World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : கிழக்கு தீமோர்Australian imperialism, East Timor and the role of the DSP ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம், கிழக்கு திமோர் மற்றும் DSP யின் பங்கு By Nick Beams ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், WSWS சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவருமான நிக் பீம்ஸ், சிட்னியிலும் மெல்போர்னிலும் ஜூலை 11, 18, 2006 தேதிகளில் "கிழக்கு திமோர் பற்றிய உண்மை; ஆஸ்திரேலிய இராணுவத் தலையீடு ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?" என்ற தலைப்பில் கொடுத்த அறிக்கையை கீழே வெளியிடுகிறோம். கிழக்கு திமோரில் நடக்கும் நிகழ்வுகள் கடந்த சில மாதமாக அல்லாது, தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஊக்கத்தில் நடைபெறும் "ஆட்சி மாற்ற" பிரச்சாரத்தின் விளைவுகளாகும். உண்மையில் 1999ல் ஆஸ்திரேலிய துருப்புக்களால் நடத்தப்பட்ட தலையீட்டின் தொடர்ச்சிதான் அண்மைய தலையீடு ஆகும். என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளுவதற்கு இந்த நிகழ்வுகளை அவற்றின் உலகப் பின்னணியின் உள்ளடக்கத்தில் காண வேண்டியது அவசியமாகும். சோவியத் ஒன்றியத்தினதும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளும் 1990களின் ஆரம்பத்தில் உடைந்துகொண்டியபோது, பனிப்போர் முடிந்துவிட்டதை மட்டும் அது அடையாளம் காட்டாமல், உலக அரசியலில் ஒரு புது சகாப்தம் எழுச்சியுற்றதையும் காட்டியது. ஒன்றரை தசாப்தத்திற்கு பின், இந்தப் புதிய சகாப்தத்தின் எல்லைகள் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. அமைதி, ஜனநாயகம் என்னும் புதிய காலகட்டத்தில் நுழைதல் என்பதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில், சந்தைகள், மூலவளங்கள், செல்வாக்கு மண்டல்களுக்காக முதலாளித்துவ வல்லரசுகளுக்கு இடையே ஆழ்ந்த பூசல்களினால் உலகம் நாசத்திற்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இதுதான் ஈராக் மீதான போர், வடகிழக்கு ஆசியாவில் நடக்கும் பூசல்கள், ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆழ்ந்த பிளவுகள், எரிபொருள் வளங்களுக்காக சீனாவின் துடிப்பு, மற்றும் ஈரானின் அணுசக்தித் திறன்கள் பற்றிய பூசல்கள் என்ற சில உதாரணங்கள் மூலம் காட்டப்படும் நிகழ்வுகளின் முக்கியத்துவம் ஆகும். இம்மோதல்களுக்கான கட்டமைப்பு சோவியத் ஒன்றியம் உடைந்த உடனேயே தோற்றுவிக்கப்பட்டது. 1992ல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை இலக்கு அமெரிக்காவை இராணுவ முறையில் எந்த சக்தியோ, சக்திகளின் குழுக்களோ அறைகூவலுக்கு உட்படுத்தக்கூடாது, அதன் உலக ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் இருக்க வேண்டும் என்று பென்டகன் ஒரு மூலோபாய ஆவணத்தை தயாரித்தது. உலக அரசியலில் இந்த புதிய சகாப்தத்தின் தன்மையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ஏகாதிபத்தியப் போர், காலனித்துவம் ஆகியவற்றிற்கு எதிராக நடத்திய பேர்லின் மாநாட்டில் நவம்பர் 1991ல் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது. அந்த மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஐரோப்பிய சக்திகள் போருக்குப் பிந்தைய காலத்தில் தங்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து வெளியேறி பொதுவான சுதந்திரம் வழங்கியமை உலக முதலாளித்தவ முறையின் தன்மையில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதை காட்டுகின்றது என்று அனைத்துவித சந்தர்ப்பவாதிகளாலும் பாராட்டப்பட்டமை முடிவிற்கு வந்துவிட்டதை பற்றி சுட்டிக்காட்டியது. வல்லரசுகள் பெருகிய முறையில் இராணுவ நடவடிக்கைகளை 1982ல் மால்வினாஸ் போர், அமெரிக்காவில் 1980 களில் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள், 1990-91 ஈராக்கியப் போர் ஆகியவை "ஏகாதிபத்தியம் தன்னுடைய மரபார்ந்த வழிமுறைகளினால் ஒடுக்கப்பட்ட நாடுகளை தன்னுடைய நலன்களை வலியுறுத்தித் தக்கவைத்து கொள்ளுவதற்கு மீண்டும் திரும்பிவிட்டன" என்பதைத்தான் இது குறித்தது. அந்த எச்சரிக்கை எப்படி உண்மையாகிவிட்டது! சேர்பியாவிற்கு எதிராக 1999ம் ஆண்டு நடந்த கொசோவாப் போர் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் செயல்பட்டிருந்த அனைத்து சர்வதேச உறவுகள் எந்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தனவோ, அவை அனைத்தும் கிழித்து எறியப்பட்டதை எடுத்துக்காட்டியது. தேசிய இறைமையை ஏற்றுக்கொள்வதுதான் அந்த உறவுகளின் அடிப்படையாக இருந்தது. இன்று அது ஏற்று மதிக்கப்படவில்லை. ஏப்ரல் 1999ல் சேர்பியாவிற்கு எதிரான குண்டுவீச்சுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட இருந்த நேரத்தில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஒரு புதிய கோட்பாட்டை கோடிட்டுக் காட்டினார். சர்வதேச சமூகம், அதாவது பெரும் முதலாளித்துவ சக்திகள், தேவைப்படுவதாகக் கருதப்படும் இராணுவ வழிமுறைகள் மூலமும் கூட, இந்த பூகோளமயமாக்கல் சகாப்தத்தில் தேசிய இறைமையில் அத்துமீறித் தலையிடும் உரிமையை பெற்றுள்ளன என்று அவர் வலியுறுத்தினார். இக்கோட்பாடு சரியான முறையில் "நன்னெறிசார்ந்த ஏகாதிபத்தியம்'' (ethical imperialism) என்று பெயரிடப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் முதலாளித்துவ நாடுகள் "வெள்ளை மனிதனின் சுமையை" எடுத்துக் கொண்டு உலகெங்கிலும் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்று விடுத்த அழைப்பிற்குச் சமமான முறையில் 20ம் நூற்றாண்டின் கடைசியில் அதேமாதிரி அறைகூவி அழைப்பதாக இருந்தது. பல முக்கிய விதங்களிலும் கொசோவாப் போர் குறிப்பிடத்தக்கதாக இருந்தது; அதில் முக்கியமானது ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி அது நடத்தப்பட்டதும் ஒன்றாகும். இது பனிப்போருக்கு பிந்தைய காலத்தில் சர்வதேச உறவுகளை கட்டுப்படுத்தியதாக கூறப்பட்ட சட்டத் தடுப்புக்கள் வேறு ஒரு காலகட்டத்தில் மிகப்பெரும் தடை என கருதப்பட்டதற்கான முக்கிய சமிக்கை ஆகும். ஆனால் இந்த "நன்னெறிசார்ந்த ஏகாதிபத்தியமும்" இவர்களுக்கு போதுமானதான இல்லை. யுத்தத்தை தொடங்குவதற்கான ஒரு புதிய அடிப்படைக் காரணம் தேவைப்பட்டது. செப்டம்பர் 11, 2001 க்கு பின் அது பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பெயரில் முன்வைக்கப்பட்டது. சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என்ற பெயரளவு முறைகூடக் கைவிடப்பட்டதை ஈராக் மீதான போர் குறித்தது. நூரம்பேர்க் விசாரணைகளில் நாஜிக்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக இருந்த "ஆக்கிரோஷமான போர்" தொடங்குதல் என்பது மேலாதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்காவின் மத்திய கோட்பாடாக மாறிவிட்டது. இதற்கு "சர்வதேச சமூகம்" ஐ.நா.வின் மூலம் ஒப்புதல் கொடுத்த வகையில் ஈராக்கின்மீதான படையெடுப்பு ஆக்கிரமிப்பு ஆகியவை நெறிப்படுத்தப்பட்டன. ஆஸ்திரேலிய, போர்த்துக்கல் மற்றும் கிழக்குத் திமோர் இந்த மொத்த கட்டமைப்பிற்குள் திமோரில் நிகழ்ந்தவற்றை நாம் இப்பொழுது ஆராய்வோம். வளைகுடாப் போர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் உடைவு என்ற 1990களின் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பின்னர், காலம் மாறிவிட்டது என்பதை ஒவ்வொரு முதலாளித்துவ நாடும் உணர்ந்து, காலனித்துவ முறை ஏதேனும் ஒரு வகையில் மீண்டும் வந்து விட்டது என்று கருதினர். எனவே தீவிர செயல்பாட்டை தொடக்க வேண்டும் என்று அவை எண்ணின. போர்த்துக்கலும் இதற்கு விதிவிக்கல்ல. ஐரோப்பிய ஒன்றித்தில் உறுப்பு நாடாகி விட்டதால், இன்னும் கூடுதலான பலத்துடன் அதனால் உலக அரங்கில் நடக்க முடிந்தது; அதாவது 1974ல் பாசிச ஆட்சி அந்நாட்டில் சரிந்து அதன் காலனிகள் சுதந்திரத்தை அடைந்த காலத்தில் இருந்ததைவிட கூடுதலான முனைப்புடன் அது செயலாற்ற முடிந்தது. போர்த்துக்கலின் முன்னாள் காலனித்துவ பகுதியான கிழக்குத் திமோர் கணிசமான கவனத்தை ஈர்த்தது; ஏனெனில் அதன் நிலப்பகுதியை ஒட்டிய கடலில் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் குறிப்பாக கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் ஆஸ்திரேலியா என்னும் மற்றொரு சக்தியின் கை ஓங்கியிருந்தது. 1989 TM ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் Timor Gap Treaty என்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கையின்கீழ் ஆஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக 1975க்கு பின்னர் இதன் பகுதி ஒன்றை ஒரு மாநிலமாக இந்தோனேசியா இணைத்துக் கொண்டதை அங்கீகரித்தது; இதற்கு ஈடாக திமோர் கடலின்கீழ் இருக்கும் எண்ணெய் எரிவாயு இருப்புக்கள் மீது தன்னுடைய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று கூறிற்று. அந்த நேரத்தில் தொழிற்கட்சி வெளியுறவு மந்திரியான காரெத் ஈவான்ஸ் குறிப்பிட்டபடி இந்த உடன்படிக்கை "எண்ணுக்கணக்கற்ற" டாலர் மதிப்பு உடையது ஆகும்.1991 ஐ ஒட்டி போர்த்துக்கல் இப்பகுதியில் தீவிரமான அக்கறையை காட்டியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இவ்உடன்படிக்கை சட்ட விரோதம் என்றும் போர்த்துக்கல், கிழக்கு திமோர் ஆகியவற்றின் பொருள்சார் நலன்களை பாதித்தது என்றும் கிழக்கு திமோரிய மக்களுடைய உரிமைகளை வலுவிழக்க செய்துவிட்டது என்றும் குற்றம் சாட்டியது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு காலனித்துவ நாடாக கிழக்குத் திமோரை ஆண்ட போர்த்துக்கல் இப்பொழுது சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டுக்கு உடன்பட்டுவிட்டது போலும்.இந்தப் பின்னணியில்தான் 1999ல் ஆஸ்திரேலிய தலையீடு நிகழ்ந்தது. 1997-98 கிழக்கு ஆசிய பொருளாதார நெருக்கடி, சர்வதேச நிதிய அமைப்பின் ஆணைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்தோனேசியாவில் சுகார்ட்டோவின் சர்வாதிகாரத்தை பலமிழக்க செய்திருந்தது. ஆஸ்திரேலியாவும் ஒரு சிக்கலான நிலையில் விடப்பட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் நெருக்கமான நட்பு நாடாக இருந்த இந்தோனேசியா உடைந்துவிடும் என்ற ஆபத்து, கிழக்கு திமோருக்கு ஒருவகை சுதந்திரத்தை கொண்டுவரக்கூடும்; அப்படி என்றால் Timor Gap Treaty ஒப்பந்தம் கேள்விக்குறியாகும் என்பதுடன் மற்ற சக்திகள், குறிப்பாக போர்த்துக்கல் தலையிடுவதற்கு வழிவகுக்கப்படலாம். எனவேதான் கிட்டத்தட்ட 200,000 மக்களின் இறப்பிற்கு காரணமாக இருந்த 25ஆண்டு திமோர் மீதான இந்தோனேசிய சர்வாதிகார அடக்குமுறைக்கு ஆதரவு கொடுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் செப்டம்பர்-அக்டோபரில் இராணுவத் தலையீட்டில் ஒரு மத்திய பங்கை வகிக்கத் தலைப்பட்டது. இதற்கு சற்று உதவி தேவைப்பட்டது; அது அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் கொடுத்த ஆணை ஒன்றின் மூலம் வந்தது; அவர் இந்தோனேசியா இந்த இராணுவத்தலையீட்டிற்கு உடன்படவில்லை என்றால் அமெரிக்கா இந்தோனேசிய பொருளாதாரத்தை "சரிவிற்கு" உட்படுத்துவதாக எச்சரித்திருந்தார். மத்தியதரவர்க்க தீவிரவாதிகளின் அணிதிரளல் ஆனால் ஆஸ்திரேலிய தலையீட்டிற்கு அமெரிக்க சக்தியைவிட கூடுதலான ஒன்று தேவைப்பட்டிருந்தது. முக்கிய அரசியல் சக்திகளும் திரட்டப்பட வேண்டியிருந்தது. இராணுவத் தலையீடுகள், போர்கள் ஆகியவற்றை நடத்துவகையில், ஒவ்வொரு முதலாளித்துவ சக்தியும் மக்களின் பரந்த திரட்டின் உணர்வுகளையும், கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொது மக்கள் கருத்தினால் வழிகாட்டப்படாமல், அதை தோற்றுவித்து தன்னுடைய இலக்குகளுக்கு ஏற்ப திரிக்க வேண்டும் என்பது முக்கியமாகும். எந்த அரசாங்கமும் போருக்கு அடித்தளத்தில் இருக்கும் பொருளாதார உந்துதல்களை வெளிப்படுத்த முடியாது; அப்படிச் செய்தால் அது மிகப் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்திவிடும். இதனை விளைவாக தொடர்ச்சியான சித்தாந்தரீதியான தயாரிப்புக்களை அது மேற்கொள்ள வேண்டும்; அவைதான் இராணுவத் தயாரிப்புக்களை போலவே, சொல்லப்போனால் அவற்றையும் விட அதிகமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது ஆகும். இரண்டு பரந்த வழிவகைகள் இங்கு அடையாளம் காணப்படலாம். 1) ஈராக்கிற்கு எதிராக போரை தொடக்குமுன் அமெரிக்க அரசாங்கம் ஆரம்பித்த பீதியை கிளப்பும் பிரச்சாரம் போன்றது; அதில் போலித்தனமாக பேரழிவுகரமான ஆயுதங்கள், அணுவாயுதங்கள் உட்பட பயன்படுத்தப்படலாம் எனக் கூறியது; அல்லது2) ஒரு மனிதாபிமான இலக்கை அடைவதற்கு இராணுவத் தலையீடு தேவை என்று உறுதியாகக் கூறுதல்.தேவையான சித்தாந்தரீதியான பிரச்சாரத்தை நடத்துவதற்கு, செய்தி ஊடகம் ஒரு மத்திய பங்கை கொள்ள வேண்டும்; ஈராக்கில் நடந்ததுபோல் ஒரு பீதிப் பிரச்சாரத்தை வளர்க்க வேண்டும்; அல்லது மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கு தேவையான ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்க வேண்டும். ஆனால் அதனாலேயே செய்தி ஊடகம் முழுமையாக இதைச் செய்துவிட முடியாது. அரசியல் சக்திகள் திரட்டப்பட வேண்டும்; இங்குத்தான் பல மத்தியதர வர்க்க தீவிரவாதக்குழுக்கள் மற்றும் "இடதுகளின்" பங்கு முக்கியமாகிறது. 1999 ம் ஆண்டில் கொசவோ நிகழ்வுகளையும் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் தொடர்பையும் ஆராயுங்கள். நாஜி ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுச் சான்றும், தென் கிழக்கு ஐரோப்பாவில் பொதுவாக ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் பங்கையும் கருத்தில் கொள்ளும்போது, பால்க்கன் பகுதிகளில் இராணுவத் தலையீடு என்பது ஜேர்மன் அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சினையாயிற்று.ஒருகாலத்தின் "தெருச் சண்டைக்காரராகவும்" தீவிரவாதியாகவும் இருந்து பின்னர் ஷ்ரோடர் அரசாங்கத்தின் வெளியுறவு மந்திரியான ஜோஷ்கா பிஷ்ஷருக்குத்தான் இந்த பங்கு வழங்கப்பட்டது. நாஜிக்களுடைய வரலாற்றுச் சான்றுகளை மூடிமறைப்பதில் எப்பயனும் இல்லை என்ற முடிவிற்கு பிஷ்ஷர் வந்தார். மாறாக, பிரச்சினைக்குத் தீர்வு என்பது இந்தச் சான்றையே சேர்பியாவிற்கு எதிராக எடுக்க வேண்டிய இராணுவ நடவடிக்கைக்கு முக்கிய உந்துதல் காரணியாக காட்ட வேண்டும் என்பதாகும். இதை ஒட்டி, ஜேர்மனிய தலையீடு மற்றொரு அவுஸ்விட்ஷை (Auschwitz) தவிர்க்கப் பயன்படும் என்று பிஷ்ஷர் உறுதியாக கூறினார். இன சுத்திகரிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொறுப்பு ஜேர்மனியை தவிர வேறு எந்த நாட்டிற்கு இருக்க முடியும்? ஆஸ்திரேலியாவில், நாடு வியட்நாம் போருடன் தொடர்பு கொண்டமை மற்றும் வெளிநாடுகளில் அதன் இராணுவ நடவடிக்கையால் உருவான அரசியல் சொத்துக்கு எதிரான பொதுவான விரோதப் போக்கு என்பன கிழக்கு திமோரில் இராணுவத் தலையீட்டைக் கொள்ளுவதை ஒரு சிக்கல் வாய்ந்த பிரச்சினையாக செய்துவிட்டது. இதற்கேற்ப, பல தீவிரவாதக் குழுக்களும், பசுமைக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் மற்றவர்களும் திமோரிய மக்களை இந்தோனேசிய ஆதரவு கொண்டுள்ள குடிப்படைகளுக்கு எதிராகக் காத்திடுவதற்கு படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்த தலைப்பட்டனர். பழைய காலத்தில் சாதாரண உலோகத்தை தங்கமாக மாற்றும் இரசாயனவியல் நிபுணர்களை போல, இத்தீவிரவாதிகள் முன்பு 25 ஆண்டுகாலம் கிழக்கு திமோர் மீது இந்தோனேசிய அடக்கு முறைக்கு ஆஸ்திரேலிய ஆதரவு கொடுத்திருந்த போதிலும், கிழக்கு திமோரிய மக்களுக்கு ஒரு "மனிதாபிமான" தீர்வைக் கண்டு "மகத்தான வெற்றியையும் பெற" நடவடிக்கை எடுக்க தன்னுடைய நலன்களுக்கு எதிராக பிரதம மந்திரி ஹோவர்டின் அரசாங்கம் வலியுறுத்தப்படலாம் என்று கூறினர். ஆனால், "விருப்பமற்ற ஹோவர்டின் மீது" திணிக்கப்பட்ட என்று ஜனநாயக சோசலிசக் கட்சி மற்றும் பசுமை இடது வார ஏடு கூறியதைவிட, கிழக்கு திமோரில் இராணுவத் தலையீடு என்பது ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் ஒரு புதிய செயற்திட்டத்தை தொடக்க வழிவகுத்தது. ஆஸ்திரேலிய Financial Review அப்பொழுது குறிப்பிட்டிருந்தது போல், வியட்நாமிற்கு பின்னர் அப்பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவத் தலையீடு பற்றிய விவாதத்திற்கு "உள்நாட்டு தடை" ஒன்று இருந்தது. இப்பொழுது தீவிரவாதிகளின் நடவடிக்கைகளினால் அந்த தடை நீக்கப்பட்டுவிட்டது. "திமோரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அழைப்புக்கள் விந்தனையானவை; ஏனெனில் இராணுவத்தை இழிவுபடுத்திய சூழ்நிலையை ஊக்குவித்ததில் பெரும் பங்கு கொண்டவர்கள்தான் இப்பொழுது ஆஸ்திரேலியா அங்கு தலையிட வேண்டும் என்று உரத்தகுரலில் கூறுகின்றனர். இப்படி ஆயுதத் தலையீட்டிற்கான அழைப்பு, பல தசாப்தங்களில் முதல் தடவையாக தன்னுடைய பகுதிக்கு வெளியேயும் தலையீடு செய்வதற்கு ஆஸ்திரேலியாவால் முடியும் என்ற முன்கருத்திற்கு பரந்த அளவு சட்டபூர்வ தன்மையை கொடுத்துவிட்டது." வேறுவிதமாக கூறினால், பல தீவிரவாதக் குழுக்களின் பிரச்சாரமானது ஆஸ்திரேலியா, பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் "துணை பொலிஸ் அதிகாரி" என்ற பங்கை கொள்ளுவதற்கு வழிவகுத்தது; இதன் மூலம் தன்னுடைய நலன்களையும் முன்னேற்றுவித்துக் கொள்ள முடியும். திமோரில் ஆரம்ப தலையீட்டிற்கு பின்னர் இராணுவ-போலீஸ் குவிப்பை சொலமோன் தீவுகளில் அனுப்பப்படுவது, பாப்புவா நியூ கினியாவிற்கு அனுப்பப்படுவது, இப்பொழுது கிழக்கு திமோரில் ஆட்சி மாற்றத்திற்கு மீண்டும் ஒரு முறை இராணுவத் தலையீடு என்ற வகையில் காண்கிறோம். இப்பொழுது, ஜனநாயக சோசலிச முன்னோக்கு (DSP- Democratic Socialist Perspective என்று அழைக்கப்படுகிறது) இன் வரலாற்றை, சமீபத்திய தலையீட்டில் எப்படி இருந்தது என்று பார்ப்போம். மே 19ம் தேதி கிழக்கு திமோரை நோக்கி ஹோவார்ட் அரசாங்கம் போர்க் கப்பல்களை அனுப்பியபோது, DSP, "கிழக்கு திமோரை நோக்கிய ஆஸ்திரேலிய போர்க்கல இராஜதந்திரத்திற்கு எதிராக!" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. முடிவுரையில் அது கூறியதாவது: "நாங்கள் கிழக்குத் திமோரில் கான்பராவின் நவ காலனித்துவ தலையீட்டை எதிர்க்கிறோம். இராணுவ அல்லது அரசியல் முறையில் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் "ஒழுங்கை நிலைநாட்டுகிறோம்" என்று எடுக்கும் முயற்சிகள் அனைத்து முற்போக்கான மக்களாலும் எதிர்க்கப்பட வேண்டும்." ஆனால் இது அதிக காலம் நீடிக்கவில்லை. மே 31ம் தேதி ஆஸ்திரேலியப் படைகள் டிலி (Dili) க்கே சென்றுவிட்ட நிலையில், பசுமை இடது வார ஏடு இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது; அவற்றில் தலையீடு துல்லியமாக அதே அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டது. திமோர் சோசலிஸ்ட் கட்சியின் செயலளாரை மேற்கோளிட்டு ஜோன் லாம்ப் கட்டுரை எழுதினார்; "சர்வேதேச சக்திகள் இங்கு இருப்பது அமைதியை மீட்க மிக முக்கியமான செயலாகும்" என்று திமோரிய தலைவர் குறிப்பிட்டதாக அவர் கூறினார். ஆனால் DSP தேசிய செயற்குழு உறுப்பனர்களில் ஒருவரான மாக்ஸ் லேனிடம் தான் ஹோவர்ட் அரசாங்கத்தின் இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவை கொடுக்கும் அரசியல் நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் நயவுரைக்கு தேவையான "இடது" திருப்பத்தை கொடுக்கும் பொறுப்பு விடப்பட்டது. "திமோரிய மக்களுடன் ஒற்றுமை" என்ற தலைப்பில் தன்னுடைய கட்டுரையை தொடக்கியிருந்த லேன் "கிழக்கு திமோரின் எண்ணெய், எரிபொருள் திருட்டைத் தான் நடத்திக் கொண்டிருப்பதற்கு" வசதியளிக்கும் வகையில் ஒழுங்கை நிலைநாட்டும் பெயரில் வந்துள்ள "வேண்டுகோளை" நிறைவேற்றுவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தயாராக உள்ளது என்ற எச்சரிக்கை அதில் விடுக்கப்பட்டது. மேலும் இத்தலையீடு, "இப்பகுதியில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் தலையீட்டு வெளியுறவுக் கொள்கையை நியாயப்படுத்த" உபயோகிக்கப்படுகிறது; இந்த மூலோபாயத்தில் ஆஸ்திரேலிய இராணுவ, அரசியல், நிதிய ஆலோசகர்கள் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கும் சிறிய, வறிய நாடுகளின் அரச செயற்பாடுகளில், அந்நாட்டு வறியவர்களின் இழப்புக்களில் ஆஸ்திரேலிய வணிக நலன்களை காப்பதற்கு தலையீடு செய்கிறது." இக்காரணங்கள் தலையீட்டை கண்டனத்திற்கு உட்படுத்துவதற்கும் அனைத்து ஆஸ்திரேலிய படைகளும் திரும்பப் பெறவேண்டும் எனக் கூறுவதற்கும் போதுமானது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இக்கருத்துக்களோடு உடனடியாக வேறு ஒரு கூற்று முன்வைக்கப்பட்டது: "கிழக்குத் திமோரின் பொது மக்களும் அரசியல் சக்திகளின் பல பிரிவினரும் அங்கு சர்வதேச துருப்புக்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்." இரண்டு வாரங்களுக்கு பின்னர் DSP தலைவர் பீட்டர் போய்ல் கட்சியின் வலைத் தளத்தில் கிழக்குத் திமோரில் உள்ள நிலை, "மிகவும் சிக்கல் வாய்ந்தது, தெளிவற்றது, நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது", நாட்டில் இருந்து தகவல் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது, அடுத்த புறநகரத்தில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியவில்லை என்று எழுதிய தன்மையில் இருந்து இத்தகைய நிலைப்பாடு விந்தையானது ஆகும். ஆனால் இப்படிப்பட்ட தொடர்புச் சிக்கல்கள் இருந்தாலும், லேனுக்கு தலையீடு வெகுஜன ஆதரவைப் பெற்றிருந்தது என உறுதியாக அறிய முடிந்தது. "வெகுஜனக் கருத்து" மற்றும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் நலன்களும் இணைந்து காணப்பட்டதில்தான் எத்தகைய தற்செயல் ஒற்றுமை! ஆஸ்திரேலிய துருப்புக்களின் வருகை திமோரிய மக்களால் ஆதரவு பெற்றிருந்தாலும் கூட, உண்மையான சோசலிஸ்டுகளின் பொறுப்பு "மக்கள் கருத்து" எனப்படுவதை கொண்டு தங்கள் கொள்கைகளை நிர்ணயிப்பது அல்ல; மாறாக மக்களுக்கு அரசியல் நிலைமையை விளக்க வேண்டும்; பொய்கள், தவறான தகவல்கள் இவற்றின் பிரச்சாரத்தை அம்பலப்படுத்த வேண்டும்; அவைதான் ஏகாதிபத்திய அரசியலின் பிரிக்கமுடியாத கூறுபாடுகளாக உள்ளன; எல்லாவற்றிற்கும் மேலாக போர்க்காலங்களிலும், இராணுவத் தலையீட்டு நேரங்களிலும் அப்படித்தான் உள்ளது; சுயாதீனமான சோசலிச முன்னோக்கை முன்வைக்க வேண்டும். லேனின் கட்டுரை வந்த இரண்டு வாரங்களுக்கு பின்னர், DSP இன் விவாதத் தளத்தில் "திமோரிய-லெஸ்டே நெருக்கடியில் DSP யின் நிலை என்ன" என்ற தலைப்பில் போய்ல் ஒரு கருத்தை வெளியிட்டார். அரசியல் வட்டத்தை எப்படியாவது ஒரு சதுரமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார்: அதாவது எவ்வாறு கிழக்கு திமோரிய மக்கள் போராட்டத்திற்கு சோசலிஸ்டுகள் ஆதரவு கொடுத்துக்கொண்டு, அதே நேரத்தில் ஆஸ்திரேலிய படைகள் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பது என்பதே அது. கடற்கரைக்கு அருகே ஆஸ்திரேலிய அரசாங்கம் தன்னுடைய இராணுவப் படைகளை திட்டமிட்டபடி நிறுத்தியபின்னர், DSP "ஆளும் பிரெடிலின் கட்சி மாநாடு நடத்திக் கொண்டிருக்கும்போது இது ஒரு மிரட்டும் நடவடிக்கை போல் தோன்றுகிறது என" அதை கண்டித்திருந்ததை போய்ல் நினைவு கூர்ந்தார். ஆனால் அதிசயத்தக்க மாற்றம் ஏற்பட்டது போல் தோன்றியது; இது பொதுவாக தேவாலயங்களில்தான் நடைபெறும்; ஏனெனில் துருப்புக்கள் தரையிறங்கியவுடனே அவை "நாட்டின் அரசியல் பிரிவுகள் அனைத்தின் முழு ஆதரவையும் அவை பெற்றன." என்று அவர் எழுதினார். இதையொட்டி "ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் நோக்கம் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அப்பகுதியில் வட்டார "பொலிஸ் அதிகாரியாக" இருப்பதாகும்; ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் இரண்டின் பொது நலன்களை காத்தும், ஆஸ்திரேலிய வணிகர்களின் நேரடி நலன்களை அப்பகுதியில் காத்திடவும் வேண்டும்." என்பதை போய்ல் ஒப்புக்கொள்கின்றபோதிலும் "DSP இந்தக் கட்டத்தில் "படைகள் வெளியேறவேண்டும்" என்ற பிரச்சாரத்தை விரும்பவில்லை". அப்படியானால், இதன் பொருள் DSP ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்திற்கு அரசியல் உடந்தையாக உள்ளது என்றுதான் ஆகும். ''தேசிய விடுதலையின்'' முட்டுச்சந்தி DSP யின் நிலைப்பாடுகள் பற்றி ஆராய்வதில் சற்று நேரத்தை நான் செலவிட்டுள்ளேன்; ஏனெனில் இவை கிட்டத்தட்ட தீவிரவாத அரசியலின் வர்க்கத் தன்மை பற்றி பாடப்புத்தக படிப்பினை போல் இது உள்ளது; ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல்களை எதிர்த்து அது எதிர்ப்புக்கள் நடத்தி, தன்னை "சோசலிசவாதிகள்" என்று அழைத்துக் கொண்டாலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை அது எதிர்க்கிறது.கிழக்குத் திமோர் நெருக்கடி பற்றிய தன்னுடைய விளக்கத்தில் போய்ல், நாட்டின் இராணுவப் படைகள், போலீஸ் மற்றும் அரசியல் தலைமைகள் போரிடும் பிரிவுகளாக (கன்னைகளாக) உடைந்துள்ளமை "இந்தோனேசிய ஆக்கிரமிப்பின் கீழ் பல ஆண்டுகள் வளர்ச்சியுற்ற வீரம் செறிந்த தேசிய விடுதலை இயக்கம் படைக்கலைப்பு செய்யப்பட்டதின் விளைவு" என்று உறுதியாக கூறினார். இதற்கு ஒரு மாற்றீடான பாதை, திமோரிய மக்களை அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் அணிதிரட்டுவதுதான் எனவும், ஆனால் இது 1999க்கு முன்பே தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமை "ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் ஒரு அதிகாரத்துவ வகையிலான வடிவமைப்பை கட்டமைத்து அதற்குள் செயல்பட விழைய வேண்டும்" என்பதை கைவிட்டுவிட்டது என்று அவர் குறிப்பிடுகின்றார். இதன்படி, மோதலில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் இந்த நெருக்கடிக்கு பொறுப்பானவர்களாவர். ஏனெனில் "இன்று தோல்வியடையும் ஒரு முதலாளித்துவ நவ-காலனித்துவ அரசிற்கான அதிகாரத்துவ கட்டமைப்பை உருவாக்கும் ஏகாதிபத்தியத்தின் முயற்சிக்கான விரும்பிய முறையில் பங்காளிகளாக இருந்தனர்". ஆனால் இந்த நிகழ்வுகளின் முக்கியமான கட்டத்தில் ஐ.நா. ஆதரவு பெற்ற ஆஸ்திரேலிய தலைமையிலான 1999 இராணுவத்தலையீட்டில் என்ன நிகழ்ந்தது என்பதை நாம் நினைவுகூர வேண்டும்; இதற்கு அனைத்து தீவிரவாத குழுக்களின் ஆதரவும் கடந்த காலத்தில் "படைகள் வெளியேற வேண்டும்" என்று கூறப்பட்டதற்கு பதிலாக இப்பொழுது "படைகள் அனுப்பப்பட வேண்டும் என்று திரட்டும் குரல் மாறிய அடிப்படைதான் காரணம். இத்தலையீட்டின் உண்மை நோக்கம் கிழக்கு திமோரிய மக்களின் சுதந்திரத்தை காப்பது என்றில்லாமல், அத்தீவு, அதன் மூலவளங்கள் மீது முக்கிய முதலாளித்துவ சக்திகள் தொடர்ந்து ஆதிக்கத்தை கொள்ளுவதற்கு தடையா இருக்க கூடாது என்பதே. ஒருமுறை பேர்டினன்ட் லாசால் குறிப்பிட்டபடி, அரசியலமைப்பு என்பது பீரங்கி வலிமையில் நிலைபெறுமேயானால், கிழக்கு திமோரில் "நவ-காலனித்துவ அரசின்" அஸ்திவாரங்கள் ஆஸ்திரேலிய இராணுவத் தலையீடு, மற்றும் அதற்கு பின் இருந்த ஐ.நா. சட்டங்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டன. ஆனால், போய்ல் கருத்தின்படி DSP தலையீட்டிற்கான ஆதரவு பிரச்சாரத்தில் இறங்கியதற்கான காரணம் அது "தேசிய விடுதலை போராட்டத்தை" இது முன்னேற்றுவிக்கக்கூடும் என்றும் "இது கிழக்கு திமோரிய தேசிய விடுதலை இயக்கத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானது என்பதாலும்தான். இதில் இரு பாதைகளுக்கு இடம் இல்லை." கடந்த ஏழு ஆண்டுகளின் கசப்பான அனுபவங்கள் இதற்கு முற்றிலும் மாறானதைத்தான் நிரூபணம் செய்துள்ளது. "தேசிய விடுலை" மற்றும் சுதந்திர நாடு என்பதை நிறுவுவது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமூக முன்னேற்றத்தை திமோரிய மக்களுக்கு கொண்டுவருவது என்பது கொடூரப் பொய்த்தோற்றம் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இது ஒன்றும் இதில் தொடர்புடைய தனிப்பட்ட தலைவர்களின் குற்றம் அல்ல. தேசிய விடுதலை என அழைக்கப்படும் முன்னோக்கின் இயல்பில் இருந்தே இது வெளிவருகிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, அக்காலத்திய தாமதமாக வந்திருந்த ஆபிரிக்க மற்றும் ஆசிய தேசிய இயக்கங்களை பற்றி, அவை சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தேசிய அரசின் மறுமலர்ச்சியை காணாது என்று லியோன் டிராஸ்கி விளக்கினார். உலக சோசலிச புரட்சியின் ஒரு கூறுபாடு என்ற வகையில்தான் அவை முன்னேறமுடியும். கடந்த 50 ஆண்டுகளின் அனுபவங்கள், காலனித்துவத்திற்கு பிந்தைய சகாப்தம் எனப்படும் காலம் இவ் ஆய்வை முற்றிலும் உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய விடுதலை என அழைக்கப்படும் வேலைத்திட்டம் உண்மையான அல்லது நீடித்த சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லவில்லை. மேலும் "தேசிய சுதந்திரம் என்பது இன்னும் கூடுதலான வகையில் கடந்த 20 ஆண்டுகளில் உலக முதலாளித்துவ முறையில் ஏற்பட்டுள்ள பரந்த மாறுதல்களால் காலத்திற்கு ஒவ்வாததாக ஆகிவிட்டடது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை, இதுகாறும் அடையப்படாத அளவு ஏற்பட்டுள்ள உற்பத்தி சக்திகளின் ஒருங்கிணைப்பு, என்பவை இன்னும் கூடுதலான தடைகள், எல்லைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட தேசிய திட்டங்கள் என்பது ஆழ்ந்த சகோதரத்துவ மோதல்களுக்குத்தான் வழிவகுக்கும் என்ற பொருளை தருகின்றன. உண்மையான சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான பாதையானது, பிரிவினைவாதத்தின் மூலம் கிட்டாது மாறாக சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தில்தான் தங்கியுள்ளது. இந்த முன்னோக்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பவாதிகளினால் அழுகையுடன்: எல்லாம் சரிதான், ஆனால் அது நடைமுறைக்கு ஒவ்வாது; ஏனெனில் இப்பொழுதும் கூட மக்கள் கொல்லப்படுகிறார்கள், வீடுகள் எரிகின்றன, அவற்றை நிறுத்துவதற்கு படைகள் அனுப்பப்பட வேண்டும், என்றுதான் வரவேற்கப்படுகின்றது. 1999லும் அத்தகைய குரல்தான் கொடுக்கப்பட்டது; இன்றும் அவைதான் மீண்டும் ஒலிக்கின்றன. "எதார்த்தமானது" என்று அழைக்கப்படுவது ஒரு பேரழிவில் இருந்து மற்றொரு பேரழிவைத்தான் தோற்றுவிக்கும், தோற்றுவிக்கவும் முடியும். கிழக்கு திமோர் நிகழ்வு சமீபத்திய உதாரணமாகும். ஒரு நடைமுறைசாத்தியமான முன்னோக்கு என்பது புறநிலையான அடித்தளத்தில்தான் வேறூன்ற முடியும்; அதாவது விஞ்ஞானபூர்வமாக அரசியல் நிலைமையை மதிப்பிட வேண்டும். அத்தகைய மதிப்பீடு எதை வெளிப்படுத்துகிறது? பனிப்போர் முற்றுப்பெற்று ஒன்றரை தசாப்தத்திற்கு பின்னர் ஒரு காலனித்துவத்திற்கான புதிய காலகட்டமும், போட்டி ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான உள்முரண்பாடுகளும் வெடித்துவிட்டது, இம்மோதல் இறுதியில் போருக்கு இட்டுச் செல்லும் என்பதை வெளிப்படுத்துகிறது. இராணுவ வழிவகையின் மூலம் தன்னுடைய உலக மேலாதிக்கத்தை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ள முயலுகையில், பழைய முதலாளித்துவ சக்திகளும், புதியவையும் கூட களத்தில் இறங்கியுள்ளன. ரஷ்யா மீண்டும் தன்னை ஒரு உலக சக்தியாக நிறுவ முயன்று வருகிறது; ஜப்பான் தன்னுடைய போருக்குப் பிந்தைய சமாதான நெறி மிகுந்த அரசியலமைப்பை திருத்தி எழுத முற்படுகிறது; வட கொரியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரவேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதில் அது முன்னணியில் உள்ளது; அங்குள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தவிர்க்கமுடியாத தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். உலகின் மிக வேகமாக வளர்ச்சியுற்று வரும் பொருளாதாரத்தை கொண்டது என்ற நிலையில் சீனா, அமெரிக்க நலன்களுடன் மோதுகிறது. இப்படிப் பட்டியல் பெருகிக் கொண்டே போகிறது. இப்பகுதியில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் தன்னுடைய கோரிக்கைகளை அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் "கொல்லைப் புறத்திலேயே" வலியுறுத்த தலைப்பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டில் இரு உலகப் போர்களால் சந்தைகள், இலாபங்கள், மூலவளங்கள் ஆகியவற்றிற்காக பிரிக்கப்பட்டும், பழையபடி பிரிக்கப்பட்டும் உள்ள உலகம் மறுபடியும் பிரிக்கப்பட உள்ளது. இந்த இராணுவவாதம், காலனித்துவவாதம் மற்றும் போர் என்ற திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தன்னுடைய சுயாதீனமான சோசலிச முன்னோக்கை உலகின் மறு ஒழுங்கமைப்பிற்காகவும், மனித குலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் முன்வைக்க வேண்டும். அதுதான் திமோரில் ஆஸ்திரேலிய இராணுவத் தலையீட்டிற்கு எதிராக கொள்ளப்பட வேண்டிய அரசியல் போராட்டத்தின் பரந்த முக்கியத்துவம் ஆகும். |