WSWS :Tamil
:
வரலாறு
Lecture one: The Russian Revolution and the unresolved historical
problems of the 20th century
முதலாம் விரிவுரை: ரஷ்ய புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்
பகுதி 1 | பகுதி 2
| பகுதி 3 |
பகுதி 4
By David North
1 September 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
இது "ரஷ்ய புரட்சியும், 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்"
என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன், அன் ஆர்பரில், அமெரிக்க
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில் ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட்
20, 2005 வரை நிகழ்த்திய முதலாவது விரிவுரையின் இறுதியும் நான்காம் பகுதியாகும். முதல் பகுதி (தமிழில்)
செப்டம்பர் 2ம், இரண்டாம் பகுதி செப்டம்பர் 5ம், மூன்றாம் பகுதி செப்டம்பர்9 2005 அன்றும் வெளியிடப்பட்டது.
அடுத்த வார ஆரம்பத்திலிருந்து மூன்று தவணைகளாக பள்ளியில் டேவிட் நோர்த்
ஆற்றிய இரண்டாம் விரிவுரையின் மூன்று பகுதிகள், "இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திரித்தல்வாதத்திற்கு எதிராக
மார்க்சிசம்" என்ற தலைப்பில் தொடர்ந்து தமிழில் வெளியாகும்.
மார்க்சிசம் தோல்வியடைந்து விட்டதா?
சோவியத் ஒன்றியம் சிதைந்தது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பெருந்தோல்விதான்
என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒருபோதும் மறுக்க முயன்றதில்லை. ஆனால் பல தசாப்தங்கள்
ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்களின் உற்பத்தியான, அந்த நிகழ்வினால் மார்க்சிச வழிமுறையோ அல்லது சோசலிச
முன்னோக்கோ பயனற்றதாகிவிடவில்லை. பிந்தையதோ அல்லது முந்தையதோ எவ்விதத்திலும் சோவியத் ஒன்றியத்தின்
பொறிவில் தொடர்புபடுத்தப்பட முடியாதவையாகும். ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு மார்க்சிச எதிர்ப்பு 1923ம்
ஆண்டிலேயே இடது எதிர்ப்பு அமைக்கப்பட்ட வகையில் வெளிப்பட்டது. நான்காம் அகிலத்தை நிறுவவேண்டும் என்ற
ட்ரொட்ஸ்கியின் முடிவும், சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே ஓர் அரசியல் புரட்சிக்காக அவர் விடுத்த அழைப்பும்,
அக்டோபர் புரட்சியின் சமூகவெற்றிகள் காக்கப்படவேண்டும், ஒரு தொழிலாளர் அரசு என்ற முறையில் சோவியத்
ஒன்றியம் உயிர்தப்பி இருப்பதே அதிகாரத்துவத்தை பலாத்காரமாய் தூக்கிவீசுவதை பொறுத்துத்தான் உள்ளது, என்ற
அவருடைய முடிவை அடிப்படையாக கொண்டிருந்தவையாகும்.
ஏர்னஸ்ட் மண்டேல் மற்றும் மிசேல் பப்லோ இருவரும் ஸ்ராலினின் மரணத்திற்கு பின்
சோவியத் அதிகாரத்துவம் அரசியல் சுய சீர்திருத்த மாற்றுப்போக்கில் உள்ளது என்றும், படிப்படியே மீண்டும்
மார்க்சிச மற்றும் போல்ஷிவிக் கோட்பாடுகளுக்கு திரும்பிவிடும் என்று வாதிட்ட போக்கை எதிர்த்து நான்காம்
அகிலத்திற்குள்ளே நடந்த போராட்டத்திலேயே 1953ம் ஆண்டு, அனைத்துலக்குழு தோன்றியது. அவ்விருவருடைய
கருத்துக்கள் ஓர் அரசியல் புரட்சிக்காக ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பை பயனற்றதாக்கின.
மார்க்சிச வழிமுறையின் அடிப்படையில் ஸ்ராலினிசம் பற்றி அபிவிருத்தி செய்த ஆய்வின்
அரசியல் நுண்ணறிவுக்கு, நான்காம் அகிலம் மற்றும் அனைத்துலகக் குழுவின் முழு வரலாறும் சான்றாக திகழ்கிறது.
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புக்களினாலும், குற்றங்களினாலும் மார்க்சிசம் எவ்வாறு தவறென்று
மறுக்கப்பட்டிருக்கிறது, எப்படி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி எவரும் நமக்கு விளக்கிக்காட்டவில்லை. இடது
கல்வியாளர் குழாத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நமக்குக் கூறுவதாவது: "ஒரு அரசியல் சக்தி என்ற வகையில்
ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிசத்தின் பொறிவும் ஒரு சமுதாய வடிவமைப்பு என்ற முறையில் அரசு சோசலிசத்தின்
பொறிவும் மார்க்சிசத்தின் அறிவுஜீவி நம்பகத்தன்மையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று எவரேனும்
வாதிட்டால், இஸ்ரேலிய இடுகாட்டில் ஏசுவின் எலும்புகள் கண்டிபிடிக்கப்படல், போப் பதவியைத் துறத்தல்,
கிறிஸ்துவ உலகத்தை மூடல் ஆகியவை கிறிஸ்துவ இறையியலோடு அறிஜீவி கூட்டுப்பொருத்தத்தை கொண்டிருக்கவில்லை
என வாதிடுவது போலவே இருக்கும்."[28]
இத்தகைய உருவக அணி இழிவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது; ஸ்ராலினிசத்தின் மார்க்சிச
எதிர்ப்பாளர்களான ட்ரொட்ஸ்கிஸ்டுகளை பொறுத்த அளவில், கிரெம்ளினை ஒன்றும் சோசலிச இயக்கத்தின் வத்திகனாக
கருதவில்லை. என்னுடைய நினைவாற்றல் சரியென்றால், நான்காம் அகிலத்தால் ஸ்ராலினின் பிழைவிடாத்தன்மை எனும்
கொள்கை ஒருபொழுதும் கடைப்பிடிக்கப்பட்டதே கிடையாது; ஆனால் இத்தகைய நிலைப்பாடு ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு
எதிரான பல இடது குட்டி முதலாளித்துவ மற்றும் தீவிரப்போக்கினரான எதிர்ப்பாளர்களாலும் அப்படி கூறப்பட்டது
இல்லை.
ஐயுறவாதிகளை திருப்திப்படுத்துதல் என்பது மிகவும் கடினம். ஸ்ராலினிச குற்றங்களுக்கு
மார்க்சிசத்தை பொறுப்புக் கூற முடியாது என்று வைத்துக் கொண்டாலும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு புரட்சிகரமான
சோசலிச செயற்திட்டத்தின் தோல்வி என்பதை நிரூபிக்கவில்லையா என்று அவர்கள் கேட்கிறார்கள். இந்த வினா
1) ஒரு பரந்த வரலாற்றுக் கண்ணோட்டம், 2) சோவியத் சமுதாயத்தின் முரண்பாடுகள், சாதனைகள் பற்றிய
அறிவு, மற்றும் 3) ரஷ்ய புரட்சி கட்டவிழ்ந்த சர்வதேச அரசியல் உள்ளடக்கம் பற்றிய தத்துவார்த்த ரீதியில்
நன்கு அறியப்பட்டு உணரப்படல் ஆகியவற்றின் இல்லாமையை நன்கு காட்டுகிறது.
முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு உருமாறுவதில் ரஷ்ய புரட்சியே ஒரு நிகழ்வுதான்.
இத்தகைய பரந்த வரலாற்று வழிவகையை பற்றி ஆராய்வதற்கு தேவைப்படும் கால அளவை பற்றி எத்தகைய
முன்னோடி நிகழ்ச்சிகள் நமக்கு தக்க முறையில் சுட்டிக்காட்டக் கூடும்? விவசாய-நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில்
இருந்து தொழில்முறை-முதலாளித்துவ சமுதாயமாக மாறுவதற்காக நிகழ்ந்த சமூக அரசியல் கொந்தளிப்புக்கள் பல
நூற்றாண்டுகாலம் நீடித்திருந்தன. மிக அசாதாரணமான முறையில், பொருளாதார, தொழில்நுட்ப சமூக
உட்தொடர்புகள் பெருகியுள்ள வகையில் தற்கால உலகின் இயக்கம் இருக்கும் நிலையில் அத்தகைய நீடித்த கால
அளவு முதலாளித்துவ முறையில் இருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கு தேவைப்படாது; ஆனால், மிக அடிப்படையான,
சிக்கல் வாய்ந்த, தொலைவிளைவுகளை கொடுக்கும் சமூக பொருளாதார உருமாற்றங்கள் சம்பந்தப்பட்டுள்ள வரலாற்று
மாற்றுப்போக்குகளை பற்றிய பகுப்பாய்விற்கு கூடுதலான மரபொழுங்கு சார்ந்த நிகழ்வுகளைப் பற்றி ஆராய்வதற்கான
செயல்முறைக்கும் சற்றே கூடுதலான கால அளவு தேவைப்படும்.
ஆயினும்கூட சோவியத்தின் ஆயுட்காலம் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. 1917ம்
ஆண்டு போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றியபோது, ரஷ்யாவிற்கு வெளியே இருந்த பார்வையாளர்களில் சிலர்
கூட இப் புது ஆட்சி ஒரு மாதம்கூட பிழைத்திருக்காது என்றே நம்பினர். ஆனால் அக்டோபர் புரட்சியில் இருந்து
தோன்றிய அரசு 74 ஆண்டுகள், கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு நீடித்தது. அக்காலக்கட்டத்தில், ஆட்சியானது
மிக மோசமான வகையில் அரசியல் சீரழிவை கண்டது. ஆனால் டிசம்பர் 1991ல் கொர்பச்சேவ் மற்றும்
யெல்ட்சின் தலைமையில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவில் உச்சக்கட்டத்தை அடைந்த அந்த சீரழிவு, அக்டோபர்
1917ல், லெனினாலும் ட்ரொட்ஸ்கியாலும் வென்று கைப்பற்றப்பட்ட ஆட்சியதிகாரமானது, அழிந்துபோகும் மற்றும்
வீணான செயற்திட்டம் என்று பொருளாகிவிடாது.
அவசியமான இடைநின்று இணைவித்த நிகழ்ச்சிப்போக்குகள் இல்லாமல் போல்ஷிவிக்
அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து சோவியத் வரலாற்றின் இறுதி அத்தியாயத்தை நேரடியாக உய்த்தறிந்து கொள்ளுதல்
என்பது (Post hoc ergo propter hoc
-இதன் பின்னர் எனவே இதனால் என)
தர்க்கரீதியான குதர்க்கம் ஆகும். ஒரு புறநிலையான மற்றும் நேர்மையான
ஆய்வு நிகழ்வுகள் பற்றிய வெவ்வேறான பாடபேதங்களை எளிதில் ஒன்றாய் இணைக்க அனுமதிக்காது. சோவியத்
வரலாற்றின் விளைவு ஒன்றும் முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்டது அல்ல. இந்த வாரத்தில் நாம் விவரிக்க இருப்பது
போல் சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சி வேறுவிதமான, மிகக் குறைந்த துன்பியலான திசையிலும் சென்றிருக்க
முடியும். ரஷ்யாவின் பின்தங்கிய நிலைமை, தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர் அரசை ஏகாதிபத்திய சக்திகள் சுற்றி
வளைத்த உண்மை ஆகியவற்றின் வரலாற்று மரபுவழி எழுந்த புறநிலை அழுத்தங்கள் சோவியத் ஆட்சியின் சீரழிவில் மகத்தான
பங்கைக் கொண்டிருந்தபோதிலும்கூட, அகநிலைத் தன்மை கொண்ட காரணிகளும், அதாவது அரசியல் தலைமையின் குற்றங்களும்
தவறுகளும் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பெரும் பங்களிப்புச்செய்தன.
ஆயினும், 1991ல் சோவியத் யூனியன் இல்லாமற் போனமை, ரஷ்ய புரட்சி,
அதன்பின் நிகழ்வுகள் என்ற பெரிய நாடகத்தை வரலாற்று முக்கியத்துவமற்ற தன்மையாக கரைத்துவிடவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய நிகழ்வாகத்தான் அது நிச்சயமாக இருந்தது, உலக வரலாற்றிலும் மிகப்
பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் அது இருந்தது. ஸ்ராலினிசத்திடம் நமக்கு உள்ள எதிர்ப்பு ஒன்றும் சோவியத்
ஒன்றியத்தின் மகத்தான சமூக சாதனைகளை ஏற்றுக் கொள்ளுவதால் குறைந்துவிடவில்லை. அதிகாரத்துவ ஆட்சியின்
தவறான நிர்வாகம், குற்றங்கள் ஆகியவை இருந்தபோதிலும்கூட, அக்டோபர் புரட்சி அசாதாரணமான முறையில்
படைப்பாற்றல் மற்றும் ஆழ்ந்த முன்னேற்றப் போக்குகளை சோவியத் மக்களின் பொருளாதார, சமுதாய வாழ்வில்
வெளிக்கொண்டுவந்தது.
பரந்த மற்றும் பின்தங்கியிருந்த ரஷ்யா, புரட்சியின் விளைவாக மனித வரலாற்றில்
முன்னோடியில்லாத வகையில் ஒரு பொருளாதார, சமூக, பண்பாட்டு மாற்றத்தைக் கண்டது. சோவியத் ஒன்றியம்
ஒரு சோசலிச சமுதாயமாக இல்லாதிருந்தது என்பதை நாம் வலியுறுத்தினோம். திட்டமிடலின் தரம் மிகவும்
வளர்ச்சியுறாத்தன்மையில்தான் இருந்தது. ஸ்ராலின் மற்றும் புகாரினால் முன்முயற்சிக்கப்பட்ட தளியொரு நாட்டில்
சோசலிசம் என்ற செயற்திட்டம் --மார்க்சிச தத்துவத்தில் இதற்கு அடிப்படை இல்லை--- அக்டோபர் புரட்சிக்கு
ஊக்கம் தந்திருந்த சர்வதேச முன்னோக்கை முற்றிலும் நிராகரித்தலை பிரதிநிதித்துவம் செய்தது.
ஆயினும்கூட, சோவியத் ஒன்றியம் தொழிலாள வர்க்கப் புரட்சியின்
அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு புதிய சமூக அமைப்பின் பிறப்பை பிரதிநிதித்துவம் செய்தது. தேசிய மயமாக்கப்பட்ட
தொழில்துறையின் திறன் நன்கு நிரூபணமாயிற்று. சோவியத் ஒன்றியம், ரஷ்யாயின் பின்தங்கியிருந்த நிலையின் மரபுவழி
விட்டுச்சென்றதில் இருந்து தப்பியிருக்கவில்லை, அதன் மத்திய ஆசியக் குடியரசுகளை கூறவேதேவையில்லை - மாறாக
அது அறிவியல், கல்வி, சமூக நலம் மற்றும் கலை ஆகிய செயற்களங்களில் அடைந்திருந்த முன்னேற்றங்கள் உண்மையானவையாகவும்,
கணிசமானவையாகவும் விளங்கின. ஸ்ராலினிச ஆட்சியின் பேரழிவு விளைவுகளை பற்றிய மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச எச்சரிக்கை
பயனற்றது என்று ஸ்ராலினிச ஆட்சியை குறைகூறிய இடதுகளுக்குக்கூட இருந்ததின் காரணம் சோவியத் சமூகத்தின்
சாதனைகள் மிகக் கணிசமாக இருந்ததுதான்.
இறுதியாக, ஆனால் மிக முக்கியமாக, அக்டோபர் புரட்சியின் தன்மையையும்
முக்கியத்துவத்தையும், அது எழுச்சியுற்ற உலக அரசியல் உள்ளடக்கத்தில் நிலைநிறுத்திப் பார்த்தால்தான்
புரிந்துகொள்ள முடியும். அக்டோபர் புரட்சி ஏதேனும் ஒரு வகையில் ஒரு வரலாற்றுச் சிதைவு என்றால்,
இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் அவ்வாறுதான் கூற முடியும். போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றியது
அடிப்படையில் ஒரு சந்தர்ப்பவாதத் தன்மையைக் கொண்டிருந்தது, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்து
ஐரோப்பிய, சர்வதேச முதலாளித்துவத்தின் முரண்பாடுகளின் ஆழ்ந்த நீரோட்டத்தில் அதற்கு ஒரு கணிசமான
அடிப்படை கிடையாது என்று உண்மைபோல் வாதிடமுடியுமென்றால்தான், அக்டோபர் புரட்சிக்கான முறையான
தன்மையும் மறுக்கப்பட முடியும்.
ஆனால் இக்கூற்று ரஷ்யப் புரட்சி மற்றும் போல்ஷிவிக்குகள் அதிகராத்தைக் கைப்பற்றியதின்
வரலாற்றுப் பின்னணி முதலாம் உலகப் போர் என்ற உண்மையால் கீழறுக்கப்படும். போர் ஜாரிச ஆட்சியை
பலவீனப்படுத்தி புரட்சிக்கான சூழ்நிலையை தோற்றுவித்தது என்ற உணர்வில் மட்டும் அல்லாமல், இந்த இரண்டு நிகழ்வுகளும்
தவிர்க்கமுடியாமல் பிணைந்துள்ளன. இன்னும் ஆழ்ந்த மட்டத்தில், அக்டோபர் புரட்சியானது போர் தோன்றியிருந்த
சர்வதேச முதலாளித்துவ ஒழுங்கின் பெரும் நெருக்கடியின் மாறுபட்ட வெளிப்பாடு ஆகும்.
உலக ஏகாதிபத்தியத்தின் எரிந்து கொண்டிருந்த முரண்பாடுகள்
சர்வதேச பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய-அரசு முறைக்கும் இடையே ஆகஸ்ட் 1914ல் ஒரு
வெடிக்கும் புள்ளியில் மோதலை ஏற்படுத்தியது. இதே முரண்பாடுகள்தான், போரில் முன்னணியில் பெரும் குருதிவெள்ளத்தால்
தீர்வு காணப்படமுடியாத முரண்பாடுகள்தான், ரஷ்ய புரட்சியின் சமூக வெடிப்பின் அடித்தளத்திலும் இருந்தன. ஐரோப்பாவின்
முதலாளித்துவ தலைவர்கள் உலக முதலாளித்துவத்தின் பெரும் குழப்பத்தை தீர்க்க ஒரு விதத்தில் முற்பட்டனர். புரட்சிகர
தொழிலாள வர்க்கத்தின் தலைவர்களான போல்ஷிவிக்குகள், இதே குழுப்பத்திலிருந்து மீள்வதற்கு வேறுவிதத்தில் ஒரு
வழியைக்காண முயன்றனர்.
உலகப் போருக்கும் ரஷ்ய புரட்சிக்கும் இடையே உள்ள இந்த ஆழ்ந்த தொடர்பின்
வரலாற்று மற்றும் அரசியல் உட்குறிப்புக்களை அறிந்து கொண்ட அளவில், முதலாளித்துவ கல்வியாளர்கள் முதல்
உலகப்போரின் தற்செயல் மற்றும் எதிர்பாராது நிகழ்கின்ற அம்சங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 1914ல் போர்
மூண்டிருக்க வேண்டாம் என்றும், சரஜீவோவில் நிகழ்ந்த ஆர்ச்டூக் பிரான்ஸ் பெர்டினான்ட் இன் படுகொலையால்
ஏற்பட்ட நெருக்கடி, வேறுவிதத்தில் தீர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இத்தகைய வாதங்களுக்கு
எதிராக இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
முதலாவதாக, மற்றைய தீர்வுவகைகள் கருத்திற்கொள்ளப்படலாம் என்றாலும்கூட,
போர் என்ற முடிவு ஆஸ்ட்ரோ-ஹங்கேரி, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பெரிய பிரித்தானிய
அரசாங்கங்களால் முழு நனவுடன், வேண்டும் என்றே எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த சக்திகள் அனைத்துமே
போரை விரும்பின என்று பொருள் இல்லை; ஆனால் அவை அனைத்துமே இறுதியில் ஏதேனும் மூலோபாய நலன்களை
விட்டுக்கொடுப்பதை தேவையாகக் கொண்டிருக்கக்கூடும் பேச்சுவார்த்தைகள் மூலம் காணப்படும் உடன்பாடுகளுக்கு
பதிலாக போரை பயன்படுத்தப்படலாம் என்று நினைத்தன. முதலாளித்துவ ஐரோப்பாவின் தலைவர்கள் மனித
உயிர்களின் இழப்பு மில்லியன்கணக்கில் குவிகையிலும் போரைத் தொடர்ந்தனர். முதலில் ரஷ்யாவிலும், பின்னர்
ஜேர்மனியிலும் சமூகப் புரட்சி வெடிக்கும் வரையில், போரில் ஈடுபட்ட அரசுகளுக்கிடையே அமைதியை மீட்பதற்கு
தீவிரமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவில்லை; அப் புரட்சி வர்க்க உறவுகளில் ஏற்படுத்திய மாற்றம்
போரை பலவந்தமாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.
ஒரு பேரழிவுதரும் உலகப் போரின் வெடிப்பு நீண்ட நாட்களாகவே தொழிலாள
வர்க்கத்தின் சோசலிச தலைவர்களால் எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்பது இரண்டாவது புள்ளி ஆகும். 1880
களிலேயே ஏங்கல்ஸ் தொழிற் துறையில் வளர்ந்துள்ள முதலாளித்துவ சக்திகளுக்கு இடையே ஒரு போர் மூளும் என்றும்
அது ஐரோப்பாவின் பெரும்பகுதியை நாசத்திற்குட்படுத்திவிடும் என்றும் எச்சரித்திருந்தார். ஜனவரி 1888ல்
அடோல்ப் சோர்ஜ்க்கு அவர் எழுதிய கடிதத்தில், ஒரு போர் என்பது "முப்பது ஆண்டுகள் போரில் ஏற்பட்டது
போன்ற பெரும் அழிவைத் தரும்; மிகப் பெரிய இராணுவ சக்திகள் ஈடுபட்டாலும், அது விரைவில்
முடிவடையாது... உள்நாட்டுக் குழப்பம் இல்லாமல் போர் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படுமானால் கடந்த 200
ஆண்டுகள் ஐரோப்பா காணாத அளவிற்கு இருக்கும்." என்று எழுதியிருந்தார்.[29]
ஓராண்டு கடந்த பின்னர், மார்ச் 1889ல் எங்கல்ஸ்
Lafargue க்கு,
"பெரும் துயரங்களில் போர் ஒன்றாகும்... 10ல் இருந்து 15 மில்லியன் படைவீரர்கள் ஈடுபடுவர், அவர்களுக்கு
உணவு அளிப்பதற்கு ஈடு இணையற்ற பேரழிவு இருக்கும், நம்முடைய இயக்கத்தை எல்லாவிடத்திலும் கட்டாயமாக
அடக்குவர், அனைத்து நாடுகளிலும் பிற நாட்டு பழிப்புவாதம் திரும்பவும் வெளிப்படும், இறுதியில், பலவீனம் 1815
காலக்கட்டத்தில் இருந்ததை விட பத்து மடங்கு மோசமாக இருக்கும், இரத்தம் வெளிறிப் போய்விட்டதால்
அனைத்து மக்களின் வெறுமையின் அடிப்படையிலான பிற்போக்கு காலகட்டம், இதையும் தவிர போர் ஒரு புரட்சிக்கு
வகைசெய்யும் என்பதும் குறைந்த நம்பிக்கையைத்தான் கொடுக்கும்; அது எனக்கு பீதியை ஏற்படுத்துகின்றது" என்று
எழுதினார். [30]
இதற்கு அடுத்த 25 ஆண்டுகளில் ஐரோப்பிய சோசலிச இயக்கம் அரசியல்
ஆர்ப்பாட்டத்தின் மையத்தானமாக முதலாளித்துவ, ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டத்தை
முன்வைத்தது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், இராணுவவாதம் இவற்றிற்கிடையே இருக்கும்
இன்றியமையாத தொடர்பு பற்றிய ஆய்வு சோசலிச இயக்கத்தின்
தலையாய தத்துவார்த்த வாதிகளால் மேற்கொள்ளப்பட்டது; ஒரு ஏகாதிபத்திய போர் தவிர்க்கமுடியாமல்
வந்துவிடும் என்ற கணக்கிலடங்கா எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன; இவை அனைத்தும் 1914 ஆகஸ்ட் நிகழ்வுகள்
தற்செயலானவை, ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்த உலக முதலாளித்துவ ஒழுங்குடன் தொடர்பற்றவை என்ற கூற்றை
தவிர்க்கவியலாத வகையில் மறுக்கின்றன.
மார்ச் 1913ல், உலகப்போர் வெடிப்பதற்கு 18 மாதகாலத்திற்கும் குறைவான
காலத்திலேயே, கீழ்க்கண்ட பகுப்பாய்வு பால்கன்களில் இருந்த நெருக்கடியின் உட்குறிப்புக்கள் பற்றி கூறியது:
"...பால்கன்களில் இருந்த பழைய எல்லைகளை மட்டும் பால்கன் போர் அழித்துவிடவில்லை;
வெள்ளையர்களின் காழ்ப்புணர்வை பெருக்கியது மட்டுமில்லாமல், பால்கன் அரசுகளிடையே ஒன்றுக்கொன்று
கொண்டிருந்த வெறுப்புணர்வு, பொறாமை இவற்றை மட்டும் வளர்த்துவிடவில்லை, அது ஐரோப்பிய முதலாளித்துவ
அரசுகளிடையே நிலவி வந்திருந்த வல்லமை சமநிலையையும் முற்றிலும் தொந்தரவுக்காளாக்கியது.
"ஏற்கனவே பெரிதும் நிலையற்றிருந்த ஐரோப்பிய சமநிலை இப்பொழுது முற்றிலும்
நிலைகுலைந்துவிட்டது. ஐரோப்பாவின் கதியை நிர்ணயிக்கும் பொறுப்புக் கொண்டவர்கள் இப்பொழுது விஷயங்களை
எல்லைக்கு கொண்டுசென்று, ஒரு ஐரோப்பிய போரை தொடக்காமல் இருப்பர் எனக் கூறுவது
கடினமாகும்."[31]
இவ்வரிகளை எழுதியது லியோன் ட்ரொட்ஸ்கியாகும்.
முதல் உலகப்போரின் தற்செயலான மற்றும் உறுதியாக கொள்ளவியலாத்தன்மை என்று
கூறப்படும் தன்மைபற்றி, முதலாளித்துவத்தின் கல்வியாளர் வக்காலத்துவாங்குபவர்கள், இருபதாம் நூற்றாண்டு
முதலாளித்துவ வரலாற்றின் ஒவ்வொரு மற்ற மனக்கசப்பான நிகழ்விற்கும் பெருமந்த நிலை, பாசிசத்தின் எழுச்சி,
இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு ஆகியவற்றுக்கு தற்செயல் இணைவு பொருத்தத்தன்மையை ஊகிக்கின்றனர்.
அவர்களை பொறுத்தவரையில் இவை அனைத்தும் பிழையான கருத்தாய்வுகளை ஒட்டி அமைந்தவை, முன்கூட்டி
அறியமுடியாத விபத்துக்கள், மற்றும் பல தீய மனிதர்களின் செயல்பாடுகள் என்ற கருத்தாகும். பிரெஞ்சு
வரலாற்றாளர் மறைந்த Francois Furet
கூறுவதாவது: "நம்முடைய காலத்தை பற்றி உண்மையான புரிந்து கொள்ளுதல் என்பது தேவை என்ற
பொய்த்தோற்றத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொண்டால்தான் முடியும்; ஓரளவு விளக்கமேனும் காணமுடியும்
என்றால், இருபதாம் நூற்றாண்டை விளக்குவதற்கு ஒரே வழி, அதன் முன்கணித்துக் கூறமுடியாத தன்மையை மீண்டும்
வற்புறுத்திக்கூறுவதாகும்..." அவர் மேலும் அறிவிப்பதாவது: "18, 19ம் நூற்றாண்டுகள் போலவே இருபதாம்
நூற்றாண்டு வரலாறும் வேறுவிதமான போக்கை கொண்டிருக்கக்கூடும்: ஆனால் லெனின், ஹிட்லர், ஸ்ராலின்
போன்றவர்கள் இல்லாமல் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும்."
[32]
இதேபோன்றுதான், யேல் பல்கலைக்கழக்கத்தை சேர்ந்த பேராசிரியர்
Henry Ashby Turner
ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததற்கு பெரிதளவும் தற்செயல் நிகழ்வுகளே காரணம் என நிலைநிறுத்த ஒரு புத்தகத்தை
எழுதியுள்ளார். ஆம், ஜேர்மனிய வரலாற்றில் சில நீண்ட காலப் பிரச்சினைகள் இருந்தன; சில துரதிருஷ்டமான
நிகழ்வுகள் உலகப் போர், வேர்சைல்ஸ் சமாதான உடன்படிக்கை, உலக மந்தம் போன்ற நிகழ்வுகளும் இருந்தன.
ஆனால், மிகவும் முக்கியமாக, "மிகவும் நம்பமுடியாத தற்செயல்நிகழ்வுகளான, அதிருஷ்டம் என்பது ஹிட்லரின்
பக்கம் இருந்தது" [33] "இவற்றைத் தவிர சில தனிப்பட்ட தொடர்புகளும், வெறுப்புக்களும் இருந்ததோடு,
காயப்பட்ட உணர்வுகள், தழும்புற்ற நட்புகள், பழிவாங்க வேண்டும்" என்ற விருப்பம் இருந்தது; இவை அனைத்தும்
ஜேர்மனிய அரசியலை எதிர்பார்க்கமுடியாத வகைகளில் இட்டுச்சென்றது. ஆம்
Papen மற்றும்
Baron von Schröder
இருவருக்கும் இடையே சீமான்கள் குழுவில் தற்செயலான மோதலும் இருந்தது: இது இறுதியில் ஹிட்லருக்கு நன்மையை
விளைவித்தது."[34]
ஒருவேளை Von Papenக்கு
ஜலதோஷம் ஏற்பட்டு படுக்கையில் இருந்து அவர் சீமான்கள் குழுவிற்கு செல்லாமல் இருந்தால் இருபதாம் நூற்றாண்டு
வரலாற்றின் போக்கு முழுவதும் மாறியிருக்குமே என்று நினைக்கவேண்டும் போலும்! இதே போல்தான் நவீன
பெளதீகவியலில் (இயற்பியலில்) ஏற்பட்ட அனைத்து மாறுதல்களுக்கும் காரணம் நியூட்டனின் தலையில் புகழ்பெற்ற
ஆப்பிள்பழம் விழுந்த தற்செயல் நிகழ்வினால் என்று கூறவேண்டும் போலும்.
"ஒரு மடையனால் கூறப்பட்ட வெற்றும், சீற்றமும் நிறைந்து, எதையும் குறிக்காமல்
இருக்கும் கதை" தான் வரலாறு என்றால், அதைப் படிப்பதனால் என்ன பயன்? இந்த வார உரைகளின் அடித்தளம்
நாம் வாழும் உலகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு, மனிதகுலத்தை பேரழிவுகரமாக அச்சுறுத்திக் கொண்டுள்ள
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இருபதாம் நூற்றாண்டின் உண்மை நிகழ்வுகளை பற்றிய மிகப் பரந்த அறிவு இருக்க
வேண்டும் என்பது மட்டுமின்றி, கடந்த 100 ஆண்டுகளில் தொழிலாள வர்க்கம் கடந்துள்ள பல மிகப் பெரும்
துன்பகரமான நிகழ்வுகளின் படிப்பினைகளும் ஆழ்ந்த முறையில் உள்வாங்கப்பட்டும் இருக்க வேண்டும்.
2000ம் ஆண்டு வந்தவுடனேயே, கடந்து விட்டிருக்கும் நூற்றாண்டை பற்றிய
ஏராளமான நூல்கள் புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டன. இவற்றுள் இக்காலத்தைப் பற்றிய பண்பிடல்களில் அதிக
செல்வாக்கு பெற்றிருந்த தன்மையை "இருபதாம் நூற்றாண்டின் சுருக்க வரலாறு" என்பது கொண்டிருந்தது. இது
குறிப்பிடத்தக்க வகையில் எரிக் ஹொக்ஸ்பாம் ஆல் பரப்பப்பட்டது; இவர் நூற்றாண்டின் கூறுபாடுகளை வரையறுத்த
நிகழ்வுகள் 1914 உலகப்போரில் இருந்தே தொடங்கிவிட்டன என்றும் 1991 சோவியத் யூனியன்
இல்லாமற்போனதை அடுத்து முடிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். ஹொக்ஸ்பாமின் உள்நோக்கங்கள் எப்படி
இருந்தாலும், இந்த அணுகுமுறை இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் உண்மையில் இருந்து வெளியேறிய
மிகுயதார்த்தத்தை (Surrealistic)
போன்றது என்ற வாதத்திற்கு துணை நிற்கின்றதே அன்றி வரலாற்றுவிதிகளின்
வெளிப்பாடு என்று கூறப்படவில்லை.
இந்த வரையறையை நிராகரிக்கும் வகையில், "முற்றுப்பெறா நூற்றாண்டு" என்ற
விதத்தில் இச்சகாப்தம் மேன்மையான முறையில் பண்பிடப்படமுடியும் என்று நான் கருதுகிறேன். வரலாற்று
காலவரிசைப்பட்டியின்படி, இருபதாம் நூற்றாண்டு அதன் ஓட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டது. அது கடந்த காலம்.
ஆனால் 1901ல் இருந்து 2000 வரையிலான காலத்தின் மகத்தான சமூகப் போராட்டங்கள், ஏற்ற இறக்கங்கள்
ஆகியவற்றிற்கு அடிப்படையாய் இருக்கும், பெரிய, அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் நிலைப்பாட்டிலிருந்து,
மிகச்சிறிதே தீர்க்கப்பட்டுள்ளன.
இருபதாம் நூற்றாண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு கணக்கு தீர்க்கப்படாத
வரலாற்று பற்றுச்சீட்டை விட்டுச் சென்றுள்ளது. போர், பாசிசம், அனைத்து மனிதகுல நாகரிகத்தின் அழிவு ஏற்படக்கூடும்
என்ற ஆபத்து கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட அனைத்து கொடூரங்களும், இன்றும்
நம்மிடைய இருக்கின்றன. இருத்தலியல்வாதிகள் (Existentialists)
கூறவதுபோல் நாம் ஒன்றும் மனித நிலையில் உறைந்திருக்கும் ஆபத்துக்கள்,
சங்கடங்கள் என்ற இயல்பை பற்றி பேசவில்லை. இல்லை, நாம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் இருக்கும் அடிப்படை
முரண்பாடுகள் பற்றிப் பேசுகிறோம்; இருபதாம் நூற்றாண்டின் மகத்தான புரட்சிகர மார்க்சியவாதிகளான லெனின்,
லுக்சம்பர்க், ட்ரொட்ஸ்கி போன்றவர்கள் அவற்றின் வளர்ச்சியின் ஆரம்பப் பகுதியிலேயே அவற்றை பற்றி ஆராய்ந்து
கூறினர். கடந்த நூற்றாண்டில் தீர்க்கப்படமுடியாததற்கு இந்த நூற்றாண்டில் தீர்வு கண்டாகவேண்டும். இல்லாவிடில்
இந்த நூற்றாண்டு மனிதகுலத்தின் கடைசி நூற்றாண்டாக ஆகக்கூடிய மிகப்பெரும் மற்றும் உண்மையான ஆபத்து இருக்கிறது.
எனவேதான் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை பயில்வதும் அதன் படிப்பினைகளை
உள்ளீர்த்துக்கொள்வதும் வாழ்வா, சாவா என்ற பிரச்சினையாக உள்ளது.
Notes:
[28] Turner, preface to Karl Marx and Max Weber, p.
5.
[29] Karl Marx and Friedrich Engels, Collected Works,
Volume 48 (London, 2001), p. 139.
[30] Ibid, p. 283.
[31] Leon Trotsky, The Balkan Wars 1912-13 (New York,
1980), p. 314.
[32] The Passing of an Illusion: The Idea of
Communism in the Twentieth Century (Chicago, 1999), p. 2.
[33] Hitler's Thirty Days to Power, (Addison Wesley,
1996), p. 168.
[34] Ibid.
Top of
page |