World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Washington seizes on UN report to threaten Syria

சிரியாவை அச்சுறுத்த வாஷிங்டன் ஐ.நா. அறிக்கையை பற்றிக்கொள்கிறது

By Bill Van Auken
24 October 2005

Back to screen version

லெபனானின் முன்னாள் பிரதம மந்திரியும், பில்லியனர் வணிகருமான ரபீக் ஹரிரி கடந்த பெப்ரவரியில் கொலைசெய்யப்பட்டதில் மூத்த சிரிய மற்றும் லெபனான் அதிகாரிகளை குற்றவகையில் தொடர்புபடுத்தி ஐக்கியநாடுகள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை, டமாஸ்கசிற்கு எதிரான தன்னுடைய அச்சுறுத்தல்களை அதிகரிப்பதற்கு சாக்குப்போக்காக புஷ் நிர்வாகம் பயன்படுத்துகிறது.

ஈராக்கியப் போர் மற்றும் ஆக்கிரமிப்பில், அதன் முக்கிய நட்பு நாடாக உள்ள பிரிட்டனின் பின்புல ஆதரவைக் கொண்டு, ஜனாதிபதி பஷார் அசாத்தின் சிரிய ஆட்சிக்கு எதிராக சர்வதேச பொருளாதார தடைகளை கொண்டு வருவது பற்றி பரிசீலிப்பதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்கு வாஷிங்டன் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. அறிக்கை ஒன்றும் "மேசை மீது வைத்திருப்பதாக" இருக்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி கோண்டலீசா ரைஸ், பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி ஜாக் ஸ்ட்ரோவுடன் இணைந்து BBC க்குக் வழங்கிய பேட்டி ஒன்றில் கூறினார். "இது நன்கு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்."

"சிரிய ஆட்சியின் மிக உயர்மட்ட அதிகாரிகள் தொடர்புடையவர்கள் என்று அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது" என்று ஸ்ட்ரோ அறிவித்தார். "ஆட்சியில் உள்ள மூத்த அதிகாரிகள் பொய்ச் சாட்சியம் கொடுத்தது பற்றிய Mehlis அறிக்கையிலிருந்து சான்றையும் கூட நாம் வைத்திருக்கிறோம். இது மிக ஆபத்தானது ஆகும்." என்று ஜாக் ஸ்ட்ரோ அறிவித்தார்.

ஜேர்மனிய அரசாங்க வக்கீல் Detlev Mehlis தயாரித்துள்ள இந்த அறிக்கை ஐ.நா. உத்திரவின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் இடைக்கால முடிவுகளை கூறுகிறது. அதில் உள்ளவற்றில் பெரும்பாலானவை லெபனானில் படுகொலை நடக்கும் வரையிலான காலத்தில் இருந்த அரசியல் நிலைமை பற்றிய விளக்கமாகும். ஹரிரியின் கொலை பற்றி எவர் மீதும் குற்றச் சாட்டு சமத்துவதற்கு தற்போது போதுமான ஆதாரம் இல்லை என்பதை அது தெளிவுபடுத்தியுள்ளது; தொடர்புடையவர் என்று கூறப்படுவர்கள்மீது "குற்றமற்றவர்கள் என்ற முன் கருத்து கொள்ளுவதற்கு" இடம் உள்ளது என்றும் அது கூறியிருக்கிறது.

"அரசியல் பூச்சு" உடையது என்று இந்த அறிக்கை பற்றி கூறியுள்ள சிரிய ஆட்சி, ஜனாதிபதி அசாத்தின் குடும்பத்தில் இருந்து இரு நபர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் தொடர்பு உடையவர்கள் என்று கூறப்படும் குற்றச்சாட்டப்பட்டுக்களை தீவிரமாக மறுத்துள்ளது; மேலும் இது ஐ.நா. விசாரணைக் குழுவினரை வேண்டுமேன்றே திசைதிருப்புவதாகவும் உள்ளது என்று அது கூறியுள்ளது.

"சிரியாவின்பால் விரோதப் போக்கு உடையவர்கள் என்று நன்கு அறியப்பட்டவர்களின் குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் வந்துள்ள, சிரியாவிற்கு எதிரான அரசியல் அறிக்கை இது ஆகும்" என்று கத்தாரை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி இணையமான அல் ஜசீராவிற்கு, வெள்ளியன்று கொடுத்த பேட்டி ஒன்றில் தகவல்துறை மந்திரி Mehdi Dakhlallah அறிவித்துள்ளார்.

டமாஸ்கஸில் சனியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிரிய வெளியுறவு மந்திரி ரியத் தாவூதியும் இந்த அறிக்கை அரசியல் பூச்சு உடையது என்றும் "பல முன் கருத்துக்கள், குற்றச் சாட்டுக்கள்" ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்றும் இதற்கு "எந்தவித நிரூபணமும் இல்லை" என்றும் அறிக்கையை கண்டித்தார்.

"சிரியப் படைகளும், சிரிய உளவுத்துறை அமைப்புக்களும் லெபனானில் இருந்ததே சிலருடைய தொடர்பை காட்டுகிறது போன்ற பல உட்குறிப்புக்களை காட்டுகிறது என்று ஐ.நா.விசாரணைக் குழு ஒருதலைப்பட்ச முன் கருத்தாகக் கொண்டுள்ளது. ஒருவர் லெபனானில் இருப்பதால், லெபனானில் நடப்பது அனைத்திற்கும் ஒருவர் பொறுப்பு என்று கூறமுடியாது... அதேபோல் நீங்கள் அங்கு இருப்பதன் காரணமாக நடக்கும் செயல்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு அது பற்றித் தெரியும் என்ற கருத்தின் மீது எந்த அழுத்தமும் கொடுக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

வெளியுறவு மந்திரி தொடர்ந்தார்: "பிரதம மந்திரி ஹரிரியின் படுகொலை என்ற இந்த நடவடிக்கை, சிறந்த உத்தியினால் மட்டுமே செய்திருக்கப்படமுடியும்; அதுவும் நல்ல தேர்ச்சி பெற்ற உளவுத்துறையினால் மட்டுமே முடியும் என்ற முடிவிற்கு அறிக்கை வந்துள்ளது. உங்களைச் சுற்றிப் பாருங்கள், யார் மிகவும் சிறந்த கருவிகளைக் கொண்டுள்ளனர்?"

தாவூதி விரிவாகக் கூறவில்லை என்றாலும், இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாத், லெபனான், சிரியா இரண்டையும் சீர்குலைக்கும் வகையிலும், டமாஸ்கஸ் ஆட்சிக்கு எதிராக அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஏற்ற சூழ்நிலையயை உருவாக்குவதற்காகவும், இந்தப் படுகொலைக்கு ஏற்பாடு செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகங்களைத்தான் அவருடைய அறிக்கை பிரதிபலிக்கிறது.

அறிக்கை வெளியிடப்படுவதற்கு சற்று முன்பாக, சிரிய அதிகாரிகளுக்கு எதிராக குழுவின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக முக்கிய சாட்சியங்கள் கொடுத்தவர்களில் ஒருவர் பாரிசில் கைது செய்யப்பட்டார். அவர் ஐ.நா. குழுவின் முன் பொய்ச்சாட்சியம் கொடுத்ததாக லெபனிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சிரியாவில் இருந்து புலம் பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் மகம்மது ஜுகீர் அல் சித்திக் என்பவர் ஒரு சர்வதேசப் பிடி வாரண்டு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு லெபனானுக்குத் திரும்ப அனுப்பப்பட இருக்கிறார். சிரிய அதிகாரிகள் படுகொலைக்கான விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர் என்ற கூற்றுக்களுக்கு இவர்தான் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறார். இந்தப் பழைய இராணுவத்தினர் மீது, மோசடி மற்றும் பதவியில் இருந்து ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்களை டமாஸ்கஸ் கூறியுள்ளது. 1996ல் இருந்து லெபனானில் இருந்த இவர் திருட்டுக் குற்றம் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

ஐ. நா. பொதுச் செயலர் கோபி அன்னன் ஐ.நா. விசாரணைக் காலக் கெடுவை டிசம்பர் 15 வரை ஒத்திவைத்துள்ளார் என்றாலும், முடிவுகள், தண்டனைகள் கொடுப்பதற்கு வாஷிங்டனோ, லண்டனோ அதுவரை பொறுப்பதற்குத் தயாராக இல்லை. ஒரு விசாரணைக்குழுவின் இடைக்கால முடிவுகளைப் பற்றி புஷ் நிர்வாகம் காட்டும் அசாதரணமான அழுத்தம் இந்தப் பிரச்சினையை பயன்படுத்தும் வாஷிங்டனுடைய முயற்சி பற்றி சந்தேகத்தை விட்டு வைக்காமல் இல்லை.

உட்கிடக்கையை புலப்படுத்தும் வகையில் ஜேர்மனிய அரசாங்க வக்கீலான மேஹ்லிஸ் ஜேர்மனிய வார ஏடான Stern இடம் தெரிவித்தார்: :ஹான்ஸ் பிளிக்சுடன் என்னை உவமையாக்கிக் காண வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் அவருக்கு எப்படி நினைப்பு இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிகிறது." ஈராக் பேரழிவு ஆயுதங்களை கொண்டிருந்தது என்பதற்கு கடுகளவு சான்றுகள் கூட கொடுக்காவிட்டாலும், ஈராக் ஆட்சி தக்க ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என்று அந்த ஆட்சியைக் குற்றம் சாட்டி பிளிக்ஸ் அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கை அமெரிக்க அரசாங்கத்தால் தூண்டுதலில்லா ஒரு போரை முன்னேற்றுவதற்கு பற்றிக்கொள்ளப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த கட்டுரை ஒன்றில், இஸ்ரேலிய நாளேடு Haaretz சிரியாவிற்கு எதிரான இந்தப் புதிய கண்டறிதல்கள், அதேபோன்ற அரசியல் காரணங்களுக்காக திரித்தலுக்கு உட்பட்டுள்ள என்று சுட்டிக் காட்டியுள்ளது:

"ஒரு முற்றுப்பெறா இடைக்கால அறிக்கைக்கான தேவை என்ன? இதற்கான விடை வாஷிங்டன் மற்றும் பெய்ரூட்டில்தான் உள்ளது. டமாஸ்கசை தொல்லை தந்து தூண்டிவிட ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் ஆதரவு மூலம் சிரியாவிற்கு எதிராக குற்றம் சாட்டும் வகையிலான ஒருவகை சான்று வாஷிங்டனுக்குத் தேவைப்படுகிறது; ஏனெனில் ஈராக்கில் அச்சுறுத்தும் நிலைக்கு அது உதவுவதாக வாஷிங்டன் கருதுகிறது. அமெரிக்க நிர்வாகத்தின்படி, ஜோர்ஜ் டபுள்யூ புஷ், சிரியா மீது ஓரளவு பொருளாதாரத் தடைகளை கொண்டுவருவதற்கு உதவிய Syria Accountability Act இதற்குப் போதுமான வகையில் கடுமையானதாக இல்லை. சிரியாவுடனான அமெரிக்க வர்த்தகம் ஆண்டு ஒன்றிற்கு கிட்டத்தட்ட $300 மில்லியன் ஆகும்; ஐரோப்பா அதனுடன் கொண்டுள்ள வணிகத்தை $7 பில்லியனுக்கும் அதிகமாகும். எனவே சிரியாவின் கவனத்தை ஈர்ப்பதற்கு புஷ்ஷிற்கு ஐரோப்பிய ஒத்துழைப்பு தேவைப்படும்.

