World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Danger of war at centre of Sri Lankan election campaign

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக யுத்த ஆபத்து உள்ளது

By Wije Dias, Socialist Equality Party presidential candidate
14 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் முன்பே, யுத்தப் பிரச்சினை பிரச்சாரத்தின் மையத்திற்கு வந்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) வேட்பாளரும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ, கடந்த வாரம் மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டமை, ஐயத்திற்கிடமின்றி தீவின் 20 வருடகால இரத்தக்களரி மோதலுக்கு மீண்டும் பாதையமைப்பதாகும்.

இந்த தேர்தல் உடன்படிக்கையின் பிரதான உட்பிரிவுகள், ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைமையிலான அரசாங்கம் 2002ல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டதையடுத்து ஆரம்பமான பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளை கிழித்தெறிவதற்கு சமமானதாகும். இறுதியாக 2003ல் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை, ஜே.வி.பி யும் மற்றும் ஏனைய சிங்களத் தீவிரவாத கருவிகளும் ஆரம்பத்தில் இருந்தே தேசத் துரோகமாக கண்டனம் செய்துவந்ததோடு அந்த அடிப்படையில் இன மோதல்களை கிளரிவிடவும் முயற்சித்தன.

முதலாவது உட்பிரிவின் கீழ், சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ கட்டமைப்பை (பொதுக் கட்டமைப்பு) இரத்துச் செய்ய உடன்பட்டுள்ளார். இந்த தற்காலிக பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கை, டிசம்பர் 26 சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விநியோகிப்பதற்காக கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்டது. தற்போதைய ஜனாதிபதியும் ஸ்ரீ.ல.சு.க தலைவருமான சந்திரிகா குமாரதுங்க பொதுக் கட்டமைப்பை அமுல் செய்ய முடிவுசெய்த போது, அதை ஒரு "காட்டிக்கொடுப்பு" என கண்டனம் செய்த ஜே.வி.பி, கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது.

கீழ்வருகின்ற உட்பிரிவுகளில், ஜே.வி.பி யின் கடந்த மூன்று வருடங்களாக கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

* இரண்டாவது உட்பிரிவு, வடக்கு கிழக்கில் எந்தவொரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபையையும் ஸ்தாபிப்பதை நேரடியாக மறுக்கின்றது. 2003ல் பேச்சுவார்த்தைகள் முறிந்ததை அடுத்து, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்நிபந்தனைகளாக இத்தகைய ஒரு அதிகார சபை ஸ்தாபிக்கப்படுவதை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.

* மூன்றாவது உட்பிரிவு, "ஒற்றை ஆட்சி அமைப்பை" தூக்கிப் பிடிப்பதன் மூலம் இரண்டாவது உட்பிரிவை வலுப்படுத்துகிறது. இதன்படி எந்தவொரு பிராந்திய அதிகாரப் பரவலாக்கலையும் நிராகரிப்பதோடு, இதன் காரணமாக சமாதானப் பேச்சுக்களுக்கான முழு அடிப்படைகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளன.

* நான்காவது உட்பிரிவு, அமுலில் உள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு அழைப்பு விடுக்கின்றது. ஆகஸ்ட் 12, வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதில் இருந்தே, இலங்கை இராணுவத்திற்கு உயர்ந்த அதிகாரங்களை வழங்கும் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை திருப்பி எழுத கோரிக்கை விடுப்பதில் ஜே.வி.பி முன்னணியில் இருந்து வருகின்றது.

* ஐந்தாவது உட்பிரிவில், பேச்சுவார்த்தைகளில் நோர்வே மத்தியஸ்தர்களின் பாத்திரத்திற்கு முடிவுகட்ட ராஜபக்ஷ உடன்படுகிறார். ஜே.வி.பி யும் ஏனைய சிங்கள பேரினவாத அமைப்புகளும் நேர்வே அலுவலர்கள் விடுதலைப் புலிகளுக்கு "சார்பாக" இருப்பதாக மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டி வந்ததோடு இலங்கை மண்ணில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.

ஜே.வி.பி உடன் உடன்பாட்டை கைச்சாத்திட்ட உடனேயே ராஜபக்ஷ தன்னை ஒரு "சமாதான விரும்பியாக" பிரகடனம் செய்துகொண்டதோடு அவர் ஒரு யுத்த வெறியர் என்பதை நிராகரித்தார். திங்கட் கிழமை ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் உணர்ச்சிகரமாக பிரகடனப்படுத்தியதாவது: "பொருத்தமான உணர்வுடன் இருப்பவருக்கு யுத்தம் தேவைப்படுமா? இந்த அழகான நாடு அடுத்துவரும் காலம் பூராவும் வன்முறைகளற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எனது உணர்வுப் பூர்வமான எதிர்பார்ப்பாகும். ஒரு தந்தையைப் போல், ஒரு சகோதரனைப் போல் மற்றும் இந்த நாட்டில் சமாதானத்தை விரும்பும் ஒரு பிரஜை வகையில் நான் உங்களுக்கு கூறுகிறேன், இந்த நாடு யுத்தத்திற்குள் தள்ளப்படுவதை நான் அனுமதிக்கவே மாட்டேன்."

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரடியாக சந்திக்க விரும்புவதாகவும் மற்றும் "சமாதானத்திற்கான கடைசி மைல் வரை செல்ல விரும்புவதாகவும்" ராஜபக்ஷ அறிவித்தார். மொத்தத்தில் இந்த வாக்குறுதிகள் நகைப்புக்கிடமானவை. பேச்சுக்களுக்கான முந்தைய அடிப்படைகளை கிழித்தெறிந்து விட்டு, விடுதலைப் புலிகளின் எல்லாக் கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டு பிரபாகரனுடன் ராஜபக்ஷ உண்மையில் எதைக் கலந்துரையாடப் போகின்றார். சமாதான மனிதனாக தன்னை காட்டிக்கொள்வதன் பேரில் வெற்றுக் கண்டனங்களை விடுக்கும் ராஜபக்ஷ, யுத்தத்திற்கு வக்காலத்து வாங்கும் ஒரு கட்சியை அணைத்துக்கொண்டுள்ளார். உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, தனது கட்சி "சமாதானத்தை விரும்புகின்ற அதே வேளை, யுத்தத்திற்கு அஞ்சப் போவதில்லை" எனவும் எச்சரிக்கையாக பிரகடனம் செய்தார்.

ஜே.வி.பி உடன் ஒரு உடன்படிக்கையே ஏற்படுத்திக்கொள்வதற்கான ராஜபக்ஷவின் முடிவு, பெருமளவிலான அரசியல் சந்தர்ப்பவாதத்தின் உள்ளடக்கிக்கொண்டுள்ளது. ஜே.வி.பி ராஜபக்ஷவின் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கவும் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கவும் உடன்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், ஸ்ரீ.ல.சு.க க்கான ஆதரவு நலிவுற்றும் வரும் நிலையல் அதைத் மீண்டும் தூக்கி நிறுத்தும் என ராஜபக்ஷ நம்புகின்றார். எவ்வாறெனினும், இந்த நடவடிக்கையின் மூலம், தேர்தல் பிரச்சாரமும் மற்றும் அதன் விளைவுகளும் இனவாத தீவிரவாதத்தால் மேலாதிக்கம் செய்யப்படுவதை அவர் உறுதி செய்துள்ளார். அவர் சிங்களப் பேரினவாத ஜாதிக ஹெல உறுமயவுடனும் அத்தகைய உடன்படிக்கையை கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளார்.

கசப்பான எதிர்ப்பு

ஜே.வி.பி உடனான ராஜபக்ஷவின் ஒப்பந்தம் ஸ்ரீ.ல.சு.க க்குள் ஒரு சூறாவளியை கிளப்பி விட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல் ஸ்ரீ.ல.சு.க யின் யாப்பை மீறியுள்ளதாகவும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் மீறியுள்ளதாகவும் குமாரதுங்க பிரகடனம் செய்துள்ளார். குறிப்பாக, பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான பிரதமரின் ஏகமனதான முடிவையும் மற்றும் எந்தவொரு பிராந்திய அதிகாரப் பரவலாக்கலையும் ஒதுக்கித் தள்ளும் முடிவையும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார். அவர் ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதம் ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. "உங்களது ஒப்பந்தத்தின் ஊடாக சமாதானத்தை ஸ்தாபிப்பதற்கு நிறைவேற்றப்பட்டிருப்பது என்ன என்பதை மக்களுக்கும் எனக்கும் விளக்க வேண்டும்," என அவர் அக்கடிதத்தில் பிரகடனம் செய்துள்ளார்.

குமாரதுங்கவின் எதிர்ப்புகள் நிச்சயமாக மோசடியானதாகும். 2001 பொதுத் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க தோல்வியடைந்த பின்னர், விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் "தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக" ஐ.தே.க யின் கூட்டணி அரசாங்கத்தை கண்டனம் செய்வதில் ஜே.வி.பி உடன் சேர்ந்துகொள்ள ஜனாதிபதி தயங்கவில்லை. 2004 பெப்பிரவரியில், ஜே.வி.பி உடன் தேர்தல் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டதோடு, ஐ.தே.க மற்றும் அதன் கூட்டணியும் பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்தை எதேச்சதிகாரமான முறையில் பதவி விலக்கினார். தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க வெற்றி பெற்றதை அடுத்து தலைகீழாக மாறிய குமாரதுங்க, தான் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதாக வாக்குறுதியளித்தார். இப்போது தான் எதைச் செய்தாரோ --ஜே.வி.பி உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடல்-- அதையே ராஜபக்ஷ செய்தமைக்காக கண்டனம் செய்கின்றார்.

குமாரதுங்கவின் திருகுதாளங்கள் மாற்றங்களும் கிறுக்கனின் கோமாளி நடவடிக்கைகளைப் போலவே உள்ளன. அவரது நடவடிக்கைகளில், உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்டுவதில் ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு தட்டினதும் இயலாமையல் வேரூன்றியுள்ள ஒரு தர்க்கம் இருந்துகொண்டுள்ளது. ஐ.தே.க போலவே ஸ்ரீ.ல.சு.க யும், ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களை இன ரீதியில் பிளவுபடுத்தவும் மற்றும் தனது ஆளுமைக்கான சமூக அடித்தளத்தை உருவாக்கவும் 1948 சுதந்திரத்தில் இருந்தே பயன்படுத்திவருகின்ற தமிழர் விரோத பேரினவாதத்தில் வேரூன்றியுள்ளது.

நேரடியாக தமிழ் பேசுபவர்களுக்கு எதிரான பாரபட்சங்களை உருவாக்கிய "சிங்களம் மட்டும்" கொள்கைக்கு, 1956 முதல் 1959 வரை பிரதமராக இருந்த குமாரதுங்கவின் தந்தை, சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்கவே பொறுப்பாளியாகும். குமாரதுங்கவின் தாயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, பெளத்த மதத்தை அரச மாதமாக்கிய மற்றும் தமிழர்களுக்கு எதிரான ஏனைய பாரபட்டச நடவடிக்கைகளை சட்டமாக்கிய, 1972 இனவாத அரசியலமைப்பை அமுல் செய்த அரசாங்கத்தின் தலைவியாக இருந்தார். ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையில் ஐ.தே.க தொடர்ந்து முன்னெடுத்த இதே இனவாத கொள்கைகளே, 1983ல் படுகொலைகளுக்கும் உள்நாட்டு யுத்தத்திற்கும் வழிவகுத்தது.

எவ்வாறெனினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக பூகோள ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, இலங்கை முதலாளித்துவம் முன்னர் தங்கியிருந்த, தேசிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கைகளை கீழறுத்துள்ளது. கொழும்பில் உள்ள கூட்டுத்தாபன கும்பல்களின் செல்வாக்கான தட்டு, இப்போது இந்த யுத்தத்தை ஒரு தாங்கமுடியாத நிதி இழப்பாகவும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மற்றும் தீவை பூகோள உட்பத்தி முன்னெடுப்புகளில் இணைப்பதற்கான திட்டங்களுக்கான தடையாகவும் கருதுகின்றன. பெரும் வல்லரசுகளின் ஆதரவுடனான பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள், இந்த இலக்குகளை அடைவதற்கான வழிவகையே ஆகும்.

1983ல் இருந்து 1994 வரை யுத்தத்தை முன்னெடுத்த ஐ.தே.க யும் மற்றும் அதன் அபேட்சகர் ரணில் விக்கிரமசிங்கவும் இப்போது தங்களை சமாதான வீரர்களாக காட்டிக்கொள்கின்றார்கள். ஆனால் அந்த யுத்தத்தைப் போலவே, இந்த "சமாதானமும்" உழைக்கும் மக்களின் அவலங்களை தனிப்பதை அன்றி, வியாபாரக் கும்பல்களின் மேலதிக நலன்களையே இலக்காகக் கொண்டுள்ளது. "சமாதான முன்னெடுப்புகளின்" ஆதரவாளர்கள், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆளும் கும்பல்களுக்கிடையில் ஒரு ஜனநாயக விரோத, இனரீதியிலான அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை எதிர்பார்க்கின்றனர். இத்தகைய ஒழுங்கு, திறந்த பொருளாதார சீர்திருத்தம், முதலீட்டு ஈர்ப்பு மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை பரஸ்பரம் சுரண்டுவதை உக்கிரமாக்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

ஆயினும், தசாப்தத்திற்கும் மேலாக ஆளும் தட்டு தமது திட்டத்தை அமுல்படுத்த முடியாமல் உள்ளது. அவர்களது பொருளாதார இலட்சியங்கள், விடுதலைப் புலிகள் உட்பட அவர்கள் அனைவரும் தமது அடிப்படையாக கொண்டுள்ள பிற்போக்கு இனவாத அரசியலுடன் தொடர்ந்தும் மோதிக்கொள்கின்றன. விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு காண்பதற்கான ஒவ்வொரு நகர்வும் எதிர் தரப்புக்களின் கண்டனங்களை தோற்றுவிக்கின்றது. அவர்கள் அதை "சிங்கள நாட்டைக் காட்டிக் கொடுக்கும்" செயலாக வகைப்படுத்தியுள்ளனர். குமாரதுங்கவின் அரசியல் செப்படி வித்தைகளும் மற்றும் ராஜபக்ஷவுக்கும் ஜே.வி.பி க்கும் இடையிலான புதிய உடன்படிக்கையும் இந்த அடிப்படை இக்கட்டு நிலையின் பிரதிபலிப்புகளாக இருக்கும் அதே வேளை, முழு சமூக அமைப்பினதும் அரசியல் வங்குரோத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

