World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military heightens tensions in the North and East

இலங்கை இராணும் வடக்கிலும் கிழக்கிலும் பதட்டநிலைமையை அதிகரிக்கச் செய்கின்றது

By our correspondent
7 September 2005

Back to screen version

ஆகஸ்ட் 12ல் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் பதட்ட நிலைமைகள் அதிகரித்திருப்பதுடன் இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையிலான உறுதியற்ற போர்நிறுத்த ஒப்பந்தம் உடைந்துவிழும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17ல், 6 டிரக்குகளிலும் 2 ஜீப்புகளிலும் வந்த பலத்த ஆயுதந்தாங்கிய துருப்புக்களின் உதவியோடு போலீசார் இலங்கையின் வடபகுதியின் யாழ்பாண புறநகர் பகுதியான கலட்டி கிராமத்தை சுற்றி வளைத்தனர். போலீசார் அந்த கிராமத்தில் நுழைந்து, ஆகஸ்ட் தொடக்கத்தில் போலிஸ் மேலதிகாரியான சார்ல்ஸ் விஜேவர்தன கொலை தொடர்பாக விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அலுவலரான கே.கோபியை கைது செய்யதனர். கோபி கைது செய்யப்பட்ட நேரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின்போது 2 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

உடனடியாக கொழும்பிலுள்ள ஊடகங்கள் அந்த கைது நடவடிக்கையை பாராட்டி, போலீசாரை வீரர்கள் என்று அறிவித்தன. என்றாலும் விடுதலைப் புலி போராளிகள் அந்த அதிகாரிகளை சுட்டார்களா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை. தமிழ் செய்தி பத்திரிகைகள், துருப்புக்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாலேயே போலீசார் காயமடைந்தனர் என்று நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. மேலும் அந்த துப்பாக்கி சூட்டில் சம்மந்தப்பட்டதாக கூறப்படுகின்ற நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்களாலும் படையினரின் சுற்றிவளைப்பையும் தாண்டி எப்படி தப்பிச் செல்ல முடிந்தது என்ற கேள்வியையும் அவை எழுப்புயுள்ளன.

அந்த சம்பவத்தை பற்றிக் கொண்ட ஐலண்ட் செய்தி பத்திரிகை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. ஆகஸ்ட் 20 வெளியான ஆசிரியர் தலையங்கத்தில், ஆகஸ்ட் 17 நடந்த விடுதலைப் புலிகளின் வன்முறை ஒரு போர்நிறுத்த மீறலாகும் என அது கண்டித்திருக்கிறது. ''பங்கிடப்படுகின்ற தரங்கெட்ட உணவை அடக்கத்துடன் ஏற்றுக்கொள்ளாமல்", விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி எல்லையை திறந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு விரோதமாக உள்ள இராணுவத் தலைமை அதிகாரிகள் உட்பட ஆளும் தட்டை சேர்ந்த பிரிவுகளின் உணர்வுகளை எதிரொலிப்பதாக அந்த ஆசிரியர் தலையங்கம் அமைந்திருக்கிறது. கதிர்காமர் கொலைக்கு உடனடியாக விடுதலைப் புலிகளின் மீது பழிபோட்டதன் மூலம், விடுதலைப் புலிகள் புதிய கட்டுப்பாடுகளை அல்லது போரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு இறுதி நிபந்தனைக்கு சமமான கோரிக்கையை அவர்கள் முன்வைத்துவருகின்றனர். ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், குறிப்பாக போர் நிறுத்தத்திற்கு முந்திய, இராணுவத்தின் "ஊடுருவல் துருப்புக்களின்" --விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களை கொல்வதற்கு அனுப்பப்பட்ட கொலைப் படைகள்-- நடவடிக்கைகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கின்றது.

கோபி கைது செய்யப்பட்டமை, 2002 பெப்ரவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ஒரு சிரேஷ்ட விடுதலைப் புலி அலுவலர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாகும். கோபி தடுத்து வைக்கப்பட்டிருப்பதானது ஒரு போர் நிறுத்த மீறல் என விடுதலைப் புலிகள் கண்டனம் செய்த போதிலும், போலீசார் கோபியை விடுதலை செய்ய மறுத்துவிட்டதோடு அவரை புலன்விசாரணைக்காக கொழும்பிற்கு விமானம் மூலம் கொண்டு சென்றனர். அவர் உடல் ஊனமுற்றவர் என்று நன்றாக தெரிந்திருந்தும் (அவர் முன்னைய மோதல் ஒன்றில் ஒரு கையை இழந்தவர்) போலீசார் அவரை குற்றவாளிகள் அடையாள அணி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினர்.

கொழும்பு ஊடகங்கள் சார்ல்ஸ் விஜேவர்தன கொலைக்கு காரணமாக அமைந்த சம்பவம் குறித்து மூச்சுவிடவில்லை. இரண்டு தமிழ் சிகை அலங்கார தொழிலாளர்களான ஜெயசீலன் சாந்தரூபனும், கே.லோகதாஸும் இணுவில் சந்தியில் இருந்த அவர்களது தற்காலிக சிகை அலங்காரக் கடைக்குள் நுழைந்த இலங்கை இலங்கை இராணுவ சிப்பாய்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காக்கினர். சாந்தரூபன் பின்னர் மருத்துவமனையில் இறந்தார். இந்த கொடூர சம்பவம் ஒரு ஆவேசமான எதிர்ப்பை கிளறிவிட்டது. கூட்டத்தை கலைப்பதற்காக கலவரத்தடுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். விஜேவர்தன இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டதுடன் பின்னர் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

வழக்கமாக இராணுவத்தின் விசுவாசமான காவலரான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இந்த சம்பவத்தில் சம்மந்தபட்ட படையினர் இராணுவ நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்தினார். அவரது அறக்கை: ''கடந்த பல வாரங்களாக இது போன்ற ஆத்திரமூட்டும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருப்பது குறித்து ஜனாதிபதி கவலையடைந்துள்ளார். இந்த சம்பவங்கள், வடக்கு மற்றும் கிழக்கில் நிலவுகின்ற மோதல் சூழ்நிலை உக்கிரமடைவதற்கு வழிவகுக்கும் பழிவாங்கல்களை தூண்டுவதற்காக, தீவிரவாத சக்திகளால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகிறது'' என பிரகடனம் செய்தது.

கதிர்காமர் கொலைக்கு பின்னர் ''ஆத்திரமூட்டும் சம்பவங்கள்'' மட்டுமே அதிகரித்துள்ளன. கோபி கைது செய்யப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதன் பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள 18 போலீஸ் நிலையங்களில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பகுதிகளில் சிறிய இராணுவ முகாம்களை ஏற்படுத்துவதற்கு சமமாகும். இது இரண்டு தசாப்த கால போரின் போது பாதுகாப்பு படைகளிடம் கசப்பான அனுபவங்களை பெற்றுள்ள தமிழ் மக்களின் வெறுப்பைத் தூண்டும் நடவடிக்கையாகும்.

கதிர்காமர் கொலைக்கு பின்னர் அமுல்செய்யப்பட்டுள்ள அவசரகால சட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின்னர் முதல் தடவையாக தன்னிச்சையாக பெரும் எடுப்பில் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 காலையில் நூற்றுக் கணக்கான துருப்புக்கள் வடக்கு நகரான மன்னாரிலும் புறநகர் பகுதிகளிலும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டனர். அடுத்த நாள் இலங்கை கடற்படை மன்னார் மாவட்டத்தின் கடற்கரை பிரதேசமான பள்ளிமுனையில் சுற்றி வளைப்பு தேடுதல் வேட்டைகளை நடத்தியது. அதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை, எவரும் கைது செய்யப்படவுமில்லை. இதன் ஒரே நோக்கம் ஒரு அச்ச சூழ்நிலையையும், அச்சுறுத்தலையும் உருவாக்குவதாகவே இருக்கமுடியும்.

அத்தகைய நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் கிழக்கு மாவட்டமான திருகோணமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. குறைந்த பட்சம் ஒரு இரவு தேடுதல் வேட்டையாவது நடத்தப்பட்டுள்ளதுடன் அந்தப் பகுதியில் புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் ஒரு சிங்கள பேரினவாதக் குழு, வடக்கு கிழக்கு சிங்கள அமைப்பு (வ.கி.சி.அ), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் ஆதரவோடு அந்த நகரில் ஒரு புத்தர் சிலையை அமைத்ததால் ஏற்கனவே பதட்டநிலைமை அதிகமாகியுள்ளது.

இந்த நடவடிக்கையை தமிழ் அமைப்புக்கள் எதிர்த்தபோது, இராணுவம் ஏராளமான படையினரை நகரில் நிலைநிறுத்தியது. தங்களது பள்ளிக் கூடங்களுக்கு அருகில் ஏராளமான இராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டித்து சென்ற வாரம் திருகோணமலை மாவட்ட மாணவர் அமைப்பு நகரில் ஒரு கண்டனப் போராட்டத்தை நடத்தியது. பாதுகாப்புப் படைகள் நகரம் முழுவதிலும் பல சோதனைச் சாவடிகளை அமைத்திருப்பதுடன் பரவலான ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றன.

கிழக்கு மாகாணத்தில், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா என்றழைக்கப்படும் வி.முரளிதரன் தலைமையிலான குழுவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. சென்ற வாரம் கருணா விசுவாசிகள் விடுதலைப் புலி உறுப்பினர்களை கிருமிச்சை கிராமத்தில் தாக்கி பலரை கொன்றதுடன் பலரைக் காயத்துக்குள்ளாக்கினர். ஐலண்ட் பத்திரிகையில் வந்துள்ள ஒரு செய்தியின் படி, வென்றவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு பகுதியில் அமைந்திருக்கும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் கொன்றவர்களது உடல்களை வீம்புத்தனமாக பகிரங்க காட்சிக்கு வைத்திருந்தனர்.

நேற்று கருணா குழுவினர் கட்டாமூரியிலுள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி குறைந்தபட்சம் 9 விடுதலைப் புலிகளை கொன்றனர். மேலும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர். தனது போராளிகளையும், அதிகாரிகளையும் கொல்வதில் கருணாவிற்கு இராணுவம் உதவி வருவதாக விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்ப குற்றம்சாட்டி வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வளர்ச்சிகண்டுவரும் பதட்ட நிலைமைகளுக்கு மத்தியில், இராணுவத் தலைமை பகிரங்க மோதலுக்கு தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உயர்மட்ட இராணுவத் தளபதிகள், இராணுவ இறுப்பை மதிப்பிட்டதோடு படைகளை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் விவாதித்தனர். இந்த அதிகாரிகள் குழுவில் ஆயுதப்படைகளின் பிரதம அதிகாரி தயா சந்தகிரி மற்றும் இராணுவ தளபதியான ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளின் படி இந்த அதிகாரிகள் குழுவில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்புத்துறை அலுவலரும் இடம் பெற்றிருந்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved