World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German elections: Conservative opposition meets in Dortmund

A repulsive and reactionary spectacle

ஜேர்மன் தேர்தல்கள்: பழைமைவாத எதிர்க்கட்சி டோட்மூண்டில் நடத்திய கூட்டம்

ஒரு வெறுப்பூட்டும் பிற்போக்கு காட்சி

By Ulrich Rippert
7 September 2005

Back to screen version

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) வின் மாநாடு ஆகஸ்ட் வாரக் கடைசியில் டோட்மூண்ட் நகரில் நடைபெற்றது, அது ஜேர்மன் நடப்பு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் காணப்படுகின்ற பொதுவான அரசியல் வீழ்ச்சியின் ஒரு புதிய கட்டத்தை குறிப்பதாக அமைந்திருக்கிறது.

டோட்மூண்ட் நகரிலுள்ள மிகப் பெரிய உள் விளையாட்டு அரங்கில் 10,000 திற்கு மேற்பட்ட CDU ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர், அக்கட்சி, முன்பு எப்போதையும் விட ''கட்சி மந்தையை'' அதிகமாக கொண்டதாக அமைந்திருக்கிறது என்று ஒரு செய்திபத்திரிகை விமர்சித்திருந்தது. மாநாடு தொடங்குவதற்கு முன்னர், மாநாட்டு பந்தல்களில் இலவச பீர் வழங்கப்பட்டது, மேலும் பார்வையாளர்களுக்கு ஆரஞ்சு நிற டி. சேர்ட்டுகளும், சாப்பிடுவதற்கு பருப்புகளும் வழங்கப்பட்டன. கட்சித் தலைவரின் புனைபெயரான ``ஆங்கி`` (ஏஞ்சலா மெர்கல்) மற்றும் ''ஒரு மாற்றத்திற்கு வாக்களியுங்கள்'' போன்ற முத்திரை பதித்த சின்னங்களும் வழங்கப்பட்டன. மாநாட்டு பந்தலுக்குள் ராக் இசை ஒலித்தது மற்றும் மேடையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இடைவெளி நேரங்களில், ஜேர்மனியில் 10 மாநிலங்களை சேர்ந்த ஆளும் பழைமைவாத CDU-CSU வின் பிரதமர்கள் குறுகிய அறிக்கைகளை பயனற்ற முழக்கங்களுடன் வெளியிட்டனர். ஒருவர் பின் ஒருவராக காட்சிக்கு வந்து, அதிபர் வேட்பாளர் மெர்கல்லை ஒளி சிந்தும் நம்பிக்கையென்றும், ஜேர்மனியின் பாதுகாவலர் என்றும் பாராட்டினர். விவாதங்களில் கலந்து கொண்ட ஒரு நடுவர் ''ஏஞ்சலா மெர்க்கல் - நமது நம்பிக்கை தீர்வு நமது நாட்டின் எதிர்காலம்'' என்றும் புகழ்ந்துரைத்தார். கட்சியில் விசுவாசம் கொண்டவர்கள் ''ஆங்கி, ஆங்கி'' என்று குரல் எழுப்பினர்.

ஒலி பெருக்கிகள் ''நாங்கள் தான் சேம்பியன்கள்'' என்று முழக்கமிட்டன, மற்றும் அந்த மண்டபத்தில் அந்த பழைமைவாத வேட்பாளர் தனது தொண்டர்களுடன் நுழைந்தபோது விளக்குகள் வெளிச்சம் அதிகமாக காணப்பட்டது. பல நிமிடங்கள் காது செவிடுபடுமளவிற்கு தொண்டர்கள் முழக்கமிட்டு திரண்டனர். தொண்டர்களின் முழக்கத்தை ஏற்றுக் கொள்வதற்காக பலமுறை ஏஞ்சலா மெர்க்கல் தனது இருக்கையிலிருந்து எழுந்தார் - அமெரிக்க கட்சி மாநாடுகளில் நடைபெறுவது போன்ற காட்சியாக இது காணப்பட்டது.

இந்த வெறுப்பூட்டும், காட்சி அரசியலில் வெகுஜன ஆவேசத்தை கிளறிவிட்ட கடந்த காலங்களை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக கடுமையான அரசியல் சிந்தனை எதையும் மழுங்கச் செய்வதாகவும், அதே நேரத்தில் மிகவும் பழைமைவாத அரசியல் சக்திகளை திரட்டுவதாகவும் அமைந்திருந்தது.

வலதுசாரி வேலைத்திட்டம்

தமது தலைமையில் அமையும் அரசாங்கம், ''தந்தைநாட்டு பற்றுக்கு புத்துயிர்'' கொடுப்பதாக அமையும் என்று தமது 50 நிமிட உரையில் மெர்க்கல் அறிவித்தார். அவருக்கு முன்னர் பவேரிய பிரதமரும், CSU தலைவருமான எட்மொண்ட் ஸ்டாய்பர் ஏற்கனவே கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே ''தந்தைநாடு பற்றியும் தேசபக்தி பற்றியும் அவற்றின் அடிப்படை பழைமைவாத நெறிகள்'' பற்றியும் உரையாற்றினார்.

மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராவதை தள்ளுபடி செய்யும் தமது கருத்தை வலியுறுத்தினார், இஸ்லாமிய மக்கள் மேலாதிக்கம் செலுத்துகின்ற அந்த நாடு அனுமதிக்கப்பட்டதால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அளவிற்கு அதிகமான கோரிக்கைகளை எழுப்புவார்கள் என்பதால் தமது கருத்து நியாயமென்று வாதாடினர். இப்படி வாதிட்டதின் மூலம் கட்சியின் வலதுசாரி பிரதிநிதியான ரோலண்ட் கோச்சிடமிருந்து அவரது மையக்கருத்தை தட்டிப் பறித்துக் கொண்டார். துருக்கி பிரச்சனையை மையக் கருத்தாகக் கொண்டு ஒரு தீவிரமான தேர்தல் பிரசாரம் நடத்தப்பட வேண்டும் என்று கோச் கூறினார். 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஹெஸன் மாகாண நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இனவாத பிரச்சார அடிப்படையில் தான் வெற்றி பெற்றதை கூட்டத்திற்கு நினைவுபடுத்தினார், அப்போது வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு இரட்டை தேசிய குடியுரிமை வழங்கும் ஆலோசனைகளை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார்.

மெர்க்கல் ஒவ்வொரு சொற்றொடரை முடித்ததும், ''அங்கி, அங்கி'' என அவருக்கு தொடர்ந்து பாராட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முடிவுவாக்கில் மதிப்பு கூடுதல் வரியை உயர்த்த தாம் கருதியிருப்பதாக அவர் உறுதிபடுத்திய நேரத்திலும், தொழிலாளர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எதிராக தற்போதுள்ள பாதுகாப்பை தளர்த்த வேண்டுமேன்று CDU திட்டமிட்டிருப்பதை வர்ணித்த நேரத்திலும் கைத்தட்டல்கள் நீடித்தன. அந்த மாநாட்டின் வெறி உணர்வு அரசியல் உணர்வை அடிப்படையாகக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் CDU தலைமையிலான ஒரு அரசாங்கம் கொண்டுவரும் சமூக வெட்டுக்களால் தீவிரமாக விரைவில் பாதிக்கப்படவிருப்போர்கள் உட்பட அனைவரும் அந்த மாநாட்டில் கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் மற்றும் ஒவ்வொருவர் பேசுவதையும் கைதட்டி பாராட்ட தயாராக இருந்தனர்.

பவுல் கிரிச்ஷோவ், அந்த மாநாட்டில் மெர்க்கல் ''ஒரு தொலை நோக்கான நிதிக் குழுவை கொண்டவர்'' என்று வர்ணித்த நேரத்திலும், ஸ்டாய்பர் ''ஜேர்மனிக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது'' என்று பாராட்டிய நேரத்திலும் கைதட்டுக்கள் புயல் போல் எழுந்ததிலிருந்து இது தெளிவாயிற்று. அந்த சுதந்திர வரி நிபுணர் இதற்கு முன்னர் மத்திய அரசியல் சட்ட நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக பணியாற்றியவர். தற்போது ஹைடில்பேர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். CDU வின் திறமை மிக்கவர்கள் குழு என்றழைக்கப்படும் குழுவில் நிதி மற்றும் பட்ஜெட் கொள்கை நிபுணராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பழைமைவாத தலைமையில் வேறு எந்த தனிப்பட்ட தலைவரையும் விட கிரிச்ஷோவ், CDU/CSU வுக்கான ஒரு மூர்க்கத் தனமான நவீன - தாராளவாத கொள்கையின் பக்கம் வலதுசாரி போக்கில் சாய்வதை பிரதிநிதித்துவப்படுத்துகிற தலைவராக விளங்குகிறார். அது ஒரு சலுகை பெற்ற செல்வந்த தட்டினர் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளின் நலன்களின் பக்கம் அதிகம் சந்தேகத்திற்கு இடமின்றி சாய்வதாக அமைந்திருக்கிறது. CDU தேர்தல் அறிக்கையில், உயர்ந்த வருமானம் பெறுவோர் செலுத்தும் வரி விகிதங்களை 3% குறைப்பதாக திட்டமிட்டிருக்கிறது. என்றாலும் கிரிச்ஷோவ், அதற்கு மேலே சென்று ஒட்டுமொத்த வரிவிதிப்பையும் ஒரு தீவிரமான மாற்றத்திற்கு மேலும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் ஹெல்மூட் கோலின் கடைசி CDU/CSU அரசாங்க காலத்தில் உயர்ந்த வரிவிதிப்பு விகிதம் 53% மாக இருந்தது. ஏற்கனவே அது நடப்பு ஸ்ரோடர் - பிஷ்சர் அரசாங்கத்தில் (SPD - பசுமைக்கட்சி அரசாங்கத்தில்) 42% மாக கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

முடிந்தவரை விரைவாக உயர்ந்த பட்ச வரிவிகிதத்தை 25% மாக குறைக்கவும் மக்களில் பரவலான பிரிவுகளுக்கும் குறைந்த ஊதியம் பெறுவோருக்கும் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகளை வரிரத்து பயணச் செலவினங்கள், இரவு நேரப்பணிக்கு வரிவிலக்கு ஆகியவற்றை இரத்து செய்வதற்கும் கிரிச்ஷோவ் விரும்புகிறார். அவர் அறிமுகப்படுத்தும் ஒட்டு மொத்த வரிவிதிப்பு ஏற்கனவே பல ஆண்டுகளாக ஏழைமக்களிடமிருந்து பணக்காரர்களுக்கு சாதகமாக செல்வத்தை பகிர்ந்தளிக்கும் நடைமுறை மிக வேகமாக தீவிரமடையும். சமுதாயத்தில் வசதி படைத்தவர்களும் சூப்பர் பணக்காரர்களும் வரி செலுத்துவதில் சலுகைகளை பெறுவதற்காக பஸ் மற்றும் ரயில்களில் பயணம் செய்வோரும் இரவு நேர ஷிப்ட்டுகளில் பணியாற்றுகின்ற ஊழியர்களும் தங்களது வரிச்சலுகைகளை விட்டுக் கொடுக்க வேண்டிவரும்.

ஜேர்மனியில் படிப்படியாக முன்னேறிச் செல்லும் வரிவிகிதம் இரண்டாம் உலக போருக்கு பின்னர் CDU வின் நிதியமைச்சரும் பின்னர் அதிபராக பொறுப்பேற்றவருமான லூட்விக் எர்ஹார்டு கொண்டு வந்ததாகும். மற்றும் நடைமுறையிலுள்ள சமூக வெட்டுக்களுக்கு அப்பாலும் CDU/CSU மற்றும் SPD ஆகிய இரண்டு கட்சிகளுமே கொள்கை அடிப்படையில் ஆதரித்து நின்றவை. இந்த வரிவிதிப்பு முறையை கைவிடுவது நாட்டின் ''சமூக சுதந்திர சந்தை பொருளாதாரத்தின்'' சவப்பெட்டியில் அடிக்கின்ற கடைசி ஆணியாகும்.

டோட்மூண்ட் நகரில் நடைபெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் மற்றும் பாராட்டுக்களுக்கு பின்னணியில் நடைபெற்றுக் கொண்டுள்ள CDU மற்றும் CSU வின் வலதுசாரி திருப்புமுனையின் அளவை புரிந்து கொள்வதற்கு கடந்தகால வரலாற்றை ஆராய்வது அவசியமாகும். இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஜேர்மனியில் நடைமுறையில் நிலைநாட்டப்பட்டு வந்த கொள்கை சமூக பாதுகாப்பு மற்றும் வரி விதிப்பு முறை ''ஐக்கிய'' கொள்கை அடிப்படையில் அமைந்தது. அதாவது அதிக வருமானமுள்ளவர்கள் குறைந்த வருமானக்காரர்களை விட அதிகமாக பங்களிப்புச் செய்ய வேண்டும். பிரதான சமூக பிரச்சனைகளான நோய்கள், வேலையில்லாத நிலை, ஓய்வு பெறுவது ஆகியவை இந்த அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

சமூக பாதுகாப்பிற்கு சந்தாக்களை செலுத்துவது தனிமனிதர்களின் வருவாயை பொறுத்ததாகும். அதே நேரத்தில் காப்பீடு செய்து கொண்ட அனைவரும் தங்களது பங்களிப்பு எந்த அளவாக இருந்தாலும் ஒரே வகையான சலுகைகளை பெற்றனர். குறிப்பாக சலுகைகளை பெற்ற குடும்பங்கள், திருமணப்பங்காளிகள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் கட்டணம் எதுவுமில்லாமல் இலவசமாக காப்பீடு செய்யப்பட்டனர். ''சமத்துவக் கொள்கை அடிப்படையில்'' நோய் ஓய்வூதியம் மற்றும் வேலையில்லாதவர்களுக்கான காப்பீடுகளில் தொழிலதிபர்களும், ஊழியர்களும் சரிசமமான சந்தாக்களை செலுத்தினர். சமுதாய நிலைப்பாடுகளை ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவர விரும்பிய பிஸ்மார்க், ஜேர்மனியின் முதலாவது அதிபர் என்ற முறையில் 1880களில் தேசிய சமூக பாதுகாப்பின் இந்த வகையான வடிவத்திற்கு அடித்தளம் அமைத்தார்.

இந்த பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளியை வைப்பதென்று ஏற்கனவே 2003-ல் நடைபெற்ற லைப்சிக் கட்சி மாநாட்டில் CDU முடிவு செய்தது. சுகாதார காப்பீடு செய்து கொண்டவர்கள் தங்களது வருமான அளவுகளை கருத்தில் கொண்டுபாராமல் ஒவ்வொரு மாதமும் 169 யூரோக்கள் ஒட்டு மொத்தமாக சந்தாவாக செலுத்த வேண்டுமென்று அந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்திற்கு உறுதுணையாக படிப்படியாக உயர்ந்து செல்லும் வரி விகிதங்களை ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருக்கிறது. இந்த இரண்டு நடவடிக்கைகளுமே பணக்காரர்கள், அதிபணக்காரர்கள் ஆகியோரிடமிருந்து சமூக பிரச்சனைகளுக்கான செலவினங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு உழைக்கும் மக்களின் தலையில் சுமத்துவதுதான்.

பல நகர சபைகளுக்கு ஏற்கனவே நிதிவசதியில்லை. மற்றும் அவை பல பிராந்தியங்களில் ஒட்டுமொத்தமாக சமூக சேவைகளின் சீர்குலைவு நிலைக்கு இட்டுச் செல்வதாக அந்த நகரசபைகள் எச்சரித்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் டோட்மூண்டில் நடைபெற்ற ''ஆங்கி'' திருவிழா ஒரு முற்றிலும் பழைமைவாத சமூக விரோத அரசியல் போக்கை தொடக்குவதற்கு மேடை அமைத்து தருவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

டோட்மூண்ட் மாநாடு தொடர்பாக இரண்டு அம்சங்களை கருத்தில் கொண்டாக வேண்டும்.

முதலாவாதாக, CDU எவ்வகையான பிரசாரமாக மற்றும் வாய்வீச்சாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தி பரவலான பெரும்பான்மை உழைக்கும் மக்களது நலன்களுக்கு எதிரான ஒரு கொள்கையை கொண்டு செலுத்துவதற்கு உறுதியுடன் பாடுபட்டு வருகிறது. எதிர்காலத்தில் மெர்க்கல் அரசாங்கம் எப்படி பின்தங்கிய லும்பன் சமுதாயப் பிரிவுகளை பயன்படுத்திக் கொள்ள இயலும் என்பதற்கு டோட்மூண்டில் நடைபெற்ற ஆவேசக் காட்சி முன் கூட்டியே பின்னர் வரவிருப்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இரண்டாவதாக, வெட்கக் கேடான முறையில் மிகவும் பிற்போக்கான பழைமைவாத அரசியல் சக்திகள் இந்த புதிய முழக்கமான ''பணக்காரர்களை செழிப்பாக்குங்கள்'' எனும் கோரிக்கையின் பின்னணிக்கு SPD யும், பசுமைக்கட்சியுமே பொறுப்பு ஏற்கவேண்டும். 17 ஆண்டுகள் CDU வின் அரசாங்கத்திற்கு பின்னர் SPD யும் பசுமைக் கட்சிக்காரர்களும் 1999 ல் பதவிக்கு வந்தவுடன் இருந்த நிலவரங்களின் அனைத்து நம்பிக்கைகளையும் மிக விரைவாகவே சிதைத்துவிட்டார்கள். உண்மையிலேயே ஷ்ரோடரும் பிஷ்சரும் தங்களது கொள்கைகளான சமூக வெட்டுக்கள் மற்றும் இராணுவத்தை பிற நாடுகளுக்கு அனுப்பியமை போன்றவற்றிற்காக பெருமை பாராட்டிக் கொண்டனர். இப்போது, அவர்களது கொள்கைகளுக்கு வளர்ந்து வரும் பொது மக்களது எதிர்ப்புக்கான பின்னணியில், சமூக ஜனநாயகக் கட்சிகாரர்கள் மிகத்தீவிரமான வலதுசாரி அணி திட்டத்தில், வரலாற்றில் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு CDU வின் கையில் அரசியல் அதிகாரத்தை கொடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved