India: Gujarat Congress party lines up with BJP's
campaign against actor Aamir Khan
இந்தியா: திரைப்பட நடிகர் அமீர் கானுக்கு எதிராக பாரதீய ஜனதாக் கட்சியின் பிரச்சாரத்துடன்
காங்கிரஸ் கட்சியும் வரிசையில் நிற்கிறது
By Ajay Prakash
1 July 2006
Use this version
to print | Send this link by email
| Email the author
உலகப் புகழ் பெற்ற இந்திய திரைப்படத்துறை
(Bollywood)
நடிகர் அமீர் கானுக்கு எதிராக இந்தியாவின் மேற்கத்திய மாநிலமான குஜராத்தில் ஆட்சிபுரியும் இந்து மேலாதிக்கவாத
பாரதீய ஜனதா கட்சியினருடன் காங்கிரஸ் கட்சியும் வரிசையில் நிற்கிறது. மேற்கத்திய திரைப்பட ரசிகர்கள் மத்தியில்,
2002ம் ஆண்டு ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படமாகிய "லகான்" என்னும் திரைப்படத்தின்
ஒரு தயாரிப்பாளராகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவராகவும் நன்கு அறிந்திருக்கும் சாத்தியமுள்ள இஸ்லாமிய
மதத்தை சேர்ந்தவர் அமீர்கான்.
வன்முறைகொண்ட கான் எதிர்ப்புக்களுக்கு அஞ்சி, அதிக வசூலை ஈட்டித் தந்திருக்கின்ற
கானின் சமீபத்திய திரைப்படமாகிய "பன்னா" என்னும் திரைப்படத்தை குஜராத் மாநிலத்தின் திரையரங்கு
உரிமையாளர்கள் திரையிட்டுக்காட்ட மறுத்துள்ளார்கள். பாரதீய ஜனதா கட்சியினரும் மற்றைய இந்துமேலாதிக்கவாத
அமைப்புக்களும் கலவரங்களை தூண்டியதால் கானின் முந்தைய திரைப்படமான "ராங் டே பஸந்தி"
என்னும் திரைப்படத்தை குஜராத் மாநில திரையரங்குகளின் திரையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் திரும்பப் பெற்றனர்.
"ராங் டே பஸந்தி" என்னும் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளை சென்ற மாதம் கும்பல்
தாக்கியதாக குஜராத் திரையரங்குகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மாவுபாய் பட்டேல் தெரிவித்தார்.
"திரையரங்குச் சொத்துக்களுக்கு அதிக அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கண்ணாடிகளையும் இருக்கைகளையும்
உடைத்துள்ளனர். இதேநிலை திரும்பவும் ஏற்படாது தடுக்கும் பொருட்டு "பன்னா" திரைப்படத்தை திரையிட
வேண்டாம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்."
கானுக்கு எதிரான போராட்டங்களை தான் ஆதரிப்பதாக பட்டேல் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அவமதிக்கும் வகையில் பிரச்சினைக்குரிய நர்மதா அணையின் உயரத்தை அதிகரிக்க குஜராத்
அரசு முடிவு செய்துள்ளதையும் இந்த அணைக் கட்டுமானத்தால் புலம்பெயர்ந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை
முறையாக அளிக்கத் தவறிய குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக கான் கண்டித்திருப்பதற்காக அவர் மன்னிப்புக்
கேட்க வேண்டும் என பட்டேல் தெரிவித்துள்ளார். "குஜராத் மக்களின் தனிப்பட்ட பெருமைக்கு அமீர் கான் தீங்கிழைத்துள்ளார்.
நாங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும்".
மாநில அரசு இந்த பன்னா திரைப்படத்தை முழுமையாக தடைசெய்ய
வேண்டும் என்று கோரியும், இந்த திரைப்படத்தின் ஒளிநாடா மற்றும் குறுந்தகடுகளை விற்கும் கடைகள் முன்பாக
முற்றுகையிட்டு அவைகள் விற்பனையை தடுத்தும், இந்த நடிகரின் உருவப்படத்தை எரிப்பதுமான செயல்பாடுகளில்
பாரதீய ஜனாதாக் கட்சியின் இளைஞர் அணி வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். எந்த அரசியல்
கட்சியினையும் சேராதவர் என்று கூறப்படும் ஒரு போராட்டக்காரர் ஜாம் நகரில் அம்பெர் திரையரங்கில்
தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டு தற்போது இறந்தும் விட்டார்.
நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையின்
உயர்மட்டத்தை அதிகரிப்பதை எதிர்த்து உண்ணாவிரம் மேற்கொண்டிருந்த, நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின்
(Narmada Bachao Andolan - NBA)
தலைவரான மேதா பட்கரை ஏப்ரல் மாத மத்தியில் அமீர்கான்
பார்க்கச் சென்றதானது குஜராத்தின் பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தை கோபப்பட வைத்ததால் கானுக்கு
எதிராக இந்தக் கிளர்ச்சி ஏவப்பட்டது. இந்த அணைமட்டத்தின் உயரத்தை அதிகப்படுத்துவது மேலும் 35,000
பேரை புலம்பெயரச் செய்யும் விளைவாக இருக்கும்.
பன்னா திரைப்படத்தை தடை செய்வதை உத்யோகபூர்வமாய் எதிர்க்கும்
இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஆதிக்கம் செலுத்தி வரும் காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநிலப்
பிரிவு, கானுக்கு எதிரான - வெளிப்படையாக தெரியக்கூடியவாறு இந்துமேலாதிக்கவாதத்தை ஆதரித்து வாதாடும்
பாங்கிலான பாரதீய ஜனதா கட்சியின் கிளர்ச்சியை மறைமுகமாக ஆதரித்து வருகிறது.
குஜராத் காங்கிரசின் இளைஞர் அணியும் இந்திய தேசிய மாணவர்கள் யூனியன் என்னும்
காங்கிரஸ் கட்சி மாணவர்கள் பிரிவும் பன்னா மற்றும் ராங் டே பஸந் ஆகியவற்றிற்கு
எதிரான போராட்டங்களில் பங்கேற்றன.
குஜராத் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளரான ஜகத்
சுக்லா, பன்னா திரைப்படத்தை தடை செய்யும்படி குஜராத் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டதுடன்,
திரையரங்கு உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை திரையிடுவதில்லை என முடிவு செய்திருப்பதை பாராட்டியும்
இருக்கிறார்.
எங்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் திடீரென ஏற்பட்ட உணர்ச்சிமயமான
நிலையிலான கோபத்தில் பன்னா திரைப்படத்தை தடை செய்யக் கோரியுள்ளார் எனத் தெரிவித்து
இதற்கு ஆதரவளிப்பதற்கில்லை என குஜராத் மாநில
காங்கிரஸ் குழு முடிவு செய்திருந்தாலும், கான் குஜராத்திய
மக்களுக்கு எதிரான உள்நோக்கமுடைய கருத்துக்களுக்கு "மன்னிப்புக் கோரும்படி" கூறியுள்ள பாரதீய ஜனதா
கட்சியின் கருத்தினையும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
அமீர் கான் கருத்துக்களில் நான் தவறு காணவில்லை ஆனால் அவர் எந்த
மேடையிலிருந்து இதைப் பேசியுள்ளார் என்பதில் தான் தவறு இருக்கிறது என மத்திய ஜவுளித்துறை அமைச்சரும்
குஜராத் மாநில காங்கிரசின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா டைம்ஸ் ஆப் இந்தியா
பத்திரிகையில் மே 31ம் தேதி கருத்து தெரிவித்துள்ளார்.
"அவருடைய சொந்த நலன்களுக்காக அவர்
NBA-விடமிருந்து
ஒதுங்கியிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மேதா பட்கரும் அவரது கூட்டாளிகளும் குஜராத்துக்கு
எதிரானவர்கள். அவர்கள், இந்த அணையிலிருந்து குஜராத்துக்கு தண்ணீர் செல்வதை எதிர்ப்பவர்கள். இத்தகைய
அமைப்பில் தன்னை அடையாளம் காட்டாத நிலையை அமீர் கான் தெளிவாக்க வேண்டும்.."
