World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Thousands demonstrate against war in Lebanon and Gaza

பிரான்ஸ்: ஆயிரக்கணக்கானவர்கள் லெபனான், காசாவிற்கு எதிரான போரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு

By Kumaran Rahul and Pierre Mabut
31 July 2006

Back to screen version

பாரிசில் சனிக்கிழமையன்று லெபனிய, பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் அழிவுகளுக்கு எதிராகக் கிட்டத்தட்ட 5,000 பேர் ஆர்ப்பரித்தனர்.

பிரெஞ்சுப் பாலஸ்தினிய ஒற்றுமைச் சங்கம் (The France Palestine Solidarity Association -AFPS), பாலஸ்தினிய மக்களின் எதிர்ப்பிற்கு ஆதரவு தரும் இயக்கம் (Movement in Support of the Resistance of the People of Palestine-MSRPP), பிரான்சில் உள்ள முஸ்லீம்களின் கூட்டுத் தொகுப்பு இன்னும் பல பிரெஞ்சு-லெபனிய அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரும்பாலும் மத்திய கிழக்கு பகுதிகளை தாயமாக கொண்டிருந்தோரால் பங்கு பெறப்பட்ட இந்த அணிவகுப்பிற்கு முன்னணியில் MRAP பதாகையான "லெபனான் காட்டும் எதிர்ப்பு நீடுழி வாழ்க" என்பது இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் Act Against the War என்னும் ஈராக்கிற்கு எதிரான போர் எதிர்ப்பு அமைப்பு, போருக்கு எதிரான அமெரிக்கர்கள் எதிர்ப்பு, MRAP எனப்படும் இன எதிர்ப்பு பிரெஞ்சு அமைப்பு, மற்றும் மக்களிடையே நட்புறவு வேண்டும் எனக் கூறும் அமைப்பு மற்றும் ஐக்கிய யூதர்கள், அரேபியர்கள் அமைப்பு ஆகியவை பங்கேற்றிருந்தன.

Ligue communiste revolutionnaire (LCR) மற்றும் Parti des trasvailleurs (PT) ஐச் சேர்ந்த பிரிவுகளும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கு பெற்றனர்.

1997-2002 வரை சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியினர் இடம் பெற்றிருந்தனர். அரேபிய எதிர்ப்பு இயக்கங்களின் வெறுப்பை சோசலிஸ்ட் கட்சித் தலைவர் ஈட்டியிருந்தார். இஸ்ரேலுக்கு 2002ல் Bir-Zeit பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தபோது, ஹெஸ்பொல்லாவை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை இட்ட அளவில் அவர் ஒரு கல்லால் அடிக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி ஆகியோரின் கோலிச அரசாங்கத்தின் அவநம்பிக்கை நிறைந்த பங்கு பற்றி எந்த பதாகைகளும் குறைகூறவில்லை. இந்த அரசாங்கம்தான், 2004ல் ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானம் 1599 நிறைவேற்றப்படுவதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைத்தது; அத்தீர்மானம் சிரியப் படைகள் லெபனானில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டதுடன், லெபனிய குடிப்படை --ஹெஸ்பொல்லா என்ற பொருள் தரும்-- ஆயுதங்களை களைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இத்தீர்மானம்தான் தற்போதைய அமெரிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு அரங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வினியோகித்த துண்டுப் பிரசுரம் ஐரோப்பிய, பிரெஞ்சு ஏகாதிபத்தியமும், ஐக்கிய நாடுகளும் பாலஸ்தீனிய மற்றும் லெபனிய மக்களுக்கு ஆதரவாக தலையிடும் விருப்பமும், திறனும் கொண்டுள்ளதாக சித்தரித்துக் காட்டியுள்ளது. அது கூறியதாவது: "சர்வதேச சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அறைகூவல் கணிசமானது. பிரான்சும், அதன் ஐரோப்பிய பங்காளிகளும் நிலைமைக்கு ஏற்ப தம்மை உயர்த்திக் கொண்டு ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஐ.நா.வின் கட்டமைப்பிற்குள் ஒரு சர்வதே மாநாடு கூட்டப்பட வேண்டும்...."

ஸ்ராலினிஸ்டுகளின் துண்டுப் பிரசுர அறிக்கையும் கூறியதாவது: "சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கும் அப்பகுதியை பாதுகாப்பாக செய்வதற்கும் ஐ.நா.வின் கீழ் ஒரு சர்வதேசப் படை தோற்றுவிக்கப்பட்டு பொறுப்பேற்கப்பட வேண்டும்." இது பிரெஞ்சு அரசாங்கத்தின் போக்கையே பிரதிபலிப்பதால் பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்ரேல் இவற்றின் நலன்களை கருத்திற்கொண்டு ஹெஸ்பொல்லா ஆயுதங்களை களையவேண்டும் என்பது பொருளாகும்.

உலக சோசலிச வலைத் தள ஆதாரவாளர்கள் "2006ம் ஆண்டு திருப்திப்படுத்துதல்: அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஐரோப்பா நிபந்தனையற்ற சரணடைகிறது" என்ற தலைப்பில் WSWS ஆசிரியர் குழுவின் அறிக்கையை ஆயிரக்கணக்கில் வினியோகித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் கணிசமான அக்கறையுடன் இது படிக்கப்பட்டது; உலகப் பின்னணியில் இப்போரை காட்டிய ஒரே துண்டுப் பிரசுரம் இதுதான்; ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கை முன்வைத்துள்ள பிரசுரமும் இது ஒன்றுதான்.

WSWS ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசினர். ஒருவர் குறிப்பிட்டார்; "இஸ்ரேல் நாடு என்பது அழிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் யூத மக்களுக்கு எதிராக நான் இல்லை." அமெரிக்காதான் இப்போருக்குப் பின்னணியில் உள்ளது என்றும் அப்பகுதி முழுவதையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர அது விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் கூறினார்: "எமது சகோதரர்கள் அங்கு மடிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம் எனவேதான் இப்போர்க் குற்றத்திற்கு எதிராக நாங்கள் ஆர்ப்பரிக்க வந்துள்ளோம்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved