World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions hold talks with government in move to end "First Job Contract" strikes

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் "முதல் வேலை ஒப்பந்த" வேலைநிறுத்தங்களுக்கு முடிவு காண அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்துகின்றன

By Antoine Lerougetel and Uli Rippert
6 April 2006

Back to screen version

Intersyndicale குடையின்கீழ் இயங்கும் பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்களும் மாணவர்கள் சங்கங்களுமான மொத்த அமைப்புக்கள் பன்னிரண்டும், புதன் கிழமை காலையில், கோலிச அரசாங்கத்துடன் முதல் வேலை ஒப்பந்த சட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைப்பது பற்றி ஒரு கூட்டுக் கூட்டத்தை நடத்தின.

CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு), FO (Workers Power - தொழிலாளர் சக்தி), இரு நிர்வாகத்தின் தொழிற்சங்கங்கள் CFTC, CFE-CGC என்ற ஐந்து நிர்வாகங்களும் தனித்தனியே UMP இன் பிரதிநிதிகளுடன் விவாதங்களை நடத்தின; ஏனைய தொழிற்சங்கங்கள் வரவிருக்கும் நாட்களில் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும்.

CPE சட்டம் முதலாளிகளுக்கு 26 வயதிற்குட்பட்ட இளந்தொழிலாளர்களை முதல் இரண்டாண்டு வேலைக் காலத்தில் எக்காரணமும் இன்றி பணிநீக்கம் செய்யும் அதிகாரத்தை கொடுத்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஜாக் சிராக் முறையாக கடந்த வெள்ளியன்று ஒப்புதல் கொடுத்தார்; ஆனால் CPE இன் கூறுபாடுகள் சிலவற்றை மாற்றும் வகையில் கூடுதலான திருத்தச் சட்டங்கள் இயற்றப்படும் வரை அது செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளார். பரீட்சார்த்த காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாக குறைக்கலாம் என்றும், முதலாளிகள், பணிநீக்கப்படும் தொழிலாளர்களுக்கு அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்ற முன்மொழிவுகளை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

மில்லியன் கணக்கானவர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தங்களிலும், வெகுஜன எதிர்ப்புக்களிலும் ஈடுபட்ட, CPE க்கு எதிரான இரண்டாவது தேசிய அளவிலான நடவடிக்கை நாளுக்கு அடுத்தநாள் தாங்கள் அரசாங்கத்துடன் நடத்திய விவாதங்கள், CPE ஐ நிராகரிக்கும் புதிய சட்டம் ஒன்று உறுதியாக வருவதை இலக்கு கொண்டு இருந்ததாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. ஆனால், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி இருவரும் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

தொழிலாளர்களின் வேலைப்பாதுகாப்பிற்கு உறுதி கொடுத்துவரும் நீண்ட காலச் சட்டங்கள் மீது அரசாங்கத்தாலும் பெரு வணிகத்தாலும் தாக்குதல் நடப்பதற்கு எதிரான பெரும் வெகுஜன எதிர்ப்பிற்கு இடையில் தாங்கள் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு ஒரு அரசியல் மறைப்பை அளிக்கும் வகையில் உடன்பாட்டை காணவேண்டும் என்பதுதான் தொழிற்சங்கங்களின் உண்மையான நோக்கமாகும்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என்று உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுக்கொண்டு தொழிற்சங்கங்கள் ஒரு "சமரசத்தை" காண விரும்புகின்றன. சட்டத்தின் அடிப்படை தாக்கம் வரை அவர்கள் ஏற்றாலும் கூட, அதை அவர்கள் வெகுஜன இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி என்றே போற்றுவர். அதே நேரத்தில், கோலிச ஆட்சி தனிமைப்படுத்தலையும் மற்றும் அதன் வலதுசாரிக் கொள்கைகளுக்கு ஆழ்ந்த வெகுஜன எதிர்ப்பு ஆகியவற்றை அம்பலமாக்கியிருக்கும் தொழிலாளர்கள் மாணவர்கள் ஆகியோரின் மாபெரும் அணிதிரளலை திசைதிருப்பவும் அவை விரும்புகின்றன.

இதுதான் அரசாங்கம், தொழிற்சங்கங்கள், அரசியல் ஸ்தாபனத்தின் இடது பிரிவு ஆகியவற்றின் கூறப்படாத உடன்பாடாகும்; அதாவது பேச்சு வார்த்தைகள் ஒரு மூடுபுகையை வழங்கும், அதன் பின்னே மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கு அனைத்து பங்கேற்பாளர்களும் வேலைசெய்வர்.

தொழிற்சங்கங்கள் தங்கள் "பொறுப்பை" ஏற்று நடக்க வேண்டும், விவாதங்கள் "ஆக்கபூர்வமாக" இருக்க வேண்டும், பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் வேலைநிறுத்தங்கள், ஆக்கிரமிப்புக்களை நிறுத்திவிட்டு வகுப்புக்களுக்கு செல்ல வேண்டும் என்ற அழைப்பை சிராக் விடுத்தபோது, இதனை புதன் அன்று சிராக் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

தொழிற்சங்கங்களுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை கண்காணித்துவரும் சார்க்கோசி செவ்வாயன்று, "CPE ஐ அப்படியே திரும்பப் பெற்றுக் கொள்ளுவது என்ற பேச்சிற்கே இடமில்லை." என்று கூறினார். UMP இன் தலைவராகவும் இருக்கும் உள்துறை மந்திரி, ஆயிரக்கணக்கானபேர் கைதாகி, ஆர்ப்பாட்டங்கள் மீது போலீசார் தாக்குதல்களை நடத்தியதையும் கண்காணித்தவர் ஆவார்; தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தைகளுக்கு உடன்படவில்லை என்றால் CPE தற்பொழுது உள்ள வடிவமைப்பிலேயே செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

புதனன்று Intersyndicale ஏப்ரல் 17க்கு முன்னர் CPE கைவிடப்படவேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது; அன்றுதான் தேசிய சட்டமன்றம் விடுப்பிற்காக கலையும். "CPE-ஐ திரும்ப பெறவேண்டும் என்று கோருவதற்காக வேண்டி பாராளுமன்ற குழுக்களின் அழைப்பை தாங்கள் ஏற்பதில் உடன்பாடு கொண்டிருப்பதாக" அனைத்து தொழிற்சங்கங்களும் உடன்பட்டன" என்று FO இன் முக்கிய அதிகாரியான Rene Valladon கூறினார்.

தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக சட்டம் கைவிடப்படவேண்டும் என்று இருந்தால் எதற்காக எத்தகைய முன்னிபந்தனைகளும் பேச்சு வார்த்தைகள் தொடங்கப் போடக்கூடாது எனக் கூறும் அரசாங்கத்துடன் பேச்ச வார்த்தை நடத்த வேண்டும் என்பது பற்றி வல்லடோன் விளக்கம் ஏதும் கூறவில்லை. ஏப்ரல் 17 என்ற கெடு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உண்மையான நோக்கத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மக்கள் இயக்கத்தை பிரித்து, தளர்வுறச்செய்வதற்கு அத்தேதி போதுமான அவகாசம் கொடுக்கிறது என்று அவை நம்புகின்றன. பாரிசில் உள்ள பள்ளி மாணவர்கள் அப்பொழுது ஈஸ்டர் விடுமுறையில் இருப்பர் என்பதும் தற்செயல் நிகழ்வு அல்ல.

இதற்கிடையில், தொழிற்சங்கங்களானது மேலும் கூடிய வேலைநிறுத்த நடவடிக்கையை ஆதரிக்காது அல்லது மாணவர் எதிர்ப்புக்களில் சேராது, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்கும் பல்கலைக்கழக மற்றும் பள்ளி மாணவர்களாலான தொடர்ந்த முயற்சிகளை சக்திமிக்க வகையில் தனிமைப்படுத்தும். இது நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் வேலைநிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பை தொடர்ந்து நடத்திவரும் மாணவர்களுக்கு எதிரான போலீஸ் ஒடுக்குமுறையை கடுமையாக்குவதற்கு சார்கோசிக்கு ஒரு பச்சை விளக்கைக் காட்டுகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மாணவர் சங்கப் பிரதிநிதிகளை புதனன்று அவர்கள் நடத்திய கூட்டுக் கூட்டத்தை தொடர்ந்து பேட்டி கண்டனர். தொழிற்சங்கத்தலைவர்கள் CPE திரும்பப் பெறும் வரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இல்லை என முதலில் கூறியிருந்த நிலையில், பின்னர் ஏன் பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டுள்ளனர் என்று வினாவப்பட்டனர். அரசாங்கத்திற்குள் மிக அதிகமான வலதுசாரி கூறுபாடுகளுக்கு வலுக்கொடுக்கும் வகையில் எதற்காக சார்க்கோசியை சந்திக்க அவர்கள் தயாராக இருந்தனர் என்றும் அவர்கள் வினாவினர்.

"Intersyndicale இடம் இருந்து தக்க விடை உங்கள் வினாவிற்கு கிடைக்காது" என்று FO இன் வல்லடோன் பதில் கூறினார். "நீங்கள் ஒவ்வொரு அமைப்பையும் தனித்தனியே அத்தகைய கேள்வியைக் கேட்க வேண்டும்" என்றார்.

இதன் பின்னர் WSWS, CGT உயர் அலுவலர் Maryse Dumas ஐ, அவ்வம்மையாரின் சங்கம் ஒரு பொதுவேலைநிறுத்தத்தை கோரிய மாணவர்கள் பிரதிநிதிகளின் அழைப்பை ஏன் நிராகரித்ததது, மற்றும் கோலிச அரசாங்கத்தை இராஜிநாமா செய்ய வேண்டும் என ஏன் கோரவில்லை என்று கேட்டது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அரசியல் நட்பு கொண்டுள்ள CGT பொது வேலைநிறுத்நம் மற்றும் அரசாங்கத்தை வீழ்த்துதல் என இரண்டு கருத்துக்களையும் எதிர்ப்பதாக கூறினார்.

"நாங்கள் ஒரு தொழிற்சங்க அமைப்பினர்; எங்களுடைய நோக்கம் அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் என்பதில்லை; அதன் கொள்கைகளை மாற்ற அழுத்தம் கொடுப்பதுதான்." என்று அவர் விடையிறுத்தார். "ஆம், மாணவர்கள் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்; ஆனால் எங்களுடைய அனுபவம், வேலைநிறுத்தங்களினால் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்புத்தான் ஏற்படுகிறது. அரசாங்கத்தின் மீது பெரும் அழுத்தம் கொடுக்கும் வகையில் பல வகையான, தேவையான நடவடிக்கைகள் வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்."

ஒரு பள்ளி மாணவரும், தேசிய மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதியுமன Yasmina Vasseur தொழிற்சங்கங்களின் செய்தியாளர் மாநாட்டிற்கு பின்னர் WSWS உடன் பேசினார். "எங்களுடைய அழைப்பை ஏற்று அவர்கள் செயல்படுவர் என்று நான் கருதினேன்; எங்களுடன் நடவடிக்கைகளில் ஒற்றுமையுடன் இருப்பர் என்று நினைத்தோம். ஆனால் இப்பொழுது அவர்கள் அவ்வாறு செயல்படவில்லை என்பதால், நாங்கள் எங்கள் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை, பள்ளி, பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு, மறியல்களை, தடைசெய்யும் நடவடிக்கைகளை நாங்களே செய்வோம்."

இப்பெண்மணி தொடர்ந்து கூறியதாவது: "தொழிற்சங்கங்கள் எங்களுக்கு ஏன் ஆதரவை கொடுக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது ஏமாற்றத்தை கொடுக்கிறது -- நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பாடுபட்டிருக்க வேண்டும்."

தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் நடத்தி, மாணவர்கள் எதிர்ப்புக்களை நிறுத்த முயலுகையில், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் அரசாங்க-எதிர்ப்பு உணர்வை அரசியலில் பாதுகாப்பான தேர்தல் வழிவகைகளில் திசைதிருப்ப முற்பட்டுள்ளன. சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு செவ்வாய்க்கிழமை அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது; அதில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது; அதில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது: "இன்றிரவு எண்ணிக்கை தொடங்கிவிட்டது; முடிவெடுக்கும் நாட்களில் இருந்து 382ஐ கழித்துக் கொள்ளவும்.!"

சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி, மற்றும் "அதி இடது" LCR ஆகியவற்றை கொண்ட The Riposte Collective என்னும் கூட்டணி, புதன் மாலை கூடியது. திரைமறைவில் நடந்த அக்கூட்டம் நடைபெற்ற பின்னர் செய்தியாளருக்கு தகவல் கொடுக்கப்படவும் இல்லை, அறிக்கை ஏதும் வெளியிடப்படவும் இல்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved