World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions betray plantation workers strike

இலங்கை தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்தன

By K. Ratnayake
21 December 2006

Back to screen version

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி இரண்டு வார காலமாக முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் முடிவு கட்டியதோடு தொழிலாளர்கள் கோரியதை விட மிகக் குறைந்த சம்பள உயர்வையும் ஏற்றுக்கொண்டனர். ஓரிரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற காத்திரமான கூட்டமொன்றில் தொழிலாளர்கள் தமது சம்பள பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிய பின்னரும் தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். அனைத்துத் தொழிற்சங்கங்களும், எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) மற்றும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும் இந்தக் காட்டிக்கொடுப்புக்கு பொறுப்பாளிகளாகும்.

இந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் பணி, தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களைச் சார்ந்த 500,000 தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்த இ.தொ.கா மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களிடம் விடப்பட்டிருந்தது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையில் செவ்வாயன்று மாலை நடந்த கூட்டமொன்றில், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை சந்தித்த இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் மற்றும் அவரது பங்காளிகளும், 300 ரூபா அல்லது 3 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான நாளாந்த சம்பளத்தை கோரி மேற்கொண்ட வேலைநிறுத்தத்தை நிறுத்துவதற்கு உடன்பட்டனர்.

புதிய இரண்டு வருடகால உடன்படிக்கையின் கீழ், நாளாந்த சம்பளம் 135 ரூபாயில் இருந்து 170 ரூபா வரை வெறும் 35 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலாக "நிலையற்ற கொடுப்பனவானது" 90 ரூபாவரை 30 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது வருகை மற்றும் ஏறி இறங்கும் தேயிலை விலையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களால் குறிப்பாக பெண்களால் இந்த மேலதிக கொடுப்பனவுக்காக கோரப்படும் 75 வீத வருகையை பூர்த்தி செய்ய முடியாததால் அவர்களால் இந்த முழு கொடுப்பனவையும் பெறமுடியாது. உற்பத்தியை அதிகரிப்பதற்காக 18 கிலோவிற்கு மேலதிகமாக எடுக்கும் ஒவ்வொரு கிலோ தேயிலை கொழுந்துக்கும் 9 ரூபா மேலதிக கொடுப்பனவு உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர், ஹட்டனில் உள்ள தொழிலாளர்கள் இந்த உடன்படிக்கை ஒரு வியாபாரம் என கண்டனம் செய்ததோடு அடுத்த நாள் எதிர்ப்புக்காக வேலைக்குச் செல்ல மறுத்தனர். "நாங்கள் இன்று உடன்படிக்கைக்கு எமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக வேலைக்குச் செல்லவில்லை" என தொழிலாளர்கள் ஆத்திரத்துடன் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தனர். ஏனைய மத்திய தோட்டப்புற மாவட்டங்களிலும் இதே பிரதிபலிப்புகளை காணக்கூடியதாக இருந்தது. இன்று காலையும் கூட, எல்லாத் தோட்டங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் வேலைக்குச் சென்றுவிட்டார்களா இல்லையா என்பது நிச்சயமில்லை.

ம.ம.மு. மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களின் ஆதரவு இன்றி தொண்டமானால் இந்த வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்ட முடியாது. ம.ம.மு. டிசம்பர் 5 அன்று வேலைநிறுத்தத்தை ஆரம்பித்து வைத்தபோது, அதில் பங்குபற்ற இ.தொ.கா. மறுத்ததை தோட்டப்புறங்கள் பூராவும் உள்ள தொழிலாளர்கள் பகிஷ்கரித்தனர். முலாளிமார் சம்மேளனத்துடன் தொண்டமான் உடன்படிக்கையை கைச்சாத்திட்ட போதிலும், ம.ம.மு. தலைவர் பி. சந்திரசேகரன் ஏற்கனவே தனது முழு ஆதரவையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இ.தொ.கா., ம.ம.மு ஆகிய இரண்டும் அரசியல் கட்சிகளாக இயங்குவதோடு சந்திரசேகரன், தொண்டமான் இருவரும் இராஜபக்ஷவின் நிர்வாகத்தில் அமைச்சர்களாவர். வேலைநிறுத்தத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடிகளை சுட்டிக்காட்டிய இராஜபக்ஷ, பிரச்சாரத்திற்கு முடிவுகட்டுமாறு சந்திரசேகரனுக்கு வேண்டுகோள் விடுத்தார். ம.ம.மு. தலைவர் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிலாளர்களை வற்புறுத்துவதன் பேரில், உப தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு களம் அமைத்துக் கொடுக்க ஞாயிறன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை ஹட்டனில் கூட்டினார்.

ஆயினும், ஹட்டன் கூட்டமானது திட்டமிட்ட வகையில் முன்செல்லவில்லை. முதலாளிமார் சம்மேளனம் வழங்குவதை ஏற்றுக்கொள்ளும் பிரேரணையை ஆத்திரத்துடன் கண்டனம் செய்வதற்காக தோட்டப்புற மாவட்டங்கள் பூராவும் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வருகை தந்திருந்தனர். கூக்குரல்களுக்கு மத்தியில் சில்வாவின் பேச்சைக் கேட்க முடியாத நிலையில், சந்திரசேகரன் தவிர்க்க முடியாமல் தலையிடத் தள்ளப்பட்டார். வேலைநிறுத்தத்தை தொடர்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது தொழிலாளர்களைப் பொறுத்தது என சந்திரசேகரன் பிரகடனம் செய்தார். வாக்கெடுப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், 300 ரூபாவுக்கு குறைந்த எதையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதே அங்கு வந்திருந்த தொழிலாளர்களின் முடிவு என்பது மிகத் தெளிவானதாகும்.

ஆயினும் வேலைநிறுத்தத்திற்கு முடிவுகட்டும் தீர்மானத்துடனேயே சந்திரசேகரன் கூட்டத்தை விட்டு வெளியேறினார். நிலைமையை எதிர்த்து சமாளிக்க தன்னால் முடியாத காரணத்தால் இ.தொ.கா. வும் தலையிட வேண்டுமெனக் கோரி திங்களன்று கடிதமொன்றை இ.தொ.கா. விற்கு அனுப்பி வைத்தார். "இது என் மீது சுமைகளைக் குவித்துள்ள" நிலையில் தான் வேலைநிறுத்தத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தவில்லை என்பதை அவரது கடிதம் இ.தொ.கா. விற்கு உறுதிப்படுத்தியது.

உடன்படிக்கையின் தேவையை உணர்த்தி அவர் எழுதியதாவது: "(முதலாளிமார் சம்மேளனத்தால்) வழங்கப்பட்டுள்ளதை விட மேலதிகமாக எங்களால் பெற முடியுமாயின் நாங்கள் ஏன் அதற்காக முயற்சிக்கக் கூடாது. இல்லையெனில், தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக மலையக மக்கள் முன்னணியும் நானும் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நான் உங்களிடமிருந்து ஒரு பெறுமதியான அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன்."

பத்திரிகையாளர் மாநாடொன்றில் இந்த உடன்படிக்கையை பகிரங்கப்படுத்திய இ.தொ.கா. தலைமைத்துவம், "பெறுமதியான புதிய அணுகுமுறை" என்ன என்பதை தாம் புரிந்துகொண்டதாக பிரகடனம் செய்தது. அவர்கள் வேலைநிறுத்தம் "நெடுந்தூரம் சென்றுவிட்டதாக" காலதாமதமின்றி அறிவித்ததோடு செவ்வாய்கிழமை ஜனாதிபதி இராஜபக்ஷவின் தலைமையின் கீழ் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளையும் ஏற்பாடு செய்தனர்.

தனது சொந்த உறுப்பினர்களே இந்த உடன்படிக்கையை எதிர்ப்பார்கள் என்பதில் விழிப்பாக இருந்த ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உத்தியோகபூர்வமாகக் கலந்துகொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சந்திரசேகரன் தன்னுடைய வாய்ப்புக்காக மாநாட்டு அறையின் வெளியில் காத்திருந்தார். பின்னர் இராஜபக்ஷவை தனிப்பட்ட முறையில் சந்தித்த அவர், தான் நூறு சதவீதம் திருப்தியடையாவிட்டாலும் இந்த சம்பள அதிகரிப்பு முன்னெப்போதுமில்லாத "வெற்றியை" பிரதிநித்துவம் செய்கின்றது எனப் பிரகடனம் செய்தார்.

இந்த சூழ்ச்சித் திட்டங்களுக்கு அத்தியாவசியமான மூடிமறைப்புக்களை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) வழங்கியது. அது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமொன்றை அதன் தேசிய தொழிற்சங்க மையத்தின் அலுவலகத்தில் திங்களன்று கூட்டியிருந்தது. ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினரும் இந்த தொழிற்சங்க மையத்தின் தலைவருமான லால் காந்த, தோட்டத் தொழிலாளர்கள் தமது முழு சம்பளக் கோரிக்கையையும் பெறாவிட்டால் ஜே.வி.பி. தனது தொழிற்சங்கங்கள் ஊடாக தீவு பூராவும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கும் என்பதை அறிவிக்க கூட்டத்தில் தோன்றினார்.

எவ்வாறெனினும், ம.ம.மு. கண்டும் காணதது போல் இருக்க, இ.தொ.கா. செவ்வாய் கிழமை முதலாளிமாருடன் பேச்சுநடத்த சென்ற போதிலும் ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்த சம்பவத்தின் பின்னர், ஜே.வி.பி. யின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும் மற்றும் தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் தனித்தனியாக பத்திரிகையாளர் மாநாடு நடத்தி ஏனைய தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்துவிட்டதாக கண்டனம் செய்தன. ஆனால் ஜே.வி.பி. க்கு இந்தப் பிரச்சாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் எண்ணம் இல்லை என்பது உடனடியாக அம்பலத்திற்கு வந்தது. அதன் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர், இந்த சம்பள அதிகரிப்பு போதாவிட்டாலும் அது "ஒரு வெற்றியே" என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நேற்று அட்டனில் நடந்த ஒரு சுருக்கமான கூட்டத்தில், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள், தமது உறுப்பினர்களை வேலைக்குத் திரும்பச் சொல்வதை விட வேறு பதிலீடு கிடையாது என அறிவித்தனர். தொழிலாளர்களின் சீற்றத்தை தணிக்கும் முகமாக இந்த உடன்படிக்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அதன் தலைவர்கள் பிரகடனம் செய்தனர். இந்த நகர்வு தவிர்க்கமுடியாமல் நீதிமன்றத்தில் தோற்கடிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு முன்னர் அனைத்து ஜே.வி.பி. தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதாக விடுத்த எச்சரிக்கையைப் பற்றி அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டதன் காரணம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் உறுதிப்பாடு குறைவாக இருந்ததால் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, விலை உயர்வு மற்றும் சீரழியும் வாழ்க்கை நிலைமைகளுக்கு முங்கொடுத்துள்ள ஏனைய தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த வேலை நிறுத்தத்திற்கு பரந்த ஆதரவு காணப்பட்டதாகும். தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஏனைய தொழிலாளர் வர்க்கத் தட்டினரையும் ஈர்க்கும் காந்தத் துருவமாகிவிடும் என்பதில் இராஜபக்ஷ அரசாங்கம் தீவிரக் கவனமாக இருந்தது.

டிசம்பர் 1 முதல் டெலிகொம் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ஐந்து நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பல தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், சிறந்த சம்பள நிலைமைகளை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரசபை தொழிலாளர்கள், அரசாங்கம் தனியார்மயமாக்கத்திற்கான தயாரிப்பாக திட்டமிடப்பட்ட மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுக்குமானால் மின்சாரத்தை முழுமையாகத் துண்டிப்பதாக எச்சரித்தனர். கடந்த வாரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 200 பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கூட்டமொன்றை நடத்தினர். திங்களன்று நூற்றுக்கணக்கான கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் இதே போன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தினர்.

இராஜபக்ஷ அரசாங்கத்துடன் அரசியல் முரண்பாடுகள் ஏற்படும் எனப் பயந்த தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள், சரிநுட்பமாக வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்ட ஒன்று சேர்ந்தனர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கத்தின் இயக்கமானது, அரசாங்கத்திற்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்திற்கும் ஜே.வி.பி. வழங்கும் தனிப்பட்ட ஆதரவை குறுக்கே வெட்டும் என்பதால், ஜே.வி.பி. பொது வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான ஒட்டுமொத்த யுத்தத்தைக் கோருவதன் காரணத்தால் மட்டுமே அது இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. போல் இராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதான கருப்பொருள் "தாயகம் முதல்" என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிலாளர் வர்க்கம் தனது சுயாதீனமான நலன்களை கீழ்ப்படுத்திவிட்டு ஏற்கனவே 65,000 உயிர்களைப் பலிகொண்டுள்ள பிற்போக்கு யுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதாகும்.

தொழிலாளர்களின் சார்பில் இந்தப் பிரச்சினையில் ஜனாதிபதி இராஜபக்ஷ தலையிடுவார் என்ற மாயையை ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்கங்கள் முன்னிலைப்படுத்தின. உண்மையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அனுப்பத் தவறினால் அரசாங்கம் தொழிலாளர்கள் மீது பாய்ந்துவிழத் தயாராகிக் கொண்டிருந்தது. பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, மத்திய மலையக மாவட்டங்களுக்கு பொலிஸ் குழுக்களை அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொலிசாரின் ரோந்து மற்றும் அடக்குமுறைகள் அதிகரித்திருப்பதாக திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஹட்டனில் உள்ள தொழிலாளர்கள் பலர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்திருந்தார்கள்.

இந்த சிறிய சம்பள அதிகரிப்பு குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரிதாக உதவப் போவதில்லை. உண்மையான சம்பளம் வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. 2004ல் கடைசியாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து வாழ்க்கைச் செலவு சுட்டெண் 3,826ல் இருந்து 4,998 வரை உயர்ந்துள்ளது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்தே தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. அவர்கள் பொருத்தமான சுகாதார அல்லது கல்வி வசதிகள் இன்றி லயன் அறைகளில் வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தன்னால் கொடுக்கக் கூடிய ஆகக் கூடியளவை புதிய உடன்படிக்கையில் கொடுத்துவிட்டதாக முதலாளிமார் சம்மேளனம் முறைப்பாடு செய்கின்ற போதிலும், அனைத்து தேயிலைக் கம்பனிகளும் பெருந்தொகையான இலாபங்களை ஈட்டியுள்ளன. வட்டவலை பிளான்டேசன்ஸ் செப்டெம்பர் வரை ஆறுமாத காலத்திற்குள் 140 மில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பெற்றதை விட 66 மில்லியன்களால் அதிகரித்துள்ளது. அகலவத்தை பிளான்டேசன்ஸ் இந்த ஆண்டு முதல் ஒன்பது மாதத்தில் 90 மில்லியன் ரூபாய்களை மொத்த இலாபமாகப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12 மில்லியன்கள் அதிகமாகும். பொகவந்தலாவை பிளான்டேசன்ஸ் முதல் ஒன்பது மாதத்தில் 123 மில்லியன் ரூபாய்களை இலபமாகப் பெற்றுள்ளது. இது 24 மில்லியன் அதிகரிப்பாகும். இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் கொட்டகலை பிளான்டேசன்ஸ் பெற்றுக்கொண்ட மொத்த இலாபம் 222 மில்லியன் ரூபாய்களாகும். இது 17 மில்லியன்களால் அதிகரித்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved