World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party stands in Sri Lankan presidential election

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது

By the Socialist Equality Party (Sri Lanka)
9 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), அதன் பொதுச் செயலாளர் விஜே டயஸ் எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை அறிவிக்கின்றது.

டயஸ், உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் யுத்தத்தையும் ஜனநாயக உரிமைகள் மீதான தக்குதல்களையும் மற்றும் வாழ்க்கைத் தர சீரழிப்பையும் எதிர்க்கும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போட்டியிடுவார். தொழிலாளர்கள், இளைஞர்கள் அதேபோல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளும் எதிர்கொண்டுள்ள சமூக மற்றும் பொருளாதார அழிவுக்கு எதிராக போராடுவதற்கு தேவையான கொள்கைகளை பற்றிய ஒரு கலந்துரையாடலையும் விவாதத்தையும் அபிவிருத்தி செய்வதன் பேரில், அவர்கள் மத்தியில் சாத்தியமானளவு விரிவான பிரச்சாரத்தை சோ.ச.க மேற்கொள்ளும்.

சோ.ச.க வெறுமனே இலங்கையில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் மட்டும் உரையாற்றுவதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை, மாறாக, ஆசிய பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஒரு சோசலிச முன்நோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கேயாகும். இந்தியத் துணைக்கண்டம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளை போலவே, இலங்கை தொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளும் பூகோள மூலதனத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் இருந்து ஊற்றெடுப்பதோடு, அவற்றை இந்த சிறிய தீவுக்குள் அல்லது எந்தவொரு தனி நாட்டுக்குள்ளும் வரையறுப்பதன் மூலம் தீர்க்க முடியாது.

சோ.ச.க வின் முன்நோக்கின் மையமாக இருப்பது அனைத்துலகவாதத்திற்கான போராட்டமாகும். இலங்கையின் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான நண்பர்களை, கொழும்பில் உள்ள அதிகார தாழ்வாரங்களின் கீழ் அன்றி, அதே வகையிலான இரக்கமற்ற சுரண்டல்களை மற்றும் அடுத்தடுத்து அதே கூட்டுத்தாபன கொள்ளையர்களையும் எதிர்கொள்ளும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மத்தியிலேயே தேட வேண்டும். தமது நலன்களுக்காக போராடுவதன் பேரில், ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையான மனிதகுலத்தின் தேவைகளை அடைவதற்காக, அனைத்துலகப் பொருளாதாரத்தின் பிரமாண்டமான உற்பத்தி சக்திகளை சோசலிச பாதையில் மறு ஒழுங்கு செய்யும் ஒரு பூகோள மூலோபாயம் தொழிலாள வர்க்கத்திற்கு தேவை.

அத்தகைய போராட்டமானது, தொழிலாளிக்கு தொழிலாளியை எதிரியாக இருத்தவும் மற்றும் செல்வந்தர்களுக்கும் எதிரி ஆளும் கும்பல்களின் அதிகாரங்களுக்கும் முண்டுகொடுப்பதற்காகவும் தசாப்த காலங்களாக இந்தியத் துணைக்கண்டம் பூராவும் கிளறிவிடப்பட்டுள்ள எல்லா வகையான இனவாதம், வகுப்புவாதம் மற்றும் ஜாதி வேறுபாடுகளையும் நிராகரிப்பதை அவசியமாக்கியுள்ளது. இனவாத விஷம் இலங்கையில் மிகக்கொடூரமான பாத்திரத்தை ஆற்றியுள்ளது. படுகொலைகளுக்கு மேல் படுகொலைகள் மற்றும் 60,000 உயிர்களை பலிகொண்ட, தீவின் பெரும்பகுதி பிரதேசத்தை நாசமாக்கிய மற்றும் ஆயிரக்கணக்கானவர்களை ஊனமுற்றவர்களாக அல்லது வீடு வாசல்களை இழந்தவர்களாக்கிய பேரழிவுகரமான உள்நாட்டு யுத்ததையும் விளைவித்துள்ளது.

ஆளும் வர்க்கத்தின் எல்லா கோஷ்டிகளும் உடன்பிறப்புக்களை கொலை செய்யும் யுத்தத்திற்கு முடிவுகட்ட முற்றிலும் இலாயக்கற்றவை என்பதை ஒப்புவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைமையிலான அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேல் கடந்துள்ள அதே வேளை, சமாதான பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு ஆட்டங்கண்டு போயுள்ள யுத்த நிறுத்தம் முறிவின் விளிம்பில் இருந்துகொண்டுள்ளது. கடந்த மாதம் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டமைக்கு எவர் பொறுப்பாளியாக இருந்தாலும், இந்தப் படுகொலையானது கொழும்பில் யுத்த ஆரவாரங்களையும் மற்றும் யுத்த பிரதேசமான வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவத்தின் ஆத்திரமூட்டல்களையும் உக்கிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ், ஜனாதிபதி பதவியையும் அதன் பரந்த நிறைவேற்று அதிகாரங்களையும் கைப்பற்றுவதற்காக ஆளும் கும்பலின் இரண்டு முகாம்கள் போட்டியிடுகின்றன. இப்போது சமாதானத்தின் ஆதரவாளராக தம்மை முன்நிறுத்திக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியே யுத்தத்தை தொடங்கியதற்கும் மற்றும் அதை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முன்னெடுத்ததற்குமான பொறுப்பாளியாகும். அதன் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 2002ல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது, யுத்தம் சாதாரண மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றிய கவலையினால் அல்ல. மாறாக, "தெற்காசியாவில் ஹொங் கொங்கைப்" போன்று இலங்கையையும் பிராந்தியத்தின் முதலீட்டு நுழைவாயிலாக மாற்றுவதற்கான கூட்டுத்தாபன கும்பல்களின் திட்டங்களுக்கு இந்த மோதல் ஒரு தடையாக உருவெடுத்துள்ளதாலேயே ஆகும்.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய யுத்த நிறுத்தத்தையும் மற்றும் விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவை சேகரித்துக்கொண்டிருக்கின்றார். இந்தக் கட்சிகள், ஐ.தே.க யும் மற்றும் குறிப்பாக ஸ்ரீ.ல.சு.க யும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தங்கியிருந்த அழுக்குப் படிந்த சிங்கள மேலாதிக்கவாத கருத்துப் போக்கை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளன. இராணுவத்தை பலப்படுத்தும் மற்றும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீள் பரிசீலனை செய்யும் அவர்களின் கோரிக்கைகளின் தர்க்கம், தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளும்.

ஆளும் வட்டாரங்களுக்கு இடையிலான மிகக் கசப்பான பிளவுகள், நாட்டின் உயர் நீதிமன்றத்தை தேர்தல் திகதி குறித்து தீர்ப்பளிக்க தள்ளியுள்ளன. திரைக்குப் பின்னால் பீதியையும் இனவாத பதட்டங்களையும் கிளறுவதற்காக, இராணுவத்தின் சில கோஷ்டிகளும் மற்றும் அரச இயந்திரங்களும் சிங்களப் பேரினவாத கருவிகளுடன் உடந்தையாய் இருக்கின்றன. இந்தக் காரணத்திற்காக அவர்கள் கதிர்காமர் கொலையை துல்லியமாக ஒழுங்குசெய்திருக்கலாம். எல்லா பிரதான கட்சிகளதும் சமூக அடித்தளம் கடுமையாக தேய்ந்து போயுள்ளமையால், ஒரு ஸ்திரமான பாராளுமன்ற அரசாங்கம் நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கும் என்பது வெளிப்படையானது. ஆளும் வட்டாரங்களுக்கிடையிலான மனக்கசப்புக்களின் அளவைப் பார்த்தால், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதும், அல்லது நடத்தப்பட்டால், வெற்றிபெற்றவர் அதிகாரத்திற்கு செல்ல முடியும் என்பதும் நிச்சயமற்றவையாகவே உள்ளன.

ஜனத்தொகையில் பெரும்பாலானவர்களுக்கு பயனற்றுப் போயுள்ள இந்த பிரதான கட்சிகளை நிராகரிக்குமாறு சோ.ச.க அழைப்பு விடுக்கின்றது. உழைக்கும் மக்களுக்கு இன்னுமொரு யுத்தத்தின் சுமைகளை தாங்க முடியாத அதேவேளை, ஏகாதிபத்திய சக்திகளின் உந்துதலுடன் தயார் செய்யப்பட்டுவருகின்ற "சமாதானத்தையும்" அவர்களால் தாங்க முடியாது. விடுதலைப் புலிகள் உட்பட பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுடன் தொடர்புபட்ட அனைத்து கட்சிகளும் இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு ஒழுங்கையே புனைந்தியற்றுகின்றன. இது ஜனநாயக உரிமைகளை நசுக்குவதுடன் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை உக்கிரப்படுத்துவதற்கான பரந்த சந்தை சீர்திருத்தத் திட்டத்திற்கு வழி திறந்துவிடும்.

வருடக்கணக்காக யுத்தத்தை புறக்கணித்து வந்த வாஷிங்டனை பொறுத்தளவில், தீவிலான மோதலானது, தெற்காசியாவில், குறிப்பாக அரும்புவிட்டுள்ள தகவல் தொழில்நுட்பட கைத்தொழிலில் அமெரிக்க கூட்டுத்தாபனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ள தென்னிந்தியாவில் அதன் பூகோள அரசியல் நலன்களுக்கு அச்சுறுத்தலாகும் வகையில், ஒரு ஸ்திரமற்ற நிலையை தோற்றுவிக்கும் காரணியாக உள்ளது. "சமாதான முன்னெடுப்புகளின்" மூலம் தனது குறிக்கோள்களை அடைய முடியாத நிலையில், இலங்கையை மீண்டும் யுத்த கிளர்ச்சிக்குள் தள்ள புஷ் நிர்வாகம் தயங்கப் போவதில்லை என்பதையே ஆப்கானிஸ்தானிலும் மற்றும் ஈராக்கிலும் அமெரிக்க இராணுவத்தின் இரக்கமற்ற செயல்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிரான சோசலிச வேலைத் திட்டம்

தமது தலைவிதி எகாதிபத்திய சக்திகளின் கைகளில் விளையாட்டுப் பொருளாக இருப்பதை இலங்கையிலும் மற்றும் தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தால் அனுமதிக்க முடியாது. சோ.ச.க பிரச்சாரத்தின் இலக்கானது பெரும் வல்லரசுகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த எதிர்த்தாக்குதலை ஒழுங்கு செய்வதற்கும் மற்றும் பிராந்தியம் பூராவும், அனைத்துலகிலும் உள்ள உழைக்கும் மக்களின் பொது நலன்களுக்காக போராடுவதற்குமான வழிவகையை வழங்குவதேயாகும்.

அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பும், பூகோள பொருளாதாரம் மற்றும் மூலோபாய மேலாதிக்கத்தை நோக்கிய அதன் திருப்பமும் உலக அரசியலில் மிகவும் வெடிக்கும் காரணியாக உள்ளன. ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகள் உட்பட எமது அனைத்து அரசியல் எதிரிகளும், புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தையும்" ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் மீதான அதன் ஆக்கிரமிப்பையும் அங்கீகரித்துள்ளன. சோ.ச.க மற்றும் அதன் வேட்பாளரது பிரச்சாரம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டு துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றுவதையும் மற்றும் வாஷிங்டனின் யுத்தக் குற்றங்களுக்கு பொருப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதையும் மையமாகக் கொண்டிருக்கும்.

இலங்கையில் யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து பாதுகாப்புப் படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்ற சோ.ச.க கோருகிறது. ஒற்றை ஆட்சியை பலாத்காரமாக பேணிக்காப்பதானது, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான வேறுபாடுகளை ஆழப்படுத்துவதை மட்டுமன்றி, தீவு பூராவும் இராணுவ மேலாதிக்கத்தையும் மற்றும் அடிப்படைபடை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையுமே பெறுபேறாக தந்துள்ளது.

தொழிலாள வர்க்கம் அனைத்து வகையிலுமான அடக்குமுறைகளை எதிர்ப்பதோடு இன, மொழி அல்லது மத பேதமின்றி அனைவரதும் உரிமைகளையும் பாதுகாத்தல் வேண்டும். 20 ஆண்டுகால யுத்தத்திற்கான எந்தவொரு தீர்வும், இனவாதத்தையும் எதேச்சதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அதிகாரங்களையும் அணைத்துக்கொண்டுள்ள இலங்கை அரசியலமைப்பை நிராகரிப்பதை வேண்டிநிற்கின்றது. அனைத்து தனிச்சிறப்பு வாய்ந்த ஜனநாயக உரிமைகள் பற்றிய விவகாரங்களிலும், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கோஷ்டிகளுக்கு மாறாக, சாதாரண உழைக்கும் மக்கள் முடிவு எடுக்க வழிவகுக்கும் வகையில், உண்மையான பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசியல் நிர்ணய சட்டசபையை ஸ்தாபிப்பதை சோ.ச.க பரிந்துரைக்கின்றது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதானது சமூக சமத்துவதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து முதலாளித்துவ கட்சிகளும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பொருளாதார விதிமுறைகளும் மற்றும் சந்தை சக்திகளின் வரையறுக்கப்படாத நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு முடிவு கட்டும் என்ற கட்டுக்கதையை கூவித் திரிகின்றன. இந்த வேலைத் திட்டம், வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு பதிலாக, செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வை அகலப்படுத்தியுள்ளதோடு, சமூக சேவைகளிலான வெட்டு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பில் மேலும் சீரழிவையுமே முன்வைத்துள்ளது.

உழைக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவதில் இலாப அமைப்பு இலாயக்கற்றுப் போயுள்ளமையானது, டிசம்பர் 26 ஆசிய சுனாமியின் தாக்கத்திலும் மற்றும் அமெரிக்காவில் கத்தரினா சூறாவலியில் ஏற்படுத்தப்பட்ட பேரழிவிலும் தெளிவாக அம்பலத்திற்கு வந்துள்ளது. "சுதந்திர சந்தையின்" நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான மக்களை இயற்கை அழிவுகளுக்கு பலிகடாவாக்கியுள்ளது. இந்த இரு சம்பவங்களிலும், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பிரதிபலிப்புகள், குறிப்பாக இலங்கை ஜனாதிபதி குமாரதுங்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பிரதிபலிப்புகள் அலட்சியத்தையே வெளிக்காட்டியதோடு பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட கடுமையான அவலங்களை அவமதிப்பதாகவே இருந்தது. சுனாமி தாக்கி எட்டு மாதங்கள் கடந்த பின்னரும் மீள் கட்டுமான வேலைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படாததோடு ஆயிரக்கணக்கானவர்கள் அடிப்படை வசதிகளின்றி பயங்கரமான நிலைமைகளின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சுனாமி 300,000 மக்களை பலிகொண்டதோடு வங்காள விரிகுடாவின் கரையோரப் பிரதேசங்களை பெரும் அழிவுக்குள்ளாக்கியது.

தென் அமெரிக்காவை போல் தெற்காசியாவிலும் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் வறியவர்களாகும். அவர்களது வாழ்க்கை அடியோடு அழிக்கப்பட்டமையானது, அத்தகைய பரந்தளவிலான அழிவை தவிர்க்குமளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்காதது காரணமல்ல. மாறாக, சமுதாயத்தின் வளங்களில் தனியார் இலாபத்திற்காக ஒரு சில செல்வந்தர்கள் ஏகபோக உரிமை கொண்டிருப்பதாலேயே ஆகும். பட்டினி, நோய் மற்றும் இல்லாமை போன்ற சமூகத் தீமைகளுக்கு முடிவுகட்ட கூடிய வகையில் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் பிரமாண்டமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்படும் பிரமாண்டமான செல்வம், கூட்டுத்தாபனங்களின் இலாபங்களை பெருக்கச் செய்வதற்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் நெருக்கும் சமூகத் தேவைகளை அடையப் பயன்படுத்தப்படல் வேண்டும் என சோ.ச.க வலியுறுத்துகிறது. சமுதாயத்தின் சோசலிச மீள் ஒழுங்கமைப்புக்கான போராட்டமானது உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெரும் கைத்தொழில் நிறுவனங்களையும் வங்கிகளையும் தேசியமயமாக்குவது உட்பட, தற்போதைய தனியார் செல்வம் மற்றும் சொத்துக்களின் அரண்களுக்குள் ஆழமாக ஊடுருவுவதை அவசியமாக்கும்.

சோ.ச.க, சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிச ஐக்கிய குடியரசுகளை ஸ்தாபிக்கப் போராடுகின்றது. உழைக்கும் மக்கள், முன்நாள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் உள்ளூர் முதலாளித்துவ கும்பல்களுக்கும் இடையிலான இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரான பிற்போக்கு உடன்படிக்கையின் கொடூரமான விளைவுகளை இன்னமும் எதிர்கொள்கின்றனர். இலங்கையில் ஒரு செயற்கை அரசை உருவாக்கியது உட்பட இந்தியத் துணைக்கண்டத்தை இனரீதியில் பிரித்ததும் இதுவேயாகும். முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான பூகோள போராட்டத்தின் பாகமாக, பிராந்தியம் பூராவும் பாட்டாளிகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் ஐக்கியப்படுத்தும் மற்றும் அணிதிரட்டும் வழிமுறையாக, தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசு என்ற சுலோகத்தை சோ.ச.க அபிவிருத்தி செய்கின்றது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம், இலாப அமைப்புக்கு எதிரான ஒரு தாக்குதலுக்கு அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும். அதனது போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம், அனைவரதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் வறுமை, இல்லாமைக்கு முடிவுகட்டுவதற்கு தனது சொந்த சோசலிச தீர்வை அபிவிருத்தி செய்வதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட நகர்ப்புற வெகுஜனங்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களை ஈர்க்கும் துருவமாக உருவாக முடியும். அத்துடன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும் 'தொழிலாளர் விவசாயிகள்' அரசாங்கத்தை அமைக்கவும் ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை முன்னெடுக்கவும் முடியும்.

தமது நலன்களுக்காக போராட ஒரு வெகுஜனக் கட்சி தொழிலாளர்களுக்கு தேவை. லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க), கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் போன்ற இலங்கை தொழிலாள வர்க்கத்தின் பழைய அமைப்புக்கள், தொழிலாளர்களின் மிக அடிப்படையான உரிமைகளை கூட பாதுகாக்க இலாயக்கற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ல.ச.ச.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும், முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க வின் அரசியல் துணைகளே அன்றி வேறு ஒன்றுமல்ல.

உழைக்கும் வர்க்கத்தின் வரலாற்று நலன்களை இடைவிடாது பாதுகாக்கும் ஒரே கட்சி சோ.ச.க மட்டுமேயாகும். அதனது வேட்பாளர் விஜே டயஸ், சோசலிச அனைத்துலகவாத அடிப்படைகளுக்கான நான்கு தசாப்தத்திற்கும் மேலான சளைக்காத போராட்டத்தின் மாசற்ற சாதனையாளராவார். அவர், சோ.ச.க வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க) ஸ்தாபக உறுப்பினராவார். லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்து கொண்டதன் மூலம் ட்ரொட்ஸ்கிஸத்தை காட்டிக்கொடுத்ததற்கு எதிராக 1968ல் பு.க.க ஸ்தாபிக்கப்பட்டது. இனவாத ஆபத்து பற்றி பு.க.க மீண்டும் மீண்டும் விடுத்த எச்சரிக்கை, 1983ல் கொடூரமான உள்நாட்டு யுத்தம் வெடித்ததில் நிரூபிக்கப்பட்டது. 1987ல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கீர்த்தி பாலசூரிய அகால மரணமடைந்ததை அடுத்து டயஸ் பு.க.க வின் பொதுச் செயலாளர் ஆனார்.

எதிர்வரும் காலத்தில் எமது வேலைத் திட்டம் மற்றும் கொள்கைகள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை சோ.ச.க வெளியிடும். நாம் இலங்கை, ஆசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களை எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும் பங்குபெறுமாறும் அழைக்கின்றோம். ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் வெளிவரவுள்ள எமது விஞ்ஞாபனத்தை விநியோகிக்க உதவுமாறும், எமது பொதுக் கூட்டங்களில் பங்குபெற திட்டங்களை வகுக்குமாறும், சே.ச.க பேச்சாளர்கள் உரையாற்றுவதற்காக உங்களது வேலைத் தளங்களில் அல்லது உள்ளூர் பிரதேசங்களில் கூட்டங்களை ஒழுங்கு செய்யுமாறும், எமது தேர்தல் நிதிக்கு உதவுமாறும், எல்லாவற்றுக்கும் மேலாக, எமது வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் கவனமாக வாசிப்பதோடு சோ.ச.க வில் இணைய விண்ணப்பிக்குமாறும் வேண்டுகிறோம்.

Top of page