சோசலிச பதிலீடு

சாதாரண இலங்கையிர்களில் பெரும்பான்மையினருக்கு சமாதானம், ஜனநாயக உரிமைகள் மற்றும் தரமான வாழ்க்கை நிலைமைகள் தேவை என்பதில் சந்தேகம் கிடையாது. இரு தசாப்த கால யுத்தம், 60,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டுள்ளதோடு அரை மில்லியனுக்கும் மேலானவர்களை இடம்பெயரச் செய்துள்ளது. யுத்தம் மீண்டும் வெடிக்குமானால், பீரங்கிக் குண்டுகளுக்கு இறையாகப் போவது தொழிலாளர்களதும் கிராமப்புற ஏழைகளதும் பிள்ளைகளேயாகும். "சமாதான முன்னெடுப்புகள்" வெற்றியளிக்குமானால், தீவில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள கடும் உழைப்பு தொழிற்கூடங்களில் அற்ப ஊதியத்திற்கு வேலை செய்யத் தள்ளப்படுபவர்களும் அவர்களே.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), சோசலிச பதிலீட்டை வழங்கவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறது. தொழிலாளர் வர்க்கம் விக்கிரமசிங்கவின் அல்லது ராஜபக்ஷவின் கீழ் வழிநடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. தொழிலாளர்கள் தமது நலன்களுக்காக போராட வேண்டிய ஒரே வழி, அவர்கள் முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றில் தொங்கிக்கொண்டுள்ள ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் மற்றும் பாரம்பரிய தொழிலாளர் வர்க்க கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தும் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்துகொள்ள வேண்டியதேயாகும்.

சோ.ச.க யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்காக பின்வரும் சோசலிச வேலைத் திட்டங்களை அபிவிருத்தி செய்கின்றது.

* தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து பாதுகாப்பு படைகளையும் நிபந்தனையின்றி உடனடியாக வாபஸ் பெறுதல். ஒற்றை ஆட்சியை பலாத்காரமாக பேணிக் காப்பது, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஆழமான பாரபட்சங்களை மட்டுமன்றி, தீவு பூராவும் இராணுவவாதத்தின் ஆதிக்கத்தையும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையுமே விளைவித்துள்ளது.

* எல்லா விதத்திலுமான ஒடுக்குமறைகளையும் எதிர்த்தல் மற்றும் இன, மொழி அல்லது மத பேதமற்று அனைவரதும் உரிமைக்காகப் போராடுதல். 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கான எந்தவொரு தீர்வும், இனவாதம் மற்றும் சர்வாதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையிலும் வேரூன்றியுள்ள இலங்கை அரசியலமைப்பை மாற்றயமைப்பதை கோருகிறது. அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் சம்பந்தமாகவும் தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமையை, முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கும்பல்களுக்கு அன்றி, சாதாரண உழைக்கும் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும், நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்புச் சபை ஸ்தாபிதம் செய்யப்படுவதை சோ.ச.க சிபார்சு செய்கின்றது.

* சோசலிச கொள்கைகளுக்காக போராடு. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது சோசலிச சமத்துவத்திற்கான போராட்டத்துடன் கட்டுண்டுள்ளது. சமுதாயம் உச்சி முதல் அடிவரை மீளமைக்கப்பட வேண்டும். இதன் மூலம், தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட செல்வம், கூட்டுத்தாபன இலாபங்களைப் பெருகச் செய்வதற்கன்றி, வெகுஜனங்களை நெருக்கும் சமூகத் தேவைகளை அடைய பயன்படுத்தப்பட முடியும். சோ.ச.க, சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-- ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்காக போராடுகிறது. முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கு அவசியமான பூகோள போராட்டத்தின் ஒரு பாகமாக பிராந்தியம் பூராவும் தொழலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை அணிதிரட்டும் மற்றும் ஐக்கியப்படுத்தும் வழிமுறையாக தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசுகள் என்ற சுலோகத்தையும் அது அபிவிருத்தி செய்கின்றது.

அந்த வரலாற்றுப் பணியை இட்டுநிரப்ப தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய வெகுஜன கட்சி அவசியம். சோ.ச.க அந்த வெகுஜனக் கட்சியைக் கட்டியெழுப்பவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறது. நாம் எமது அனைத்து ஆதரவளர்கள் மற்றும் உலக சோசலச வலைத் தள வாசகர்களையும் சோ.ச.க யின் வேலைத் திட்டத்தை படிக்குமாறும் இந்தக் கொள்கைகளுக்காக சாத்தியமானளவு விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ள எங்களுடன் இணையுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

Top of page