World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel, the UN and the assassination of Count Bernadotte

இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் பெர்னடோட் பிரபுவின் படுகொலை

By David Walsh
29 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 25ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (Israeli Defense Forces -IDF) தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா. புறக்காவல் கூடத்தின்மீது தொடர்ச்சியான தாக்குதலை நிகழ்த்தின. அடுத்த ஆறு மணி நேரத்திற்கு, 1948ல் நிறுவப்பட்டிருந்த ஐ.நா போர்நிறுத்த மேற்பார்வை அமைப்பின் புறக்காவல் நிலையம் (United Nations Truce Supervision Organization -Established in 1948- UNTSO) குறைந்தது 16 தடவைகளாவது தாக்கப்பட்டது; செய்தி ஊடக தகவல்களின்படி தளத்தின் மீது ஐந்து நேரடித் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ஆயுதங்கள் ஏதுமில்லாமல் பணியாளர்கள் பலமுறையும் இஸ்ரேலிய இராணுவத்துடன் தொடர்பு கொண்டு தாக்குதலை நிறுத்துமாறு மன்றாடினர் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறுகின்றனர்.

"செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்த ஐ.நா. அதிகாரிகள் தாக்குதல் கிட்டத்தட்ட பிற்பகல் 1.20 க்கு தொடங்கியது என்று கூறினர். நிலையத்துடனான ரேடியோ தொடர்பு அன்று மாலை 7.30 மணிக்கு நின்று போயிற்று. இக்காலக்கட்டத்தில் குறைந்தது ஆறு முறையாவது ஐ.நா. அதிகாரிகள் இஸ்ரேலில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு இத்தாக்குதலை நிறுத்துமாறு கோரினர் என்று ஒரு மூத்த ஐ.நா. அதிகாரி கூறினார். தரையில் இருந்த ஐ.நா. தளபதிகள் இஸ்ரேலிய இராணுவத்திற்கு இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமாறும் கூடுதல் அழைப்புக்களை விடுத்தனர்" என்று லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அறிவிக்கிறது.

இந்த முறையீடுகள் காதில் வாங்கிக் கொள்ளப்படவில்லை; இறுதியாக IDF நன்கு அறியப்பட்டிருந்த இக்கட்டிடத்தின்மீது ஒரு நேரடித் தாக்குதல் நடத்தி, அதை தரைமட்டமாக்கி கனடா, பின்லாந்து, ஆஸ்திரியா மற்றும் சீனாவை சேர்ந்த நான்கு பார்வையாளர்களை கொன்றனர். கியாமில் இருந்த மூன்று பார்வையாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன; ஆனால் நான்காவது பார்வையாளரின் சடலம் இடிபாடுகளில் சிக்குண்டுள்ளது. தொடர்ந்த இஸ்ரேலிய குண்டுவீச்சுக்களால் கனரக சாதனங்களை அவ்விடத்திற்கு கொண்டு செல்லமுடியாது என்று லெபனானில் உள்ள இடைக்கால ஐ.நா. படை (UNIFIL -1978ல் நிறுவப்பட்டது) கூறுகிறது, இது பொதுவாக UNTSO உடன் வேலைசெய்கிறது.

இக்கொலைகளை அடுத்து, இத்தாக்குதல்கள் வேண்டுமென்றேதான் நடத்தப்பட்டது என்று ஐ.நா.வின் தலைமை செயலாளர் கோபி அன்னன் விடுத்த அறிக்கையை தொடர்ந்து, இஸ்ரேலிய அரசாங்கம் வருத்தம் தெரிவித்து பெயரளவு அறிக்கைகளை கொடுத்து, அன்னான் குற்றச்சாட்டுக்களில் இருந்து தங்களை நல்லொழுக்கநிலையில் வைத்துக் காத்துக்கொள்ள முற்பட்டது. "நாங்கள் ஏன் ஐ.நா.பார்வையாளர்களை வேண்டுமென்றே குறிவைத்துத்தாக்க வேண்டும்? இராணுவ அல்லது அரசியல் ரீதியாக அது என்ன நன்மையை கொடுக்கும்? அது கெடுதல் என்று எங்களுக்கு தெரியாதா? என்ற பொதுவான பல்லவியைத்தான் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் யிகல் பல்மர் கூறினார்.

இஸ்ரேலிய அரசியல் ஸ்தாபனத்தின் கருத்துக்களை கூறும் இழிந்த ஊதுகுழலான ஜெருசலம் போஸ்ட் பல்மருடைய கருத்துக்களையே எதிரொலித்து எழுதியது: "தயவு செய்து கூறுங்கள், இஸ்ரேல் UNIFIL [உண்மையில் UNTSO] ஐ எதற்காக தாக்க வேண்டும்? அன்னன் ஒருவகை ஐ.நா. எதிர்ப்பு என்னும் இஸ்ரேலிய துன்புறுத்தி இன்பங்காணலை கருத்துரைக்கிறாரா, அல்லது ஹெஸ்பொல்லாவுடனான அதன் போரில் UNIFILஐ இஸ்ரேல் தாக்குவதற்கு தக்க காரணத்தை கொண்டிருக்கிறது என்று அன்னான் தெரிவிக்க முற்படுகிறாரா?"

இஸ்ரேலுக்கு இத்தகைய தாக்குதலால் "எந்த ஆதாயமும் இல்லை" என்ற வாதம் பார்த்த அளவிலேயே அபத்தமானது ஆகும். லெபனான் மீதான தாக்குதல், நூற்றுக் கணக்கான சாதாரண மக்களின் இறப்பு, ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தமை, மற்றும் நாட்டின் உள்கட்டுமானத்தை தகர்த்தமை அனைத்துமே "இஸ்ரேலுக்கு எந்த ஆதாயத்தையும் தரவில்லை" என்று உலக மக்களின் கருத்துப் பார்வையில் இருக்குமேயானால், அது ஒன்றும் டெல் அவிவின் ஆட்சி மற்றும் அதன் கொலைகார IDF ஐ அச்செயல்களில் இருந்து தடுத்து நிறுத்திவிடவில்லை.

UNTSO அல்லது UNIFIL ஐ "எதற்காக தாக்க வேண்டும்" என்பதற்கு பல சிறந்த காரணங்களை கொடுக்க முடியும்.

சியோனிச ஆட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இந்த பிரச்சினை தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும்பொழுது எப்பொழுதுமே இப்பிரச்சினை குறித்து அளவுக்குமீறி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இத்தகைய கொடூர கொலைக் குற்றத்தை ஒருபோதும் இஸ்ரேல் செய்திருக்காது எனக் கூறும் அவர்கள், ஐ.நா.படைகளுக்கு எதிராக தாங்கள் கொண்டுள்ள முழு விரோதப்போக்கையும் வெளிப்படுத்தி சர்வதேச பார்வையாளர்கள் ஹெஸ்பொல்லா நடவடிக்கைக்கு கவசமாக உள்ளனர் அல்லது நேரடியாகவே உடந்தையாக இருந்தனர் என்றும் வாதிடுகின்றனர்.

மேற்கூறிய கட்டுரையில், ஜெருசலேம் போஸ்ட்டின் ஆசிரியர்கள், "ஒரு பயங்கரவாத அமைப்பு பல்லாயிரக்கணக்கான ராக்கெட்டுக்களை சேகரித்தபோது UNIFIL ஒரு முணுமுணுப்புக் கூட இல்லாமல் பேசாமல் இருந்தனர்; அவை எவ்வாறு தூண்டுதலின்றி எங்களை கொல்லவும் டஜன் கணக்கான இஸ்ரேலியர்களை காயப்படுத்தி தற்போதைய போரை நிகழச்செய்துள்ளது... அவர்கள் அதை தகர்க்க போராடியிருக்க வேண்டியதற்கு பதிலாக UNIFIL சக்திகள் எப்படி மனிதக் கவசங்கள் போல் இந்தப் பயங்கரவாத இராணுவத்திற்கு செயல்பட்டன என்பதை பற்றி எங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்." என்று தீர்மானிக்க ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளனர்.

அசோசியேட்டட் பிரஸ்படி, ஐ.நா.விற்கு இஸ்ரேலிய தூதுவரான டான் கில்லர்மன் ஒரு படி கூடுதலாகவே சென்று, ஐ.நா.வின் சமாதானம் காக்கும் படைகளின் வசதிகள் "சிலநேரங்களில் ஹெஸ்பொல்லா போராளிகளால் மூடுதிரையாக பயன்படுத்தப்பட்டுள்ளன" என்ற கூற்றை சொல்லியிருக்கிறார். "இஸ்ரேல் மீதான குண்டுவீச்சுக்களை அது தடுக்க முடியவில்லை; எந்தப் பயங்கரவாத தாக்குதலையோ, அல்லது கடத்தல்களையோ நிறுத்தவில்லை." என்று அவர் நியூயோர்க்கில் கூறினார். "அவர்கள் ஒன்று எதையும் காணவில்லை; அல்லது தெரிந்திருக்கவில்லை அல்லது காண விரும்பவில்லை; ஏனெனில் அவர்கள் பயனற்ற வகையில் இருந்தனர்" என்று கில்லர்மன் கூறினார்.

ஒரு முக்கியமான இஸ்ரேலிய தூதர் ஐ.நா. பார்வையாளர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஹெஸ்பொல்லாவுடன் ஒத்துழைக்கின்றனர் என்று குற்றம் சாட்டும்போது, வேண்டுமென்றே IDF ஐ.நா.புறக்காவல் கூடத்தை தாக்கியது பற்றி எவரும் வியப்படையத் தேவையில்லை. கில்லர்மனுடைய தர்க்கத்தின்படி, அத்தகைய தாக்குதல் முற்றிலும் சட்டபூர்வமானது ஆகும். இத்தகைய தாக்குதல்களுக்கு வரலாற்று முன்னோடிகளும் உள்ளன. 1996ம் ஆண்டு இஸ்ரேலியர்கள் டைருக்கு தென்மேற்கே கானாவில் இருந்த UNIFIL மையத்தில் அடைக்கலம் புக முற்பட்ட குடிமக்களில் 100 பேருக்கு மேலானவர்களை படுகொலை செய்தனர். அதுவும் ஒரு தவறு என்றுதான் இஸ்ரேலியர்கள் கூறியிருந்தனர்.

எப்படிப் பார்த்தாலும், இஸ்ரேலியர்களுக்கு நடைமுறையளவில் ஐ.நா. பார்வையாளர்களை தாக்குவதற்கு சில காரணங்கள் இருந்தன. முதலாவதாக லெபனானில் இவர்கள் மேற்கொண்டுள்ள படையெடுப்பு, லெபனிய குடிமக்களுக்கு எதிராக அவர்கள் நிகழ்த்திவரும் போர்க்குற்றங்கள் பற்றிய சாட்சியங்களை அகற்ற முற்படுகின்றனர். இரண்டாவதாக, தங்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக எத்தகைய சர்வதேச குறுக்கீடு பற்றியும் தங்கள் மனோநிலையை தெரிவிக்கவும் இச்செயல் உதவுகிறது. இஸ்ரேலியர்கள் ஐ.நாவும் பாதிக்கப்பட்ட தரப்பும், UNTSO புறக் காவல் நிலைய அழிப்பு பற்றிய விசாரணையில் எந்தப் பங்கினையும் ஆற்றக்கூடாது என்று நிராகரித்துள்ளனர். இவை அனைத்தின் மூலம் அவர்கள், இப்பகுதிக்கு அனுப்பப்படும் எந்த "சமாதானப் படையும்" டெல் அவிவின் அதிகாரத்திற்கு முற்றிலும் உட்பட்டிருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய மனோபாவம் புதிதன்று. இஸ்ரேலிய நிலைச்சான்றே ஐ.நா. மட்டுமின்றி, சர்வதேச சட்டம் பற்றியதிலும் குண்டர்களின் மீறல் போன்ற மீறல்களுள் ஒன்றைத்தான் கொண்டுள்ளது. தன்னுடைய நலன்களை தொடரும்போது எத்தகைய வன்முறையை கையாண்டாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்துக்கள் அனைத்தையும் சியோனிஸ்டுகள் எப்பொழுதும் நிராகரித்துள்ளனர். அதன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், ஐ.நாவிற்கான இஸ்ரேலின் நிரந்தரக் குழு, "இஸ்ரேலும் ஐ.நாவும் -- அமைதியற்ற உறவு" என்ற ஆவணத்தில் பொது மன்றத்தை, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் என்ற கருத்தில் "நீண்டகாலமாகவே இஸ்ரேலை தனிமைப்படுத்தும் போக்கை காட்டியுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளது. உண்மையில் ஐ.நா.வில் பல அரேபிய நாடுகளும் உரத்த குரலில் சியோனிச போர்க்குற்றங்களுக்காக மன்றத்தில் அதைப் பெரும் கண்டனத்திற்கு உட்படுதினாலும், பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து அடக்கப்பட்டுவரும் வழிவகைக்கு இறுதியில் இணக்கம்தான் காட்டியுள்ளனர்.

நவம்பர் 1947ல் கூறப்பட்டாலும், மே 1948ல் இஸ்ரேலிய சுதந்திர பிரகடனம் உத்தியோகபூர்வமாக ஐ.நா.வின் பொது மன்றத்தில் அறிவிக்கப்பட்ட பொழுதில் இருந்து, தங்கள் சர்வதேச ஆதரவாளர்களுடன் சியோனிச தலைவர்கள் பூசல்களைத்தான் கொண்டுள்ளனர். ஐ.நா.வால் முன்மொழியப்பட்ட பிரிவினை பற்றி அவர்கள் அதிருப்தி கொண்டிருந்தனர்; இன்னும் கூடுதலான அபிலாஷைகளால்தான் வழிநடத்தப்படுகின்றனர், கடந்த 60 ஆண்டுகளாக அவை வெளிப்படுவதைத்தான் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பெர்னடோட் பிரபு கொலை செய்யப்படல்

ஐக்கிய நாடுகளின் திட்டங்களும் அக்கறைகளும் சியோனிச அபிலாஷைகளுடன் மோதலுக்கு உட்பட்டபோது, பிந்தையவர்கள் தங்கள் நோக்கத்தை அடைவதற்கு வன்முறையையும், பயங்கரவாதத்தையும் மேற்கொள்ளத் தயாராக இருந்தனர். ஐ.நா.விற்கு எதிராக சியோனிச இயக்கம் செய்த முதல் குற்றங்களில் ஒன்று செப்டம்பர் 17, 1948ல் போக் பெர்னடோட் பிரபுவை கொலை செய்தது ஆகும்.

1895ல் பிறந்த பெர்னடோட் ஒரு ஸ்வீடன் நாட்டு தூதர் ஆவார்; மன்னர் ஐந்தாம் குஸ்டாவுஸின் நெருங்கிய உறவினர் ஆவார்; இரண்டாம் உலகப்போரில் அவர் ஸ்வீடன் நாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் புகழ் ஈட்டியிருந்தார். தன்னுடைய அந்தஸ்தைக் கொண்டு நாஜித் தலைவர் ஹென்ரிக் ஹம்லருடன் பேச்சுவார்த்தை நடத்தி 15,000 முதல் 20,000 யூதர்களையும், மற்றவர்களையும் (பெரும்பாலும் ஸ்காண்டிநேவியர்களையும்) சித்திரவதை முகாம்களிலிருந்து காப்பாற்றியிருந்தார். போர் முடியும் தறுவாயில், அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஜேர்மனி சோவியத்திற்கு எதிராக போரைத் தொடரும் என்ற நிபந்தனையின் பேரில் ஹிம்லரின் சரணடைதலை பெர்னடோட் பெற்றார்.

மே 20, 1948 அன்று (இஸ்ரேல் சுதந்திரம் அறிவிக்கப்பட்டு ஆறு நாட்களுக்கு பின்னர்), பெர்னடோட் ஐ.நாவின் மத்தியஸ்தராக பாலஸ்தீனத்தில் நியமனம் பெற்றார். "பாலஸ்தீனத்தின் வருங்கால நிலைமையை அமைதியான முறையில் அமைக்க பாடுபடவேண்டும்" என்று அவர் கட்டளையிடப்பட்டார். இதையொட்டி பிரிவினை திட்டத்திற்கும் அப்பலாலும் பேச்சு வார்த்தைகள் நடத்த அனுமதிக்கப்பட்டார்.

1948 கோடையில், அவர் ஐ.நா.வினால் இஸ்ரேலுக்கும் அதைத் தாக்கிய அரேபிய நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதானம் ஏற்படுத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 30 நாள் போர் நிறுத்தத்தை கொண்டுவருவதில் ஜூன் 11 அன்று அவர் வெற்றியையும் அடைந்தார். போர் நிறுத்த தேக்க நிலையில், "பூசல்களை நிறுத்துவதற்கான தன்னுடைய முதல் திட்டத்தை பெர்னடோட் முன்வைத்தார். மாறாக இது அவருடைய விதிக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஜெருசலேம் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துமே அரபு அரசிற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, யூத வெறியர்களின் பார்வையில் பெர்னடோட்டின் உடன்பாடு மீறல், அதாவது ஜெருசலம் ஜோர்டானிய ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்ற தன்னுடைய ஜூன் 28 முன்மொழிவை உள்ளடக்கிக்கொள்ள இருந்தது." ((Donald Neff, Washington Report on Middle East Affairs [WRMEA]).

பெர்னடோட்டின் மரணத்திற்கு பின் வெளியிடப்பட்ட அவரது பிந்தைய முன்மொழிவுகள், திட்டமிடப்பட்ட அரபு அரசிற்கு நெகேவ் பாலைவனம், யூதர்களுக்கு கலிலீ கொடுக்கப்பட வேண்டும்; பாலஸ்ததீனத்தில் இருந்த அரேபிய பகுதிகளின் மீதான கட்டுப்பாடு அரேபிய அரசுகளுக்கு (நடைமுறையில் ஜோர்டானுக்கு அப்பால் உள்ளவற்றிற்கு) கொடுக்கப்பட வேண்டும்; ஹைபா துறைமுகம் மற்றும் லிட்டா விமான நிலையம் இரண்டும் நாட்டின் அரேபிய, யூதர்களின் பகுதிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும்; இதைத்தவிர அண்டை அரேபிய நாடுகளுக்கும் உதவியாய் இருக்க வேண்டும்; அரேபிய அகதிகள் தங்கள் தாய்நாடுகளுக்குச் செல்ல வேண்டும்; இப்பகுதியில் நீடித்த சமாதானம் அடையப்படுவதற்கு முதல் நடவடிக்கையாக ஒரு சமரசக் குழு நிறுவப்படவேண்டும் ஆகியவை இதில் அடங்கியிருந்தன.

மத்திய கிழக்கில் காலனிய எதிர்ப்புப் புரட்சிக்கு தடையாக இருப்பது உள்பட, பிரிவினை திட்டத்தின் பிற்போக்குத் தன்மை, மேலை ஏகாதிபத்திய நாடுகள் இஸ்ரேலை தங்கள் புவிசார்-அரசியல் நலன்களுக்கான ஒரு முன்னேற்ற நிலையை நிறுவுதற்கான உறுதிப்பாடு, இவற்றை எடுத்துக் கொண்டால் பெர்னடோட்டின் திட்டம் அரிய கற்பனைத்திட்டம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு ஆழ்ந்த ஜனநாயக விரோதப் போக்குடைய தட்டத்தை ஜனநாயகப்படுத்தும் இயலாத நோக்கத்தை அது கொண்டிருந்தது. ஆயினும்கூட அறுபது ஆண்டுகளாக இஸ்ரேலின் நிலப்பறிப்புக்கள், மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கள் என்ற பின்னணியில் காணும்போதும், மற்றும் பெரும் வல்லரசுகளின் இன்றைய நிலைப்பாட்டில் காணும்போதும், அவருடைய திட்டங்கள் திட்டவட்டமாக முற்போக்கானவையாகத்தான் இருந்தன.

பெர்னடோட்டின் ஜெருசலம் பற்றிய கருத்துக்களுக்கு சியோனிச அமைப்புக்களின் எதிர்விளைவானது கணிக்கக் கூடியதேயாகும்.

"ஐ.நா.வின் பிரிவினைத் திட்டம் ஜெருசலத்தை ஒரு சர்வதேச நகரம் என்றும் அது அரேபியரோ, யூதர்களாலோ ஆளப்பட மாட்டாது என்றும் அறிவித்திருந்தது. ஆனால் (வருங்கால இஸ்ரேலிய பிரதம மந்திரிகள் இட்சாக்) ஷமீர், (ஸ்டேர்ன் குழு என அழைக்கப்பட்ட LEHI உறுப்பினராக இருந்தவர்கள் பலரும்), மெனான்சேம் பெகினும் (தேசிய இராணுவ அமைப்பு அல்லது எட்செல்லில் தலைவர்) Irgun Zvai Leumi, உட்பட யூத பயங்கரவாதிகள் பலரும் பிரிவினைத் திட்டத்தை நிராகரித்து, அனைத்து பாலஸ்தீனிய பகுதிகளும் ஜோர்டானும் யூதர்களுடைய நாட்டில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த யூதத் தீவிரவாதிகள் பெர்னடோட்டின் கருத்தைக் கண்டு பீதி அடைந்தனர்.

"ஜூலை மாதத்தை ஒட்டி ஸ்டேர்னிச குழுவினர் பெர்னடோட் கொலைசெய்யப்படுவார் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தனர். ஜூலை 24 அன்று இரண்டு ஸ்டேர்ன் குழு உறுப்பினர்களை சந்தித்த நியூ யோர்க் டைம்சின் கட்டுரையாளர் C.L. Sulzberger எழுதினார்: "ஜெருசலத்திற்கு வரவிருக்கும் பெர்னடோட் மற்றும் எந்த ஐ.நா. பார்வையாளர்களையும் கொலை செய்ய விரும்புகிறோம்" என்று செய்தி அறிவித்திருந்தார், ஏன் என்று கேட்கப்பட்டதற்கு, "தங்களுடைய அமைப்பு அனைத்து ஜெருசலத்தையும் இஸ்ரேல் அரசிற்காக கைப்பற்றுவதாக உறுதி பூண்டுள்ளதாகவும் எந்த தேசிய அல்லது சர்வதேச அமைப்பின் குறுக்கீட்டையும் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர்கள் கூறினர்" என்றார்.(Neff, WRMEA).

(Lohamei Herut Yisrael - Fighters for the Freeedom of Israel) LEHI, இஸ்ரேல் சுதந்திரத்திற்கான போராளிகள், ஸ்டேர்ன் குழு (இவ்வாறு பெயரிடப்பட்டதற்கு காரணம் அவ்ரஹம் "யேர்" ஸ்டேர்னையொட்டியாகும்), என்பது ஒரு தேசியவாத பாசிச அமைப்பு ஆகும்; இது "யூப்ரடிசில் இருந்து நைல் வரையிருக்கும் ஹீப்ரு இராச்சியத்தை அமைக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்தது. ஸ்டேர்ன் பிரிட்டிஷ் போலீசாரால் பெப்ருவரி 1942ல் கொல்லப்பட்ட பின்னர், இக்குழு ஒரு புதிய கட்டுப்பாட்டு கட்டமைப்பை உருவாக்கியது; ஆனால் "அமைப்பின் வழிகாட்டு நெறிகளில் பயங்கரவாதம் தொடர்ந்து இருந்தது". (www.jewishvirtuallibrary.org). அது 1920லிருந்து 1948வரை சியோனிச நிழலுலக இராணுவ அமைப்பான, ஹகானா உற்பட, அதிகமான பிராதான நீரோட்ட அமைப்புக்களுடன் மோதலுக்கு வந்தது.

1944ம் ஆண்டு நவம்பர் 6 அன்று ஸ்டேர்ன் குழு உறுப்பினர்கள் கெய்ரோவில் பிரிட்டிஷாரின் மத்திய கிழக்கு விவகாரங்கள் மந்திரியாக இருந்த மோய்ன் பிரபுவை (Lord Moyne) படுகொலை செய்தனர். LEHI, ஹாபா இருப்புப் பாதை தொழிற்சாலைகளையும் ஜூல் 1946ல் தாக்கியது. டிசம்பர் 1947ல் பெகினின் இயக்கமான Etzel பல நூற்றுக்கணக்கான மக்கள் இருந்த கூட்டம் ஒன்றின் மீது ஒரு காரில் இருந்து குண்டுகளை வீசியது; இதில் 6 பேர் இறந்து போயினர், 42 பேர் காயமுற்றனர். இதற்குப் பின் நடந்த வகுப்புவாத வன்முறையில் 42 யூதத் தொழிலாள்கள் ஒரு சுத்திகரிப்பு ஆலையில் கொல்லப்பட்டனர், 49 பேர் காயமுற்றனர். மறுநாளே Etzel காட்டிய வழியில் ஹகான அதேபோன்ற தாக்குதலை அரேபிய சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இருந்த நகரத்தில் மேற்கொண்டதில் 60 ஆண்கள், பெண்கள், சிறுவர் மாண்டனர்.

பெர்னடோட்டின் படுகொலை ஸ்டேர்ன் இழிகுழுவில் இருந்த மூன்று தலைவர்களால் திட்டமிடப்பட்டது; இதின் ஷமீரும் ஒருவராவார்; இவர் பின்னர் இஸ்ரேலின் பிரதமராக 1983ல் வந்தவர் ஆவார். LEHI உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டிருந்தாலும் தன்னை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுள் மே 1948ல் கரைத்துக் கொண்டிருந்தாலும் ஜெருசலேம் ஸ்டேர்ன் குழு ஒரு சுயாதீன அமைப்பாக இருந்து நகரத்தின் தலைவிதி இன்னும் தீர்க்கப்படவில்லை என்று கூறிவந்தது.

பெர்னடோட்டை ஒரு பிரிட்டிஷ் முகவர் என்றும்; அவர் நாஜிக்களுடன் ஒத்துழைத்தவர் என்றும் LEHI கூறியது. (இரண்டாம் உலகப்போர் காலத்தில் சியோனிச அமைப்புக்கள், நாஜிக்கள் தலைவர் அடோல்ப் ஐஷ்மன் உள்ப்பட, நாஜிக்களுடன் பரந்த முறையில் பேரங்கள் கொண்டிருந்தனர் என்ற உண்மை மீது அவர்கள் மேலோட்டமாக மூடுதிரை வரைந்தனர்.) "இந்த அமைப்பு அவருடைய திட்டத்தை, ஜோர்டான் நதியின் இரு புறமும் பெறவுள்ள விரிவாக்கப்பட்டுள்ள பகுதிகளை கொண்ட சுதந்திர இஸ்ரேல் என்பதற்கு அச்சுறுத்தல் என்றும் கருதியது." (www.palestinefacts.org).

செப்டம்பர் 17, 1948 அன்று பெர்னடோட்டின் மூன்று கார்கள் கொண்ட பாதுகாப்பு அணி யூதர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு ஜெருசலேத்தில் ஒரு சிறு சாலைத் தடைக்கு அருகே நிறுத்தப்பட்டது. இரு துப்பாக்கிதாரிகள் கார்களின் டயர்களை சுட்டனர்; மூன்றாவது துப்பாக்கிதாரி பெர்னடோட்டின் காருடைய திறந்திருந்த பின் ஜன்னல் வழியே கைத்துப்பாக்கியால் சுட்டார். ஐ.நா. மத்தியஸ்தர் ஆறு குண்டுகளால் தாக்கப்பட்டு, அக்கணமே இறந்து போனார்; அவருக்கு அருகில் இருந்து ஒரு பிரெஞ்சு அதிகாரியும் அக்கணமே மாண்டார்.

இந்த கொலைகள் பற்றி எவர்மீதும் குற்றங்கள் சாட்டப்படவில்லை; இதற்கு பொறுப்பானவர்கள் எவர் என்று பின்னர் நன்றாகவே தெரியவந்தது. நத்தன் யெல்லின் மோர், மட்டியாகு சாமுவேல்விட்ச், என்ற ஸ்டேர்ன் குழுத் தலைவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பை சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்ட அளவில், அவர்கள உடனடியாக விடுவிக்கப்பட்டு, மன்னிப்பும் பெற்றனர்; இதற்கு இடையில் யெல்லின் மோர் இஸ்ரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷமிருடைய பங்கிற்கு அவர்மீது குற்றமே சாட்டப்படவில்லை.

பெர்னடோட்டை கொன்ற கொலையாளி யேகோசுஷா கொகன் (Yehoshua Cohen) பின்னர் பிரதம மந்திரி டேவிட் பென் குரியனுக்கு மெய்காப்பாளராக இருந்தார். ஸ்டேர்ன் குழுவின் பங்கு இக்கொலையில் இருந்தது என்ற முதலாவது பகிரங்க ஒப்புதல் 1977 வரை ஒப்புக் கொள்ளப்படவில்லை.

இந்த வாரம் ஆரம்பத்தில் ஐ.நா. புறக்காவற்கூடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேறுவிதமாகக் கூறினால், சியோனிச அரசின் தோற்றங்கள், மரபுகள் ஆகியவற்றுடன் முற்றிலும் இயைந்துதான் உள்ளது. இதன் "பிரசவ வேதனையில்" பயங்கரவாதமும், சர்வதேச சட்டத்தை அவமதிப்பதும் சம்பந்தப்பட்டிருந்தன.

See Also :

ரைசின் மத்திய கிழக்குப் பயணம்: போரை துரிதப்படுத்துவதில் "இராஜதந்திரம்"

லெபனானில் போரும் நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான ஆதரவு

லெபனானில் போரும் நியூயோர்க் டைம்சும்: அமெரிக்க-இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு சிடுமூஞ்சித்தனமான ஆதரவு

லெபனானுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய போரின் உண்மையான நோக்கங்கள்

G8 அரசுகள் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அனுமதி கொடுக்கின்றன

இஸ்ரேல் தாக்குதலுக்கு உடந்தையாக உள்ள அரேபிய தலைவர்களை எதிர்ப்புக்கள் கண்டனத்திற்கு உட்படுத்துகின்றன

Top of page