:
ஆசியா
:
இலங்கை
Washington meeting gives green light for
Sri Lankan military offensive
வாஷிங்டன் கூட்டம் இலங்கை இராணுவத் தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறது
By Nanda Wickremasinghe
1 December 2006
Use this
version to print | Send this link by
email |
Email the
author
நவம்பர் 21-22 வாஷிங்டனில் நடைபெற்ற இலங்கைக்கு நிதி வழங்கும் இணைத்
தலைமை நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்கா, ஐரோப்பியா, ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின்
கூட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க கொழும்பு அரசாங்கத்திற்கு
ஊக்கமளித்துள்ளது.
இந்தக் கூட்டம் இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த
பேச்சுவார்த்தை அடுத்த பேச்சுவார்த்தைகளுக்கான திகதியைக் கூட தீர்மானிக்க முடியாமல் தோல்வியடைந்து மூன்று
வாரங்களின் பின்னர் நடைபெற்றுள்ளது. சமாதான முன்னெடுப்புகள் என சொல்லப்படுவதை மேற்பார்வை செய்யும்
இணைத் தலைமை நாடுகளால் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை ஒன்று, தொடரும் இராணுவ மோதல்கள் பற்றி "கவலை"
வெளியிட்டதோடு மோதலை சமாதானமான முறையில் தீர்ப்பதற்கு "2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை பயன்படுத்துமாறு"
இரு தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகைய வெளிப்படையான கவலை தெரிவிப்பு பாசாங்கு காட்டும் செயலாகும்.
இந்த அறிக்கை, புலிகளிடமிருந்து பிராந்தியங்களைக் கைப்பற்றுவதற்காக கடந்த ஜூலையில் இருந்து ஒரு தொகை
ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் வெளிப்படையாக யுத்த நிறுத்தத்தை மீறியமைக்காக
அரசாங்கத்தை கண்டனம் செய்யவில்லை. "பயன்படுத்துதல்" என்ற இரு பொருள் கொண்ட பதத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளதன்
மூலம், அது 2002 யுத்த நிறுத்தத்தின் விதிகளுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுப்பதை கவனமாகத் தவிர்த்துக்கொண்டுள்ளது.
அவ்வாறு அழைப்பு விடுப்பதானது கைப்பற்றப்பட்ட பிராந்தியத்தில் இருந்து பாதுகாப்புப் படைகளை வெளியேற்றுவதை
அர்த்தப்படுத்தும்.
பக்கசார்பின்மையை காட்டும் முயற்சியாக, இந்த இணைத்தலைமை நாடுகள் "மக்கள்
செறிந்து வாழும் பிரதேசங்களில் மோதல்களை தூண்டுவதாக" புலிகளையும் மற்றும் அத்தகைய பிரதேசங்கள் மீது
பதில் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களைக் கொன்று காயமடையச் செய்வதாக அரசாங்கத்தையும்
கண்டனம் செய்துள்ளன. இந்தக் கருத்துக்கள், புலிகள் பொதுமக்களை "மனிதக் கேடயங்களாக"
பயன்படுத்துகின்றனர் எனக் கூறிக்கொண்டு பொதுமக்கள் வாழும் பிரதேசங்கள் மீது செல் தாக்குதல்கள் நடத்தும்
இராணுவத்தின் போலி நியாயப்படுத்தல்களுக்கு நம்பகத் தன்மையை வழங்குகிறது.
இந்த இணைத் தலைமை நாடுகள், அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக
விசாரணை செய்ய ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தமையை வரவேற்று அதன் முதுகில் தட்டிக்கொடுத்துள்ளன. கடந்த
ஆண்டு பூராவும் தீவின் வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும் புலிகளுக்குச் சார்பான முன்னணி அரசியல்வாதிகள்
உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொலைக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டு அல்லது "காணாமல்
போனயுள்ளனர்". "சர்வதேச அனுபவசாலிகளின்" "மேற்பார்வையுடனான" விசாரணை ஆணைக்குழுக்கள் வெறுமனே
பாதுகாப்புப் படையினருக்கு வெள்ளை பூசும் நடவடிக்கை மட்டுமேயாகும்.
புலிகளுக்கு ரொட்டித் துண்டை கொடுப்பது போல், இந்த அறிக்கையானது
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கும் அத்தியாவசியப்
பொருட்களை அனுப்புவதற்காக கடல் மற்றும் தரைப் பாதைகளைத் திறந்து வைக்குமாறு அரசாங்கத்திற்கு
வேண்டுகோள் விடுக்கின்றது. ஜெனீவா பேச்சுக்களின் போது, அரை மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உணவு மற்றும்
ஆதரவின்றி சிக்கியிருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான பிரதான தரைப் பாதையைத் திறக்குமாறு புலிகளின்
பேச்சுவார்த்தையாளர்கள் கோரினார். இந்தக் கோரிக்கை அடுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இன்றியமையாததாக
இருந்தது. அரசாங்கம் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
கொழும்புஅரசாங்கம், அதனது இராணுவ நடவடிக்கைகளுக்கு இணைத் தலைமை
நாடுகளின் அறிக்கை விளைபயனுள்ள வகையில் ஒப்புதல் அளித்துள்ளதை உடனடியாக புரிந்துகொண்டது. பாதுகாப்புப்
பேச்சாளர் கேஹெலியே ரம்புக்வெல்ல, இணைத் தலைமை நாடுகள் அரசாங்கத்தின் மீது "குற்றச்சாட்டுக்கள்"
எதையும் சுமத்தவில்லை என கருத்துத் தெரிவித்துள்ளார். "இணைத் தலைமை நாடுகள் அரசாங்கத்தின் மீது
கடுமையான தடைகளைப் இடப்போகிறது எனக் கூறுவது வதந்தியாகியுள்ளது. அந்தவகையில் எதுவும் நடக்கவில்லை.
பயங்கரவாதிகள் தாக்கும் வரையும் நாங்கள் பதிலடி கொடுப்போம்," என அவர் தெரிவித்தார்.
இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தை அடுத்து, அமெரிக்க துணை இராஜாங்கச்
செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ், இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் இராணுவ தாக்குதல்களுக்கும் பகிரங்கமாக
ஒப்புதல் அளித்தார். "நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றோம்... பிராந்திய ஒருமைப்பாட்டையும்
இறைமையையும் ஸ்திரநிலைமையையும் மற்றும் நாட்டில் பாதுகாப்பையும் காக்க முயற்சிக்கும் உரிமை
அரசாங்கத்திற்கு உண்டு என நாம் நம்புகிறோம்... நாங்கள் உயர்மட்டத்தில் அரசாங்கத்தை அடிக்கடி
சந்திப்பதோடு அரசாங்கம் எமது நாட்டின் நண்பனாக இருக்க வேண்டும் எனவும் கருதுகிறோம்," என அவர்
கூறினார்.
இலங்கைக்கான அமெரிக்காவின் இராணுவ உதவி பற்றி கேட்டபோது, "உண்மையில்
அது மிகவும் முனைப்பான ஒன்று மற்றும் அதை உறுதியாக தொடர நினைக்கின்றோம்" என பேர்ன்ஸ் தெரிவித்தார்.
புலிகளை "பயங்கரவாதிகள்" என கண்டனம் செய்த பேர்ன்ஸ், இலங்கையில் தற்போது நிலவும் உள்நாட்டு
யுத்தத்தில் பக்கச்சார்பான பங்களிப்பை உறுதிப்படுத்தினார். "அமெரிக்க அரசாங்கம் நடுநிலையானது அல்ல...
பயங்கரவாதத்தையும் மற்றும் அதன் வளர்ச்சியையும் எதிர்ப்பதில் நாம் இலங்கையுடன் பங்காளியாக
செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்" என அவர் பிரகடனம் செய்தார்.
அமெரிக்காவின் ஆதரவானது வருடம் முழுவதும் புலிகளுக்கு எதிராக இலங்கை
ஜனாதபதி மஹிந்த இராஜபக்ஷவின் யுத்தத்தை துரிதப்படுத்துவதில் கொழும்பு அரசாங்கத்திற்கு பிரதான காரணியாக
இருந்து வந்துள்ளது. புஷ் நிர்வாகம், புலிகளை ஒரு "பயங்கரவாத அமைப்பாக" பிரகடனம் செய்யுமாறும்,
எந்தவொரு அரசியல் மற்றும் நிதி ஆதரவுகளை தடைசெய்யுமாறும் கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை
நெருக்கியது. அதே சமயம், பேர்ன்ஸின் கருத்துக்கள் சுட்டிக்காட்டியது போல், பென்டகன் இலங்கை
இராணுவத்திற்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி அதனுடன் நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துவருகின்றது.
இலங்கை பேச்சாளர் ரம்புக்வெல்ல, பேர்ன்ஸின் கருத்துக்கள் அரசாங்கத்திற்கு
"மிகச் சிறந்த ஊக்குவிப்பு" என வரவேற்றார். இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் அவற்றை ஒப்புவிக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான வீதி இன்னமும் மூடப்பட்டுள்ளது, புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்
நடவடிக்கைகள் தொடர்வதோடு பொதுமக்களை கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் நிறுத்தப்படவில்லை.
கிழக்கில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கதிரவெளி, வாகரை மற்றும் மாங்கேணி
போன்ற புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசங்கள் மீது பாதுகாப்புப் படைகள் தமது கவனத்தை குவித்துள்ளன.
இந்தப் பிரதேசங்கள் சம்பூருக்கு தெற்காக உள்ளன. சம்பூர் பிரதேசம் கடந்த ஆகஸ்ட்டில் புலிகளிடமிருந்து
கைப்பற்றப்பட்டதோடு புலிகளை முழுவதுமாக கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டும் இராணுவத்தின்
மூலோபாயத்தின் ஒரு பகுதியுமாகும். விமானத் தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களின் காரணமாக
சுமார் 30,000 அகதிகள் வாகரைக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
நவம்பர் 23 வாகரையில் ஒரு மோதல் வெடித்தது. இந்த மோதலை
தூண்டியதற்காக புலிகள் அரசாங்கத்தையும் அரசாங்கம் புலிகளையும் மாறி மாறி குற்ஞ்சாட்டின. மட்டக்களப்பு
மாவட்டத்தில் கட்டமுறிச்சக்குளம், கிரிமிச்சை மற்றும் கஜுவத்தை போன்ற பிரதேசங்களும் மேலும் மோதல்கள்
நடந்தன. இந்த மோதல்களில் 29 புலி போராளிகளை கொன்றதாக பாதுகாப்புப் படைகள் கூறிக்கொண்ட
போதிலும் சுயாதீனமான ஒப்பாய்வுகள் கிடையாது.
வடக்கில், நவம்பர் 20ல் இருந்தே இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் மீது விமானத் தாக்குதல்களை தொடர்ந்தும் முன்னெடுத்துக்
கொண்டிருக்கின்றது. நவம்பர் 22 அன்று விடத்தல் தீவு மற்றும் கல்லாறில் விமானப்படை கடற்புலிகளின் பயிற்சி
முகாங்களை தாக்கியதாக ஒரு பேச்சாளர் அறிவித்தார். முல்லைத்தீவுக்கு அருகில் மேலும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.
நவம்பர் 25, கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் தலைமையகத்திற்கு அருகில் இரணமடு பிரதேசத்தின் மீது யுத்த
விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின. இவை புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளின் முகாம் என இராணுவம் கூறிக்கொண்டது.
இராஜபக்ஷ அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் குற்றவியல் புத்தகத்தில் இருந்து ஒரு
ஏட்டை எடுத்துக்கொண்டுள்ளது. அது புலிகளின் தளங்கள் மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயிற்றுவிக்கும்
முகாம்கள் என உத்தேசிப்பதன் மீது தனது முன்கூட்டியத் தாக்குதல்களை நடத்திவிட்டு "தற்காப்பு" நடவடிக்கை என
நியாயப்படுத்திக்கொள்கிறது. இந்த அடிப்படையில், அத்தகைய தாக்குதல்கள் 2002 யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக
மீறுவதாக இருந்தாலும் கூட எந்தவொரு புலிகளின் இராணுவத் தளமும் இலக்கு வைக்கப்பட முடியும்.
திங்களன்று தனது வருடாந்த மாவீரர் தின உரையில், யுத்த நிறுத்தம்
"செயலிழந்துவிட்டது" என உண்மையைத் தெரிவித்த புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,
"முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை" நடத்துவதாக அரசாங்கத்தைக் கண்டனம் செய்தார். "கைதுகள்,
தடுத்துவைத்து சித்திரவதை செய்தல், கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள், படுகொலைகள், காணாமல்
போகும் சம்பவங்கள், செல் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்களும்
தடுக்கப்படாமல் தொடர்கின்றன" என அவர் தெரிவித்தார். எவ்வாறெனினும், "சர்வதேச சமூகத்திற்கு"
பிரபாகரன் விடுத்த வேண்டுகோள், புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு விளைபயனுள்ள வகையில் ஒப்புதல் அளித்த
அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளுக்கே அனுப்பப்பட்டது.
நோர்வேயின் சமாதானத் தூதுவரான ஜோன் ஐன்சன் பெளவர் அரசாங்க
அமைச்சர்களை சந்திக்கவும் மற்றும் கிளிநொச்சியில் புலிகளின் தலைவர்களை சந்திக்கவும் புதன் கிழமை இலங்கைக்கு
வந்தார். பெளவரின் முன்னோடியான ஏரிக் சொல்ஹெயிம் ஒஸ்லோவில் பேசியபோது, நோர்வே எந்தவொரு
"புதிய சமாதான ஆரம்பிப்பிலும்" தலையிடாது, ஆனால் இன்னமும் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட இரு
சாராரும் விரும்புகின்றனரா இல்லையா என்பதை உறுதிசெய்ய இரு தரப்பினரையும் தொடர்புகொள்வதாக
பிரகடனம் செய்தார். |