:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: "Heroes Day" speech a symptom
of the LTTE's political bankruptcy
இலங்கை: "மாவீரர் தின" உரை புலிகளின் அரசியல் வங்குரோத்தின் அறிகுறி
By Wije Dias
8 December 2006
Use this
version to print | Send this link by
email |
Email the
author
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் 27
ஆற்றிய வருடாந்த "மாவீரர் தின" உரை, புலிகள் கணிசமான அரசியல் நெருக்கடிக்குள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் முற்றுகையின் கீழ், பெரும் வல்லரசுகளின் ஆதரவுக்காக உருக்கமாக
வேண்டுகோள் விடுப்பதோடு தான் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் தமிழ் மக்களின் தேவைகள் மற்றும்
அபிலாஷைகளுக்கு அவர்களிடம் தீர்வு கிடையாது.
கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக இராணுவத்தைக் கட்டவிழ்த்துவிட்டது.
முதலாவதாக "காணாமல் போன சம்பவங்கள்" மற்றும் படுகொலைகள் ஊடாக ஒரு இழிந்த மூடிமறைக்கப்பட்ட
யுத்தத்தின் மூலமும், பின்னர் கடந்த ஜூலையில் இருந்து 2002 யுத்தநிறுத்தத்தை வெளிப்படையாக மீறி முன்னெடுக்கப்பட்ட
இராணுவத் தாக்குதல்களின் மூலமும் இது முன்னெடுக்கப்பட்டது. ''சர்வதேச சமூகமானது'' "சமாதான முன்னெடுப்புகளை"
தூக்கி நிறுத்துவதற்குப் பதிலாக புலிகள் மீது குற்றஞ்சாட்டியதோடு பேச்சுவார்த்தைகளில் மேலும்
விட்டுக்கொடுப்புக்களை செய்வதற்காகவும் புலிகளை நெருக்கியது.
பிரபாகரனின் "மாவீரர் தின" உரைகள் எப்பொழுதும் புலிகளின் ஆதரவை பூசிமெழுகுவதையும்
மற்றும் அடுத்த ஆண்டுக்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தை விடுப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளன. இத்தகைய நிகழ்வுகள்,
யுத்த நிறுத்தம் முதல், புலிகளின் ஒடுக்குமுறை வழிமுறைகள் மற்றும் எரியும் சமூகத் தேவைகளை அவர்களால் இட்டு
நிரப்ப முடியாமை சம்பந்தமாக தமிழர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை திசை திருப்புவதை இலக்காகக்
கொண்ட மேலும் மேலும் கற்பனைமிகுந்த விழாவாக மாறிவருகின்றது. விரிவுபடுத்தப்பட்ட கொண்டாட்டங்களின் மத்தியில்
புலிகளின் தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த ஆண்டின் உரையும் இதற்கு விதிவிலக்கல்ல.
தற்காப்பு நிலையில், இராணுவ சீருடையில் இருந்த பிரபாகரன், எதிர்த்து நிற்கும்
தோரணையைக் காட்டுவதில் நம்பிக்கையிழந்தவராகக் காணப்பட்டார். யுத்தத்தை உக்கிரமாக்கியதற்காக
இராஜபக்ஷ அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய அவர், யுத்த நிறுத்தம் இப்போது "செயலற்றுவிட்டது" என
நாடகபாணியில் பிரகடனம் செய்தார். அவரது அறிக்கையில் உண்மைக்கும் மேலாக ஒன்றும் இல்லாத அதே வேளை,
இராஜபக்ஷ அரசாங்கம் புலிகள் மீது நல்ல நம்பிக்கை வைக்க முடியாது என்பதை "நிரூபிக்க" அதை உடனடியாக
பற்றிக்கொண்டது. மூன்று நாட்களின் பின்னர், பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான
கோதபாய இராஜபக்ஷவைக் கொல்ல முயற்சித்ததன் மூலம் புலிகள் பிரபாகரன் குறிப்பிட்டதை
கோடிட்டுக்காட்டினர். அரசாங்கம் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்தவும் புலிகளுக்கு
எதிரான இராணுவ நடவடிக்கைகளை உக்கிரமாக்கவும் இந்தக் கொலை முயற்சியை சுரண்டிக் கொண்டது.
இந்தக் குண்டுத் தாக்குதலும் மற்றும் பிரபாகரனின் மனநிலையும், பலத்தின்
அறிகுறிக்குப் பதிலாக புலிகளின் அரசியல் வேலைத் திட்டத்தின் வங்குரோத்தையே வெளிப்படுத்துகிறது. புலிகளின்
தலைவர் ஒரு மூலைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தனியான முதலாளித்துவ தமிழ் ஈழ
அரசுக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறார். "சிங்களப் பேரினவாதத்தின் சமரசமற்ற நிலைப்பாடானது
தமிழீழ மக்களின் சுதந்திர அரசைத் தவிர வேறு எதையும் தேர்வுசெய்துகொள்ள முடியாத நிலைக்கு எங்களைத்
தள்ளியுள்ளது" என அவர் தெரிவித்தார். இந்தக் கோரிக்கையை கணிசமான சர்வதேச அழுத்தங்களை அடுத்து
புலிகள் 2002ல் நடந்த சமாதான பேச்சுக்களின் போது உத்தியோகபூர்வமாக கைவிட்டனர். அத்துடன்
சாத்தியமான அனைத்து வழிகளிலும், அதன் சொந்த தலைமைத்துவத்தைப் பொறுத்தளவிலும் கூட இந்தக் கோரிக்கை
நிலையானதல்ல.
புலிகளும் மற்றும் தனித் தமிழீழத்திற்கான அவர்களின் கோரிக்கையும், எப்பொழுதும்
தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை அன்றி, தமிழ் முதலாளித்துவத்தின் வர்க்க
நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஏனைய தமிழ் குட்டி முதலாளித்துவக் குழுக்களைப் போலவே, புலிகள்
அமைப்பும் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக இலங்கை அரசாங்கமும் மற்றும் அரசும் திட்டமிட்டு
மேற்கொண்ட ஆழமான பாரபட்சங்களின் விளைவாக 1970களில் தோற்றம்பெற்றது. சிங்களப் பேரினவாதத்திற்கு
எதிரான புலிகளின் பிரதிபலிப்பும், தனது சொந்த தரத்திலான பிற்போக்கு இனவாத அரசியலை அபிவிருத்தி
செய்வதாக இருந்தது. அது இலங்கை அரசாங்கத்தின் குற்றங்களுக்காக சிங்களத் தொழிலாளர்கள் மற்றும்
விவசாயிகள் மீது குற்றஞ்சாட்டியது. அது தனது கருத்துறுதி கொண்ட கெரில்லா கைத்திறன்கள் மூலம், குறிப்பாக
1983 வெடிப்புகளை அடுத்து, ஆதரவு திரட்டிக்கொண்டதோடு தமிழ் சிறுபான்மையினருக்கு மத்தியில் இருந்த தனது
அரசியல் எதிரிகளை இரக்கமின்றி ஒழித்துக்கட்டியது.
ஆரம்பத்தில் இருந்தே, தமிழீழத்தை ஸ்தாபிப்பதில் ஏதாவதொரு பெரும் வல்லரசின்
ஆதரவை பட்டியலில் சேர்த்துக்கொள்வது புலிகளின் முன்நோக்காக இருந்து வந்துள்ளதோடு, இதன் பெறுபேறு
அடுத்து அடுத்து ஒவ்வொரு குருட்டு பங்காளிகளின் பின்னால் தமிழ் வெகுஜனங்களை அது வழிநடத்தியுள்ளது. 1987ல்
இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு ஆதரவளித்த புலிகள், தமிழர்களை பிரதமர் ராஜீவ் காந்தியின் இந்திய
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு தூண்டியது. இந்திய "அமைதிகாக்கும்" துருப்புக்கள் வட இலங்கையில்
புலிகளை பலாத்காரமாக நிராயுதபாணிகளாக்கவும் மற்றும் உடன்படிக்கை சம்பந்தமான எதிர்ப்பை நசுக்கவும்
முயற்சித்த போது மோதல்கள் துரிதமாக வெடித்தன.
பிரபாகரன் தனது கடந்தவார உரையில், புலிகள் 2002ல் சமாதான
முன்னெடுப்புகளுக்குள் நுழைந்தது "ஒரு பலமான நிலையில் இருந்தே" என தற்பெருமை கொண்டார். ஆனால்
இப்பொழுது புலிகள் ஏன் தற்காப்பு நிலையில் இருக்கவேண்டியுள்ளது என்பதை விளக்குவதில் அவர் முழுமையாகத்
தோல்வியடைந்துள்ளார். 1990களில் புலிகளின் வளர்ச்சியிலும், மத்திய கிழக்கில் பாலஸ்தீன விடுதலை இயக்கம்
மற்றும் தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற ஏனைய ஆயுதம் ஏந்திய முதலாளித்துவ
தேசியவாத இயக்கங்களின் அதே பாதையே பின்பற்றப்பட்டுள்ளது. குளிர் யுத்தத்தின் முடிவானது பெரும்
வல்லரசுகளின் மத்தியில் தமது சூழ்ச்சித்திட்டங்களைக் கையாளும் இத்தகைய இயக்கங்களின் இயலுமையை
வரையறைப்படுத்தியுள்ளதுடன், பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியானது தேசியப் பொருளாதார ஒழுங்கை
அடிப்படையாகக் கொண்ட புதிய அரசுகளை ஸ்தாபிக்கும் அவர்களின் திட்டங்களை கீழறுத்துள்ளது. இந்த
அமைப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தமது "ஏகாதிபத்திய விரோத" சொல்வீச்சுக்களை கைவிட்டுள்ளதுடன்,
சர்வதேச ரீதியில் மேற்பார்வை செய்யப்படும் பேச்சுவார்த்தை மேசைக்கு கூட்டாக நடந்து சென்றதோடு
அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு இடத்திற்காக தமது துப்பாக்கிப் படையினரையும் கைமாற்றிக்கொண்டன.
2000 ஆண்டில் இலங்கை இராணுவத்திற்கு தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளை
ஏற்படுத்திய பின்னரே புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தனர் என்பது உண்மை. அது மூலோபாய
முக்கியத்துவம் கொண்ட ஆனையிறவு இராணுவ முகாமையும் மற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கணிசமான
பகுதிகளையும் கைப்பற்றியமை கொழும்பில் பீதியைத் தோற்றுவித்தது. ஆயினும், யுத்த நிறுத்தமும் சமாதான
பேச்சுக்களும் 2000 ஆண்டில் அன்றி, 2002ம் ஆண்டில் செப்டெம்பர் 11 அன்று அமெரிக்கா மீது தாக்குதல்
தொடுக்கப்பட்டதை அடுத்தே ஆரம்பமானது. இலங்கை ஆளும் கும்பலில் கணிசமான பகுதியினர், புலிகளை தமது
நிபந்தனையின் கீழ் பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ளிச் செல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பற்றிக்கொண்டனர்.
இல்லையேல் புஷ் நிர்வாகத்தின் போலியான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தில்" புலிகளும் இலக்குவைக்கப்படும்
நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தது.
புலிகள் தமது அரசியல் பலவீனத்தில் இருந்தே "சமாதான முன்னெடுப்புகளுக்குள்"
நுழைந்தனர் என்ற உண்மையை அவர்களின் இராணுவ வெற்றிகள் மாற்றியமைக்கவில்லை. 2001 டிசம்பரில்
நிலைமையை ஏற்றுக்கொண்ட புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்ரன் பாலசிங்கம் கசப்புடன்
பிரகடனப்படுத்தியதாவது: "பின்லாடன் என்றழைக்கப்படும் ஒரு பைத்தியக்காரன் அமெரிக்காவுடன்
மோதிக்கொண்டதோடு இப்போது சில நாடுகள் எங்களையும் தமது பயங்கரவாதிகள் பட்டியலில்
சேர்த்துக்கொண்டுள்ளன." குறிப்பிடத்தக்க வகையில், பிரபாகரன் தனது அண்மைய உரையில் இலங்கைக்கு வெளியில்
நடப்பவை பற்றி, குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் குற்றவியல் நடவடிக்கைகளைப்
பற்றி அவரால் எதுவும் சொல்வதற்கில்லை. புலிகள் எப்பொழுதும் புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை"
எதிர்த்தது கிடையாது, ஆனால் வாஷிங்டனின் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இருந்து தம்மை விலக்குமாறு
வெறுமனே மன்றாடிக்கொண்டிருக்கின்றது.
சமாதான முன்னெடுப்புகளில் கைச்சாத்திட்டுக்கொண்ட புலிகள், தமது தனியான
தமிழீழத்திற்கான கோரிக்கையை துரிதமாகக் கைவிட்டதோடு, தொழிலாளர் வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதற்கான
சிங்கள மற்றும் தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு ஒழுங்கு ஒன்றுக்குள் ஒரு பாத்திரத்தை
இட்டுநிரப்ப முயற்சித்தது. பாலசிங்கம் "புலிப் பொருளாதாரம்" ஒன்றை ஸ்தாபிக்க கொழும்பு அரசாங்கத்துடன்
செயற்படுவதற்கு புலிகளின் விருப்பத்தை வெளிப்படையாகப் பிரகடனம் செய்தார். "புலிப் பொருளாதாரம்"
என்பது இலங்கையை ஒரு மலிவு உழைப்புக் களமாகவும் பிராந்தியத்தின் முதலீட்டு நுழைவாயிலாகவும் மாற்றுவதாகும்.
ஆயினும், ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசாங்கமோ அல்லது பெரும்
வல்லரசுகளோ புலிகளுக்கு ஒரு பிரதான அரசியல் பாத்திரத்தை அளிக்க தயாராகவில்லை. ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைமையிலான அரசாங்கமானது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இராணுவம் மற்றும் மக்கள் விடுதலை
முன்னணி (ஜே.வி.பி.) போன்ற சிங்களத் தீவிரவாத கட்சிகளினதும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு உள்ளாகியது.
ஜே.வி.பி., யுத்த நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் ஒரு காட்டிக்கொடுப்பாக கருதுகிறது. புலிகளுக்கு
எதிரான தொடர்ச்சியான இராணுவ மற்றும் அரசியல் ஆத்திரமூட்டல்களை அடுத்து, இறுதி சமாதான உடன்படிக்கை
பற்றிய உறுதியான கலந்துரையாடல்கள் இடம்பெறாமலேயே 2003ல் பேச்சுவார்த்தைகள் பொறிந்துபோயின.
புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு தீர்வை அடைவதற்காக கொழும்பு
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு "சர்வதேச சமூகத்திற்கு" மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்து
வருகின்றனர். இது முற்றிலும் வெற்றியளிக்கவில்லை. பிரபாகரன் தனது உரையில், தொடர்ச்சியான
ஆத்திரமூட்டல்களுக்கு மத்தியிலும் யுத்த நிறுத்தத்தை பாதுகாக்கவும் மற்றும் ஒரு உடன்படிக்கையைப் பற்றி
பேச்சுவார்த்தை நடத்தவும் கடுமையாக வளைந்து கொடுத்தது என்பதை வலியுறுத்தினார். "நாம் மேலும்
சமாதான முயற்சிகளுக்கு வாய்ப்புகளைக் கொடுப்பதற்காக சுனாமி பேரழிவின் போதும், மீண்டும் ஜனாதிபதி
இராஜபக்ஷ தேர்வு செய்யப்பட்ட போதும் எமது சுதந்திரப் போராட்டத்தை முன்னேற்றும் திட்டத்தை
ஒத்திவைத்தோம்," என அவர் பிரகடனம் செய்தார்.
2004 டிசம்பரில் இலங்கையின் கரையோரத்தின் பெரும் பகுதியை சுனாமி அழித்த
போது சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சாதாரண உழைக்கும் மக்கள் தன்னிச்சையாக ஒருவருக்கொருவர்
உதவிக்கொண்டனர். இந்த வர்க்க உணர்வுக்கு எதாவதொரு அரசியல் அழைப்புவிடுக்க பிறப்பிலேயே இலாயக்கற்ற
புலிகள், அதற்குப் பதிலாக சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக
இந்த சந்தர்ப்பத்தை சுரண்டிக்கொண்டனர். சுனாமி உதவியை நிர்வகிப்பதற்காக சுனாமிக்குப் பிந்திய நடவடிக்கை
முகாமைத்துவ கட்டமைப்பு (பொதுக் கட்டமைப்பு) என்ற ஒரு தற்காலிகமான கூட்டுக் குழு ஒன்றை
அமைப்பதற்கான உடன்பாடு ஒன்று ஜனாதிபதி குமாரதுங்கவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. ஆனால் ஜே.வி.பி.
முன்னெடுத்த இனவாத பிரச்சாரத்தின் மத்தியில் இந்த பொதுக் கட்டமைப்பு நடவடிக்கைக்கு வரவில்லை.
ஜே.வி.பி. யின் பிரச்சாரம், 2005 ஆகஸ்ட்டில் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை
செய்யப்பட்டதை அடுத்து உக்கிரமடைந்தது.
2005 நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷ ஜே.வி.பி.
யின் ஆதரவுடன் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார். இராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிப்படையாக யுத்த
நிறுத்தத்தை எதிர்த்த போதிலும் கூட, தமிழர்கள் மத்தியில் தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக குண்டர்
நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் ஒரு முக்கியமான தேர்தல் பகிஷ்கரிப்பை மேற்கொள்வதே புலிகளின்
கொள்கையாக இருந்தது. அதன் ஜனநாயக விரோத வழிமுறைகள், யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக்
கட்சியின் (சோ.ச.க.) தேர்தல் கூட்டத்தை அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் ஊடாக தடுத்ததன் மூலம்
தெளிவாக அம்பலத்திற்கு வந்தது. தேர்தலின் பின்னர் கடந்த ஆண்டு பிரபாகரன் ஆற்றிய "மாவீரர் தின"
உரையில், "இராஜபக்ஷ சமாதான முன்னெடுப்பை கையாளப் போகின்றாரா, எமது மக்களுக்கு அவர் நியாயம்
வழங்குவாரா" என்பதை புலிகள் "பொறுத்திருந்து நோக்குவார்கள்" என பிரகடனம் செய்தார்.
இதற்கான பதில் வெகு தொலைவில் இருக்கவில்லை. மட்டக்களப்பில் கிறிஸ்மஸ் தின
தேவாலய ஆராதனையின் போது புலிகளுக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம்
அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரன் இந்த ஆண்டு தனது "மாவீரர்
தின" உரையில், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களின் துன்பங்களை பட்டியலிட கணிசமான பகுதியை
அர்ப்பணித்தார். புலிகள் "சமாதானப் பேச்சுக்களின் ஊடாக இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண" தன்னை
"அர்ப்பணித்துக்கொண்ட" போதிலும் அதன் பலன்கள் எதையும் பெறவில்லை என அவர் பிரகடனம் செய்தார்.
"அதற்குப் பதிலாக தமக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழர்கள் மீது கொலைகளும் அழிவுகளும்
குவிக்கப்பட்டன," என அவர் தெரிவித்தார்.
புலிகள் தாம் பேச்சுவார்த்தை நடத்தி உழைக்கும் மக்களை நம்பிக்கை வைக்குமாறு
தூண்டிய இலங்கை அரசாங்கங்களை அன்றி சாதாரண சிங்களவர்களையே பிரபாகரன் குற்றஞ்சாட்டுகிறார்.
"பண்டைய மஹாவம்ச இதிகாசம் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம் வழிதவறிச் சென்று தொடர்ந்தும்
பேரினவாத சகதிக்குள் விழுந்து கிடக்கிறது... துரதிஷ்டவசமாக இது தமிழரின் தேசியப் பிரச்சினையை
நாகரீகமான வழியில் தீர்க்கும் நேர்மையான முயற்சிகளை எடுப்பதில் இருந்து சிங்கள தேசத்தை தடுக்கிறது," என
அவர் பிரகடனம் செய்தார்.
இவை அனைத்தும் வருத்தமான தொனியுடனேயே சொல்லப்பட்டன. பிரபாகரனும்
மற்றும் புலிகளின் தலைவர்களும், கடந்த மாதம் பாராளுமன்றத்தில் ஆசனங்களுக்காகவும் மற்றும் புதிய இடைக்கால
அமைச்சரவையில் பதவிகளுக்காவும் தமது ஆயுதங்களை கீழே வைக்க அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கையைக்
கைச்சாத்திட்டுக்கொண்ட நேபாள மா ஓ வாதிகளின் நிலைமையையும் முந்திக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம்
கிடையாது. யுத்த நிறுத்தம் "செயலற்றுவிட்டது" என்ற பிரபாகரனின் பிரகடனமும் மற்றும் கடந்தவாரம்
கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலும், அர்த்தமுள்ள பேச்சுக்களுக்காக மீண்டும் கொழும்பு அரசாங்கத்தை
தள்ளுமாறு பெரும் வல்லரசுகளை அவநம்பிக்கையுடன் மன்றாடுவதை விட சற்றும் குறைந்தவையல்ல. எவ்வாறெனினும்,
இந்த அச்சுறுத்தல்கள் புலிகள் ஒரு முழுமையான அரசியல் முட்டுச் சந்தியில் அடைந்திருப்பதை சாதாரணமாக
உறுதிப்படுத்துகிறது. இந்தப் பெறுபேறு தனிப்பட்ட முட்டாள்தனத்தினால் அல்லது காட்டிக்கொடுப்பினால் அன்றி,
மாறாக தமிழ் பிரிவினைவாத வேலைத்திட்டத்தின் வெறுமையினாலே உருவானதாகும்.
முதலாவதாக யுத்தக் குற்றவாளிகளான புஷ் நிர்வாகத்தின் மேற்பார்வையிலான
"சர்வதேச சமாதான முன்னெடுப்புகளில்" இலங்கையில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தால் நம்பிக்கை வைக்க
முடியாது. இத்தகைய பேச்சுவார்த்தைகளின் மூலம் காணப்படும் எந்தவொரு உடன்பாடும், இந்தியத் துணைக்
கண்டத்தை ஒரு பெரும் மலிவு உழைப்பு தடாகமாக நோக்கும் அதிகளவில் நோக்கிக்கொண்டிருக்கும் பெரும்
வல்லரசுகளின் நலன்களுக்கு மட்டுமே சேவை செய்யும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களத் தொழிலாளர்களில் மிகப்
பெரும்பான்மையினர் யுத்தத்திற்கு முடிவுகட்ட விரும்புகின்றனர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், இதை
புலிகள் உட்பட ஆளும் தட்டின் பலவித கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் ஊடாக அடைய முடியாது.
முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துக் கன்னைகளிலும் இருந்து சுயாதீனமாக,
தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களையும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்காக
ஒரு அரசியல் இயக்கம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். இத்தகைய முன்நோக்கின் ஆரம்பப் படி, சிங்கள மேலாதிக்கவாதம்
மற்றும் தமிழ் பிரிவினைவாதம் உட்பட அனைத்து விதமான தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தையும் நிராகரிப்பதாகும்.
தமிழ் தொழிலாளர்களின் இயற்கையான பங்காளிகள் புலிகளோ அல்லது அவர்களின் முதலாளித்துவ ஊது குழலான தமிழ்
தேசியக் கூட்டமைப்போ அன்றி, மாறாக தீவு பூராவும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களேயாகும்.
இது அண்மைய காங்கிரஸ் தேர்தல்களில், ஈராக் மீதான புஷ் நிர்வாகத்தின் யுத்தத்திற்கு தமது முழு எதிர்ப்பையும்
வெளிப்படுத்திய அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தையும் உள்ளடக்கும்.
சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த இரு தசாப்தங்களாக ஏறத்தாழ இராணுவ ஆக்கிரமிப்பின்
கீழ் உள்ள தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை பாதுகாப்புப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும்
வெளியேற்றக் கோருமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. பரந்த பெரும்பான்மையினரின் தேவைகள்
மற்றும் அபிலாஷைகளின் செலவில், ஒரு சில செல்வந்தர்களின் சொத்துக்கள் மற்றும் இலாபங்களையும் பேணுவதை
அடிப்படையாகக் கொண்ட தற்போதைய சமூக ஒழுங்கிற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்காக
தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை அணிதிரட்டுவதன் பேரில், ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்காக
சோ.ச.க. போராடுகிறது. இத்தகைய போராட்டமானது தெற்காசியா மற்றும் அனைத்துலகம் பூராவும் சோசலிசத்தை
ஸ்தாபிப்பதற்கான பரந்த போராட்டத்தின் அத்தியாவசியமான அங்கமாகும். நாம் சோசலிச சமத்துவக் கட்சியின்
முன்நோக்கு மற்றும் வேலைத்திட்டத்தில் கவனமாக அக்கறை செலுத்துமாறும் சோ.ச.க. யில் இணைந்து அதை ஒரு
புதிய பரந்த தொழிலாளர் வர்க்கக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் அறைகூவல் விடுக்கிறோம்.
|