World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German election: a clear rejection of right-wing policies

ஜேர்மன் தேர்தல்: வலதுசாரிக் கொள்கைகளின் ஒரு தெளிவான நிராகரிப்பு

By Peter Schwarz
20 September 2005

Back to screen version

ஞாயிறன்று நடந்த ஜேர்மன் பாராளுமன்றத்திற்கான தேர்தலின் முடிவு ஒரேயொரு வழியில் தான் பொருள்கொள்ளப்பட முடியும், அதாவது நலன்புரி சேவை வெட்டுக்களையும் செல்வந்தர்களின் நலனுக்கு சமூக செல்வம் மறுபங்கீடு செய்யப்படுவதையும் அடிப்படையாக கொண்ட கொள்கைகள் ஜேர்மன் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்ததுடன், தீவிரமாய் நிராகரிக்கப்பட்டது என்பதாகும்.

கூட்டாட்சியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரின், நலன்புரி சேவைகளை வெட்டும் முற்றிலும் செல்வாக்கற்ற வேலைத் திட்டத்தை - செயற்பட்டியல் 2010-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஸ்திரமான பாராளுமன்ற பெரும்பான்மையை உருவாக்கும் பொருட்டு அவர் முன்கூட்டிய தேர்தலை ஏற்பாடு செய்திருந்தார். இந்த இலக்கை அடைவதற்காக, ஜேர்மன் ஜனாதிபதி தொடங்கி, மத்திய அரசியற்சட்ட மன்றம் மற்றும் முழு பொருளாதார மற்றும் அரசியல் செல்வந்த தட்டிடமிருந்து, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளிடமிருந்தும் அவர் ஆதரவை பெற்றார்.

ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி -பசுமைக் கட்சியின் கூட்டணி வாக்காளரின் புதிய ஆணையை பெற இருந்தது மற்றும் ஆளும் கட்சிகளுக்குள்ளிருந்து அரசாங்கக் கொள்கை தொடர்பான விமர்சனத்தை பெற இருந்தது, அல்லது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) மற்றும் கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) மற்றும் "சுதந்திர சந்தை" சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) ஆகியவற்றை கொண்ட பழமைவாத எதிர்க்கட்சியினரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக இருந்தது.

இப்பொழுது அதற்கு நேரெதிரானது நிகழ்ந்துள்ளது. தேர்தல் முடிவானது பாராளுமன்ற பெரும்பான்மையில் மிகவும் ஸ்திரமற்றதன்மையை விளைவித்தது மற்றும் "சுதந்திர சந்தை" சீர்திருத்தங்கள் பற்றிய தற்போது நிலவுகின்ற கொள்கை மக்கட் தொகையினரின் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாக ஆகியிருக்கிறது. அரசியல் நெருக்கடியும் வன்முறைசார்ந்த சமூக மோதல்களும் தவிர்க்க முடியாத விளைபொருளாக இருக்கின்றன.

இது ஏற்கனவே தேர்தல்நாளின் மாலையில், ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றில் முதல் தடவையாக- இருவேட்பாளர்கள், அஞ்செலா மெர்க்கெல்(CDU) மற்றும் தற்போது பதவியில் உள்ள அதிபர் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி), ஆகிய இருவரும் வெற்றிக்கு உரிமை கொண்டாடியபொழுது மற்றும் புதிய அரசாங்கத்தில் அதிபர் பதவியை ஏற்பதற்கு அவர்கள் தீர்மானகரமாக இருப்பதாக அறிவித்தபொழுது, முன்நிழலிட்டுக் காட்டியது.

ஞாயிறு மாலை 6 மணிக்கு வாக்குச் சாவடிகள் மூடப்பட்டபொழுது மற்றும் முதலாவது முன்னறிந்துகூறல் வெளியிடப்பட்டபொழுது, தேர்தல் முடிவானது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/ கிறிஸ்தவ சமூக யூனியனின் பிரதிநிதிகள் அதேபோல தொழில்முறை பொதுக்கருத்து ஆய்வாளர்களுக்கும் ஒரு அதிர்ச்சியாக வந்தது. வாக்குப்பதிவிற்கு முன்னர் எடுக்கப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்புக்களின்படி, 40 சதவீத்த்திற்கும் மேல் வெற்றிபெற தயாரிப்பு செய்த "ஒன்றிய" கட்சிகள் 35 சதவீதத்தையே பெற்றன.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தானே எதிர்பார்த்திருந்ததை விடவும் சிறப்பாக சமூக ஜனநாயகக் கட்சிக்கு நிகழ்ந்தது. இருப்பினும், இத்தேர்தலில் கட்சி தெளிவான இழப்பாளராக இருந்தது, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதனுடைய வாக்கு 4 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. அது 34 சதவீதத்திற்கும் சற்றுக் குறைவாக பெற்றமை, அதனுடைய வரலாற்றில் மோசமான தோல்விகளுள் ஒன்றாகும். பசுமைக் கட்சி, 8 சதவீத வாக்கை பெற்று சிறிதே இழப்பினால் பாதிக்கப்பட்டது.

அரசாங்க முகாமில் ஏற்பட்ட இழப்பிலிருந்து யூனியன் கட்சிகளால் ஆதாயம் அடைய முடியவில்லை. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதன் மொத்த எண்ணிக்கையில் 3 சதவீதத்தை இழந்தது, அதேவேளை பவேரியாவை அடித்தளமாக கொண்டிருக்கும் அந்த மாநிலத்தில் மட்டும் வேட்பாளரை நிறுத்திய கிறிஸ்தவ சமூக யூனியன் 10 சதவீத அளவு இழந்தது. ஜேர்மனியின் போருக்குப் பிந்தைய வரலாற்றில், "மக்கள் கட்சிகள்" என்று அழைக்கப்படும் சமூக ஜனநாயகக் கட்சியும், யூனியனும் இணைந்து 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றன.

வெறும் 10 சதவீதத்துடன் மட்டும் FDP என்றுமில்லா சிறந்த முடிவுகளுள் ஒன்றை பெற்றது. சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் இவற்றின் "மகாகூட்டணி" யைத் தடுத்து நிறுத்த விழைந்த வாக்காளர்களின் "இரண்டாம் சீட்டு" என்று அழைக்கப்படும் வாக்குகளை அது பெற்றது. இருப்பினும், ஒன்றியம் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி இவற்றுக்கு இணைந்த வாக்கானது, சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சி முகாமைவிட அதிகமாக வாக்கை பெறத் தவறியபொழுது, கடந்த பாராளுமன்றத்தில் அவை பெற்ற மொத்தத்தைவிட குறைவாக இருந்தது. தேர்தலின் நிச்சய வெற்றியாளர்கள் என்று கூறப்பட்ட, யூனியன் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகியன வாக்கில் 45 சதவீதத்தையே பெற்றன.

ஆதரவில் பெரும் அதிகரிப்பை செய்த கட்சி அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி கட்சியாகும். 2002ல் (PDS - முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச ஆளும் கட்சியின் வழித்தோன்றலான) ஜனநாயக சோசலிசக் கட்சி', ஜேர்மன் தேர்தல் விதிகளின்படி பாராளுமன்றத்தில் நுழைவதற்கான குறைந்தபட்ச தேவையான ஐந்து சதவீத வாக்கை ஈட்டத் தவறியது. (மேற்கு ஜேர்மனியை அடித்தளமாகக் கொண்ட தேர்தல் மாற்று குழுவுடன் இணைந்ததை தொடர்ந்து) இப்பொழுது இடது கட்சியாக நிற்கும் அதன் வேட்பாளர்கள் தங்களுடைய வாக்குளை இரு மடங்குக்கும் அதிகமாக கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் வாக்குப் பெற்றனர், மற்றும் ஒன்றிணைந்த கட்சியானது புதிய பாராளுமன்றத்தில் குறிப்படத்தக்க அளவில் ஆதிக்கம் செலுத்தும்.

ஜனநாயக சோசலிசக் கட்சி அதன் பிரதான தளத்தை கொண்டிருக்கும் முன்னாள் கிழக்கு ஜேர்மனியில், இடது கட்சியானது 27 சதவீதத்தை- கிறிஸ்தவ ஜனநாயக யூனியனிற்கு விழுந்த வாக்குகள் மட்டத்தை பெற்றது, அதேவேளை சமூக ஜனநாயகக் கட்சி 33 சதவீதம், மிகப் பெரும் பங்கினை வென்றது. முன்னாள் மேற்கு ஜேர்மன் மாநிலங்களில், இடது கட்சியானது வாக்கில் ஐந்து சதவீதத்திற்கும் சற்று குறைவானதை பெற்றது.

மொத்தத்தில், தேர்தல் முடிவானது வாக்காளர் தொகுதியினுள்ளே இடதுபுறத்திற்கான ஒரு தெளிவான மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. யூனியனும் சுதந்திர ஜனநாயகக் கட்சியும், ஆளுங் கட்சிகள் மற்றும் இடது கட்சியுடன் சேர்த்துப் பெற்ற 51 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 45 சதவீதமே எடுத்தன. எஞ்சிய 4 சதவீத வாக்குகள் சிறு கட்சிகளிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டன, அவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யமாட்டா.

இந்த இடதுபுறத்தை நோக்கிய மாற்றம் சமூகப் பிரச்சினைகள் தேர்தல் விவாதத்தின் மையத்துக்கு நகர்ந்துள்ளன என்பதற்கான சான்றாகும். ஆரம்பத்தில், யூனியன் கட்சியானது ஷ்ரோடர் அரசாங்கத்துடனான பொதுமக்களது அதிருப்தியிலிருந்து ஆதாயமடையக் கூடியதாக இருந்தது, ஆனால் யூனியனே சமூக கொள்கை என்ற அர்த்தத்தில் எதை முன்மொழிகின்றது என்பது பற்றி பொதுமக்கள் தெளிவடையும்பொழுது அதன் சொந்த தர மதிப்பீடே மூழ்கிப்போனது.

குறிப்பாக, மெர்க்கலால் நிதிக்கொள்கையில் அவ்வம்மையாரின் நிபுணராக அவரது பிரச்சார குழுவிற்குள் கொண்டுவரப்பட்ட, போல் கிர்ச்கொப் (Paul Kirchhof) -ஆல் முன்மொழியப்பட்ட தீவிர வலதுசாரி வரித் திட்டங்கள் மீதான பகிரங்க விவாதத்தின்பொழுது யூனியனாது பெருமளவு ஆதரவை இழந்தது. அதே நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி பசுமைக் கட்சி ஆகிய இரண்டும் "இடது" பற்றி பேசத் தொடங்கின. அவர்கள் தொடக்கத்தில் தங்களை கடுமையான "சீர்திருத்தவாதிகளாக" முன்நிறுத்திக்கொண்ட அதேவேளை, தேர்தல் பிரச்சாரத்தின் முடிவில் அவர்கள் தங்களின் தந்திரங்களை மாற்றிக்கொண்டு, நலன்புரி அரசின் பாதுகாவலர்களாக காட்டிக் கொண்டனர்.

நியூ ஓர்லியன்ஸில் நிகழ்ந்த சூறாவளி பேரழிவு மேலும் ஒரு காரணியாக இருந்தது. முன்னரே முன்கணித்துக் கூறப்பட்டிருந்த இயற்கை பேரழிவை எதிர்கொள்கையில் புஷ் நிர்வாகத்தின் முழு தோல்வியானது, நூறாயிரக் கணக்கான மக்கள் தங்களின் கதிக்கு விடப்பட்ட முறையானது, சந்தை மற்றும் பெருநிறுவன இலாப ஈட்டலுக்கு அனைத்து சமூகத் தேவைகளையும் கீழ்ப்படுத்தும் கொள்கைகளின் விளைபயன்களை பல வாக்காளர்களுக்கு தெளிவுபடுத்தியது.

ஆயினும், இந்த தேர்தல்களில் இருந்து இறுதியாக தோன்றும் அரசாங்கமானது வாக்காளர்களின் அக்கறைகளுக்கும் தேவைகளுக்கும் செவிமடுக்கும் என்று நினைப்பது முற்றிலும் தவறாக இருக்கும். மாறாக அது மேலும் வலது நோக்கியே நகரும்.

ஜேர்மன் சமூக நலன்புரி அமைப்புமுறையை நிர்மூலமாக்குவதை தொடரக் கூடிய ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க வருவதற்கான இயங்குமுறை பற்றி தேர்தல் நாளன்று மாலையிலேயே ஒரு விவாதம் தொடங்கி விட்டிருந்தது. ஷ்ரோடர் தான் தொடர்ந்து அதிபராக இருக்க வேண்டும் என்று அவரால் வலியுறுத்தப்படுவதற்கான அடிப்படை இதுவாகும்.

தேர்தல் நாளன்று மாலையில் ஒரு தொலைக்காட்சி விவாத்த்தில் "என்னைத் தவிர ஒருவரும் நிலையான ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாது" என்று அவர் அறிவித்தார். இந்தப் பிரச்சினை, "ஜேர்மனியில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் இல்லாமல் சீர்திருத்த செயல்முறைகள் நகரத்தொடங்கும் என்று உறுதிப்படுத்துவதாகும்" என அவர் சொன்னார். வேறு வார்த்தைகளில் சொன்னால், பகிரங்க சமூக மோதல்களுக்கு கட்டவிழ்த்து விடாமல் மேலும் "சீர்திருத்தங்களை" தன்னால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என்று ஷ்ரோடர் கூறினார்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிக்கு ஒரு பெரும்பான்மையை ஏற்படுத்துவதில் தத்துவார்த்த ரீதியாக உதவி செய்யக் கூடிய இடது கட்சியுடன் எந்தவிதமான ஒத்துழைப்பையும் அவர் தவிர்த்தார். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி இவற்றை உள்ளடக்கிய "போக்குவரத்து வெளிச்சம்" கூட்டணி என்று கூறப்படும், ஒரு பெரும்பான்மையையும் கொண்டிருக்கும் கூட்டணி, சுதந்திர ஜனநாயகக் கட்சி தலைவர் Guido Westerwelle -ஆல் உறுதியாக நிராகரிக்கப்பட்டது.

இருக்கும் ஒரே மாற்றீடு ஷ்ரோடர் தலைமையிலான மகா கூட்டணி ஆகும். அஞ்செலா மெர்க்கெல் கோபத்துடன் அத்தகைய கோரிக்கையை நிராகரித்தார், மற்றும் பெரிய பாராளுமன்ற குழு என்ற வகையில், யூனியனிற்கு ஒரு மாபெரும் கூட்டணியின் அதிபரை தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று வலியுறுத்தியதில் பிடிவாதமாக இருந்தார். அதே நேரத்தில், பெரு வர்த்தகத்தினரின் முக்கிய பிரதிநிதிகள் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு விரைவில் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சில்லறை வர்த்தக கூட்டமைப்புக்கு குரல்தரவல்ல Hubertus Pellengahr, கட்சிகள் ஒரு செயல்திறன்மிக்க அரசாங்கத்தை கூடிய விரைவில் அமைப்பதற்கும் தீர்வுகாணவும் ஒன்றுபடுமாறு கோரினார். "நிச்சயமற்றதன்மைக்கு ஏதாவது உறுதி கூறுவதானால், நிச்சயமற்றதன்மை ஒரு பொருளாதார மேம்போக்கிற்கு எப்போதும் ஒரு மோசமான நிலைமையாக இருக்கும்."

BDI தலைவர் Jürgen Thumann தேர்தல் முடிவுபற்றி, "தொழில்துறை மற்றும் வர்த்தகத்தின் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில், நாங்கள் கடுமையாய் ஏமாற்றம் அடைந்துள்ளோம்" என்றார். ஜேர்மனி ஆளுவதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என எச்சரித்தார். யூனியனும் சமூக ஜனநாயகக் கட்சியும் தங்களின் "பெரும்பொறுப்பை" பற்றி நனவுடன் இருக்குமாறும், சீர்திருத்தங்கள் நகர்வதற்கு தேவையான அனைத்தையும் செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

விவாதிக்கப்பட்டு வரும் மேலும் ஒரு சாத்தியமான கூட்டணி, யூனியன், சுதந்திர ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கொண்ட கூட்டணியாகும். பசுமைக் கட்சியினரின் முக்கிய பிரதிநிதிகள் அத்தகைய கூட்டணி அரிதாகவே நடைமுறை சாத்தியமுள்ளது என்று அறிவித்துள்ளனர், ஆனால் அதனை முற்றிலும் விலக்குவதிலிருந்து விலகியே உள்ளனர். இடது கட்சி அதன் பங்கிற்கு ஏனைய கட்சிகளின் திட்டங்களில் குறுக்கீடு செய்வதற்கு அது நோக்கங்கொள்ளவில்லை என்று கூறியது. அது தனது வாக்காளர்களை அணிதிரட்டி, ஒன்றில் மாபெரும் கூட்டணி அமைப்பதை எதிர்ப்பதற்கோ அல்லது இன்னொரு வடிவ வலதுசாரி கூட்டை உருவாக்குவதை எதிர்ப்பதற்கோ நோக்கங்கொள்ளவில்லை.

முன்னாள் சமூக ஜனநாயக கட்சித் தலைவரும் இடது கட்சியின் முன்னணி வேட்பாளரும், பிரச்சாரத்தின் பொழுது பல்வேறு சமயத்திலும் மாபெரும் கூட்டணியை அங்கீகாரமளித்திருந்தனர். வாக்களிப்பை தொடர்ந்து, ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஜனநாயக சோசலிச கட்சியின் தலைவர் லோதர் பிஸ்கி, லாபொன்டைனின் வார்த்தைகளை பிரதிபலித்தார். மாபெரும் கூட்டணியிலிருந்து ஒரு வெற்றியாளராக இடது கட்சி தோன்றும், மற்றும் அத்தகைய வெளிப்பாட்டை, யூனியன் மற்றும் FPD அரசாங்கத்திற்கு "குறைந்த தீங்கு" உடையது என்று அழைக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved