World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
Indian and Pakistani nuclear ambitions: another barrier to effective earthquake relief இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய அணுக்கரு ஆற்றல் சார்ந்த பேரவாக்கள்: செயல்திறம் மிக்க பூகம்ப நிவாரணத்திற்கு இன்னொரு முட்டுக்கட்டை By Kranti Kumara அக்டோபர்8, 2005, சனிக்கிழமை அன்று காஷ்மீரின் பகுதிகளை அழித்த பெரும் பூகம்பமானது, பாதிக்கப்பட்டவர்கள்பாலான இந்திய மற்றும் பாக்கிஸ்தான் அதிகாரிகளின் தகுதியின்மை மற்றும் இரக்கமிலாத்தன்மையை மட்டுமில்லாமல் பரந்த இடத்துக்குரிய துல்லியமான நில அதிர்ச்சி பற்றிய தகவல்களைத் திரட்டுவதிலும் அதனைப் பயன்படுத்துவதிலும் ஒரு முக்கியமான குறைபாட்டையும் கூட வெளிக்காட்டியது, அது சரிசெய்யப்பட்டிருக்குமேயானால், நில அதிர்ச்சிக்கு முன்னைய நிவாரண நடவடிக்கைகளை மிகவும் செயல்திறம்மிக்கவகையில் செய்வதில் முக்கிய தகவல் விவரங்களை வழங்கியிருக்கக் கூடும். இந்திய வானிலை ஆய்வுத் துறையால் (IMD) பராமரிக்கப்படும் நாட்டின் நிலநடுக்க வலைப்பின்னலை, பூகம்பத்திலிருந்து ஏற்படக்கூடிய பரந்த அளவிலான பாதிப்பு மற்றும் அதன் உடனடி விளைவை விரைந்து உறுதி செய்வதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு நேரத்திற்கு கிடைக்கும் தகவல் விவரங்களை வழங்கக் கூடிய பூகோள நிலநடுக்க வலைப்பின்னலுடன் (Global Seismic Network- GSN) சேரவிடாது இந்திய அரசாங்கமானது வேண்டுமென்றே தடுத்து வருகிறது. GSN லிருந்து இந்திய அரசாங்கம் விலகி இருப்பதற்கான காரணம், அந்த வலைப்பின்னலானது, 1996ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளால் வளி மண்டலத்தில், நிலத்திற்கடியில் மற்றும் நீருக்கடியில் அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை தடைசெய்யும், 1996ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கைக்கான (CTBT) கண்கானிப்பு முறையாகவும் கூட அது வேலைசெய்வதால் ஆகும்.பாக்கிஸ்தான் மற்றும் இந்திய ஆளும் செல்வந்தத்தட்டுக்கள் அணு ஆயுத அபிவிருத்திகளை, தங்களின் புவிசார் அரசியல் அந்தஸ்தை உயர்த்தவும், குட்டி முதலாளித்துவ சக்திகளிடையே பிறதேசிய பழிப்புவாதத்தை தூண்டிவிட்டு இருநாடுகளிலும் உள்ள பயங்கரமான சமூக யதார்த்தங்களிலிருந்து வெகுஜனங்களை அரசியல் ரீதியாக திசை திருப்புவதற்கும் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதால் அவை அவ் உடன்படிக்கையை தவிர்த்து ஒதுக்குகின்றன. வான்வழி அளக்கை போன்ற ஏனைய வழிமுறைகளால் பூகம்பத்தின் புவியியல் தாக்கத்தை உறுதிப்படுத்துதல் நேரம் அதிகம் செலவாகும் முறையாகும் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தொடங்கும் முன்னரே விலைமதிப்புமிக்க நேரம் இழக்கப்பட்டுவிட முடியும். காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட ஒன்று போல ஒரு நாட்டின் எல்லைகளுக்கு அருகில் நில அதிர்வுகள் நிகழும்பொழுது, நில அதிர்ச்சியின் நிலநடுக்கமையத்தை (நிலத்திற்கடியில் நில அதிர்ச்சி தோன்றும் நிலநடுக்க குவிமையப் புள்ளிக்கு நேர்மேலை பூமியின் மேற்பரப்பில் உள்ள புள்ளி) கண்டறிவதில் குறைந்த பட்சம் மூன்று நிலநடுக்க பதிவுக் கருவிகள் தேவைப்படுகின்றன. நிலநடுக்க மையத்தை உறுதிப்படுத்துவது முறையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை விரைந்து செய்வதில் முக்கியப்பாத்திரம் வகிக்கும், நில