Lecture one: The Russian Revolution and the unresolved
historical problems of the 20th century
முதலாம் விரிவுரை: ரஷ்யப் புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்
பகுதி 1
By David North
29 August 2005
Back to screen
version
இது "ரஷ்ய புரட்சியும், 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்"
என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன், அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச
சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில் ஆகஸ்ட் 14ல் இருந்து ஆகஸ்ட் 20, 2005
வரை நிகழ்த்திய உரைகளின் முதல் பகுதியாகும். இவ்விரிவுரை நான்கு பகுதிகளாக வெளியிடப்படும்.
வரலாற்று அறிவும், வர்க்க நனவும்
"மார்க்சிசம், அக்டோபர் புரட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்"
என்ற ஆய்வுப்பொருளின் மீது ஒரு வாரகால தொடர் உரைகளை இன்று ஆரம்பிக்கிறோம். இவ்வுரைகளின் போக்கில்
நான்காம் அகிலம் தோன்றக்காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகள், தத்துவார்த்த சிக்கல்கள், அரசியல் போராட்டங்கள்
ஆகியவற்றை நாம் ஆராய எண்ணுகிறோம். இந்த உரைகளின் மையக்குவிப்பு இருபதாம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகளின்மீது
படர்ந்திருக்கும். நமக்கு இருக்கும் கால அவகாசத்தின் தன்மையை ஓரளவிற்கு ஒட்டி இந்த வரம்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு வார காலத்தில் இவ்வளவுதான் சாதிக்கப்பட முடியும் என்று இருப்பதோடு, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு
தசாப்தங்களில் நிகழ்ந்தவற்றை ஏழு நாட்களில் ஆராய்ந்து விடுவது என்பதும் சற்று பேரவா மிகுந்த பொறுப்பேற்புதான்.
ஆயினும்கூட நாம் 1900 த்தில் இருந்து 1940 வரையிலான காலகட்டத்தில் கவனம் கொள்வதில் ஒரு நிச்சயமான வரலாற்று
தர்க்கம் உள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய அரசியல் சிறப்பியல்புகளை நிர்ணயித்த அனைத்து பெரிய நிகழ்வுகளும்
லியோன் ட்ரொட்ஸ்கி ஆகஸ்ட் 1940ல் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டன; அவையாவன: ஆகஸ்ட்
1914ல் முதலாம் உலகப் போரின் வெடிப்பு; அக்டோபர் 1917ல் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும்
அதைத் தொடர்ந்து முதல் சோசலிச தொழிலாளர் அரசாக சோவியத் ஒன்றியம் நிறுவப்பெற்றது; முதலாம் உலகப்
போர் முடிவடைந்த பின்னர் மிகச் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசாக அமெரிக்கா எழுச்சியுற்றது; 1923ம் ஆண்டு
ஜேர்மன் புரட்சியின் தோல்வி; சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவு; 1927ம் ஆண்டில் இடது எதிர்ப்பின்
தோல்வியும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் மூன்றாம் அகிலத்திலிருந்தும் ட்ரொட்ஸ்கியை வெளியேற்றல்; 1926-27ம் ஆண்டில்
சீனப்புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டமை; அக்டோபர் 1929ல் வோல் ஸ்டீரீட் பொறிவும் உலக முதலாளித்துவ பெரும்
மந்தத்தின் ஆரம்பமும்; ஹிட்லர் அதிகாரத்திற்கு ஏற்றம் பெற்றதும் ஜனவரி 1933ல் பாசிசம் ஜேர்மனியில் வெற்றி
கொண்டதும்; 1936-38ன் மாஸ்கோ விசாரணைகளும் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச அறிவுஜீவிகள் மற்றும்
தொழிலாள வர்க்கம் மீதான குறிப்பிட்ட அரசியல் பகுதியினரின் படுகொலைகள்; 1937-39ல் ஸ்பானிய புரட்சி ஸ்ராலினிச
தலைமையிலான மக்கள் முன்னணியால் காட்டிக்கொடுக்கப்பட்டமையும், தோல்வியும்; செப்டம்பர் 1939ல் இரண்டாம்
உலகப்போரின் வெடிப்பு; மற்றும் ஐரோப்பாவில் யூதர்கள் அழிக்கப்படுதலின் தொடக்கம்.
இந்த நான்கு தசாப்தங்களில் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படை அரசியல் சிறப்பியல்புகள்
வரையறுக்கப்பட்டன என நாம் கூறுவது கீழ்க்கண்ட பொருளில் ஆகும்: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்
சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளவிருந்த பெரும் அரசியல் பிரச்சினைகள் அனைத்தும், இரண்டாம் உலகப்போருக்கு
முந்தைய சகாப்தத்தின் பெரும் புரட்சிகர மற்றும் எதிர்ப் புரட்சிகர அனுபவங்களின் மூலோபாய படிப்பினைகள் என்ற முப்பட்டகக்
கண்ணாடி மூலம் ஆராயப்பட்டால்தான், நன்கு புரிந்துகொள்ளப்படமுடியும்.
இரண்டாம் உலகப்போருக்கு பின் சமூக ஜனநாயகக் கட்சிகளுடைய கொள்கைகளைப் பற்றிய
பகுப்பாய்விற்கு ஆகஸ்ட் 1914ல் இரண்டாம் அகிலம் பொறிவுற்றதன் வரலாற்று உட்குறிப்புக்களை பற்றிய புரிதல் தேவைப்படுகின்றது;
அதேபோல் சோவியத் ஒன்றியத்தின் தன்மை, கிழக்கு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்கு பின் நிறுவப்பட்ட
ஆட்சியின் தன்மை; அதே போல் அக்டோபர் 1949ல் சீனாவில் நிறுவப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மை ஆகியன,
அக்டோபர் புரட்சி மற்றும் முதலாவது தொழிலாளர் அரசின் நீடித்த சீரழிவு இவற்றைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில்தான்
முழுவதுமாய் புரிந்துகொள்ளப்பட முடியும்; 1945ம் ஆண்டிற்கு பின் ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் இலத்தின்
அமெரிக்காவை அடித்துச்சென்ற காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சிகளின் மாபெரும் அலையின்
பிரச்சினைகளுக்கான விடைகளை, 1905ம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தினை சூழ
எழுந்திருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த கருத்துவேறுபாடுகள் பற்றிய கடும் முயற்சி எடுத்து ஆய்வதன் அடிப்படையில்
மட்டும்தான் கண்டு கொள்ளப்பட முடியும்.
வரலாற்று அறிவிற்கும், அரசியல் ஆய்வு மற்றும் நோக்குநிலைக்கும் இடையே உள்ள உறவு
அதன் மிக ஆழமான வெளிப்பாட்டை சோவியத் ஒன்றியத்தின் கடைசி தசாப்தத்தில் கண்டது. மார்ச் 1985ல் மிகைல்
கோர்பச்சேவ் அதிகாரத்திற்கு வந்தபோது, ஸ்ராலினிச ஆட்சி ஆற்றொணா நெருக்கடியில் இருந்தது. சோவியத்
பொருளாதாரத்தின் சீர்கெட்டநிலை, 1970களில் எண்ணெய் விலையின் பெரும் உயர்வு குறுகிய காலத்திற்கு எதிர்பாரா
இலாபத்தை கொடுத்ததால் மறைக்க முடிந்தது, அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியதும் இனியும்
மறைக்க முடியாது போயிற்று. இந்தச் சரிவை மாற்றுவதற்கு கிரெம்ளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை?
கொள்கை பற்றிய பிரச்சினைகள் உடனடியாக சோவியத் வரலாற்றின் விடை காணப்படாத வினாக்களுடன் குழப்பத்திற்கு
ஆளாயின.
60 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ராலினிச ஆட்சி, வரலாற்றை பொய்ம்மைப்படுத்தும்
பிரச்சாரத்தில் இடைவிடாமல் ஈடுபட்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்களுடைய சொந்த புரட்சிகர
வரலாற்றைப் பற்றிய உண்மைகளை கூட பெரிதும் அறியாமல் இருந்தனர். ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சக
சிந்தனையாளர்களின் படைப்புக்கள் தணிக்கைக்குள்ளாக்கப்பட்டு, பல தசாப்தங்களாக நசுக்கப்பட்டிருந்தன. சோவியத்
வரலாற்றை பற்றி நம்பத்தக்கவகையில் ஒரு நூல் கூட இல்லை. உத்தியோகபூர்வ சோவியத் கலைக்களஞ்சியத்தின் புதிய
பதிப்பு ஒவ்வொன்றும் கிரெம்ளினின் அரசியல் நலன்களுக்கு ஏற்ப மற்றும் அதன் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப திருத்தி
எழுதப்பட்டு வந்தது. எமது மறைந்த தோழர் வாடிம் ரொகோவின் ஒருமுறை குறிப்பிட்டபடி, சோவியத் ஒன்றியத்தில்
கடந்த காலம் கூட எதிர்காலம் போலவே கணித்துக் கூறமுடியாமற் போயிற்று!
தேசியமயமாக்கப்பட்ட தொழில்துறையை அகற்றுதல், தனியார் சொத்துடைமையை
புதுப்பித்தல், முதலாளித்துவத்தை மீட்டல் ஆகியவற்றுக்கு ஆதரவாக இருந்த அதிகாரத்துவம் மற்றும் சலுகை மிக்க
நோமன்குளோத்ரா (Nomenklatura)
தன்னலக்குழு ஆகியவற்றுக்குள்ளே உள்ள பிரிவுகளை (கன்னைகளை) பொறுத்தவரையில், சோவியத் பொருளாதார
நெருக்கடி சோசலிசம் தோற்றுவிட்டது என்பதற்கு "நிரூபணம்" என்று மட்டுமல்லாமல், அக்டோபர் புரட்சி, வரலாற்றில்
அழிவுகரமான வரலாற்று தவறு என்றும், அதையொட்டித்தான் அனைத்து பிந்தைய சோவியத் ஒன்றிய பெருந்துன்பங்களும்
தவிர்க்க முடியாமல் ஊற்றெடுத்தன என்ற கருத்தும் இருந்தது. இத்தகைய சந்தை சார்பு சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட
பொருளாதார தீர்வுகள், ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் தவிர்க்கமுடியாத விளைவு என்று கூறிய சோவியத்
வரலாற்றை பற்றிய ஒரு பொருள்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
முதலாளித்துவ மீட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு சாதாரணமாக பொருளாதார அடிப்படையில்
மட்டும் விடை கொடுக்க இயலாது. மாறாக, முதலாளித்துவ சார்புடைய வாதங்களை மறுத்தலுக்கு சோவியத் வரலாறு
பற்றிய ஆய்வையும் மற்றும் ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் தவிர்க்கமுடியாத விளைவும் அல்ல இன்றியமையாத விளைவும்
அல்ல என்ற விளக்கிக்காட்டலையும் கோருகின்றது. ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றை தத்துவார்த்த ரீதியில் கருத்தளவில்
கருதமுடியும் என்பது காட்டப்பட வேண்டி இருந்தது மட்டுமல்லாமல், அத்தகைய மாற்று லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில்
இடது எதிர்ப்பு என்ற வடிவில் உண்மையில் இருந்தது என்பதும் விளக்கப்பட வேண்டும்.
நான் இன்று கூறப்போவதெல்லாம் பெரும்பாலும், நவம்பர் 1989ல் மாஸ்கோ பல்கலைக்
கழகத்தில் ஆவணங்கள் பயிலகத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் நிகழ்த்திய உரையில்
கூறியவைதான். "வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் கடந்த காலத்தை பற்றிக் கணிசமான முறையில்
விவாதிக்க வேண்டும். சோசலிச இயக்கத்தை எதிர்கொண்டுள்ள பல சர்ச்சைகளை பற்றி ஆராயாமல் எவ்வாறு இன்றைய
சோசலிசத்தைப் பற்றி விவாதிக்க இயலும்? சோசலிசத்தில் வருங்காலத்தை விவாதிக்க இருக்கையில், அக்டோபர்
புரட்சியின் விதி பற்றி விவாதித்துத்தான் ஆகவேண்டும்; இந்நிகழ்வு உலக முக்கியத்துவம் வாய்ந்தது; ஒவ்வொரு நாட்டிலும்
தொழிலாள வர்க்கத்திடையே ஆழ்ந்த விளைவை இது ஏற்படுத்தியது. இந்தக் கடந்த காலத்தில் பெரும்பகுதி, குறிப்பாக
சோவியத் ஒன்றியத்தில் நடந்தவை, புதிராலும் பொய்ம்மைப்படுத்தலாலும் மூடிமறைக்கப்பட்டுள்ளன" என்று
"சோசலிசத்தின் வருங்காலம்" என்ற தலைப்பில் நான் என் உரையை ஆரம்பித்தேன். [1]
அக்காலக்கட்டத்தில் வரலாற்றுப் பிரச்சினைகள் பற்றி சோவியத் ஒன்றியத்தில் மகத்தான
ஆர்வம் இருந்தது. வரலாற்று ஆவணங்கள் பயிலக இயக்குனரால் 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அவகாச
தயாரிப்பு கொடுக்கப்பட்டிருந்த என்னுடைய உரைக்கு சில நூறு பேர் ஈர்க்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்திற்கான அறிவிப்பு
முற்றிலும் வாய் வழியாக கூறப்பட்ட தகவல்தான். ஓர் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட், பயிலகத்தில் உரையாற்ற உள்ளார்
என்ற செய்தி விரைவில் பரவிய வகையில் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
கிளாஸ்நோஸ்ட் (வெளிப்படைத் தன்மை) என்று சிறிதே நீடித்த
சகாப்தத்தில்கூட, ஒரு ட்ரொட்ஸ்கிஸ்ட் பகிரங்கமாக உரையாற்றுவது, அதுவும் ஓர் அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்ட்
உரையாற்ற உள்ளார் என்பது ஒரு பெரும் பரபரப்பான செய்திதான். அத்தகைய உரை நிகழ்த்துவதற்கான
அறிவார்ந்தசூழ்நிலை பெரும் சாதகமாகத்தான் இருந்தது. வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளுவதற்கு ஒரு பெரும்
தாகமே இருந்தது. ரொபேர்ட் சேர்வீசின் மோசமான ஸ்ராலின் வாழ்க்கை குறிப்பு பற்றிய மதிப்புரையில் தோழர்
Fred Williams
அண்மையில் குறிப்பிட்டுள்ளபடி, கிளாஸ்நோஸ்ட் சகாப்தத்திற்கு முன் சிறிய பதிப்பாக இருந்த
Arguments and Facts
என்ற சோவியத் சஞ்சிகை, சோவியத் வரலாற்று தொடர்புடைய
நீண்டகாலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிட்டதன் அடிப்படையில் அதன்
விற்பனைப் பிரதிகள் வியப்புக்குரியவகையில் பெருகி, 33 மில்லியன் எட்டியதைக் கண்டது.
மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் பற்றிய ஆர்வத்தில் மிகப் பரந்த, பெருகிய ஆர்வம்
இருந்ததை கண்டு அச்சமுற்றதன் விளைவாக, சோசலிச அரசியல் நனவுக்கு மீண்டும் எழுச்சி வழங்கும், வரலாற்று
தெளிவு பற்றிய இந்த அத்தியாவசிய அறிவார்ந்த செயல்முறையை, சோவியத் ஒன்றியத்தின் உடைவை நோக்கி அதன்
இயக்கத்தை முடுக்கி விட்டதன் மூலம் முன்கூட்டியே தடுக்க அதிகாரத்துவம் விழைந்தது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு
ஏற்பாடு செய்யும் வகையில் துல்லியமான முறையில் அதிகாரத்துவம் நடந்து கொண்ட முறை, --அக்டோபர் புரட்சியின்
ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பின் உச்சக் கட்டம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னேரே இவ்வாறுதான் நிகழும் என்று ட்ரொட்ஸ்கியால்
முன்கணிப்பிடப்பட்டிருந்தது-- தேவையான விவரத்துடன் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்ட வேண்டிய ஆய்வுப் பொருளாகும்.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் ஒரு முக்கிய கூறு என்று இங்கு வலியுறுத்திக் கூறப்பட்டாக வேண்டியது-- இதையொட்டி
முன்னாள் சோவியத் ஒன்றிய மக்களுக்கு நிகழ்ந்த அதன் அழிவுகரமான விளைவுகள் நன்கு தெளிவாகி இருக்கிறது--
வரலாறு பற்றிய அறியாமைதான். தசாப்த காலங்களாக வரலாறு பொய்மைப்படுத்தப்படலின் சுமையானது சோவியத்
தொழிலாள வர்க்கத்தை குறுகிய காலத்தில் அரசியல் ரீதியில் திசைவழிப்படுத்தற்கோ, அதன் சுயாதீனமான சமூக நலன்களை
உயர்த்திப் பிடிப்பதற்கோ மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும் முதலாளித்துவ மீட்சியையும் எதிர்ப்பதற்கோ கடந்து
வர முடியாமற் செய்தது.
இந்த வரலாற்று துன்பியலில் பெரும் படிப்பினை ஒன்று உள்ளது. தான் கடந்து வந்திருக்கும்
காலம் பற்றிய வரலாற்று அனுபவங்களை பற்றி தெளிவான அறிவு இல்லாவிட்டால், தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ
முறைக்கு எதிராக அரசியல் ரீதியாய் நனவான போராட்டத்தை நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும், அதன் அடிப்படை
சமூக நலன்களை கூட காத்துக் கொள்ள இயலாது.
வரலாற்று நனவு என்பது வர்க்க நனவின் இன்றியமையாத ஆக்கக்கூறு ஆகும். முதலாம்
உலகப்போர் வெடித்த ஓராண்டிற்குள், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, பிரஷ்ய இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியம்
இவற்றிற்கு நிபந்தனையற்ற சரணாகதியடைந்த ஓராண்டிற்குள், 1915ல் எழுதப்பட்டபோது எந்த அளவிற்கு பொருத்தம்
உடையதாக இருந்ததோ அதே பொருத்தத்தைத்தான் ரோசா லுக்சம்பேர்க்கின் சொற்கள் இன்றும் கொண்டுள்ளன:
"வரலாற்று அனுபவம் [தொழிலாளர் வர்க்கத்தின்] என்பது ஓர் ஆசிரியரை
போன்றதுதான். சுதந்திரத்திற்காக அது காட்டும் கடினமான பாதை சொல்லொணாத் துயரங்களை மட்டும் அல்லாது கணக்கிலடங்கா
பிழைகளையும் கொண்டிருக்கும். இந்தப் பயணத்தின் இலக்கு, தொழிலாளருடைய இறுதி விடுதலை முற்றிலும் பாட்டாளி
வர்க்கத்திடம்தான் உள்ளது; தன்னுடைய தவறுகளில் இருந்து படிப்பினையை புரிந்து கொள்ள அது தயாராக உள்ளதா
என்பதில்தான் உள்ளது. தொல்லையின் அடி வேருக்குச்செல்லும் சுயவிமர்சனம், கொடூரமான, ஈவிரக்கமற்ற விமர்சனம்
என்பது, பாட்டாளி வர்க்க இயக்கத்தினை பொறுத்தவரை உயிரும் மூச்சுமாகும். சோசலிச பாட்டாளி வர்க்கத்தை,
உலகம் பேரழிவிற்குள் திணித்திருப்பது மனிதகுலத்திற்கே முன்னொருபோதும் உதாரணமாக இருந்திராத துரதிருஷ்டமாகும்.
ஆனால் சர்வதேச பாட்டாளி வர்க்கம் இத்த பேரழிவின் ஆழ்ந்த தன்மையை அளவிட இயலாமற் போனால், அது கற்பிக்கும்
படிப்பினைகளை புரிந்து கொள்ள இயலாமற் போனால் மட்டுமே சோசலிசம் இழந்ததொன்றாகும்." [2]
Notes:
[1] The USSR.and Socialism: The Trotskyist Perspective
(Detroit, 1990), pp. 1-2.
[2] The Junius Pamphlet (London, 1970), p. 7. |