World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: LCR's Besancenot provides left cover for labour bureaucrats' treachery பிரான்ஸ்: புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பெசன்ஸெனோ தொழிலாளர் அதிகாரத்துவத்தின் துரோகத்திற்கு இடது மறைப்பை கொடுக்கிறார் By Peter Schwarz "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" (CPE) க்கு எதிராக நாடு முழுவதும் மார்ச் 28 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடந்த மாலையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (லிவீரீuமீ சிஷீனீனீuஸீவீstமீ ஸிஙஸ்ஷீறீutவீஷீஸீஸீணீவீக்ஷீமீலிசிஸி) Paris Mutualite ல் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. மிக தாமதமாக தொடங்கி ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடந்த இக்கூட்டத்தின் முக்கிய பேச்சாளராக LCR இன் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளரும் 2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒலிவியே பெசன்ஸெனோ (Olivier Besancenot) இருந்தார். அவருடைய உரைக்கு பின்னர், சில நூறு பங்கு பெற்றவர்கள் அரங்கை விட்டு வெளியேறிவிட்டனர். உரை பற்றி விவாதம் ஏதும் நடைபெறவில்லை. வார்த்தை ஜாலங்கள் மூலம் தன்னுடைய கட்சியின் சந்தர்ப்பவாத கொள்கையை மூடிமறைக்கும் நோக்கத்தைத்தான் பெசன்ஸெனோ உரை கொண்டிருந்தது. "வெற்றியில் இருந்து அதிக தொலைவில் நாம் இல்லை" என்று அவருடைய உரையை அவர் தொடங்கினார். முடிக்கும்போது சே குவேராவின் போர் முழக்கமான Hasta la victoria siempre! (வெற்றி முன்னேறட்டும்!) என்று கூறினார். தன்னுடைய உரையை கேட்பவர்கள் சிரிப்பும், ஆர்வமும் கலந்து பங்கு பெற வேண்டும் என்ற முறையில் அவர் தன்னுடைய உரையில் உரத்துப் பேசியும், சைகைகள் காட்டியும் பலவாறாக கடுமுயற்சி செய்தார். மக்களுடைய உணர்வு மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது; மக்கள் திரண்டு எழுந்தது அசாதாரணமானது, அரசாங்கத்தின் நிலைமை ஆபத்திற்குட்பட்டிருந்தது என்று அவர் கூவினார்: "இன்று தெருக்கள் பேசிவிட்டன. தெருதான் அதி பெரும்பான்மையை கொண்டிருக்கிறது, அரசாங்கம் அதி சிறுபான்மையில் உள்ளது" என்றெல்லாம் அவர் பேசினார். இவருடைய உரையை கேட்க வந்தவர்களின் கண்களில் மண்ணை தூவுவதை இலக்காகக் கொண்டுதான், தவிர்க்கமுடியாமல் வரவிருக்கும் வெற்றியை பற்றிய இவருடைய பகட்டு சொற்ஜாலங்கள் இருந்தன. பிரான்சில் மக்கள் இயக்கத்தை எதிர்கொண்டுள்ள ஆபத்துக்கள், அரசியல் பணிகள் பற்றி பெசன்ஸெனோ ஏதும் குறிப்பிடவில்லை. சோசலிஸ்ட் கட்சியில் இருக்கும் வலதுசாரி பிரிவைப்பற்றி சில ஏளனக் கருத்துக்களை தவிர தொழிற்சங்கங்களின் பங்கு பற்றியோ, உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள், அவற்றின் மாணவர் கூட்டமைப்புக்கள் பற்றியோ இவர் ஏதும் பேசவில்லை; அவை அனைத்துமே இயக்கத்தை கட்டுப்படுத்தி, முன்னே செல்லா நிலையில் தள்ளளிவிட வேண்டும் என்றுதான் முயன்றுள்ளன. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருடைய இயக்கத்தை LCR பெருமைப்படுத்தி பேசினாலும், திரைக்குப் பின்னால் அதிகாரத்துவ அமைப்புக்களை விமர்சித்தலை கட்டுப்படுத்துதல், அதிகாரத்துவம் இயக்கத்தை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் முயற்சிகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில்தான் ஈடுபட்டுள்ளது. இதுதான் அது கொடுத்துள்ள "ஐக்கிய" அழைப்புக்களின் உண்மையான பொருளுரை ஆகும். LCR செய்தித் தாளான Rouge, மார்ச் 28 அன்று சிறப்பு பதிப்பு ஒன்றை ஆர்ப்பாட்டங்களில் வழங்கியது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: "அரசாங்கத்தை பின்வாங்கச் செய்வது இயலக்கூடிய காரியம்; CPE திரும்பப் பெறுதல் என்பதை அடைதல் இயலக் கூடியதுதான். ... நாம் அனைவரும் ஒருமித்துச் செயல்பட்டால் அரசாங்கத்தை இராஜிநாமா செய்ய வைத்தலும் முடியக்கூடியதுதான். அனைவரும், இளைஞர்களும், அதைவிடக் குறைந்த சிறார்களும் அனைவரும், பள்ளி மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள், உழைத்து ஊதியம் பெறுவோர், வேலையற்றோர், தொழிலாளர்கள் என்று அனைவரும் ஒன்றுபட வேண்டும்!""Tous ensemble" ( அனைவரும் ஒன்றாக) என்று விடுக்கப்பட்ட அழைப்பு LCR இன் அறிக்கைகள், வெளியீடுகள் அனைத்திலும் ஒரு சிவப்பு இழையாகத்தான் ஓடுகிறது. இளைய எதிர்ப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு "ஐக்கியம்" என்பது வெறுப்பிற்கு உட்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றாகத் திரண்டு நிற்றல் என்ற பொருளைக் கொடுக்கும்போது, LCR ஐ பொறுத்தவரையில், "ஐக்கியம்" என்றால் அதிகாரத்துவக் கருவிகளின் கரங்களை வலுப்படுத்துதல் என்று பொருளாகும்.பிந்தைய அமைப்போ முதலாளித்துவ ஒழுங்குமுறை தடைக்குட்பட்டுவிட்டால் என்ன ஆவது என்பதைப் பற்றி பெரும் அச்சம் கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் அவர்கள் கொடுத்துள்ள முறையீடுகள் அனைத்திலும் இதே கருத்துத்தான் உள்ளது. "கவனத்துடன் இருங்கள்; இல்லாவிடின் இந்தப் பூசல் கட்டுப்பாட்டை மீறி சமூக அமைதியை சிதற அடித்துவிடக் கூடும்.!" மாணவர் சங்கமான UNEF இன் தலைவரான சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை உடைய Bruno Julliard, Europe 1 வானொலி பேட்டியில் அவருடைய நோக்கம் அரசாங்கத்தை அகற்றுதலோ, தோற்கடித்தலோ இல்லை எனக் கூறியபோது, இவர்கள் அனைவருக்காகவும்தான் அதைக் கூறியிருந்தார். "இந்த இயக்கத்தின் இறுதியில் வெற்றி அடைந்தவர், தோல்வி அடைந்தவர் என எவரும் இருக்கும் நிலையை நாங்கள் விரும்பவில்லை" என்றார் அவர். இதற்கிடையில் ஜனாதிபதி சிராக்கும், பிரதம மந்திரி டு வில்ப்பனும் தாங்கள் பின்வாங்கும் எண்ணத்தை கொண்டிருக்கவில்லை என்பதை முழுமையாக தெளிவாக்கியுள்ளனர். அதிகாரத்துவங்களின் பிற்போக்குப் பங்கை LCR முற்றிலும் புறக்கணிக்க முடியாது என்ற அளவில், இயக்கத்தின் தன்னியல்பான மற்றும் உள்ளார்ந்த ஆற்றல்மிகு தன்மையே அனைத்து சிக்கல்களையும் கடப்பதற்கு போதுமானது என்று அது அறிவித்துள்ளது. மார்ச் மாத நடுப்பகுதியில் Rouge தலையங்கம் ஒன்றின் வழியே LCR அறிவித்தது: "சோசலிஸ்ட் கட்சியின் நோக்கங்கள், அரசியல் கணக்கீடுகள், தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் நாட்டுடனும் மோதல் பற்றிய அச்சங்களும் ஒரு புறம் இருக்க, அவை அனைத்துமே இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்து அத்துடன் செயலாற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் போராட்டத்தை தொடக்கியுள்ளவர்கள் துடிப்பும் வலிமையும் நிறைந்த இளைஞர்கள் ஆவர்...." இளைஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் "வலிமையும், துடிப்பும்" சோசலிஸ்ட் கட்சி, மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கப் போதுமானதாம்! எத்தகைய மோசடித்தனமான கருத்து! தொழிலாளர்கள் இயக்கத்தின் முழு வரலாறு, தொழிலாள வர்க்கம் அதன் தலைவர்களின் காட்டிக் கொடுப்புகள் மற்றும் நாச வேலைகள் ஆகியவற்றால் பட்டுள்ள கணக்கிலடங்கா தோல்விகள் அனைத்தும், குறிப்பாக பிரான்சில், இதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டைத்தான் நிரூபிக்கின்றன. LCR, "ஐக்கியத்திற்காக" அழைப்பு விடுத்துள்ள விதம் பிரெஞ்சு தொழிலாள இயக்கத்தில் உள்ள நீண்டதும், இழிதகைமை கொண்டதுமான மரபைத்தான் கொண்டுள்ளது. 1930களில் அத்தகைய அழைப்பு, மக்கள் முன்னணி அமைக்கப்படுவதற்கு அடிப்படையாயிற்று. "பாசிசத்திற்கு எதிரான ஐக்கியம்" என்ற பெயரில் ஸ்ராலினிஸ்டுகளும், சமூகஜனநாயகவாதிகளும் தீவிரபோக்கு கட்சியுடன் கூட்டு கொண்டு அதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை கீழ்ப்படிய செய்தன. தீவிரபோக்கு கட்சியோ பிரெஞ்சு பூர்ஷ்வாசியின் மரபாரந்த கட்சியாகும். 1936ம் ஆண்டு லியோன் புளுமின் மக்கள் முன்னணி அரசாங்கம் பிரெஞ்சு வரலாற்றிலேயே சக்திவாய்ந்த பொது வேலைநிறுத்தத்தை அடக்கிய வகையில், வலதுசாரி, அதிகாரத்திற்கு மீண்டும் வருவதற்கு வழிவகுத்தது; அதேபோல் ஸ்பெயின் புரட்சி தோற்பதற்கும், சில ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கும் காரணமாயிற்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் LCR மீண்டும் "ஐக்கியத்திற்கான" அழைப்பு விடுத்து, புதிய பாசிச வேட்பாளரான ஜோன் மரி லு பென் ற்கு எதிராக ஜாக் சிராக்கை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து வாக்குப் போடுமாறு கோரியது. தேசிய முன்னணியின் லு பென், சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன்- ஐ முதல் சுற்று வாக்கெடுப்பில் தோற்கடித்து இரண்டாம் சுற்றில் சிராக்கிற்கு சவாலாக வந்திருந்தார். சிராக்கிற்கு வாக்களிக்க வேணடும் என்ற அழைப்பில், LCR, வலதுசாரி கோலிசவாதிகளுடைய அதிகாரத்தை வலுப்படுத்தி, லு பென்னுக்கு எதிராக ஒரு சுயாதீனமான திசையில் வெகுஜன இயக்கம் வளர்வதை தடுத்து நிறுத்த வேலைசெய்தது. இப்பொழுது, வெகுஜன இயக்கம் CPE க்கு எதிராக உச்ச கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில், LCR தன்னுடைய அடுத்த காட்டிக் கொடுப்பிற்கு தயார் செய்து கொண்டிருக்கிறது. மார்ச் மாத நடுவில் LCR, கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக்கு ஒரு கடிதம் எழுதியது; அதில் "தாராளவாத எதிர்ப்பு, மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு சக்திகளின் ஐக்கியத்திற்கு" வழிவகுக்க வேண்டும் என்று அது கூறியது. 2007ம் ஆண்டு வரவிருக்கும் ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு கூட்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று அது ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. "அரசாங்கம் மற்றும் முதலாளிகளுக்கு எதிராக திரள்வது, மற்றும் ஒரு மாற்றீடாக வினாவை எழுப்புவது போன்றவை உங்களுடைய பரிசீலனையின் மையத்தில் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்; அதில் பங்கும் பெறுகிறோம்." என்று அது அறிவித்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ ஆட்சிக்கு நீண்ட காலம் நம்பிக்கைக்குகந்த தூணாக ஒரு வரலாற்றை கொண்டுள்ளது என்பதை ஒருவரும் மறந்துவிடக் கூடாது. கடந்த 26 ஆண்டுகளில் அது சோசலிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த அரசாங்கங்கள் அனைத்திலும் பங்கு பெற்று அவற்றின் கொள்கைகளையும் ஆதரித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான Marie-George Buffet, அகல் பேரவையில் பெரும்பான்மையுடன் உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஜோஸ்பன்னுடைய காபினெட் மந்திரி சபையில் ஐந்தாண்டு காலம் பதவி வகித்தார். LCR, கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு கூட்டு வேட்பாளர் வேண்டும் என்று வாதிட்டிருக்கும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டாக ஒரு வேட்பாளரை நிறுத்தலாம் என்று முயலுகிறது. எனவே LCR என்பது பூர்ஷ்வா ஆட்சிக்கு பாதுகாப்பாக இருக்கும் சங்கிலியின் கடைசி பிணைப்பாகத்தான் உள்ளது. தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் மக்கட்திரளின் பரந்த அடுக்குகள் ஆகியவற்றின் பெரும் ஐக்கியம் நாட்டளவில் என்றில்லாமல் சர்வதேச அளவிலும் நிறுவப்பட வேண்டியதுதான் கடந்த கால சமூக நலன்கள், ஜனநாயக உரிமைகள் இப்பொழுது உலகெங்கும் தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும்போது அதை தடுத்து நிறுத்துவதற்கு முற்றிலும் தேவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அத்தகைய ஐக்கியம் முதலாளித்துவ சொத்துரிமையை பாதுகாத்து, முதலாளித்துவ தேசிய நலன்களுக்காக தொழிலாளர்களின் நலன்களை தாழ்த்தும் பழைய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியலமைப்புக்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தின் மூலமாகத்தான் அடையப்பட முடியும். தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே ஒற்றுமையை கொண்டு வருவதற்கு அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக அடுக்குகளின் தேவைகளையும் தெளிவாய் கூறும் அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. வேறுவார்த்தைகளில் கூறினால், இதற்கு முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக இயக்கப்படும் ஒரு சோசலி முன்னோக்கு தேவைப்படுகிறது. தொழிற்சங்கங்களுடன், மற்றும் அதிகார பூர்வ "இடது" களுடன் "ஐக்கியம்" என்பது தொழிலாள வர்க்கத்தில் பிளவை ஏற்படுத்தும் மற்றும் அதை வலிமையிழக்கத்தான் பயன்படும். ஜோஸ்பனுடைய தலைமையில் இயங்கிய "பன்முக இடது" அரசாங்கத்தின் அனுபவத்தால் இது மிகச் சிறந்த முறையில் நன்கு உணரப்படும். ஜோஸ்பன் அரசாங்கம் ஐந்து ஆண்டு காலம் ஆண்டபின், தொழிலாள வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட சில பிரிவுகள் மிகப் பெரிய, ஆழ்ந்த அளவில் ஏமாற்றத்திற்கு உள்ளான விதம் அவை வலதுசாரி வார்த்தை ஜாலக்காரர் லு பென்னிற்கு தங்கள் வாக்கை தரத் தயாராகியிருந்தனர். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய ஐக்கியம் என்பது தவிர்க்கமுடியாமல் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டமைக்கும் பணியுடன் பிணைந்துள்ளது. இந்தப் பிரச்சினையை நசுக்குவதற்கு தன்னால் முடிந்ததை LCR செய்து வருகிறது; மிகப் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கவும் அது முயன்று வருகிறது. அரசியல் ஸ்தாபனத்தில் இடது கன்னையாக அது அமைந்துள்ளது. இளைஞர்களின் தீவிர மனோபாவங்களுக்கு ஏற்ப சொற்களை பயன்படுத்தி வந்தாலும்கூட, மிகவும் கவனத்துடன் அதிகாரத்துவ அமைப்புக்கள், கருவிகள் ஆகியவை பற்றிய எந்த விமர்சனங்களையும் நசுக்கவும் அவற்றின் அதிகாரத்தை பெருக்கவும் அது பெரும் அக்கறையுடன் முயன்று வருகிறது. |