World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

London art gallery closes M.F. Husain exhibition after paintings vandalised

பூச்சோவியங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்ட பின் எம். எப். ஹூசைனுடைய கண்காட்சியை லண்டன் கலைக் காட்சிக் கூடம் மூடுகிறது

By Ajay Prakash
3 July 2006

Back to screen version

மூன்று நபர்கள் கலைக் காட்சிக் கூடத்திற்குள் நுழைந்து இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற சமகாலத்திய ஓவியரான 91-வயதான மஹ்பூல் ஃபிடா ஹூசைனுடைய கண்காட்சியில், இருந்த துர்கா மற்றும் திரெளபதை என்ற அவருடைய இரண்டு பூச்சோவியங்களை அழித்துவிட்டதால், லண்டன் ஆசியா ஹவுஸ் கலைக் காட்சிக் கூடம் இந்த கண்காட்சியை மே 22ம் தேதி மூடிவிட்டது.

"எம். எப். ஹூசைன்: 1950-1970-களில், ஆரம்பகால சிறந்த வேலைப்பாடுகள்" கண்காட்சி, மே 10ம் தேதி இந்திய அரசாங்கத்தின் தூதரக உயர் ஆணையர் கமலேஷ் சர்மாவால் திறந்து வைக்கப்பட்டு ஆகஸ்ட் 5ம் தேதி வரை இயங்குவதாக இருந்தது. கறுப்புச் சாயம் விசிறப்பட்டு சேதப்படுத்தப்பட்ட இந்த சிறந்த வேலைப்பாட்டின் மதிப்பு குறைந்தபட்சமாக 200,000 பவுண்டுகளுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஹூசைனுடைய கண்காட்சிக்காக இந்தக் கலைக் காட்சி கூடத்திற்கு காப்பீடு மறுக்கப்பட்டுள்ளதாக, ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

இதற்குப் பொறுப்பாக ஒருவரும் ஒத்துக்கொள்ளாத நிலையில், லண்டனை தளமாக கொண்ட இந்து மனித உரிமைக் கழகமும் மற்றும் இந்தியாவில் உள்ள வலது-சாரி அடிப்படைவாதிகளின் அமைப்புடன் தொடர்பு வைத்துள்ள பிரிட்டன் இந்து அமைப்பும் இந்துமத பெண் தெய்வங்கள் ஆபாசமான உருவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையிலான படங்கள் ஆசியா ஹவுஸ் கண்காட்சியில் இருப்பதால் அவற்றை மூடுமாறு உரிமையோடு கூறியது. மே 27ம் தேதி இந்த இந்து மனித உரிமைக் குழு இந்த கலைக்காட்சியகத்தின் முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்து மனித உரிமைக் குழு மற்றும் பிரிட்டனின் இந்து மன்றம் ஆகியவற்றை கண்டித்து பிரிட்டனை தளமாக கொண்ட இந்திய கல்வியாளர்கள் வெளியிட்ட அறிக்கையானது, இந்த அமைப்புக்கள், "இந்தியாவின் அரசியல் அமைப்பு உரிமைகளான சுதந்திரத்திற்கான கருத்து உரிமையையும் பேச்சுரிமையையும் கீழறுத்து வருகின்ற" இந்தியாவில் இருக்கும் இந்து அடிப்படைவாதிகளின் அமைப்புகள் பயன்படுத்திவருவது போல "ஒரேமாதிரியான தந்திரோபாயங்களை" பயன்படுத்தி வருகின்றன என தெரிவித்தது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்ஷேவக் சங் (RSS) மற்றும் அதோடு தொடர்புடைய உலக இந்து சபையின் (Vishwa Hindu Parishad or VHP) நடவடிக்கைகளை பிரிட்டனின் இந்து மன்றம் "தீவிரமாக ஆதரித்தோ அல்லது தற்காத்தோ" வருகிறது என தெற்காசியா மற்றும் பிரிட்டனில் மத சம்மந்தமான பகைமைகளை கண்காணித்து வரும் Awaaz South Asia Watch என்னும் வலைத் தளம் சுட்டிக் காண்பிக்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராகவும் "இந்துத்துவத்தை இழிவுபடுத்துவதாக" கருதப்படும் எந்தச் செய்கைகளையும் எதிர்த்து வகுப்புவாத தாக்குதல்களை தூண்டிவிடுவதில் இந்த அமைப்புகள் இழிபெயர் எடுத்துள்ளன.

வேண்டுமென்றே கலைப்பொருட்களை அழித்த இச்செயல் "பிரிட்டிஷ் உள்ளடக்கத்தில் கலைச் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலாகும்" என பொருளியியலாளரும் மற்றும் தொழிலாளர் பற்றி கூர்ந்து ஆய்பவருமான மேக்ஹனாட் தேசாய் தெரிவித்துள்ளதுடன், "ஹூசைனுடைய பூச்சோவியங்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பானது, ஆபாசம் என்று கூறப்படுவதன் காரணமாக அல்ல. ஹூசைன் ஒரு முஸ்லீம் என்பதன் காரணமாக ஆகும். இந்துக் கடவுள்களையும் பெண் கடவுளர்களையும் கருப்பொருளாக அவர் பயன்படுத்தும் கலைச் சுதந்திரத்தை மறுப்பது சில இந்துக் குழுக்களின் விருப்பமாகும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், கார்டியன் பத்திரிகையில் ஒரு கட்டுரையும் இரண்டு கடிதங்களும் மட்டுமே இது குறித்து பிரசுரிக்கப்பட்டு பிரிட்டிஷ் தகவல் தொடர்பு ஊடகத்தில் ஒரு சிறிய அளவில் தான் இவைகள் தொடர்பான செய்திகள் வந்துள்ளன. எந்த ஒரு பிரிட்டிஷ் முன்னணி கலைஞரோ அல்லது அறிஞர்களோ ஹூசைனின் கலைப்பொக்கிஷத்தை வேண்டுமென்றே அழித்துள்ள இந்தச் செயலுக்கோ அல்லது காட்சி மூடப்பட்டதற்கோ கண்டனம் தெரிவிக்கவில்லை.

இதே நேரத்தில், இந்த ஆசியா ஹவுஸ் இந்துமத வெறியர்களின் போராட்டங்களுக்கு சரணடைந்து ஹூசைன் கண்காட்சி குறித்த எல்லாத் தகவல்களையும் தன்னுடைய வலைத் தளத்திலிருந்து நீக்கிவிட்டது. இந்த ஆசியா ஹவுசின் பண்பாட்டு இயக்குநர் கத்திரியானா ஹாசெல் ஐ WSWS நிரூபர்கள் சந்தித்து இது பற்றிக் கேட்டதற்கு, "பாதுகாப்புக் காரணங்களுக்காக" இந்த காட்சி நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை திரும்பத் திரும்பத் தெரிவித்து சூழ்நிலை மிகவும் "சிக்கலாக" இருக்கிறது எனவும் கூறியுள்ளார். கலைத்துவ சுதந்திரம் பற்றியும் இந்து அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு அவ்வம்மையாரின் மனோபாவம் குறித்தும் விபரிக்கவோ அல்லது கருத்துத் தெரிவிக்கவோ ஹாசெல் மறுத்துவிட்டார்.

1996ம் ஆண்டிலிருந்து ஹூசைன் ஒரு இலக்காகியிருக்கிறார்.

70 வருடங்களுக்கும் மேலாக வண்ணம் தீட்டிவரும் எம். எப். ஹூசைன் அவரது கலைத்திறனுக்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளார். பல்வேறு இந்துக் கடவுள்களின் நிர்வாண உருவங்களும் இந்திய புராணக் கதைகளின் குண இயல்புகளை விவரிப்பவைகளும் அவரது படைப்புகளில் இடம் பெற்றுள்ள நிலை இந்து அடிப்படைவாதிகளின் சீற்றத்தை எழுப்பியுள்ளது. (எடுத்துக்காட்டாக ஹூசைன் ஓவியங்களைப் பார்க்க: http://www.contemporaryindianart.com/m_ f_husain.htm and http://www/mfhussain.com/modules.php?name=coppermine&cat=2).

மதச் சார்பற்ற இந்திய கலைத்திறனின் புதிய வடிவங்களை உருவாக்கும் குறிக்கோளாகவே துர்கா ஓவியம் "மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் வண்ணம் ஆகியவற்றால் புகழ் பெற்றதாக இருக்கிறதே அன்றி யாரையும் துன்புறுத்தும் எண்ணம் தனக்கில்லை என ஹூசைன் தெரிவிக்கிறார்." ஹூசைன் இடையறாது விளக்கி வருவதுபோல, தெய்வங்களின் உருவங்கள் "தூய ஆடை அணியாத" நிர்வாணக் கோலத்தில் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தியக் கோவில்களை சித்தரிக்கிறதாகவும் "ஆடையணியாமை ஆடையின்மை அல்ல" [ஆனால்] கபடின்மையின் மற்றும் பக்குவமின்மையின் ஒரு வடிவம் ஆகும்."

இந்தக் கண்காட்சி முன்பாக, அவர் வெளியிட்டிருந்த ஒரு கருத்தில் "கடந்த 50 ஆண்டுகளாக, இந்திய ஓவியர்கள் எங்கள் காலத்திய புராதன கலாச்சார பாரம்பரியத்தின் யதார்த்தத்தை மறுஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மனித முயற்சியிலும் இருப்பது போல எல்லாவற்றிலும் நம்பிக்கையே அதன் உள் மையப் பொருளாகும். பெருங்கவனத்துடனும் பயபக்தியுடனும் இந்த இந்திய துணைக்-கண்டம் தனித்தன்மை வாய்ந்த மதச் சார்பற்ற கலாச்சாரத்தை மலரச் செய்துள்ளது. ஒன்று கூட்டி உருவாக்கப்பட்ட மாபெரும் இந்திய கலாச்சாரத்திற்கு நான் ஒரு எளிமையான சிறு பங்கினை அளித்திருக்கிறேன் என்று அவர் கூறினார்.

ஹூசைனுக்கு எதிராக மதத் தீவிரவாதிகளால் நடத்தப்படும் கலைப்பொருட்கள் மீதான தாக்குதல்கள் 1996ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலாக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.இ.ப வின் இளைஞர் பிரிவான (The youth section of the RSS-VHP) பஜ்ரங் தள் உறுப்பினர்கள் அஹமதாபாத்தில் ஹூசைன்-தோஷி குபா கலைக் காட்சி கூடத்திற்குள் பலவந்தமாக புகுந்து, அங்கிருந்த அழகு வேலைகள் மிக்க 23 திரைச்சீலைகளையும் ஹூசைனுடைய ஹனுமான் மற்றும் மாதுரி தீக்ஷித் தொடர் வரிசை உட்பட வண்ண ஓவியங்களையும் நுணுக்கமாய் விவரிக்கப்பட்ட Last Supper காட்சி ஓவியத்தையும் (இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களுடன் உண்ட இரவு உணவுக் காட்சி) அழித்த பொழுது முதலில் தொடங்கியது. 1976ம் ஆண்டில், கலை மற்றும் அறிவுக்கான இந்துப் பெண் கடவுள் சரஸ்வதியின் ஓவியத்தை "ஆடையற்ற நிலையில்" ஹூசைன் வரைந்தமை இந்தக் கிளர்ச்சிக்கு ஒரு சாக்கானது.

இரண்டு வருடங்கள் கழித்து 1988ம் ஆண்டில், பம்பாயில் ஹூசைனுடைய வீடு மத அடிப்படைவாதிகளால் உடைக்கப்பட்டு இந்துக் கடவுள்களான ஹனுமான் மற்றும் சீதை ஆகியோரின் ஓவியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேதம் விளைவிக்கப்பட்டது.

ஹூசைனை குறி வைத்த இந்துமதத் தீவிரவாதிகள் இந்திய வரலாற்றாளர்கள், கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களையும் தாக்கியுள்ளார்கள். உதாரணமாக, 2000ம் ஆண்டிற்கு முன்னர், இந்து விதவைகளின் அவல நிலையையும் "சாதிகளுக்கிடையேயான உறவு முறைகளையும்" காட்சியாய் அமைத்து நடித்துக் காட்டிய Water என்னும் திரைப்படத்தின் செயற்கை அரங்குகளை வாரணாசியில் இந்து அடிப்படைவாதிகள் அழித்துவிட்டு, படத்தில் நடித்தவர்களையும் ஒன்று சேர்ந்து வேலை செய்த பணியாளர்களின் கூட்டத்தையும் அச்சுறுத்தி, இந்த படப்பிடிப்பை கைவிடுமாறு திரைப்பட தயாரிப்பாளரான தீபா மேத்தா நிர்பந்திக்கப்பட்டார். இறுதியாக, இந்த திரைப்படம் இலங்கையில் இரகசியமாக தயாரிக்கப்பட்டு 2005ம் ஆண்டின் பிற்பகுதியில் கனடாவில் வெளியிடப்பட்டது.

பாரதீய ஜனதாக் கட்சி (BJP) ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், இந்த அமைப்பின் இளைஞர் அணியினர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அமீர் கானுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி பாலிவுட் காதல் கதை சார்ந்த பன்னா என்னும் அவருடைய திரைப்படத்தை திரையிடக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்களை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

அவர் இந்தத் திரைப்படத்தில் எதற்காகவோ அல்லாமல் மதத் தீவிரவாதிகளின் வன்முறைகளை வெளிப்படையாக எதிர்த்திருப்பதும், நர்மதா அணைத் திட்டத்தால் வெளியேற்றப்பட இருக்கும் 35,000 மக்களுக்கு மாற்றிட வசதி செய்து கொடுக்கும்படியும் திருப்தி அளிக்கிற வகையில் இழப்பீட்டுத் தொகை வழங்க பிரச்சாரம் மேற்கொண்டதற்காகவுமே கான் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டிய Mission Kashmir என்னும் அமைப்பைக் குறித்த, Mother India என்னும் ஹூசைனுடைய ஓவியத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி வலுத்த தெருப் போராட்டங்களை நடத்திய அடிப்படைவாதிகள் மீண்டும் அவர்களின் கவனத்தை ஹூசைன் மீது இந்த ஆண்டு ஆரம்பத்தில் திருப்பியிருக்கிறார்கள். ஒரு ஆடையணியாத பெண் இந்திய வரைபடத்துடன் இணைந்து இருப்பதாக இந்த ஓவியம் சித்தரிக்கிறது. ஹூசைனுடைய கைகளில் ஒன்றினை எவராவது வெட்டினால் அவருக்கு தான் அரை-மில்லியன் ரூபாய்கள் பரிசாக சன்மானம் அளிப்பதாக சிவ சேனா (Army of Shiva) கட்சியின் தலைவர் பகவான் கோயெல் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

ஹூசைன் இந்துக்களை "அவமதித்துள்ளார்" என்று உத்திரப்பிரதேச மாநில, மீரட் நீதிமன்றம் முடிவு எடுத்து, அவருக்கெதிராக ஒரு வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினருக்கு மார்ச் மாத கடைசியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. "ஆட்சேபகரமான" வகையில் இந்த கலைஞர் இந்துக் கடவுள்களையும் பெண் தெய்வங்களையும் உருவப்படுத்தி "மத நல்லிணக்கத்தை குலைக்கிறார்" என்னும் ஒரு VHP மனுவின் மீது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹூசைனுடைய ஜனநாயக உரிமைகளின் மீதான அப்பட்டமான அத்துமீறல்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA), இந்திய மத்திய அரசாங்கமும் இந்த தாக்குதலில் மே மாதம் சேர்ந்து கொண்டபின் இது மிகவும் கடுமையாகி உள்ளது.

ஹூசைனுடைய லண்டன் கண்காட்சி தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அவருடைய படைப்புகள் "மத உணர்வுகளை காயப்படுத்தும்" ஆற்றல் உடையவை என்பதற்காக மே மாதம் 5ம் தேதி மும்பை மற்றும் டெல்லி போலீசார் இந்த 91-வயதான மனிதர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, UPA-வினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் சட்ட அமைச்சகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின், உள்துறையால் விடுவிக்கப்பட்ட இந்தக் கட்டளை முன்னுதாரணமில்லாதது. மதச்சார்பற்றதாக இருப்பதாக கூறிக்கொள்ளும் மற்றும் இந்து அடிப்படைவாதத்தை எதிர்க்கிறதாகவும் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், முதன் முறையாக ஹூசைன் குறி வைக்கப்பட்டுள்ளார்.

ஹூசைனுக்கு எதிரான இந்த UPA-வின் நடவடிக்கைகள், ஐயத்திற்கிடமின்றி லண்டன் கலைக் காட்சி கூடத்து கலைப்பொருட்களை அழித்த குழுவை ஊக்கப்படுத்தும் வகையிலான முக்கிய காரணி என்பதில் ஐயமில்லை மற்றும் இந்த காங்கிரசின் தலைமையிலான அரசாங்கம் இந்து அடிப்படைவாதிகளுடன் தந்திரோபாய வேறுபாடுகளைத்தான் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அதன் போராட்டத்தில் கிளைவிட்ட கூற்றான, ஒரு மதசார்பற்ற இயக்கம் காங்கிரஸ் என்று காட்டிக் கொண்டிருந்தாலும், அது எப்பொழுதுமே முக்கிய நெருக்கடியான தருணங்களில் வகுப்புவாதத்தை சுரண்டி வந்தது. காங்கிரஸ் அரசாங்கம்- மிக அடிப்படை ஜனநாயக பிரச்சினையான பேச்சுச்சுதந்திரம் பற்றியதற்கு இந்து அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்திருப்பது அக்கட்சி ஆழமான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது என்பதன் எதிரொலிப்பாகும்.

2004ம் ஆண்டின் இந்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஆச்சரியப்படத்தக்க வெற்றி பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான அரசாங்கத்திற்கும் அதனுடைய சந்தை-ஆதரவு வேலைத்திட்டத்திற்கும் எதிரான பரவலான பகைமையை எதிரொலித்தது. இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையேயான இடைவெளியை மேலும் மேலும் அகலப்படுத்திக்கொண்டே போகும்படியான அதே பொருளாதார நடவடிக்கைகளை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனுடைய சொந்த வகுப்புவாத தகுதிச்சான்றுகளை நிரூபிக்கும் முயற்சியில், ஹூசைனுக்கு-எதிரான பிரச்சாரத்தில் அது சேர்ந்திருப்பது பாரதீய ஜனதா கட்சியினர் இந்த விஷயத்தை உபயோகித்துக் கொள்ளும் திறனை கீழறுக்கச் செய்வதற்காகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved