World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Hindu supremacists, media seize on Mumbai atrocity to push India's government further right இந்து மேலாதிக்கவாதிகள், செய்தி ஊடகங்கள் மும்பை கொடூரத்தை பயன்படுத்தி இந்திய அரசாங்கத்தை மேலும் வலது புறத்திற்கு தள்ளுகின்றன By Keith Jones செவ்வாய்க் கிழமை மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத கொடூரம் பற்றிய விசாரணையுடன் நெருக்கமாக உள்ள அதிகாரிகள், இந்தியாவின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட, மற்றும் நிதிய மையமான மும்பையில் ஒருங்கிணைந்த முறையில் ஏழு புறநகர் பயணிகள் இரயில் வண்டிகளில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தது யார் என்பது பற்றிய "உண்மை முக்கியத்துவம் வாய்ந்த சிலவற்றை" விரைவில் பெற்றிடுவோம் என தெரிவித்துள்ளனர். மிக அதிகமான உயிரிழப்புக்களை கொடுக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்த குண்டுவீச்சுக்களினால், இறப்பு எண்ணிக்கை இப்பொழுது 200 ஆக உள்ளது; அநேகமாக இது உயரக்கூடும். 400க்கும் மேற்பட்ட மக்கள், அவற்றில் பலரும் படுகாயங்களுடன் இன்னும் மருத்துவ மனைகளில் உள்ளனர். தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குள்ளேயே, இந்திய அதிகாரிகள் இதற்கு காரணமாக இருந்தது, முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட, சர்ச்சைக்குட்பட்ட பகுதியான காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியில் செயலூக்கமாக இருக்கும் இஸ்லாமிய, பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா (LeT) ஆல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தாங்கள் பெரிதும் சந்தேகப்படுவதாக கூறினர். இந்திய போலீஸ் மற்றும் உளவுத்துறை ஆதாரங்கள், LeT இத்தாக்குதலில் முக்கிய பங்கு கொண்டிருந்ததை தங்கள் விசாரணை சுட்டிக்காட்டியதாக கூறுகின்றனர்; ஆனால் LeT வினையாளர்கள் (SIMI) இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்க போராளிகளால் உதவி செய்யப்பட்டனர் என்று தாங்கள் நம்புவதாக மேலும் குறிப்பிட்டனர். இந்தியாவை தளமாக கொண்ட முஸ்லீம் வகுப்புவாத அமைப்பான SIMI, 1992ம் ஆண்டு அயோத்தியில் இந்து மேலாதிக்கவாதிகளால் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த வகுப்புவாத கலவரங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. செவ்வாய் கிழமையில் இருந்து மும்பையிலும் மற்ற இடங்களிலும் நிகழ்த்திய சோதனைகளில் 300 பேருக்கும் மேலானவர்கள் --பெரும்பாலானவர்கள் SIMI செயற்பாட்டாளர்கள்-- தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. LeT, SIMI இரண்டின் பிரதிநிதிகளும் அவர்களுடைய அமைப்பிற்கும் செவ்வாய் கிழமை குண்டுவீச்சுக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளதோடு மட்டுமில்லாமல், தாக்குதலையும் பெரும் கொடூரச் செயல் என்று கண்டித்தும் உள்ளனர். வியாழக்கிழமை தில்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முன்னாள் SIMI தலைவர் ஷாஹிட் பதர் பலாஹி, "அரசாங்கம், செய்தி ஊடகம்" மற்றும் இந்து மேலாதிக்கவாத "RSS பஜ்ரங் தளம்" ஆகியவை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்காக தங்கள் அமைப்பான SIMI ஐ வேண்டுமென்றே இழிவுபடுத்த முற்பட்டுள்ளதாகவும்" குற்றம் சாட்டியுள்ளார்.அரசாங்கம், போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தாக்குதலை பற்றி ஒருங்கிணைப்பும், பயன்படுத்தப்பட்டுள்ள வெடிமருந்துகள் வகையும் --அநேகமாக உயர்தர பிளாஸ்டிக் வெடிமருந்துகளாக இருக்கக் கூடும்-- மிக நேர்த்தியான உயரளவுத் தன்மை தாக்குதல் என்றும் இதுகாறும் முந்தைய LeT தாக்குதலில் காணப்படாத வகையில் முன்னேற்றத்தை கொண்டுள்ளது என்றும் கூறுகின்றனர். பல அதிகாரிகளும் இத்தகைய தாக்குதல், தயாரிப்பு நிலையில் இருந்ததாக கூறும் உளவுத்துறை தகவல் பற்றி பெரிதும் மாறுபட்ட குறிப்புக்களை கொடுத்துள்ளனர். மும்பை என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகராகும். இம்மாநில துணை முதல் மந்திரியான ஆர்.ஆர்.பாடில் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் ஒரு மிகப் பெரிய உளவுத்துறை தோல்வி நிகழ்ந்திருப்பதாக கூறினார்: "மாநில உளவுத்துறை அல்லது உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புக் குழு என்று மட்டும் தோற்றுவிடவில்லை. மையத்தில் (தில்லியில்) உள்ள உளவுத்துறைக்கு கூட குண்டுவீச்சுக்கள் பற்றி சிறிதும் முன்கூட்டி தெரிந்திருக்கவில்லை." ஆயினும்கூட மகாராஷ்டிர மாநில போலீஸ் தலைவரான பி.எஸ்.பாஸ்ரிசா மும்பைதான் இலக்காக இருக்கும் என்று "சில மாதங்களாகவே" அறிந்திருந்ததாக கூறியுள்ளார். இன்னும் கூடுதலான வகையில் அரசாங்க அடக்குமுறை அதிகாரங்கள் பெருக்கப்படுவதை ஏற்றே தீர வேண்டும் என்று மக்களை பீதியில் ஆழ்த்தும் நோக்கத்தில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள், இந்திய உளவுத்துறை அமைப்புக்களின் பிரிவுகளுள் ஒன்றிற்கான தூண்டிவிடும் முகவர்களால் அல்லது பாதுகாப்புப் படைக்குள்ளே உள்ள கூறுபாடுகளால், செவ்வாய் அன்று நிகழ்ந்த கொடூரம் எளிதாக நிறைவேறும்படி செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையும் தள்ளுவதற்கு இல்லை. மும்பை குண்டுவெடிப்புக்கள் முஸ்லிம்-எதிர்ப்பு வன்முறையை அதிகப்படுத்த விரும்புவதுடன், இந்திய - பாகிஸ்தானிய சமாதான வழிவகையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், காங்கிரஸ் தலைமையில் உள்ள மகாராஷ்டிர, மத்திய அரசாங்கங்களை சீர்குலைக்கவும் வேண்டும் என்ற விருப்பம் உடைய இந்து மேலாதிக்கவாதிகளுடைய செயலாகவும் இருக்கலாம். புதன் கிழமை நாட்டு மக்களுக்கு தொலைக் காட்சி மூலம் நிகழ்த்திய உரை ஒன்றில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங், பயங்கரவாதம் முறியடிக்கப்படும் என்றும், "ஒன்றுபட்ட", "ஒருங்கிணைக்கப்பட்டுள்ள" இந்தியாவின் வலுவான பொருளாதார நிலைப்பாட்டின் அடையாளமாக மும்பை உள்ளது என்றும் கூறினார்; மக்கள் "வதந்திகளினால் தூண்டுதல் பெற்றுவிடக்கூடாது" என்று அவர் கூறினார் -- இந்தியாவின் அதிகாரபூர்வ எதிர்க் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் அதன் இந்து மேலாதிக்கவாத நட்புக்கட்சிகள் முஸ்லிம்-எதிர்ப்பு பேரினவாதத்தை தூண்டுவதற்கு மும்பை கொடுமையை பயன்படுத்தும் முயற்சிகளை பற்றி இது ஒரு மறைமுக குறிப்பு ஆகும். செவ்வாய் கிழமை கொடூரத்திற்கு எந்தக் குழுவும் பொறுப்பு என்ற குற்றச் சாட்டை தன்னுடைய உரையில் சிங் கூறவில்லை; இந்திய மாநிலமான ஜம்மு, கஷ்மீரில் எழுச்சிக்கு முற்றிலும் அல்லது பெரும்பாலும் இந்திய மாநிலமான ஜம்மு, கஷ்மீரில் எழுச்சிக்கு முற்றிலும் அல்லது பெரும்பாலும் காரணம் என்று கருதும் பாகிஸ்தானை பற்றியும் இந்திய அரசியல் ஸ்தாபனம் எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை. ஆயினும், இதற்குச் சில மணி நேரங்கள் முன்பு, இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் பாகிஸ்தானுக்கு எதிரான வனப்புரைக் கருத்தை வெளியிட்டிருந்தார்; இந்திய பாக்கிஸ்தானிய சமாதானப் பேச்சு வார்த்தைகள் குறைவான முன்னேற்றத்தைத்தான் கொண்டுள்ளது என்று குறைகூறிய பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரியான குர்ஷித் கசூரி, "தெற்கு ஆசியாவில் பயங்கரவாதத்தை கையாள்வதற்கு சிறந்த வழிவகை" காஷ்மீர் பிரச்சினை உட்பட பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதாகும் என அவர் உறுதிபடுத்திக் கூறினார். மும்பை மீதான தாக்குதலை பாகிஸ்தான் கண்டிக்கிறது என்று கசூரி மீண்டும் வலியுறுத்திக் கூறினாலும், இந்திய வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் நவ்டேஜ் சர்னா பயங்கரவாதத்திற்கு வால்பிடிப்பதாகவும், ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் இதை ஒரு கருவியாக பயன்படுத்த விரும்புவதாகவும் அவர்மீது குற்றம் சாட்டினார். "எல்லை கடந்து வரும் கொள்ளை நோயான பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால்தான் பாக்கிஸ்தான் ஒத்துழைக்க முன்வரும் என்பது போன்ற தோற்றத்தைத்தான்" கசூரியின் கருத்துக்கள் கொடுக்கின்றன என்று சர்னா கூறினார். இதன் பின் அவர் "தன்னுடைய நிலப்பகுதியில் பயங்கரவாதத்தின் உள்கட்டுமானத்தை தகர்ப்பதற்கு" இன்னும் அதிகமான செயற்பாடுகளில் பாக்கிஸ்தான் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார். BJP தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மே 2004 பொதுத் தேர்தல்களில் அதிகாரத்தில் இருந்து வீழ்ச்சியடைந்ததில் இருந்து சிதறியுள்ள இந்து மேலாதிக்கவாத வலதுகள், மும்பை பெரும் சோகத்தை அரசியல் ரீதியாய் தீமை பயக்கும் தமது செயற்பட்டியலை முன்னேற்றுவதற்குத்தான் பயன்படுத்திக்கொள்ள விழைகின்றன. டிசம்பர் 2001 பயங்கரவாதத் தாக்குதல் இந்திய பாராளுமன்றத்தின்மீது நிகழ்ந்ததை அடுத்து --இந்தச் செயலும் LeT தான் நடத்தியிருக்கும் எனக் கூறப்பட்டது-- கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டம் (POTA) இயற்றப்பட்டது; இதையொட்டி இந்தியாவின் இராணுவம் போர்க்கால அடிப்படை எச்சரிக்கை உணர்வில் பாகிஸ்தானை மிரட்டவும் அச்சுறுத்தவும் ஓராண்டு காலத்திற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டது.புதனன்று BJP தலைமை காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம், "முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினர், நக்சலைட்டுக்கள் (மாவோயிச கிளர்ச்சியாளர்கள்) போன்றவர்களை திருப்திப்படுத்தி வாக்குகள் பெறுவதற்காக பயங்கரவாதத்தை தடுப்பதில் தோல்வி அடைந்துள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. "ஐக்கிய முற்போக்கு கூட்டணி பயங்கரவாத உள்கட்டுமானம் பல்கிப்பெருகி, அதுதாமே ஊக்கம்பெற்று மற்றும் நாட்டில் பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.... UPA அரசாங்கம் வாக்குகள் முக்கியமா இந்தியா முக்கியமா என்பது பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். ஒன்று, அது ஒழுங்காக ஆட்சி நடத்த வேண்டும், அல்லது பதவியில் இருந்து வெளியேற வேண்டும்." என்று BJP அறிவித்தது. முஸ்லீம் சமூகம், தலித்துக்கள் (முன்பு தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்டவர்கள்), நிலத்தை மீட்பதற்கு போராடும் விவசாயிகள், பழங்குடியினர் ஆகியோரை அச்சுறுத்துவதற்குத்தான் பொடா சட்டம் பயன்படுத்தப்பட்டது என்று மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகள் கூட எழுப்பிய பல புகார்களுக்கு விடையிறுக்கும் வகையில் (இதன் கடுமையான விதிகள் சில தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளபோதிலும்.) செப்டம்பர் 2004ல் இவ்வரசாங்கத்தால் நீக்கப்பட்டுவிட்ட இப்பொடா சட்டம் மீட்கப்பட வேண்டும் என்று UPA அரசாங்கத்தை BJP கோரியுள்ளது. இந்த வார இறுதியில் இரண்டு நாட்கள் "பயங்கரவாத-எதிர்ப்பு" பிரச்சாரத்தை நடத்தப் போவதாகவும், அப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரியான நரேந்திர மோடி மும்பையில் சுற்றுப் பயணம் செய்வார் என்றும் BJP அறிவித்துள்ளது. மும்பைக்கு மோடியை அனுப்புவது என்பது மிக வெளிப்படையான, இகழ்வுமுறையிலான ஆத்திரமூட்டலாகும். இவர்தான் 2,000 பேருக்கும் மேல் படுகொலையுண்டமை மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்து நின்றமை ஆகியவற்றிற்கு காரணமான 2002 குஜராத் முஸ்லிம் எதிர்ப்பு நிகழ்வுகளைத் தூண்டிவிட்டவர் என்று கருதப்படுபவர் ஆவார். BJP யின் நட்பு அமைப்பான, மகாராஷ்டிரத்தை தளமாகக் கொண்டுள்ள சிவசேனை, மாநில அரசாங்கத்திற்கு பொறுப்புக் கொண்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணியை சீர்குலைக்கும் வகையில் இப்பிரச்சாரத்தை கொண்டுள்ளது. "இந்த அரசாங்கம் மகாராஷ்டிர மக்களை பாதுகாக்கும் திறனற்றது; ஏனெனில் இது அரசியல் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் வகையைத்தான் கொண்டுள்ளது; எனவே இது பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடியாது" என்று சிவசேனைத் தலைவர் பால்தக்கரே வியாழனன்று கட்சி பத்திரிகையில் அறிவித்தார்.இப்பொழுது சிவ சேனையின் மற்றொரு முக்கிய இலக்கு, வேலை நாடி மும்பையில், குவிந்துள்ள வறிய வங்காளதேச தொழிலாளர்கள் ஆவர். புதன் கிழமையன்று சிவசேனை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் கூடி கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் வசித்துவரும் மில்லியன் கணக்கான பங்களாதேஷ் குடிமக்களை நாடுகடத்திவிட வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர். இந்து வலதின் கருத்துக்களை பெருநிறுவன செய்தி ஊடகம் எதிரொலிக்கிறது இந்து மேலாதிக்கவாதிகளுடைய முஸ்லிம்-எதிர்ப்பு தோய்ந்த, எரியூட்டும் வனப்புரையை பயன்படுத்தாவிட்டாலும், பெருநிறுவன செய்தி ஊடகத்தின் முக்கிய பிரிவுகள் அதன் கோரிக்கைகளான அரசாங்கத்தின் அடக்குமுறை அதிகாரங்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் வகையில் பெருக்கப்பட வேண்டும், காஷ்மீரில் நடக்கும் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பாக்கிஸ்தான் நடந்து கொள்ளுவதை தடுப்பதற்கு புதிய முயற்சிகள் வேண்டும் என்பவற்றின் எதிரொலிபோல் தம் கருத்துக்களை கூறியுள்ளன. "பயங்கரவாதத்தை பற்றி இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது" என்று தலையங்கத்தில் கேட்கும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ், "பல சிக்கல் வாய்ந்த அரசியல் காரணிகளுடைய தன்மை ...UPA அரசாங்கத்தை பயங்கரவாதத்தின் மீது எப்படி கடுமையாக இருக்க வேண்டியது பற்றி அறியாத நிலையில் வைத்துவிட்டது. பல விதங்களிலும் இதைப் பற்றி நாம் கண்டுள்ளோம்; கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கள், பெங்களூர் தாக்குதலுக்கு பின்னர் அரசாங்கம் நடந்து கொண்ட முறை, காசி நகரத்தின் மீதான தாக்குதல்கள், கஷ்மீரில் பல படுகொலைகள்.... எனப்பட்டியல் விரிவடைகிறது" என்று அது குறை கூறியுள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு கூடுதலான அதிகாரங்கள் வேண்டும் மற்றும் பாக்கிஸ்தானுடன் அணுகுமுறைகள் கடினமாக இருக்க வேண்டும் என்ற இரு கருத்துக்களையும் இந்துஸ்தான் டைம்ஸ் கோரியுள்ளது: "இதுகாறும் பொறுத்திருந்தது போதும் என்றும் அண்மையில் உள்ள (பாக்கிஸ்தானில் உள்ள) ஜிஹாத் தொழிற்சாலை விஷயத்தில் அவசரமாக ஏதேனும் செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது என்பதை எமது பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நமது நண்பர்களுக்கு கூறவேண்டிய தேவை இருக்கிறது. இன்னும் கூடுதலான வகையில் அந்நாடு உணர்ந்து கொள்ளும் வகையில் அங்கு அடைக்கலம் புகுந்துள்ள பயங்கரவாதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட வேண்டும்." இந்தியாவின் மிக முக்கியமான தாராளவாத செய்தித்தாள் என்று வாதத்திற்குரிய முறையில் இருந்துவரும், இதுகாறும் பாகிஸ்தானுடன் சமரசம் வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ள இந்து நாளேடு, காஷ்மீர் கிளர்ச்சிக்கு அனைத்து ஆதரவையும் இஸ்லாமாபாத் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று UPA அரசாங்கம் வற்புறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் சமாதான வழிவகை சரிந்துவிடக் கூடும் என எச்சரிக்கவும் வேண்டும் என்றும் கூறியுள்ளது. "சர்வதேச சீற்றத்தை பயன்படுத்தி இந்தியாமீது இயக்கப்படும் பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதாக பல முறை கூறியுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற இவ்வாய்ப்பை உபயோகிக்கும் தருணம்தான் இது. உண்மையில் இந்தியா-பாகிஸ்தான் நட்பு உடன்படிக்கை என்பது இதை அவர் நிறைவேற்றும் திறனில்தான் உள்ளது; ஏனெனில் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதல் நிகழ்வும் பொது மக்கள் சமாதான வழிவகையில் காட்டும் ஏராளமான நல்லெண்ண குவிப்பிற்கு பெரும் குறைப்பை ஏற்படுத்திவிடும்... "பாகிஸ்தானின் இராணுவ ஸ்தாபனத்திலுள்ள ஜிஹாத் ஆதரவுக் கூறுகள் அமெரிக்காவின் ஆணைகளை ஈரானும் வட கொரியாவும் மீறுவது மேற்கத்திய சக்திகளின் நிர்பந்தப்படுத்தும் அதிகாரங்களுக்கு வரம்பு உள்ளது என்பதை நிரூபணம் செய்வதாக அமையும் என்று நினைக்கலாம்; எப்படிப்பார்த்தாலும் இந்தியாவிற்கு எதிரான ஜிஹாத் பெரும் மூலோபாய செலவினங்களில் பின்பற்றப்படாது என்றும் நினைக்கலாம். லஷ்கரின் உச்சக்கட்ட பயங்கரத்தை எதிர்கொள்ளுவது என்பது கடுமையான சவால்களை முன்வைக்கிறது; ஆனால் மீண்டும் மீண்டும் பயங்கரவாதத்தை எதிர்கொள்கையில் இந்தியா செய்ய வேண்டியவை பற்றிய கண்டிப்பான ஆய்வின் அடிப்படையிலான கடினமான முடிவுகள் இனியும் ஒத்திவைக்கப்பட முடியாதவையாகும்." லஷ்கர்தான் மும்பை குண்டுவீச்சுக்களுக்கு பொறுப்பு, இது பாகிஸ்தான் அரசாங்கம் அல்லது அந்நாட்டின் இராணுவ உளவுத்துறை கருவியின் பாதுகாப்பு, அல்லது இயக்கத்தை ஒட்டி நடைபெற்று வருகிறது என்னும் இந்துவின் கூற்றுக்களுக்கு இந்திய பாதுகாப்பு நடைமுறையின் உறுதியான கருத்துக்களை தவிர வேறு எவ்வித ஆதாரமும் இல்லை. அப்படியே அது உண்மையாக இருந்தாலும்கூட, இந்தியாவின் பயங்கரவாத பிரச்சினை "பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகிறது" என்னும் கூற்று, இந்துமேலாதிக்க வாதத்திற்கு இந்திய ஆளும் வர்க்கம் புரந்து ஆதரிக்கும் தன்மையை, 1947ல் துணைக்கண்டம் வகுப்புவாத பிரிவினையின் பொழுது காஷ்மீரின் மீதான கட்டுப்பாட்டை அடைவதற்கு துன்பமான ஒன்றிலிருந்து தப்புவதற்கான சூழ்ச்சித்திட்டமாக அதனை பயன்படுத்திக் கொண்டதை, காஷ்மீரி மற்றும் ஏனைய பிரிவினைவாதிகளை ஈவிரக்கமற்று ஒடுக்கியதை, தலித்துக்கள், பழங்குடியினர் மீது இழப்புக்களை சுமத்தியதை, எத்தனையோ தசாப்தங்களாக பாகிஸ்தானுடன் நிலவி வரும் புவிசார்-அரசியல் தன்மையில் உள்ள கொள்ளைமுறை தன்மையை வசதியுடன் கவனியாது விடுகிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் இந்தியப் பாராளுமன்றத்தின்மீது 2001ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு, BJP தலைமையிலான அரசாங்கம் எடுத்த சீற்றமான எதிர்விளைவின் அடிப்படையில் பார்க்கும்போது UPA அரசாங்கத்தின் விடையிறுப்பு அதிக ஆரவாரமற்றும், நிதானமாகவும் உள்ளது. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் கணிசமான மாற்றங்களை கொண்டுவருவதற்கு UPA அரசாங்கம் குண்டுவெடிப்பு நிகழ்வை பயன்படுத்தாது என்ற முடிவிற்கு விரைவில் வருவது கடினம் ஆகும்; மேலே மேற்கோளிடப்பட்டுள்ள தலையங்கங்கள் சான்று கூறுவது போல், இந்திய பெருவணிகம் அரசாங்கத்தை தீவிர வலதிற்கு திருப்பும் வகையில்தான் குண்டுவெடிப்புக்களை பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாடில், "விரைவில் தன்னுடைய அரசாங்கம், இருக்கும் பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று கூறியுள்ளார்; இதன் பொருள் அரசாங்கம், போலீஸ் மற்றும் உளவுத்துறைக்கு புதிய அதிகாரங்களை கொடுக்கும் என்பதாகும். மும்பைமீது குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தியவர்களின் இலக்குகளில் ஒன்றே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தடை செய்ய வேண்டும் என்று இருப்பதால், பாகிஸ்தானுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மறு பரிசீலனை செய்யப்படவேண்டும் அல்லது குறைந்த வேகத்தில் நடைபெற்றால் போதும் என்று கூறிய கருத்துக்கள் அனைத்தையும், காங்கிரஸ் தலைமையிலான UPA நிராகரித்துவிட்டது. "பாக்கிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் தொடரும்" என்று உள்துறை செயலாளரான வி.கே. டுக்கல் கூறியுள்ளார். "சமாதான நடவடிக்கைகள் வேகம் குறைக்கப்பட மாட்டாது" என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த அறிக்கைகள், இஸ்லாமாபாத் மீது புதிய கோரிக்கைகளை புது டெல்லி முன்வைப்பதை, அதுவும் புஷ் நிர்வாகம் அத்தகைய நடவடிக்கை தன்னுடைய இலக்குளை அடைவதற்கு பயனுடையதாக இருக்கும் என்று நினைத்தால், தவிர்த்துவிடமுடியாது. "பூகோள" மூலோபாய இந்திய-அமெரிக்க பங்காண்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடைபெறும் நுட்பமான பேச்சுவார்த்தைகள் என்ற தற்போதைய நிலைக்கு இடையே, அமெரிக்க சட்டமன்றம் இந்தியாவிற்கு உலக அணுசக்தி ஆட்சிக்குள் பிரத்தியேகமான அந்தஸ்தை கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், புது டெல்லி வாஷிங்டனுடன் தான் கொண்டுள்ள நிலைக்கு எந்த மாறுதலும் இல்லாத வகையில்தான், பாக்கிஸ்தானுடன் நடந்து கொள்ளும் தன்னுடைய செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நடத்தும். புஷ் நிர்வாகத்தினது பயங்கரவாதத்தின் மீதான போரில் தளபதியின் அந்தஸ்து முக்கிய பங்கைக் கொண்டிருந்தாலும், குறிப்பிடத்தக்க வகையில், வாஷிங்டனுக்கும் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் பாக்கிஸ்தான் ஆட்சிக்கும் இடையே உள்ள உறவு அதிகரித்த அளவில் சீர்கேடடைந்துள்ளது. புது டெல்லி பாக்கிஸ்தானுக்கு காஷ்மீரை பொறுத்தவரையில் கணிசமான சலுகைககளை கொடுக்க மறுத்துள்ள போதிலும் கூட, இந்தியாவுடன் மிக நெருக்கமான பங்காண்மைக்குள் நுழைவதற்காக வாஷிங்டனுடன் இஸ்லாமாபாத் சற்றே அதிருப்தியுடன்தான் உள்ளது; அதே நேரத்தில் தன்னுடைய பங்கிற்கு வாஷிங்டன், பாக்கிஸ்தான் அந்நாட்டிற்குள் தஞ்சம் நாடியுள்ள தாலிபான் போராளிகளை பிடிப்பதற்கு போதுமானவற்றை செய்யவில்லை என்ற ஆப்கான் கைப்பாவை ஹமித் கர்சாயின் புகார்களை எதிரொலித்தது. விளக்கம் கொடுக்கப்படாத காரணங்களை அடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், கொண்டலீசா ரைஸ், புதன் கிழமை அன்று வாஷிங்டனில் இருதரப்புப் பேச்சு வார்த்தைகள் முடிந்தவுடன் பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரியுடனான கூட்டுச் செய்தி மாநாட்டை நடத்த மறுத்துவிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், வியாழனன்று மன்மோகன் சிங்குடன் தொலைபேசி தொடர்பு கொண்டார்; அவர்கள் இருவரும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் G-8 மாநாட்டின்போது சந்திக்கையில் பயங்கரவாதத்துடன் போரிடுவது பற்றிய குவிப்பை காட்டும் வகையில் விவாதங்களை மேற்கொள்ளுவர் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நெடுங்காலமாகவே புஷ் நிர்வாகத்தை இன்னும் கூடுதலான வகையில் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப தன்னுடைய உள்நாட்டு, வெளியுறவு கொள்கைகளை கொள்ளுவதற்கு முஷாரஃபை வலியுறுத்தாததற்காக குறைகூறும் வாஷிங்டன் போஸ்ட், மும்பை குண்டுவீச்சுக்களை அடுத்து வந்துள்ள தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க கட்டுரை ஒன்றில் பாகிஸ்தானை பற்றிக் கடுமையாக விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியரான Xenia Dormandy, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவில் தெற்கு ஆசிய பிரிவு இயக்குனராக இருந்தவர் ஆவார். "இந்தியா, இந்தியர்கள், மற்றும் சிங் அரசாங்கம் [பாகிஸ்தானுக்கு எதிராக] எதிர்நடவடிக்கை எடுக்குமுன் எவ்வளவு நாட்கள் தாம் போராளிக்குழுக்களின் தொடர்ந்த அழுத்தங்களை பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருக்க முடியும்? சர்வதேச தூதரக நெறிமுறையின் கூறுபாடுகள் எதைக் கொண்டு பார்த்தாலும், அவர்கள் மிகப் பொறுமையாகத்தான் இருந்துள்னர். ஒரு இராணுவம் கடத்தப்பட்டதற்கு இஸ்ரேல் எப்படி விடையிறுத்தது, வட கொரியாவில் ஏவுகணை சோதனைகளுக்கு கொடுக்கும் அமெரிக்க, ஜப்பானிய விடையிறுப்புக்கள் இவற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவின் பெரும் நிதானம் தெரியவரும்." "இப்பொழுது பாகிஸ்தான் உண்மையிலேயே விடையிறுக்க வேண்டிய கணம் வந்துள்ளது; அப்போதுதான் அப்பகுதியில் ஒரு பொறுப்பான நாடு என்ற வகையில் அது மதித்து நடத்தப்படுவதை எதிர்பார்க்க முடியும்.": |