World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
World Bank President Wolfowitz pledges $9 billion in loans to India உலக வங்கித் தலைவர் வொல்போவிட்ஸ் இந்தியாவிற்கு 9 பில்லியன் டாலர் கடன் தர உறுதி By Kranti Kumara 1991 முதல் அனைத்து அரசியல் சாயல்களும் உள்ள அரசாங்கங்கள் கடைபிடித்து வருகின்ற நவீன தாராளவாத சீர்திருத்தங்களுக்கு வலுவாக அங்கீகாரம் அளிக்கின்ற வகையில் உலக வங்கியின் தலைவரும் முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை செயலருமான போல் வொல்போவிட்ஸ், சென்ற மாதம் இந்தியாவிற்கு அதிகாரபூர்வமாக விஜயம் செய்தபோது இந்தக் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த மூலோபாய மாற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்ற வகையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஆண்டிற்கு 3 பில்லியன் டாலர்கள் வரை இந்தியாவிற்கு மொத்தம் 9 பில்லியன் டாலர்கள் கடனளிப்பதாக அவர் உறுதியளித்தார். ஈராக் மீது சட்ட விரோதமாக படையெடுத்தமை மற்றும் அந்த நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டது ஆகிய நடவடிக்கைகளுக்கு பிரதான அமைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டதில் இழிபுகழ் பெற்ற வொல்போவிட்ஸ், அதற்கு வெகுமதியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ்-ஆல் உலக வங்கித் தலைவர் பதவி அளிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட இந்திய விஜயம் ஒரு தெற்காசிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும். அப்பயணம் அவரை பாக்கிஸ்தானுக்கும் வங்க தேசத்திற்கும் விஜயம் செய்ய வைத்தது. உலக வங்கியின் கடன்கள் இந்தியாவில் பற்றாக்குறையிலுள்ள கிராமப்புற உள் கட்டடைப்பு வசதிகளை -நீர்ப்பாசன வசதி, குடி தண்ணீர், கழிவு நீரேற்று வசதி, சாலைகள், மின்சார மயமாக்குதல், தொலைபேசி தகவல் தொடர்புகள் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு வெளிவேடமாய் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்பது தெளிவு- மற்றும் உலகவங்கியின் ``பொது - தனியார்`` கூட்டுவணிகத்தை வளர்ப்பது என்ற கொள்கையின் கீழ், நேரடியாக பாசன முறைகள் மற்றும் நீர் மின்சக்தி தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நாடுகடந்த நிறுவனங்கள் உட்பட தனியார் துறை பெருநிறுவனங்களுக்கு நேரடியாக கடன் கிடைக்கும். இதில் மிகச்சரியாகவே வொல்போவிட்ஸ் ஒரு தென்னிந்திய மாகாணமான ஆந்திராவிற்கு நேரடியாக விமானத்தில் சென்று தனது பயணத்தை தொடக்கினார். அந்த மாகாணம் மெய்நடப்பில் அனைத்து உள்நோக்கங்களையும் காரணங்களையும் பொறுத்தவரை உலக வங்கியின் காலனியாகவே ஆகிவிட்டது. 1990-களில் உலக வங்கி அந்த மாகாணத்திற்கு ஏராளமான கடன்களை வழங்கி வந்ததால் அந்த மாகாணம் வெளிக்கடனை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இப்போது ஆந்திர மாநிலத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் கடன் சுமை அதன் பட்ஜெட்டின் 40 சதவீதத்தை விழுங்கி விடுகிறது. மாநில அரசாங்கத்தாலும் வங்கிகளாலும் நன்கு ஆதரவளிக்கப்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களால் (SHG கள்) வேலை செய்யப்படுவதை நேரில் பார்கக்கூடிய வகையில் வொல்போவிட்ஸ் கிராமப்புற ஆந்திராவின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்தார். இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்பகுதிகளில் உள்ள ஏழைமக்கள் சிறப்பாக பெண்கள் குழுக்களாக அமைக்கப்படுகின்றனர். அவர்கள் "சுய-உதவி" மூலம் வறுமை மற்றும் மருத்துவ வசதிக் குறைவு போன்ற அடிப்படை சமூக பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் "சிறு கடன்கள்" மூலம் நிதியூட்டப்பெற்று தொழில் முகவர் செயற்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு வகை செய்யப்படுகின்றது. ``தொலை நோக்கு 2020`` (Vision 2020) என்று பெயர் சூட்டப்பட்ட சமூகத்திட்டமிடலில் ஒரு அழிவுகரமான பரிசோதனையின் பகுதிதான் SHGகள். அவை பிரிட்டனை தளமாகக் கொண்ட ஆடம் ஸ்மித் கழகத்தின் சுதந்திரச்சந்தை, உலக வங்கி மற்றும் ஒரு பூகோள நிர்வாகவியல் ஆலோசனை நிறுவனமான மெக்கன்ஸி நிறுவனமும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கத்தோடு பங்காளிகளாக சேர்ந்து உருவாக்கப்பட்டன. ஆத்திரம் கொண்ட கிராம வாக்களர்களால் அவரும் அவரது தெலுங்கு தேசம் கட்சியும் அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது சந்திரபாபுநாயுடுவின் 9 ஆண்டுகால பேரழிவு ஆட்சி 2004 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. உலக வங்கியின் ஊக்கத்தினால் SHGகள் தற்போது இந்தியாவின் பல பகுதிகளுக்கு பரவியிருக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் பரவலாக கிராமப் பகுதிகளில் நிலவுகின்ற சமூகப் பொருளாதார துன்பத்தை மட்டுப்படுத்துவதற்கு மாகாணத்தின் பிரதான கருவியாக அவை ஆகியுள்ளன. இதற்கு முன்னர் ஆந்திர அரசாங்கம் ஒரளவிற்கு மிகக் குறைந்த உதவியாக விதைகள், உணவுப் பொருட்கள் போன்ற சாதனங்களையும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கு வழங்கி வந்தது. என்றாலும் உலகவங்கியும் வெளிநாட்டு அரசாங்கங்களும் அத்தகைய பண்டங்கள் உதவியை நிறுத்திவிட வேண்டும் என்றும் ரொக்கமாகவும் கடனாகவும் தான் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தின. இப்படிச் செய்வதால் ரொக்கச் சந்தை உறவுகள் கிராமப்பகுதிகளில் மேலும் பரவி ஏழை மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளை லேவாதேவிக்காரர்கள் மற்றும் பணக்கார நிலச் சொந்தக்காரர்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. தான் கண்டது ``மகத்தான முன்னேற்றம்`` என்று வொல்போவிட்ஸ் வர்ணித்ததில் வியப்படைவதற்கு எதுவுமில்லை மற்றும் அவர் SHG சோதனையை ஆபிரிக்காவிலும் மற்றும் உலகின் சலுகைகள் மறுக்கப்பட்ட இதர பகுதிகளிலும் வறுமைக் குறைப்பிற்கு ஒரு வழியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அதற்குப் பின்னர் அவர் புது தில்லிக்கு சென்று 1991-ல் "இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை" கொண்டு வந்த சிற்பி என்று ஆரம்பத்தில் புகழ்பெற்ற பிரதமர் மன்மோகன் சிங்கையும், சிங்கின் ஒரு நவீன தாராளவாத ஆத்ம நண்பரான நிதியமைச்சர் ப.சிதம்பரத்தையும் இந்தியாவின் திட்டக் கமிஷன் தலைவர் மாண்டக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசினார். ஆகஸ்ட் 21-ல் நிருபர்களுக்கு பேட்டியளித்த வொல்போவிட்ஸ் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவால் காட்டப்பட்டுள்ள வியத்தகு பேராற்றல்" பற்றி ஆர்வப் பெருக்கோடு கூறினார். ஆனால் இந்தப் பாராட்டை தனது கோரிக்கையை ஆதரிப்பதற்கு ஒரு வழியாகவே பயன்படுத்திக் கொண்டார் -இந்திய பெருவர்த்தக நிறுவனங்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும்- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் இந்தியாவின் மாநில அரசாங்கங்களும் நவீன தாராள வாத வேலைத்திட்டமான பொருளாதார நெறிமுறைகளை மேலும் தளர்த்துவதை, தனியார் மயமாக்குவதை, வரிகளை வெட்டுவதை மற்றும் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வதற்கான, தொழிலாளர்களை கதவடைப்பு செய்வதற்கான மற்றும் தொழிற்சாலைகளை மூடுவதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இரத்துச் செய்ய வேண்டும் என்றும் உற்பத்தி அல்லாத சமூக செலவினங்களை (எடுத்துக்காட்டாக வருமானம் மற்றும் விலை ஆதரவு திட்டங்களை) குறைக்க வேண்டும் என்றும் சொல்லி வருகின்ற கோரிக்கைகளை வற்புறுத்தி முன்னெடுத்துச் செல்வதற்காகத்தான் இவ்வாறு பாராட்டினார். ``இந்தியா இன்னும் சிறப்பாக சாதனை புரிய முடியும்.... (ஆண்டு பொருளாதார) வளர்ச்சி விகிதத்தில் இன்னும் சில புள்ளிகள் வளர்வதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால் அதற்கு ஆரோக்கியமான வரிவிதிப்பு மற்றும் பணப்புழக்க கொள்கைகள் தேவை. இப்போது இந்தியாவில் 6 முதல் 7 சதவீத சராசரி வளர்ச்சி காணப்படுகிறது. இந்த முயற்சிகளை நீடித்து செயல்படுத்த வேண்டும்`` என்று வொல்போவிட்ஸ் உரையாற்றினார். ``இந்தியாவின் நம்பவியலாத வளர்ச்சிக்கதை உலகிற்கு ஒரு கொள்கை வழி முன் மாதிரியாகும். அது ஒரு ஜனநாயகத்தில் ஒரு பகிரங்க சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்ற வளர்ச்சியைக் காட்டுகிறது`` என்று வொல்போவிட்ஸ் தொடர்ந்து வலியுறுத்திக் கூறினார். உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டை வலியுறுத்துவதன் மூலம் உலகவங்கி மற்றும் இந்திய ஆளும் செல்வந்தத்தட்டின் பிரதான நோக்கம் கிராமப்புறங்களில் உழைக்கும் வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அல்ல. மொத்தத்தில் இந்தியா சுதந்திரம் பெற்று ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாக கிராமப் பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் சக்திமிக்கவகையில் இல்லாதிருக்கிறது. இந்திய மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தங்கள் வாழ்க்கைத் தொழிலாக விவசாயத்தை சார்ந்திருக்கின்றது, இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்களிப்பு செய்கிறது மற்றும் மற்றும் கிராமப்புற அதிருப்தி ஏற்படுமானால் அதனால் ஏற்படுகின்ற அரசியல் தாக்கத்தால் உருவாகும் அச்சங்கள் ஆகிய இவற்றினால், விவசாயத்திற்குள்ள முக்கியத்துவத்தின் உந்துதலால்தான் கிராமப்புற உள்கட்டமைப்பு மீதான குவிமையம் உந்தப்படுகின்றது. வொல்போவிட்ஸ் இந்தியாவின் வெற்றி என்று கூறி பாராட்டுத் தெரிவித்தாலும் 2004 மே-யில் நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் நவீன தாராளவாத சீர்திருத்தங்களை பொதுமக்கள் பாரிய அளவில் மறுதலித்தனர் என்பதை காட்டின. பாரதீய ஜனதா தலைமையிலான ஆளும் கூட்டணி மற்றும் அதன் தாரக மந்திரமான ``இந்தியா ஒளிர்கிறது`` என்பதற்கும் எதிராக இந்தியாவின் வறுமை வாய்ப்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற வெகுஜனங்கள் பாரியளவிற்கு வாக்களித்தார்கள். இந்தியாவின் விவசாயப்பிரிவு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP-ல்) மூன்றில் ஒரு பகுதியாகும். ஆனால் சேவைப் பிரிவு மற்றும் தொழில் துறை அண்மை ஆண்டுகளில் 8% மேல் வளர்ந்த அதேவேளை, விவசாயம் நெருக்கடி புதை மணலில் சிக்கிக் கொண்டது. 1996 முதல் 2005 வரையிலான கால கட்டத்தில், ஆண்டு விவசாய வளர்ச்சி விகிதம் 1980-1996-ம் ஆண்டு காலத்திலிருந்த 3.2 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. 1996-2005ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்திற்கு அரசாங்கம் திட்டமிட்ட 4 சதவீத விவசாய வளர்ச்சி இலக்கில் 1.1 சதவீத வளர்ச்சி என்பது கால் பங்கு கூட இல்லை. கிராமப்புற உள்கட்டமைப்பு வசதி இல்லாதது விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ஒரு கடுமையான தடைக்கல்லாகும். மற்றும் குறிப்பாக உலகச் சந்தைக்கு உற்பத்தி செய்யும் விவசாய வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு தடையாக அமைந்திருக்கிறது. இந்தியாவும் உலக வங்கியும் உலக வங்கியின் தலைவர் என்ற முறையில் வொல்போவிட்ஸ் தனது முதலாவது பெரிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தென்கிழக்கு ஆசியாவிற்கு மேற்கொண்டார் என்ற உண்மை இந்த பிராந்தியத்தின் மீது வங்கி வைத்திருக்கின்ற முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. வறுமை ஒழிப்புப்பணியை மேற்கொண்டிருக்கிறோம் என்று கூறிக் கொண்டு, உலக வங்கியானது நாடுகடந்த நிறுவனங்களுக்கு உள்நாட்டு சந்தைகளைத் திறந்துவிடுவதிலும் மற்றும் பொது மற்றும் சமூக சேவைகளை சிதைப்பதிலும் சம்பந்தப்பட்டுள்ள நவீன தாராளவாதக் கொள்கைகளை திணிப்பதுடன் நிதியுதவியோடு முடிச்சுப் போடுவதன் மூலம் ஆசிய நாடுகள் முழுவதிலும் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் சமூக நிலைமைகளை திட்டமிட்டே உக்கிரமடையச்செய்து வருகின்றது. குறிப்பாக வங்கி தண்ணீர் வழங்கலை, மின்சாரத்தை மற்றும் இதர பொது சேவைகளை தனியார்மயமாக்குதற்காக அழுத்தம் கொடுப்பதில் ஒரு கருவியாக செயல்பட்டு வருகிறது. 1949 முதல் வங்கியிடமிருந்து வாங்கியிருக்கும் கடன் 60 பில்லியன் டாலர்களுடன் இந்தியா உலக வங்கியின் மிகப் பெரிய வாடிக்கையாளராகும். நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் தற்போது 120 பில்லியன் டாலர்களாக பெருகி உள்ளது. ஆண்டு பட்ஜெட்டில் 60 சதவீதத்தை இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தொகையும் இராணுவச் செலவினங்களும் விழுங்கி விடுகின்றன, இது நெருக்கடியான சமூக தேவைகளுக்கு அரிதான வகையில் சிறு வளங்களையே விட்டுவைத்துள்ளது. இந்திய அரசாங்கம் செய்துள்ள மதிப்பீட்டின்படி அடுத்த 7 ஆண்டுகளுக்கு மேலாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு 100 பில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட டாலர்கள் தேவைப்படும். வெளிநாட்டு முதலீடுகளின் பக்கம் திரும்பாமல் இந்த தொகைகளில் ஒரு சிறிய பகுதியைக் கூட இந்திய செல்வந்தத்தட்டினர் திரட்ட இயலாது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்று. இந்திய பெருவர்த்தக நிறுவனங்களின் வலுவான பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக் கடன்கள் தேவை என்பதை உணர்கின்றனர் மற்றும் நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு பொதுமக்களது எதிர்ப்பை முறியடிப்பதற்கான ஒரு இயங்குமுறையாக, இந்தியாவை சர்வதேச முதலீடுகளின் ஒரு மலிவுக்கூலிக்கான புகலிடமாக மாற்றுவது என்ற அவர்களது கனவை பகிர்ந்துகொள்ளும் கடன் கொடுத்தவர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்கின்றனர். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) போன்ற அமைப்புக்கள் ஏற்கனவே அரசாங்கக் கொள்கைகள் மீது மகத்தான செல்வாக்கை செலுத்தி வருகின்றன. உலக வங்கியின் இந்தியப் பிரிவு புதுதில்லியில் பெருமளவில் 145 ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனது. சுதந்திரச் சந்தை கொள்கைகளின் பக்கம் பயனுள்ள வகையில் தலையிடுவதற்காக அவர்கள் இந்த நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளை விவரமாக பின்பற்றி வருகின்றனர். மேற்கு நாடுகளின் மூலதனத்திற்கு இந்த நாடு கவர்ச்சிகரமாக ஆவதை உயர்த்துவதற்கு பிரதானமான தடைக்கற்களுள் ஒன்று படுமோசமான இந்திய உள்கட்டமைப்பு வசதிகள் என்று உலகவங்கியும் உணர்ந்திருக்கிறது. உலக வங்கியின் கொள்கை விதிமுறைகள் மிக உயர்ந்த ஊதியம் செலுத்தும் தனியார் ஆலோசகர்களை பயன்படுத்துவதில் தவிர்க்கமுடியாத வகையில் சம்பந்தப்படுத்துகிறது, இவர்கள் தண்ணீர் வழங்குதுறை, மின்சாரம், போக்குவரத்து போன்ற துறைகளை தனியார்மயமாக்க கட்டளையிடுவார்கள். இந்த ஆலோசகர்கள் பயனுள்ள வகையில் மாநில அரசாங்கங்களின் திட்டங்களை மேலதிகாரத்தை பயன்படுத்தி மாறாக முடிவு செய்வார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை வங்கியின் பிராந்திய சிற்றரசர்களாக மாற்றிவிடுவர். இந்திய ஆளும் செல்வந்தத் தட்டினர் மிக அடிப்படையான பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்க இயலாத நிலைமை நாட்டின் தலை நகருக்கு தூய்மையான நம்பகத் தன்மையுள்ள தண்ணீர் வழங்க இயலாத அவர்களின் நிலையால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. புதுதில்லியில் ஏற்பட்ட குடி தண்ணீர் பற்றாக்குறை உலக வங்கி தலையிடுவதற்கு அனுமதியளிப்பதாக அமைந்துவிட்டது. இந்திய அரசாங்கத்தின் அனுமதியோடு உலக வங்கி தில்லியின் தண்ணீர் வழங்கும் வாரியத்தை தனியார் மயமாக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே தண்ணீர் கட்டண விகிதங்கள் கணிசமான அளவிற்கு உயர்ந்து விட்டன. புது தில்லியில் வொல்போவிட்சை ஆர்பாட்டக்காரர்கள் சந்தித்தனர். அவர்கள் இந்தியாவில் உலக வங்கியின் கொள்கையே நேரடியாக தண்ணிர் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது என்கின்றனர். இந்தியாவில் உலக வங்கியின் ஆதரவைப் பெற்றுள்ள பெரிய அணைகளை கட்டுகின்ற திட்டங்களும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டங்களும் நிலத்தடியிலுள்ள நீர்த்தாரைகளை வற்றச் செய்து விட்டது, அதனால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரித்திருக்கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் முதலாளித்துவ அரசு தலைமையிலான தேசிய பொருளாதார வளர்ச்சி மூலோபாயம் 1991-ல் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒரு குறிப்பிடத்தக்க அளவிற்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து பிராந்திய மாகாண செல்வந்தத் தட்டினருக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுக் கடன்களுக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுகிறார்கள். இந்தப் போக்கை உலக வங்கி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. மற்றும் மாநிலங்களுக்கு சமூக கொள்கைகளை கட்டளையிடுவதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றிவருகிறது. இந்த வகையில் மிக வலிமையான உதாரணம் முந்திய முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் கீழ் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் 1997-ல் முதலாவது மாநில அளவிலான உலக வங்கி பொருளாதார சீர்திருத்த சட்டத்தை (APERP) தானே விரும்பி மேற்கொண்டது. இந்த ஏழ்மை மிக்க பின் தங்கிய மாநிலத்தை அதன் சிதைந்து கிடக்கும் உள்கட்டமைப்பை நவீன மயமாக்கி அந்த மாநிலத்தை இன்னொரு சிங்கப்பூராக மாற்ற விரும்பும் புதுமையாளர் என்று சந்திரபாபுநாயுடுவை சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆங்கில மொழிப் பத்திரிகைகள் பாராட்டின. உலக வங்கி கட்டளையிட்ட கொள்கைகளை ஏறத்தாழ ஒரு தசாப்தமாக அந்த மாநிலம் செயல்படுத்தி வந்ததன் விளைவு அரசாங்க சொத்துக்களான மின்சார உள்கட்டமைப்பு வசதி போன்றவை எந்த சமூக பயனும் இல்லாமல் தனியார் மூலதனத்திற்கு மாறின. சமூக திட்டங்களில் வெட்டுக்கள் செய்யப்பட்டதால் ஆந்திராவின் கிராமப் பகுதிகளில் பேரழிவு நிலை தோன்றியது. மில்லியன் கணக்கான விவசாயிகள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, தாங்க முடியாத கடன் சுமைக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். விவசாயிகள் தற்கொலை இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை அல்லது ஆபூர்வமாக நடைபெற்றது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஒரு நிரந்தர சமூக யதார்த்தமாகி விட்டது. ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) மற்றும் இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் CPI(M) வொல்போவிட்சின் இந்திய விஜயத்தை கண்டித்தாலும், அவர்கள் உலக வங்கி கடன்கள் தேவை என்று ஒப்புக் கொள்கின்றனர். இந்தக் கடன்கள் கடுமையான கொள்கை வழி தீர்வுகளோடு முடிச்சுபோடப்பட்டவை என்பதை மறந்து விடுகின்றனர். இந்த இறந்துகொண்டிருக்கும் கட்சிகளின் பாசாங்கு மிகத் தெளிவாக விளக்கிக் காட்டப்படும் வகையில், CPI-ன் செயலாளர் பரதன் உலக வங்கியின் "சட்டாம்பிள்ளைத்தனம்" தில்லி குடிநீர் வாரியத்தில் எல்லை மீறி சென்றுவிட்டது. "கடன் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ்" அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் சென்று விட்டது என்று கூறியிருக்கிறார். பதினான்கு ஆண்டுகளாக நடைபெற்ற தனியார் மயமாக்கல் பொருளாதார நெறிமுறை தளர்வு மற்றும் இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பட்ஜெட் வெட்டுக்கள் ஆகியவை ஏற்றத்தாழ்வுகளை, வேலையற்ற நிலையை, பொருளாதாரத்தில் பாதுகாப்பற்ற நிலையை மிகப் பெரும் அளவில் அதிகரித்து விட்டது. ஈராக் போரின் சிற்பி உலக முதலீடுகளின் நலன்களின் பேரில் இந்தியாவில் சமூக சீர்குலைவை ஏற்படுத்த தற்போது ஏகாதிபத்தியத்தின் மற்றொரு கையிருப்பு ஆயுதமான கடனை பயன்படுத்த இப்பொழுது நோக்கம் கொண்டிருக்கிறார். |