World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: As millions protest government attacks, unions signal retreat on "First Job Contract" பிரான்ஸ்: அரசாங்க தாக்குதலுக்கு எதிராக மில்லியன்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்துகையில், தொழிற்சங்கங்கள் "முதல் வேலை ஒப்பந்தம்" பற்றியதில் பின்வாங்குவதற்கு சமிக்கை By Rick Kelly and Barry Grey நேற்று பிரான்ஸ் முழுவதும் கோலிச அரசாங்கத்தின் "முதல் வேலை ஒப்பந்த" சட்டத்திற்கு (CPE) எதிராக 2 முதல் 3 மில்லியன் வரை மதிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர்; மார்ச் 28 அன்று இதே போன்ற நேரடி நடவடிக்கை தினத்தன்று குழுமிய மக்கட்திரளிற்கு ஒப்பாக இதுவும் இருந்தது. ஜனாதிபதி ஜாக் சிராக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தான் அதிகாரபூர்வமாக முதலாளிகளுக்கு இளந்தொழிலாளர்களை எக்காரணமும் இன்றி அவர்களுடைய முதல் இரண்டாண்டு பரீட்சார்த்த காலத்தில் பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் CPE க்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக அறிவித்ததை அடுத்து செவ்வாய் கிழமை வேலைநிறுத்தங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்தன. சட்டத்தை செயல்படுத்துவதில் சற்று தாமதிக்கத் தயார் என்றும் அதன் பாதிப்பின் கடுமையை குறைக்கும் வகையில் சில திருத்தங்களுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் சிராக் கூறினார்; ஆனால் இந்நடவடிக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை கொடுத்து ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் செய்து கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் அடிப்படை கோரிக்கையை அவர் எடுத்தெறிந்து விட்டார். அலைகள் போன்ற எதிர்ப்புக்கள் மற்றும் கருத்துக் கணிப்புக்கள் CPE க்கு மாபெரும் எதிர்ப்பை காட்டியிருப்பதோடு சிராக்கிற்கும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுக்கும் சரிந்துவரும் ஆதரவை காட்டியுள்ளன. மேலும் இந்நடவடிக்கை செயல்படுத்தப்பட்டால் "அமெரிக்க மாதிரியிலான" சந்தைக் கொள்கைகள் சுமத்தப்படுவதற்கு வழியாகும், தொழிலாளர்கள் உரிமைகள், சமூக நலன்கள் ஆகியவை தகர்க்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று மக்கள் ஆழ்ந்து உணர்ந்துள்ள கருத்துக்களையும் அவை பிரதிபலிக்கின்றன. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் அரசாங்கம் வெளிப்படையாக தனிமைப்பட்டுள்ள தன்மை, அதன் நெருக்கடி இவற்றின் பின்னணியில், செவ்வாய்க்கிழமை அன்று தொழிற்சங்க தலைவர்கள் சிராக்கும் வில்ப்பனும் CPE ஐ திரும்பப்பெறும் வரையில் அரசாங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்று கொண்டிருந்த முந்தைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புடைய பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) உட்பட, ஐந்து பெரிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் புதன் கிழமையன்று அரசாங்கத்தின் மந்திரிகளுடனும் கோலிச கட்சியின், UMP பாராளுமன்ற தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்த உடன்பட்டனர். உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளுடைய ஆதரவிற்குட்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு இயக்கத்தை சிதைக்க வைக்க வகை செய்கிறார்கள் என்றும் CPE வடிவமைப்பிற்குள்ளேயே ஏதேனும் "சமரசம்" ஒன்றை காணலாம் என்றும் முற்பட்டுள்ளன. சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான Francois Hollande இச்சக்திகளின் நோக்கம் மக்கள் இயக்கத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்பதில் உள்ளது என்பதை வெளிப்படையாக கூறினார். "நீண்ட காலமாக நடந்து வரும் இந்த பூசலை முடிவிற்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என விரும்புகிறேன், ஒருவேளை இதுவே கடைசி ஆர்ப்பாட்டமாகக் கூட இருக்கலாம்" என்று செவ்வாயன்று அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் ஓர் அடிப்படையான அரசியல் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது: சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தோற்கடிப்பதற்கு முக்கியமான தடையானது அரசாங்கத்தின் இயல்பான வலிமையோ, முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனமோ அல்ல; மாறாக பழைய தொழிலாளர் அதிகாரத்துவத்தின் கோழைத்தனமும், காட்டிக்கொடுப்பும்தான் அவை என்பதே அது. இதில் இருந்து கட்டாயமாக பெறப்படும் முடிவு இவ்வமைப்புக்களில் இருந்தும், அவற்றின் தேசிய மற்றும் சீர்திருத்தவாத முன்னோக்கில் இருந்தும் உடைத்துக் கொள்ள வேண்டும் என்பதுடன் ஒரு புரட்சிகர, சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய தலைமையை கட்டியமைக்க வேண்டும் என்பதுமாகும். செவ்வாய் ஆர்ப்பாட்டத்தில் மிக அதிகமாக பங்கேற்றவர்கள் பாரிசில் இருந்தனர்; ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களின் கருத்தின்படி அங்கு 700,000 மக்கள் கூடினர்; மார்சேயில் 250,000, போர்தோவில் 120,000, துலூசில் 90,000 மற்றும் நந்தில் 75,000 என்றும் மதிப்பிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பொதுப் பணித்துறை மற்றும் தனியார் துறை தொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அதில் போக்குவரத்து தொழிலாளர்கள், விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், கல்விப் பணியாளர்கள், பிரான்ஸ் Telecom, Renault மற்றும் எண்ணெய் நிறுவனமான Total ஆகியவற்றின் தொழிலாளர்களும் அடங்குவர். கடந்த செவ்வாயன்று நடவடிக்கை தினத்தில் பொதுப் பணித்துறையில் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட தடைகளைவிட குறைவானதாக இப்பொழுது குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததானது தொழிற்சங்கங்கள் நேற்றைய வேலைநிறுத்தத்தின் பாதிப்பைக் குறைக்க விரும்பினர் என்பதை குறிப்பாய் தெரிவித்தது. Le Nouvel Observateur என்னும் பிரெஞ்சு வார இதழ் தன்னுடைய வலைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று, தேசிய சட்ட மன்றம் மற்றும் செனட் மன்றத்தில் உள்ள UMP பாராளுமன்ற குழுக்களின் தலைவர்களான Bernard Accoyer, மற்றும் Josselin de Rohan இருவரும் தொழிற்சங்கம் மற்றும் இளைஞர்கள் அமைப்புத் தலைவர்களுக்கு புதன் கிழமையில் இருந்து CPE ஐ திருத்தும் வகையிலான சட்டம் பற்றி விவாதிப்பதற்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர் என்று கூறியுள்ளது. இந்த விவாதங்கள் பின்னர் தொழிற்துறை மந்திரி Jean-Louis Borloo மற்றும் Gerard Larcher ஆகியோருக்கும் விரிவடையும்."ஐந்து தொழிற்சங்க கூட்டமைப்புக்கள், CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு), FO(தொழிலாளர் சக்தி) மற்றும் இரண்டு நிர்வாகத்தினரின் தொழிற்சங்கங்களான CFTC, CFE-CGC ஆகியவற்றின் தலைவர்கள், ஏப்ரல் 4ம் தேதி செவ்வாயன்று UMP தலைவர்களை சந்தித்து, 'முன்நிபந்தனைகள், தடுக்கப்பட்ட கருத்துக்கள் போன்றவற்றை இல்லாது மற்றும் CPE திரும்பப் பெறவேண்டும் என்று பழையபடி கேட்காத வகையிலும் கலந்துரையாடல் இடம்பெறும்' என்ற நிபந்தனையின் பேரில் CPE யில் திருத்தம் செய்யும் ஒரு சட்டத்தை தயாரிக்கும் UMP கலந்துரையாடல் குழுவை சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளனர். தொழிற்சங்க தலைவர்களும் மிகப் பெரிய மாணவர் சங்கத்தின் தலைவரும் அத்தகைய பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு தங்கள் பின்வாங்கலை ஏற்கனவே சமிக்கை காட்டியுள்ளனர். "கூட்டங்களுக்கு பின்னர் வரவிருக்கும் நாட்களில் CPE செயல்படுத்தப்பட மாட்டாது என்பதை பற்றி எங்களுக்கு உறுதி கொடுக்கப்பட வேண்டும்" என்று மரபார்ந்த முறையில் சோசலிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ள தொழிற்சங்கக் கூட்டமைப்பான CFDT இன் தலைவரான François Chérèque அறிவித்துள்ளார். "வரவிருக்கும் நாட்களில் CPE ஒப்பந்தம் கையெழுத்திட வராது என்று உறுதிமொழி கொடுத்தால் அழைப்பிற்கு நாங்கள் வருவோம் என விடையிறுப்போம்" என்று பல்கலைக் கழக சங்கமான UNEF இன் தலைவரான Bruno Julliard கூறியுள்ளார். இரண்டு அறிக்கைகளுமே CPE சட்டத்தை ஏற்பதாகத்தான் உட்குறிப்பைக் கொண்டுள்ளன. Julliard கேட்கும் "உத்தரவாதம்" தன்னுடைய வெள்ளிக்கிழமை உரையில் சிராக் கூறியிருந்த சமரசத்தில் இருந்து தன்மையில் அதிக வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை. தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் "இடது" அரசியல் வாதிகளிடமிருந்து அதிக கருத்துக்கள் செவ்வாயன்று தவிர்க்கமுடியாமல் வரவிருக்கும் "வெற்றி" பற்றி வெளிவந்தன; ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கைகள் அவர்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் "வெற்றி" என்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடைய நலன்கள், விழைவுகள் ஆகியவற்றை காட்டிக் கொடுக்கும் வகையில் இருக்கும் என்பதை தெளிவாக்கியுள்ளன. அரசாங்கம் கொடுத்துள்ள வரையறைக்குட்பட்டு பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளும்போதே, தொழிற்சங்கங்களும், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகளும் மாணவர்கள் பிரதிநிதிகள் கோரும் காலவரையறையற்ற வேலைநிறுத்தம், பெருகிய மக்கள் எதிர்ப்பை பயன்படுத்தி கோலிச அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்க வைக்கும் கோரிக்கைகளை கீழறுக்க முயல்கின்றன. அவர்களுடைய உத்தியோகபூர்வ இயக்கத்தை "ஒரு புதிய கட்டத்தில்" நுழைவதாக சித்தரித்துக் காட்டும் முயற்சியைக் கொண்டுள்ளது; அதாவது தேசிய சட்ட மன்றத்திலும், தொழிற்சங்க அதிகாரிகள், கட்சித் தலைவர்கள், வணிகப் பிரதிநிதிகள், அரசாங்க மந்திரிகள் ஆகியோரின் திரை மறைவுக் கூட்டங்களில் முடிவெடுக்கப்படும் என்பதேயாகும் அது. அதிகாரபூர்வ இடது மற்றும் பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு ஒட்டுமொத்தத்தின் மிக முக்கியமான பொது அக்கறையே மக்கள் எதிர்ப்பின் முதுகெலும்பை முறித்து, தொழிலாளர் வர்க்கத்திற்குள் தளர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரங்களில் எல்லாம் தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை பலமுறையும் இத்தகைய பங்கைத்தான் துல்லியமாக ஆற்றின. 1936ம் ஆண்டு மக்கள் முன்னணி அரசாங்கம் தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தத்தை கழுத்தை நெரித்துக் கொன்ற காலத்தில் இருந்து, CGT மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 1968 மே-ஜூனில் வேலைநிறுத்த இயக்கத்தை உடைத்து "வெற்றி" எனப் போலியாக அறிவித்து, சார்ல்ஸ் டு கோல் இன் அரசாங்கத்தை காப்பாற்றியது, மற்றும் 1995 வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கம் தோல்வி அடைவதற்காக உத்தியோகப்பூர்வ இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் "அரசியல் வேண்டாம்" என்று அதில் பங்கு பெறாமல் இருந்தது மற்றும் 2003 "சீர்திருத்தங்கள்" என கல்வி, ஓய்வூதிய பாதிப்புக்கள் பெரும் மக்கள் எதிர்ப்புக்களாக வந்தபோது அதைக் காட்டிக் கொடுத்ததுவரை, இப்போக்கு தொடர்ந்துதான் வந்துள்ளது. தற்போதைய நெருக்கடியிலும், தொழிற்சங்கங்களும், இடது கட்சிகளும், "தீவிர இடது" என அழைக்கப்படும் LCR உட்பட அனைத்தும் மிகத் திறமையுடன் வலதுசாரி கோலிச UMP, உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி இன் அரசியல் நிலையை நெறிப்படுத்தி ஊக்குவிக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளன. சார்க்கோசியையும் அவருடைய நண்பர்களையும் தொழிற்சங்க வாதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் தலைமை தாங்கி நிற்குமாறு சிராக் பணித்துள்ளார். உள்துறை மந்திரி 2007 ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய நிலைமையை வலுவாக்கிக் கொள்ள வலதுசாரி பொருளாதார சீர்திருத்த திட்டங்களை கொண்டு வருவதுடன், "சட்டம், ஒழுங்கு" பற்றி கடும் அடக்குமுறை சட்டங்களையும், புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்பு, இனவழியில் பிறர்மீது குற்றம் சுமத்துவது ஆகியவற்றையும் கையாண்டு வருபவராவார். CPE எதிர்ப்பு இயக்கம் போலீசாரால் திறமையுடன் அடக்கப்படுவதை சார்க்கோசிதான் வெளிப்படையாக கண்காணித்தார்; சமீபத்திய வெகுஜன எதிர்ப்புக்களில் கலவரத்தடுப்பு போலீசாருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த ஆர்ப்பாட்டங்களை ஒட்டி 3,000 க்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; இதில் பாரிசில் நேற்று கைது செய்யப்பட்ட 383 பேரும், மற்ற நகரங்களில் கைது செய்யப்பட்ட 243 பேரும் அடங்குவர். அதே நேரத்தில், CPE க்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே அவர் பிரதம மந்திரி வில்ப்பனுடைய உத்திகளையும் குறைகூறியுள்ளார்; தேசிய சட்ட மன்றத்தில் சட்டத்தின் மீது வாக்கு எடுப்பதற்கு முன்னர் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தாதற்கும் குறிப்பாகக் குறைகூறியுள்ளார். தற்போதைய போராட்டத்தில் ஆபத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகள் உடனடி CPE பற்றிய பிரச்சினைக்கு அப்பாலும் செல்கின்றன. MEDEF என்னும் முதலாளிகள் அமைப்பின் தலைவரான Laurence Parisot, CPE க்கு என்ன நேர்ந்தாலும், அனைத்து தொழிலாளர்கள் மீதும், எவ்வயதாக இருந்தாலும், மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அறிவித்தபோது அவர் முழு பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்திற்குமாகவும்தான் பேசினார். "இந்த நெருக்கடியில் வந்துள்ள ஒரு சிறப்பானது, மக்கள் எமது உழைப்புச் சந்தையில் உண்மையான பிரச்சினைகள் வந்துள்ளன என்பதை அறிந்துள்ளனர்" என்று அவர் அறிவித்தார். "தனக்கு தேவையான சீர்திருத்தங்களை பிரான்ஸ் எடுக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என்றும் அவ் அம்மையார் கூறினார். Parisot இன் கருத்துக்கள்தான் சர்வதேச முதலீட்டு வங்கியான Morgan Stanley இன் பொருளாதார வல்லுனரான Eric Chaney யாலும் எதிரொலிக்கப்பட்டது. "இப்பொழுது தொழிலாளர் சந்தை சீர்திருத்தம் பற்றிய விவாதம் வெளிப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் இப்பிரச்சினை மறைக்கப்பட முடியும் என்று கற்பனையும் செய்து பார்க்கமுடியாது." என்று அவர் கூறினார்.CPE க்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் தேவைகள் நலன்கள், அதாவது கெளரவமான ஊதியம், மற்றும் பாதுகாப்பு உள்ள வேலைகள், கல்வி, சுகாதார பாதுகாப்பு, போர் அல்லது அடக்குமுறை இல்லாத, அச்சமில்லாத வருங்காலம் என்ற இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய தேவைகள், இப்பொழுது ஒரு தோற்றுவிட்ட அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நிதிய உயரடுக்கின் சிறு தன்னலக்குழுவின் நலன்களுடன் சமரசம் காணமுடியாத பூசலை எதிர்கொண்டு நிற்கும் தன்மை ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்துள்ளது. இப்பூசலானது தற்போதைய அரசாங்கம் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனம் இரண்டும் அதிகாரத்தில் இருக்கும் வரை தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு உகந்த வகையில் தீர்க்கப்பட முடியாது. தொழிலாளர் அரசாங்கத்திற்கான ஒரு நனவான போராட்டமும் சமுதாயம் சோசலிச அடித்தளங்களின் மீதாக மறு ஒழுங்கு செய்யப்படுவதும் தேவைப்படுகிறது.LCR, LO என்னும் "தீவிர இடது" கட்சிகளின் குறிப்பிடத்தக்க பங்கு, இந்த அரசியல் உண்மைகளை மூடிமறைத்து, தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இடது கட்சிகளின் துரோகத்தை மக்களிடம் இருந்து மறைத்தலும், மக்கள் இயக்கத்தை அரசியல் அளவில் வலுவிழக்கச் செய்வதும் ஆகும்.செவ்வாய் கிழமை ஆர்ப்பாட்டங்களில் வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் LCR உம் கையெழுத்திட்டிருந்தது; 11 இடது மற்றும் தீவிர அமைப்புக்களின் பெயரில் அது வெளிவந்தது; அதில் சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடங்கும்; சிராக் உரை நிகழ்த்துவதற்குமுன், CPE ஐ திரும்ப பெறவேண்டும் என்று இழிந்த நிலையில் அவருக்கு இக்கட்சிகள் முறையிட்டிருந்தன. சிராக் நிராகரித்த பின்னரும்கூட அத்தகைய அறிக்கையை வெளியிட்டதைவிட இவற்றின் அரசியல் திவால்தன்மையை பறைசாற்றுவதற்கு வேறு நிரூபணம் ஏதும் தேவையில்லை. CPE நெருக்கடிக் காலம் முழுவதும் தன்னுடைய அடிபணிந்து நிற்கும் தன்மை, அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை லுத் உவ்றியேர் (Lutte Ouvriere) நன்கு நிரூபித்துள்ளது. CPE பிரகடனம் சிராக்கினால் வெளியிடப்பட்டதை எதிர்கொள்ளும் வகையில் LO ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு, அரசாங்கத்தின் தாக்குதல்களை தோற்கடிக்க மக்கள் தெருக்களில் இருந்து அழுத்தம் கொடுத்தாலே போதுமானது என்ற பொய்த்தோற்றத்தை அதில் கூறியிருந்தது. அதில் அறிவிக்கப்பட்டதாவது: "சிராக்கிற்கும் வில்ப்பனுக்கும் கொடுக்கக் கூடிய ஒரே பதில் மார்ச் 28 நிகழ்ந்த போராட்ட வெற்றியை விடக் கூடுதலான வகையில் ஏப்ரல் 4ம் தேதி வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் வெற்றியுடையதாகச் செய்தலே ஆகும்."தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே வரவிருக்கும் பேச்சு வார்த்தைகளுக்கு வெளிப்படையாக ஒப்புதல் கொடுக்க மறுத்து, அமைப்பளவில், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட 11 அமைப்புக்களில் இருந்தும் ஒதுங்கியிருக்கும் வகையிலும், LO எந்த பதிலீட்டு முன்னோக்கையும் முன்வைக்கவில்லை; இது நடைமுறையில் மக்கள் எதிர்ப்பை தொழிலாளர் அதிகாரத்துவத்திற்கு பின் நிறுத்துவதில்தான் உதவியாக இருக்கும். நடவடிக்கை தினமான செவ்வாயன்று உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் "தொழிலாளர் அதிகாரத்திற்கான ஒரு சோசலிச மூலோபாயம்: பிரான்சின் முதல் வேலை ஒப்பந்த சட்டத்திற்கு ஒரே விடை" என்ற அறிக்கையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை வினியோகித்தனர். இந்த அறிக்கை விளக்கியதாவது: "CPE க்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு இயக்கம் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்தால் அது பின்வாங்கும் என்ற முன்னோக்கின் பிழையை நன்கு வெளிப்படுத்தியுள்ளது; மேலும் அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்க வேண்டிய தேவையையும் தெளிவாகக் காட்டியுள்ளது; அதற்கு பதிலீடாக தொழிலாள வர்க்கத்தால் உண்மையாகவே கட்டுப்படுத்தப்படும் அரசாங்கம் கொண்டுவரப்பட வேண்டிய தேவையும், அவ்வரசாங்கம் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டிய தேவையையும் முன்வைத்துள்ளது." |