World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush, Blair meet to oppose Lebanon ceasefire and back Israel's war aims

லெபனான் போர்நிறுத்தத்தை எதிர்க்க புஷ், பிளேர் சந்தித்து இஸ்ரேலின் போர் நோக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்

By Chris Marsden and Julie Hyland
29 July 2006

Back to screen version

அவருடைய வழக்கமான பணியான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு சர்வதேச வண்ணம் கொடுக்கும் பணியை கொடுப்பதற்காக, பிரிட்டிஷ் பிரதம மந்திரி டொனி பிளேயருக்கு, ஜனாதிபதி புஷ் வாஷிங்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். லெபனிய மக்கள்மீது இஸ்ரேலின் குருதி தோய்ந்த தாக்குதலுக்கு பெருகி வரும் சர்வதேச சீற்றத்தின் நடுவே, இந்த இரு தலைவர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு விட்டுக்கொடுக்காது பேணும் தங்கள் நிலையில் உறுதியாக உள்ளனர்.

பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர்கள் இருவரும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தங்கள் எதிர்ப்பை வலியுறுத்தி, ஹெஸ்பொல்லாதான் போருக்கு காரணம் என்பதையும் மீண்டும் வலியுறுத்தினர். இவர்கள் வாதிட்டுள்ள "நீண்டகால சமாதானம்" என்பது இஸ்ரேலிய ஆட்சியின் அடிப்படைக் கோரிக்கையான இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தை முற்றிலும் நிராயுதபாணியாக்குவதை அடிப்படையாக கொண்டிருந்தது.

இந்த நோக்கத்துடன், அமெரிக்க தூதூரக முயற்சிகள் ஒரு சர்வதேச இராணுவப் பிரிவை ஏற்படுத்துவதிலும், ஐ.நா. பாதுகாப்பு குழுவில் தெற்கு லெபனானில் தன் படைகளை நிறுத்துவதற்கான தீர்மானத்தை இயற்றுவது பற்றியும் ஒருமுகப்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

ஐ.நா. சாசனத்தின் ஏழாம் அத்தியாயத்தின் கீழ் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று புஷ் கூறினார்; இது, "சமாதானத்திற்கு அச்சுறுத்தல், சமாதனத்திற்கு உடைவு ஏற்பட்டால் செய்யவேண்டியவை மற்றும் ஆக்கிரமிப்புச் செயல்கள்" பற்றியதாகும். ஈராக்கிற்கு எதிரான தன்னுடைய போரை சாசனத்தின் இந்த விதியின்கீழ் நெறிப்படுத்த அமெரிக்கா முயன்றது; ஆனால் அத்தகைய ஐ.நா. ஒப்புதல் ஏதும் இல்லாமலேயே போரைத் தொடுத்தது.

லெபனானின் ஷியைட் மக்களிடையே வெகுஜன ஆதரவு பெற்ற அரசியல், போராளிகள் இயக்கம் - சிரியா, ஈரான் ஆகியவற்றின் மறைமுக அமைப்பாக செயல்பட்டு வருவதுதான் ஹெஸ்பொல்லா என்று அதை மீண்டும் புஷ் சித்தரித்தார். அடுத்த வியாழனன்று பாதுகாப்புக் குழுவின் முன் அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஐயத்திற்கு இடமின்றி டமாஸ்கஸ் மற்றும் தெஹ்ரானுக்கும் எதிராக வருங்கால இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான போலிக் காரணத்தை உருவாக்குவதற்கு தேவையான மொழியை கொண்டிருக்கும்.

பாதுகாப்புக் குழுக் கூட்டம் வரவிருப்பதற்கு முந்தைய தினங்களில், வாஷிங்டன் தேவையான இராணுவ சிப்பாய்களை அளிப்பதற்கு உறுதி மொழி கொடுப்பதற்காக ஐரோப்பிய சக்திகளை மிரட்டும் பணியில் ஆழ்ந்திருக்கும். ஏற்கனவே அத்தகைய ஒப்புதல்களை பெறுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்தறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஐரோப்பாவிற்கு சென்றுள்ளார்.

ஒரு சர்வதேசப் படை அனுப்பப்பட வேண்டும், அது இஸ்ரேலின் நோக்கமான ஹெஸ்பொல்லாவை ஒடுக்குவதுடன், லெபனானின் அந்தஸ்தை நடைமுறையில் ஒரு வாடிக்கையாளர் ஆட்சியாக குறைத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முற்படும் வாஷிங்டனின் உந்துதலுக்கு ஒரு சர்வதேச மறைப்பையும் அளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு வக்காலத்துவாங்குவதில் பிளேயர் முன்னணிப் பங்கை கொண்டார்.

பிளேயரின் பயணமும், ஐ.நா. தீர்மானத்திற்கான விரைவான உந்துதல் பற்றிய கூட்டு அமெரிக்க-பிரிட்டிஷ் அறிக்கையும், ஹெஸ்பொல்லா போராளிகளிடம் இருந்து எதிர்பாராமல் கடுமையான எதிர்ப்பு வந்துள்ள நிலையில், அது பாதிக்கப்பட்டுள்ள இராணுவப் பின்னடைவுகளை, இரண்டு வாரமாக மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்திய பிறகும் கூட இஸ்ரேல் எதிர்கொண்டுள்ள தோல்வி நிலைக்கு விடையிறுப்புக்கள் ஆகும்.

பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட்டும் இஸ்ரேலிய இராணுவமும் மிகக் கடுமையான முறையில் உட் குறைகூறலுக்கு ஆளாகியுள்ளனர்; இஸ்ரேலிய ஆளும் வட்டங்களுள் வெளிப்படையான வேறுபாடுகள் உள்ளன; பலவும் வன்முறை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெற்கு லெபனானில் கூடுதலான தரைப்படைகள் குவிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலிய ஸ்தாபனத்திற்குள் பல குரல்கள் ஒலிக்கின்றன.

நியூ யோர்க் டைம்ஸ் வெள்ளியன்று, "அரபுக் கருத்துக்கள் ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவாக திரும்பும் அலை வீசுகிறது" என்ற தலைப்பில் போரின் விளைவு பற்றியும், அதில் இதுகாறும் அமெரிக்க பங்கு பற்றியும் முதற்பக்க இருள்சூழ்ந்த மடிப்பீடு ஒன்றை குறிப்படத்தக்க வகையில் வெளியிட்டது. அதில் "இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்த வகையில் ஹெஸ்பொல்லா ஏற்கனவே வெற்றிக்கு ஒப்பான நிலையை அடைந்துவிட்டது" என்று அது கூறியுள்ளது.

இச்சூழ்நிலையில் புஷ் நிர்வாகமானது, ஹெஸ்பொல்லாவை தாக்குவதற்கும் லெபனிய மக்களை பயங்கரப்படுத்துவதற்கும் இஸ்ரேலுக்கு எவ்வளவு அவகாசம் கொடுக்க முடியுமோ அதைக் கொடுப்பதில் உறுதியாக உள்ளது; ஆனால் ஹெஸ்பொல்லா இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதற்கும், தெற்கு லெபனானில் அதன் செயற்பாட்டுத் தளங்களை அழிப்பதற்கும், ஜெருசலம் மற்றும் வாஷிங்டனுடைய சார்பில் அப்பகுதியை கண்காணிப்பதற்கும் பின்பு என்பதைவிட விரைவிலேயே, ஒரு பெரிய ஏகாதிபத்திய இராணுவ சக்தியின் உதவி இஸ்ரேலுக்குத் தேவை என்ற முடிவிற்கும் வந்துள்ளது.

அத்தகைய விளைவிற்கு லெபனிய அரசாங்கம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு கருவி என்ற தரமதிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். தன்னுடைய பங்கிற்கு பிளேயர் அத்தகைய வெற்றியாளர் சுமத்தும் சமாதானம்தான் ஏற்கமுடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இரு தலைவர்களும் லெபனானில் சுமத்தப்படும் இறப்புக்களும் அழிவுகளும், மத்திய கிழக்கை மாற்றுவதற்கான ஒரு "வாய்ப்பு" என்று கூறினர். "லெபனானை பெறுதல் என்பதைவிட கூடுதலான நலன்கள் உள்ளன" என்று புஷ் அறிவித்தார். "அப்பகுதி முழுவதிலும் ஒரு வேறுவித மூலோபாய இயக்கத்தை செலுத்தி புதிய சாதனைகளை பெறுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று பிளேயர் கூறினார்.

எண்ணெய் வளக் கொழிப்புடைய மத்திய கிழக்கில், வாஷிங்டனின் இராணுவ இலக்குகளை செயல்படுத்தும் வகையில் இஸ்ரேல் இருக்கும் என்றும் கொள்ளையிடும் பொருள்களில் ஒரு பங்கை பெறுவதில் பிரிட்டன் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கும் என்பதும்தான் இந்த மத்திய கிழக்கு முழுவதும் மறுசீரமைப்பு என்ற சொற்றொடரின் உண்மையான இலக்கு ஆகும்.

இரு ஏகாதிபத்திய தலைவர்களின் கருத்துக்களும், நயவஞ்சக நயவுரை மற்றும் பொய்களின் தொகுப்பு ஆகும். ஒரு கட்டத்தில் புஷ் பக்தியோடு கூடிய உணர்வில் அறிவித்தார்: "லெபனானில், ஹெஸ்பொல்லா மற்றும் அதன் ஈரானிய, சிரிய ஆதவாளர்கள் சமாதானம் ஜனநாயகம் ஆகியவற்றை பரப்புவதற்குக் கொலை புரியவும் வன்முறையை பயன்படுத்தவும் பெரும் விருப்பம் காட்டுகின்றனர்."

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்கா வழங்கியுள்ள பேரழிவு ஆயுத தொகுப்புக்களை பயன்படுத்தி பெருமாளவு பாதுகாப்பற்ற மக்கள்மீது கொடூரங்களை இஸ்ரேல் இழைத்துக் கொண்டுவருவதை பீதியுடன் காணும்போது, இவ்வாறு கூறப்படுகிறது. பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் கொண்ட 600க்கும் மேற்பட்ட லெபனியர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு சில நாட்களிலேயே நாட்டின் பல பகுதிகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. லெபனானில் பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிட்டதுடன், போர்நிறுத்தத்திற்கான அரசாங்கத்தின் அனைத்து முறையீடுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேரழிவுச் செயல், புஷ் மற்றும் பிளேயரின் கருத்தின்படி, லெபனிய இறைமையை நிறுவுவதற்காக செய்யப்படுகிறது. லெபனிய "இறைமையை" பாதுகாக்கும் நடவடிக்கை, லெபனிய அமைச்சரவையில் பங்கு பெற்றிருக்கும், மக்கள் ஆதரவைக் கொண்டுள்ள ஒரு மகத்தான லெபனிய அரசியல், இராணுவ இயக்கத்தை தகர்ப்பதற்காக மகத்தான ஏகாதிபத்தியத்தின் இராணுவ சக்தியை நுழைப்பதாகும்!

ஜனநாயக மதிப்பீடுகளுக்காக தாங்கள் பாடுபடுகிறோம் என்ற புஷ், பிளேயரின் கூற்றுக்களை பொறுத்தவரையில், இருவருக்குமே அவர்களுடைய கொள்கைக்கு மக்கள் ஆதரவு கிடையாது; அது லெபனானை பொறுத்தாயினும், வேறு எங்கு இருந்தாலும் சரி. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களின்படி, மக்களில் மூன்றில் இரு பகுதியினர் ஈராக்கில் தொடர்ந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள்ளனர். ஆனால் இந்த இரண்டு போர்க் குற்றவாளிகளும் மத்திய கிழக்கில் ஒரு ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதற்கு மாறாக, லெபனானில் வெள்ளியன்று வெளிவந்த கருத்துக் கணிப்பு ஒன்று இஸ்ரேலின் ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலுக்கு பிந்தையது கொடுக்கும் எதிர்ப்பிற்கு சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும், ஷியைட்டுக்கள், சுன்னிக்கள், கிறிஸ்தவர்கள் என்று கிட்டத்தட் 90 சதவிகித ஆதரவு உள்ளது என்பதைக் காட்டியுள்ளது.

இதையும்விட இழிவான முயற்சி ஒன்று புஷ்ஷினாலும், பிளேயராலும் தங்களுடை மற்றும் இஸ்ரேலிய கொள்கைகளை காப்பதற்கு ஐ.நா. தீர்மானத்தை மேற்கோளிட்ட அளவில் வந்துள்ளது. ஈராக் போர் நிரூபித்துள்ளது போல் தான் சொன்னபடி கேட்காவிட்டால், ஐ.நா.வையும் வாஷிங்டன் பொறுத்துக் கொள்ளாது.

வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாட்டில், செவ்வாயன்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்ட நான்கு ஐ.நா. பார்வையார்களை பற்றி குறிப்பு கொடுக்கவேண்டும் என்று புஷ்ஷும், பிளேயரும் கருதவில்லை. உட்குறிப்பின் மூலம் அவர்கள் இந்த ஐ.நா.அதிகாரிகளை இஸ்ரேல் கொன்றதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர்; அதே நேரத்தில் ஐ.நா. அமெரிக்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு சட்டபூர்வமான அத்தி இலை மறைப்பை கொடுக்கவேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஹெஸ்பொல்லா நடவடிக்கை மூலம் ஐ.நா.அலுவலர்கள் இறப்பு நிகழ்ந்திருந்தால் வாஷிங்டனும், லண்டனும், இவர்களுக்கு பொதி சுமக்கும் செய்தி ஊடகமும் எந்த அளவிற்கு பெரும் சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் என்பதை கற்பனைதான் செய்து பார்க்க முடியும். மாறாக, ஐ.நா.வில் அமெரிக்க தூதராக உள்ள ஜோன் போல்டன் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தலையிட்டு ஐ.நா.புறக்காவல் நிலையத்தின் திட்டமிட்ட தாக்குதல் நடத்திய இஸ்ரேலைக் கண்டித்து எந்த தீர்மானம் வந்தாலும் அது எதிர்க்கப்பட்டுவிடும் எனக் கூறிவிட்டார்.

இஸ்ரேல் ஐ.நா.வைக் குறி வைத்து இலக்கு கொண்டது விரும்பிய விளைவைக் கொடுத்துள்ளது. புஷ்ஷும் பிளேயரும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கையில், ஐ.நா. லெபனிய/இஸ்ரேலிய எல்லையில் ஆயுதங்கள் இல்லாமல் இருந்த தன்னுடைய 50 பார்வையாளர்களையும் திரும்ப அழைத்துக் கொண்டுவிட்டது.

அதேதினம், ஐ.நா.வின் நெருக்கடிநிலை உதவி ஒருங்கிணைப்பாளரான ஜோன் எகிலாந்த், இஸ்ரேலையும் ஹெஸ்பொல்லாவையும் 72 மணி நேரத்திற்கு போரை நிறுத்தி வைக்குமாறும், அத்தகைய நிறுத்திவைப்பு வயதானவர்கள், ஊனமுற்றவர்களை லெபனானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றிக் கொண்டுவரவும், அவசரகால பொருட்கள் அளிப்பை அங்குள் மக்களுக்கு கொடுக்கவும் நிவாரணத் தொழிலாளர்களுக்கு உதவும் என்று கூறினர். ஆனால் இன்னும் கூடுதலான வகையில் தங்கள் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் புஷ்ஷூம், பிளேயரும் முயற்சி செய்கையில், அத்தகைய முறையீடு வீணே காத்திருக்க வேண்டியதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved