World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
The Israeli state and the ultra-right settler movement இஸ்ரேலிய அரசும் அதிதீவிர-வலதுசாரி குடியேறியோர் இயக்கமும் பகுதி 1 By Jean Shaoul ஒரு நான்கு பகுதிகள் கொண்ட கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது. காசாவிலிருந்து திட்டமிடப்பட்ட திரும்பப்பெறும் நடவடிக்கைகளுக்கு எதிரான அதி தேசியவாத குடியேறியோர் இயக்கத்தின் பிரச்சாரம் மீண்டும் ஒருமுறை அதிதீவிர வலதுசாரி சக்திகள் இஸ்ரேலில் எந்த அளவிற்கு அசாதாரணமான மற்றும் தங்களது தகுதிக்கு மீறிய அரசியல் செல்வாக்கை பெற்றிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. குடியிருப்புக்களை பராமரிப்பதற்கு பெருகிவரும் செலவினங்களை எதிர் கொண்டு ஒரு தந்திரோபாய பின்வாங்கும் நடவடிக்கையாக சுமார் 8000 இஸ்ரேலியர் குடியிருந்து வரும் குடியிருப்புகளை காசா பகுதியிலிருந்து ''அகற்றிவிடவும்'' அவர்களை வெளியேற்றவும் பிரதமர் ஏரியல் ஷரோன் திட்டமிட்டார். ஏறத்தாழ நான்கு தசாப்தங்களாக இஸ்ரேல் மேற்குக்கரையின் பெரும்பகுதி நிலபரப்புக்களை ஆக்கிரமித்திருப்பதை இஸ்ரேலுடன் சேர்த்துக் கொள்வதற்கு வாஷிங்டனின் சம்மதத்தை பெறுவதை நோக்கமாகக் கொண்டு மிக அடிப்படையான முறையில் அந்த திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. காசா பகுதியிலயே கூட, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்தியாக நீடிக்கும், காசாவின் எல்லைகள் கட்டுப்பாட்டை அதன் துறைமுகத்தை, விமான நிலையத்தை மற்றும் நீர் வழங்கலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மற்றும் தான் சரியென்று கருதுகின்ற நேரத்தில் படையெடுக்கின்ற உரிமையையும் தன் வசம் வைத்திருக்கும். இது இருப்பினும், நிதியமைச்சரும் முன்னாள் பிரதமருமான பெஞ்சமின் நெட்டன்யாஹூ உட்பட ஷரோனின் சொந்த அமைச்சரவை உறுப்பினர்களே கண்டனம் தெரிவித்து ராஜினாமா செய்திருக்கின்றனர், அத்துடன் அதிதீவிர-தேசியவாத மற்றும் மதவாத கட்சிகளும், அகற்றப்படுதலை எதிர்த்து வருகின்றன. வேதாகமத்தில் கண்டுள்ள இஸ்ரேலின் நிலப்பரப்புக்களில் எந்தப்பகுதியில் இருந்தாவது வெளியேறுவது என்ற ஷரோனின் முடிவை இஸ்ரேலின் அதிதீவிர வலதுசாரிகள் நாட்டிற்கு துரோகம் செய்வது என்றே கருதுகின்றனர். குடியிருப்பாளர்கள் மேடை அமர்வு கண்டனங்களை நடத்துகின்றனர், சாலைகளில் எண்ணெயையும் ஆணிகளையும் கொட்டி வருகின்றனர், இஸ்ரேல் சாலைகளை மறிக்கின்ற வகையில் டயர்களுக்கு தீ வைக்கின்றனர், மைல் கணக்காக போக்குவரத்து நெரிசல்களை உண்டாக்குகின்றனர். அவர்கள் பாலஸ்தீனிய மக்களை இழிவுபடுத்தி அவர்களை வன்முறை பதிலடி நடவடிக்கை எடுக்க தூண்டவுமான முயற்சியில் அடிக்கின்றனர், கல்லால் அடிக்கின்றனர் மற்றும் சுடுகின்றனர். இந்த சம்பவங்களுக்கு தடைசெய்யப்பட்டிருக்கும் Kach இயக்கம் தான் காரணம் என்று ஷரோன் பழி போட்டிருக்கிறார் மற்றும் தீவிரவாதிகள் மீது ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டிருக்கிறார். ஒன்பது போர் வீரர்கள் கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டனர் மற்றும் காசா பகுதிக்குள் நுழையும் இஸ்ரேலியர்களை தடுக்க மறுத்து விட்டனர். அவற்றில் இரண்டு பேர் ஒரு காசா குடியிருப்பில் ஒளிந்து கொண்டனர், அதே நேரத்தில் பத்தாவது படைவீரர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு 21 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வெளியேறுவதை செயல்படுத்துவதற்கு வலதுசாரி துருப்புகள் மறுப்பதால் இராணுவத்திற்குள்ளேயே கலவரம் ஏற்பட்டுவிடாது தடுப்பதற்கான ஒரு முயற்சியாக இராணுவம் அந்தப் படைப்பிரிவை கலைத்து விட்டது. இந்த மாதம், கட்டாய இராணுவ சேவையில் சேர்ந்திருந்த 19 வயது படையாள் ஒருவர், வெளியேற்றப்படுவதை செயல்படுத்த மறுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இராணுவப்பணியை விட்டு ஓடிவிட்டவர், நான்கு அரபு இஸ்ரேலியர்களை சுட்டுக் கொன்றதோடு மற்றும் குறைந்தபட்சம் மற்ற 12 பேரை காயப்படுத்தினார். ஈடன் நாதன் ஜாடா ஒரு பஸ்ஸில் ஏறினார், ஒரு M-16 துப்பாக்கி மூலம் பஸ் சாரதியையும் பயணிகளையும் சுட்டார் மற்றும் அதற்கு பின்னர் தெருவில் நின்ற மக்களை நோக்கி சுட்டார். துப்பாக்கி ரவைகள் தீர்ந்து கொண்டு போகும் வரை சுட்டுக் கொண்டேயிருந்தார். ``இதை நான் செய்வது அகற்றுதலை தடுத்து நிறுத்துவதற்குத்தான் என்று பிரதமரிடம் சொல்லுங்கள். இங்கே ஒரு படுகொலையை நான் செய்யப் போகிறேன்`` என்று அந்த துப்பாக்கி ஏந்திய நபர் கூறினார். தெருவில் நின்று இச்சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஆத்திரம் அடைந்து அந்த பஸ்ஸில் ஏறி அவரை அடித்துக் கொன்றனர். இந்த சம்பவத்திற்கு முன்னர், முஸ்லீம் உலகத்தின் மூன்றாவது மிகப்புனிதமான இடம் என்று கருதப்படும் ஜெரூசலத்திலுள்ள அல்-அக்ஸா மசூதியை மதவெறியர்கள் குண்டு வீசி தாக்கக்கூடும் என்ற அச்சங்கள் நிலவின. மூன்று மாதங்களுக்கு முன்னர், சாடா என்பவர் மசூதிக்குள் நுழைய திட்டமிட்டுக்கொண்டிருந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டார். வலதுசாரி தேசியவாதிகள் ஷரோனை படுகொலை செய்ய முயலக்கூடும் என்று ஜனாதிபதி Moshe Katsav எச்சரித்திருக்கிறார். பாலஸ்தீனியர்களுடன் எந்த சமாதான பேரத்தையும் எதிர்த்து வந்த ஒரு மதவெறியர் 1995 நவம்பரில் அன்றைய பிரதமர் இட்ஷாக் ராபினை படுகொலை செய்தது போன்றதொரு சூழ்நிலை நிலவுவதாக அவர் கூறினார். அமைச்சர்கள் துப்பாக்கி துளைக்காத மேற்சட்டையை அணிந்திருந்தனர். ஷரோன் இவ்வளவு காலமாக ஊட்டி வளர்த்து வந்த அதே சமூக சக்திகள் ஒரு பிராங்கன்ஸ்டெய்ன் கோர உருவினைப் போல் அவருக்கு எதிராகவே திரும்பியிருப்பது சியோனிச அரசு எதிர்நோக்கியுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் ஆழத்தை கோடிட்டுகாட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்த நிலவரம் ஏன் தோன்றியது என்பதை