World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan union leaders betray port workers struggle

இலங்கை தொழிற்சங்கத் தலைவர்கள் துறைமுகத் தொழிலாளர்கள் போராட்டத்தை காட்டிக்கொடுத்தனர்

By Saman Gunadasa
31 July 2006

Back to screen version

கொழும்பு துறைமுகத்தில் "மெதுவாக வேலை செய்யும்" பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த சுமார் 14,000 தொழிலாளர்கள், அரசாங்க மற்றும் தொழிற்சங்க அலுவலர்களும் உடன்பாடு கண்ட மறுநாள், ஜூலை 21, தமது பிரச்சாரத்தை முடிவுசெய்தனர். அடிப்படை சம்பளத்தில் 3,000 ரூபா (30 அமெ. டொலர்கள்) அதிகரிப்பையும் ஏனைய முன்னேற்றங்களையும் கோரி எட்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த பிரச்சாரம், கடந்த 25 ஆண்டுகளில் துறைமுக ஊழியர்களின் மிகப்பெரும் போராட்டமாகும்.

இந்தப் பிரச்சாரத்திற்கு பரந்த ஆதரவு இருந்த போதிலும், தொழிற்சங்க தலைமைத்துவமானது தேசிய நிர்வாக குழு தனது சிபாரிசுகளை முன்வைக்கும் வரை அடுத்த மூன்று மாதங்களுக்கு 1,500 ரூபா கொடுப்பனவை ஏற்றுக்கொண்டது. குறைந்தபட்ச ஆதாய அதிகரிப்பாக 200 ரூபா மற்றும் வாழ்க்கைச் செலவுக்கேற்ற கொடுப்பனவுகள் போன்ற துறைமுக ஊழியர்களின் ஏனைய கோரிக்கைகள் கைவிடப்பட்டன. சட்டரீதியான தாக்குதலில் இரட்டிப்பாக்கப்பட்ட துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான திட்டமிட்ட ஊடகப் பிரச்சாரத்தின் மத்தியிலேயே இந்தக் காட்டிக்கொடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை ஆளும் கும்பலால் ஏறத்தாழ தேசிய குற்றமாக கருதப்பட்ட இந்த மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரம், ஏனைய துறைமுகங்களில் தமது கொள்கலன்களை இறக்கவிருந்ததாக கூறப்படும் 15 கப்பல்களுடன் மேலும் 15 கப்பல்களை இடை நிறுத்தியது. இலங்கை கப்பல் இயக்குனர்களின் சம்மேளம், ஜூலை 22ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை முடிவுறாவிட்டால் ஒவ்வொரு கொள்கலனுக்கும் 20 முதல் 40 டொலர்கள் வரை மேலதிக கட்டணம் அறவிடப் போவதாக எச்சரித்தது.

ஜூலை 20, உயர் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட இரு கட்டளைகளின் மூலம் ஸ்தாபனத்தின் கவலையை வெளியிடும் நடவடிக்கை பிரதிபலித்தது. இந்தக் கட்டளையானது "நாட்டின் துறைமுகங்களின் முழு உற்பத்தி மட்டத்தையும் குறைக்கும் அல்லது கீழறுக்கும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடுவதில் இருந்து துறைமுக தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்துவதாகும்."

கூட்டு ஆடைத் தொழிற்சாலைகள் சங்கப் பேரவையின் தலைவரால் தாக்கல் செய்யப்பட்ட "அடிப்படை மனித உரிமை மீறல்" மனுவின் பிரதிபலனாகவே இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. "தான் தேர்ந்தெடுத்துகொண்ட சட்டபூர்வமான தொழிலில் ஈடுபடுவதற்கு உரிய உரிமை மீறப்பட்டுள்ளது" என அவர் குற்றஞ்சாட்டினார். இந்தப் பேரவை இலங்கையின் பிரதான ஏற்றுமதியான ஆடை உற்பத்தியின் சிகரத்தில் உள்ள வர்த்தக சபையாகும். தமது கட்டளையுடன் இணங்கி செயற்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸ், ஆயுதப் படைகள், துறைமுக அமைச்சர், மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர்களுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பு, தொழிலாளர்களை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுமாறு தொழிற்சங்கங்கங்கள் அச்சுறுத்தியுள்ளன என்ற போலி குற்றச்சாட்டின் பேரில், மெதுவாக வேலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை தடுத்து நிறுத்துவதற்காக முதல் நாள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் பிற்சேர்க்கையாகும். உண்மையில், தமது சம்பளமும் மற்றும் நிலைமைகளும் துரிதமாக தேய்ந்து போவதை கண்ட துறைமுகத் தொழிலாளர்களின் ஒட்டு மொத்த வேலைநிறுத்த போராட்டத்தை தடுப்பதற்கே தொழிற்சங்க தலைமைத்துவம் செயற்பட்டது. எண்ணெய், போக்குவரத்து செலவுகள், மின்சாரம், தண்ணீர், சமையல் வாயு, அரிசி, ரொட்டி, மரக்கறி, பால் மா மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் துரித அதிகரிப்புடன், நுகர்வோர் விலைச் சுட்டெண் ஜூன் மாதத்தில் 17.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சில அறிக்கைகளின்படி, உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து உடனடியாக ஜெயா கொள்கலன் இறக்கும் பகுதியின் இயக்கத்தை முன்னெடுக்குமாறு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆயினும், கடற்படை அங்கு சென்றால் நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொழிலாளர்கள் அச்சுறுத்தியதை அடுத்து அரசாங்கம் பின்வாங்கியது.

தொழிற்சங்க அதிகாரத்துவம் துறைமுக ஊழியர்களை ஏனைய தொழிலாளர் பிரிவில் இருந்து தனிமைப்படுத்தி வைக்க செயற்பட்ட அதேவேளை, அரசாங்கமும் மற்றும் ஊடகங்களும் பொய் மற்றும் அவதூறை பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்தன.

பெருமளவில் பார்க்கப்பட்ட ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், துறைமுக அமைச்சரான மங்கள சமரவீர, தான் ஒரு தொழிலாளியின் சம்பளத் துண்டை பார்த்ததாகவும் அதில் மாதம் 100,000 ரூபா சம்பளம் குறிக்கப்பட்டிருந்ததாகவும் பொய்க் குற்றஞ்சாட்டினார். எவ்வாறெனினும், அது முன்னைய 10 மாத சம்பளப் பாக்கி, மேலதிக நேர வேலை மற்றும் ஏனைய மேலதிகக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்கியது என்ற உண்மையை வெளியே சொல்ல சமரவீர மறுத்துவிட்டார். இதற்கு முன்னர் அவர்கள் எவ்வளவு சம்பளம் பெற்றார்கள் என்பது தனக்குத் தெரியும் எனவும் தான் ஒரு அரசாங்க அமைச்சராவதற்கு பதிலாக துறைமுக ஊழியராகி இருக்கலாம் எனவும் அவர் சிடுமூஞ்சித்தனமாகத் தெரிவித்தார்.

உண்மையில், துறைமுக ஊழியர் ஒருவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சராசரி சம்பளம் 25,000 (250 அமெ. டொலர்கள்) ரூபாவாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, கொள்கலன்களை இறக்கி ஏற்றும் வேலைகளில் நேரடியாக ஈடுபடும் ஒரு சிறு பகுதி தொழிலாளர்களே மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக வேலை நேரத்தையும் பெறக்கூடியவர்களாக உள்ளனர்.

எனினும், துறைமுக அமைச்சரின் நாணமற்ற பொய்கள், அரசாங்க மற்றும் தனியார் ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டன. அவை துறைமுக ஊழியர்கள் "பொருளாதாரத்தை அழிப்பதாக" குற்றஞ்சாட்டின.

ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஒரு ஆசிரியர் தலைப்பு: "இலங்கை ஒரு வறிய நாடு என்பதையும் தொழிற் படையின் பெரும்பான்மையானவர்களின் கண்களுக்கு துறைமுக ஊழியர்களின் சம்பளமானது இராஜ சம்பளம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவ மற்றும் பொறியியல் பேராசிரியர்கள் கூட, பண நெருக்கடியின் போது தாம் ஏன் பாரந்தூக்கி இயக்குபவர்களாகி இருக்கக் கூடாது என ஆச்சரியப்படலாம்," என பிரகடனம் செய்துள்ளது.

இதே பொருள் அரசாங்கத்தின் டெயிலி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலும் மீண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. "வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தமது பிரிவுசார்ந்த நலன்களுக்கு பதிலாக தேசிய நலன்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்" என அது குறிப்பிட்டிருந்தது.

"ஆபத்தான முறையில் கீழறுக்கப்பட்டுள்ள பொருளாதாரம், மக்களின் சிரமங்கள் மற்றும் துன்பத்தையும் மட்டும் குவிக்கும். ஆகவே, மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மிக மோசமாக அழிக்கும் இதயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்," என அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற சிங்களப் பேரினவாத அமைப்புகளினால் பற்றிக்கொள்ளப்பட்டது. துறைமுகத்தில் சில கப்பல்களை வெடிக்கச் செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், துறைமுகத் தொழிலாளர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டியது. கூட்டு ஆடைத்தொழிற்சாலைகள் சங்கப் பேரவையும் இதே கருத்தை எதிரொலித்தது. "துறைமுகத்தை தாக்குவதற்கான அண்மைய திட்டத்தில் புலிகள் வெற்றியடைந்திருந்தால் அதன் விளைவுகளை விட இது மோசமானதாகும். இதை இராஜ துரோகமாக கருத முடியும்," என அது வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால் பெரும் வர்த்தகர்கள், சிங்கள இனவாதிகள் மற்றும் ஊடகங்களும் துறைமுக தொழிலாளர்களுக்கு எதிராக நஞ்சை அள்ளி வீசும் அதே வேளை, தொழிற்சங்கத் தலைமைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் என சொல்லப்படுவதின் பதில் நடவடிக்கைகள் அசாதாரணமான கோழைத்தனமானதாக இருந்தது. இவர்களில் எவரும் இந்த அவதூறுகளை மறுத்து ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தவோ அல்லது துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகிக்கவோ இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே, கொழும்பு துறைமுகத்திற்குள் மட்டும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மட்டுப்படுத்த தீர்மானித்த துறைமுக தொழிற்சங்கங்கள், கொழும்பில் உள்ள தனியார்மயப்படுத்தப்பட்ட துறைமுக இறங்குதுறையான எஸ்.எ.ஜி.டி. யில் உள்ள ஊழியர்களின் ஆதரவுக்கு அழைப்புவிடுக்கும் ஏற்பாட்டையோ அல்லது மூலோபாயத்தையோ கொண்டிருக்கவில்லை. தற்போது கொழும்பு துறைமுகத்தின் சரக்குகளில் 40 வீதத்தை சமாளிக்கும் எஸ்.எ.ஜி.டி. யின் வேலைப் பளுவை மேலும் 15 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் மெதுவாக வேலைசெய்யும் பிரச்சாரத்தின் தாக்கத்தை குறைக்க அது பயன்படுத்தப்பட்டது.

நாடு பூராவும் உள்ள துறைமுகத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதோடு ஒரு சர்வதேச ஒத்துழைப்புக்காக வேண்டுகோள் விடுப்பதற்கு பதிலாக, தொழிற்சங்க தலைமைத்துவம் தொழிலாளர்கள் தமது போராட்டத்தை கைவிடச் செய்வதற்காக அழுத்தம் கொடுக்க அரசாங்க மற்றும் ஊடகங்களின் பிரச்சாரத்தை பயன்படுத்திக் கொண்டது.

சிங்கள பேரினவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) இணைந்த அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவரும் இலங்கை துறைமுக அதிகார சபையின் கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் பேச்சாளருமான சந்திரசிரி மஹாகமகே, தொழிற்சங்க தலைமைத்துவம் தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர விரும்பிய போதிலும், அது பற்றிய தொழிலாளர்களின் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பை பற்றி கவலை கொண்டுள்ளதாகவும் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் ஏற்றுக்கொண்டார்.

"நாடு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதோடு மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர விரும்பிய போதிலும், இந்தப் பிரச்சாரத்திற்கு அரசாங்கத்தின் பதில் நடவடிக்கையின் காரணமாக தொழிலாளர்கள் ஆத்திரமுற்றுள்ளனர். எங்களால் தொழிலாளர்களுக்கு முன்னால் செல்லமுடியவில்லை. நாம் பிரச்சாரத்தை நிறுத்துமாறு அவர்களிடம் சொன்னால், அவர்கள் எங்களை அடித்துக் கொன்றுவிடுவார்கள். தொழிலாளர்கள் நேர்மையற்றவர்கள் எனக் கூறும் ஊடகங்களை சேர்ந்தவர்கள் என்னுடன் வந்து என்னை காப்பாற்றுவார்களானால், நடவடிக்கையை நிறுத்துமாறு என்னால் அவர்களிடம் சொல்ல முடியும். ஆகையால், நம்பத்தகுந்த அலுவலர்களின் தலையீட்டின் ஊடாக இந்தப் பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்," என அவர் தெரிவித்தார்.

ஜூலை 20, துறைமுக அமைச்சரும் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவமும் ஆறு மணித்தியால கூட்டமொன்றை நடத்தினர். தொழிற் சங்கங்களுக்கு அரசாங்கத்தால் வீசப்பட்ட இலஞ்சத்தில் ஒன்று என்னவெனில், துறைமுக அமைச்சர், அமைச்சு அலுவலர்கள் மற்றும் துறைமுக அதிகார சபையின் முகாமையாளர்களை உள்ளடக்குவதோடு மற்றும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும், "முன்னேற்ற மீளாய்வு குழுவில்" அவர்களையும் உள்ளடக்கிக் கொள்ள முன்வைத்த பிரேரணையாகும். அடுத்த நாள், அமைச்சரின் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டதாகவும் மற்றும் "நாட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, மெதுவாக வேலை செய்யும் பிரச்சாரத்திற்கு முடிவுகட்ட தீர்மானித்துவிட்டதாகவும்" தொழிற்சங்கத் தலைமைத்துவம் அறிவித்தது.

இந்த தீர்மானத்தை பற்றி பல துறைமுகத் தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உரையாடினர். அரசாங்கம் மற்றும் ஊடகங்களின் தாக்குதல் மற்றும் தொழிற்சங்கத் தலைமைத்துவத்தின் நடவடிக்கைகள் பற்றி தாம் வெறுப்படைந்திருப்பதை பலர் வெளிப்படுத்தினர்.

பெறுபேற்றையிட்டு தமது அதிருப்தியை வெளியிட்ட கொடமுன தெரிவித்ததாவது: "ஆரம்பத்திலேயே இந்தப் போராட்டத்திற்கு ஒரு திடமான வேலைத்திட்டம் துறைமுகத் தொழிலாளர்களிடம் இருந்திருந்தால் நாங்கள் வெற்றியடைந்திருப்போம்." தலைமைவகிப்பதை விட துறைமுகத் தொழிலாளர்களுடன் ஒத்துழைக்க கூட தவறியதாக தொழிற்சங்க தலைவர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டினார். "என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி அறிந்துகொள்ளவும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் நாங்கள் ஊடகங்கள் அல்லது வதந்திகளில் தங்கியிருக்க வேண்டியிருந்தது," என அவர் பிரகடனம் செய்தார்.

இன்னொரு துறைமுக ஊழியரான கமல் தெரிவித்ததாவது: "இந்த குறித்த போராட்டத்தில் தொழிலாளர்களை பயிற்றுவிக்க தொழிற்சங்களிடம் வேலைத் திட்டம் கிடையாது. அதற்குப் பதிலாக, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் பீதியையும் நம்பிக்கையின்மையையும் பரப்ப முயற்சிக்கின்றார்கள்." தொழிற்சங்கத் தலைவர்கள் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் அரசாங்க வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்க முடியாது, என அவர் தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved