World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military launch major offensive to retake LTTE territory

இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை மீட்பதற்காக பெரும் தாக்குதலை முன்னெடுத்துள்ளது

By K. Ratnayake
31 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை இராணுவம், 2002ல் தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்து முதற் தடவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை கைப்பற்றுவதற்காக தரைத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ள இந்த நடவடிக்கை, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை மேலும் பெருமளவில் அதிகரிப்பதாகும். கடந்த நவம்பரில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து வெடித்த இந்த பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் இதுவரை குறைந்தபட்சம் 900 உயிர்களைப் பலிகொண்டுள்ளது.

இராஜபக்ஷவின் அரசாங்கம் இதற்கான சாக்குப் போக்காக, ஜூலை 20 அன்று புலிகள் தமது பிராந்தியத்திற்குள் மாவிலாறில் அமைந்துள்ள மதகை மூடிவிடுவதற்கு எடுத்த தீர்மானத்தைப் பயன்படுத்திக்கொண்டது. இந்த மதகு மூடப்பட்டதால் கிழக்கு நகரான திருகோணமலைக்கு அருகில் உள்ள சேருனுவரவில் உள்ள ஆயிரக்கணக்கான நெல் விவசாயிகளுக்கு தண்ணீர் வெட்டப்பட்டுள்ளது. இந்த நகர்வை அரசாங்கம் கண்டனம் செய்த அதேவேளை, 2002ல் இருந்து வாக்குறுதியளிக்கப்பட்ட தண்ணீர் திட்டத்தை கட்டுவதற்கு அரசாங்கம் தவறியதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மாவிலாறை சூழ உள்ள விவசாயிகளின் சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புலிகள் வலியுறுத்தினர்.

புலிகளின் இந்தத் தீர்மானம், இராஜபக்ஷவின் அரசியல் பங்காளிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட சிங்களப் பேரினவாத அமைப்புக்களின் எதிர்ப்பு அலையை தூண்டிவிட்டுள்ளது. ஜே.வி.பி. தலைமையிலான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஜூலை 26 விடுத்த அறிக்கையில், "தண்ணீர் கால்வாயில் உள்ள மதகை இயக்குவதன் பேரில் புலி பயங்கரவாதிகளை அழிக்க அரசாங்கம் தமது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேதினம், ஜூலை 26, வெலிகந்தையில் இருந்து முன்னேறும் தரைப்படைக்கு ஆதரவாக மாவிலாறுக்கு அருகில் உள்ள புலிகளின் நிலைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை மேற்கொள்ள அரசாங்கம் கட்டளையிட்டது. அடுத்த நாள் திருகோணமலையில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கதிரவெளியில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றின் மீது யுத்த விமானங்கள் வீசிய குண்டுகளில் ஆறு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர்.

ஜூலை 28, இராணுவ நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இராணுவத்தின் மீது அழுத்தங்கள் குவிந்தன. ஜாதிக ஹெல உறுமய தலைமயிலான பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன மற்றும் அக்மீமன தயாரத்ன அடங்கிய ஒரு கும்பல், மதகின் சாவியை அபகரித்துக்கொண்டதோடு மாவிலாறை நோக்கி நடக்க முயற்சிப்பதாக பிரகடனம் செய்தனர். ஹெல உறுமயவின் ஆத்திரமூட்டலானது தாம் விரைவில் பிரதேசத்தை கைப்பற்றி மதகை திறப்பதாக பிரகடனம் செய்வதற்கு இராணுவத்திற்கு ஒரு மன்னிப்பை வழங்கியது.

சனிக்கிழமை, தொடர்ச்சியான விமானத் தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலரி தாக்குதல்களுக்கு மத்தியில், திருகோணமலைக்கு அருகில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியின் எல்லையில், கல்லாறு சந்தியில் உள்ள தமது முகாமிற்கு அருகில் ஆயிரக்கணக்கான துருப்புக்களை இராணுவம் அணிதிரட்டியது. பிரதேசத்திற்கு சென்ற இராணுவ அதிகாரிகளின் தலைவர் நந்த மல்லவராச்சி, கல்லாறு சந்தியில் இருந்து 4 கிலோமீட்டர்களில் அமைந்துள்ள மாவிலாறை உடனடியாக துருப்புக்கள் கைப்பற்றுவர் என அறிவித்தார்.

நேற்று நண்பகல் அளவில், படையினர் தமது இலக்கை நெருங்கியுள்ள போதிலும், கண்ணி வெடிகள் மற்றும் சூழ்ச்சிப் பொறிகளில் அகப்படாமல் இருக்க மெதுவாக முன்செல்வதாக ஒரு பேச்சாளர் கூறிக்கொண்டார்.

கொழும்பு அரசாங்கமானது அவநம்பிக்கையடைந்துள்ள விவசாயிகளுக்கு தண்ணீரை திறந்து விடுவது அவசியமானது என கூறுவதன் மூலம் தனது எதிர்த் தாக்குதலை நியாயப்படுத்தியது. பாதுகாப்பு பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல பிரகடனம் செய்ததாவது: "பொது ஜனங்களின் அடிப்படைத் தேவையான தண்ணீரை வழங்கும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது."

சேறுநுவர பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் அவல நிலை பற்றிய அரசாங்கத்தின் கவலை முற்றிலும் பாசாங்கானதாகும். இராஜபக்ஷ கடந்த நவம்பரில் வழங்கிய நீண்ட தேர்தல் வாக்குறுதிப் பட்டியலை நீட்டிய போதிலும், விவசாயத்திற்கு தேவையான பொருட்களின் விலைகளை குறைக்கவும் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும் தவறிவிட்டார். இந்த நிலைமை நாடு பூராவும் உள்ள விவசாயிகளை கசக்கில் பிழிந்ததோடு சிலரை தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியது.

அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் விதிகளின் கீழ் கோரப்பட்டுள்ளதற்கு மாறாக, புலிகளுடன் எந்தவொரு சமரசத்தையும் விலக்கிக்கொண்டதோடு பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்துள்ளது. இந்த விவகாரத்தை தீர்ப்பதற்காக புலிகளின் தலைவர்களையும் விவசாயிகளையும் சந்திப்பதற்காக இலங்கை கண்காணிப்புக் குழு மேற்கொண்ட முயற்சிகளையும் இராணுவம் ஆத்திரமூட்டும் விதத்தில் குழப்பியது. ஜூலை 27, திருகோணமலைக்கு நெருக்கமாக உள்ள முதூர் கிழக்கில் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போதும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

புலிகள் யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் நோர்வே தலைமையிலான கண்காணிப்புக் குழுவுக்கு, மூன்று நிபந்தனைகளை முன்வைத்தனர்: வாக்குறுதியளிக்கப்பட்ட தண்ணீர் திட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும்; உணவு வழங்கல், கட்டிடப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டுவருவதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்ள வேண்டும்; புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கும் இடையில் பயணிக்கும் பொது மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

புலிகளின் கோரிக்கையை கட்டுப்பாடின்றி நிராகரித்த பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல, "மனிதாபிமான" குறிக்கோள்களுக்கான நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என பிரகடனம் செய்தார். தண்ணீர் விநியோகத்தை வெட்டுவதற்கான புலிகளின் முடிவை எதிர்க்கும் அதேவேளை, புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழும் மக்கள் எதிர்கொண்டுள்ள சமூக நெருக்கடிகளை ஆழமடையச் செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான தனது சொந்தத் தடை உத்தரவை முன்னெடுப்பதில் அரசாங்கத்திற்கு மனசஞ்சலம் கிடையாது.

ஞாயிற்றுக் கிழமை, புலிகளுடனும் விவசாயிகளுடனும் காணிப்புக் குழுவின் தலைவர் உல்ஃவ் ஹென்ரிக்ஸன் உட்பட அலுவலர்களும் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருந்த போதே மீண்டும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹென்ரிக்ஸன் ராய்ட்டருக்குத் தெரிவிக்கையில்: "நாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததோடு அரசாங்கதிடம் விளக்கத்தை பெற்றுக்கொண்டதோடு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளவைக்க புலிகளுக்கும் உணர்த்த முயற்சித்தோம். அவர்கள் அதே இடத்தில் ஒரு குண்டை போட்டார்கள். அது சரியான சமிக்ஞை அல்ல," என்றார்.

இந்த குண்டுத் தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல. இராஜபக்ஷ அராசங்கம் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வம் கொள்வதற்கு மாறாக, புலிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு அதை சுரண்டிக்கொள்ளப் பார்க்கின்றது.

இராணுவத் தாக்குதல்கள் மாவிலாறை அண்டிய பிரதேசத்தை சூழ மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. ஞாயிற்றுக் கிழமை, மட்டக்களப்பில் இருந்து வட மேற்காக 24 கிலோமீட்டர்களில் உள்ள கரடியனாறில் அமைந்துள்ள புலிகளின் மாநாட்டு மண்டபத்தின் மீதும் விமானப் படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. அரசாங்கத்தின்படி, இந்தத் தாக்குதலில் 40 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு புலிகளின் உயர்மட்ட பிராந்திய தலைவர்கள் உட்பட ஏனையவர்கள் காயமடைந்துள்ளனர்.