அதிர்வின் செறிவு பற்றிய வரைபடங்களை தயாரிக்க வழிவகுக்க முடியும். அமெரிக்க நில அளவை மதிப்பீட்டு உண்மைவிவர குறிப்பு (Geological Survey Fact Sheet) 097-95 வரைபடத்தில் காட்டியவாறு, நில அதிர்வுகள்- கடுமை நிகழக்கூடியது பற்றிய வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ள நிலவரைபடத்திலிருந்து உயிர்களைக் காப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமான அத்தகைய நிலவரைபடங்களின் வாய்ப்புவளம் பற்றிய செய்திகளை சேகரிக்க முடியும். இந் நிலவரைபடம் http://geopubs.wr.usgs.gov/fact-sheet/fs097-95/ அமெரிக்க நில அளவை மதிப்பீடு (USGS) மற்றும் ஏனய நிறுவனங்களின் விஞ்ஞானிகளால் தெற்கு கலி்ஃபோர்னியாவில் 1994 நோர்த்ரிஜ் பூகம்பம் ஏற்பட்டதற்கு பின்னர் தயாரிக்கப்பட்டது மற்றும் பேரழிவு நடந்த சிலமணிநேரங்களுக்குள் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் நிவாரண முகவாண்மை அமைப்புக்களுக்கும் கிடைக்கும். காஷ்மீர் நில அதிர்ச்சிக்குப்பின்னர் அத்தகைய நில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான பலியானோர் காப்பாற்றப்பட்டிருக்க முடியும். காஷ்மீர் நில அதிர்ச்சிகள் பற்றிய பல்வேறு வரையறைகளை மதிப்பிடுவதில் இந்திய விஞ்ஞானிகள் மீது திணிக்கப்பட்ட இந்த இடையூறானது பிரதான ஆங்கில செய்தித்தாளான இந்து நாளிதழின் வலைத் தளத்தில் அக்டோபர் 9 அன்று செய்தியாக அறிவிக்கப்பட்டிருந்தது. "மதிப்பிடுவதில் வல்லுநர்கள் இடையூறுக்கு ஆளாகி இருந்தனர்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில், அச்செய்தித்தாளானது, "விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப மத்திய அமைச்சர் கபில்சிபல் சர்வதேச நிலநடுக்க வலைப்பின்னலுடன் சேருவதற்கு எதிரான இந்தியாவின் நிலை பற்றி மறுமதிப்பீடு செய்வதற்கு அமைச்சரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவர எண்ணிக்கொண்டிருக்கிறார். இது பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் முசாபராபாத்தை தாக்கிய பூகம்பத்தின் பருமன், இருப்பிடம் மற்றும் ஏனைய வரையறைகளை மதிப்பிடும்பொழுது சனிக்கிழமை அன்று நிலநடுக்க ஆய்வாளர்களால் எதிர்கொள்ளப்பட்ட ஒன்றைப்போன்ற அத்தகைய பிரச்சினைகளை தவிர்க்கும் ஒரு கண்ணோட்டத்துடன் இணைந்ததாகும்." (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது) நன்கு தேர்ச்சிபெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு இருப்பிடமாக இந்தியா இருப்பினும், விஞ்ஞானம் மற்றும் அபிவிருத்தி வலைப்பின்னல் வலைத் தளம் ஜனவரி, 2005ல், சுனாமிக்கு பிந்தைய கட்டுரையில், இந்தியாவில் புவி அறிவியல்களை புறக்கணிப்பதாக செய்தி அறிவிக்கப்பட்டது. பூமியில் மிக நிலநடுக்கம் ஏற்படும் பிராந்தியங்களுள் ஒன்றின் மத்தியில் இந்தியா அமைந்திருக்கிறது என்றாலும், புவி இயற்பியல் (புவி பெளதீகவியல்), நில இயல், நிலநடுக்க இயல் மற்றும் வளிமண்டல அறிவியல் துறைகளில் உள்ள விஞ்ஞானிகளின் தர ரீதியான மற்றும் அளவு ரீதியான பற்றாக்குறையை அது சுட்டிக்காட்டியது. அதன் இராணுவக் குறிக்கோள்களில் இருந்து நேரடியாக ஆதாயம் பெறும், கல்வி ரீதியான கட்டமைப்பு மற்றும் வல்லுநர்களை கொண்ட ஓரளவு பெரிய அளவிலான சேர்மத்தை உருவாக்கியுள்ள, விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டுக்கு மாறுபட்டதாக இது உள்ளது. புவி அறிவியல்களில் இந்தியா பற்றாக்குறை கொண்டதாக கருதப்படுமானால், ஒன்றன்பின் ஒன்றாக மோசமான பின்தங்கிய ஆளும் செல்வந்த தட்டுக்களால் ஆளப்படும், பாக்கிஸ்தானில் உள்ள நிலைமை , பேரழிவிலும் பார்க்க குறைந்ததாக இருக்காது என்பதை துணிவாகவே ஊகிக்க முடியும். அடுத்தடுத்து வந்த பாக்கிஸ்தானிய அரசாங்கங்கள் நாட்டின் பெரும்பாலான வளங்களை இராணுவத்தின்பால் செலுத்துவதோடு கல்வி மற்றும் அறிவியலுக்கான செலவை பலியிட்டு சமுதாயத்தின் மீதாக மதத்தின் பிடியை மேலோங்கச் செய்வதை ஊக்குவித்தன. நாட்டின் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் கால்பங்கு இராணுவத்தாலும், அதிர்ச்சியூட்டும் அரைப் பங்கு கடன் சேவைகளாலும் கபளீகரம் செய்யப்படுகிறது, ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 2 சதவீதம் மட்டுமே கல்விக்காக செலவழிக்கப்படுகிறது. இந்தியாவிலும் கூட ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் 60 சதவீதத்திற்கு நெருக்கமாக கடனாலும் இராணுவத்தாலும் விழுங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக, இருநாடுகளிலும், கடந்த தசாப்தங்களில் பல பத்து மில்லியன் கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் கட்டட விதிமுறைகளை அமுல்படுத்துவதில் அக்கறையில்லாததாலும் / அல்லது லஞ்சம் பெறுவதாலும் நில அதிர்ச்சிகளுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய கட்டடங்களை கட்டுதல் என்பது இல்லாததற்கு அடுத்தாற்போல் இருக்கிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அரசாங்கங்களுக்கிடையே உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த அரசியல் உறவுகள், நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்வதிலும் கண்காணித்தலிலும் மிக அத்தியாவசியமானதாக இருக்கும், இரு நாடுகளின் விஞ்ஞான சமூகத்தினருக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கு பெரும் தடைகளை உண்டு பண்ணியுள்ளன. இந்தியா, இரு போட்டியாளர்களில் வலிமையானதாகவும் பெரியதாகவும் இருப்பதால், பொதுவாக பாக்கிஸ்தானின் அரசியல் நடத்தையை குறைந்தபட்சம் அணு ஆயுதங்கள் தொடர்பானதில் தீர்மானிப்பதாக உள்ளது மற்றும் அதன் விளைவாக, இந்தியா அணு ஆயுதம் பரவல் தடை உடன்படிக்கையில் (CTBT) கையெழுத்திட்டால்தான் தான் அதில் கையெழுத்திடும் என்றும் பாக்கிஸ்தான் வலியுறுத்துகின்றது. CTBT ஆளுமைக்கு வளி மண்டல அணு வெடிப்பு கதிர் வீச்சை சேகரிக்கும் Radio-Nuclide கண்காணிப்பு வலைப்பின்னல், நீரினூடாக வரும் அலைகளை பதிவு செய்யும் ஒரு நீர்-ஒலி இயல் வலைப்பின்னல், உற்பத்தி செய்யப்பட்ட மிகக்குறைந்த அதிர்வெண் ஒலி அலைகளை பதிவு செய்யும் ஒரு அக ஒலி வலைப்பின்னல் என நில நடுக்க அலைவடிவங்களை பதிவு செய்யும் ஒரு பூகோள முதன்மை மற்றும் துணை நிலநடுக்க வலைப் பின்னல்களை கொண்டிருக்கும், மற்றும் தள ஆய்வுகள் நடத்தும் ஒரு சர்வதேச கண்காணிப்பு அமைப்பை (International Monitoring System - IMS) நிறுவுவது தேவைப்படுகிறது. இவற்றுள், நிலநடுக்க வலைப்பின்னல் மிக முக்கிய பாத்திரத்தை ஆற்றுகின்றது.இவ்வுடன்படிக்கையானது கையெழுத்திட்ட நாடுகளை, சர்வதேச கண்காணிப்பு அமைப்பை (IMS) நிறுவுவதில் ஒத்துழைக்குமாறு அழைத்தது. கையெழுத்திட்ட நாடுகளில் இருந்து அத்தகைய ஒத்துழைப்பு வராத பொழுது, அதன் போட்டியாளர்கள் மீது அமெரிக்க அணு ஆற்றல் மேலாதிக்கத்தை பராமரிக்கும் ஆவலால் உந்தப்பட்ட அமெரிக்க காங்கிரசானது, நிலநடுக்க வலைப்பின்னலுக்கு நிலநடுக்க இயலுக்கான கூட்டிணைவு ஆய்வு நிலையங்களை (IRIS) நிதியூட்டுமாறு கேட்டுக் கொண்டதன் மூலம் முன்னெடுத்தது. IRIS என்பது பூமியின் உட்பகுதியை ஆய்வு செய்யவும், அதன் பூகோள நிலநடுக்க வலைப்பின்னலை (GSN) பெரிதாக்குவதற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பல்கலைக் கழக ஆய்வுக் கூட்டமைப்பு ஆகும். GSN - உடன் சேர்வதற்கு நில நடுக்க வலைப்பின்னலில் இருந்து தக்க நேரத்து மற்றும் துணைத் தகவல் விவரங்களை பெறுவது முன்நிபந்தனையாக இருக்கிறது. GSN - வலைப்பின்னல் உலகெங்கிலும் உள்ள அதன் டிஜிட்டல் நிலையங்களில் இருந்து உயர் தர நிலநடுக்க தகவல் புள்ளிவிவரங்களை வழங்கும் மற்றும் அது பூமியின் நடுப்பகுதியின் இயக்க நிகழ்ச்சிப்போக்குகளை புரிதலில் நில இயல் விஞ்ஞானிகளால் பேராவலுடன் விரும்பப்படும்.இந்தியா அதன் சொந்த நிலநடுக்க வரைபட வலைப்பின்னலைப் பராமரித்தாலும், அது GSN -ல் இருந்து தக்க நேரத்து தகவல்களை பெறக்கூடிய வசதி வயாப்புக்களை பெறக்கூடிய IRIS உடன் சேரவில்லை. GSN -ன் நிலநடுக்க அளவீட்டு நிலையங்களால் பதிவு செய்யப்படும் தகவல் விவரங்கள், ஒரு சிறு தொடக்க நிலைக்குக் கிட்டுமான அளவு அனைத்து வெடிப்புக்களின் வலிமையையும் கண்டுபிடிப்பதற்கு மற்றும் கணிப்பிடுவதற்கு போதுமானது என்ற உண்மையை எடுத்துக் கொண்டால், அவற்றின் அணுக்கரு திட்டங்கள் பற்றிய விவரங்கள் மீதான மூடிமறைப்பை பராமரிக்கும் அவர்களின் முயற்சியின் மூடத்தனம் பளிச்சென்றுதெளிவாகும். அணுக்கரு வெடிப்புக்களால் உண்டுபண்ணப்படும் நிலநடுக்க அடையாளங்கள் (Seismic Signatures) பூகம்பத்தால் உண்டுபண்ணப்படும் அடையாளங்களில் இருந்து எளிதில் நுணுகிக் காணக்கூடியதாக இருக்கின்றன.அக்டோபர் 10 அன்று, "அரசாங்கம் விழிக்கட்டும், பூகோள நிலநடுக்க கண்காணிப்புடன் தொடர்புகொள்ளாத அணு ஆயுதக் கொள்கையை திரும்பிப் பார்க்கட்டும்" என்று தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத் தளம் குறிப்பிட்டதாவது, "அணு குண்டுகளின் பிரமாண்ட தோற்றமானது, பூகோள நிலநடுக்க கண்காணிப்புக்குள் இந்தியாவின் உள்வாங்கப்படலுக்கு தொடர்ந்து தடையாக இருப்பதன் விளைவாக பேரழிவு மேலாண்மை அதிகாரிகளுக்கு பேரழிவின் அளவு பற்றி அறிவிக்கப்படும் முன்னர் பெரும் தாமதம் ஏற்படுகிறது மற்றும் காலம் விரயமாகிறது." ஆயினும், அத்தகைய ஒப்புக்கொள்ளல் இருப்பினும், அக்கட்டுரை "இரு அயலார்களுக்கும் இடையில் பூகம்பங்களின் தீங்கு பொதுவான எதிரியாக இருப்பினும், சிபல் (விஞ்ஞான அமைச்சர்) பாக்கிஸ்தானுடன் ஒத்துழைப்பதற்கான எந்தவித சாத்தியத்தையும் திட்டவட்டமாக மறுத்தார்" என்று குறிப்பிட்டது. இத்தகைய அணுகுமுறை ஆளும் செல்வந்தத்தட்டின் இரக்கமற்ற மற்றும் குற்றத்தன்மையை அம்பலப்படுத்துகிறது. இரு அரசாங்கங்களும் ஏழ்மை பீடித்த மக்களை இழிவுடனும் பலியிடப்படக்கூடியவர்களாகவும் கூட பார்க்கின்றன. தசாப்த காலங்களாக துணைக்கண்டத்தை துன்பத்திற்காளாக்கும் நில அதிர்வுகள் மற்றும் ஏனைய அழிவுகளுக்கான திரும்பத்திரும்ப நிகழும் தயாரிப்பின் பற்றாக்குறை நிலைமையை இது பகுதி அளவில் விளக்குகின்றது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்நிலையை சீர்படுத்துவார் என எதிர்பார்க்க முடியாது, இறுதி ஆய்வில், இரு நாடுகளின் ஆளும் செல்வந்த தட்டுக்களும் மனித நலனுக்கு மேலாக அதிகாரத்தையும் இலாபங்களையும் வைக்கும் சமூகப் பொருளாதார அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். |