World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Democrats, Republicans line up to back Israeli war crimes இஸ்ரேலிய போர்க்குற்றங்களுக்கு ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் பேராதரவு கொடுக்கின்றனர் By Joe Kay அமெரிக்க காங்கிரசின் பிரதிநிதிகள் மன்றம் மற்றும் சென்ட் மன்றம் இரண்டுமே லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு முழு ஆதரவைக் கொடுக்கும் புஷ் நிர்வாகத்தை அதிபெரும்பான்மையுடன் பாராட்டி தீர்மானங்களை இயற்றியுள்ளன. நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை குடித்துள்ள இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலுக்கு குடியரசுக் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு ஜனநாயகக் கட்சியினரும் ஒப்புதல் அளித்தனர். பிரதிநிதிகள் மன்றத் தீர்மானம் 410-8 என்ற வாக்கெடுப்பில் ஜூலை 20 அன்று இயற்றப்பட்டது; செனட் அதே தீர்மானத்தை ஏகமனதான அங்கீகரிப்புடன் ஜூலை 18 அன்று இயற்றியது. ஞாயிறன்று முக்கிய ஜனநாயகக் கட்சியினர், செனட் வெளியுறவுக்குழு உறுப்பினர் கிறிஸ் டோட் மற்றும் மற்ற உளவுத்துறை குழுவின் சிறுபான்மை கட்சித் தலைவர் ஜேன் ஹார்மன் உட்பட லெபனான்மீதான இஸ்ரேலியத் தாக்குதலுக்கு தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்திப் பேசினர். கூட்டரசு சட்டமன்றத்தின் தீர்மானங்கள் மத்திய கிழக்கில் நடக்கும் வன்முறையின் முழுப் பொறுப்பையும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாமீது சுமத்தியுள்ளன. "இஸ்ரேலுக்கு எதிராக தூண்டுதலற்ற, குற்றம்சாட்டத்தக்க ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதற்காக" மன்றத் தீர்மானம் அவற்றை கண்டிக்கின்றது. "தங்களுடைய ராக்கெட்டுக்களினாலும், ஏவுகணைகளினாலும் இஸ்ரேலிய பொதுமக்களை பொறுப்பற்ற முறையில் இலக்காக கொள்ளுவதற்காக" இந்த அமைப்புக்கள் கண்டிக்கப்படுகின்றன. பொது உள்கட்டுமானத்தின்மீது, அதிலும் குறிப்பாக தெற்கு லெபனானில், வேண்டுமென்றே இலக்கை கொண்டு இன்னும் அதிகமான பொதுமக்கள் இறப்புக்களை ஏற்படுத்தும் இஸ்ரேலிய ராக்கெட்டுக்களை பற்றித் தீர்மானங்கள் ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக, இஸ்ரேல் தன்னுடைய பொதுஇலக்குகளை கொண்டுள்ளதற்கான போலிக் காரணத்தை அப்படியே தீர்மானங்கள் கூறுகின்றன; அதாவது ஹமாசும் ஹெஸ்பொல்லாவும் "கவசங்களாக பொதுமக்களை பயன்படுத்திக் கொண்டுள்ளன" என்பதே அது. குறைந்தது 380 மக்களையாவது லெபனானில் கொன்றுள்ள இஸ்ரேல் (அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள்) அதன் "பொதுமக்கள் உயிரிழப்பை குறைக்க வேண்டும் என்று நெடுங்காலமாக கொண்டிருக்கும் கருத்திற்காக" பாராட்டும் பெற்றுள்ளது. சிரியா மற்றும் ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்க புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இரு கட்சிகளும் ஆதரவு கொடுத்திருப்பது குறிப்படத்தக்கவகையில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். "பயங்கரவாத அமைப்புக்கள் அவற்றிற்கு ஆதரவு தரும் நாடுகளின் ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு இஸ்ரேல் விடையிறுக்கும் விதத்தை முழுமயாக ஆதரிப்பதற்கு... ஜனாதிபதியை பாராட்டுகிறோம்", "சாத்தியமான முழுஅளவிலான அரசியல், இராஜதந்திர, பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் சிரியா, ஈரான் அரசாங்கங்களுக்கு எதிராக கொண்டுவரவேண்டும் என்று ....ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம்" என்றும் மன்றத் தீர்மானம் கூறுகிறது. விடயங்களை ஏற்க முடியாத நிலைக்கு தங்களை உட்படுத்திவிடும் என்ற காரணத்தினால் போர் நிறுத்தத்திற்கு எதிராகத் தாங்கள் ஏதும் கூறவில்லை என்று நிர்வாக அதிகாரிகள் சமீபத்தில் பலமுறையும் கூறியுள்ளனர். லெபனான் மற்றும் காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றும் முயற்சியில் ஒரு பகுதியாகும்; அமெரிக்கா மற்றும் அதன் முக்கியமான வாடிக்கை நாடாக இப்பகுதியில் உள்ள இஸ்ரேல் ஆகியவற்றின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது இதில் அடங்கியுள்ளது. "Late Edition with Wolfe Blitzer" என்னும் CNN தொலைக் காட்சி நிகழ்வில் பங்கு பெற்ற ஹார்மன், புஷ் நிர்வாகத்தின் கொள்கைக்கு தன்னுடைய முழு ஆதரவு இருப்பதை வலியுறுத்திப் பேசினார். இதுகாறும் நிர்வாகம் நடந்து கொண்டுள்ள முறை பற்றி அவருக்குக் கருத்து வேறுபாடு ஏதேனும் உள்ளதா என்று பிளிட்சரால் கேட்கப்பட்டபோது, போர் நிறுத்தத்திற்கான அழைப்பை நிர்வாகம் மறுத்துள்ளது பற்றித் தன்னுடைய உடன்பாட்டை தெரிவித்தார். "உடனடியாக போர்நிறுத்தம் என்பது பொருளற்ற செயல் என நினைக்கிறேன். இரு பயங்கரவாத அமைப்புக்களான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவிற்கும் தாங்கள் மீண்டும் தங்களை வலிமையாக்கிக் கொண்டு தங்கள் பயங்கரவாத செயல்களை தொடர அவகாசம் கிடைத்துவிடும் என்று அவர்களுக்கு தோன்றிவிடும்" என்று அவர் கூறினார். தான் முன்பே பயன்படுத்திய ஒரு சொற்றொடரை ஹார்மன் மீண்டும் கூறி இஸ்ரேல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, லெபனானிலும் காசாவிலும், "சகதி நிலத்தை வற்றச் செய்துவிட வேண்டும்" என்று கூறினார். மேலும் "தெற்கு லெபனானில் உள்ள புற்று நோய்" என்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய இனவாத கருத்துரைகள் ஹெஸ்பொல்லா, ஹமாஸ் ஆகியவற்றை குறைமதிப்பதற்கு உட்படுத்துவதற்கும், பொதுமக்களைப் படுகொலை செய்வதை நியாயப்படுத்துவதற்கும் அவருக்கு தேவை எனத் தோன்றுகிறது. ஹார்மனும், மன்ற உளவுத்துறைக் குழுவின் குடியரசுக் கட்சித் தலைவருமான பீட்டர் ஹெக்ஸ்ட்ராவும் ஜெருசலத்தில் இருந்து பிளிட்சரிடம் பேசினர்; அங்கு அவர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளை சந்தித்து அமெரிக்க சட்ட மன்றத்தின் இரு கட்சிகளுடைய ஆதரவிற்கும் உறுதியளித்தனர். இஸ்ரேலிய அரசாங்கம் தனக்குக் கொடுத்துள்ள பிரச்சாரக் கருத்துக்களை ஹார்மன் அப்படியே திருப்பிக் கூறினார்; ஹெஸ்பொல்லாவின் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள்தான் இலக்காக கொள்ளப்பட்டுனர் என்று அவர் கூறினார். "லெபனானுக்கு தெற்கே பல சாதாரண மக்களும் ஹெஸ்பொல்லாவிற்கு உதவியாகவும், துணைபுரிந்தும் நிற்பதாக இஸ்ரேலியர்கள் எங்களிடம் கூறியுள்ளனர். இவர்களுடைய இலக்கு இராணுவத் தளங்களை தாக்குவதும், ஹெஸ்பொல்லாவின் திறனைத் தாக்குவதும் மட்டும்தான்; ஆனால் பொதுமக்கள் சேதத்திற்கு காரணம், சில பொதுமக்கள் இஸ்ரேலியர்களின் கூற்றுப்படி இந்த ஆயுதங்களை மறைத்து வைப்பதில் ஒத்துழைக்கின்றனர்." தன்னுடைய பங்கிற்கு டோட் சற்றே கூடுதலான விமர்சனத்தை கொண்டிருந்தார்; தன்னுடைய நடவடிக்கைகளில் இஸ்ரேல் சற்று அதிகமாகவே நடந்து கொண்டது என்ற கருத்தை அவர் கூறினார். ஆனால் மிக அதிகமான பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பற்றியோ, இஸ்ரேலியத் தாக்குதல்களின் சட்டவிரோத தன்மை பற்றியோ அவர் அக்கறை காட்டவில்லை; இப்பகுதியில் அமெரிக்க, இஸ்ரேலிய ஆதிக்கம் எத்தகைய தந்திரோபாய முன்னோக்கினால் சிறந்த முறையில் அடையப்பட முடியும் என்பதுதான் அவருடைய கவலை. லெபனான்மீதான தாக்குதல் அங்குள்ள மக்களை தீவிரமயப்படுத்துவதுடன், அது ஜோர்டான், எகிப்து ஆகிய அமெரிக்க நட்பு நாடுகளிலும் உருவாகி அவற்றின் உறுதியைக் குலைக்கக்கூடும் என்ற கவலையையும் அவர் தெரிவித்தார். ஜோர்டான், எகிப்து, லெபனான் ஆகியவற்றில் சுதந்திரத் தேர்தல்களை நடத்தினால், இஸ்லாமிய ஜிகாத், முஸ்லிம் சகோதரத்துவம் ஆகியவை இந்நாடுகளில் மிகப் பெரும்பான்மையான வகையில் வெற்றிபெறும். இது என்னுடைய நோக்கில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்." என டோட் தெரிவித்தார். இந்த கவலைகள் இருந்தபோதிலும்கூட, புஷ் நிர்வாகம் உயர்ரக தொழில்நுட்ப, கூடுதலான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது பற்றி வரவேற்றுத்தான் டோட் பேசினார். "தன்னுடைய பாதுகாப்பிற்கு தேவையானதை மட்டும் இஸ்ரேலுக்கு அளிப்பது போதும் என்று நான் நினைக்கவில்லை; இந்த கட்டத்தில் அவர்களுக்கு தேவையானது அளிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் நான் ஆதரிக்கிறேன்." என்று அவர் கூறினார். ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துடன் இருப்பது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை காப்பதில் இரு கட்சிகளும் கொண்டுள்ள நிலைப்பாட்டை அடிக்கோடிடுவதுடன், மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சிகளிலும் ஒருமித்த உணர்வை கொண்டுள்ளன என்பதை காட்டுகிறது. அதை எப்படி அடையலாம் என்பதில் தந்திரோபாய முறையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துப் பிரிவுகளும் அப்பகுதியின் வழமான எண்ணெய் விநியோகத்தின் மீதான ஆதிக்கத்தை கொள்ளுதலில் முற்றிலும் உடன்பட்டுள்ளன. ஈரானில் புஷ் நிர்வாகத்தின் கொள்கையை பற்றி குறைகூற சில முக்கிய ஜனநாயகக் கட்சியினர் சிறிது காலமாக வலதுபக்கமிருந்து முயன்றுள்ளனர் என்றாலும், அதாவது ஈரானுடைய அணுசக்தி திட்டத்தை நிறுத்துவதற்கு நிர்வாகம் போதுமானதை செய்யவில்லை என்று வாதிட்டுள்ளனர். இஸ்ரேலினின் லெபனான் மீதான தாக்குதல்கள் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை சிரியா மற்றும் ஈரானுக்கு இட்டுச்செல்லுமானால், அதையும் ஜனநாயகக் கட்சியினர் வரவேற்று ஆதரிப்பர் என்பதில் ஐயமில்லை. |