தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
எமது கட்சி தொழிலாள வர்க்கம் இரண்டு பெரும் ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலைமையிலேயே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதில் முதலாவது, 20 வருடகாலமாக 60,000க்கும் மேற்பட்ட சிங்கள தமிழ் உயிர்களை பலி கொண்ட, பத்துலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை அவர்கள் இருந்த இடத்தை விட்டு இடம்பெயரச் செய்த, கொடூரமான யுத்தம் மீண்டும் வெடிப்பதற்கான அச்சுறுத்தல் இருந்து கொண்டுள்ளது. இரண்டாவது, மக்கள் முகம் கொடுத்திருக்கின்ற வாழ்க்கை செலவு மற்றும் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் எதற்கும் ஒரு தீர்வை வழங்க முடியாத முதலாளித்துவ ஆளும் தட்டு சர்வாதிகார வழிமுறைக்கு மாறுவதற்கு முயற்சிப்பதாகும். முதலாவதாக யுத்தத்தை மீண்டும் கிளறிவிடும் ஆபத்து வளர்ந்து முற்றுவது எவ்வாறு என்று ஆராய்ந்து பார்ப்போம். 20 வருட காலங்கள் தொடர்ந்த யுத்தத்தை பற்றி எந்தவொரு அக்கறையுமின்றி இருந்த ஏகாதிபத்திய சக்திகளும் வர்த்தகர்களும், இன்று அதற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு அவசியம் என்ற யோசனையை முன்வைத்துக் கொண்டு, விசேடமாக 1990களின் கடைப் பகுதியளவில் ஒரு முயற்சியை மேற்கொண்டனர். இதன் விளைவாகவும் இந்த அழுத்தத்தின் கீழும் 2000ம் ஆண்டில் ஜனாதிபதி குமாரதுங்க அதிகாரத்தை பரவலாக்கும் ஒரு அரசியலமைப்பு யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதே போல் 2001ம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் 2002 பெப்பிரவரியில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுக்கொண்டு, அதே ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இவர்களில் எந்த சாராரும் சமாதானத்தை அடையும் விருப்பத்தினால் அல்லது ஈர்ப்பினால் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. இலங்கையில் உள்நாட்டு யுத்தமானது, இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தை கீழறுப்பதாக அவர்கள் கண்டார்கள். அத்துடன் இந்தியா திறந்த பொருளாதாரத்தை விரிவுபடுத்தியுள்ள அளவில், அந்த நாட்டின் அரசியல் நிலைமையை ஸ்திரமற்றதாக்கும் காரணியாகவும் கண்டனர். இதற்கு ஒரு முடிவு காண்பதற்காகவே அவர்கள் சமாதானம் பற்றிய உத்வேகத்தையும் அக்கறையையும் காட்டினர். ஆயினும் இந்த சமாதான முன்னெடுப்புகளுக்கு என்ன நடந்தது? நாம் கண்டது என்னவென்றால், 2001 தேர்தலில் தோல்வி கண்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி, யுத்த நிறுத்தத்திற்கு எதிராகவும் சமாதான பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை சிதறடிக்கவும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்தது. இனவாத ஜே.வி.பியின் பக்கபலத்துடனும், அத்துடன் யுத்தத்திற்கு கையசைத்து அழைப்பு விடுக்கும் இராணுவத்தின் சில பகுதியினரது ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு, இந்த பிரச்சாரம் சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்ட அந்த வருடம் பூராவும் தொடர்ந்து நடந்தது. இதன் பிரதிபலிப்பாக சமாதான முன்னெடுப்புகள் ஓரத்தில் தள்ளப்பட்டன. ஆனால் சமாதான முன்னெடுப்புகள் தடைப்பட்டது அல்லது தகர்ந்து போனது, தமிழ் மக்களின் எந்தவொரு அடிப்படை பிரச்சினைக்கும் வெற்றிகரமான உண்மையான தீர்வை பெற்றுக் கொடுக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தால் முடியாததாலும் அதன் வங்குரோத்து நிலைமையினாலுமே ஆகும். இந்த நிலைமையின் கீழ் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் முன்நிலையில் தமது முகத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை முன்வைத்தனர். ஆனால் அது முன் வைக்கப்பட்ட உடனேயே தென் பகுதி அரசியல் தேன்கூட்டுக்கு கல்லெறிந்தது போல் ஆகியது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் இந்த நடவடிக்கை சம்பந்தமாக இரண்டுங் கெட்டான் நிலையில் இருந்த அதேவேளை, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உற்சாகமான பிரச்சாரத்தில் ஜே.வி.பி யும் தேசாபிமான தேசிய இயக்கமும் ஈடுபட்டிருந்ததுடன் இத்தகைய இயக்கங்களை உருவாக்கிக் கொண்டு முன்னணிக்கு வந்தன. இந்த நிலைமையின் கீழ், ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு 2003 நவம்பரில் மூன்று அமைச்சுப் பதவிகளை அபகரித்துக் கொண்டதுடன், சில மாதங்களின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும்போதே, ஜனநாயக விரோதமான முறையில் பதவி விலக்கினார். 2004 ஏப்பிரல் மாதத்தில், சுதந்திர முன்னணி அரசாங்கத்தை அமைத்த பின்னர், சில மாதங்கள் தேசிய பிரச்சினையை தீர்த்தல் என்ற விடயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிராத வரை அவர் தொடர்ந்தார். பெரும் வல்லரசுகளதும் மற்றும் வர்த்தகர்களதும் அழுத்தத்தின் பின்னர், விசேடமாக சுனாமி பேரழிவின் பின்னர், சமாதான முன்னெடுப்பை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும், அதற்காக விடுதலைப் புலிகளை வளைத்துக் கொள்ள வேண்டும் என்ற விடயம் முன்வைக்கப்பட்டவுடன், அந்த கூட்டணிக்குள் நெருக்கடியானது பற்றி எரியத் தொடங்கியது. இதன்படியே, குறிப்பாக சுனாமி நிவாரணக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எடுத்த முடிவிற்கு எதிராக, ஜே.வி.பியினதும் ஹெல உறுமயவினதும் பேரினவாத பிரச்சாரம் உயிர்பெற்றெழுந்தது. இந்த நிலைமைகளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி ஜூன் மாதமளவில் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. அத்துடன் உயர் நீதிமன்றம் பொதுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை சிக்கலுக்குள்ளாக்கிய அல்லது அதை நடைமுறைப்படுத்த முடியாததாக்கும் ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த நிலைமைகளின் கீழேயே இப்போது இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது. இதன் காரணமாக நாம் சோசலிச சமத்துவக் கட்சி என்ற வகையில் சுட்டிக் காட்டுவது என்னவென்றால், யுத்தத்தை நிறுத்துவதற்காகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக்கொண்டு சர்வாதிகார திட்டத்தை தோற்கடிப்பதற்காகவும், இந்த நாட்டின் தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும், அரசியல் ரீதியில் சுயாதீனமாக, சகல முதலாளித்துவ கட்சிகளிலில் இருந்தும் பிரிந்து ஒரு அரசியல் நிலைப்பாட்டில் நின்றுகொள்ள முன்வர வேண்டும். யுத்தத்தை நிறுத்த வேண்டுமானால் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இலங்கை இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்க வேண்டும். அத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டு பிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக சுற்றிவளைத்து அமைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயம் சுருட்டிக்கொள்ளப்பட்டு, அந்த நிலங்களும் வீடுகளும் அதன் சட்டபூர்வ உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன் யுத்தத்தை நிறுத்தவும், சர்வாதிகாரத்தை தோற்கடிக்கவும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கவும் புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்பட வேண்டும். அரசியலமைப்பை வரையும் சபை ஒன்று ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அந்தப் பணிக்காகவே அமைக்கப்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரைக்கின்றது. இது 1972ல் மற்றும் 78ல் பாராளுமன்ற ஒழுங்கை மாற்றி அரசியலமைப்புச் சபை அமைக்கப்பட்டது போல் அன்றி, அரசியலமைப்பு மக்கள் மத்தியில் கலந்துரையாடப்படுவதற்கும் மேலாக, அதை வரைவதற்காகவே அமைக்கப்படும் ஒரு பிரதிநிதிகள் சபையாக அமைய வேண்டும். இந்த அரசியலமைப்பை வரையும் சபை, இன, மத, மொழி போன்ற சகல பேதங்களையும் தூக்கியெறிவதற்காக, ஒரு நிலைப்பாட்டை எடுத்தல் வேண்டும். அத்துடன் அனைத்து ஒடுக்குமுறையான சட்டங்களையும், அவசரகால சட்டங்களையும், மக்கள் பாதுகாப்பு சட்டத்தையும் மற்றும் பயங்கரவாத சட்டங்களையும் தூக்கியெறிந்து, ஜனநாயக உரிமைகளை சமமானதாக்க, சகல மக்கள் பிரிவினரதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக, ஒரு அரசியலைமைப்பு முன்வைக்கப்படல் வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி, யுத்தத்தை நிறுத்தவும் சர்வாதிகார அச்சுறுத்தலை தவிர்க்கவும் இந்த வேலைத் திட்டத்தை முன்வைக்கின்றது. இந்த நிலைமைகளின் கீழேயே, இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் முகம்கொடுத்திருக்கின்ற வாழ்க்கைச் செலவு பிரச்சினையை தீர்ப்பது எவ்வாறு, அதற்காக முன்வைக்கப்பட வேண்டிய வேலைத்திட்டம் என்ன என்பது பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் காண்பதுபோல், சகல தேசியவாத வேலைத் திட்டங்களும், நிகழ்கால பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளின் கீழ், வங்குரோத்து நிலைமைக்கும் பயனற்ற நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே மக்களின் அவசியங்களை இட்டு நிரப்பும் புதிய பொருளாதார வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவதற்காக உலக தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக்காட்டுகிறது. சோசலிச மாற்றத்திற்காக போராடுகின்ற, அதற்குத் தேவையான நனவில் உலகத் தொழிலாள வர்க்கத்தை பயிற்றுவிக்கின்ற ஒரு உலக இயக்கம் அவசியம். அது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும். அதன் ஊடக வெளியீடு உலக சோசலிச வலைத் தளமாகும். இலங்கையில் 50 வருடகால முதலாளித்துவ ஆட்சியின் கீழ், தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள், தொழிலாளர்களின் தொழில், அவர்களின் வேலை நிலைமைகள், மற்றும் விவசாய மக்களின் விவசாய நில பிரச்சினைகள் மற்றும் விவசாயத்தை மேற்கொள்வதற்காக அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், அத்துடன் அவர்களின் உற்பத்திகளை விற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு முதலாளித்துவம் அவர்களை தள்ளியுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு சோசலிச வேலைத் திட்டத்தைத் தவிர வேறு வேலைத் திட்டங்கள் கிடையாது. ஆனால் சோசலிசத்தைப் பற்றி பேசுகின்ற இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்கின்ற கட்சிகள், முன்னைய தேர்தல்களிலும் இந்தத் தேர்தலிலும் கூட, மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கும் இரு முதலாளித்துவ கட்சிகளுக்கும் வால் பிடிப்பவர்களாகவும் முண்டு கொடுப்பவர்களாகவுமே செயற்பட்டு வந்துள்ளன. இதில் ஐக்கிய சோசலிசக் கட்சியும் புதிய இடதுசாரி முன்னணியும் முக்கிய இடம் வகிக்கின்றன. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் வெளித் தோன்றுவதையே எதிர்க்கின்றனர். இவ்வாறான வேலைத்திட்டத்தில் நிலைகொண்ட தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை வகிப்பதை அவர்கள் எதிர்க்கின்றார்கள். இதன் காரணமாகவே நாங்கள் அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், இந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் சக்தியாக அணி திரட்டுவதற்காக, அதனைச் சூழ சிங்கள, தமிழ், முஸ்லிம் வெகுஜனங்களை அணிதிரட்டவும், முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி, அரசியல் ரீதியில் தொழிலாளர் விவசாயிகளின் அரசாங்கத்தை, ஸ்ரீலங்கா -- ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிக்க போராடுகிறோம். அந்த அரசு, இந்த நாட்டில் 1948ல் ஸ்தாபிக்கப்பட்ட பொருத்தமற்ற ஒரு குட்டி செயற்கை அரசிற்கு பதிலாக, ஐக்கிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை முழு தெற்காசியா பூராவும் ஸ்தாபிப்பதற்காக, முன்னணி வகிக்கும் அரசியல் இயக்கத்தின் இலக்காகும். நாம் போராடுவது உலக சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்காக. நாம் அத்தகைய பரந்த, நீண்டகால, தூரதிருஷ்டியான வேலைத் திட்டத்தை முன்வைப்பது ஏன்? தேசிய அரச அமைப்பு, இந்த நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராவும் கோடிக்கணக்கான மக்களை சீரழிவுக்குள் இழுத்து தள்ளிய இரண்டு உலக யுத்தங்களுக்கு காரணமாகியுள்ளது. அவை முதலாவது உலக யுத்தமும் இரண்டாவது உலக யுத்தமுமாகும். இப்போது மூன்றாவது உலக யுத்தத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவரான ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தலைமையிலான குழு செயற்படுகின்றது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை அடுத்து, ஈராக்கில் படுகொலை ஆக்கிரமைப்பை இப்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் இலக்கும் மூலோபாயமும், உலகை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் மீண்டும் மறு பங்கீடு செய்வதாகும். அத்துடன் அவர்கள் அமெரிக்க மக்களை நடத்தும் முறை எவ்வாறானது? மிக அண்மையில் அமெரிக்காவின் தென் பிராந்தியம் முகம் கொடுத்த கத்ரினா சூறாவளிக்கு ஜோர்ஜ் புஷ்ஷும் வாஷிங்டனும் பிரதிபலித்த விதம் இதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது. இலட்சக்கணக்கானவர்களை இந்த சூறாவளி இடம்பெயரச் செய்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது. மூன்று நாட்கள் கடந்தும் புஷ், ஆளும் வர்க்கம் அந்த மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை. அதற்குப் பதிலாக இப்போது சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவ ஆட்சியை ஸ்தாபிக்கவும், அத்துடன் அந்த நிலப் பிரதேசங்களை மக்களின் கைகளில் இருந்து பறித்து பெரும் கூட்டுத்தாபனங்களின் கைகளுக்கு கொடுக்கவும் அதை பயன்படுத்துகிறது. இது மிகவும் முன்னேறியதாக கூறப்படும் செல்வம் நிறைந்த அமெரிக்காவில் மக்கள் முகம் கொடுக்கின்ற நிலைமையாகும். இந்த சூறாவளியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், புளோரிடா மாநிலத்தின் நியூ ஓர்லியன்ஸின் மிக வறியவர்களாவர். அந்த மக்கள், இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மக்களின் வர்க்க சகோதரர்களும் சகோதரிகளுமாவர். இந்த பேரழிவு அந்த ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த பேரழிவையிட்டு ஜோர்ஜ் புஷ்ஷின் பிரதிபலிப்புகள், உலக முதலாளித்துவத்தின் அழுகிப்போன நிலைமையையும் அதன் மக்கள் விரோத பண்பையும் சுருக்கமாக வெளிக்காட்டுகின்றது. நாம் அப்படி சொல்வது புதுமையான விடயம் அல்ல. கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி, இலங்கையையும் தெற்காசியாவையும் தாக்கிய சுனாமி அழிவின் போது, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். பத்துலட்சக்கணக்கானவர்கள் வீடு வாசல்களை இழந்தார்கள். இலங்கை அரசாங்கம் இதற்கு எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டது? ஜனாதிபதி குமாரதுங்க தனது விடுமுறையை ஓரங்கட்டிவிட்டு உடனடியாக இலங்கைக்கு வர மறுத்தார். இங்கு வந்தவுடன் அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததுடன், இலங்கையில் மக்கள் தமது சொந்த வீரத்தை பயன்படுத்தி இந்த அழிவில் இருந்து மீள்வதற்காக எடுத்த முயற்சிகளை ஒடுக்க, அதை அகற்றுவதற்காக இராணுவ நடவடிக்கைக்கு முன்வந்தார். இடம் பெயர்ந்தவர்களுக்கும் வீடு வாசல்களை இழந்தவர்களுக்கும் இன்றுவரை 1500 வீடுகள் கூட கட்டிக்கொடுக்கப்படவில்லை. அத்துடன் 5000 ரூபா கொடுப்பனவையும் சில மாதங்களுக்கு மட்டும் வழங்கி அதையும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நிறுத்திவிட்டார்கள். இது மீண்டும் இந்த அழிவுக்கு இரையாகியுள்ள மக்களின் முன்னிலையில் தேர்தல் வாக்குறுதியாக புத்துயிர் பெற்றுள்ளது. இது ஒரு ஏமாற்றாகும். இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்னவென்றால், முதலாளித்துவ அமைப்பு மக்களின் எந்தவொரு அடிப்படையையும் பாதுகாக்கவோ அல்லது பெற்றுக்கொடுக்கவோ கூடிய நிலையில் இல்லை என்பதும், அது சீரழிந்து போன ஒரு அமைப்பு என்பதுமாகும். முதலாளித்துவ அமைப்பு ஒரு சில வர்த்தகர்களதும் முதலாளிகளதும் இலாபத்திற்காகவே அன்றி, மக்களின் அவசியத்தை இட்டு நிரப்புவதற்காக இல்லை என்பது தெளிவு. இதன் காரணமாகவே சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கின்ற வேலைத் திட்டத்தில், பெரும் வியாபாரங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என சுட்டிக்காட்டுகின்றது. இது இலங்கையில் மட்டும் அன்றி, முழு தெற்காசியா பூராவும் அதேபோல் உலகம் பூராவும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் ஊடாகவே, மனித குலம் இதுவரை வென்றெடுத்துக்கொண்டுள்ள, இதுவரை உரிமையாக்கிக்கொண்டுள்ள அனைத்து விஞ்ஞானபூர்வமான தொழில்நுட்ப அறிவின் பிரதிபலன்களை, மனித குலத்தின் தேவைக்காக பயன்படுத்தும் காலகட்டத்தை நிர்மாணிக்க முடியும். இலங்கையில் உள்ள சமூக நிலைமைகளை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். வாழ்க்கைச் செலவு, இலங்கையின் முழு சனத்தொகையிலும் நூற்றுக்கு 26 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாவுக்கும் குறைவான சம்பளத்தை பெறுமளவு, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள் என்பதை அரசாங்க அறிக்கைகளே அம்பலப்படுத்துகின்றன. வறுமைக் கோட்டில் வாழும் ஒரு குடும்பத்தின் நாளாந்த வருமானம் 200 ரூபா வரை அதிகரித்தால், முழு ஜனத்தொகையில் 45 வீதமானவர்கள் உள்ளனர். அதாவது, கோடிக்கும் அதிகமானவர்கள் ஒரு நாளைக்கு 200க்கும் குறைவான வருமானத்துடன் வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இது தாங்கமுடியாததாகும். அத்துடன் நாம் தொழிலை எடுத்துப் பார்த்தால், பலவிதமான வாக்குறுதிகளை அரசாங்க கட்சியின் வேட்பாளரும் எதிர்க் கட்சி வேட்பாளரும் முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். வேலையற்ற பிரச்சினையை தீர்ப்பதாகவும் இலட்சக்கணக்கில் வேலை வழங்குவதாகவும் இவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இந்த 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலகட்டத்தை இந்த இரு கட்சிகளும் ஆட்சி செய்துவந்துள்ள நிலைமையின் கீழ், தற்கால வேலையற்றோர் நிலைமையானது, 15 வயது முதல் 18 வயது வரையானவர்கள் நூற்றுக்கு 36 வீதமானவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினையாகும். அத்துடன் 19 வயதுக்கும் 30வயதுக்கும் இடைப்பட்ட நூற்றுக்கு 30 வீதமானவர்கள் வேலையற்று உள்ளனர். சுதந்திர முன்னணி அரசாங்கம் 42,000 பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக ஒரு மோசடியை முன்வைத்துள்ளது. அவர்களில் 10,000 பேருக்கு கூட இதுவரை நிரந்தரமான நியமனம் வழங்கப்படவில்லை. இந்த முதலாளித்துவ அமைப்பு அழுகிப் போய்க்கொண்டிருக்கின்ற நிலைமையின் கீழ் இந்த அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் அது இலாயக்கற்றுள்ளது. இந்த அடிப்படை பிரச்சினைகளில் இருந்து தெளிவாவது இந்த விடயங்களேயாகும். ஜே.வி.பி இனர் கடந்த ஏப்பிரல் மாதத்தில் இருந்து சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளியாக, 14 மாதங்கள் அந்த அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் பரந்தளவில் வாய்வீச்சுக்களை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். தேசிய உற்பத்திகளுக்கு உதவுவதற்காக இந்த காலகட்டத்தில் பெரும் உதவிகளை செய்ததாக கூறுகிறார்கள். முக்கியமாக விவசாயத்தில், ஆனால் அவர்களது அரசாங்கம் ஆட்சி செய்த, 2004ம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடுவது என்ன? விவசாய உற்பத்தி நூற்றுக்கு14.4 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. காலாண்டுப்படி பார்தாலும் மாதக்கணக்கில் பார்த்தாலும் நெல் உற்பத்தியின் வீழ்ச்சி நூற்றுக்கு 11வீதமாகவும் நூற்றுக்கு 15வீதமாகவும் உள்ளது. கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் ஜே.வி.பி.யின் போலி நடவடிக்கைகளின் உண்மையான பெறுபேறு இதுவே. அதேபோல், நெல் விலைகொடுத்து வாங்குவது பற்றியும் அவர்கள் வாய்வீச்சை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். ஆனால் நெல் உற்பத்தியில் நூற்றுக்கு 10 வீதத்தை விலைகொடுத்து வாங்குவதற்கு கூட ஒரு திட்டத்தை அவர்களின் அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை. உர மானியங்கள் சம்பந்தமாகவும் இதற்கு மாறுபட்ட நிலைமைகள் கிடையாது. அத்துடன் முக்கியமான விடயம், இப்போது அரசாங்க வேட்பாளர் மக்கள் விடுதலை முன்னணியின் பக்கபலத்துடன் வாக்குறுதிகளை வழங்கும் போது, இந்த வாக்குறுதிகளை இட்டு நிரப்புவதற்காக நிதி சேர்ப்பது எவ்வாறு என்று அவர்கள் சொல்கிறார்கள் இல்லை. இதன் காரணமாக இவை ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுக்கப்படுவது போன்ற வெற்று வாக்குறுதிகளே என்பது போதுமானளவு தெளிவாகியுள்ளது. தமது ஆட்சியின் கீழ் அவர்கள் இந்த நாட்டின் வளங்கள் நிறுவனங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்று நிதி தேடிக்கொள்ளலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடுகின்றது. அவர்கள் அதன் மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க முன்வருகின்றார்கள். இந்த வாக்குறுதி விநியோகத்தின் மூலம் செய்யப்படுவது என்ன? இந்த நாட்டின் வளங்களையும் நிறுவனங்களையும் ஏகாதிபத்திய கம்பனிகளுக்கு கையளிப்பதாகும். அந்த கம்பனிகள் அந்த நாடுகளில் தமது நிறுவனங்களில் வேலைசெய்கின்ற தொழிலாளர்களை நடத்துவது போல் இந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களையும் மக்களையும் மிக மோசமாக நடத்த முன்வருவார்கள் என்பது தெளிவு. இது முதலாளித்துவ அமைப்பின் பண்பாகும். ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்துக்கொண்டுள்ள ஜே.வி.பி யும் பொதுஜன முன்னணியும், இதை வரையறைக்குள் அடக்குவதாக, சமபல பொருளாதாரமாக ஆக்குவதாக சொல்கின்றன. முதலாளித்துவ முறை சமபல பொருளாதாரத்தை தாங்கிக்கொண்டிருக்கும் அமைப்பு அல்ல. ஆக்கிரமிப்பு முறையில் நாடுகளுக்குள் பாய்ந்து அவர்களின் பூகோளமயமான மூலோபாயங்களுக்கு நாடுகளை அடிபணியச்செய்யும் காலனித்துவ காலகட்டத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனால் தேசிய அரசை பாதுகாக்கும் வேலைத் திட்டமானது பிறந்த இடத்திலேயே நகரமுடியாமல் இருக்கும், பிறந்த இடத்திலேயே ஆயுளை இழக்கும் வேலைத் திட்டம் மட்டுமே. இதன் காரணமாகவே சோசலிச சமத்துவக் கட்சி, உலக சோசலிச புரட்சி முன்நோக்கின் கீழ், இலங்கையில் சிங்கள தமிழ் தொழிலாளர்களையும் அத்துடன் இந்திய உப கண்டத்தில் பல மொழிகளைப் பேசும் பல மதங்களையும் சார்ந்த தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களையும், தெற்காசிய தொழிலாள வர்க்கத்தையும் உலக தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களுடன் உலக தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தின் பங்குதாரர்களாக ஆக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த இயக்கம் சரியான முன்னோக்கில் இன்னமும் ஆயுதபாணியாகி இல்லாவிட்டாலும், நிச்சயமாக ஒரு உயிர்த்துடிப்புள்ள உலக இயக்கமாகும். 2003 பெப்பிரவரி 15, 16ம் திகதிகளில் ஈராக் ஆக்கிரமிப்பு எதிராக, சூரியன் பயணிக்கும் முறையின் படி 24 மணிநேரமும் உலகின் இரு புறங்களில் இருந்தும், அனைத்து நாடுகளில் இருந்தும் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வீதிகளில் இறங்கி இந்த மக்கள் இயக்கத்தின் இருப்பை முன்கொண்டுவந்ததை நாம் கண்டோம். இந்த இயக்கத்திற்கு தேவையான அனைத்துலக சோசலிச முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் வழங்கும் பொறுப்பையே சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் தோள்களில் சுமக்கின்றன. அதற்காக அன்றாடம் உலகில் இடம்பெறும் அனைத்து அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிரதான நிகழ்வுகள் பற்றிய அரசியல் ஆய்வுகளை முன்வைத்துக்கொண்டு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் நனவுபெறச் செய்வதற்காக, அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தில் ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்காக செயற்பட்டு வருகின்றது. அதை wsws.org என்ற முகவரியின் ஊடாக வலைத் தளத்திற்குள் செல்வதன் மூலம் வாசிக்க முடியும். இந்த நிலைமையின் கீழ், நாம் இந்த தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டு, இந்த வேலைத் திட்டத்தை ஆழமான கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளுமாறு இந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்திடமும் அதே போல் அனைத்துலக மக்கள் இயக்கத்திடமும் கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலைத் திட்டத்தை பரந்தளவில் கலந்துரையாடுவது அவசியமானது, அதில் பெற்றுக்கொள்கின்ற அறிவில் ஆயுதபாணியாவது அத்தியாவசியமானது. இந்த நாட்டைப் போலவே உலகின் ஏனைய நாடுகளிலும் தொழிலாளர்களதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் விடுதலைக்கு இது அவசியமாகும். விடுதலையை பெற்றுக்கொள்ள, தான் முகம்கொடுத்திருக்கின்ற பிரச்சினையில் இருந்து மீள மற்றும் அதில் இருந்து அமைதியடைவதற்கு இதற்குப் புறம்பாக வேறு எந்த வழியும் கிடையாது. இந்த தயாரிப்பை ஏற்படுத்தும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, நாம் சுட்டிக்காட்டுகின்ற இன்னொரு விடயம் என்னவென்றால், நாங்கள் அதைத் தருவோம் இதைச் செய்வோம் என்ற எந்தவொரு பொய் வாக்குறுதியையும் மக்களுக்கு வழங்குவதில்லை. தமது அவசியங்களுக்கான தீர்வை, முதலாளித்துவ அமைப்பை சோசலிச அமைப்பாக மாற்றியமைப்பதன் மூலம் அடைவதும், வெற்றிகொள்வதும், இட்டு நிரப்புவதும் தொழிலாள வர்க்கத்தினதும் வெகுஜனங்களதும் பிரதான பணியாகும். அதற்கான முன்நோக்கையும் வேலைத்திட்டத்தையும் சோசலிச சமத்துவக் கட்சியும் எமது உலக கட்சியும் முன்வைக்கின்றன. அந்த வேலைத் திட்டத்தை கலந்துரையாடிக்கொண்டு, அதை ஆழமாக புரிந்து கொண்டு, அதை தமக்கே உரிய வேலைத்திட்டமாக ஆக்கிக்கொண்டு உலக சோசலிச புரட்சியில் தமது பணியை இட்டுநிரப்புவதற்காக, இந்த இயக்கத்தின் பங்காளிகளாக முன்வாருங்கள் என்பதே எமது வேண்டுகோளாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கின்ற வேலைத் திட்டம் இதுவே. இதை கலந்துரையாடுவதற்காக இதை புரிந்து கொள்வதற்காக அதன் மூலம் சோசலிச சமத்துவக் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டு, அதை இந்த நாட்டின் சிங்களத் தமிழ் மக்களின் கட்சியாக உருவாக்குவதற்கும், அதன் மூலம் உலக புரட்சிக்காக முன்னணிக்கு வருகின்ற உலக தொழிலாளர்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர இயக்கத்தின் பங்குதாரர்களாக ஆகுமாறு, இந்த நாட்டின் வெகுஜனங்களிடம் தொழிலாளர்களிடம் ஏழைகளிடம் வேண்டுகோள் விடுப்பதுடன் எனது பேச்சை இத்துடன் முடிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. தேர்தல் கூட்ட அட்டவணை பண்டாரவளை அக்டோபர் 23 பி.ப 3.00 மணி நகரசபை மண்டபம் ஹட்டன் அக்டோபர் 22 பி.ப 2.00 மணி நகரசபை மண்டபம் காலி விளையாட்டு மண்டபம் (பஸ் நிலையத்திற்கு முன்னால்) அக்டோபர் 27 மாலை 4.00 மணி யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபம் அக்டோபர் 30 பி.ப 2.00 மணி |