World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan Supreme Court orders new presidential elections

இலங்கை உயர் நீதிமன்றம் புதிய ஜனாதிபதி தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளது

By Wije Dias
30 August 2005

Back to screen version

இலங்கை உயர் நீதிமன்றம், பெருமளவில் ஒரு அரசியல் முடிவாக, தற்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலம் அவர் கூறிக்கொள்வது போல் 2006 நவம்பரில் அன்றி, இந்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டும் என கடந்த வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு, கொழும்பில் அடுத்தடுத்து ஸ்திரமற்ற அரசாங்கங்களையும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களில் தடங்களையும் ஏற்படுத்திய அரசியல் முட்டுக்கட்டையில் இருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியைத் தேடும் முற்றிலும் அவநம்பிக்கையான முயற்சியாகும்.

குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (சுதந்திர முன்னணி), கடந்த வருடம் ஏப்பிரலில் நடந்த பொதுத் தேர்தலில் தற்செயலாக வெற்றி பெற்ற போதிலும், கடந்த ஜூனில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டதையடுத்து, 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 79 உறுப்பினர்களுடன் சிறுபான்மையாகியுள்ளது. சுனாமி மீள் கட்டுமான வேலைகளை கூட்டாக நிர்வகிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான ஜனாதிபதியின் முடிவை எதிர்த்த ஜே.வி.பி மற்றும் ஏனைய சிங்களப் பேரினவாத குழுக்கள், நாட்டைக் காட்டிக்கொடுக்கும் செயலாக அதை கண்டனம் செய்தன.

1994ல் அதிகாரத்திற்கு வந்த குமாரதுங்க, ஜனாதிபதியின் பரந்த நிறைவேற்று அதிகாரங்களை சாத்தியமான வகையில் நீண்ட காலத்திற்கு பற்றிக்கொள்ள முனைப்புடன் இருந்தார். ஆறு வருட ஆட்சிக் காலத்தை இரு முறை அனுபவித்த அவருக்கு, முன்றாவது முறை பற்றிய எதிர்பார்ப்பிற்கு அரசியலமைப்பு தடங்கலை ஏற்படுத்தியது. இறுதியான ஜனாதிபதி தேர்தலை 1999ல் முன் கூட்டியே நடத்தியதோடு, அதே ஆண்டு பகிரங்கமாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். எவ்வாறெனினும், அடுத்த ஆண்டு இரகசியமாக இடம்பெற்ற பதவிப் பிரமாண வைபவம் பற்றிய விபரங்கள், 2003 கடைப் பகுதியிலேயே பத்திரிகைகளுக்கு கசிந்தன.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), புதிய தேர்தல்கள் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதோடு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரு பிரச்சாரத்தையும் முன்னெடுத்திருந்தது. சுதந்திர முன்னணியில் இருந்து ஜே.வி.பி விலகிய பின்னர், ஐ.தே.க அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவோ அல்லது தனது சொந்த அரசாங்கத்தை அமைக்கவோ மறுத்துவிட்டது. குமாரதுங்க கடந்த ஆண்டு தான் பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தை முழுமையாக பதவி விலக்கவும் மற்றும் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கவும் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

இந்த உயர் நீதிமன்ற வழக்கு சிங்களத் தீவிரவாத ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபிதவால் தொடரப்பட்டிருப்பினும், முழு ஆளும் வர்க்கத்திற்காகவும் அது சம்பந்தமாக ஒரு உடன்பாடு தயாராகியது. குறிப்பிடத்தக்க வகையில் இந்த வழக்கை விசாரித்த ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் குமாரதுங்கவால் நியமிக்கப்பட்டவர்களாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா, 2000 ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் உத்தியோகபூர்வ பணியாற்றியுள்ளார். உண்மையில், நீதிபதிகள் ஏகமனதாக குமாரதுங்கவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியதானது அவர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்தால் ஏற்படவிருக்கும் மேலதிக ஸ்திரமின்மையை பற்றி அரசியல் ஸ்தாபனம் பூராவும் அக்கறை செலுத்தியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது.

சட்ட விவாதங்கள், அரசியலமைப்பின் 31 (3A) (d1) பிரிவின் பொருள் விளக்கத்தைச் சுற்றி சுழன்றது. ஒரு அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டபடி, ஜனாதிபதியின் சார்பில் வாதாடிய சட்ட மேதைகள், ஜனாதிபதியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தை ஆறு வருடத்தில் இருந்து ஏழு வருடங்களுக்கு விளைபயனுள்ள வகையில் விரிவுபடுத்திக்கொள்ளும் அவரது அசாதாரணமான வலியுறுத்தலை நியாயப்படுத்துவதற்காக "தமது விவாதங்களை ஒரு காற்புள்ளியில் (கொமா) அடிப்படையாகக் கொண்டிருந்தனர்." உயர் நீதிமன்ற தீர்ப்பானது "1999ல் தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தை 2000 ஆண்டுக்கு மாற்றுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது" என பிரகடனம் செய்துள்ளது.

ஆயினும், நீதிமன்ற முடிவின் அரசியல் பண்பானது நீதிமன்றத் தீர்ப்பிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது தெரிவித்ததாவது: "ஒரு வாக்கிய அமைப்பு, அது பொருத்தமான சட்டத்தின் மூலம் இயக்கப்படுவதாக கூறப்படும் அமைப்புக்குள், சிரமம், கடுமையான தொந்தரவு, அநீதி, பகுத்தறிவுக்கு ஒவ்வாமை அல்லது முரண்பாட்டுக்கோ, இல்லையெனில் நிச்சயமின்மைக்கோ வழிவகுக்குமானால், அந்த விதி நிராகரிக்கப்பட்டு, அத்தகைய பெறுபேறுகளை தோற்றுவிக்காத மாற்று வாக்கிய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்." சாதாரணமாகக் கூறினால், இந்த வழக்கில் அரசின் ஸ்திரத் தன்மை பணையமாக வைக்கப்பட்டிருந்ததோடு ஏனையவற்றை விட அதைப் பேணுவது முக்கியமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து, பத்திரிகை ஆசிரியர் தலையங்கங்களும் உடனடியாக நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றன. சனிக்கிழமை வெளியான ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் "மூன்று மகிழ்ச்சிக் குரல்!" என தலைப்பிடப்பட்டிருந்தது. "நேற்றைய முக்கிய நிகழ்ச்சியான ஜனாதிபதி தேர்தல் திகதி பற்றிய உயர் நீதிமன்ற தீர்ப்பு எல்லா வகையிலும் வரவேற்கத் தக்கது. உச்ச நீதிமன்றத்தின் புலமைவாய்ந்த நீதிபதிகள், மாதக்கணக்காக அரசியல் புழுக்கள் வளர்ந்துகொண்டிருந்த அரசியல் சரீரத்தின் அரசியல்யாப்பு சீழ் புண்ணை குணப்படுத்தியுள்ளனர்," என அது தொடங்குகிறது.

சண்டே டைம்ஸ் பிரகடனம் செய்ததாவது: "ஜனாதிபதி தேர்தல்கள் இந்த ஆண்டே நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பு, நாட்டின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கையின் தேர்தல் தொகுதிகளைப் பொறுத்தளவில் 1999, 2000, 2001 மற்றும் 2004 பொதுத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் அவற்றுக்கு இடையில் இடம்பெற்ற பல உள்ளூராட்சித் தேர்தல்களுடன் ஏற்பட்ட தேர்தல் சோர்வுகள் இருந்த போதிலும், பல இலங்கையர்களுக்கு வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை தேர்தல்கள் ஏற்படுத்தக் கூடும் என்ற கருத்து தொற்றிக்கொண்டுள்ளதை இப்போது காணக்கூடியதாக உள்ளது."

அதே செய்திப் பத்திரிகையின் பொருளாதார பக்கத்தில் மேலுமொரு குறிப்பு விளக்கியதாவது: "வியாபார நோக்கு நிலையிலிருந்து வரவேண்டிய முக்கியமானவை என்னவென்றால், அறிகுறியும் ஸ்திரத் தன்மையுமேயாகும். ஆகவே ஒரு முன்கூட்டிய பொதுத் தேர்தலை அன்றி, நடக்க வேண்டியதைப் போல் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதையே சந்தை விரும்புகிறது." இதே உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், தீர்ப்பு வழங்கப்பட்ட அன்று, கொழும்பு பங்குச் சந்தை 1.5 வீதத்தால் உயர்ந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மனப்பான்மை, அண்மையில் வெளியான ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் கூட்டறிக்கை ஒன்றில் முன்னதாகவே சமிக்ஞை செய்யப்பட்டிருந்தன. 2001ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை இருந்த போதிலும், இலங்கை உலகின் மிகவும் ஸ்திரமற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது என அது குறிப்பிட்டுள்ளது. இலங்கை நான்கு வருடங்களுக்குள் மூன்று வித்தியாசமான அரசாங்கங்களைக் கொண்டிருந்ததை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளதோடு ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பாகிஸ்தானை விட சிறிது அதிகமான ஸ்திரத் தன்மையுடன் விளிம்பில் இருப்பதாகவும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைனை விட குறைந்த ஸ்திர நிலைமையுடன் இருப்பதாகவும் பட்டியலிட்டுள்ளது.

சர்வதேச ஜனநாயக யூனியன் (ச.ஜ.யூ), இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்கள் இந்த வருடமே நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்த மாதம் நிறைவேற்றியமை, சர்வதேச ஆதரவு குமாரதுங்கவிடம் இருந்து நகர்ந்திருப்பதற்கான மேலுமொரு அறிகுறியாகும். ச.ஜ.யூ, அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் குடியரசுக் கட்சி உட்பட உலகம் பூராவும் 80க்கும் அதிகமான வலதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கியதாகும்.

தொடரும் அரசியல் குழப்பம்

இலங்கையின் ஆளும் வட்டாரத்தின் மதிப்பீடானது புதிய ஜனாதிபதி தற்போதைய அரசியல் முட்டுக் கட்டைக்கு முடிவுகட்ட சிறந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதோடு செல்வாக்கில் உள்ள கூட்டுத்தாபன தட்டினர் கோரி வருகின்ற நிகழ்ச்சித் திட்டங்களான, 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான துரிதமான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை முன்னெடுப்பார் என்பதாகும். ஐ.தே.க வும் மற்றும் அதன் வேட்பாளரும் எதிர்க் கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, இந்தத் திட்டத்திற்காக கொஞ்சமும் இடைவிடாமல் பரிந்துரைப்பதோடு ஜனாதிபதி தேர்தலின் போதும் வியாபார வட்டாரத்தின் குறிப்பிடத்தக்க ஆதரவையும் பெறக்கூடும்.

குமாரதுங்கவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) தனது ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்தும். 2004 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், குமாரதுங்கவும் ஸ்ரீ.ல.சு.க வும் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்க முயற்சித்த போதிலும், அதனது சிங்களப் பேரினவாத பங்காளியான ஜே.வி.பி யின் அழுத்தத்திற்கு உடனடியாக அடிபணிந்தது. ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி யின் ஆதரவை எதிர்பார்ப்பதா இல்லையா என்பதையிட்டு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை தள்ளிவைக்கும் விளைபயனுள்ள கோரிக்கைக்கு உடன்படாவிட்டால் தமது சொந்த வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் தமது சார்பில் வலியுறுத்தி வருகின்றன.

தேர்தலானது இலங்கை முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள அடிப்படையான அரசியல் இக்கட்டுநிலையை தீர்க்க எதையும் செய்யப் போவதில்லை. பொருளாதார ரீதியில், தீவை பூகோள உற்பத்திப் போக்குடன் ஒன்றிணைக்கவும் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையின் சீரழிவை தீர்க்கவும், யுத்தத்திற்கு முடிவுகட்டுவதும் மற்றும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கும்பல்களுக்கு இடையில் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்வதும் அவசியமாகியுள்ளது. ஆயினும் அரசியல் ரீதியில், ஆளும் வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், தமது கட்சிகளான ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க ஆகியவற்றுக்கு சமூக அடித்தளத்தை வழங்கவும் 1948 சுதந்திரத்தில் இருந்தே சிங்கள இனவாதத்தில் தங்கியிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும், பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் பெரும் வல்லரசுகள் மற்றும் வியாபார வட்டாரங்களின் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆயினும், அந்தத் திசையிலான எந்தவொரு நகர்வும் விடுதலைப் புலிகளுக்கோ அல்லது தமிழ் சிறுபான்மையினருக்கோ வழங்கப்படும் எந்தவொரு சலுகையையும் வெளிப்படையான தேசத் துரோகமாகக் கருதும் சிங்களத் தீவிரவாதிகளின் கசப்பான எதிர்ப்பை உடனடியாகத் தூண்டும்.

தேர்தல் ஒரு தற்காலிக ஓய்வைத் தரும் என எதிர்பார்ப்பதும் கூட ஒரு மாயை என நிரூபிக்கப்படக் கூடும். சாதாரண உழைக்கும் மக்களில் பரந்த தட்டினர் எல்லா பிரதான அரசியல் கட்சிகளில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி யும் மேலும் சந்தை சீர்திருத்தத்திற்கும் தொழில், வேலை நிலைமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் சீர்கேட்டிற்கும் ஆதரவளித்த அளவில், முடிவடைந்த தேர்தல்கள் வாழ்க்கை நிலைமைகளிலான தொடர்ச்சியான சீர்கேட்டில் இடைவேளையை ஏற்படுத்தவில்லை.

கரையோரப் பிரதேசங்களை டிசம்பர் 26 சுனாமி பெருமளவில் அழிவுக்குள்ளாக்கி ஏழு மாதங்கள் கடந்த பின்னரும் மீள் கட்டுமான வேலைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை. பூகோள எண்ணெய் விலையிலான தொடர்ச்சியான அதிகரிப்பின் காரணமாக, தற்போது பணவீக்கம் 16-18 வீதத்துடன் தொடர்கிறது. அண்மைய மாதங்களில் பல தொழிலாளர் தட்டினர், மாணவர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் சுனாமியில் பாதிப்புற்றவர்களின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

பரந்த வேண்டுகோள்களை விடுக்க இலாயக்கற்றுள்ள நிலையில், தேர்தல் போட்டியாளர்கள் மோசடி, குணவியல்புகளை தூற்றல், பேரினவாத அழைப்புகள் மற்றும் தமது வாய்ப்புகளை பெருகச் செய்வதற்கான வெளிப்படையான வன்முறைகளை நாடுவர். ஒரு ஆய்வாளர் பிரகடனம் செய்ததன்படி, உயர்நீதிமன்றம் நிச்சயமின்மையை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், "முன்னைய வழக்கங்களை நாடும் தேர்தல் பிரச்சார வடிவிலான புதிய நிச்சயமின்மையை தோற்றுவிக்கும். அது சாதாரண பொருளாதாரத்திற்கும் சமூக வாழ்க்கைக்கும் தொந்தரவுகளை ஏற்படுத்தக் கூடும்."

எதிர்நோக்கக் கூடிய உக்கிரமான அரசியல் பதட்டநிலைமைகளின் பீதியில், பத்திரிகைகள் ஏற்கனவே "சுத்தமான தேர்தல்களுக்கு" அழைப்பு விடுத்துள்ளன. எடுத்துக்காட்டாக, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்: "அரசியல் மேடையில் சேறடிக்கும் சுவரொட்டிகள், வன்முறைகள் மற்றும் அரசியல் அவதூறுகளை இலங்கையின் அரசியல் வரலாற்றுக்குள் தள்ளுங்கள். நாங்கள் ஜனாதிபதி தேர்தல்களுக்கு அப்பால் வடக்கும் தெற்குமாக பிளவுபட்டுள்ள தீவு ஐக்கியப்பட்டிருப்பதை காணவிருப்போமானால், புதிய ஆரம்பத்திற்கான நேரம் இதுவே," என முடிவு செய்துள்ளது.

ஆளும் கும்பலின் பகுதிகள், இந்தத் தேர்தல் எதாவதொரு தீர்வை வழங்கும் என்பதையிட்டு வெளிப்படையான தோல்விமனப்பான்மையில் உள்ளன. வர்த்தக சஞ்சிகையான லங்கா மந்த்லி டைஜஸ்ட் (Lanka Monthly Diges) ஆகஸ்ட் வெளியீட்டில், "உண்மையான மாற்றத்திற்கான நேரம்" என அதன் ஆசிரியர் தலையங்கத்திற்கு தலைப்பிட்டுள்ளது. தற்போதைய தேர்தல் முன்னெடுப்புகளில் பயனளிக்கத்தக்க பதிலீடுகள் இல்லை என வாதிடும் அது: "பழுதுண்ட அமைப்பில் ஒரு மனிதனை மாற்றுவதன் மூலம் உண்மையில் எதிர்பார்க்கக் கூடிய சிறப்பு என்ன? இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அதிகாரங்களை நன்கு பகிர்ந்துகொள்ளக் கூடும். மற்றும் கொழுப்பு மீண்டும் நெருப்புக்குள்ளேயே இருக்கும்" என முடித்துள்ளது.

அத்தகைய கருத்துக்கள், அரசியல் ஆளுமையின் தற்போதைய அமைப்பு முறையே சோர்வடைந்துள்ளதோடு தமது நிகழ்ச்சித் திட்டத்தை இழுத்துச் செல்வதற்கு மிகவும் சர்வாதிகார வழிமுறைகள் தேவைப்படுகின்றது என்ற உணர்வு ஆளும் கும்பல்களுக்கு மத்தியில் வளர்ச்சி கண்டுவருவதையே வெளிப்படுத்துகின்றது. ஐலண்ட் செய்தியிதழ் குறிப்பாக பாராளுமன்றத்தில் இருக்கும் "அரசியல் மனப்போக்கை" பற்றி வெளிப்படையாக அதிருப்திகொண்டிருப்பதோடு, நாட்டை காப்பதற்காக மாசற்ற ஒழுக்கங்களைக் கொண்ட ஒருவருக்காக மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது. அது நிறைவேற்று ஜனாதிபதி முறை அல்லது வேறு ஏதாவது ஒரு வழியில் சர்வாதிகார வடிவிலான ஆட்சிக்கு சற்றே மூடி மறைத்து அழைப்பு விடுப்பதாகும்.

நேற்றைய டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், வெகுஜன அதிருப்தி மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் வாழ்க்கை நிலைமைகள் பற்றி குறிப்பிடுவதன் மூலம் மெல்லிய வேறுபட்ட சரிவை எடுத்தது. "தலைவர்கள் எந்தளவுக்கு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளார்கள் என்றால், அதிகளவில் செலவு செய்து அதைப் பாதுகாப்பதையிட்டு மக்கள் வியப்படைந்திருக்கக் கூடும். சற்றே ஒரு வருடத்திற்கு முன்னர் 'நாட்டை காப்பதற்காக' முன்கூட்டியே அழைப்பு விடுக்கப்பட்ட ஒரு பொதுத் தேர்தலால் நாட்டுக்கு 600 மில்லியன் ரூபாய்களுக்கும் மேல் செலவாகியது. ஜனாதிபதி நாட்டைப் பாதுகாப்பதற்கு பதிலாக இன்னும் அதிகம் ஆபத்து நிறைந்ததாக ஆக்கினார். இப்போது நாம் ஜனாதிபதி தேர்தலுடன் மட்டுமன்றி பொதுத் தேர்தலுடனும் இழுபடப் போகின்றோம். இன்னுமொரு நல் வாய்ப்புக்காக நாட்டுக்கு செலவாகப் போகிறது.

இந்த எல்லா குறிப்புகளும் ஒரே திசையையே சுட்டிக் காட்டுகின்றன: அது அடிப்படை ஜனாநாயக உரிமைகளின் அழிவாகும். குறிப்பிடத்தக்க வகையில், ஆகஸ்ட் 12 வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்கான பிரதிபலிப்பாக, எல்லா பிரதான கட்சிகளும் அவசரகால நிலைமையை அமுல்படுத்துவதற்காக தமது நீண்டகால பகைமைகளை ஓரங்கட்டிவிட்டு ஒன்று சேர்ந்தன. எதிர்ப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்தல் மற்றும் ஊடகத் தணிக்கையை மேற்கொள்ளும் உரிமைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்த அவசரகால அதிகாரங்கள், வெளித்தோற்றத்தில் கதிர்காமர் கொலையாளிகளை பிடிப்பதற்கு பொலிசுக்கு உதவுவதற்காகவும் மற்றும் மேலும் படுகொலைகளை தடுப்பதற்காகவுமாக இருந்த போதிலும், இது எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதாகும்.

ஜனாதிபதி தேர்தலானது உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள ஆழமடைந்துவரும் சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பது, மீண்டும் யுத்தத்திற்கு திரும்பும் ஆபத்திற்கு முடிவ கட்டுவது ஆகியவற்றுக்கு அப்பால், வெறுமனே ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடிக்கான முன்னோடியாகவே விளங்கும். இத்தகைய நெருக்கடியின் போது, முதலாளித்துவம் தனது ஆட்சியை கொண்டு செலுத்துவதற்காக மிகவும் இரக்கமற்ற வழிமுறைகளைப் பின்பற்ற தயங்கப் போவதில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved