World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The Asian tsunami, Hurricane Katrina and the Kashmiri earthquake: lessons for the working class

ஆசிய சுனாமி, கத்ரீனா பெரும்புயல் மற்றும் காஷ்மீர் பூகம்பம்: தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகள்

By Wije Dias, Socialist Equality Party presidential candidate
21 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

வடக்கு பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் மிகப் பெரும் பீதி கொடுக்கும் நிகழ்வு விரிந்து கொண்டிருப்பதை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்த்து வருகின்றனர். தெற்கு ஆசியாவை பேரழிவிற்குட்படுத்திய சுனாமி தாக்குதலுக்கு பத்தே மாதங்களுக்கு பின்னர், கத்ரீனா பெரும்புயல் தெற்கு அமெரிக்க மாநிலங்களை படர்ந்து கடந்து அழிவு கொடுத்த இரண்டே மாதங்களுக்கு பின்னர், காஷ்மீர் மற்றும் அதையடுத்த பகுதிகளில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தால் 70,000 மக்களுக்கும் மேலாக மடிந்துள்ளனர்.

கட்டுப்படுத்துவதற்கு இயலாத இயற்கை சக்திகள் அக்டோபர் 8 பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் ஆசிய சுனாமி மற்றும் அமெரிக்க பெரும் புயலை போன்றே, பெருகி விளைந்துள்ள மனிதத் துயரம், சமுதாயத்தேவைகளை முதலாளித்துவ சந்தையின் அராஜக தேவைகளுக்கு கீழ்ப்படுத்தும் காலம் கடந்து விட்ட ஒரு பொருளாதார முறையின் விளைவாகும். மிகப் பெரும் நில அதிர்வு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள அவசரகால சேவைகளின் பரிதாபகரமான நிலையை, சரியான முறையில் வீடுகள், சாலைகள் மற்ற உள்கட்டுமானங்கள் கட்டப்படாத நிலை, மற்றும் மருத்துவ வசதிகள், தொடர்பு வழிவகைகள் மற்றும் அத்தியாவசியமான பணிகள் போதிய அளவு இல்லா நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

தெற்கு ஆசியாவில் உள்ள உழைக்கும் மக்களுக்கு இஸ்லாமாபாத் மற்றும் புது தில்லியில் இருக்கும் ஆட்சிகளின் குற்றம் நிறைந்த ஒதுக்கித் தள்ளும் போக்கு பற்றியதில் மீண்டும் ஒரு புறநிலை படிப்பினை கொடுக்கப்பட்டுள்ளது மட்டும் அல்லாமல், வாஷிங்டன், லண்டன், டோக்கியோ மற்றய தலைநகரங்களில் இருக்கும் "உலகத் தலைவர்களின்" இழிந்த பாசாங்கையும் கபடவேடத்தை பற்றியும் படிப்பினையை தந்துள்ளது. நன்மையை விரும்பி ஏற்காத அக்கறை பற்றிய அனைத்து வெளிப்பாடுகளையும் பொறுத்தமட்டில், சர்வதேச உதவி, நிவாரணம் என சுமார் $300 மில்லியன் வழங்கப்போவதாக தகவல்கள் வந்தபோதிலும்கூட, தப்பிப் பிழைத்தவர்கள் மீண்டும் மறு வாழ்வு அமைத்துக் கொள்ளுவது ஒரு புறம் இருக்க, அந்த தொகை உடனடியான அவசரத் தேவைகளுக்கு கூட முற்றிலும் போதாததாக இருக்கிறது என்பது தெரிய வேண்டும்.

குறைந்தது 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களாவது வீடிழந்தவர்களாக உள்ளனர் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மலைப்பகுதிகளில் உள்ள சாலைகள் சீராக செப்பனிடப்படாததால், அவசர உதவியாளர்கள் அப்பகுதிகளை சென்று அடைய முடியவில்லை; இதைத்தவிர ஹெலிகாப்டர் போக்குவரத்தும் மிகக் குறைவாக உள்ளது. ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு செவ்வாயன்று கொடுத்துள்ள அறிக்கையின்படி அன்றுவரை ஐந்து லட்சம் மக்களுக்கும் மேலானவர்களுக்கு இன்னும் எந்த உதவிப் பொருட்களும் சென்று சேரவில்லை. காயமுற்றவர்கள் பல திசைகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளதால் பொது மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக குடியிருப்புக்கள் உடனடியாக சரிந்துபோனவர்கள் மற்றும் அனைத்தையும் இழந்து நிற்பவர்கள் ஆவர்.

சர்வதேச உதவி போதுமானதாக இல்லை என்பது பற்றி தயக்கத்துடன் நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னன் விமர்சித்துள்ளதோடு ஓர் இரண்டாம் பேரழிவும் வரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இமாலயக் குளிர் காலம் தொடங்கிவிட்டால், ஏற்கனவே பூஜ்யத்திற்கும் குறைவான குளிரில் இருக்கும் மக்கள் போதிய உறைவிடம், உடை, உணவுப் பொருட்கள் இல்லாமல் நூறாயிரக்கணக்கில் வாடுவர். தக்க உதவி அளிக்கப்படாவிடில், ஆயிரக் கணக்கான மக்கள் குளிரினாலும், தடுக்கப்படக்கூடிய நோய்களினாலும் இறந்து விடுவர் என்று அன்னன் முன்கணித்துள்ளார்.

இந்திய துணைக் கண்டத்தை பீடித்துள்ள வறுமையின் ஆதாரம் ஒன்றும் பெரும் புதிர் அல்ல. ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்படும் நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளின் அன்றாட நடவடிக்கைகளின் விளைவுதான் இது. நாடுகடந்த நிறுவனங்களின் மிகப் பெரிய இலாபங்களானது, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிடைக்கும் வற்றாத குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை நேரடியாக நம்பியுள்ளது. தெற்கு ஆசியா முழுவதும் நூறு மில்லியன் கணக்கில் மக்கள் மிக வறிய நிலையில் வாழ வேண்டிய நிலைதான், நியூ யோர்க், டோக்கியோ மற்றும் லண்டனில் இருக்கும் உயர் செல்வந்தர்களின் படாடோப வாழ்க்கை முறைக்கு தேவையான முன் நிபந்தனை ஆகும்.

ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க பகுதிகளில் இருக்கும் வறிய மக்கள் பால் ஆளும் வட்டங்கள் கொண்டுள்ள இழிவையும் பொருட்படுத்தாத தன்மையையும்தான், இந்த பூகம்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர் எதிர்கொள்ளும் நிலை பிரதிபலித்துக் காட்டுகிறது. 50 மில்லியன் டாலர் பண உதவி மற்றும் ஒரு சில இராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டிற்கென ஒதுக்கப்படும் என்று வாஷிங்டன் உறுதிமொழி கொடுத்துள்ளது, ஈராக்கையும் அதன் பரந்த எண்ணெய் வளங்களையும் கட்டுப்படுத்துவதற்காக செலவிடப்படும் மாபெரும் அமெரிக்க இருப்புக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது மங்கிய தன்மையுடன் முக்கியத்துவமற்றதாகத்தான் நிற்கிறது.

உலக பங்குச் சந்தைகள் பூகம்பத்தின் பாதிப்பை சிறிதும் கொள்ளவில்லை; ஏனெனில் இது அவர்களுடைய முக்கிய முதலீட்டையோ அல்லது முக்கிய வளத்தையோ பாதிப்பிற்குட்படுத்தவில்லை. பூகோள பெருவணிக உயர் தட்டினரை பொறுத்தவரையில், பூகம்ப பாதிப்பாளர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக தியாகம் செய்யப்படக்கூடியவர்களே. உலக முதலாளித்துவ அமைப்பிற்குள்ளே அவர்களின் ஒரே தொழிற்பாடு, உலகின் மற்ற பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் கூலிகள் மற்றும், வேலை நிலைமைகளை குறைப்பதற்கு அழைக்கப்படக்கூடிய மிகப் பெரும் தொழிலாளர் திரட்டின் ஒரு பகுதியாகத்தான் ஆகும்.

புஷ், பிளேயர் மற்றும் ஏனைய தலைவர்கள் தங்கள் அக்கறையை உதவி மற்றும் பலவற்றை தருவதாகக் கூறியிருப்பதை பொறுத்தவரையில், இது, அப்பகுதியில் தங்களுடைய உள்ளூர் கூட்டாளிகளை தக்க வைக்கும் வகையிலும், தங்களுடைய சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய செயற்பட்டியல்களை முன்னெடுக்கவும்தான். ஆதரவு கொடுப்பதற்காக பாகிஸ்தானிய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்குமான அவரது ஆதரவிற்காக ஏற்கனவே முற்றுகைக்கு ஆளாகியுள்ளார். இப்பொழுது அவருடைய அரசாங்கம் பூகம்ப பாதிப்பாளர்களுக்கு போதிய உதவி செய்யத்தவறியது மீதான பெரும் சீற்றத்துடன் கூடிய விமர்சன அலையை எதிர்கொண்டிருப்பது, அதிகாரத்தின்மீதான இவருடையை ஆட்டம்காணும் பிடியை மேலும் கீழறுக்கின்றது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறும் சமாதான நடைமுறை என்று அழைக்கப்படுவனவற்றை மேலும் அதிகப்படுத்துவதற்கு இந்தப் பெரும் துயரத்தை வாஷிங்டனும் கூட பயன்படுத்த நம்பிக்கை கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்களையும் அண்மையில் 2002ல் மற்றொரு போர் மூளும் அச்சுறுத்தலை விளைவித்துள்ள, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பூசலின் மையத்தானத்தில் காஷ்மீர் உள்ளது. புஷ் நிர்வாகம், துணைக் கண்டத்தில் "சமாதானம்" என்பதற்கு உந்துதல் காட்டுவது, பூகோள பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கத்திற்கான அமெரிக்காவின் பரந்த பேரவாக்களின் ஒரு பகுதிதான். இந்த திட்டங்களில் சீனாவிற்கு எதிராக எதிர்கால கூட்டாளியாகவும் மலிவான கூலி உழைப்பிற்கான பெரும் வளமாகவும் இந்தியா ஒரு முக்கிய கூறாக இருக்கிறது.

300,000 மக்களுக்கும் மேலானோரை இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் இந்தியாவில் ஆசிய சுனாமி கொன்றதற்கு உலகத் தலைவர்களின் விடையிறுப்பும் இதே வகையில்தான் இருந்தது. பெரும் துயரத்தை பற்றி சாதாரண மக்கள் உலகம் முழுவதும் அபரிமிதமாக பரிவுணர்வை பொழிந்ததும் மற்றும் அக்கறையை காட்டியதும் இவர்களுடைய அக்கறையில்லா தன்மையை அம்பலப்படுத்திவிடும் என்ற நிலை வரும் வரைக்கும புஷ்ஷும் பிளேயரும் தங்கள் விடுமுறை திட்டத்தை கூட மாற்றிக் கொள்ளக்கூட மறுத்தனர். பெருந்துயரத்தின் வெங்கொடுமை புலனாகிய பின்னர் வெள்ளை மாளிகை, இலங்கையிலும் இந்தோனேசியாவில் ஏசே மாநிலத்திலும் "சமாதான வழிவகைகளுக்காக" அழுத்தம் கொடுத்தல் உள்பட, அதைத் தன்னுடைய சொந்த நலன்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. தெற்கு ஆசியாவில் தன்னுடைய இராணுவத்தை நிற்கவைத்தலை மீளநிலைநாட்டுவதற்கான அமெரிக்காவின் நீண்டகால பேரவாக்களை ஒட்டி, அமெரிக்கப் படைகள் இந்தோனேசியா, இலங்கை ஆகியவற்றில் நடைபெற்ற உதவிப் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டன.

பேரழிவு முடிந்த பத்து மாதங்களுக்கு பின்னரும், பல்லாயிரக்கணக்கான தப்பிப் பிழைத்தவர்கள் இன்னும் இழிந்தநிலையில், தற்காலிக குடியிருப்புக்களில், எந்த உடனடி எதிர்கால வாய்ப்பு வளத்தையும் எதிர்பார்க்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஜனவரி மாதம் ஜாகர்த்தா உச்சி மாநாட்டில் பெரும் ஆடம்பரத்துடன் உறுதிமொழியளிக்கப்பட்ட 4 பில்லியன் டாலர் நிவாரணத்தொகை ஒருபோதும் காரியசித்தியாகவில்லை. குறைந்தது 80,000 வீடுகளாவது அழிந்திருந்த இலங்கையில் புதிய வீடுகள் 1,126 தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; இன்னும் 15,619 வீடுகள் பல கட்டங்களில் முடிவுறா நிலையில் உள்ளன. கொழும்பை வந்தடைந்த மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச உதவித் தொகையின் பெரும்பகுதி எளிதில் மறைந்தே போயிற்று.

அமெரிக்கத் தொழிலாள வர்க்கம்

கத்ரீனா பெரும்புயல் தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் பெரிய படிப்பினைகளை கொடுத்துள்ளது. இந்தக் கொடூரமான சோகம், உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தானமான அமெரிக்காவில் வர்க்க உறவுகளின் உண்மை நிலையை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளது.

முதலில், அமெரிக்காவில் வர்க்க வேறுபாடுகள் இல்லை, எவரும் வறுமையில் இல்லை, தேவையின் பிடியில் இல்லை என்று கூறப்பட்டுவந்த கற்பனைக் கதைகளுக்கு இது பெரும் சவுக்கடி கொடுத்தது. காஷ்மீர் அல்லது இலங்கை போன்றே நியூ ஓர்லீயன்ஸில் பாதிக்கப்பட்டவர்கள் வறியவர்களே ஆவர். கார்கள் வைத்திருந்தவர்கள் நகரத்தை விட்டு நீங்கிச் சென்றனர்; அவ்வாறு செல்லமுடியாதவர்கள் Superdome மற்றும் மாநாட்டு மையம் இவற்றில் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் வகையினை நாடவேண்டியதாயிற்று. இந்தப் பேரழிவுப் பகுதிகளில் இருந்த காட்சிகள், காலேயிலோ, பண்டா ஏசேயிலோ படமெடுக்கப்பட்டவை எனக் கூறுவது போல் இருந்தன என்று வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆசியாவில் பல தீவிர தேசிய வாதிகள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை கைவிட்டுவிட்டனர், அல்லது அது இருக்கவில்லை என்று கூட மறுத்திருந்தனர். ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கும் தொழிலாளர்களை போலத்தான் அமெரிக்க தொழிலாள சகோதரர்களும், சகோதரிகளும் உள்ளனர் என்ற அடிப்படை வர்க்க உண்மை இப்பொழுது அனைவரும் உணரும் வகையில் வெளிப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, நியூ ஓர்லியன்ஸில் இருக்கும் உழைக்கும் மக்களின்பாலான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மனோபாவம் துல்லியமாக ஆசிய சுனாமி மற்றும் காஷ்மீர் பூகம்ப பாதிப்பாளர்களின்பால் கொண்டிருந்ததை போலத்தான் காணப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் தெற்கு ஆசியாவில் நிலைகுலைந்திருந்த வறிய கிராம மக்களுக்காக தன்னுடைய விடுமுறை திட்டத்தை எப்படி மாற்றிக் கொள்ள புஷ் விரும்பவில்லையோ, அதையும்விட ஆகஸ்ட் மாதமும் அமெரிக்க தொழிலாளர்களுக்காக தன்னுடைய விடுமுறைத்திட்டத்தை அவர் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. கத்ரீனா பெரும்புயல் தாக்குதலின் முன்பும், பின்னரும், அது தாக்கிய போதும், புஷ் நிர்வாகத்தின் பதிலின் பின்னே இருந்த வழிகாட்டும் நெறிமுறை, பெருநிறுவன உயர் செல்வந்த தட்டுக்களின் நலன்களை பாதுகாப்பது என்பதாகத்தான் இருந்தது.

பல நாட்கள் எச்சரிக்கை இருந்திருந்த போதிலும்கூட, பெரும் பாதிப்பிற்குட்படக்கூடிய மக்களை காப்பாற்றும் வகையில் அரசாங்கம் எந்த முயற்சியையும் செய்யவில்லை. பெரும் புயலுக்கு பின்னர் மறுசீரமைப்பு திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு விடவும், சாதாரண சமூகத்தை இராணுவம யமாக்கும் அதன் திட்டங்களையும் அது முன்னெடுப்பதற்கும் இந்தப் பேரழிவை பயன்படுத்திக் கொண்டது. இலங்கையிலோ, பாகிஸ்தானிலோ, அமெரிக்காவிலோ தெருக்கள் முழுவதும் நிறைய ஆயுதமேந்திய துருப்புக்களை கொண்டு நிரப்புவது, உதவியை வழங்குவதற்காக அல்ல, மாறாக தனியார் சொத்துக்களை பாதுகாக்கவும் எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் ஆகியவை வெளிப்பட்டால் அவற்றை நசுக்கவும்தான் என்பது ஆளும் வர்க்கத்தின் தொடை நடுங்கும் தன்மையைத்தான் வெளிப்படுத்தியது.

மூன்றாவதாக, சந்தை பற்றி கற்பனையையும் கத்ரீனா பெரும்புயல் அம்பலப்படுத்தியுள்ளது. தங்கள் திட்டம் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு "பொருளாதார சீர்திருந்தவாத" பிரச்சாரகர்கள் பல தசாப்தங்களாக அமெரிக்காவைத்தான் உதாரணமாக காட்டி வந்துள்ளனர். தங்களை விமர்சிப்போரை அமைதிப்படுத்துவதற்கு அவர்கள் எப்பொழுதும் "உடனடியான வேதனை" இறுதியில் "வருங்கால நலனுக்கு" வழிவகுக்கும் என்று வாதிட்டு வந்தனர். அமெரிக்காவில் இருக்கும் பெரும் செல்வத்தின் உதாரணத்தைக் காணுங்கள்! அமெரிக்க பொருளாதாரம் பல தசாப்தங்களாக மறுசீரமைக்கப்பட்டது செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஆழ்ந்த பிளவை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், முற்றிலும் சரிந்துள்ள உள்கட்டுமானம் மூன்றாம் உலக நிலைமையை ஒத்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் மெக்சிகோ வளைகுடாவில் வரும் பெரும் புயல் பாடப்புத்தகங்களில் விளக்கப்பட்டாலும், அரசாங்க நிறுனங்கள் நிகழ்விற்கு முன் மக்களை வெளியேற்றுவதற்கு முற்றிலும் திறன் அற்று இருந்தன; நிகழ்விற்கு பின்னர் அடிப்படை அவசர சேவைகளை வழங்குவதற்கும் திறனற்று இருந்தனர்.

கடந்தவாரம் தொலைக்காட்சி காமெராக்களுக்கு முன்னால் மிகக்குறிப்பிடத்தக்க வகையில் சீற்றத்தை காட்டிய ஜனாதிபதி முஷாரஃப், கத்ரீனா பெரும்புயலில் இருந்து பாகிஸ்தானிய ஆளும் செல்வந்த தட்டு கற்றுக் கொண்ட படிப்பினையை தன்னையும் அறியாமல் உளறிக் கொட்டினார். பெருகிவரும் விமர்சனங்களிடம் இருந்து தன்னை காத்துக் கொண்ட நிலைப்பாட்டில், தளபதி பெரும் திகைப்பின் விளிம்பில் நின்று, 24 மணி நேரம்தான் ஆகியுள்ளது, ஜனாதிபதி புஷ்கூட இன்னும் கூடுதலான நேரத்தை பெரும்புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொடங்குவதற்கு முன் எடுத்துக் கொண்டார் என்று கூறினார். வேறுவிதமாகக் கூறினால், தன்னுடைய அரசாங்கம் பூகம்ப பாதிப்பாளர்களுக்கு உதவியையும் நிவாரணத்தையும் கொடுப்பதில் தோல்வியடைந்ததை நியாயப்படுத்தும் வகையில், புஷ் நிர்வாகம் குற்றம் சார்ந்த முறையில் பொறுப்பற்ற தன்மையையும் இகழ்வு உணர்வையும் நியூ ஓர்லியன்ஸ் உழைக்கும் மக்களின்பால் காட்டியதை இவர் பற்றிக்கொண்டார்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் முற்றிலும் மாறுபாட்ட முடிவுகளைத்தான் கொள்ள வேண்டும். அனைவருக்கும் தரமான வாழ்க்கைத் தரம் தருவது ஒரு புறம் இருக்க, இயற்கை பேரழிவின்போது அடிப்படை பாதுகாப்பு கூடக் கொடுக்க முடியாத ஒரு பொருளாதார, சமூக ஒழுங்கு இருப்பதற்கு தகுதி அற்றது. நியூ ஓர்லியன்சிலோ, கொழும்பிலோ, அல்லது இஸ்லாமாபாத்திலோ, இலாபமுறையையும், உலகத்தை தேசிய அரசுகளாக பிரிக்கும் அதன் காலத்திற்கொவ்வாத பிரித்தலையும் அகற்ற வேண்டும் என்பதில் தொழிலாளர்கள் ஒரு பொது அக்கறையை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்திய துணைக் கண்டத்தில் இத்தகைய முதலாளித்துவ அரசு அமைப்பின் பிற்போக்குத் தன்மை காணப்படுவது போல் வேறு எங்கும் காணவியலாது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள், உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தினர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட இழிவான ஒப்பந்தத்தின் விளைவினால் தோற்றுவிக்கப்பட்ட, இந்தியா மற்றும் பாகிஸ்தானை உருவாக்கிய 1947ம் ஆண்டு வகுப்புவாதப் பிரிவினை, அரைநூற்றாண்டுக்கால போர்களையும் படுகொலைகளையும்தான் கண்டுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி இன்றைய இந்தியாவில் பிறந்தவர், இந்தியாவின் பிரதம மந்திரி தற்போதைய பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதும் இந்தப் பிளவுகளின் அபத்தத்தை நன்கு எடுத்துக் காட்டுகிறது; ஆயினும்கூட இருவரும் நிலப்பகுதியில் ஒரு அங்குலத்தை விட்டுக் கொடுப்பதைக்காட்டிலும் ஒரு அணுவாயுதப் போரை தொடங்கத் தயாராக இருப்பர்.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா என்ற தேசிய எல்லைகளை எவ்வாறு டிசம்பர் 26 சுனாமி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையோ, அதேபோல், அக்டோபர் 8ம் தேதி பூகம்பமும் காஷ்மீரில் இருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கருத்திற் கொள்ளவில்லை. ஆயினும்கூட கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு இரு புறமும் உள்ள இந்திய, பாகிஸ்தானிய படைகளின் உடனடி அக்கறை பாதிப்பாளர்களுக்கு உதவுவது என்றில்லாமல் எதிர்நாடு கூடுதல் நலன்களை கொண்டுவிடக் கூடாது என்பதில்தான் இருந்தது. சமாதானம் வருவதை பற்றிச் செய்தி வர்ணனையாளர்கள் ஊகித்துக் கொண்டிருக்கையில், காஷ்மீரில் அமெரிக்க ஆதரவுடைய எந்தத் திட்டமும் தற்காலிக தள்ளிவைப்பு என்பதைத் தவிர வேறு பலன் எதையும் தராது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆளும் வர்க்கங்கள் வறுமையில் இருக்கும் மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் தங்களின் ஆட்சிக்கு முண்டுகொடுக்கும் வழிமுறையாக வகுப்புவாத, தேசியவாத அரசியல் உணர்வை திரும்பத்திரும்ப தூண்டிவிட்டு வருகின்றனர்.

இந்திய துணைக் கண்டம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு, திவாலாகிவிட்ட முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு சோசலிச மாற்றீட்டை முன்னெடுக்கும் வகையில், இலங்கை ஜனாதிபதி தேர்தலில், சோசலிச சமத்துவ கட்சியின் வேட்பாளராக நான் நிற்கிறேன். தொழிலாள வர்க்கத்தின் நண்பர்கள் கொழும்பு, புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் இருக்கும் அதிகார தாழ்வாரங்களில் காணப்பட மாட்டார்கள், மாறாக இப்பகுதி முழுவதும் மற்றும் அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் இருக்கும் அவர்களுடைய வர்க்க சகோதார சகோதரிகளின் மத்தியில்தான் காணப்பட முடியும். மிகச்சிறிய சிலரின் இலாபநோக்கங்களை காட்டிலும் பெரும்பான்மையினரின் முக்கிய உடனடித்தேவைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையிலான ஒரு சமூக அமைப்பால் முதலாளித்துவத்தை பதிலீடு செய்வதற்கான பூகோளப் போராட்டத்தின் பகுதியாக இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் தொழிலாள வர்க்கம் அனைத்தையும் அணிதிரட்டுவதற்கும் ஐக்கியப்படுத்துவதற்குமான வழிமுறையாக தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக நாம் போராடுகிறோம்.

See Also:

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸ், இலங்கை ரூபவாஹினி தொலைக் காட்சி சேவையில் ஆற்றிய உரை

இலங்கை: ஜாதிக ஹெல உறுமய--இராஜபக்ஷ உடன்படிக்கையும் பெளத்த மேலாதிக்கவாதத்தின் பிற்போக்கு பாத்திரமும்

இந்தியாவில் ஒரு நாள் பொதுவேலை நிறுத்தம் சோசலிச சர்வதேசிய மூலோபாயத்தின் அவசியத்தை வெளிக்காட்டுகின்றது

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக யுத்த ஆபத்து உள்ளது

Top of page