன்ற அரசியல் வாதிகள் தங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவை இஸ்ரேலின் "தற்காப்பு உரிமைக்கு" கொடுப்பதுடன், மகளீரையும், சிறார்களையும் படுகொலை செய்யும் சியோனிச ஆட்சியின் எந்த நடவடிக்கைக்கும் மற்றும் அனைத்து நடவடிக்கைக்கும் வெளிப்படையான ஒப்புதலைக் கொடுக்கின்றனர்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திலேயே இதற்கு குறிப்பிடத்தக்க வகையிலான எதிர்ப்பு ஏதும் இல்லை. செய்தி ஊடகத்தினுள் போர் தொடரப்பட வேண்டும் என்பதற்கான ஆதரவு கிட்டத்தட்ட ஒருமனதாகவே உள்ளது. அமெரிக்க நிதி மூலதனம் மற்றும் புஷ் நிர்வாகத்தின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று அறிவித்தது: "ராஜதந்திர தேர்வுகளை (வெளியுறவுத்துறை அமைச்சர்) ரைஸ் தொடர்கையில், தனிப்பட்ட முறையில் திரு புஷ் இஸ்ரேலிய பிரதமர் ஓல்மெர்ட்டிடம், அதுதான் நடக்கிறதாக இருந்தால், தெற்கு லெபனானின் தரைவழி ஆக்கிரமிப்பு உள்பட ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கையை இஸ்ரேல் கட்டாயம் முடித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவார் என நம்புகிறோம்." "எவ்வளவு விரைவில் இராணுவ முறையில் சாத்தியமோ அது மேலோங்கியிருப்பதற்கான உறுதிப்பாட்டை" இஸ்ரேல் நிரூபணம் செய்யும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அது மேலும் கூறியது.

கானா படுகொலைக்கு சில நாட்கள் பின்னர், "உலகம் முழுவதும் செய்தி ஊடகங்கள் இரேலின் பிழைகளையும், அதிகமான கொடுஞ்செயல்களையும் எதிர்பார்த்தபடி கவனக்குவிப்புக் காட்டுகின்றன" என்று கூறியபின் வாஷிங்டன் போஸ்ட் இப்போர் வெற்றியடையப்படும் வரை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. "இதில் சூழ்ச்சி என்னவென்றால், எந்த அளவிற்கு இது நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையிடம் விடப்பட வேண்டும், லெபனானிற்கு அதிகாரமளிப்பதற்கு எந்த அளவிற்கு ஐ.நா. சர்வதேசப்படை கோட்டுக்கொள்ளப்படும் என்பவற்றை தீர்மானித்தலாகும்" என்று போஸ்ட்டின் தலையங்கம் கூறியது.

லெபனான் போரின் பரந்த குறிக்கோள்களுக்கு குரல் கொடுப்பதன் மூலம் இது தொடர்ந்தது: "வரவிருக்கும் வாரங்களில் ஈரானிய, சிரிய அரசாங்கங்களும் தொடர்ச்சியான சில செய்திகளை கேட்க வேண்டும்: ஈராக்கில் இருந்து லெபனான், காசா வரையில் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் ஒத்துழைப்பதற்கான முடிவு, அவற்றின் தற்போதைய தனிமைப்படலை சரிப்படுத்தும். ஆனால் பேரழிவு ஆயுதங்களை பெறுதல், ஹெஸ்பொல்லா போன்ற குழுக்கள் ஊடாக நிழல் யுத்தம் நடத்துவது ஆகியவை திருப்திப்படுத்தும் முயற்சியால் அல்லாமல், வலிமையால் விடையிறுக்கப்படும்."

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க இஸ்ரேலிய ஆணைகளுக்கு அணிபடிந்திடுக அல்லது லெபனான் எதிர்கொண்டுள்ள நிலைமையை எதிர்கொள்க என்ற பொருளாகும்.

முக்கிய சர்வதேச அமைப்புக்கள் அனைத்தும் அமெரிக்க இஸ்ரேலியப் போர் உந்துதலை எதிர்ப்பதற்கு முற்றிலும் தங்கள் இயலாத்தன்மையை நிரூபித்துள்ளன. 1930 களில் இத்தாலி தன்னுடைய நாட்டை கைப்பற்ற விழைந்த நிலையில் எத்தியோப்பிய ஹெயில் செலாசி அனைத்து நாட்டுக் கழகத்திடம் வீணே முறையிட்ட நிலையின் பதிப்பைத்தான் இப்பொழுது ஐக்கிய நாடுகள் சபையிலும் காண்கிறோம்.

செவ்வாய்க்கிழமை அன்று லெபனானில் போர்நிறுத்தம் கோரி தீர்மானம் இயற்றுவதற்கு பதிலாக, புஷ்ஷின் முக்கிய நண்பர் பிரிட்டனின் பிரதம மந்திரி டோனி பிளேயர் "போர் நடவடிக்கைகள் இடைநிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்ததற்கு ஆதரவு கொடுத்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னுடைய முதுகெலும்பற்ற தன்மையை உறுதிப்படுத்தியது; பிளேயரின் தெளிவற்ற கருத்து இஸ்ரேலிய இராணுவத்திற்கு இன்னும் பல வாரங்கள் தன்னுடைய நிலத்தை அழிக்கும் திட்டத்தை தொடந்து நடத்த கால அவகாசத்தை கொடுக்கும்.

லெபனானில் நடக்கும் நிகழ்வுகள் மத்திய கிழக்கில் மட்டும் அல்லாமல் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு கொடூரமான உட்தாக்கங்களை கொண்டுள்ளது.

