:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan president reimposes anti-terror
laws in preparation for intensified war
இலங்கை ஜனாதிபதி யுத்தத்தை உக்கிரப்படுத்துவதற்கான தயாரிப்பில் பயங்கரவாத
தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துகிறார்
By the Socialist Equality Party (Sri Lanka)
9 December 2006
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ புதன் கிழமை இரவு தொலைக்காட்சியில்
மக்களுக்கு ஆற்றிய உரையில் நாட்டின் பேர்போன பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக
அறிவித்தார். "பயங்கரவாத சந்தேக நபர்களை" வழக்குத் தொடுக்காமல் தடுத்துவைத்து விசாரணை செய்ய
பாதுகாப்புப் படையினருக்கு பரந்த அதிகாரத்தை வழங்கும் இந்த சட்டம், 2002ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்
யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டதை அடுத்து நீக்கப்பட்டிருந்தது.
ஆயினும், இராஜபக்ஷ இந்த பொலிஸ் ஆட்சி நடவடிக்கைகளை மீண்டும் அமுல்படுத்துவதில்
அதற்கும் அப்பால் சென்றுள்ளார். அவரது உரையானது புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை மேலும் துரிதப்படுத்துவதற்கான
தயாரிப்பில், அனைத்து ஜனநாயக உரிமைகள் மீதும் நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களுக்கு சமமானதாக
இருந்தது. "பயங்கரவாதத்தை" தோற்கடிப்பதில் ஜனநாயகம் ஒத்துவராது என மூடிமறைக்காமல் பிரகடனம் செய்த
அவர், "பயங்கரவாத்திற்கு சந்தர்ப்பத்தை உருவாக்கும் ஜனநாயகம் கேலிக்கூத்தாகும். அது சாதாரண கேலிக்கூத்தல்ல,
அது உயிராபத்து விளைவிக்கும் கேலிக்கூத்தாகும்," என தெரிவித்தார்.
இராஜபக்ஷ குறிப்பிடத்தக்க வகையில், "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற
தனது சொந்த போலிக் கூற்றை நியாயப்படுத்துவதற்காக புஷ் நிர்வாகத்தின் குண்டர் கும்பல்களுக்கு அழைப்பு
விடுக்கின்றார். "இன்று அமெரிக்காவும் மற்றும் ஏனைய நாடுகளும் கூட பயங்கரவாதத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கின்றன.
அவர்கள் பயங்கரவாதத்தை ஜனநாயகத்துடன் சேர்த்து குழப்பிக்கொள்வதில்லை. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதைத்
தவிர வேறு வழி கிடையாது," என அவர் தெரிவித்தார்.
டிசம்பர் 1 அன்று ஜனாதிபதியின் சகோதரரும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருமான
கோதபய இராஜபக்ஷவை இலக்கு வைத்து கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்,
பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவதற்கான உடனடி சாக்குப் போக்காக இருந்துள்ளது. இந்தத்
தாக்குதலில் இரு சிப்பாய்கள் கொல்லப்ப்டட போதிலும் பாதுகாப்புச் செயலாளர் எந்தவொரு பாதிப்பும் இன்றி
தப்பியுள்ளார். இந்தத் தாக்குதல், புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அரசாங்கத்தை கண்டனம் செய்ததோடு
2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை "செயலற்றுவிட்டது" என பிரகடனம் செய்த சில நாட்களின் பின்னரே
நடந்தது.
பெரும்பாலும் நிச்சயமாக இந்தக் குண்டுத் தாக்குதலை புலிகளே மேற்கொண்டிருந்த
போதிலும், இதற்கான அரசியல் பொறுப்பு, கடந்த ஆண்டுகள் பூராவும் புலிகள் மீதான யுத்தத்தை ஆத்திரமூட்டும்
விதத்தில் உக்கிரப்படுத்திய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தையே சாரும். இராணுவம் கடந்த ஜூலையில்
இருந்தே 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி புலிகளின் பிரதேசங்களை கைப்பற்ற ஒரு தொடர்ச்சியான
தாக்குதல்களை ஆணவத்தோடு முன்னெடுத்தது.
இந்தத் தாக்குதல் நேரடியாக அரசாங்கத்தின் பயன்பாட்டுக்கு உதவியது. "புலி
பயங்கரவாதிகளை" உடனடியாக கண்டனம் செய்த அமைச்சர்களும் ஊடக ஆய்வாளர்களும், பயங்கரவாத தடைச்
சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டுகோள் விடுத்தனர். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக
ஹெல உறுமய போன்ற சிங்கள தீவிரவாதக் கட்சிகள், புலிகளை தடைசெய்யுமாறும் யுத்த நிறுத்தத்தை
கிழித்தெறியுமாறும் புலிகளுக்கு எதிரான ஒட்டு மொத்த யுத்தத்தை முன்னெடுக்குமாறும் கோரி கூட்டங்களையும்
ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.
இராஜபக்ஷ தனது உரையில், படுகொலை செய்யப்பட்ட அரசாங்கத் தலைவர்கள்
மற்றும் அரசியல்வாதிகளின் நீண்ட பட்டியலொன்றை மேற்கோள் காட்டுவதன் மூலம் புலிகள் மீது "பயங்கரவாதிகள்"
என முத்திரைகுத்துவதை நியாயப்படுத்தினார். ஆயினும், புலிகளும் மற்றும் அவர்களின் தனியான ஈழம் முதலாளித்துவ
அரசு கோரிக்கையும் தோன்றியது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் தாரதது ஆச்சரியத்திற்குரியதல்ல. தமது
முன்னோடிகளைப் போலவே இராஜபக்ஷ அரசாங்கமும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்களுக்கு எண்ணெய்
வார்த்து வந்துள்ள சிங்கள மேலாதிக்கவாத இனவாத கருத்துப் போக்கு மற்றும் தமிழர் விரோத பாரபட்சங்களை
அடைப்படையாக கொண்டுள்ளது.
தமிழ் சிறுபான்மையினரை நசுக்குவதிலும் துன்புறுத்துவதிலும் பாதுகாப்புப் படையினர்
பேர்போனவர்களாவர். இதற்கு முன்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள்
சுற்றிவளைக்கப்பட்டு காலவறையரை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பல சந்தர்ப்பங்களில் சித்திரவதைகளுக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் அதன் பங்காளிகளான துணைப்படைகளாலும் அமைக்கப்பட்டுள்ள
கொலைக் குழுக்கள், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இந்த ஆண்டு பூராவும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்திச்
சென்று கொல்வது வெளிப்படையான இரகசியமாகும்.
இராஜபக்ஷ, புலிகளை உத்தியோகபூர்வமாக தடைசெய்யாததோடு, அவர் தனது
உரையில் சமாதானப் பேச்சுக்களுக்கான கதவுகள் திறந்திருப்பதாக பிரகடனம் செய்தார். இந்த தோரணையின்
குறிக்கோள் சர்வதேச ஆதரவை, குறிப்பாக அமெரிக்க ஆதரவை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதாகும்.
இராஜபக்ஷவின் கொள்கைகளை அமெரிக்கா ஆதரிப்பதை கடந்த மாதம் அமெரிக்க துணை இராஜாங்கச் செயலளர்
நிக்கோலாஸ் பேர்ன்ஸ் வெளிப்படுத்தினார். "அமெரிக்க அரசாங்கம் நடுநிலையானது அல்ல... பயங்கரவாதத்தை
எதிர்ப்பதிலும் அதேபோல் அதன் வளர்ச்சியை தடுப்பதிலும் நாம் இலங்கை அரசாங்கத்துடன் செயலாற்றுகிறோம்,"
என அவர் பிரகடனம் செய்தார்.
யுத்த நிறுத்தத்திற்கு கட்டுப்படுவதாக இராஜபக்ஷ கூறுவது கேலிக்கூத்தாகும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தியதே வெளிப்படையான யுத்த நிறுத்த மீறலாகும். அண்மைய
மாதங்களில் புலிகளிடமிருந்து கைப்பற்றிய பிரதேசங்களை மீண்டும் அவர்களிடம் விட்டுக்கொடுக்கும் எண்ணம்
அரசாங்கத்திற்கோ அல்லது இரணுவத்திற்கோ கிடையாது. ஜனாதிபதியின் உரையானது, சமாதானம் என்ற பெயரில்
நாட்டை மீண்டும் ஒட்டு மொத்த யுத்தத்திற்குள் தள்ளும் எண்ணத்தை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
"புதிய இலங்கையை கட்டியெழுப்ப நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் கொடிய பயங்கரவாதத்தை
தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே வெற்றிகொள்ள முடியும்," என அவர் பிரகடனம் செய்கின்றார்.
ஜனநாயக உரிமைகள் மீதான புதிய தாக்குதல்கள்
இந்த புதிய யுத்தம் வெறுமனே 2002க்கு முற்பட்ட காலத்திற்கு திரும்புவதாக
இருக்காது. பலமான நிலையில் இருப்பதற்கு அப்பால், இராஜபக்ஷ அரசாங்கமானது யுத்த விரோத
உணர்வுகளுக்கும் அதேபோல் அதன் பொருளாதார கொள்கைகள் வாழக்கைத் தரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
தொடர்பான எதிர்ப்புக்கும் ஏற்கனவே முகங்கொடுத்துள்ளது. தனது புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த
அவர், பயங்கரவாதத்தை தோற்கடிக்க உழைக்கும் மக்கள் "அர்ப்பணிக்க" வேண்டும் என பிரகடனம் செய்தார்.
புதன் கிழமையன்று தேசிய ஐக்கியத்திற்காக அழைப்புவிடுத்த போது, "நீங்கள்
எங்களுடனா அல்லது எங்களுக்கு எதிராகவா" என்ற அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் மட்டரகமான குறிப்பை
இராஜபக்ஷவும் மெய்சிலிர்க்கும் முறையில் எதிரொலித்தார். "அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஊடகங்கள்
மற்றும் அனைத்து மக்கள் அமைப்புக்களுக்கும்" உரையாற்றிய அவர், "நீங்கள் ஒரு கையளவு பயங்கரவாதிகளுடனா
அல்லது பெரும்பான்மையில் உள்ள பொது மனிதனுடனா இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். நீங்கள்
இந்த இரண்டுக்கும் இடையில் ஒன்றைத் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாராலும்
இந்த இரு பக்கங்களையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது," என பிரகடனம் செய்தார்.
அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்கள் ஏற்கனவே யுத்தம் மற்றும் பயங்கரவாத
தடைச் சட்டத்தின் பாதையில் விழுந்துள்ளன.
இராஜபக்ஷ யுத்தத்தை அல்லது அரசாங்கத்தின் பிற்போக்கு பொருளதார
திட்டத்தையும் எதிர்க்கும் எவரையும் தெளிவாக அச்சுறுத்துகிறார். பயங்கரவாத தடைச் சட்டமானது
"பயங்கரவாதி" என்ற சந்தேகத்தில் எவரையும் விசாரணையின்றி மூன்று மாதங்களுக்கு தடுத்துவைக்கும் கொடூரமான
அதிகாரத்தை பொலிசுக்கும் இராணுவத்திற்கும் வழங்குகிறது. இந்த தடுத்துவைப்பை 18 மாதங்கள் வரை
விரிவுபடுத்த முடியும். எந்தவொரு வழக்கு விசாரணையும் ஜூரி (முறைகாண் ஆயம்) இன்றி மேல் நீதிமன்றத்திலேயே
நடைபெறும். "ஒப்புதல் வாக்குமூலத்தை" சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியும் மற்றும் அப்பாவி என நிரூபிக்கும்
பொறுப்பு கைதியின் மீதே சுமத்தப்படுகிறது.
மக்களுக்கு உறுதியளிக்க இராஜபக்ஷ கடும் முயற்சி எடுத்தார். "இந்த விதிமுறைகள்
வேலைத் தளம், வெளிக்களம் மற்றும் பல்கலைக்கழகங்களில் எந்தவொரு உரிமையையிலும் தாக்கத்தை
ஏற்படுத்தாது. இந்த சட்டங்களின் மூலம் எந்தவகையிலும் மனித உரிமைகள் மீறப்படுவதை நான்
அனுமதிக்கமாட்டேன்," என அவர் தெரிவித்தார். ஆனால் இந்தச் சட்டத்தின் வரலாற்றை அனைவரும் நன்கு
அறிவர். இது "புலி சந்தேகநபர்களுக்கு" எதிராக மட்டுமன்றி, 1980களின் கடைப்பகுதியில் தீவின் தெற்கில்
கிராமப்புற சிங்கள இளைஞர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரவாத தடைச் சட்டமானது பயங்கரவாதத்தை
வரையறை செய்வதற்கும் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை "முன்னேற்றுதல், ஊக்கமளித்தல், ஆதரவளித்தல்,
ஆலோசனை தெரிவித்தல் அல்லது அதற்கு உதவுவதை" சட்டவிரோதமாக்குவதற்காக செப்பனிடப்பட்டுள்ளது.
இப்போது, வன்முறை அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மிரட்டல்கள்; பொது ஜனங்களை
அச்சுறுத்துதல்; பொது ஒழுங்குகளை அல்லது விநியோகங்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்கு அச்சுறுத்தல்
விடுத்தல்; சொத்துக்களுக்கு அழிவு அல்லது சேதம் ஏற்படுத்தல்; அல்லது மக்களின் சுகாதாரத்தையும்
பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்குதல் ஆகியவையும் "பயங்கரவாதத்திற்குள்" வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த
சட்டம் தடுத்துவைத்தல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சட்ட விலக்களிப்பு வழங்குகிறது.
பயங்கரவாத தடைச் சட்டம், அரசாங்கத்தால் அச்சுறுத்தலாக கருதப்படும்
எவருக்கும் எதிராக பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது. "பயங்கரவாதத்தை" முன்னேற்றுதல்
அல்லது அதற்கு ஆதரவளித்தல் ஆகிய புதிய விதிகளை, ஊடகம், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மற்றும் அரசியல்
எதிரிகளுக்கு எதிராகவும் சுரண்டிக்கொள்ளமுடியும், சுரண்டிக்கொள்ளப்படும்.
"பயங்கரவாதம்" பற்றிய மோசமான வரையறை வேலைநிறுத்தும் செய்யும்
தொழிலாளர்கள் அல்லது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் எதிராக இலகுவாக
பயன்படுத்தப்பட முடியும். வர்த்தக குழுக்களும் மற்றும் ஊடகங்களும், இந்த ஆண்டு முழுவதும் தமது தொழில் மற்றும்
நிலைமைகளை காத்துக்கொள்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துறை,
சுகாதாரம், பெற்றோலியம் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களை "பயங்கரவாத நடவடிக்கைகளில்" அல்லது
"நாசவேலைகளில்" ஈடுபட்டதாக மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டின. தற்போதும் கூட நாட்டின் இலட்சக்கணக்கான
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலளர்கள் சம்பள உயர்வுகோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சி, அரசாங்கம் யுத்தத்தை உக்கிரமாக்குவதையும் மற்றும்
பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அதன் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் எதிர்க்குமாறு
அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. சாதாரண உழைக்கும்
மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் வழங்க இலாயக்கற்றுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாள
வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காகவும் இனவாத பகைமைகளை கிளறுவதோடு
புதுப்பிக்கப்பட்ட யுத்த்த்திற்கும் வழியமைக்கின்றது.
சிங்கள மேலாதிக்கவாதம் மற்றும் தமிழ் பிரிவினைவாதம் போன்ற எல்லாவிதமான தேசியவாதங்களையும்
பேரினவாதங்களையும் நிராகரிப்பதும் மற்றும் அனைத்து அடிப்படை ஜனநாயக உரிமைகளை காப்பதும் யுத்தத்திற்கு
எதிரான போராட்டத்தின் ஆரம்பப் படியாகும். தமது பூர்வீகம், மொழி அல்லது மதம் எதுவாக இருந்தாலும்,
யுத்தம் மற்றும் சமூக சமத்துவமின்மையின் ஊற்றாக விளங்கும் தற்போதைய இலாப அமைப்பை தூக்கியெறிவதில்
தொழிலாளர்கள் பொதுவான வர்க்க நலன்களை பங்கிட்டுக்கொள்கின்றனர். சோ.ச.க, தற்போதைய வங்குரோத்து
சமூக ஒழுங்குக்கு எதிராக ஒரு சோசலிச பதிலீட்டிற்கு போராடுவதன் பேரில், ஆளும் கும்பலின் அனைத்துக் கட்சிகளில்
இருந்தும் சுயாதீனமாக உழைக்கும் மக்களின் வெகுஜன அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்காக பிரச்சாரம்
செய்கின்றது. நாம் எமது அரசியல் முன்நோக்கைக் கற்றுக்கொள்ளுமாறும் உலக சோசலிச வலைத் தளத்தை
வாசிக்குமாறும் மற்றும் சோ.ச.க. யை கட்டியெழுப்ப இணையுமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும்
புத்திஜீவிகளுக்கு அழைப்புவிடுக்கின்றோம். |