புரிந்து கொள்வதற்கு, இஸ்ரேல் உருவாக்கப்பட்டதன் அடிப்படையையும் இநத் வலதுசாரி தட்டுகள் வளர்ந்து வந்த அடிப்படையையும் மீளாய்வது அவசியமாகும். இஸ்ரேல் நிறுவப்பட்டதும் சியோனிச இயக்கத்தின் அரசியல் கண்ணோட்டங்களும் இஸ்ரேல் அரசு ஸ்தாபிக்கப்பட்டதானது 1920-களிலும் 1930-களிலும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளோடும் பாசிசம் பரவியதோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது, அந்த பாசிசம் பரவியதால் ஒரு கால் நூற்றாண்டில் இரண்டாவது உலக ஏகாதிபத்திய போர் வெடிப்பதற்கு காரணமாக அமைந்தது. இரண்டாம் உலகப்போர் நிகழ்வின்போது, ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். போருக்கு முன்னர், சியோனிச அரசியல், யூதர்களை சிறு அளவே கவர்ந்திருந்தது, அவர்களில் பலர் சோசலிச இயக்கத்தோடு நெருக்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். பாலஸ்தீனத்திற்கு உள்ளேயே கூட ஒரு சோசலிச இயக்கம் அரேபியர்களையும் யூதர்களையும் ஐக்கியப்படுத்தி சோசலிச வழிகளில் சமுதாயத்தை மறுசீரமைக்கும் ஒரு ஜனநாயக மதசார்பற்ற பாலஸ்தீனிய அரசை உருவாக்கப் போராடி வந்தது. 1948-ல் சியோனிச அரசு உருவாக்கப்பட்டதற்கு பல காரணிகள் காரணமாக இருந்தன. சாதாரண மக்களிடையே யூதர்களின் துயரநிலை குறித்து அனுதாபம் வெளிப்பட்டது, போர் முடிந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் இடம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் முகாம்களில் வாழ்ந்து வந்தனர். அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் பிரான்சு ஆகியன தங்களது வாடிக்கை அரசுகளின் ஆதரவைத்திரட்டி ஐக்கிய நாடுகள் பொது சபையில் பாலஸ்தீனிய அதிகாரத்திற்குட்பட்ட அரசின் ஒரு பகுதியாக ஒரு யூத அரசை உருவாக்குவதற்கு மக்களது பொதுக் கருத்தை பண்பாடற்ற வகையில் சூழ்ச்சியுடன் கையாண்டன. இந்த வல்லரசுகள் பெரும்பாலும் மத்தியகிழக்கின் எண்ணெய் வளம்மிக்க பகுதிகளிலிருந்து பிரிட்டனை வெளியேற்றி தங்களது சொந்த புவியியல் அரசியல் நலன்களை முன்னெடுத்து செல்லும் ஒரு வழியாக இஸ்ரேல் உருவாக்கப்படுவதை ஆதரித்தன. சியோனிச இயக்கம் ---பாலஸ்தீனிய அதிகாரத்திற்குட்பட்ட பகுதிக்குள் ஒரு சிறுபான்மை இயக்கமாக இருந்தது-- அது அத்ததைகயதொரு அரசின் எல்லைகள் தொடர்பாக நீண்ட காலமாக பிளவுபட்டு நின்றது, ஏனெனில் எல்லைகளை வைத்துத்தான் நாட்டை உருவாக்க முடியும் மற்றும் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான அரபு மக்களை என்ன செய்வது என்பது குறித்தும் பிளவுகள் நிலவின. டேவிட் பென் கூரியன் தலைமையிலான தொழிற் கட்சி சியோனிஸ்ட்டுகள், ஒரு நடைமுறைக்கு ஏற்ற சியோனிச அரசின் எல்லை பற்றிய அணுகு முறையை மேற்கொண்டனர். எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஒரு யூத அரசை ஸ்தாபிக்க வேண்டும், அதற்கு பின்னர் எல்லைகளை சரி செய்து கொள்ளலாம் என்பதாகும். இஸ்ரேலின் முதலாவது பிரதமராக ஆன பென் கூரியன், அவர் ஒரு காலத்தில் ஓட்டோமன் சாம்ராஜியத்தின் சிரியன் மாகாணத்தின் ஒரு சிறிய பகுதியிலிருந்து முயன்று உருவாக்கப்பட்ட மற்றும் எதிரிகளால் சூழப்பட்ட அத்தகைய ஒரு அரசின் நிலைத்துநிற்கும் தன்மை ஒரு சக்திமிக்க ஆதரவாளரின் ஆதரவினைச் சார்நிதிருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டார். மிகக்கொடூரமான மற்றும் விரிவாக்க கொள்கைைைய கடைபிடிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தவர் திரித்தல்வாதிகளின் தலைவரும் யூத லீஜியன் அமைப்பை நிறுவியவருமான விளாடிமீர் ஜபோடின்ஸ்கி ஆவர். 1932-ல், ``இரும்புச்சுவர்`` என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அவர் அறிவித்தார்: ``உள்நாட்டு மக்களது விருப்பங்களுக்கு எதிராக சியோனிச காலனித்துவத்தை செயல்படுத்தப்பட வேண்டும் அல்லது அதை இரத்து செய்து விட வேண்டும். எனவே இந்த காலனித்துவத்தை தொடர்வதற்கும் முன்னேற்றம் காண்பதற்கும் உள்ளூர் மக்களுக்கு அப்பால் வலுவானதொரு இரும்புசுவர் அமைக்கப்பட்டால் தான் அது உள்ளூர் மக்களது அழுத்தங்களை எதிர்த்து நிற்கும் ஒரு நிலையில் இருக்கும். இதுதான் ஒட்டு மொத்தமாக அரபுமக்கள் தொடர்பான எங்களது கொள்கை..... அரபு மக்களுடன் தானாக முன்வந்து சமரசம் செய்து கொள்வது இப்போதும் சரி அல்லது எதிர்காலத்திலும் சரி நடக்க முடியாததாகும், அந்தக் கேள்விக்கே இடமில்லை.`` பிரிட்டன், யூதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை அலட்சியப்படுத்திவிட்டதை சியோனிஸ்ட்டுகள் தடைசொல்லாது உடன்பட்டதாக கருதிய ஜபோடின்ஸ்கி மிகப் பெருமளவில் விரோதப்போக்கை வளர்த்துக் கொண்டார். பாலஸ்தீனத்தில் யூத தேசிய நாட்டில் டிரான்ஸ் ஜோர்டானும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கோரினார். முதலாவது உலகப்போர் முடிவில் கலைக்கப்பட்டுவிட்ட தங்களது சொந்த ஆயுதப்படைகளை மீண்டும் உருவாக்க தவிர்த்து வரும் தொழிற்கட்சி சியோனிஸ்ட்டுகள் மீது தனது வெறுப்பை அவர் வெளியிட்டார். "ஏற்கனவே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு மண்ணில் நீங்கள் காலனியை அமைக்க விரும்பினால், நிலத்துக்காக ஒரு படைப்பிரிவிற்கு நீங்கள் ஏற்பாடு செய்தாக வேண்டும், அல்லது, ஏதாவதொரு 'பணக்கார மனிதரை' அல்லது உங்கள் சார்பில் ஒரு காவற்படை தளத்தை அமைத்து தரும் நன்கொடையாளரை கண்டுபிடித்தாக வேண்டும், ----அல்லது இல்லையென்றால் நீங்கள் உங்களது காலனித்துவ திட்டத்தை கைவிட்டுவிடுங்கள், இந்த காலனித்துவத்தை தடுப்பதற்கு அல்லது அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் முறியடிக்க ஒரு ஆயுதப்படை இல்லாமல் உடல்ரீதியாக சாத்தியமாகாது, காலனித்துவத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றதல்ல, 'கடினமானதல்ல', 'ஆபத்தானதல்ல' அனால் அது காரிய சாத்தியமானதல்ல!... சியோனிசம் ஒரு காலனியை ஏற்படுத்தும் அதிரடி நடவடிக்கையாகும், எனவே அது நிற்பதும் அல்லது வீழ்ச்சியடைவதும் ஆயுதப்படை பற்றிய பிரச்சனையைப் பொறுத்தது. ஹீப்ரு பேசுவது மிகமுக்கியமானதுதான், ஆனால், இதில் துரதிருஷ்டம் என்னவென்றால் சுடு திறன் அதைவிட முக்கியமானதாகும் --- அதுவன்றி காலனிமயமாக்கல் ஆட்டம் ஆடுவதை நான் கைவிட்டு விடுவேன்." இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஜபோடின்ஸ்கி திரித்தல்வாதக் கட்சியை நிறுவினார், அது பின்னர் சியோனிச பழுப்பு சட்டைகளாக மாறி முசோலினி மற்றும் ஹிட்லரின் இராணுவ வாதத்தை மிக நெருக்கமாக கேலி (நையாண்டி) செய்ய ஆரம்பித்தது, என்றாலும் ஜபோடின்ஸ்கி இயல்பாகவே தன்னை எப்போதுமே பாசிஸ்ட் என்று குறிப்பிட்டதில்லை. அவர் தனது குறிக்கோள் குறித்து மிகத் தெளிவாகவே இருந்தார். "ஒரு யூத சாம்ராஜியத்தை நாங்கள் விரும்புகிறோம்" என்று 1935-ல் ஒரு பத்திரிகையாளரிடம் கூறினார். திரித்தல்வாதிகளும் மெனாச்செம் பெகின் தலைமையிலும், பின்னர் ஸ்டேர்ன் காங் தலைமையிலும் இயங்கிய அவர்களது ஆயுதந்தாங்கிய பிரிவான இர்குனும், அதன் தலைவர்களுள் மற்றொரு எதிர்கால பிரதமராக வந்த யிட்ஷாக் சமீரும் உள்பட, அந்தத் தலைவர்கள் டிரான்ஸ் ஜோர்தான் உட்பட வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள பாலஸ்தீனிய பகுதி முழுவதிலும் இருந்து பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு ஒரு யூத நாட்டை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு பயங்கரவாத பிரச்சாரம் ஒன்றை நடத்தினர். பாலஸ்தீனத்தில் யூதர்கள் சிறுபான்மையினராக இருப்பார்களானால், அத்தகையதொரு அரசு அதன் யூதத்தன்மையை காட்டுவதற்காக அரபு மக்களை வெளியேற்றவேண்டியது அவசியமாகும். ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனத்தை பிரிவினை செய்ததை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்து அரபு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டது. அந்தப் போரை இஸ்ரேல் சுதந்திரப்போர் என்று கூறியது---- அந்தப் போரினால் பல்லாயிரக்கணக்கான அரேபியர்கள் தப்பியோடினர், அல்லது வெளியேற்றப்பட்டனர், அவர்கள் அகதிகளாக மாற்றப்பட்டனர். இன சுத்திகரிப்பு அல்லது பொதுமக்களை ''மாற்றுவது'' என்ற தங்களது கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான திரித்தல்வாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை இர்குனும் ஸ்டேர்ன் கும்பலும் மேற்கொண்டன. அதற்கு சியோனிச தொழிற்கட்சியினர் அங்கீகாரம் அளித்தனர், இப்படி அவர்கள் அங்கீகாரமளித்தது பாலஸ்தீனிய மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து விரட்டப்படுவதில் பெரும்பங்கு வகித்தது. 1948-ல் அரபு-இஸ்ரேலிய போர் முடிந்து சில நாட்களுக்குள் கிழக்கு ஜெருசலத்தை பிடித்துக்கொள்ள முயலுவதா இல்லையா என்பது குறித்து ஏறத்தாழ ஒட்டுமொத்த உள்நாட்டு போரே வெடிக்கின்ற அளவிற்கு தொழிற்கட்சி சியோனிஸ்ட்டுகளுக்கும் திரிபுவாதிகளுக்கும் இடையில் கசப்பான பிளவுகள் நிலவின. அந்தப் போரை நீடிப்பதற்கு ஆயுதங்கள் ஏற்றப்பட்ட அல்டலினா கப்பல் தொழிற்கட்சி அரசாங்கப் படைகளால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பின்னர்தான் வலதுசாரி சக்திகள் பின்வாங்கின, அப்போதுதான் உள்நாட்டுப்போர் தவிர்க்கப்பட்டது. விரோதப்போக்குக்கொண்ட பக்கத்து நாடுகளால் சூழப்பட்டுள்ள, இஸ்ரேல் ஆரம்பத்திலிருந்தே ஒரு காவற்படை அரசாகவும், தனது அரபு குடிமக்களை இராணுவ சட்டத்தின் கீழும் நடத்தி வருகிறது. என்றாலும், அடுத்த 20 ஆண்டுகளில், இஸ்ரேலின் அரசியல் வாழ்வில் தொழிற்கட்சி சியோனிஸ்ட்டுகளும் தீவிர வலதுசாரி சக்திகளும் பிற நாடுகளைப்போல் ஆதிக்கம் செலுத்தி வந்தன, 1970-களின் கடைசிவரை அவர்கள் அரசியல் வெற்றிடத்தில் இருந்தனர். இஸ்ரேல் ஒரு டாவிட் என்றும் ஒரு அரபு கோலியாத்தை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருப்பதாகவும் ஆரம்பத்தில் தொழிற்கட்சி சியோனிஸ்ட்டுகள் சித்தரித்து வந்தாலும் தங்களை சோசலிச வண்ணங்களில் காட்டிக்கொண்டாலும், இந்தக் கற்பனைகள் மிக விரைவில் சுக்குநூறாகிவிட்டன. கமால் அப்துல் நாசர், சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதும் 1956-ல் எகிப்து மீது பிரான்சும் பிரிட்டனும் படையெடுத்தபோது இஸ்ரேல் துருப்புக்கள் ஷினாய் பாலைவனத்தை பிடித்துக்கொண்டன. ஆனால், எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களோடு மோதுவதோடு அவர்களது நடவடிக்கைகள் இருந்தன. சூயஸ் கால்வாயை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மத்திய கிழக்கில் தங்களது செல்வாக்கை நிலைநாட்டிக்கொள்ள முன்னால் காலனித்துவ வல்லரசுகள் மேற்கொண்ட முயற்சிகளை ஏற்றுக்கொள்ள ஐசனோவர் நிர்வாகம் மறுத்துவிட்டது, மற்றும் பிரிட்டன், பிரான்சு மற்றும் இஸ்ரேல் துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டது. 1967 வாக்கில் நிலைமை மாறிவிட்டது. அந்த பிராந்தியத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்சின் செல்வாக்கு இழந்திருப்பதை அமெரிக்கா பார்த்தது, ஆனால் இப்போது அரபு வெகுஜனங்களுக்கிடையே தீவிரவாதத்தன்மை வளர்ந்துகொண்டு வருவதையும், மாஸ்கோவின் அக்கறைகளும் செல்வாக்கும் வளர்ந்து வருவதையும் அது எதிர்கொண்டது, குறிப்பாக எகிப்து வளர்ச்சித்திட்ட கடன்களுக்கும், இராணுவ உதவிக்கும் சோவியத் ஒன்றியத்தின் பக்கம் திரும்பியது குறிப்பிடத்தக்கதாகும். 1963-ல் இஸ்ரேலுக்கு ஹாக் ஏவுகணைகளை அன்றைய ஜனாதிபதி கென்னடி விற்பனை செய்ய தொடங்கியது முதல் சவுதி அரேபியா மற்றும் ஈரானோடு சேர்த்து தனது சொந்த நலன்களை வளர்த்து கொள்வதற்கு ஒரு வழியாக இஸ்ரேலை அமெரிக்கா கருத தொடங்கியது. அந்த உறவு எப்போதுமே சமரசமாக செல்லவில்லை என்றாலும், இந்தக் கட்டத்திலிருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு தருகின்ற உதவி ஓராண்டிற்கு 3 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்தப்பட்டது, அதுதான் இன்றைக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. |