:
ஆசியா
:
இலங்கை
A socialist perspective for striking Sri Lankan
plantation workers
வேலை நிறுத்தம் செய்யும் இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச
முன்நோக்கு
By the Socialist Equality Party (Sri Lanka)
5 December 2006
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இலங்கையில் தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும்
தொழிலாளர்கள், தமது நாள் சம்பளத்தை வெறும் 300 ரூபாய்க்கு (3 அமெரிக்க டொலர்கள்) உயர்த்தக்
கோரி இன்று முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தமொன்றை தொடங்கவுள்ளனர். இரண்டு வாரங்களாக
தொடர்ந்த "மெதுவாக பணிசெய்யும்" பிரச்சாரம் மற்றும் நுவரெலியா, தலவாக்கலை, பொகவந்தலாவை
போன்ற நகரங்களிலும் மற்றும் தனியார் தோட்டங்களினுள்ளும் நடந்த தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை அடுத்து
இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), சம்பள உயர்வுக்கான போராட்டமானது
வெறுமனே தோட்ட உரிமையாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் எதிரானது மட்டுமன்றி, அரசாங்கத்திற்கும் எதிரான
போராட்டத்தை உள்ளடக்கிக்கொண்டுள்ளது என்பதை முன்னறிவிக்கின்றது. ஊதியம், நிலைமைகள் மற்றும் தொழில்
சம்பந்தமான தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருகிறது. இனவாத பிளவுகளை கிளறுதல், தமிழீழ விடுதலைப்
புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உக்கிரப்படுத்துதல் மற்றும் அதன் சுமைகளை தொழிலாளர்கள் சுமக்க வேண்டுமென
வேண்டுகோள் விடுத்தல் ஆகியவையே இதற்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அளிக்கும் பதிலாகும்.
தொழிலாளர்கள், சம்பளம் மற்றும் நிலைமைகளை முன்னேற்றுவதற்கான
போராட்டத்தில் யுத்தம் மற்றும் வியாபார இலாபங்களுக்கு தங்களை "அர்ப்பணிக்கக்" கோரும் வேண்டுகோள்களை
நிராகரிக்க வேண்டும். சிங்கள மற்றும் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த வர்க்க நலன்களுக்காகப்
போராட ஒன்றிணைவதோடு, சீரழிந்துவரும் சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்ற அதே பிரச்சினைகளை
எதிர்கொள்ளும் ஏனைய கைத்தொழில் தொழிலாளர்களின் பக்கம் திரும்பவும் வேண்டும். இத்தகைய ஐக்கியப்படுத்தப்பட்ட
பிரச்சாரமானது சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருத்தல் அவசியம்.
தொழிற்சங்க தலைவர்கள் இத்தகைய முன்நோக்கை மிக உறுதியாக எதிர்க்கின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகிய இரு பிரதான
தோட்டத் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளாகவும் இயங்குவதோடு இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின்
பங்காளிகளாகவும் உள்ளன. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் ம.ம.மு தலைவர் பெரியசாமி
சந்திரசேகரனும், இனவாத யுத்தமொன்றை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியம்
கட்டளையிட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்திவரும் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக
உள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே, இராஜபக்ஷ அரசாங்கத்துடன் ஒரு அரசியல் முரண்பாடு
ஏற்படுவதை தவிர்த்துக்கொள்வதற்காக சம்பளப் பிரச்சாரத்தை மட்டுப்படுத்துவதே இ.தொ.கா. மற்றும்
ம.ம.மு யின் குறிக்கோளாக இருந்தது.
இரண்டு வருடகால சம்பள உடன்படிக்கை ஜூன் மாதத்தில் காலவதியானது. 2004ல்
அனைத்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும், நாள் சம்பளத்தை வெறும் 135 ரூபாவுக்கும் கொடுப்பனவை 60
ரூபாவுக்கும் வரையறை செய்து ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டன. இந்த கொடுப்பனவானது வருகை,
வேலைப் பளு மற்றும் விலையுடன் பிணைக்கப்பட்டு பல தொழிலாளர்கள் அவர்கள் செய்த நாட்களிலும் கூட 195
ரூபாவை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை உறுதிப்படுத்தப்பட்டது.
இ.தொ.கா, லங்கா ஜாதிக தோட்டத் தொழிலாளர் சங்கம்
(எல்.ஜே.இ.டபிள்யூ.யூ) மற்றும் ஏனைய பல சிறிய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை
இந்தப் பிரச்சாரத்தில் இருந்து விலகிக்கொண்டதன் மூலம் ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டமொன்றை ஏற்கனவே
பயனற்றதாக்கிவிட்டது. இ.தொ.கா. தலைவர் தொண்டமான், ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசியபோது,
தனது தொழிற்சங்கம் ஏற்கனவே தமது கோரிக்கையை 270 ரூபாய்க்கு குறைத்துவிட்டதாகத் தெரிவித்ததோடு
முதலாளிமார்களுடனான பேச்சுவார்த்தைகளில் மேலும் சமரசம் செய்வதற்கான தமது விருப்பத்தையும் குறிப்பாய்த்
தெரிவித்தார்.
இ.தொ.கா. பராளுமன்ற உறுப்பினர் வி. புத்திரசிகாமனி, தனது தொழிற்சங்கம்
கைத்தொழிலில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக மிகவும் அக்கறையுடன் உள்ளது என வெளிப்படையாகப்
பிரகடனம் செய்தார். அதாவது தொழிற்சங்க உறுப்பினர்களின் சீரழிந்துவரும் வாழ்க்கைத் தரத்தை விட கம்பனியின்
இலாபத்தைப் பற்றிய அக்கறையாகும். பெருந்தோட்டத் துறையின் அமைதியான இயக்கத்தை "நாசம் செய்வதாக"
கூறி வேலை நிறுத்தத்திற்கு எதிராகத் திட்டிய அவர், "தொழில்துறையின் தாங்கிப்பிடிக்கும் தன்மை
தொழிலாளர்களின் பிழைப்புக்கு அத்தியாவசியமானது என நாம் நினைக்கின்றோம்," என பிரகடனம் செய்தார்.
வாழ்க்கைத்தர வீழ்ச்சி சம்பந்தமாக தொழிலாளர்களின் அதிருப்தியையும்
ஆத்திரத்தையும் பற்றி நன்கு புரிந்துகொண்டுள்ள ம.ம.மு, தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் ஏனைய
தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கின்றன. ஆனால் இந்த தொழிற்சங்கங்களும் இ.தொ.கா.வைப்
போல் முதலாளிமாருடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ளும் தமது விரும்பத்தை ஏற்கனவே
சுட்டிக்காட்டியுள்ளன. ம.ம.மு. தலைவர் சந்திரசேகரன், நியாயமான உடன்படிக்கையை பெற்றுக்கொள்வதற்காக
தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் உதவியை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார்.
ஆயினும், இராஜபக்ஷ எந்தவொரு சம்பள உயர்வுக்கும் தமது எதிர்ப்பை ஏற்கனவே
தெளிவுபடுத்திவிட்டார். "உரிமைகள்" பற்றி பேசுவதற்கு முன்னதாக தொழிலாளர்கள் தமது "பொறுப்புக்களை"
இட்டுநிரப்ப வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி கொண்டுவந்த
வரவு செலவுத் திட்டமானது அரசாங்க ஊழியர்களுக்கான எந்தவொரு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வையும்
நிராகரித்துள்ளது. அவர் ஏற்கனவே அத்தியாவசிய சேவை விதிகளை செயற்படுத்தியுள்ளார். இந்த விதிகள் தனியார்
மற்றும் அரசாங்கத் துறையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்ய அனுமதிக்கின்றன.
இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. யும் அவர்கள் பல வருடங்களாக செய்தது போல்
இம்முறையும் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அதே சீட்டை விளையாடுகின்றனர். இந்த இரு
தொழிற்சங்கங்களும் ஒன்றன் பின் ஒன்றாக சந்தர்ப்பவாத முறையில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டதோடு, இது
நாட்டின் 500,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவும் எனவும் கூறிக்கொண்டன. ஆனால் அதற்குப் பதிலாக,
இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. ஆகியன, ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து தொழில்கள்
அழிக்கப்படுள்ள நிலையிலும் கூட எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தை அடக்குவதிலும் நசுக்குவதிலும் பிரதான
பாத்திரத்தை இட்டுநிரப்பியுள்ளன.
தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் குறைந்த சம்பளம் பெறும் மற்றும் இலங்கை
தொழிலாளர் வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினராவர். அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும்
மட்டுப்படுத்தப்பட்ட பங்கீட்டு முறையிலான கல்வி மற்றும் சுகாதார சேவையுடன் தோட்டங்களில் உள்ள லயன்
காம்பராக்களைச் சூழ அரை அடிமை நிலையில் சுழன்றுகொண்டிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின்
வாழ்க்கைத் தரத்தை மேலும் அரிப்பதன்மூலம் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களின் "தாங்கிப் பிடிக்கும்
நிலையை" பேணுவதற்காக அரசாங்கத்துடனும் முதலாளிமாருடனும் ஒத்துழைக்கின்றன.
2003ல் 98 ஆக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கான உண்மையான சம்பள
சுட்டெண், 2005 முற்பகுதியில் 90.2 ஆகவும், 2005 டிசம்பரில் 86.2 ஆகவும் வீழ்ச்சியுற்றுள்ளது.
யுத்தத்தாலும் மற்றும் அதிகரித்துவரும் எண்ணெய் விலையாலும் இந்த ஆண்டு பணவீக்கம் 12 வீதத்தால் கூர்மையாக
அதிகரித்துள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் மேலும் வீழ்ச்சியடையும். தோட்டத்
தொழிலாளர்கள் விளிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அதிகரித்துவரும் வேலையின்மையுடன் அவர்களின்
சம்பளத்தில் ஏற்படும் வீழ்ச்சியும் ஒரு பேரழிவை உருவாக்கிவருகின்றன.
தோட்டக் கம்பனிகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டு 67 பில்லியன் ரூபாவில் இருந்து இந்த
ஆண்டு அக்டோபருக்குள் 75 பில்லியனைத் தாண்டியுள்ள நிலையில், அவை இலங்கை உற்பத்திகள் "சர்வதேச ரீதியில்
போட்டிக்குரியதாக" இருக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு ஒரேவிதமாக பதிலளிக்கின்றன. உலக சந்தையில்
இலங்கை தேயிலை தனது முன்னணி நிலையை கென்யாவிடம் தோற்றுவிட்டதாக அரசாங்கமும் முதலாளிமாரும்
எச்சரித்துள்ளனர். தொழிற்சங்கங்களும் இதே வழியில் விழுந்துள்ளன.
தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த சர்வதேச மூலோபாயத்தை
கொண்டிருக்க வேண்டும்: அவர்கள் சிறந்த சம்பளத்தையும் மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் பெற்றுக்கொள்வதன்
பேரில் ஒரு கூட்டு எதிர்த் தாக்குதலை தொடக்கிவைப்பதற்காக சீனா, இந்தியா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள
தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்க வேண்டும்.
தொழிலாளர்கள் இ.தொ.கா, ம.ம.மு மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள்
முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போலிப் பிரச்சாரத்தை நிராகரித்து, பின்வரும் கோரிக்கைகளுக்காக ஒரு பரந்த
போராட்டத்தை தொடக்கி வைக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுக்கிறது.
* நாட் சம்பள முறைக்கு முடிவுகட்ட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கு
பணவீக்கத்திற்கு ஏற்ப இயல்பாகவே அதிகரிக்கும் விதத்தில், 40 மணித்தியால வேலை வாரத்திற்கு குறைந்தபட்சம்
15,000 ரூபா மாதாந்த சம்பளம் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். எந்தவொரு உடன்படிக்கையிலும் நோய்
விடுமுறை, ஓய்வூதியம் மற்றும் மேலதிக வேலை நேரங்களுக்கு மேலதிக கொடுப்பனவும் உள்ளடக்கப்பட வேண்டும்.
* பொருத்தமான வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதார சேவை வழங்கப்பட
வேண்டும். படு மோசமான நிலையில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்பு அபிவிருத்தி செய்யப்பட
வேண்டும் அல்லது முழுமையாக திருப்பிக் கட்டப்படல் வேண்டும். அவற்றுக்கு அத்தியாவசியமான தண்ணீர் மற்றும்
மின்சார வசதிகள் வழங்கப்பட வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகளுக்கான கோரிக்கையானது, ஒரு சில
செல்வந்தர்களின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் தேவைகளின் அடிப்படையில் முழு
சமுதாயத்தையும் சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் மாற்றியமைப்பதன் ஒரு அங்கமாகும்.
* யுத்தத்தை எதிர்த்து ஜனநாயக உரிமைகளை காப்பாற்ற வேண்டும். இராஜபக்ஷ
அரசாங்கம், தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக மற்றவரை பிளவுபடுத்தும் வழிமுறையாக இனவாத பகைமைகளை
கிளறுவதோடு யுத்தத்தை உக்கிரப்படுத்தியுள்ளது. இந்த இனவாத யுத்தத்திற்கு இன்னொரு ஆளோ இன்னொரு ரூபாயோ
கொடுக்கக்கூடாது என நாம் கூறுகின்றோம். சோ.ச.க. எல்லா விதமான தேசியவாதத்தையும் இனவாதத்தையும்
நிராகரிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதோடு வடக்கு கிழக்கில் இருந்து அனைத்து பாதுகாப்புப் படைகளையும் உடனடியாகவும்
நிபந்தனையின்றியும் வெளியேற்றுமாறு கோருகிறது.
சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியப்படுத்தப்பட்ட
போராட்டத்திற்கு, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை நிறுவுவதற்கான
பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காக போராட வேண்டியது அவசியமாகும்.
நாம் இந்த வேலைத் திட்டத்தைப் பற்றி சிரத்தையுடன் அக்கறை செலுத்துமாறு
தோட்டத் தொழிலாளர்களை கோருவதோடு சோ.ச.க. மற்றும் உலகம் பூராவும் உள்ள அதன் சகோதரக் கட்சிகளால்
வெளியிடப்படும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்தும் வாசிக்குமாறும் வேண்டுகோள்
விடுக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த முன்நோக்கிற்கு போராடுவதற்காக சோ.ச.க. யை ஒரு
பரந்த தொழிலாளர் வர்க்கக் கட்சியாக கட்டியெழுப்ப இணையுமாறு உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும்
நாம் அழைப்பு விடுக்கிறோம். |