:
இலங்கை
Sri Lankan military personnel questioned
over murder of journalist
பத்திரிகையாளர் கொலை சம்பந்தமாக இலங்கை இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை
By W. A. Sunil
12 July 2006
Back to screen
version
சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் சில்வாவின் கொலை சம்பந்தமாக கடந்த
வாரம் இலங்கை இராணுவத்தின் புலானாய்வுத்துறை அதிகாரி ஒருவரையும் சிப்பாய் ஒருவரையும் தடுத்துவைத்து விசாரணை
செய்வதானது, தீவை மீண்டும் யுத்தத்திற்குள் இழுத்துத் தள்ளுவதற்கான ஆயுத சக்திகளின் சதிகள் பற்றி மேலும் கேள்விகளை
எழுப்பியுள்ளது.
23 வயதான சில்வா, ஜூலை 1 படுகொலை செய்யப்பட்டார். பொலிஸ் தகவல்களின்
படி அவரைக் கொலை செய்தவர்கள் 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கியால் ஒரு முறை அவரது காதிலும் மூன்று முறை தலையிலும்
சுட்டுக் கொன்றுள்ளதோடு அவரது குறிப்புப் புத்தகத்தையும் செல்லிடத் தொலைபேசியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
அவரது சடலம், அவரது வீட்டில் இருந்து 4 கிலோமீட்டர்கள் தூரத்தில் ஜனத்தொகை நிறைந்த பிரதேசமான தெகிவளை
ஜயவர்தன வீதியில் இருந்து அடுத்தநாள் கண்டுபிடிக்கப்பட்டது.
பல ஊடக அமைப்புகளும் இந்தப் படுகொலையின் சந்தேக நிலை பற்றி கேள்விகளை எழுப்பிய
பின்னர், தெகிவளை பொலிஸார் இராணுவப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவரை கைது செய்து விசாரணை செய்த
பின்னர் விடுதலை செய்துள்ளனர். சந்தேக நபரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை அவரை தடுத்து வைத்திருப்பதே
இலங்கையில் உள்ள வழமையான விதிமுறையாகும். பொலிஸார் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை.
சில்வா நிச்சயமாக இராணுவப் புலனாய்வுத் துறை, அதே போல் சிங்களத் தீவிரவாத கட்சிகளான
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினதும் கோபத்திற்கு ஆளாகியிருந்தார். சத்தின
பத்திரிகையின் பாதுகாப்புத்துறை செய்தியாளர் என்ற முறையில், மோசடி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான
தொடர்பு பற்றி புலனாய்வுத் துறை அதிகாரிகளை விமர்சித்து, அட்மிரால் என்ற புனைப் பெயரில் கடந்த ஆண்டு அவர்
பல கட்டுரைகளை எழுதியிருந்தார். ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமயவினதும் பண மோசடி மற்றும் உட் பூசல்கள்
பற்றியும் அவர் கட்டுரைகளை எழுதியிருந்தார்.
இராணுவ புலனாய்வுத்துறை, அதேபோல் சிங்கள மற்றும் தமிழ் அரசியல் வாதிகள் மற்றும்
விடுதலைப் புலி காரியாளர்களுடனும் கூட சில்வாவுக்கு தொடர்புகள் இருந்ததாக சத்தின பத்திரிகையின் துணை
ஆசிரியிர் ஸ்ரீலால் பிரியாந்த உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். "இராணுவ புலனாய்வுத்
துறையின் பண மோசடி பற்றி எழுதிய பின்னர் இராணுவ அதிகாரிகளால் கடந்த ஆண்டு அவர் கடத்திச் செல்லப்பட்டு
சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக" அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் அவ்வாறான கட்டுரைகளை எழுதவேண்டாம் என அவரை கடத்திச் சென்ற நபர்கள்
அவருக்கு அச்சுறுத்தியிருந்ததாக பிரியந்த தெரிவித்தார். பழிவாங்கல் பற்றிய பீதியின் காரணமாக அவர் அது பற்றி
பொலிஸில் முறைப்பாடு செய்யாததோடு அவரது பிரசித்திபெற்ற புனைப் பெயரில் புலனாய்வுத்துறை மோசடிகள் பற்றி
மேலும் எதையும் எழுதவில்லை. இதற்கு முன்னர் அவர் சிங்கள நாளிதழான லக்பிம மற்றும் தனியார்
தொலைக்காட்சி சேவையான ரி.என்.எல் சேவையிலும் சேவையாற்றினார். அண்மையில் அவர் மீள்குடியேற்ற மற்றும்
புனர்வாழ்வு அமைச்சின் ஊடகப் பிரிவில் இணைந்திருந்தார்.
ஜூலை 1 அன்று இரவு 9 மணியளவில் தனது மகனுக்கு தொலை பேசி அழைப்பு ஒன்று
வந்ததாக சில்வாவின் தாயார் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார். தான் "குமார சேர்"
உடன் பேசியதாகவும் அன்று இரவு தனக்கு ஒரு பெரிய வேலை இருப்பதாகவும் அவர் தாயாருக்கு தெரிவித்திருந்தார்.
சில நிமிடங்களின் பின்னர் வீட்டை விட்டு வெளியேறி அவர் மீண்டும் திரும்பவில்லை. சில்வாவின் தாய் கூறியதன்படி, "குமார
சேர்" இராணுவப் புலனாய்வுத் துறையின் அதிகாரியாகும். சில்வா தனது நண்பருடன் செல்வதற்காக தயாராகிய
போதிலும், தனியாக வருமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் படுகொலையில் இராணுவத்தின் தொடர்பு பற்றி ஜூலை 8 அன்று
பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இளைஞர்கள் ஐவரை அவிஸ்ஸாவெல்லையில் கொலைசெய்தவர்களின்
பெயர்களை சில்வா அறிந்திருந்ததாலேயே அவர் கொலை செய்யப்பட்டதாக, அவசரகால சட்டத்தை நீடிக்கும்
விவாதத்தின்போது உரையாற்றிய புலிகளுக்குச் சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு) வி.
இராதாகிருஷ்ணனும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ரங்க பண்டாரவும் இதே குற்றச்சாட்டுக்களை விடுத்தபோதிலும்
விபரங்கள் அடங்கிய தகவலை முன்வைக்கவில்லை. கொலையில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் இராணுவ
அதிகாரியை கைது செய்வதற்கு கட்டளையிடாதது ஏன் என ரங்க பண்டார கேள்வி எழுப்பினார்.
ஏப்பிரல் 25 அன்று இராணுவ தலைமயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்
தாக்குதலின் பின்னர் ஆயுதப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் நடந்த தினங்களிலேயே தமிழர்கள்
என சந்தேகிக்கப்படும் இந்த ஐந்து இளைஞர்களும் காணாமல் போயுள்ளனர். பிரதானமாக இராணுவ அதிகாரிகள் உட்பட
11 பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா
கடுமையாகக் காயமடைந்தார். இதன் பின்னர் ஐந்து இளைஞர்களதும் தலைகளற்ற உடல்கள் அவிஸ்ஸாவெல்லையில்
கிடைத்தன. இந்த சம்பவம் பற்றிய ஆரம்ப செய்திகளின் பின்னர், அது பற்றிய பொலிஸ் விசாரணைகள் எதுவும்
வெளியிடப்படவில்லை.
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசாங்கம் இன்னமும் பதிலளிக்காத
போதிலும், அது சில்வாவின் கொலைக்கான குற்றத்தை புலிகள் மீது சுமத்த முயற்சிக்கின்றது. "அவர் புலிகளுக்கு எதிராக
கடுமையாக எழுதியதோடு அவர்களின் வன்முறை நடவடிக்கைகளை கண்டனம் செய்ததாக" தேசியப் பாதுகாப்பு
பேச்சாளரின் ஊடக நிலையத்தை மேற்கோள் காட்டி அரசாங்கத்தின் டெயிலி நியூஸ் பத்திரிகை செய்தி
வெளியிட்டிருந்தது. சில்வா இராணுவத்திற்கு முக்கியமான தகவல்களை வழங்கிவந்ததாகவும் அந்த கட்டுரையில்
குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், அந்த செய்தியின் பின்னர் அரசாங்கமும் அரசாங்கத்தற்கு சொந்தமான
ஊடகங்களும் இந்தப் படுகொலை பற்றி மெளனம் காக்கின்றன.
ஜூலை 4, இலங்கை தொழில் ஊடகவியலாளர் சங்கம்
(SLWJA) விடுத்த
அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "நாடு மீண்டும் யுத்தத்தின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில்
லக்மாலின் கொலையானது, பத்திரிகையாளர்களை தமது இலக்காகக் கொண்டு தமது பலவித குறிக்கோள்களை அடைவதன்
பேரில் செயற்படும் பல்வேறுபட்ட குழுக்களால் பத்திரிகையாளர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்துள்ளது."
கொலைகாரர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்குமாறு கோரி, இலங்கை தொழில்
ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை தமிழ் ஊடக கூட்டமைப்பு உட்பட பல ஊடக
அமைப்புகள் ஜூலை 6 கொழும்பிலும் மற்றும் ஜூலை 7 கண்டியிலும் இரு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தன.
கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் விடுதலையானது
பற்றி சுதந்திர ஊடக இயக்கம் பின்னர் கவலை தெரிவித்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரரான
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய இராஜபக்ஷவை சந்திப்பதற்காக சுதந்திர ஊடக இயக்கம்
முயற்சித்திருந்த போதிலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. சண்டே லீடர் பத்திரிகையின்படி,
சில்வாவின் செல்லிடத் தொலைபேசியில் அழைப்புக்களை பரிசோதித்ததன் மூலம் பொலிஸார் இரு சந்தேக நபர்களின்
பெயர்களை கண்டுபிடித்திருந்தனர்.
பத்திரிகையாளர்களின் சர்வதேச சம்மேளனத்தின் தலைவர் கிறிஸ்டோபர் வொரன் இந்தக்
கொலையை கண்டனம் செய்தார்: "செய்தி எழுதும் போது பக்கச் சார்பின்மையை கடைபிடிக்காத சில்வாவின்
கட்டுரைகளின் காரணமாக, இது விசேடமாக கவலைக்கிடமான, இரக்கமற்ற மற்றும் அர்த்தமற்ற கொலையாகும்.
அத்துடன் அடிப்படை சுதந்திரம் மற்றும் பாதுகாப்புத் தரம் மற்றும் இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பலவீனம்
அடைந்திருப்பதை இது கோடிட்டுக் காட்டுகிறது."
சில்வாவின் கொலை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல. கடந்த 16 மாதங்களுக்குள்
ஆறு ஊடகவியலாளர்களும் ஏனைய ஊடகத்துறை பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஒவ்வொரு
சம்பவங்களிலும் இராணுவமும் அதோடு இணைந்து செயலாற்றும் துணை இராணுவப் படைகளும் இந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக
சந்தேகிப்பதற்கு பலம்வாய்ந்த அடிப்படைகள் உள்ளன.
இவற்றில் தர்மரட்னம் சிவராமின் கொலை, மிகவும் பிரதானமானதாகும். கடந்த ஆண்டு
ஏப்பிரல் 28ம் திகதி இரவு கொழும்பு நகரில் வைத்து அவர் கடத்தச் செல்லப்பட்டார். அவரது சடலம், சில மணிநேரத்தின்
பின்னர், பாராளுமன்றக் கட்டிடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர்களுக்குள், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கண்டெடுக்கப்பட்டது.
புலிகளுக்கு சார்பான தமிழ் நெட் இணையத்தின் ஆசிரியர் குழு உறுப்பினரான சிவராமின் கொலையை,
பாதுகாப்பு படைகள் அல்லது சிங்களத் தீவரவாத குழுக்களால் செய்யப்பட்டுள்ளதாக நம்புவதற்கு அனைத்து காரணங்களும்
உள்ளன. அவர் "தமிழ் புலி" என்ற கண்டனத்திற்குள்ளாகி இருந்ததோடு, ஜாதிக ஹெல உறுமய, "எதிர்காலத்தில்
நாட்டிற்கு எதிராக செயற்படும் அனைவருக்குமான எச்சரிக்கை" என இந்தக் கொலையை நியாயப்படுத்தியது.
இந்தாண்டு மே மாதம், யாழ்ப்பாணத்தில் வெளிவரும் நாளிதழான உதயன் பத்திரிகையின்
அலுவலகத்திற்குள் பாய்ந்து விழுந்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்த இரு ஊழியர்களை படுகொலை செய்தனர். அரசாங்கம்
உடனடியாக இந்தப் படுகொலைக்கு புலிகளை குற்றஞ்சாட்டிய போதிலும், பத்திரிகையின் உரிமையாளரும் ஊழியர்களும்,
இராணுவத்தின் ஒத்துழைப்புடன் துணை இராணுவக் குழுவாலேயே இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினர்.
இந்தப் பத்திரிகை, தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை விதிமுறைகள் பற்றி நாட்டின் ஆளும் கூட்டணியின் பங்காளியான
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியையும் இராணுவத்தையும் விமர்சித்திருந்தது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாகவும் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
அண்மைய சம்பவமான சில்வாவின் கொலை சம்பந்தமாகவும் ஆழமான விசாரணைகள் எதுவும்
மேற்கொள்ளப்படவில்லை. கொலைசெய்யப்படுவதற்கு சற்று முன்னதாக சில்வாவுடன் இருந்த இராணுவ புலனாய்வுத்துறை
அதிகாரிகளின் ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு பொலிஸார் தீர்மானித்திருப்பதாக ஜூலை 10 அன்று வெளியான லக்பிம
பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அடுத்து வரும் சில நாட்களுக்குள் இந்த சோதனை நடத்தப்படும் என அந்த
செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி அவதானத்துடன் இருந்தும், ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன எனக் குறிப்பிட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. "பல கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக விசாரணைக் குழு செயலிழந்துள்ளதாக" பத்திரிகை
சுட்டிக்காட்டியிருந்தது. புலிகள் இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என
பொலிஸ் தெரிவித்துள்ளது.
சில்வாவின் கொலையில் இராணுவப் புலணாய்வுத்துறை சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடயம்
புதுமையானது அல்ல. நாட்டின் நீண்டகால யுத்தத்தின் போது, புலனாய்வுத்துறை நேரடியாகவோ அல்லது தமிழ் துணைப்படைக்
குழுக்களின் ஒத்துழைப்புடனோ ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள், படுகொலைகள் மற்றும் வேறு மோசமான நடவடிக்கைகளிலும்
ஈடுபட்டுள்ளது. அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாக பொலிசாரோ அல்லது அரசாங்கமோ ஆழமான விசாரணைகளை
முன்னெடுக்காத நிலைமையின் கீழ், அவர்களால் தண்டனையில் இருந்து விலகி செயற்படக்கூடியதாக உள்ளது. |