அமெரிக்காவில் கட்டாய இராணுவ சேவையை கொண்டுவந்து இளைஞர்களை வாஷிங்டனின் பரந்த வலியத்தாக்கும் போர்களை வெளிநாடுகளில் நடத்துவதற்காக இழுக்கப்பப்பட்டு விடுவதற்கு எத்தனை நாட்கள் ஆகிவிடும்?

வாஷிங்டன் தனக்கு வேண்டாத விரோதிகள்மீது அணுவாயுதத்தை பயன்படுத்த எத்தனை நாட்கள் பிடிக்கும்? ஈரானுடைய அணுத்திட்டம் பற்றி நிர்வாகம் இத்தகைய விருப்பத்தையும் மேற்கோள்ளலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மை வாழ்வில் இறுதி முடிவைக் காணும் போர்க்கள தோற்றத்தை எற்படுத்திவிடாதா?

அமெரிக்க சமூகம் இராணுவமயமாக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுதல், அரசியல் விரோதிகளை சிறையில் அடைத்தல், இராணுவ ஆட்சி அதிகாரச் சட்டங்களை அமெரிக்க மக்களுக்கு எதிராக பயன்படுத்துதல் போன்றவை நடப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?

அமெரிக்காவின் பெருநிறுவன மற்றும் பெருநிதிய ஊயரடுக்குகள் அத்தகைய மாற்றத்தை மேற்கொள்ளலாம் என்பதற்கு ஒவ்வொரு நாளும் புதிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்க அரசாங்கத்துள் பொதிந்திருக்கும் உணர்வின் இழிவான தன்மை வெளிப்பட்டது. மத்திய கிழக்கில் அமெரிக்கச் செல்வாக்கு ஏன் மங்கிக் கொண்டிருக்கிறது என்று ஒரு நிருபர் எதிர்பாரா ஆக்கிரோஷத்துடன் கேட்டதற்கு, புஷ் அது "பயங்கரவாதிகளின்" குற்றம் எனக் கூறியதுடன், "அவர்கள் தங்கள் இலக்குளை அடைவதற்கு அப்பாவி மக்களை கொல்லுகின்றனர்... அவர்கள் தொலைக்காட்சித் திரைகளில் தோன்றி, இந்த, அந்த மற்றும் ஏனைய பற்றிய வினாக்களை கேட்கும் மக்களை பெறுகின்றனர்" என்றும் கூறினார்.

மத்திய கிழக்கு பற்றிய நிர்வாகத்தின் கொள்கைகளை பற்றி வினா எழுப்பும் எந்தச் செய்தியாளரும் பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருப்பவர் என்பதுதான் இதன் உட்குறிப்பு ஆகும். தர்க்கரீதியான இத்தகைய முடிவு அவர்கள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர்களுடைய வெளியீடுகள் மூடப்பட்டுவிடலாம் என்பதுதான்.

புஷ் நிர்வாகம் குவாண்டனாமோ வழிவகைகளை விரிவுபடுத்தும் வகையில் சட்டத்தை கொண்டுவரலாம்; அதாவது காலவரையற்ற தடுப்புக்காவல், இராணுவக் குழுக்களின் உடனடி இராணுவ விசாரணைகள் என்பவை "விரோதியாய் போரிடுபவர்களுக்கு" மட்டுமில்லாமல் அமெரிக்க மக்கள்மீதும் நடத்தப்படும் என்பதுதான் அது.

1930 களில் மனிதகுலத்தை தாக்கிய பெருந்துன்பியல்கள் -- உலகப் போர், பாசிசம் போன்றவை --- மீண்டும் இன்னும் கொடூரமான அளவிற்கு வரக்கூடாது என்றால், தொழிலாள வர்க்கம் தன்னுடைய மாற்றீட்டை கட்டாயமாக முன்வைக்க வேண்டும். ஈராக்கிலும் லெபனானிலும் அன்றாடம் நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு பெரும் கசப்புணர்வை காட்டினாலோ, அவற்றை நியாயப்படுத்தும் பொய்களைப் பற்றி இகழ்வு கொண்டலோ மட்டும் போதாது. இக்குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதும் போதாது. இவற்றிற்கு முடிவு கட்டுவதற்கு ஒரு புதிய அரசியல் சக்தி கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்.

சமூகத்தை ஒரு சோசலிச மாற்றத்திற்கான பொதுப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு அரேபிய யூத மத்திய கிழக்கு தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாளர்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்தும் முன்னோக்கின் அடிப்படையில், இப்பொழுதுள்ள பெருவணிக கட்சிகளில் இருந்து சுயாதீனமான முறையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை கட்டி அமைப்பதன் மூலம் மட்டுமே இது சாதிக்கப்பட முடியும்.

இதுதான் அமெரிக்காவில் வரவிருக்கும் நவம்பர்மாத இடைத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கமாகும். எமது வேட்பாளர்கள் போர், சமூக சமத்துவமின்மை, அரசியல் பிற்போக்குத் தன்மை என்று ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திடம் இருக்கும் ஆழ்ந்த எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கும் வகையில் தேர்தலில் பங்கு பெறுகின்றனர்.

ஈராக் மற்றும் லெபனானில் நடக்கும் குருதிப் பெருக்கை எதிர்ப்பவர்கள், மற்றும் அவற்றை நிறுத்தி அதைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்புகின்றவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை படிக்குமாறும், எமது வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் இடம்பெறச் செய்வதற்கான பிரச்சாரத்தில் பங்கேற்குமாறும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியமைப்பதற்கான போராட்டத்தில் எமது கட்சியுடன் இணையுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved