World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா: இலங்கைLocal elections in Sri Lanka set stage for further political turmoil இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மேலும் அரசியல் குழப்பத்திற்கு களம் அமைக்கின்றன By K. Ratnayake இலங்கையில் மார்ச் 30 நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு பரந்த வெற்றியை பெறுபேறாக்கியுள்ளது. கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அதன் வேட்பாளர் மஹிந்த இராஜபக்ஷ ஒரு குறுகிய வெற்றியை பெற்ற பின்னர் தனது அரசியல் நிலையை உயர்த்திக்கொள்ள அவநம்பிக்கையான நிலையிலேயே சுதந்திர முன்னணி இருந்து வந்தது. தேசிய ரீதியில், இந்த சிறுபான்மை சுதந்திர முன்னணி அரசாங்கமானது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்களத் தீவிரவாத கட்சிகளின் ஆதரவில் மட்டுமே அதிகாரத்தை பற்றிக்கொண்டிருந்தது. சுதந்திர முன்னணி அது போட்டியிட்ட 266 உள்ளூராட்சி சபைகளில் 223 சபைகளில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 2002 தேர்தலில் இருந்து தீவின் தென்பகுதியில் ஏறத்தாழ எல்லா உள்ளூராட்சி சபைகளையும் தம்வசம் கொண்டிருந்த எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி துன்பகரமான முறையில் 32 உள்ளூராட்சிகளை மட்டுமே வென்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்த ஜே.வி.பி, இந்த தேர்தலில் தனியாக போட்டியிட்டு ஒரே ஒரு சபையை மட்டும் வென்று ஒரு பெரும் பின்னடைவைக் கண்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளை அரசாங்கத்திற்குக் கிடைத்த "முழு வெற்றி" எனவும் (நவம்பரில்) ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிற்கு கிடைத்த மக்கள் ஆணை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுதந்திர முன்னணி உடனடியாக பறைசாற்றியது. ஆயினும், இந்த தேர்தல் முடிவுகள் ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை ஒலிக்காததோடு அவரது அரசாங்கம் மூழ்கிப்போயுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு எதையும் செய்துவிடவில்லை. இராஜபக்ஷவால் முன்னெடுக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்கள் பொறிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருப்பதோடு வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கை நிலைமையின் காரணமாக வளர்ச்சி கண்டுவரும் சமூக அமைதியின்மையையும் அவர் எதிர்கொண்டிருக்கின்றார். முழு அரசியல் ஸ்தாபனம் சம்பந்தமாக வாக்காளர் மத்தியில் நிலவும் அதிருப்தியும் வெறுப்பும் வாக்களிப்பில் ஏற்பட்டுள்ள தெளிவான வீழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பு வீதமானது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமாக இருந்து இம்முறை 65 வீதம் வரை குறைந்துள்ளது. நவம்பரில் 4,880,950 வாக்குகளை இராஜபக்ஷ பெற்ற போதிலும், மார்ச் 30 அன்று அவரது சுதந்திர முன்னணி அதனது "முழு வெற்றியில்" 3,373,966 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஜே.வி.பி தனித்துப் போட்டியிட்டமை மற்றும் 22 சபைகளுக்கான தேர்தல்கள் சட்டரீதியான சவால்களினால் நடத்தப்படாமை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு தெளிவான வீழச்சியாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகிய கட்சிகளுடனான தேர்தல் கூட்டின் மூலமும் சுதந்திர முன்னணிக்கு ஒரு முண்டுகோல் கிடைத்தது. இந்த இருகட்சிகளும் தீவின் மத்தியில் வாழும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வாக்குகளை அதிகரிக்கச் செய்தன. மேலதிகமாக, புத்தளம் மாவட்டத்தில் பல உள்ளூராட்சி சபைகளை வெற்றிகொள்ள உதவிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா) ஆதரவும் கூட்டணிக்கு இலாபகரமாக அமைந்தது. உள்ளூராட்சி தேர்தல்கள் பாரம்பரியமாகவே பதவியில் இருக்கும் அரசாங்கத்திற்கு சார்பானதாக உள்ள காரணத்தால், ஒரு தெளிவான வெற்றியின் பின்னர் இராஜபக்ஷ பூர்த்திசெய்யப்படமுடியாத வாக்குறுதிகள் அடங்கிய நீண்ட பட்டியலை காட்டி செயற்திறனுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். சுதந்திர முன்னணியை ஆதரிக்காத பிரதேசங்கள் அபிவிருத்தி நிதிகளை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சமிக்ஞை செய்துள்ளார். இராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களுக்கு எதிரான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பேரினவாத பிரச்சாரத்தை வெளிப்படையாக சவால் செய்யாத அதேவேளை, அவர் நாட்டின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்ட விரும்பும் பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு அழைப்புவிடுப்பதன் பேரில் சுதந்திர முன்னணியை ஒரு சமாதானக் கட்சியாக பூசிக்காட்ட ஒரு முயற்சியை மேற்கொண்டார். ஒரு தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஒரு புதிய பொதுத்தேர்தலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கக் கூடும் என்ற ஊடங்கள் வெளியிட்ட ஊகத்திற்கு சுதந்திர முன்னணியின் பிரதிபலிப்புகள் அதன் தொடர்ச்சியான பலவீனத்திற்கு ஒரு அறிகுறியாகும். இத்தகைய ஒரு பிரேரணையை இராஜபக்ஷவின் நெருக்கமான உதவியாளர்கள் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்ற ஊடக அறிக்கைகளின் பின்னர், அமைச்சரவை அமைச்சரான மைத்ரிபால சிறிசேன ஒரு பொதுத்தேர்தல் பற்றிய விடயத்தை பகிரங்கமாக மறுத்தார். இந்த முடிவு மாற்றப்பட்டிருக்கக்கூடிய அதே வேளையில், இந்தத் தயக்கமானது கூட்டணி ஒரு பலமான நிலையில் இல்லை என்பதையிட்டு எழுந்த கவலையினாலேயே சுதந்திர முன்னணி தலைமை பின்னடித்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. எதிர்க்கட்சியான ஐ.தே.க, சுதந்திர முன்னணிக்கு குறிப்பிடத்தக்க மாற்றீட்டை வழங்காததோடு கணிசமான தோல்வியை அனுபவிக்கின்றது. நவம்பரில் 4,694,623 ஆக இருந்த அதன் வாக்குகள் இம்முறை 2,410,631 ஆக குறைந்துள்ளன. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சரிந்துவரும் வாழ்க்கைத் தரத்திற்கான தீர்வாக தனது சந்தை மறுசீரமைப்பு திட்டத்தை முன்னெடுப்பதில் தனது பிரச்சாரத்தை அடிப்படையாக்க கொண்டிருந்ததோடு, அவர் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்த தவறியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 2002--2004 வரை ஆட்சியில் இருந்து அவரது ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம், இத்தகைய பொருளாதார கொள்கைகளின் தாக்கத்தின் காரணமாக பரந்தளவில் வெறுப்புக்குள்ளானது. ஜனாதிபதி தேர்தலிலும் மற்றும் இப்போது உள்ளூராட்சி தேர்தலிலும் தோல்விகண்டுள்ள ஐ.தே.க உள்மோதல்களில் மூழ்கியுள்ளது. விக்கிரமசிங்க அண்மைய தோல்விக்காக தனது எதிர் கோஷ்டியினர் மீது குற்றஞ்சாட்டுகிறார். அவர் முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சராக இருந்த மஹிந்த விஜேசேகரவை கட்சியின் செயற்குழுவில் இருந்தும் மற்றும் கட்சி முழுமையாகத் தோல்வி கண்ட மாத்தறை பகுதிக்கான அமைப்பாளர் பதவியில் இருந்தும் வெளியேற்றியுள்ளார். அதற்கு மாற்றாக, "திறமையற்ற தலைமைத்துவம்" என விக்கிரமசிங்கவை விஜேசேகர குற்றஞ்சாட்டுகிறார். அவர் பி.பி.சி க்கு கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து தூரவிலகுவாரானால், ஐ.தே.க தலைவர்களில் ஒரு பிரிவினர் தமது ஆதரவை இராஜபக்ஷவிற்கு வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டார். தம்மை அடிக்கடி "மார்க்சிஸ்டுகள" என போலியாக காட்டிக்கொண்டாலும், சிங்களப் பேரினவாதம் மற்றும் ஜனரஞ்சக வாய்வீச்சுக்களின் கலவையை அடிப்படையாக கொண்ட ஜே.வி.பி யின் ஆதரவு வீழ்ச்சி கண்டமையானது இந்தத் தேர்தல் முடிவுகளின் மிகக் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகும். ஜே.வி.பி இரு பிரதான முதலாளித்துவ கட்சிகள் மீதான வெகுஜன அதிருப்தியை சுரண்டிக்கொள்வதன் மூலம் குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிகளைப் பெற்றிருந்தது. ஆயினும், ஜே.வி.பி 2004ல் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் முதற்தடவையாக ஆட்சியில் பங்குவகித்த போது, கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு சிலவே அமுல்படுத்தப்பட்டிருந்த அளவில் துரிதமாக ஆதரவிழந்தது. இறுதியாக கடந்த ஜூன் மாதத்தில் கூட்டணியை விட்டு வெளியேறிய ஜே.வி.பி, ஜனாதிபதித் தேர்தலில் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல் இராஜபக்ஷவை ஆதரித்தது. ஆகவே இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஜே.வி.பி க்கு ஒரு தீர்க்கமான பரீட்சையாக இருந்ததோடு கட்சி இந்தப் பிரச்சாரத்தில் கணிசமானளவு வளத்தை முதலீடு செய்திருந்தது. 28 சபைகளை வெற்றிகொள்ளக்கூடும் என்பதால் தேர்தல் கூட்டணி ஒன்றுக்கான இராஜபக்ஷவின் அழைப்பை அது நிராகரித்தது. கட்சி நூற்றுக்கணக்கான உள்ளூராட்சி சபைகளை வெற்றிகொள்வதோடு நாட்டில் "இரண்டாவது அரசியல் சக்தியாகவும் உருவாகும்" என்றும் அது பிரச்சாரத்தின் போது பிரகடனம் செய்தது. மார்ச் 29 நடந்த ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், ஜே.வி.பி. யின் செயலாளர் டில்வின் சில்வா, "கட்சி 12,000 கூட்டங்களை நாடு பூராவும் நடத்தவுள்ளதாகவும் ஒரு வராலாற்றுரீதியான வெற்றியை காணவுள்ளதாகவும்" குறிப்பிட்டார். ஜே.வி.பி. யின் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச, ''ஜே.வி.பி ஒரு பிரதானக் கட்சியாக தோன்றுவதானது நாட்டின் அரசியல் காட்சியை மாற்றியமைக்கும். இந்தத் தேர்தல் எமக்கு கிடைக்கவுள்ள மக்கள் சக்தியையும் எங்கள் வாக்குப் பலத்தையும் வெளிக்காட்டும். ஜே.வி.பி யே எதிர்காலத்தில் நாட்டைப் பெற்றுக்கொள்ளும் கட்சி என்பது தெளிவாக உறுதிப்படுத்தப்படும்" என தற்பெருமை காட்டிக்கொண்டார். இந்தத் தேர்தலில், ஜே.வி.பி 2002 வெற்றிபெற்ற தெற்கின் கீழ்ப்பிரதேசமான திஸ்ஸமஹாராம உள்ளூராட்சி சபையை மட்டுமே மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. இந்த சபையில் அதன் வாக்குகள் 2002ல் கிடைத்த 11,584ல் இருந்து 12,394 வரையே அதிகரித்துள்ளது. ஜே.வி.பி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 822,804. தீவு பூராவும் 2002ல் சுமார் 200 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை கொண்டிருந்த ஜே.வி.பி இம்முறை 362 உறுப்பினர்களை கொண்டுள்ளது. உள்ளூர் அபிவிருத்தியை முன்னெடுக்க வாக்குறுதியளிக்கும் அதேவேளை, ஜே.வி.பி யின் பிரச்சாரமானது தற்போதைய சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான அதிகரித்த தாக்குதல்களில் செல்வாக்கு செலுத்தியது. புலிகள் ஏற்கனவே யுத்தநிறுத்த உடன்படிக்கையில் திருத்தங்கள் செய்வதை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில், ஜே.வி.பி அதில் திருத்தம் செய்யக் கோருவதன் தர்க்கம், 65,000 உயிர்களைப் பலிகொண்ட உள்நாட்டு யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதாகும். பெரும்பாலான வாக்காளர்கள் யுத்தத்தை விட சமாதானத்தையே கோருகின்றனர் என்பதற்கு ஜே.வி.பி நிராகரிக்கப்பட்டமை மேலுமொரு அறிகுறியாகும். யுத்தப் பிராந்தியமான கிழக்கில் அதன் தோல்வியானது மேலும் சாட்சி பகர்கின்றது. கிழக்கு மாகாண மக்களை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றை ஸ்தாபித்த ஜே.வி.பி, சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் இனவாத பதட்ட நிலைமைகளை கிளறிவிடுவதை குறிக்கோளாக கொண்டு ஒரு ஆத்திரமூட்டல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. இது மிகப் பெரும்பான்மையான வாக்காளர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டதோடு ஜே.வி.பி அம்பாறையில் 1,200 வாக்குகளையும் திருகோணமலையில் 845 வாக்குகளையும் மட்டுமே பெற்றது. இந்தப் படு வீழ்ச்சியை மூடி மறைக்க மிகவும் சாத்தியமான ஒரு முகத்தை வெளியில் காட்ட ஜே.வி.பி தலைவர்கள் பெரும் சிரமப்பட்டனர். அவர்கள் திஸ்ஸமஹாராம சபையை மீண்டும் கைப்பற்றியது பற்றியது பற்றியும் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பற்றியும் பெருமைப்பட்டுக்கொண்டதோடு பல சபைகளில் ஐ.தே.க வை விஞ்சியதை "வெற்றியாகவும்" காட்டிக்கொண்டனர். ஆனால் ஏப்பிரல் 05 டெயிலி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய ஒரு செவ்வியில், ஜே.வி.பி தலைவரான வீரவன்ச "தாம் எதிர்பார்த்த பிரகாசம் இந்த வெற்றியில் இல்லை" என்ற உண்மையை ஒப்புக்கொண்டார். ஜே.வி.பி யின் அரசியல் குழு வெளியிட்ட ஒரு அறிக்கை, இராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்சியுடன் செய்து கொண்ட தேர்தல் உடன்படிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை மதித்தால் மட்டுமே தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரகடனம் செய்துள்ளது. தேர்தல் தோல்விக்கான அதன் பிரதிபலிப்பு, பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான பேரினவாத பிரச்சாரத்தை உக்கிரப்படுத்துவதாகவே உள்ளது. ஜே.வி.பி. யின் ஒரு முன்னணி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், தீவுபூராவும் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஜே.வி.பி. யின் சிங்களத் தீவிரவாத எதிரியான, பெளத்த உயர்மட்ட பிரிவினரை அடிப்படையாக கொண்ட கட்சியான ஜாதிக ஹெல உறுமய, மிகவும் மோசமாக தோல்வியை தழுவியுள்ளது. அது 2004 பொதுத் தேர்தலில் தேர்தலில் 552,724 வாக்குகளை பெற்ற போதிலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்தத் தொகையில் பத்தில் ஒரு பங்கை அல்லது 59,942 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் முன்னணியான இலங்கை தமிழரசுக் கட்சி, திருகோணமலை நகரசபை உட்பட திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சபைகளை வென்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இது சிங்கள தேசியவாதிகளுக்கான "தோல்வி" என உடனடியாக பிரகடனம் செய்ததோடு சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் சமாதானப் பேச்சுக்களுக்கான மக்கள் ஆணை எனவும் பாராட்டியது. இந்தப் பெறுபேறுகளை பெரும் வர்த்தகர்களும் மற்றும் பெரும் வல்லரசுகளும் சமாதானப் பேச்சுக்களுடன் முன்செல்வதற்கான சந்தர்ப்பமாக குறிப்பிட்டனர். நோர்வேயின் முன்நாள் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிம் இந்த வாரம் கொழும்புக்கு வந்துள்ளார். புதனன்று இராஜபக்ஷவை சந்தித்த பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "இந்தத் தேர்தல் முடிவுகள் மஹிந்த இராஜபக்ஷ சமாதான முன்னெடுப்புகளை முன்நோக்கி நகர்த்துவதற்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளது," என்றார். எவ்வாறாயினும், இராஜபக்ஷ புலிகளுடன் உடன்பாட்டை அடைவதற்கும் மேலாக, பேச்சுக்களை தொடர்வதற்கு குறிப்பிடத்தக்க அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார். அவரது சிறுபான்மை அரசாங்கம், தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையையும் நோர்வே அனுசரணையாளரின் பாத்திரத்தையும் விட்டுக்கொடுக்காமல் எதிர்க்கும் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற ஆதரவிலேயே இன்னமும் தங்கியிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கிப் போயுள்ளதோடு ஜே.வி.பி. யின் இனவாதப் பிரச்சாரத்தில் மேலும் எளிதில் அழுத்தத்திற்குள்ளாகக் கூடியதாகவும் உள்ளது. அரச இயந்திரத்தின் ஒரு பகுதி, குறிப்பாக இராணுவம், புலிகளுக்கு எந்தவொரு சலுகை வழங்குவதையும் ஆழமாக எதிர்க்கின்றது. அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை ஏப்பிரல் 19--21இல் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. பெரும் வல்லரசுகள் மற்றும் பெரும் வர்த்தகர்களின் அனுசரணையிலான "சமாதான முன்னெடுப்புகளில்" இலங்கையில் உள்ள உழைக்கும் மக்கள் இலாபமடையப் போவதில்லை. உண்மையான குறிக்கோள், தீவை ஒரு மலிவு உழைப்புக் களமாக பூகோள உற்பத்தி முன்னெடுப்புடன் மிகவும் நெருக்கமாக ஒன்றிணைப்பதற்கு வழிவகுக்கும் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட அதிகர பரவலாக்கல் ஒழுங்கமைப்பாகும். எந்தவொரு "சமாதான" உடன்படிக்கையும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக நிலைமைகளை மேலும் கீழறுக்கும் கொடூரமான பொருளாதார மறுசீரமைப்பின் இன்னுமொரு சுற்றை இணைத்துக்கொண்டதாகவே இருக்கும். அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு இராஜபக்ஷவின் பிரதிபலிப்புகள், சுதந்திர முன்னணி தனது தேர்தல் வாக்குறுதிகளை அமுல்படுத்துவதில் அக்கறை கொள்ளாததோடு புதிய சந்தை சீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளது என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். ஸ்ரீ.ல.சு.க சார்பு தொழிற்சங்க சம்மேளனத்தில் திங்களன்று உரையாற்றியபோது, "தமது உரிமைகளை கோருவதற்கு தொழிற்சங்க நடவடிக்கையை நாடுவதற்கு முன்னதாக நாட்டுக்காக தமது கடமையை செய்யுமாறு" கோரியதன் மூலம் ஜனாதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 200,000 தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அரசாங்கத்தின் நெருக்கடியை எந்தவிதத்திலும் தீர்ப்பதற்குப் பதிலாக, அது மேலும் உக்கிரமடைவதற்கான நிலைமையையே இந்தத் தேர்தல் உருவாக்கியுள்ளது. |