புலிகளின் திருகோணமலை தலைவர் எஸ். எழிலன், கண்காணிப்புக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் "புலிகளுக்கு எதிரான யுதத்தை பிரகடனம் செய்வதற்கு சமமானதாகும்" என சீற்றத்துடன் பிரகடனம் செய்துள்ளார். அவர் "அடிப்படையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை மேலும் கடைப்பிடிக்கப்படவில்லை என பகிரங்கமாக பிகடனம் செய்யுமாறு" கண்காணிப்புக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு "இலங்கைத் துருப்புக்கள் எமது மாவிலாறு பிரதேசத்திற்குள் நுழைந்தால் புலிகள் தீவிரமாக பதிலடி கொடுப்பார்கள். அது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்," எனவும் எச்சரித்துள்ளார்.

மீண்டும் நாட்டை யுத்தத்திற்குள் இழுத்துச் செல்வதற்கான முழு அரசியல் பொறுப்பும் இராஜபக்ஷவின் அரசாங்கத்தையே சேரும். கடந்த நவம்பரில் இராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, புலிகள் மீது தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் தாக்குதல்களை நடத்துவதற்காக, இராணுவம் கருணா குழு போன்ற புலிகளுக்கு எதிரான ஆயுதக் குழுக்களுடன் ஒத்துழைத்தது. சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதற்கு புத்துயிரளிப்பதற்கான முயற்சிகள், ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமயவின் அழுத்தத்தின் கீழ் அரசாங்கம் புலிகள் மீது புதிய நிபந்தனைகளை விதித்த நிலையில் சீர்கெட்டுப் போனது.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தில் தலையிடவில்லை என அராசங்கமும் இராணுவமும் மறுக்கின்ற அதேவேளை, புலிகளுக்கு எதிரான துணைப்படைகளுடனான நெருக்கமான ஒத்துழைப்பு பற்றிய ஆதராங்கள் தொடர்ந்தும் குவிந்து வருகின்றன. சனிக்கிழமை லக்பிம பத்திரிகை வெளியிட்ட ஒரு முதல் கட்டுரையில், மாவிலாறு மதகை திறப்பதற்கான சண்டையிலும் மற்றும் பிரதேசத்தில் புலிகளின் முகாங்கள் மீதான தாக்குதல்களிலும் கருணா குழுவும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புலிகளை "பயங்கரவாத அமைப்பாக" தடை செய்யுமாறு அண்மைய மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கனடாவையும் நெருக்கிக்கொண்டிருந்த புஷ் நிர்வாகம், புலிகள் சம்பந்தமாக மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஊக்கமூட்டியது. வாஷிங்டனின் தலைமையை பின்பற்றும் பெரும் வல்லரசுகள், பக்க சார்பாக புலிகளை கண்டனம் செய்யும் அதேவேளை, கொழும்பு அரசாங்கம் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக அதை பாராட்டுகின்றன. யுத்தநிறுத்த உடன்படிக்கை தற்போது வெளிப்படையாக அரசாங்கத்தால் மீறப்பட்டுள்ளது பற்றி எந்தவொரு சர்வதேச கண்டனமும் கிடையாது.

அதேசமயம் ஒட்டு மொத்த யுத்தத்திற்கான அரசாங்கத்தின் தயாரிப்புகள் இடைநிறுத்தமின்றி தொடர்கின்றன. அண்மைய மாதங்களில், அரசாங்கம் இராணுவத் தளபாடங்களை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து மட்டுமன்றி சீனாவிடமிருந்தும் வாங்குவதற்கு முயற்சித்தது. கடந்த வியாழக் கிழமை, மேஜர் ஜெனல்களின் இராணுவ சேவையை அவர்களின் ஓய்வின் பின்னரும் விரிவுபடுத்துவதற்கான தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தலை இராஜபக்ஷ வெளியிட்டார்.

பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை அடைவதற்கான தேவை பற்றி உதட்டளவில் பேசிய போதிலும், புலிகளை இராணுவ ரீதியில் நசுக்கும் அவநம்பிக்கையான முயற்சியில் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளுவதே அரசாங்கத்தின் இலக்கு என்பது இந்தப் புதிய தாக்குதல்களின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Top of page