"மேதா பட்கருக்கு எதிரான தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு
அவர்கள் உரிமை உடையவர்கள்" என குஜராத் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா
காந்தியின் அரசியல் செயலாளராக இருக்கும் அஹமத் படேல் கூறியிருப்பதன் மூலம் கானுக்கு எதிரான
போராட்டங்களை அவர் ஊக்கப்படுத்தியுள்ளார். நர்மதா உயர்வானது
(Narmada is supreme)
என்பது தான் காங்கிரஸ் கட்சியின் முழக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பன்னா திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருப்பதாக
மெய்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய திரைப்படத் தொழிலை சார்ந்தவர்களும் தகவல் தொடர்பு ஊடகங்களும்
கானுக்கு ஆதரவாக அணி சேர்ந்திருக்கையில், கானுக்கு எதிரான பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான
பிரச்சாரத்திலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருப்பது அவசியம் என அகில இந்திய அளவிலான காங்கிரஸ் கட்சி
உணர்ந்துள்ளது. "அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்களில் இறங்காமலிருக்கும் வரை ஒவ்வொரு குடிமகனுக்கும்
பேச்சு சுதந்திரம் உள்ளது" என பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் திரையரங்கு உரிமையாளர்கள் பன்னா திரைப்படத்தை
திரையிடுவதில்லை என எடுத்துள்ள முடிவு பேச்சுரிமையை மீறுவதாக உள்ளது என தீவிர செயல்பாட்டாளரும்
திரைப்பட இயக்குனருமான மஹேஷ் பட்டும் குஜராத்தை சேர்ந்த ஒரு அரசுசாரா இயக்கமும் உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்துமேலாதிக்கவாத வன்முறைப் போராட்டங்களை குஜராத் அரசாங்கமும் காவல்
துறையினரும் தூண்டிவிடாதிருந்தாலும், அதைத்தடுத்து நிறுத்துவதை தொடர்ந்து புறக்கணித்து வரும் உண்மைநிலையை
கவனத்தில் கொள்ளாமல், நீதிமன்றம், திரையரங்கு உரிமையாளர்கள் எந்த நேரத்திலும் காவல் துறையை
அணுகலாம் எனத் தெரிவித்து இந்த வழக்கினை தள்ளுபடி செய்துவிட்டது.
இதற்கிடையில், நர்மதா அணையைக் கட்டியதால் இடம் பெயர்ந்துள்ள
பல்லாயிரக்கணக்ான மக்களுக்கு உரிய ஈட்டுத் தொகையை முறையாக வழங்கத் தவறிய குஜராத் அரசாங்கத்தையும்
முதலமைச்சர் நரேந்திர மோடியையும் விமர்சிக்கும் தனது போக்கை மாற்றிக் கொள்ள கான் மறுத்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த அணையை கட்டுவதை தான் எதிர்க்கவில்லை என்றும் அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
"நான் விரும்புவது என்னவென்றால் இந்த அணைக் கட்டுமானத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு மாற்றிட வசதி செய்து
கொடுக்க வேண்டும்... குஜராத் மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். நான்
குஜராத் மக்களை நேசிக்கிறேன். நான் குஜராத் மக்களுக்கு அதிக அளவிலான தண்ணீர் கிடைக்க விரும்பும் நிலையில்
புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையும் விரும்புகிறேன்" என்றார்.
"நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். ஏன் நான் மன்னிப்புக் கேட்க வேண்டும்?
நான் தவறாக எதையும் சொல்லிக் கொண்டிருக்கவில்லையே.... ஒரு பலமான பெரிய கட்சியாகிய பாரதீய
ஜனதா கட்சியுடன் ஒப்பிடுகையில் நான் ஒரு மிகச் சிறிய மனிதன். ஏழைகளுக்காக பேசிக் கொண்டிருக்கும் நிலையில்
எதற்காக நான் மன்னிப்புக் கோர வேண்டும்?"
"ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத ஒரு அரசியல் கட்சி இங்கிருப்பதை இந்திய
மக்கள் காணவேண்டுமென நான் விரும்புகிறேன். ஏழை மக்களின் உரிமைகளின் மீது நம்பிக்கை கொள்ளாத ஒரு கட்சி
இங்கிருக்கிறது. நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ளேன், ஒரு குறிக்கோளில் நம்பிக்கை கொண்டால் அதை
நான் ஆதரிப்பேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போபாலில் யூனியன் கார்பைட் என்னும் பூச்சிக்கொல்லி மருந்துத்
தொழிற்சாலையினால் 1984ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டது உட்பட சமூக
குறிக்கோள்களை ஆதரித்து வருவதில் கான் நன்கு அறியப்பட்டவர் ஆவார். 2002ம் ஆண்டு மார்ச் மாதத்தில்
நிகழ்ந்த வகுப்புவாத கலவரத்தை கட்டுப்படுத்த குஜராத் பாரதீய ஜனதா கட்சியினர் தவறியதையும், மிகச்
சமீபத்தில் இந்த ஆண்டு மே மாதம் வதாதோரா நகரில் நடைபெற்ற கலவரத்தை அடக்கத் தவறியதையும் கான்
கண்டித்ததுடன், "கலவரங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது"
எனவும் கூறியுள்ளார். இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த எந்த அப்பாவி
மக்களும் இத்தகைய கலவரங்களில் கொல்லப்படக் கூடாது என உணர்கிறேன். ஈராக்கில் அப்பாவி மக்களை
கொன்று கொண்டிருக்கும் ஜோர்ஜ் புஷ்ஷின் (அமெரிக்க ஜனாதிபதி) செயல்பாட்டினையும் எதிர்க்கிறேன். மனித
இனத்தைச் சார்ந்த அனைவரும் இத்தகையோரை எதிர்க்க வேண்டும். மதத்தின் பெயரால் மற்றவர்களை தீமை
புரியத் தூண்டுவது தவறானதாகும்" எனவும் அவர் கூறியுள்ளார்.
1995ம் ஆண்டிலிருந்து பாரதீய ஜனதா கட்சி குஜராத்தில் ஆட்சி செய்து வருகிறது.
2002ம் ஆண்டு பெப்ரவரி மாதக் கடைசியில் இதே பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசாங்கம்
இருந்தபோது பாகிஸ்தானுடன் போர் செய்வதாக அச்சுறுத்திவந்த தருணத்தில், முதலமைச்சர் நரேந்திர மோடி
60 இந்து மேலாதிக்கவாத செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட ரயில் தீவிபத்தை பற்றிக் கொண்டு,
முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அவிழ்த்துவிட, அது 2,000 பேர் இறக்கவும் 100,000 பேர் வீடு
இழக்கவும் நேர்ந்த ஒரு இன அழிப்பாக விரைந்து மாறியது.
குஜராத்திலுள்ள காங்கிரஸ் கட்சி, மோடியின் வகுப்புவாத அரசியலை
வெளிப்படையாவே ஏற்றுக் கொண்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் முந்தைய குளிர்காலத்து கலவரங்களில் இந்துக்கள்
பாதிக்கப்பட்டார்கள் என்கிறவாறு உருவகப்படுத்திக் காட்டும் சுவரொட்டிகளை உபயோகித்தமை உட்பட, 2002ம்
ஆண்டு டிசம்பரில் இக்கட்சி நடத்திய தேர்தல் பிரச்சாரத்தை "இந்துத்துவா அல்லது இந்து பேரினவாத பற்று" என
பத்திரிக்கைகளில் பல விவரித்தன.
தேசிய அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசாங்கம் (UPA)
அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை கொண்டு குஜராத் மாநிலத்தில் 2002ம்
ஆண்டின் இனப்படுகொலைகளில் பாரதீய ஜனதா கட்சியின் பங்கிற்காக அந்த ஆட்சியை பதவி இறக்கக் கோரும்
எண்ணிலடங்கா கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ளதுடன், இத்தீச்செயலை புரிந்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடரவும்
தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஆனால், இந்த மே மாதம் 300 ஆண்டுகள் பழைமையுடைய சுபி இஸ்லாமிய "சட்டவிரோத"
தொழுகையிடக் கட்டிடம் ஒரு சாலை அமைப்பதில் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதற்காக வதாதோரா நகராட்சியினர்
இந்தக் கட்டிடத்தை இடித்துத் தள்ளியபோது, முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடக்குவதற்காக மத்திய அரசிடம்
இராணுவம் மற்றும் மத்திய காவல் படையை அனுப்பக் கோரியபோது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதனை
ஏற்றுள்ளது. இது ஒரு சட்டம் ஒழுங்கு பராமரித்தல் பிரச்சினை என மோடியை ஆதரித்து, செல்வாக்குமிக்க ஏழை
முஸ்லீம் சிறுபான்மையினரை துன்புறுத்துவதை பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து கைக்கொண்டு வருவதை பார்க்கும்
இந்த எதிர்ப்பாளர்களின் கருத்துக்களை இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புறக்கணித்துள்ளது.
தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயமாக்கல் கொள்கைகளை
ஆதரித்து வரும் குஜராத்திய பெரு முதலாளிகளின் ஆதரவை அனுபவித்துக் கொண்டிருக்கும் குஜராத் அரசாங்கத்துடன்
இணைந்து செயல்படவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி விரும்புவது ஒரு முக்கிய காரணமாகும். ராஜீவ் காந்தி அறக்கொடையின்
தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, 2005ம் ஆண்டு மே மாதம், "இந்தியாவில்
வர்த்தக நட்புக்குரிய சிறந்த நிர்வாகத்திறனுடைய மாநிலமாக குஜராத் திகழ்கிறது" என 2002ம் ஆண்டின் படுகொலைகளை
பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில் குஜராத் பற்றி அறிக்கை வெளியிட்டு பாராட்டியுள்ளார்.
"கருத்துவேறுபாடுகளை பொறுத்துக் கொள்ள விரும்பாத தீவிர நிலையில் ஆளும்
கட்சியும் அதன் அமைப்புகளும் நடந்து வருவதை இந்த பன்னா திரைப்படத்தின் மீதான நடப்பிலுள்ள தடை
தெளிவுபடுத்துவதாக ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
(CPI-M) கண்டனம்
செய்துள்ளது. இருந்தாலும் இவைகள் பாரதீய ஜனதா கட்சியின் கான் எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி உடந்தையாக
இருக்கும் நிலை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆட்சியில் பங்கு கொள்ளாமல் வெளியில் இருந்து கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியை
ஆதரித்து வரும் இந்த
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மற்றும் அதனுடைய இடதுசாரி அணியினர் இந்திய முதலாளித்துவத்தின்
பிரதிநிதியான இந்தக் கட்சிதான் வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சிக்கு மாற்று என்கின்ற கட்டுக்கதையை பிரச்சாரம்
செய்வதில் பெரும் பங்கு ஆற்றிக் கொண்டிருக்கிறன. இருந்தபோதிலும், கான் எதிர்ப்பு கிளர்ச்சிகளில் அதன்
பாத்திரம் உறுதியாக சான்றளிக்கிறவாறு, அரசியல் விரும்பத்தக்கநிலை அதனை கோருகின்றபோதும், தொழிலாளர்கள்
மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான முதலாளித்துவ நலன்கள் சம்பந்தப்படும்பொழுதும், காங்கிரஸ் கட்சி
வகுப்புவாத சக்திகளுடன் கூட்டாக செயலாற்ற மிக விருப்பம்கொள்கிறது.
Top of page |