பொருளாதாரத் தடைகளையும் தாண்டி, ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரில் புஷ் நிர்வாகம் ஓர் இரண்டாம் முன்னணியை கொள்ள வேண்டும் என்று கருதுகிறது. "திட்டங்கள்: அடுத்து, சிரியாவின் மீது போர்" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை ஒன்றில் Newsweeek ஏடு, இம்மாத தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: "பென்டகனின் கடற்படை தளபதிகள், தரைப்படை தளபதிகளிடையே சிரியா, ஈரான் ஆகியவற்றின்மீது அமெரிக்க இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற திட்டத்தை நவீனப்படுத்தும் முயற்சி உள்ளது.... இரண்டு தொந்திரவு கொடுக்கு நாடுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை உடைய பாதுகாப்புத்துறை 'முன்பு இருந்ததை விடச் சுறுசுறுப்பாக உள்ளது' என்று நிர்வாக அலுவலர் ஒருவர் கூறுகிறார்."

சிரியாவின் மீது அமெரிக்க தாக்குதல்கள் உள்ளன என்ற செய்தித் தகவல்களும் வந்துள்ளன; மேற்கு ஈராக்கில் நடக்கும் சண்டைகள் எல்லை கடந்து வந்துள்ளன என்று சிலர் கூறுவதோடு மற்றவர்கள் அமெரிக்க சிறப்பு படைகள் வேண்டுமென்றே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஐ.நா. குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படுவதற்கு சில நாட்கள் முன்பு, வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் செனட்டின் வெளியுறவுக் குழுவின் முன்பு, மத்திய கிழக்கில் அமெரிக்கக் கொள்கை பற்றி, சாட்சியம் கொடுப்பதற்கு வந்திருந்தார். சிரியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு நிர்வாகம் தயார் செய்து கொண்டிருக்கிறதா எனக் கேட்கப்பட்டதற்கு, அவர் கூறிய பதிலாவது: "இராணுவப் படையினரை வைத்து எதுவும் செய்வது தொடர்பான அவரது தேர்வுகளை ஜனாதிபதி மேசையினின்று எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை."

குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர், ரோட் ஐலண்டின் லிங்கன் சாபீயால், அத்தகைய நடவடிக்கைக்கு தனியான சட்டமன்ற தீர்மானம் தேவைப்படாதா என்ற கேட்கப்பட்டதற்கு ரைஸ் விடையிறுத்தார்: "ஜனாதிபதியின் போர் அதிகாரங்களை குறைக்கும் முயற்சியில் நான் ஒன்றும் ஈடுபட விரும்பவில்லை. பயங்கரவாதத்தின்மீதான போர், ஈராக்கின்மீதான போர் ஆகியவற்றை ஜனாதிபதி முழுமையாகக் கொண்டுள்ளார் என்பதை நீங்கள் முழுமையாக அறிந்துள்ளீர்கள் என்று நான் கருதுகிறேன்."

செனட் உறுப்பினர், கனக்டிக்கட்-ஜனநாயகக்கட்சி, கிறிஸ்டோபர் டோட் வலியுறுத்தினார்: "உதாரணமாக வெள்ளை மாளிகையில் ஒரு சிரியா பற்றிய குழுக் கூட்டம் உள்ளது? இந்தக் குழுவில் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதும் திட்டம் ஒன்றை சிரியாவில் செயல்படுத்த திட்டமிடுகிறீர்களா? சிரியாவிற்கு எதிராக நாம் இராணுவ நடவடிக்கை எடுக்க விரும்புகிறோமா?"

ஆனால் ரைஸ் விடையிறுத்ததோ: "ஜனாதிபதி என்ன செய்யலாம் என்று கருதுகிறாரோ, அவற்றைப் பற்றி நான் பேச விரும்பவில்லை."

ஈராக்கில் நிகழும் போரினால் பெரும் முறியும் நிலைக்கு ஏற்கனவே அமெரிக்க இராணுவம் வந்துவிட்டபோதிலும், சிரியா மீது புதிய இராணுவ நடவடிக்கை எடுத்தல் என்பது நடக்காது எனக் கூறிவிட முடியாது. வாஷிங்டனில் திகைப்பூட்டும் அரசியல் நெருக்கடியைப் பெருகிய முறையில் எதிர்கொள்ளும் புஷ் நிர்வாகம் மற்றொரு இராணுவவாத நடவடிக்கை வெடிப்பை வெளியேறும் வழியாகக் கொள்ளக் கூடும்.

ஆனால் நிர்வாகத்திற்குள்ளேயே எந்தக் கொள்கையை தொடர்வது என்பது பற்றி தெளிவான வேறுபாடுகள் உள்ளன. அக்டோபர் 15 அன்று Times of London அமெரிக்க தூதரக அலுவலர்கள் டமாஸ்கசிற்கு ஒரு முன்மாதிரி திட்டத்தை லிபியாவில் கடாபி ஆட்சிக்கும் புஷ் நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மாதிரியில் அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டிக்கிறது. ஐ.நா. விசாரணைக்கு சிரியா முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது; ஹரிரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளை ஒப்படைத்துவிடுதலும், லெபனானில் அனைத்து நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுவதும், ஈராக்குடன் தன்னுடைய எல்லையை மூடிவிடுதலும் இதில் அடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பதிலாக வாஷிங்டன் தன்னுடைய உறவுகளை முன்போல் ஏற்படுத்திக் கொண்டுவிடும்.

ஆனால் பல அறிக்கைகளின்படி, செய்தித்தாள் கட்டுரையே அத்தகைய ஒப்பந்தத்தை எதிர்க்கும் நிர்வாகத்திற்குள் இருக்கும் கூறுபாடுகள் வேண்டுமென்றே செய்துள்ள கசிவு என்றும், அவ்வாறு வெளியிடுவதின்மூலம் திட்டத்தை மூழ்கடிக்கும் நோக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சமரசத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஐ.நா.விற்கு அமெரிக்க தூதராக இருக்கும் ஜோன் போல்டனும் ஒருவராவார்; முன்னாள் ஆயுதக் கட்டுப்பாடு, சர்வதேச பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர் என்ற முறையில் சிரியா "பேரழிவு ஆயுதங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது", அதே நேரத்தில் "பயங்கர வாத குழுக்களுடனும்" நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறது என்ற நிலையை இவர் சித்தரிக்க முற்பட்டார். அக்டோபர் 14ம் தேதி லண்டனில் பேசுகையில், சிரியாவிற்கு "தக்க முறையில் பாடம் கற்பிக்க வேண்டும்" என்று போல்டன் அறிவித்தார்:

வாஷிங்டனை திருப்திப்படுத்தும் முயற்சிகளை நோக்கமாக கொண்டு பல நடவடிக்கைகளை அசத் ஆட்சி செய்துள்ளது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பின்னர், பஷர் அசத் அதிகாரபூர்வ இரங்கல்களை அனுப்பியதுடன், அமெரிக்க உளவுத்துறைக்கு தகவலும், உதவியும் அளித்தார்; அமெரிக்க CIA விருப்பத்திற்கேற்ப சந்தேகத்திற்கு உட்பட்டவர்களை சிரியாவிற்கு கொண்டுவந்து சித்திரவதைக்கு உட்படுத்துவதும் அதில் அடங்கியிருந்தது.

ஈராக்கின்மீதான படையெடுப்பை டமாஸ்கஸ் வெளிப்படையாக எதிர்த்தாலும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமல்லாத உறுப்பினர் என்ற முறையில் 2001ல் பாக்தாத் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் திரும்பிவருவதை அனுமதிக்க வேண்டும் எனக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது; 2003ல் அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஈராக்கிய மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கு ஐ.நா. ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற நடவடிக்கைக்கும் ஆதரவு கொடுத்தது.

இந்தக் கொள்கை பஷரின் தந்தை ஜனாதிபதி ஹபிஸ் அல் அசத், முதல் பாரசீக வளைகுடா போரின்போது அமெரிக்காவிற்கு கொடுத்திருந்த நேரடி ஆதரவு ஒத்துழைப்பின் தொடர்ச்சியைத்தான் பிரதிபலிக்கிறது.

ஆயினும் கூட இப்பொழுதுள்ள அமெரிக்க நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் டமாஸ்கஸ் கொடுக்கும் சலுகைகள் அனைத்தையும் பொருளற்றவை என்று நிராகரித்துள்ளன. ஆட்சி மாற்றம் தேவை என்னும் அமெரிக்க மூலோபாயத்தை அவர்கள் வலியுறுத்துவதோடு, அப்பகுதியில் அமெரிக்க மூலோபாய ஆதிக்கத்தை திணிப்பதில் இது ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கருதுகின்றனர்.

இந்த கணக்கீடுகளில் முக்கிய பங்கை கொண்டிருப்பது மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைக்கும், இஸ்ரேலின் வலது சாரி லிக்குட் முகாம் தொடரும் கொள்கைக்கும் இடையே உள்ள நெருக்கமான பிணைப்பு ஆகும். ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் கொள்கையை தயாரித்தவர்களில் லிக்குட்டின் ஆலோசகர்களாக இருந்த அமெரிக்க உயர் போர் அதிகாரிகளும் அடங்குவர். அவர்களுள் மத்திய கிழக்கில் துணை ஜனாதிபதி டிக் செனியின் ஆலோசகரான David Wurmser, அமெரிக்க பாதுகாப்புத் துறையில் முன்னாள் கொள்கை பிரிவு துணைச் செயலர் டக்லான் பீத் மற்றும் பென்டகனின் பாதுகாப்பு கொள்கை குழுவின் முன்னாள் தலைவரான Richard Perle ஆகியோர் ஆடங்குவர்.

இந்த மூவரும் ஒன்றாக 1996ம் ஆண்டு இஸ்ரேலில் பிரதம மந்திரியாக பொறுப்பேற்கும் பெஞ்சமின் நேதன்யகுவிற்காக, "ஒரு முழு முறிப்பு: பகுதியை கைப்பற்றுவதற்கு ஒரு புதிய மூலோபாயம்" என்ற தலைப்பில் ஆவணம் ஒன்றை தயாரித்தனர்; இதில் "சிரியாவை திரும்ப சுருட்டிக்கொள்ள வைத்தல்" என்ற கொள்கையும் இருந்தது. இந்த லிக்குட் கொள்கைதான் பெருமளவில் வாஷிங்டனால் ஏற்கப்பட்டது.

புஷ் நிர்வாகம் வரம்பிற்குட்பட்ட இராணுவ நடவடிக்கைகளான குண்டுவீச்சுக்கள், குறைந்த வகையில் எல்லைகளை தாக்குதல் போன்றவற்றை நடத்த முடிவெடுத்தாலோ அல்லது முழு அளவு படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நடத்த விரும்பினாலோ, விளைவுகள் பேரழிவை தருவதாக அமையும். அத்தகைய தாக்குதலின் முன்பு சிரிய இராணுவம் ஐயத்திற்கு இடம் இல்லாமல் சரிந்து போகும் என்றாலும், அமெரிக்க படைகள் மற்றொரு இடைவிடாத தடுப்புப் போரை எதிர் கொள்ள நேரும்; அதற்கு நாட்டின் 18 மில்லியன் மக்களுடைய ஆதரவு இருக்கும்; இதைத்தவிர அரபு மற்றும் இஸ்லாமிய உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடைய பரந்த ஆதரவும் இருக்கும்.

மேலும் சிரியாவில் அமெரிக்க சார்புடைய நம்பகத்தன்மை நிறைந்த எதிர்ப்பும் இல்லை. வாஷிங்டனுடைய ஆதரவிற்குட்பட்டு அமெரிக்காவை தளமாகக் கொண்டிருக்கும் The Reform Party of Syria வைப் பற்றி அந்நாட்டிலேயே அதிகம் தெரியாது. உண்மையான எதிர்ப்பை அசாத் ஆட்சி சந்திக்கிறது என்றால், அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்துதான்; இவர்கள் ஈராக்கில் நடக்கும் எழுச்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்; அல்லது ஹரிரி படுகொலையில் தொடர்பு உடையாதாக கூறப்படும் இராணுவ, உளவுத்துறையின் சில பிரிவுகள்தான்.

ஹரிரியின் கொலைக்கு இறுதிப் பொறுப்பு யார் என்று ஊகிக்கத்தான் முடியும்; ஆனால், இந்தக் கொலையை தனிமைப்படுத்தி சிரிய ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்த விரும்பும் அமெரிக்க தலைமையிலான பிரச்சாரத்தில் பாசாங்கு நாற்றம்தான் சூழ்ந்து வீசுகிறது

வெளியுறவு மந்திரி ஜாக் ஸ்ட்ரோ அறிவித்தார்: "சர்வதேச சமூகம் நீதிக்குத் தான் போராடும் என்று காட்டலாம். ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுவதற்காக அந்நாட்டின் தலைவர்களை தீர்த்துக் கட்டுவது என்ற நிலைமை பொறுத்துக் கொள்ளப்பட முடியாதது ஆகும்."

ஆயினும் வாஷிங்டனும் லண்டனும், பல ஆண்டுகளாக ஒரு பகுதியில் படுகொலை நிகழ்த்துவது என்பதை அரசாங்கக் கொள்கையாகக் கொண்டிருக்கும் இஸ்ரேலை பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. கடந்த மாதம் கூட, பிரதம மந்திரி ஏரியல் ஷரோன் இஸ்ரேலிய மந்திரிசபையின் அவசரக் கூட்டம் ஒன்றை "இலக்கு வைத்து நடத்தும் படுகொலைகளை" மீண்டும் நடத்துதல் என்ற முடிவை எடுப்பதற்குக் கூட்டினார். ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்ட இரவே இஸ்ரேலிய படுகொலை படைப் பிரிவு ஒன்று மேற்கு கரை கிராமமான அனபட்டிற்குச் சென்று Raed Ahmad Shehada என்ற உள்ளூர் தலைவரை சுட்டுக் கொன்றது.

1988ல் டுனீஸில் அபு ஜிகாத் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து சமீபத்தின் ஹமாஸ் நிறுவனரான ஷேக் அகமத் யாசின் மார்ச் 2004ல் படுகொலை செய்யப்பட்டது, அவருக்குப் பின் பதவிக்கு வந்த டாக்டர் அப்தெல் அஜிஸ் அல் ரன்டிசி ஒரு மாதத்திற்குள் கொல்லப்பட்டது வரை, பாலஸ்தீனிய தலைமைக்கு எதிராக நிகழ்த்தப்படும் நீண்டகால இஸ்ரேலியப் படுகொலைகளில் அவர் கடைசியாக உயிரிழந்தவர் ஆவார்.

இத்தகைய கொலைகளுக்கு பொருளாதாரத் தடைகள் வரவில்லை; இராணுவ நடவடிக்கை வரும் என்ற அச்சுறுத்தல்கள் வாஷிங்டனில் இருந்தோ லண்டனில் இருந்தோ கொடுக்கப்படவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved