:
இலங்கை
Sri Lankan peace talks on the verge of collapse
இலங்கை சமாதானப் பேச்சுக்கள் பொறிவின் விளிம்பில்
By Nanda Wickremasinghe and K. Ratnayake
19 April 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இலங்கையின் யுத்த பிராந்தியங்களான வடக்கு மற்றும் கிழக்கில் வன்முறைகள் அதிகரித்து
வருகின்ற நிலைமையின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனீவா சமாதானப்
பேச்சுக்கள் பொறிவின் விளிம்புக்கு வந்துள்ளன.
ஏப்பிரல் மாத ஆரம்பத்தில் இருந்து இராணுவ சிப்பாய்கள், புலி உறுப்பினர்கள்
மற்றும் பொது மக்கள் உட்பட சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதிகளவிலானவர்கள் காயமடைந்துள்ளதோடு
ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறவிருந்த போதிலும், ஜெனீவா
பேச்சுக்களுக்கு முன்னதாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ள கிழக்கில் உள்ள புலிகளின் தலைவர்கள் வடக்கில் உள்ள
புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு செல்ல போக்குவரத்து வழங்குவது சம்பந்தமாக உருவான பிளவை அடுத்து
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏப்பிரல் 24-25 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விமானப்படையின் போக்குவரத்திற்காக
புலிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆதரவுடன் பாதுகாப்பு அமைச்சு ஆத்திரமூட்டும்
வகையில் நிராகரித்தது. இதற்கு முன்னர் இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது.
கடற் போக்குவரத்தை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள்
குழம்பிப்போனதோடு, இறுதியாக சர்வதேச அழுத்தத்தின் கீழ் ஒரு நன்நம்பிக்கையின் அறிகுறியாக தனியார் ஹெலிகொப்டர்
ஒன்றை வாடகைக்கு அமர்த்த முடிவுசெய்யப்பட்டது. எவ்வாறெனினும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான உத்தரவாதங்கள்
கிடையாது.
புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சு.ப. தமிழ்செல்வன் கடந்த திங்கட் கிழமை
நோர்வே தூதுவருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், "ஜெனீவா பேச்சுக்களில் பங்குபற்றுவதற்கு எமக்கு முன்னால் உள்ள
இடையூறுகள் அகற்றப்பட்டு ஒரு சாதகமாக சூழல் உருவாக்கப்படும் வரை" புலிகளால் பேச்சுக்களில் பங்குபற்ற
முடியாது, என குறிப்பிட்டிருந்தார்.
ராய்ட்டருக்கு நேற்று கருத்துத் தெரிவித்த புலிகளின் சமதான செயலகத்தின் தலைவர்
எஸ். புலித்தேவன் மேலதிகமாக குறிப்பிட்டதாவது: "எமது மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதோடு எமது
கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நாம் ஜெனீவாவிற்கு செல்லப் போவதில்லை." புலிகள்
வன்முறைகளுக்கு முடிவுகட்டுவது சம்பந்தமாக நோர்வே சமாதானத் தூதர் ஜோன் ஹன்சன் பெளவர் உடன் நாளை
கலந்துரையாட திட்டிமிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா பேச்சுக்களுக்கான ஏற்பாடுகளுக்கு ஒட்டுபோடும் முயற்சியை முன்னெடுக்க
இரண்டு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக பெளவர் நேற்று இலங்கைக்கு வருகைதந்தார். 2002ல்
கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் நோர்வே தலைமையிலான இலங்கை கண்காணிப்புக்
குழு, இலங்கையிலான நிலைமைகள் கட்டுப்பாட்டையும் மீறி சுழல்வதாக திங்களன்று தோல்விமனப்பான்மையுடன்
எச்சரித்திருந்தது.
"ஏற்கனவே மக்கள் பெருமளவில் இறந்துகொண்டிருக்கின்றார்கள், எனவே நிலைமை
ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதோடு எங்களால் இவ்வாறு தொடர்ந்தும் முன்செல்ல முடியாது.
சம்பந்தப்பட்டவர்கள் யார் மற்றும் ஏன் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பது சம்பந்தமாக ஊகிப்பது மற்றும்
சிந்தித்துப் பார்ப்பதற்கு பதிலாக இந்த முட்டுச் சந்தில் இருந்து வெளியேற வழிபார்க்க வேண்டும்," என
கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃவ்ஸ்டோடிர் தெரிவித்தார்.
யுத்த ஆபத்து பற்றிய திடீர் அச்சத்தின் அறிகுறியாக, ஈஸ்டர் விடுமுறையின் போது
கொழும்பு பங்குச் சந்தை 30 பில்லியன் ரூபாய்களை (300 அமெ. டொலர்கள்) இழந்தது. அனைத்து
பங்குவிலைச் சுட்டெண் 4 வீதத்தால் அல்லது 100 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. "வன்முறைகளின் அதிகரிப்பும்
மற்றும் ஜெனீவா பேச்சுக்கள் பற்றிய சந்தேகமும், முதலீட்டாளர்கள் தறுவாய்பார்த்து ஒதுக்கீடு செய்துகொண்டுள்ள
பங்குகளின் இலாபங்களை கீழறுத்துள்ளதோடு, அனைத்து பங்குவிலை சுட்டெண் மற்றும் முன்னணி கம்பனிகளின்
பங்குவிலைச் சுட்டெண்ணிலும் தெளிவான வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது," என ஜோன் கீல்ஸ் பங்குத் தரகர்கள்
குறிப்பிட்டனர்.
2003 ஏப்பிரலில் பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து
முதற்தடவையாக பெப்பிரவரி 22-23ம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்ற முதற்சுற்றுப் பேச்சுக்கள்,
ஆட்டங்கண்டு போயுள்ள தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்த கொழும்பு
வலியுறுத்துமானால் தாம் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறப் போவதாக புலிகளின் பிரதிநிதிகள்
அச்சுறுத்தியதை அடுத்து முற்றிலும் முறிவு நிலையை அடைந்தது. உக்கிரமான சர்வதேச அழுத்தங்களின் விளைவாக இரு
சாராரும் யுத்த நிறுத்தத்தை பேணவும் மேலும் பேச்சுக்களை முன்னெடுக்கவும் உடன்பட்டனர்.
ஆயினும், இராஜபக்ஷ நிர்வாகம், யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருத்தியமைக்கவும்
மற்றும் நோர்வே சமாதான அனுசரணையாளரை வெளியேற்றவும் தவறியமைக்காக, அதனது பங்காளிகளான மக்கள்
விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள தீவிரவாத கட்சிகளின் உடனடி எதிர்ப்புக்கு
உள்ளாகியது. இந்த சிறுபான்மை அரசாங்கத்திற்கு தீர்க்கமான பாராளுமன்ற ஆதரவை வழங்கும் மற்றும் கடந்த
நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும், யுத்த நிறுத்த
உடன்படிக்கையையும் மற்றும் புலிகளுக்கு சார்பாக இருப்பதோடு இலங்கையின் இறைமையையும் கீழறுப்பதாக கூறி
தாக்குகின்றனர்.
இராணுவ உயர்மட்டத்தினரும் யுத்த நிறுத்த உடன்படிக்கை பற்றி பங்கிரங்கமாக
விமர்சிக்கின்றனர். ஆயுதப் படைகளின் சில பிரிவினர், குறிப்பாக புலனாய்வுத் துறையினர், தமிழ் துணைப்படை
குழுக்களுடன், குறிப்பாக கிழக்கில் கருணா அல்லது முரளீதரன் தலைமையில் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற
குழுவுடன் நெருக்கமாக உள்ளன. கொழும்பு அரசாங்கம் ஜெனீவாவில் நடந்த முதல் சுற்றுப்
பேச்சுவார்த்தையின்போது, யுத்தநிறுத்த உடன்படிக்கையின் விதிகளை நடைமுறைப்படுத்தவும், இத்தகைய
துணைப்படைகளை நிராயுதபாணிகளாக்கவும் உடன்பட்ட போதிலும், இந்த வாக்குறுதிகளை மதிக்கும் விதத்தில்
எதனையும் செய்யவில்லை.
பெப்பிரவரி பேச்சுக்களின் பின்னர் வன்முறைகள் தணிந்திருந்த போதிலும், மீண்டும் ஒரு
பிரகடனம் செய்யப்படாத யுத்தத்திற்கு சமமான வகையில் வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் மோசமாகியுள்ளன.
கருணா மற்றும் ஏனைய துணைப்படைகளுக்கு உதவவில்லை எனவும், இந்தக் குழுக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டிலான
பிராந்தியத்தில் இயங்கவில்லை எனவும் இராணுவம் மொட்டையாக நிராகரிக்கின்றது. இன்னமும் இந்த சம்பவங்கள்
வெளிப்படையானதாக இருப்பதோடு கண்காணிப்புக் குழுவும் கூட அதை சுட்டிக்காட்டத் தள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 25 அன்று, வடமேற்கு கடலில் டோலர் படகு ஒன்று வெடிக்கச்
செய்யப்பட்டு எட்டு கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டனம் செய்த கண்காணிப்புக் குழுவின் அறிக்கை
ஒன்று, அரசாங்கம் துணைப்படைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தையும்
சாடியது. கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ருப் ஹக்லண்ட், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின்
அறிக்கையை மறுத்து சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "ஆம் நாம் அவர்களை
சந்தித்தோம் (துணைப்படையினரை), அவர்களுடன் பேசினோம்," என்றார். இந்தக் குழுக்களை இராணுவம்
ஆதரிப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட ஹக்டன்ட் பிரகடனப்படுத்தியதாவது:
"அவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதசத்தில் செயற்படவில்லை என இராணுவத் தளபதி கூறுவது தவறு என்பதை
தெரிவிப்பதில் நான் வருத்தப்படுகிறேன்."
அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் எல்லாவிதமான மறுப்புகளுக்கு மத்தியிலும்,
துணைப்படைக் கருவிகளுக்கான அவர்களின் அரசியல் அனுதாபம் தெளிவானதாகும். ஏப்பிரல் 10 அன்று, கருணா
குழுவின் அரசியல் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள், முதற் தடவையாக மட்டக்களப்பில் ஒரு பகிரங்க
அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த வைபவம் கடுமையான பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பிலேயே
இடம்பெற்றது.
இந்த புதிய சுற்று வன்முறைகள், ஏப்பிரல் 7 அன்று புலிகளுக்கு சார்பான
திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வி. விக்னேஸ்வரன் ஆத்திரமூட்டும் வகையில்
படுகொலை செய்யப்பட்டதை அடுத்தே அதிகரிக்கத் தொடங்கியது. அவர் கிழக்குத் துறைமுக நகரான
திருகோணமலையில் ஒரு இனந்தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த டிசம்பரில் இனந்தெரியாத
நபரால் படுகொலை செய்யப்பட்ட புலிகள் சார்பு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்திற்கு
பதிலாக விக்னேஸ்வரன் பதவியேற்கவிருந்தார்.
விக்னேஸ்வரனின் கொலையானது இராணுவ உயர்பாதுகாப்பு வலயமொன்றுக்குள்
இராணுவ சோதனைச் சாவடிக்கும் அதேபோல் கடற்படை கட்டளை முகாமொன்றுக்கும் அருகிலேய நடந்தது.
கொலையாளி இன்னமும் கைதுசெய்யப்படவில்லை. இந்தப் படுகொலையில் இராணுவத்திற்கு தொடர்பில்லை என அது
மறுத்ததுடன் அரசாங்கமும் படுகொலையை கண்டித்து வழக்கமான கண்டனத்தை வெளியிட்டது. இது "இராணுவத்தினதும்
மற்றும் அதன் புலானாய்வு அலுவலர்களதும்" வேலை என புலிகள் பிரகடனம் செய்தனர். எவர் பொறுப்பாளியாக
இருந்தாலும், அவர்களது இலக்கு தெளிவாகவே வன்முறைகளை தூண்டிவிட்டு அடுத்துவரும் ஜெனீவா பேச்சுக்களை
கவிழ்ப்பதுமேயாகும்.
மூன்று நாட்களின் பின்னர், பொங்கியெழும் மக்கள் படை என்ற பெயரிலான ஒரு
குழு, யாழ்ப்பாணக் குடாநாட்டின் மிருசுவில் பகுதியில் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலை பொறுப்பேற்று
கொண்டது. இந்தத் தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். ஏப்பிரல் 11, இன்னுமொரு கண்ணிவெடித்
தாக்குதலில் பதினொரு கடற்படை சிப்பாய்கள் கொல்லப்பட்டதுடன் எட்டுபோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில்
தலையீடு செய்யவில்லை என புலிகள் உத்தியோகபூர்வமாக மறுத்தபோதும், அவர்கள் இதற்கு கட்டளையிட்டிருக்கலாம்
என்ற சந்தேகமும் உள்ளது. தாக்குதல்களும் பழிவாங்கல்களும் இப்போது வடக்கு மற்றும் கிழக்கில் பொதுவானதாகிவிட்டன.
ஏப்பிரல் 12, திருகோணமலையில் ஒரு மோசமான சம்பவம் இடம்பெற்றது. சன
நெருக்கடியான ஒரு மரக்கறி சந்தையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு தமிழர்கள், ஏழு சிங்களவர்கள்
மற்றும் ஆறு முஸ்லிம்களுமாக 18 பொது மக்களும் ஒரு இராணுவ சிப்பாயும் கொல்லப்பட்டனர். இந்தக்
குண்டுவெடிப்பை அடுத்து, சிங்களக் காடையர் கும்பலொன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான சுமார்
இரண்டு டசின் கடைகளை கொள்ளையடித்ததோடு தீமூட்டி எரித்தது. அரசாங்கமும் புலிகளும் ஒருவரையொருவர்
குற்றஞ்சாட்டிக்கொண்டனர்.
இந்தக் குண்டுத் தாக்குதல் பிரதேசத்தில் இனவாத பதட்ட நிலைமையை மிகவும் உக்கிரமடையச்
செய்தது. சுமார் 2000 தமிழர்கள் அருகில் உள்ள கிராமங்கள், பாடசாலைகள் மற்றும் கோவில்களுக்கும்
இடம்பெயர்ந்துள்ளனர். சில கிராமங்களில், பழிவாங்கல்களுக்கு பயந்த சிங்கள விவசாயிகளும்
இடம்பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுதுதவதற்காக இந்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டனர்.
பாதுகாப்பு செயலாளர் கோதபாய இராஜபக்ஷவும் இராணுவ உயர்மட்ட அலுவலர்களும் "பாதுகாப்பு நிலைமையை
ஆராய்வதற்காக" நேற்று திருகோணமலைக்கு பயணம் செய்திருந்தனர்.
புலிகள் கடந்த காலத்தில் இனவாத ஆத்திரமூட்டல்களை மேற்கொண்டுள்ளனர். ஆயினும்,
இந்த விடயத்தைப் பொறுத்தளவில், யார் பொறுப்பாளிகள் என்பது பற்றி கடுமையான சந்தேகங்கள் நிலவுகின்றன.
கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகையின்படி, வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.
ராஜாராம் மோஹன், "பொலிஸ் உடனடியாக செயற்படவில்லை" என உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார்.
ஹட்டன் நஷனல் வங்கியின் கிளை முகாமையாளரான கே. ஆறுமுகம், உள்ளூர் பொலிஸ் தலைமையகத்துடன் ஒரு
அவசர வங்கி எச்சரிக்கை மணி இணைக்கப்பட்டிருந்தும் கூட பொலிஸார் 30 நிமிடங்களாகியும் அங்கு வந்திருக்கவில்லை
எனக் குறிப்பிட்டார்.
இந்தக் குண்டுத் தாக்குதல், தமிழ் துணைப்படைகளால் அல்லது ஜே.வி.பி, ஜாதிக
ஹெல உறுமய ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட சிங்களப் பேரினவாதிகளால் அல்லது கிழக்கில் பாதுகாப்புப்
படைகளுடன் நெருக்கமான தொடர்புகள் வைத்திருக்கும் வடக்கு கிழக்கு சிங்கள அமைப்பு போன்ற ஏனைய
கருவிகளும் இதை நன்கு ஏற்பாடு செய்திருக்கக் கூடும். இந்தக் குழுக்களும், அதேபோல் இராணுவ ஸ்தாபனத்தின்
சில பிரிவினரும் சமாதான முன்னெடுப்புகளை கடுமையாக எதிர்க்கின்றன.
ஜே.வி.பி ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக யுத்த நிறுத்த உடன்படிக்கையில்
மாற்றங்களை செய்ய வேண்டுமெனவும் புலிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் ஒரு உக்கிரமான
பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஏப்பிரல் 16 வெளியிடப்பட்ட ஜே.வி.பி.யின் அரசியல் குழு அறிக்கையானது
"பிரிவினைவாத பயங்கரவாதத்திடமிருந்து தாய் நாட்டை விடுவித்துக்கொள்ள அனைவரும் ஒன்றுபடவேண்டும்" என அழைப்பு
விடுத்தது. "அரசாங்கமும் தேசப்பற்றுள்ள வெகுஜனங்களும் போலி சமாதானம் என்ற பெயரில் பாதுகாப்பு படை
உறுப்பினர்களினதும் மற்றும் நிராயுதபாணியான பிரஜைகளதும் உயிர்களை விழுங்க புலி பயங்கரவாதிகளை அனுமதிக்கக்
கூடாது," அது வலியுறுத்தியது.
நாட்டின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டும் பேச்சுவார்த்தைகளுக்கு
உடன்பட்டு ஒரு தீர்வுகாணுமாறு கோரும் கடுமையான சர்வதேச அழுத்தத்தை புலிகள் எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக
பிராந்தியத்தில் வளர்ச்சிகண்டுவரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு இந்த மோதல்கள் ஒரு ஆபத்தான
முட்டுக்கட்டையாக இருப்பதாக கருதும் அமெரிக்கா, புலிகளை பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு நெருக்கிவருகின்றது.
அது இலங்கை இராணுவ சிப்பாய்கள் மீதான புதிய தாக்குதல்களை பக்கச்சார்பாக இருந்து கண்டனம் செய்ததோடு
மீண்டும் மோதல்கள் வெடிக்கும் பட்சத்தில் கொழும்புக்கு ஆதரவு வழங்கப்போவதாகவும் கடந்த ஜனவரியில் ஒரு
மறைமுகமான அச்சுறுத்தலையும் விடுத்தது.
எவ்வாறெனினும், அதேசமயம், புலிகள் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் வீழ்ச்சியடைந்து
வரும் ஆதரவை தூக்கி நிறுத்தவும் அவநம்பிக்கையுடன் உள்ளனர். மூன்று வருடகால யுத்த நிறுத்தத்தின் பின்னர், வடக்கு
மற்றும் கிழக்கில் உள்ள உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் மேலும் சீரழிந்து போயுள்ளதுடன் புலிகள் விதிக்கும்
வரிகள் மற்றும் எதேச்சதிகார ஆட்சி சம்பந்தமாகவும் அதிருப்தி வளர்ந்துவருகின்றது. இதன் விளைவாக, புலிகள்
தமது நிலைப்பாட்டை தூக்கிநிறுத்துவதன் பேரில் இனவாத பதட்ட நிலைமைகளை கிளறிவிடுவதோடு சிங்கள விரோத
பேரினவாதத்தையும் நாடுகின்றனர்.
இரண்டாவது சுற்று ஜெனீவா பேச்சுக்கள் நடைபெற்றாலும் கூட, எந்தவொரு உறுதியான
உடன்பாடும் காணப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. இரு சாராரும் குறிப்பிடத்தக்க சலுகைகளை
வழங்க இலாயக்கற்றிருப்பதானது இலங்கை ஆளும் கும்பலில் எந்தவொரு பிரிவும் இனவாத அரசியலில் இருந்து வேறுபட
முடியாதவை என்பதையே பிரதிபலிக்கின்றது. இந்த ஆளும் கும்பலானது தனது நிலையற்ற ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதன்
பேரில் உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதற்காக கடந்த 50 வருடங்களாக இனவாத அரசியலில் தங்கியிருக்கின்றன.
Top of page
|