World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Despite peace talks, Sri Lanka drifts towards civil war

சமாதானப் பேச்சுக்களின் மத்தியிலும் இலங்கை உள்நாட்டு யுத்தத்தை நோக்கி இழுபடுகிறது

By Wije Dias
1 April 2006

Back to screen version

இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அமுலில் உள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கை சம்பந்தமாக ஏப்பிரல் 19--21ம் திகதிகளில் ஜெனீவாவில் இரண்டாவது சுற்று பேச்சுக்களை நடத்தவிருக்கின்ற போதிலும், யுத்த பிராந்தியமான தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் வன்முறைகளின் மட்டம் மீண்டும் அதிகரிக்கின்றது.

கடந்த சனிக்கிழமையன்று வடமேற்கு கடற்கரைக்கு அருகில் வேகமாக சென்று தாக்கும் கடற்படைக்கு சொந்தமான டோராப் படகு ஒன்று ட்ரோலர் ஒன்றை அனுகியதையடுத்து மூழ்கியது. அவர்கள் ட்ரோலரில் தேடுதல் நடத்திக்கொண்டிருந்த போது அது வெடித்ததில் எட்டு பேர் உயிரிழந்ததோடு 11 பேர் கடுங் காயமடைந்தனர். கொழும்பு ஊடகங்களால் உடனடியாக புலிகளின் தற்கொலை தாக்குதலாக வகைப்படுத்தப்பட்ட இந்த சம்பவமானது அண்மைய வாரங்களில் இருசாராரும் சம்பந்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான சம்பவங்களில் மிகவும் மோசமானதாகும்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்வதற்கு பொறுப்பான, நோர்வே தலைமையிலான இலங்கை கண்காணிப்புக் குழு, அரசாங்கத்தையும் புலிகளையும் விமர்சித்து கடந்த ஞாயிறன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த டோராத் தாக்குதலில் தாம் சம்பந்தப்படவில்லை என்ற புலிகளின் மறுப்பைப் பற்றி விசாரித்த பின்னர்: கடந்த இரு வாரங்களாக வன்முறைகள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன. இந்தப் போக்கு மிகமிகக் கவலைக்குரியதாகும்," என கண்காணிப்புக் குழு கருத்துத் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, இராணுவ சிப்பாய்கள், புலி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற படுகொலைகள், குண்டுவீச்சுக்கள் மற்றும் மோதல்களிலும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் ஒரு பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தின் தரக்குறியீட்டைக் கொண்டிருந்தது. அரசாங்க மற்றும் புலிகளின் பிரதிநிதிகளும் யுத்த நிறுத்தத்தின் பிரிவுகளுக்கு கட்டுப்படுவதாக பெப்பிரவரியில் ஜெனீவாவில் இடம்பெற்ற முதற் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உறுதியளித்துடன் இந்தப் படுகொலைகள் குறைந்தன.

எவ்வாறெனினும் இந்த தணிவு குறுகிய காலத்திற்கே உரியது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுவின் அறிக்கை: "இரு சாராரும் குறைந்தளவிலான அக்கறையையே காட்டுவதோடு அவர்களது நடவடிக்கைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்துடன் சேராமல் ஆத்திரமூட்டல்களாகவே இருந்து வருகின்றன... சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நிலைமை சிறிது சிறிதாக மோசமாகி, டிசம்பர் மற்றும் ஜனவரியில் இருந்த நிலைமையையும் விட உக்கிரமாகிவிடுமோ என நாம் பீதிகொண்டுள்ளோம்," என தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆயுதப் படைகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, புலிகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கோரும் இராணுவ உயர்மட்டத்தினர் மற்றும் சிங்களப் பேரினவாதிகளின் நெருக்குவாரத்திற்கு ஆளாகியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவும் ஜெனீவா பேச்சுக்களின் முதல் சுற்றின் பின்னர் வெளியிட்ட கூட்டறிக்கையை கண்டனம் செய்துள்ளன. இந்தக் கட்சிகள், யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதுகாப்புப் படைகளின் கரங்களை பலப்படுத்தும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் எனவும் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக தாம் குற்றஞ்சாட்டிவரும் நோர்வே அனுசரணையாளர்களை வெளியேற்றுமாறும் கோரிக்கை விடுக்கின்றன.

இராஜபக்ஷ ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கையை கைச்சாத்திட்ட பின்னர் நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு குறுகிய வெற்றியை பெற்றார். அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறுபான்மை அரசாங்கமானது பாராளுமன்றத்தில் இந்தக் கட்சிகளின் ஆதரவிலேயே தங்கியிருக்கின்றது. இந்தக் கட்சிகள் கடந்த வாரம் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தை இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரப்படுத்தவும் மற்றும் புலிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவும் பயன்படுத்திக் கொண்டன.

யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவொரு மாற்றத்தையும் செய்வதை ஒட்டுமொத்தமாக எதிர்த்த புலிகள், பெப்பிரவரியில் நடந்த பேச்சுக்களின் போது, கொழும்பு அரசாங்கம் மாற்றங்களை வலியுறுத்துமானால் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறப் போவதாக அச்சுறுத்தியது. புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம் மார்ச் 21 அன்று ராய்ட்டருக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "யுத்த நிறுத்தம் பற்றிய தற்போதைய பேச்சுக்கள் அரசியல் விவகாரங்கள் மீதான பேச்சுவார்த்தையாக முன்னேற்றமடைந்தாலும், மார்க்சிச ஜே.வி.பி மற்றும் கடும்போக்கு பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய போன்ற இராஜபக்ஷவின் தீவிர தேசியவாத பங்காளிகள் நாசகார வேலை செய்வார்கள் போல் தெரிகிறது," என்றார்.

புலிகள் மீது தமிழ் ஆயுதக் குழுக்கள் தாக்குதல் தொடுப்பது பற்றி பேசுகையில், துணை இராணுவக் குழுக்கள் இலங்கை ஆயுதப் படைகளின் ஆதரவோடு புலிகளுக்கு எதிரான இராணுவ எதிர்த் தாக்குதல்களை தொடர்வார்களானால், அது நிச்சயமாக புலிகளுக்கு எதிரான ஒரு யுத்த நடவடிக்கையாகவே பொருள்படும். அது யுத்தம் மற்றும் வன்முறை நிலைமைகளுக்கு வழிவகுப்பதோடு சமாதானப் பேச்சுக்கள் எந்தவகையிலும் முன்செல்வதை தடுப்பதுடன் முழு சமாதான முன்னெடுப்புகளும் குழம்பிப் போவதற்கு வழிவகுக்கும்," என பாலசிங்கம் எச்சரித்தார்.

பெப்பிரவரி பேச்சுக்களின் போது, யுத்த நிறுத்தத்தில் கோரியுள்ளபடி, அரசாங்க கட்டுப்பாட்டிலான பிராந்தியங்களில் இருந்து இயங்கும் துணை இராணுவக் குழுக்களை நிராயுதபாணிகளாக்க அரசாங்கம் வாக்குறுதியளித்தது. அவர்களது தற்போதைய நடவடிக்கைகள் தெளிவாகியுள்ள நிலையில், கண்காணிப்புக் குழு பின்வருமாறு பிரகடனம் செய்யத் தள்ளப்பட்டது: "நாம் இலங்கை அரசாங்கத்திற்கு இந்த விடயத்தை முக்கியமானதாக கருதுமாறும் அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆயுதக் குழுக்கள் பற்றி கண்களை மூடிக்கொள்ள வேண்டாம் என்றும் அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம்."

துணைப்படைகளின் ஆயுதங்களை களைவதற்கு ஆயுதப் படைகளில் ஆழமான எதிர்ப்பு இருந்து கொண்டுள்ளது. "சமாதான முன்னெடுப்புகளை" கடுமையாக எதிர்க்கும் இராணுவத்தின் ஒரு பகுதியினர், இந்த ஆயுதக் குழுக்களுக்கும் புலிகள் மீதான அவர்களின் தாக்குதல்களுக்கும் இரகசியமாக ஆதரவளிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட ஆலோசகரான எச்.எம்.ஜீ.பி. கொடகதெனிய, மார்ச் 14 வெளியான மோர்னிங் லீடர் பத்திரிகைக்கு இந்த ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படக் கூடாது என தெளிவாக தெரிவித்துள்ளார். "புலிகள் ஆயுதபாணிகளாக இருக்கும்போது அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டால் அவர்கள் உயிருடன் இருக்கப் போவதில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும், இராணுவம் யுத்த நிறுத்தத்தின் பிரிவுகளுக்கு கட்டுப்படுவதில் அக்கறைகொள்ளவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மார்ச் நடுப்பகுதியில் வவுனியா இராணுவத் தலைமையகத்தில் அவர் பேசியபோது: "கடந்த ஒன்றரை அல்லது இரண்டு வருடகாலத்தில் போல் நாம் வெள்ளைக் கொடிகளை போடுவோம் என்று மக்கள் நினைக்கிறார்கள்... ஆனால் நாம் தைரியமாக நிலைமையை எதிர்கொள்வதோடு எங்களை தாக்கியவர்களுக்கு எதிராக எதிர்ச்செயலாற்றினோம். அதன் பின்னர் எங்களை தாக்கியவர்களை தேடி ஒரு செயற்திறம் வாய்ந்த முன் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் முன்னெடுத்ததன் மூலம் மக்களின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்ட அதேவேளை எமது நிலைகளையும் பாதுகாத்துக்கொண்டோம்," என ஆத்திரமூட்டும் வகையில் தெரிவித்தார்.

இராணுவம் புலிகளை தாக்குவதில் ஈடுபட்டு வருகின்றது என்பதை பொன்சேகாவின் கருத்துக்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றன. வெலி ஓயா இராணுவ முகாமில், சமாதானப் பேச்சுக்கள் பற்றிய இராணுவ உயர்மட்டத்தினரின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் குறிப்பிட்டதாவது: "அரசாங்கமும் நாமும் கெளரவமான சமாதானத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம். நாம் பேச்சுக்களுக்கு செல்லாமல் இருப்பது புலிகளுக்கு பயப்படுவதாலோ அல்லது அவர்கள் மீதான அனுதாபத்தினாலோ அல்ல." "கெளரவமான சமாதானம்" என்பது சிங்களத் தீவிரவாதிகளின் கருத்தைக் கவரும் சொற்றொடராக இருப்பதோடு புலிகளை முழுமையாக சரணடையச் செய்வது அல்லது தோற்கடிப்பதை குறித்துக்காட்டுகிறது.

பொன்சேகா கடந்த வாரம் இராணுவத்திற்காக ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து வைத்தபோதும் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். ஜெனீவாவில் அரசாங்கம் கட்டுப்படுவதாக வாக்குறுதியளித்திருந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையில் "தப்பிக்கொள்ளும் வழிகள் பல இருப்பதாக" அவர் விமர்சித்தார். "பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டாலும் புலிகளால் தனது குறிக்கோள்களை அடைய முடியாது" எனவும் அவர் உறுதியளித்தார்.

கடந்த வார இறுதியில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் துறை ஆசிரியர், அரசியல் அரங்கிற்குள் பொன்சேகாவின் தலையீட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்ததாவது: "புலிகளுடன் சுமார் இரு தாசப்தங்களாக போராடிய இராணுவத்தின் தலைவர், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சமாதானப் பேச்சுக்களுக்கு சற்று முன்னதாக வெளியிட்ட குறிப்புக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன... அவை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு திகைப்பூட்டுவதாக இருந்தாலும், சேவையில் உள்ள ஒரு சிரேஷ்ட அதிகாரி மிகவும் வெளிப்படையாக கருத்துத் தெரிவித்தது இதுவே முதற் தடவையாகும்."

கடந்த சனியன்று டோரா மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெனீவா பேச்சுக்களுக்கும் மற்றும் தற்போதைய யுத்த நிறுத்தத்திற்கும் எதிரான பிரச்சாரம் உக்கிரமடைந்துள்ளது. மார்ச் 28 வெளியான ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்: "தனது முக்கியமான பாகங்களை புலிகளுக்கு காட்டிக்கொண்டு, தனது தலையை உதவி என்ற மணலுக்குள் தொடர்ந்தும் நுழைத்துவைத்திருப்பது அரசாங்கத்திற்கு தற்கொலை நிலைமாயாகும். ஒருவர் பல விடயங்களில் ஜே.வி.பி யுடன் உடன்படாமல் இருக்கலாம் என்றாலும், இலங்கையின் இக்கட்டான நிலைமையை மிருகம் ஒன்று பொறியில் மாட்டிக்கொண்டுள்ள நிலையோடு ஒப்பிடுவதை தவிர வேறு முறையில் விவரிக்க முடியாது. தனது சுய பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுப்பது கூட யுத்தத்தை கிளப்பிவிடும் என்ற அச்சத்தால் அத்தகைய நடவடிக்கையை கூட எடுக்க முடியாமல் உள்ளது."

புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய டோரா அழிப்பானது, கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக நடந்த கடற்படையுடனான சம்பவங்களை அடுத்தே இடம்பெற்றுள்ளது. மார்ச் 18 முதல் மூன்று நாட்களாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான சாம்பூர் கடற்கரை பகுதியில் கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்ததாக கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் முறைப்பாடு செய்துள்ளனர். கடற்படை இந்த குற்றச்சாட்டை ஒரேயடியாக மறுத்ததுடன் புலிகளுக்கு எதிரான தனது சொந்தக் குற்றச்சாட்டுக்களை விடுத்தது.

புலிகளுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களில் ஆயுதப் படைகளுக்கு ஒரு வரலாறே உண்டு. 2003ல் புலிகளின் படகுகளை மூழ்கடித்தது உட்பட ஒரு தொகை மோதல்கள் இடம்பெற்றன. இந்த ஒவ்வொரு சம்பவமும் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு அக்கம்பக்கமாக இடம்பெற்றது. இந்த சம்பவங்கள் பதட்ட நிலைமைகளை உயர்ந்த மட்டத்தில் உக்கிரப்படுத்தியதோடு கடந்த ஆண்டு ஏப்பிரலில் நடந்த பேச்சுவார்த்தைகள் முறிவடைவதற்கான பிரதான காரணியாகவும் இருந்தது.

இந்த வாரம் சுவிஸ் தூதரை சந்தித்த அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளின் தலைவரும் சுகாதார அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா, ஜெனீவாவில் அடுத்த சுற்று பேச்சுக்களுக்கான ஒழுங்குகளை முடிவுசெய்தார். சுதந்திர முன்னணி அரசாங்கம் பேச்சுக்களுடன் முன்செல்லக் கோரும் கணிசமான சர்வதேச அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. எவ்வாறெனினும், வடக்கு மற்றும் கிழக்கில் வன்முறைகளை விரிவடைந்து வருகின்ற நிலைமைகளின் கீழும், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புகளின் கோரிக்கைகள் ஏற்கனவே புலிகளால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலைமையிலும், எந்தவொரு நிலையான உடன்பாடும் ஏற்படுவது நிச்சயமில்லை. உண்மையில், பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதும் கூட நிச்சயமில்லாததாகவே உள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved