WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
The way forward for Sri Lankan public sector workers
இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு முன்னோக்கிய பாதை
By the Socialist Equality Party (Sri Lanka)
3 April 2006
Use this
version to print | Send this link by
email | Email the author
இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் தமக்கும் மற்றும் தமது குடும்பத்திற்கும்
அதிகரித்துவரும் விலைவாசியை சமாளிக்கக் கூடிய வகையில் தமது ஊதியத்தை 65 வீதத்தால் அதிகரிக்கக் கோரி
இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அதிகளவிலான தொழிலாளர்கள், அதே போல் நகர்ப்புற
மற்றும் கிராமப்புற ஏழைகளும் இந்தப் போராட்டத்தை கவனித்துக் கொண்டிருப்பதோடு தொடர்ச்சியாக சீரழிந்து
வரும் வாழக்கை தரத்தை தூக்கிநிறுத்த தம்மால் என்ன செய்ய முடியும் என சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறெனினும், இந்த பிரச்சாரத்தை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும்
மற்றும் அதன் கொடூரமான சந்தை சீர்திருத்த திட்டங்களுக்கும் எதிரான ஒரு பரந்த இயக்கமாக மாற்றுவதற்கு
மாறாக, தொழிற்சங்க தலைவர்கள் அதை வரையறுத்து மட்டுப்படுத்தவே ஆரம்பத்தில் இருந்து முயற்சிக்கின்றனர்.
சிலர் இதில் பங்குபற்ற மறுத்ததோடு பிரச்சாரத்தை கீழறுக்க நடைமுறையில் முயற்சித்தனர். ஏனையவர்கள் அரசாங்கத்துடன்
சேர்ந்து செயற்பட்டு "பிரச்சினையை தீர்ப்பதாக" கூறி விலகிக்கொண்டனர்.
சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் மன்றாடுவதன் மூலம் எதுவும் கிடைக்கப் போவதில்லை
என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) எச்சரிக்கின்றது. அவசியமானது என்னவெனில் புரட்சிகர
முன்நோக்கும் தலைமைத்துவமுமே ஆகும். அரசாங்க ஊழியர்கள், தாம் அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமன்றி, அதன்
கூட்டுத்தாபன ஆதரவாளர்கள் மற்றும் பூகோள மூலதனத்தின் முகவர்களுக்கும் எதிராக ஒரு அரசியல்
போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் சோசலிசக்
கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினரையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணுக
வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், சர்வதேச நாணய
நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளை அமுல்படுத்தி வந்துள்ளன. இலட்சக்கணக்கான தொழில்கள்
சீரழிக்கப்பட்டு, அரச நிறுவனங்கள் விற்கப்பட்டு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய
சேவைகளுக்கான நிதி வெட்டித்தள்ளப்பட்டுள்ளதோடு அரசாங்க ஊழியர்களின் சம்பளத் தரமும் கீழறுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தன்னை "பொதுமக்களின் மனிதனாக" காட்டிக்கொண்ட போதிலும், தமது
முன்னோடிகளை போலவே, தீவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு மலிவு உழைப்பு களமாக மாற்றுவதில்
முன்னீடுபாடுகொண்டுள்ளார்.
அரசாங்கம் பெரும்பான்மையான அரசாங்க ஊழியர்களுக்கு எதையும் கொடுக்காமல்,
உயர் பதவி வகிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு 65 வீதம் சம்பள உயர்வு கொடுப்பதற்காக தனது சம்பள
ஆணைக்குழுவின் சிபாரிசை அமுல்படுத்த முயற்சித்தபோதே தற்போதைய முரண்பாடு வெடித்தது. இந்தப் பாரபட்சம்
வேலை நிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பது வரை கொதிப்படைந்த போது, இராஜபக்ஷ அடுத்த வரவு
செலவுத் திட்டத்தில் அணுகக் கூடிய வகையில் ஒன்பது மாத கால இடைவெளிக்கான ஒரு "பிரேரணையை"
முன்வைப்பதற்காக ஒரு புதிய சம்பள ஆணைக்குழுவை அறிவித்தார். இது பிரச்சாரத்தை குழப்புவதற்கான ஒரு
வெளிப்படையான சூழ்ச்சி திட்டமே அன்றி வேறொன்றுமல்ல.
நிர்வாக முறைமைக்கான தேசிய பேரவையின் தலைவர் திஸ்ஸ தேவேந்திர, மார்ச்
22 டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்தபோது, அரசாங்கத்தின் உண்மையான போக்கை
வெளிப்படுத்தினார். "அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தால், ஏனையவர்களும் மேலும்
கேட்பார்கள். இது சேவைக் கட்டணங்களை அதிகரிக்கச் செய்வதோடு ஒரு தொகை தாக்கத்தை ஏற்படுத்தும்"
என அவர் தெரிவித்தார்.
உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குனர் பீட்டர் ஹெரால்ட், அரசாங்க
ஊழியர்களுக்கு உயர்ந்த ஊதியம் கொடுக்க முடியாது என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்டியதோடு, அரசாங்கம்
கட்டளைகளை பின்பற்றாவிட்டால் உதவிகள் வெடிக் குறைக்கப்படலாம் என்பதையும் சமிக்ஞை செய்தார். "இலங்கை
வெளிநாட்டு நிதிகளிலேயே அதிகம் தங்கியிருக்கின்றது. அரசாங்க செலவுகளில் 50 வீதம் நிதி நிறுவனங்களால்
வழங்கப்படுகின்றது என்பதில் விவாதத்திற்கிடமில்லை," என அவர் பிரகடம் செய்தார்.
தொழிலாளர்கள் தற்போதைய தொழிற்சங்கத் தலைமையில் நம்பிக்கை வைக்க
முடியாது. சுமார் 200 "சுயாதீன" தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான அரசாங்க ஊழியர்களின் சம்பள ஆய்வு
தொழிற்சங்க கமிட்டியானது, பலவித அரசியல் கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்களுடனான பரந்த அதிருப்தியின்
காரணமாக தோன்றியதே. வேலைத் தலங்களில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சயாதீனமாக
போராடுவதாக இந்த தொழிற்சங்கங்கள் வாக்குறுதியளித்த போதிலும், அவர்களது சாதனைகள் மறுபக்கத்தையே
காட்டுகின்றன.
இந்த தொழிற்சங்கக் கமிட்டி மார்ச் 16 அன்று 300,000 தொழிலாளர்கள்
வேலை செய்வதை நிறுத்தியவுடன் அதிர்ச்சிக்குள்ளானது. 65 வீத சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கையில் இருந்து
ஏற்கனவே பின்வாங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கமிட்டி, அதற்குப் பதிலாக "புதிய ஊதிய திட்டங்கள் அமைக்கப்படும்
வரை" 3,000 ரூபா இடைக்கால மாதாந்த அதிகரிப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கின்றது.
சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பும் தபால் மற்றும் தொலைத்
தொடர்பு தொழிற்சங்கங்களும், எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக மார்ச் 30 உள்ளூராட்சி சபை தேர்தல்களை
பகிஷ்கரிப்பதற்கு ஆரம்பத்தில் அழைப்பு விடுத்தபோது, அவர்கள் இந்த தொழிற்சங்க கமிட்டியில் உள்ள அரசாங்க
சார்பு பிரிவினர், அதேபோல் பல அரசியல் கட்சிகளினதும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.
முன்வைக்கப்பட்ட பகிஷ்கரிப்பு திட்டத்தை கண்டனம் செய்த இராஜபக்ஷ, "உழைக்கும்
மக்கள், ஒரு சிலரின் கோரிக்கைகளுக்கு சரணடையக் கூடாது" என்றார். மார்ச் 16 வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற
மறுத்த மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி) சார்பான தொழிற்சங்கமான அகில இலங்கை தொழிற்சங்க
சம்மேளனமானது, அத்தகைய ஒரு பகிஷ்கரிப்பு அரசாங்கத்தை மட்டுமன்றி தமது கட்சியையும் பாதிக்கும் என ஏற்றுக்கொண்டது.
கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அரசாங்க சேவையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் டபிள்யூ. எச்.
பியதாச சம்பள கோரிக்கையை "ஆதரித்த" போதிலும், பகிஷ்கரிப்புக்கான அழைப்பை கண்டனம் செய்ததோடு
வாக்குறுதிகளை "முறைப்படி" அமுல்படுத்துபவர் என இராஜபக்ஷவை பாராட்டினார்.
இந்தப் பெரும் தடையை எதிர்கொண்ட சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க
கூட்டமைப்பும் ஏனைய தொழிற்சங்கங்களும் தணிந்து போயின. அவர்கள், உழைக்கும் மக்களின் பரந்த தட்டினரை
ஈடுபடுத்துவதை இலக்காகக் கொண்ட ஒரு செயற்திறன் கொண்ட பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆயினும்,
இராஜபக்ஷவும் அவரது பங்காளிகளும், இந்தப் பகட்டுவித்தை அதிருப்தியடைந்துள்ள மற்றும் முழு அரசியல்
ஸ்பானத்திலிருந்தும் தனிமைப்பட்டுள்ள வாக்காளர்களின் மனநிலையை பற்றிக்கொள்வதோடு சுதந்திர முன்னணியின்
தேர்தல் வாய்ப்புக்களையும் சேதப்படுத்தும் என்பதில் திகிலடைந்திருந்தனர்.
அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு சம்பள ஆய்வு தொழிற்சங்கக்
கமிட்டியின் தலைமைத்துவம் காட்டும் எதிர்ப்பு, இன்றைய ஆர்ப்பாட்டத்தை தீர்மானித்த மார்ச் 26 நடந்த
பிரதிநிதிகளின் கூட்டம் வெளிப்படுத்தியுள்ளது. சோ.ச.க பிரதிநிதி ஒருவரின் பேச்சுக்கு பிரதிபலித்த சுகாதார
ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சமன் ரட்னபிரிய, "நாங்கள் பெரிய பேரம் பேசும் சக்தியை
கட்டியெழுப்ப வேண்டும்" என பிரகடனம் செய்ததன் மூலம், இந்த வேலை நிறுத்தத்தில் உள்ள அரசியல் விடயங்களை
பற்றிய எந்தவொரு கலந்துரையாடலையும் நிராகரித்தார்.
இந்தப் பிரச்சாரம் எவ்வளவு பிரமாண்டமானதாக இருந்தாலும் அல்லது எவ்வளவு
வெளிப்படையான போர்க்குணம் மிக்கதாக இருந்தாலும், ஒரு சோசலிச முன்நோக்கின்றி தோல்வியை
தழுவிக்கொண்டிருக்கின்றது என சோ.ச.க சமரசமின்றி எச்சரிக்கின்றது. தொழிற்சங்கத்தில் "அரசியல்
தேவையில்ல" என கூறும் தலைவர்கள் தமது உறுப்பினர்கள் மீண்டும் குறுட்டுச் சந்துக்குள் வழிநடத்த தயார்
செய்துகொண்டிருக்கின்றார்கள். மூடிய கதவுகளுக்குப் பின்னால், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரச
இயந்திரங்களுடனான கலந்துரையாடல்களில் போதுமானளவு அரசியல் கலந்திருந்தாலும், அவை தொழிலாள
வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாக கொண்டவையாக இருக்கப் போவதில்லை.
"அரசியல் தேவையில்லை" என்ற அதே சுலோகம், 1980ல் கடைசியாக நடந்த
அரசாங்க ஊழியர்களின் மிகப் பெரும் வேலை நிறுத்தத்தில் சோ.ச.க வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தின் தலையீட்டை எதிர்க்கவும் பயன்படுத்தப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க), கம்யூனிஸ்ட்
கட்சி மற்றும் ந.ச.ச.க ஆகிய கட்சிகள் அனைத்தும், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்திற்கும்
மற்றும் அதன் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்திற்கும் எதிரான அரசியல் போராட்டத்திற்கான புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகத்தின் கோரிக்கையை எதிர்த்தன. அரசாங்க ஊழியர்கள் அந்த அழிவுகரமான தோல்விக்கு இன்னமும்
விலை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த தோல்வியின் விளைவாக 150,000 ஊழியர்கள் வேலை நீக்கம்
செய்யப்பட்டார்கள்.
சோ.ச.க, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகவும் தரமான சம்பளம் மற்றும்
நிலைமைகளுக்காகவும் பிரச்சாரம் செய்வதற்கான அடிப்படையாக பின்வரும் அரசியல் திட்டங்களை
பரிந்துரைக்கின்றது.
அனைத்துலகவாதம்
உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் கம்பனிகளின் இலாபத்தை
பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு வாழ்க்கை தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஈவிரக்கமற்று
தொடுக்கப்படும் ஒரே மாதிரியான தாக்குதல்களையே எதிர்கொள்கின்றனர். மில்லியன் கணக்கான பிரான்ஸ்
தொழிலாளர்களும் இளைஞர்களும் முதல் வேலை ஒப்பந்த சட்டத்திற்கு எதிராக தற்போது போராட்டத்தில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த சட்டமானது இளம் தொழிலாளர்களை எதேச்சதிகாரமான முறையில் வேலை
நீக்கம் செய்ய அனுமதிக்கின்றது. ஜேர்மனியில் உள்ள அரசாங்க ஊழியர்கள் மார்ச் முற்பகுதியில் நீண்ட நேர
வேலைக்கு எதிராக வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த திங்கழன்று, ஒரு மில்லியன் பிரித்தானிய
உள்ளூர் அரசாங்க ஊழியர்கள், ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர்.
ஒவ்வொரு நாட்டிலும், உழைக்கும் மக்கள் "தமது தேசத்திற்காக" அர்ப்பணிப்புகளை
செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும், இலங்கையில் உள்ள தொழிலாளர்களின் இயற்கையான
பங்காளிகள் கொழும்பில் உள்ள கூட்டத்தாபன கும்பல்கள் அல்ல. மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கமே
ஆகும். ஒரு சிறிய தீவில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை தோற்கடிக்க
முடியாது. மாறாக, இது ஒரு பரந்த அனைத்துலக இயக்கத்தை கட்டியெழுப்புவதை வேண்டி நிற்கிறது.
யுத்தத்திற்கு முடிவு
கெளரவமான வாழ்க்கை தரத்திற்கான போராட்டமானது இன்றியமையாத வகையில்
நாட்டின் அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்திற்கு வர்க்க தீர்வு காண்பதுடன் கட்டுண்டுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கம்
பாதுகாப்பு செலவுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்களை கொட்டுகின்றபோதிலும் கூட, அராசங்க துறை
ஊழயர்களின் சம்பளத்திற்காக பணம் இல்லை என வலியுறுத்துகிறது. அதன் பேரினவாத பங்காளிகளான ஜே.வி.பி
மீண்டும் யுத்தத்திற்கு திரும்ப ஆர்ப்பாட்டம் செய்கின்ற அளவில், இராணுவத்திற்காக மேலும் பணம் செலவு
செய்யப்பட வேண்டும் என கோருகின்றது. இராஜபக்ஷவின் "சமாதானத் திட்டம்" ஒரே நாணயத்தின் இன்னுமொரு
பக்கமாகும்: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அதிகாரப் பரவலாக்கல் தீர்வானது சந்தை சீர்திருத்தங்களையும்
மற்றும் இலங்கை தொழிலாளர்களை சுரண்டுவதையும் துரிதப்படுத்துவதற்கே ஆகும்.
தொழிலாள வர்க்கம் உள்நாட்டு யுத்தத்திற்கு அதன் சொந்த தீர்வை அபிவிருத்தி செய்ய
வேண்டும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் இனவாத அரசியலால் பிளவுபடுத்தும் நிலைமையை நிராகரித்து,
தமது சொந்த வர்க்க நலன்களின் பேரில் ஒன்றிணைய வேண்டும். இனவாத யுத்தத்திற்கு ஒரு சதமோ ஒரு ஆளோ
கொடுக்காதே! என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும். வர்க்க ஐக்கியத்திற்கு அடித்தளமிடுவதற்காக, வடக்கு
மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டும்
என தொழிலாளர்கள் கோரிக்கை விடுப்பதோடு தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம்
சோசலிச குடியரசை கட்டியெழுப்ப போராட வேண்டும்.
தொழிலாளர் விவசாயிகளின் அரசாங்கம்
தொழிலாள வர்க்கம், ஆளும் வர்க்கத்தின் அனைத்துவிதமான வலது மற்றும் பெயரளவிலான
"இடது" கட்சிகளில் இருந்து தமது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ளவதோடு, சோசலிச கொள்கைகளை
அடிப்படையாக கொண்ட தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கான கோரிக்கையையும் அபிவிருத்தி செய்ய
வேண்டும். இலாப அமைப்பின் வரம்புக்குள் சலுகைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் வரையறை
கொண்ட தொழிற்சங்க அரசியலில் இருந்து முற்றாக பிளவுபடுவதை இது கோருகின்றது. சமுதாயத்தின் பரந்த
பெரும்பான்மையினரின் நெருக்கும் சமூகத் தேவைகளை விட கூட்டத்தாபனத்தின் இலாபத்தை மாறாமல் முன் கொண்டு
செல்லும் முதலாளித்துவ அரசின் கைகளில் சம்பளம் மற்றும் வாழ்க்கை தரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை
தொழிலாளர்களால் விட்டுவிட முடயாது. இந்தப் போராட்டத்தில், பற்றாக்குறையான சேவைகள் மற்றும் மாணிய
வெட்டுக்கள் உட்பட அரசாங்க கொள்கைகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் கிராமப்புற ஏழைகளின் பக்கம்
தொழிலாள வர்க்கம் திரும்ப வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அரசியல் வேலைத் திட்டத்திற்காக
போராடுவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜன புரட்சிகர கட்சியாக, நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
சோ.ச.க மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத் திட்டத்தை கற்பதற்காக உலக
சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதோடு சர்வதேச கட்சியை கட்டியெழுப்புவதற்காக இணையுமாறும் நாம்
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு ஊக்கமளிக்கின்றோம். |