World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Protests demand immediate halt to Israeli war on Lebanon

ஜேர்மனி: லெபனான்மீதான இஸ்ரேலிய போரை உடனடியாக நிறுத்தக்கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

By our correspondents
31 July 2006

Back to screen version

தெற்கு லெபனான் மற்றும் காசா மீதான தற்போதைய இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பேர்லின், கொலோன், பிராங்க்போர்ட் உள்பட ஜேர்மனிய நகரங்கள் பலவற்றில் நிகழ்ந்தன. பேர்லினில், பொதுவாக ஜேர்மனியின் அரேபிய சமூகங்களில் இருந்து வந்திருந்த 5,000 பேர் எனமதிப்பிடப்படும் எண்ணிக்கையினர் நகரத்தின் மத்திய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஏராளமான ஜேர்மனிய மனித உரிமைகள் குழுக்களும் போர் எதிர்ப்பு அமைப்புக்களும் பங்கு பெற்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள ஜேர்மனியின் எந்த அரசியல் கட்சிகளும் பங்கு பெறாத குறிப்பிடத்தக்க நிலையில் இருந்தது. இஸ்ரேலிய தலைமையில் அமெரிக்க ஆதரவு பெற்று நடந்துவரும் லெபனான் மற்றும் காசாப் பகுதிகள் மீதான குண்டுவீச்சுக்களுக்கு கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சியின், ஜேர்மனிய ஆளும் கூட்டணி அரசாங்கம் உறுதியாக ஆதரவு கொடுத்தாலும், ஜேர்மனிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளான தடையற்ற சந்தையை ஆதரிக்கும் சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைகளும் எவ்வித நிபந்தனையும் இன்றி இஸ்ரேலுக்குப் பின் அணிவகுத்து நிற்கின்றன.

பேர்லின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத வகையில் பெயர் பெற்றுள்ள கட்சி இடது கட்சி அதாவது ஜனநாயக சோசலிசக் கட்சி, ஜேர்மனியை ஆளும் கட்சிகளுக்கு "இடது" என வெளிப்படையாக கூறிக் கொள்ளும் கட்சி ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள், தலைநகரில் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள கட்சியின் உறுப்பினர்கள், அணியில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரை நிகழ்த்தினர். "2006ம் ஆண்டு திருப்திப்படுத்துதல்: அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஐரோப்பா நிபந்தனையற்ற சரணடைகிறது" என்ற அறிக்கையின் நூற்றுக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர்.

அரேபிய அமைப்புக்களால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த பேர்லின் அணிவகுப்பில் அரபு நாடுகளை சேர்ந்த ஜேர்மானிய இளைஞர்கள் பலரும் முழுக்குடும்பங்களும் லெபனானில் சிவிலியன்கள் மற்றும் சாதாரண குடும்பங்கள் மீது இரக்கமற்ற வகையில் இஸ்ரேலிய குண்டுவீச்சு நிகழ்த்தப்படுவது பற்றி சீற்றம் கொண்டிருந்தனர். அவர்களுடன் நடத்திய உரையாடல்களில், ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் பலருடைய உறவினர்களும் நண்பர்களும் தெற்கு லெபனானில் உள்ளனர் என்பது தெரிய வந்தது; அவர்களில் சிலர் ஏற்கனவே இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கொண்டுவரப்பட்ட பதாகைகள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்-ம் அமெரிக்காவும் "முதல் பயங்கரவாதிகள்" என்று அறிவித்து போரை உடனடியாக நிறுத்துமாறு அழைத்தன.

பேர்லினில் உள்ள பாலஸ்தீனிய சமூகத்தின் தலைவரும், அணியின் பேச்சாளர்களில் ஒருவருமான டாக்டர் முகைசீனிடம் WSWS நிருபர்கள் பேசினர். முகைசீன் அமெரிக்க ஆதரவில்லாத இஸ்ரேலிய நடவடிக்கை நினைத்தும் பார்க்க முடியாதது என்று அறிவித்தார். "ஒரு சமாதான உடன்பாட்டை காண்பதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக ரைஸ் மத்திய கிழக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய நடவடிக்கைகளின் உண்மையான தன்மை அமெரிக்க அரசாங்கம் தற்போது இஸ்ரேலிய விமானப் படைக்கு மிக அதிக தொழில்நுட்ப குண்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையில் நன்கு புலனாகும். ஒவ்வொரு குண்டும் 2.3 டன் வெடிமருந்துகளை கொண்டுள்ளது; கடந்த வாரம் ஸ்கொட்லாந்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டன. இதுதான் இஸ்ரேலிய-அமெரிக்க "சமாதானம் காத்தலின்" உண்மை முகம் ஆகும். இந்த வெடிமருந்துகள் காசாப் பகுதியிலும் தெற்கு லெபனானிலும் சாதாரண மக்களை பெரும் அச்சத்திற்கு உட்படுத்துவதற்காக முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.

"எங்களுக்கு கிடைத்துள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் 600க்கும் மேற்பட்ட சாதாரண மக்கள் தெற்கு லெபனான்மீதான குண்டுவீச்சுக்களால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பெரும்பாலான இறந்தவர்கள் மகளிர், சிறார்கள் என்றும் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட முக்கால் மில்லியனுக்கும் மேலான மக்கள் அப்பகுதியில் இருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் அமைதியாக ஏற்கப்படுவது மட்டுமல்லாமல், ஜேர்மன் அரசாங்கத்தாலும் அதிபர் அங்கேலா மேர்க்கலாலும் பார்க்கப்படுகின்றன. இதுவும் ஒரு தீவிரப் பங்கைத்தான் கொண்டிருக்கிறது; எப்படி என்றால் ஜேர்மனிய அரசாங்கம் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் விமானப் படைக்கும் விமானங்களையும், ஆயுதங்களையும் கொடுத்துள்ளது. உண்மையில், ஐரோப்பா முழுவதும் பெரும் பலவீனத்தைத்தான் நிரூபித்துள்ளது; அமெரிக்கர்களுக்கு எதிராக தன் தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தவில்லை."

WSWS நிருபர்களால் பசுமைக் கட்சியின் பங்கு மற்றும் முன்னாள் பசுமைக்கட்சி தலைவரும், ஜேர்மனிய வெளியுறவு மந்திரியுமாக இருந்த ஜோஷ்கா பிஷர் இஸ்ரேலிய தாக்குதலுக்கு முற்றிலும் ஆதரவு கொடுத்துள்ளதை பற்றி கேட்டபோது, டாக்டர் முகைசீன் விடையிறுத்தார்: "எனக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. கடந்த தேர்தலில் நான் பசுமைக் கட்சிக்கு வாக்களித்தேன். இனி அவர்கள் என்னுடைய ஆதரவைப் பெற மாட்டார்கள். இந்த நிபந்தனையற்ற சரணாகதி பிஷருக்கு மட்டும் இல்லாமல் பசுமைக் கட்சி முழுவதிற்குமே பொருந்தும். [பசுமைக் கட்சித் தலைவர்] கிளாடியா ரோத் பற்றியும் நான் ஏமாற்றம் கொண்டுள்ளேன்; இவர் ஈரானிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பு ஜேர்மனியில் உள்ள தீவிர வலதுசாரி, பழமைவாத அரசியல் வாதிகளுடன் கலந்து கொண்டார்."

பேர்லினில் வசிக்கும், பெய்ரூட்டில் உறவினர்களை கொண்டுள்ள மொகம்மதிடமும் WSWS கருத்தைக் கேட்டது. அவர் கூறியதாவது: "பெய்ரூட்டில் என்னுடைய உறவினர்கள் வசிக்கும் முழுப் பகுதியும் கடுமையான குண்டுவீச்சிற்கு இலக்காகியுள்ளது. முழுத் தெருக்களும், வீட்டுத் தொகுப்புக்களும், உயர்ந்த கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. ஹெஸ்பொல்லாவின் ஆதிக்கம் இப்பகுதி முழுவதும் உள்ளது என்று இஸ்ரேலிய பிரச்சாரம் கூறுகிறது; அது உண்மையல்ல. அப்பகுதியில் ஹெஸ்பொல்லாவின் சில அலுவலகங்கள் உள்ளன; இதைத்தவிர இது ஒரு சாதாரண பகுதியேயாகும். இப்பொழுது, இஸ்ரேலியர்கள் குடிநீர், மின்விசை அளிப்புக்களை நிறுத்திவிட்டனர். அதிகமாக நல்ல நீரே இல்லை என்ற நிலையில், வியாதிகள், தொத்துநோய்கள் பரவும் ஆபத்து பெருகுகிறது."

இஸ்ரேலிய இராணுவத்தின் தந்திரோபாயங்கள் பற்றி கேட்கப்பட்டதற்கு மொகம்மது கூறினார்: "ஐ.நா.புறக்காவல் நிலையத்தை தாக்கி நான்கு ஐ.நா. பணியாளர்களை கொன்றமை வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியமாகும். இஸ்ரேலிய இராணுவம் புறக்காவல் நிலையத்தோடு காலை 9 மணிக்குத் தொடர்பு கொண்டது என்று நான் படித்தேன்; அப்படியானால் ஐ.நா. பணியாளர்கள் அங்கு இருப்பது அதற்குத் தெரியும். இதற்கு சற்று நேரத்திற்கு பின்னர் புறக்காவல் நிலையம் தாக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. இது அனைத்துமே இஸ்ரேலிய பயங்கரவாத தந்திரோபாயம்தான். செஞ்சிலுவை அமைப்பு வாகனங்கள் முந்தைய தாக்குதல்களில் இறந்திருந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தபோதும் வேண்டுமேன்றே தாக்குதல் நடத்தியதும் இத்தகைய உண்மையுடன் இணைந்து செல்கிறது."

பேர்லினில் உள்ள இளைய நண்பர்களுடன் ஜாரா அணியல் பங்கு பெற்றார். சில நாட்கள் முன்புதான் தெற்கு லெபனானில் குண்டுவீசப்பட்ட பகுதிகளில் இருந்து தான் எப்படித் தப்பி வந்ததாக ஜாரா கூறினார். இப்பெண்மணி தன்னுடைய குடும்பத்தினரை காண தெற்கு லெபனானுக்கு சென்றிருந்தார். அப்பொழுது போர்வெடித்தது. அவர் விளக்கினார்: "நான் நேரடியாக இப்பயங்கர குண்டுவீச்சு அனுபவத்தைக் கொண்டேன். குண்டு வீச்சு இடம்பெற்றபோது எங்களுடைய குடும்பங்கள் மற்ற குடும்பங்களுடன் ஒரு சிறிய கிராமத்தில் ஒன்றாகக் கூடியிருந்தன. என்னுடைய நண்பர்களும் எங்கள் குடும்பத்தின் அண்டை வீட்டினர் பலரும் இத்தாக்குதலில் பாதிப்படைந்தனர். ஒவ்வொருவருக்கும் கிராமத்தில் ஏற்கனவே இறந்துபட்ட அல்லது காயமுற்ற ஒருவரை நன்கு தெரியும்.

"குண்டுத் தாக்குதல்கள் தொடர்ந்த அளவில், என்னுடைய பெற்றோர்கள் நான் விரைவில் திரும்ப வேண்டும் என்று கவலைப்பட்டனர்; எனவே நான் ஒரு காரின்மூலம் சிரிய மலைப்பகுதிகளுக்கு பயணிக்க என்னுடைய கிராமத்தைவிட்டு புறப்பட்டேன். தப்பிக்க முயலும்போது கூட, நானும் பல தப்பியோடிக்கொண்டிருப்பவர்களும் பாதுகாப்பற்ற நிலையில்தான் இருந்தோம். சாலைகளும் இஸ்ரேலிய விமானப் படையினரால் சேதப்படுத்தப்பட்டிருந்தன; ஏராளமான பள்ளங்களை ஆங்காங்கே கண்டேன்."

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது என்று ஜாராவும் அவருடைய நண்பர்களும் உறுதியாக நம்புகின்றனர்; இத்தகைய தெற்கு லெபனானின் பேரழிவு சிரியா, ஈரானுக்கு எதிரான தாக்குதல் என்ற பரந்த திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும் இப்பகுதிகளில் உள்ள எண்ணெய் இருப்புக்கள் மீது முழுக் கட்டுப்பாட்டையும் கொள்ளுவதுதான் இலக்கு என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

பிராங்போர்ட்

பிராங்போர்ட்டில் 600ல் இருந்து 8000 ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரத்தின் மையப்பகுதியில் பதாகைகளை ஏந்தி லெபனிய, பாலஸ்தீனிய கொடிகளை அசைத்து அணிவகுத்துச் சென்றனர். Peace Network ஒருங்கிணைப்பினால் இந்த எதிர்ப்பிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது; பல போர் எதிர்ப்பு அமைப்புக்கள், அரசியல் அமைப்புக்கள் மற்றும் ஜேர்மனியில் உள்ள லெபனிய, பாலஸ்தீனிய சமூகங்களில் இருந்து பலர் உரையாற்றினர்.

இந்த எதிர்ப்பு செய்தி ஊடகத்தால் புறக்கணிக்கப்பட்டது; எந்த உள்ளூர் செய்தித்தாளிலோ தொலைக்காட்சியிலோ இது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. "கண்டுபிடிக்கவும்: பயங்கரவாதி" என்று ஜோர்ஜ் புஷ், கொண்டலீசா ரைஸ் மற்றும் எகுட் ஓல்மெர்ட்டின் பெயர்களை கொண்டிருந்த சுவொரொட்டிகள் ஏராளமாக ஒட்டப்பட்டு கவனத்தை ஈர்த்தன; இதைத்தவிர அணியில் முழக்கப்பட்ட கோஷங்களில் "போரை நிறுத்துக -- உடனடியாக; போர் பயங்கரவாதம், போர் ஒரு கொலைநிகழ்வு" என்றும் "போரை நிறுத்துக, உடனே சமாதானம் வேண்டும்" என்பவையும் இருந்தன. சுவரொட்டிகளில் குண்டு வீசப்பட்ட பகுதிகளில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களின் புகைப்படங்கள், மற்றும் இற்நதோர் எண்ணிக்கை ஆகியவை இருந்ததுடன் செய்தி ஊடகம் உண்மையான கொடூரத்தின் பரப்பை, சாதாரண மக்கள் லெபனானில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் தெரிவிக்காததற்காகவும், சாடப்பட்டது.

பிராங்போர்ட்டில் "ஐரோப்பாவும் அரேபிய உலகும்; நீங்கள் ஏன் மெளனமாக இருக்கிறீர்கள்?" என்ற வாசகத்தை கொண்ட பதாகைகளை ஏந்தி இப்ராகிம் என்பவர் பங்கு கொண்டார். WSWS இடம் அரசியல் வாதிகள் வாளாவிருப்பது பற்றித் தன்னுடைய கோபத்தை வெளியிட்டார். "என்ன நடக்கிறது என்பதை கண்டும், இவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்த மெளனத்தை உடைத்து நாம்தான் நம்முடைய குரலை உயர்த்த வேண்டும்". அவருடைய பதாகையில் இருந்த வாசகத்தை பற்றிக் கேட்டபோது, அவர் விடையிறுத்தார்: "ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு முற்றிலும் பாசங்குத்தனமாகும்; ஏனெனில் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் பூசலில் உள்ள இரு பக்கத்து நாடுகளையும் கேட்பதில்லை; ஒரு பக்கம் மட்டுமே சாய்கின்றனர். சொல்லப்போனால், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் விளையாட்டுக் கருவியாக போய்விட்டது; அது துரதிருஷ்டவசமாக ஜேர்மனிக்கும் பொருந்தும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved