World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fierce fighting escalates in Sri Lanka

இலங்கையில் தீவிரமான மோதல் அதிகரிக்கின்றது

By K. Ratnayake
2 August 2006

Back to screen version

இலங்கை படையினரும் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளும், 2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்து முதற் தடவையாக, கடந்த இரண்டு நாட்களாக பகிரங்கமான மோதலில் ஈடுபட்டுள்ளனர். போரில் இறந்தவர்கள் பற்றிய செய்திகள் பரந்தளவில் மாறிக்கொண்டு இருக்கின்றது. தீவிரமான மோதல்களில் அதிகளவிலான உயிர்கள் பலியாகியிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

புலிகளின் நிலைகளின் மீதான நான்கு நாள் விமானத் தாக்குதல்களின் பின்னர், ஞாயிறன்று இலங்கை இராணுவம் மாவிலாறு அனைக்கட்டின் மதகை கைப்பற்றுவதற்காக 3,000 துருப்புக்களை ஈடுபடுத்தி ஒரு தரை மார்க்கமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இந்த மதகு கிழக்குத் துறைமுகமான திருகோணமலைக்கு அருகில் புலிகளின் கட்டுப்பாட்டு பிராந்தியத்தில் உள்ளது. புலிகள் மதகை மூடி, சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சிறிய விவசாயிகளுக்கான தண்ணீர் வசதிகளை இடை நிறுத்தி விட்டதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகிறது.

இந்த நடவடிக்கை கட்டாயமாக மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்குமெனவும் மற்றும் 24 மணி நேரத்திற்குள் முடிவடையும் என அரசாங்கம் கூறிக்கொண்ட போதிலும், இராணுவம் மதகின் கட்டுப்பாட்டை கைப்பற்றத் தவறியுள்ளது. கடுமையான இராணுவத் தணிக்கை நிலைமையின் கீழ், கசப்பான மோதல்கள் பற்றிய செய்திகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் மற்றும் பக்க சார்பானவையாகவும் இருந்து வருகின்றன. எவ்வாறெனினும், இராணுவம் கடந்த திங்களன்று 27 சிப்பாய்களை இழந்துள்ளதாக ஏற்றுக்கொண்டதோடு எதிரிகளில் 39 பேரை கொன்றதாக கூறிக்கொண்ட போதிலும், இந்த கூற்றை புலிகள் நிராகரித்து விட்டனர்.

இராணுவம் தனது எதிர்தாக்குதலை மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கின்ற அளவில் இந்த மோதல் துரிதமாக விரிவடைந்துகொண்டிருக்கின்றது. திங்களன்று மாலை, கண்ணிவெடி ஒன்றின் மூலம் பிரதேசத்தில் துருப்புக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 15 படையினரும் ஒரு பொதுமகனும் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்தது.

இராணுவம் புலிகளின் நிலைகளின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தவும் சேதப்படுத்தவும் ஆட்டிலரி, பல்குழல் ரொக்கட் ஏவிகள் மற்றும் இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் யுத்த விமானங்களையும் பயன்படுத்திய அளவில் இந்த மோதல் நேற்றுவரை தொடர்ந்துகொண்டிருந்தது. இராணுவம் மதகில் இருந்து ஒரு கிலோமீட்டர் வரை போராடி நெருங்கியுள்ளதாக கூறிக்கொண்டது.

இராணுவப் பேச்சாளரான, பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க அரசாங்கத்திற்கு சொந்தமான டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு குறிப்பிடுகையில்: "ஆரம்பத்தில் மதகை நோக்கி தரைப்படையினர் முன்னேறியபோது கண்ணிவெடிகளால் மெதுவாக செல்ல நேர்ந்தது. இப்போது புலிகள் 81 மில்லி மீட்டர் மற்றும் 120 மில்லிமீட்டர் மோட்டர்களை பயன்படுத்தி தாக்குதல் தொடுப்பதால் துருப்புக்களின் முன்னேற்றத்தில் தடையேற்பட்டுள்ளது," என்றார்.

இன்றைய டெயிலி மிரர் பத்திரிகையில் வெளியான நேரடி அறிக்கை ஒன்றில், காயமடைந்த ஒரு சிப்பாய் நிலைமையை விளக்கியிருந்தார். "புலி" படையினரின் சுமார் 200 பேர் மதகின் அருகில் விடாப்பிடியாக தொங்கிக்கொண்டிருக்கின்றனர் என அவர் கூறினார். "சுமார் 40 உயிரிழந்த புலி உறுப்பினர்களின் இறந்த உடல்கள்" பிரதேசத்தில் சிதறுண்டு கிடந்ததை கண்டதாக அவர் தெரிவித்தார். ஏனைய புலிப் போராளிகளால் இராணுவம் மீண்டும் மீண்டும் தொல்லைக்குள்ளாகியுள்ளது. "தீடீரென ஒரு குழு தோன்றி, முன்னேறுகின்ற துருப்புக்கள் மீது தாக்குதல் தொடுத்துவிட்டு காணாமல் போய்விடுகின்றது," என அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல இடங்களிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று வடக்கில் யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து திருகோணமலைக்கு 850க்கும் மேற்பட்ட துருப்புக்ககளை ஏந்திவர பயன்படுத்தப்பட்ட ஜெட்லைனர் பயணிகள் கப்பல் ஒன்று, துறைமுக வசதிகள் உள்ள இடத்திற்கு எதிரான திசையில் அமைந்துள்ள சாம்பூரில் உள்ள புலிகளின் நிலைகளில் இருந்து தொடுக்கப்பட்ட ஆட்டிலரி மற்றும் மோட்டார் தாக்குதல்களுக்கு உள்ளாகியது. ஜெட்லைனர் பாதுகாப்பாக கரையொதுங்கிய அதேவேளை, குண்டுமாரியில் நான்கு படையினர் உயிரிழந்ததுடன் மேலும் 30 பேர் காயமடைந்தனர். இராணுவம் சாம்பூர் பிரதேசத்தை குண்டுகளால் சேதப்படுத்துவதன் மூலம் பதிலடி கொடுத்தது.

ஒட்டு மொத்த யுத்தம்பற்றிய பீதி அதிகரித்துவரும் எண்ணிக்கையிலான அகதிகளை திருகோணமலை மாவட்டத்திற்கு இடம்பெயரச் செய்தது. "அவர்கள் தமது உடமைகளை எடுத்துச் சென்ற போதிலும் செல்வதிற்கு சரியான இடம் கிடையாது," என பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் பி.பி.சீ. க்குத் தெரிவித்திருந்தார். "மோதல் 20 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்றாலும், வன்முறைகள் நகரம் வரை பரவிவிடும் என்ற பீதியில் எல்லோரும் உள்ளனர். அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதோடு, உண்மையில் என்ன நடக்கின்றது என்பது பற்றி மக்களுக்கு தெரியாது. யுத்தம் நடைபெறுகிறது. மோதல்கள் இடம்பெறுகின்றன. அது கடுமையானதாக உள்ளதோடு உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என நான் நம்புகிறேன்."

ஏனைய கடற்படை மோதல்கள் பற்றிய முரண்பாடான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. கடற்படையின் வேகமாகத் தாக்கும் படகு ஒன்றை மூழ்கடித்துவிட்டதாக புலிகள் நேற்று தெரிவித்த போதிலும், அந்த செய்தியை இராணுவம் உடனடியாக நிராகரித்துவிட்டது. பாதுகாப்பு அமைச்சர், திருகோணமலை பிரதேசத்தில் கடற்படையினர் புலிகளின் சிறிய துப்பாகிப் படகுகளில் குறைந்தபட்சம் மூன்றை மூழ்கடித்துவிட்டதோடு ஏனையவை சேதமாக்கப்பட்டன, எனத் தெரிவித்தார்.

இந்த மோதல்களின் துரித விரிவாக்கமானது, உள்ளூர் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக மாவிலாறு மதகை திறப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட, "மனிதாபிமான" நடவடிக்கையை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறுவதை பொய்யாக்குகிறது. இராணுவம் 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி, புலிகளின் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக ஒரு எதிர்த் தாக்குதலை தொடுப்பதற்கும் அதேபோல் தற்போது மாவிலாறுக்கு அருகில் உள்ள புலிகளின் நிலைகள் மீது குண்டுமாரி பொழியவும் இந்த விவகாரத்தை ஒரு சாக்குப் போக்காக சுரண்டிக்கொண்டது.

சனிக்கிழமை, மட்டக்களப்பில் இருந்து 24 கிலோ மீட்டர்களில் வட மேற்காக அமைந்துள்ள கரடியனாறில் உள்ள புலிகளின் மாநாட்டு மண்டபத்தின் மீது விமானப்படை குண்டு பொழிந்தது. திங்கட் கிழமை, வாகரையில் உள்ள புலிகளின் கடற்படை தளத்தின் மீது தமது யுத்த விமானங்கள் குண்டுவீசி 30 புலி உறுப்பினர்களை கொன்றதாக இராணுவம் அறிவித்துள்ளது.

புலிகளின் படி, மாவிலாறு பிரதேசத்தில் ஒரு தண்ணீர் திட்டத்தை கட்டியெழுப்பும் நீண்டகாலத் திட்டத்தை ஒரு மாதத்திற்கு முன்னர் கொழும்பு அரசாங்கம் ஒதுக்கி வைத்ததை அடுத்து வெடித்த, தண்ணீர் விவகாரத்தை தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையும் கிடையாது. உள்ளூர்வாசிகள் மதகை மூடிவிட்டு ஒரு தொகை கோரிக்கைகளை முன்வைத்தனர். யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் நோர்வே தலைமையிலான இலங்கை கண்காணிப்புக் குழு, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜூலை 27 அன்று புலிகளையும் மற்றும் உள்ளூர் விவசாயிகளையும் சந்திக்க திட்டிமிட்டிருந்த போதிலும், முதல் நாள் மாலையே குண்டுவீச்சுப் பிரச்சாரத்தை முன்னெடுக்க அரசாங்கம் கட்டளையிட்டிருந்தது.

கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் உல்ஃவ் ஹென்றிக்ஸன் திங்களன்று கொழும்பில் பேசியபோது அரசாங்கத்தின் "மனிதாபிமான குறிக்கோள்களைப்" பற்றி கேள்வி எழுப்பியதோடு: "இளக்கந்தை கடற் புலிகளின் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது தண்ணீருக்காக அல்ல," எனப் பிரகடனம் செய்தார். புலிகள் தண்ணீர் அணைக்கட்டை தகர்க்கத் திட்டமிட்டால், மாவிலாறு மதகை கைப்பற்றுவதற்கான தாக்குதல் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தாக்குதல் "அளவுக்கதிகமானது", பிரச்சினை தண்ணீர் என்றால் இது அதைப் பெறுவதற்கான பிழையான முறை என அவர் பண்புமயப்படுத்தினார்.

இந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய ஒரு மேல்நாட்டு இராஜதந்திரி, இதே போன்று அவநம்பிக்கை கொண்டிருந்தார். "பிரச்சினை தண்ணீராக இருந்தால், அணைக்கட்டை கைப்பற்ற வேண்டியிருந்தால், அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு கொப்டர்போன் கமான்டோக்களை அனுப்பி வெளியேறு துரித நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டு வெளியேறுவதே சிறந்த வழியாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.

கண்காணிப்புக் குழு அதிகளவில் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகாததோடு அதன் விதிகளுக்கு கட்டுப்படுவதாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. மஹிந்த இராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்து கடந்த ஒன்பது மாதங்கள் பூராவும், இராணுவமும் மற்றும் அதோடு இணைந்து செயற்படும் புலி விரோத துணைப்படைகளும் புலிகளை ஆத்திரமூட்டவும் கீழறுக்கவும் ஒரு மூடிமறைக்கப்பட்ட யுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. தற்போது நடைபெறும் இராணுவத் தாக்குதலானது ஒட்டு மொத்த யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு களம் அமைத்துக்கொண்டிருக்கின்றது.

திங்களன்று ஊடகங்களுடன் உரையாடிய ஹென்ரிக்ஸன், "யாதார்த்தபூர்வமாக, யுத்த நிறுத்தம் கிடையாது. ஆனால், கடதாசி அளவில் இன்னமும் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் அக்கறை காட்டவில்லை... ஒட்டுமொத்த யுத்தம் அழிவுகரமானதாக இருக்கும்," என தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், இலங்கையில் நடக்கும் இராணுவத் தாக்குதல்களை சர்வதேசம் அமைதியுடன் சந்திக்கின்றது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய சக்திகள் மற்றும் ஜப்பானும், இலங்கையில் யுத்த நிறுத்தத்தின் தொடர்ச்சிக்கும் பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்திற்கும் ஆதரவளிப்பதாக கூறிக்கொண்ட போதிலும், அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டனம் செய்வது ஒரு புறம் இருக்க, ஒரு விமர்சிக்கும் சொல்லைக் கூட வெளியிடவில்லை.

அமெரிக்கா, புலிகளுக்கு எதிராக ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுக்க இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அண்மைய மாதங்களில் விளைபயனுள்ள வகையில் பச்சை விளக்கு காட்டி வந்துள்ளது. புஷ் நிர்வாகம் 2002 யுத்த நிறுத்தத்திற்கும் அதைத் தொடர்ந்து நடந்த சமாதானப் பேச்சுக்களுக்கும் ஆதரவளிப்பது, இலங்கை மக்கள் மீதான கவலையினால் அல்ல. மாறாக இந்திய துணைக் கண்டத்தில் அமெரிக்கப் பொருளாதார மற்றும் மூலோபயாக நலன்களை அச்சுறுத்தும் மோதலுக்கு முடிவுகட்டுவதற்காகவே ஆகும். 2003ல் சமாதானப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததோடு, குறிப்பாக கடந்த நவம்பரில் இராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, வாஷிங்டன் புலிகளை இராணுவ ரீதியில் நசுக்க அல்லது கீழ்ப்படியச் செய்ய, புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை துரிதமடைவதற்கு மெளனமாக ஆதரவளித்தது.

புஷ் நிர்வாகம், புலிகளை ஒரு "பயங்கரவாத இயக்கமாக" தடை செய்யக் கோரி கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் ஒரு சர்வதேச இராஜதந்திர பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்த நகர்வுகள் உலகம் பூராவும் புலம்பெய்ர்ந்து வாழும் தமிழர்களின் அரசியல் மற்றும் நிதி ஆதரவில் தங்கியிருந்த புலிகளுக்கு ஒரு பலத்த அடியாகும்.

இந்தத் தீர்மானம், பின்லாந்து, கண்காணிப்புக் குழுவின் சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய ஐரோப்பி ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத பிரதிநிதிகளால் பதிலீடு செய்ய வேண்டும் என புலிகள் வலியுறுத்திய அளவில், யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு புத்துயிரூட்டும் நோர்வேயின் முயற்சிகளை நேரடியாகக் கீழறுத்தது. கடந்தவாரம் பின்லாந்தும் டென்மார்க்கும் வெளியேறப் போவதாக அறிவித்ததோடு, அதை அடுத்து இந்த வாரம் சுவீடனும் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிகளவில் அர்த்தமற்றுப் போயுள்ள யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்வதற்காக ஒரு செறிவு குறைந்த குழுவை நோர்வேயும் ஐஸ்லாந்தும் மட்டும் கொண்டுசெலுத்த தள்ளப்பட்டுள்ளன.

ஞாயிறன்று மோதல்கள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், திருகோணமலையில் உள்ள புலிகள் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான எஸ். எழிலன், யுத்த நிறுத்த உடன்படிக்கை "செல்லுபடியற்றதாகவும் வெறுமையானதாகவும்" ஆகியுள்ளது என ஊடகங்களிடம் தெரிவித்தார். "யுத்தம் நடைபெறுகிறது, நாங்கள் தயார். யுத்தம் ஆரம்பித்துவிட்டது. யுத்தத்தை தொடங்கியது அரசாங்கமே," எனவும் அவர் கூறினார். எவ்வாறெனினும் அடுத்த நாள், யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் தீர்மானம் வடக்கு நகரான கிளிநொச்சியை அடித்தளமாக்க கொண்டிருக்கும் புலிகளின் தலைமைத்துவத்தாலேயே எடுக்கப்படும், எனக் கூறுவதன் மூலம் அவர் தனது அறிக்கையை மென்மைபடுத்திக்கொண்டார்.

புலிகள் கட்டுக்குள் அகப்பட்டுள்ளனர். கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் கொடுக்கல் வாங்கலை அடையும் எதிர்பார்ப்பில், தமது நீண்டகால கோரிக்கையான தமிழீழ தனியரசை உத்தியோகபூர்வமாக கைவிட்ட புலிகள் 2002ல் யுத்த நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். அத்தகைய உடன்பாடுகள் எதவும் இன்றி 2003ல் பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்ததை அடுத்து, அரசாங்கத்தை பேச்சுவார்த்தையை நோக்கித் தள்ளுமாறு "சர்வதேச சமூகத்திற்கு" புலிகள் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். எவ்வாறெனினும், பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்படுவதற்கு முன்னதாக புலிகளின் முழுமையான சரணடைவுக்கு குறைவான எதையும் அமெரிக்காவும் பெரும் வல்லரசுகளும் வலியுறுத்தவில்லை என்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

கடந்த ஒன்பது மாதங்களாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராணுவ ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள், வளர்ச்சிகண்டுவரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியால் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடிகளுக்கு இனவாத பகைமையை கிளறிவிட்டு, ஏற்கனவே 65,000 உயிர்களைப் பலிகொண்டுள்ள உள்நாட்டு யுத்தத்திற்குள் நாட்டை மீண்டும் இழுத்து தள்ளுவதை தவிர இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வேறு பதில் கிடையாது. தீவின் கிழக்கில் நடைபெறும் இராணுவத் தாக்குதலானது, இரஜபக்ஷவின் சிங்களப் பேரினவாத பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் வெறித்தனமான பிரச்சாரத்துடனும், மற்றும் ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு தண்ணீரை வழங்குவதன் பேரில் மேற்கொள்ளும் "மனிதாபிமான நடவடிக்கை" என இந்த இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினதும் பிரச்சாரத்துடனும் கட்டுண்டுள்ளது.

யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவது என்பது, வெறுமனே புலிகளையும் தமிழ் மக்களையும் மட்டுமன்றி முழு உழைக்கும் மக்களுக்கும் எதிராக குறிவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை பற்றி வெளிப்படையாக அக்கறை காட்டும் இதே அரசாங்கம், கிராமப்புற பிரதேசங்களை ஆட்கொண்டிருக்கும் கடுமையான வறுமையை போக்க எதையும் செய்திருக்கவில்லை. சற்றே மூன்று வாரங்களுக்கு முன்னதாகத் தான், "புலி பயங்கரவாதிகளை" விட மிக மோசமாக சேதம் விளைவிப்பதாக துறைமுக மற்றும் பெற்றோலிய தொழிலாளர்களை சில ஊடகங்கள் கண்டனம் செய்ததோடு, எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கைக்கும் முடிவுகட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்தன. யுத்தமானது "இனத்தை பாதுகாக்க" தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அர்ப்பணிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவிர்கமுடியாமல் கட்டுண்டிருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved