World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிGermany: Grand Coalition under Chancellor Merkel A government in defiance of the voters' will ஜேர்மனி: அதிபர் மெர்க்கெலின் தலைமையில் பெரும் கூட்டணி வாக்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஓர் அரசாங்கம் By Ulrich Rippert கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவர் ஏஞ்செலா மெர்க்கலை சமூக ஜனநாயகக் கட்சியுடன் (SPD) இணைத்து, அதிபராக ஆக்கும் முடிவு ஜேர்மனிய வாக்களர்களுக்கு எதிராக போர் நடத்துவதைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. செப்டம்பர் 18 அன்று நடந்த கூட்டரசு தேர்தல்களில், மிகப் பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை மெர்க்கலுக்கும் CDU க்கும் எதிராக அளித்திருந்தனர். இப்பொழுது பதவியில் இருந்து வெளியேறிய சமூக ஜனநாயக - பசுமைக் கட்சி கூட்டணியும்கூட தேர்தலினால் பாதிக்கப்பட்டதுதான்; ஜேர்மனியின் நலன்புரி அரசின் மீதான அரசாங்கத்தின் இடைவிடாத தாக்குதலுக்கு வாக்காளர்கள் தங்கள் எதிர்ப்புக்களை தெளிவாக கொடுத்துள்ளனர். செப்டம்பர் தேர்தலில் பாதிக்கப்பட்ட SPD, CDU என்னும் இரு கட்சிகளுமே, பெரும்பாலான வாக்காளர்கள் உறுதியாக நிராகரித்திருந்த அதே கொள்கைகளை செயல்படுத்தும் வெளிப்படையான நோக்கத்திற்காகவே, இப்பொழுது ஒன்றாக இணைந்து ஒரு கூட்டணி அரசாங்கத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளன. எனவேதான் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னோடியில்லாத வகையில் இரகசிய சூழ்நிலையில் நடைபெற்றன. ஏஞ்சலா மெர்க்கலை அதிபராக்கும் முடிவு நான்கு பேர்களால் எடுக்கப்பட்டது; நான்கு கட்சிகளின் தலைவர்களான ஏஞ்சலா மெர்க்கல் (CDU), எட்முண்ட் ஸ்ரொய்பர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம், (CSU), பிரான்ஸ் முன்டபெரிங் (SPD) மற்றும் SPD இன், பதவியில் இருந்து விலகும் அதிபரான ஹெகார்ட் ஷ்ரோடர் ஆகியோர்தான் அந்த நால்வர் ஆவர். மிக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் "முழுமையான இரகசியம்" காக்கப்படும் என்ற உறுதிமொழிகளால் நிறைந்திருந்தது. கொள்ளையை பகிர்ந்து கொள்ளும் திருடர்கள்போல், மக்களுக்கு பின் திரை மறைவில், மந்திரி பதவிகளை வழங்கவும் அதிகாரம், செல்வாக்கு இவற்றை பகிர்ந்து கொள்ளவும் அரசியல்வாதிகள் இரகசியமாக சந்தித்திருந்தனர். இன்னும் பகிரங்கமாக கூறவேண்டும் என்றால்: அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி மக்களுக்கு எதிரான ஒரு சதித்திட்டத்தின் வடிவைத்தான் கொள்கிறது; இன்னும் துல்லியமாகச் சொல்லவேண்டும் என்றால், முன்கூட்டியே தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட மே மாதத்தில் தொடங்கிய சதித்திட்டத்தின் உச்சக்கட்டத்தைத்தான் இது பிரதிபலிக்கிறது. மெர்க்கலின் தலைமையில் ஒரு பெரும் கூட்டணி என்ற முடிவிற்கு வந்துள்ள நிகழ்வுகளின் போக்கு அனைத்தையும் நினைவு கூறுதல் முக்கியமாகும். மே மாதம் அதிபர் ஷ்ரோடர் முன்கூட்டியே தேர்தல்கள் வரும் என்ற வியப்பான அறிவிப்பைக் கொடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 2010 செயற்திட்டம் மற்றும் ஹார்ட்ஸ் IV சட்டம் என்ற அவருடைய நலன்புரிகளுக்கு எதிரான வெட்டுத் திட்டத்திற்கு, அவர் பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பை எதிர் கொண்டார். வடக்கு ரைன்-வேஸ்ட்பாலியா மாநிலத்தேர்தலில் SPD ஏப்ரல் மாதம் தொடர்ச்சியாக பதினோராவது முறை தோல்வியடைந்தது -- மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு, குறிப்பாக பாரம்பரியமாக சமூக ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக இருந்த இம்மாநிலத்தில் மிகக் கடுமையாக இருந்தது. மற்றொரு புறத்தில் முக்கியமான தொழிற்துறை மற்றும் வணிகக்குழுக்கள் ஜேர்மன் நலன்புரி அரசு விரைவாக தகர்க்கப்பட வேண்டும் என்று கோரின. கூட்டாட்சி தேர்தல்களுக்கும் 18 மாத கெடு இருந்த நேரத்தில் இருந்தே அவர்கள் "சீர்திருத்தக் கொள்கைகளில் தேக்கநிலை" எதனையும் கடுமையாக எதிர்த்ததோடு முற்போக்கான தீர்வு வேண்டுமெனக் கோரினர். இவர்களுடைய அழுத்தத்திற்கு விடையிறுக்கும் வகையில் ஷ்ரோடர் முன்கூட்டிய தேர்தல்களுக்கான அழைப்பை விடுக்க முயற்சி எடுத்துக் கொண்டார்; இச்சூழ்நிலையில் கோடைத் தேர்தல்கள் CDU/CSU விற்கு SPDஐ காட்டிலும் 22 சதவிகித முன்னணியை கொடுத்தது, பழமைவாத எதிர்க்கட்சிக்கு அதிகாரத்தை வழங்கியது போல் ஆயிற்று. ஆனால் புதிதாக அமைக்கப்பட்டிருந்த இடது கட்சி (Left Party) தேர்தலில் பங்கு பெற்றதை அடுத்து, நிலைமை மாறியது; ஒருகாலக்கட்டத்தில் அதற்கு 12 சதவிகித வாக்கு தேசிய அளவில் கிடைத்தது; நாட்டின் கிழக்கில் வேறு எந்தக் கட்சியையும்விட இதற்குக் கூடுதல் ஆதரவு கிடைத்தது. அதே நேரத்தில் வலதுசாரி, புதிய தாராளவாத கொள்கையை உள்ளடக்கமாக கொண்டிருந்த மெர்க்கலின் கொள்கைகள், அவர் ஒரேவித வரி வேண்டும் என வாதிடும் Paul Kirchhof ஐ தன்னுடைய நிதிநிர்வாக வல்லுனராக நியமித்ததில் இருந்து தெளிவாயின. அதேபோல் மதிப்புக் கூட்டு வரியை அதிகரிக்கும் திட்டங்களையும் அவர் அறிவித்தார்; மேலும் ஒற்றுமையின் அடிப்படையில் இருந்த ஜேர்மனிய பொது சுகாதார முறையை இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதத்தில் மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கும் திட்டம் (lump-sum), ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்த விரும்பினார். இதற்கு விடையிறுக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது "இடது" போல் ஷ்ரோடர் பேசினார். இதையொட்டி SPD அதிபர் தன்னுடைய சொந்த அரசாங்கத்தையே எதிர்த்து பிரச்சாரம் செய்வது போல் "இன்னும் கூடுதலான சமூக நீதி" வேண்டும் என்று தேர்தல் பிரச்சார அணிகளில் கோரும் விந்தையான சூழ்நிலை உருவாயிற்று. அதே நேரத்தில் அவர், தன்னுடைய 2010 செயற்பட்டியலில் இருந்து தான் ஒருபோதும் விலக மாட்டேன் என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கூறியும் வந்தார். இந்த நிலைமையில், CDU, சமூக ஜனநாயகக் கட்சியைவிட தன்னுடைய முன்னிற்கும் நிலை அனைத்தையும் இழந்தது; செப்டம்பர் மாதம் நடைபெற்ற வாக்குகளில் 35 சதவிகிதத்தைத்தான் கொண்டது; கட்சியின் வரலாற்றில் மோசமான தோல்விகளில் ஒன்றை அனுபவித்தது. அதே நேரத்தில், நலன்புரிமீதான வெட்டுக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்திருந்த இடது கட்சி தேசிய அளவில் 9 சதவிகித வாக்குகளை (கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களில் 27 சதவிகிதம்) முதன் முதலாக தேர்தலில் பங்கு பெற்றபோது பெற்றது. சமூக ஜனநாயகவாதிகளும் பசுமைக் கட்சியினரும் இடது கட்சியுடன் சேர்ந்து புதிய பாராளுமன்றத்தில் பழமைவாத எதிர் கட்சியினரைவிடக் கூடுதலான இடங்களைக் கொண்டுள்ளன என்பது, புதிய தாராளவாத அரசியல் போக்கு பரந்த முறையில் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு அடையாளம் ஆகும். ஆனால் ஒரு "இடது பெரும்பான்மையை" காண முற்படுவதற்குப் பதிலாக சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியினரும் வலதுக்கு பாய்ந்து, யூனியன் கட்சிகளுடன் ஒத்துழைக்க தயார் என்று முன்வந்தன. பிரான்சிலும் பெல்ஜியத்திலும் வேலைநிறுத்தங்களும் பெரும் ஆர்ப்பாட்டங்களும் போருக்குப் பிந்தைய கால வரலாற்றில், மேற்கு ஜேர்மனியில் ஒரு தேர்தலின் போதோ அதைத் தொடர்ந்து அரசாங்கம் அமைக்கும் முயற்சியிலோ, இத்தனை தெளிவான வகையில் இந்த அளவிற்கு வர்க்கப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளதை கண்டதில்லை. ஜேர்மனியின் இந்த வளர்ச்சிகளை அவற்றின் ஐரோப்பிய பின்னணியில் ஆராய்வது முக்கியமாகும். பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் தலைமையில் இருக்கும் கோலிச அரசாங்கத்தின் புதிய தாராளவாத கொள்கைகளுக்கு எதிராக, அக்டோபர் 4ம் தேதி, 1 மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேலாக 150 பிரெஞ்சு நகரங்களில் வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டனர். இதற்கு மூன்று நாட்களுக்கு பின்னர், பிரதம மந்திரி Guy Verhofstad இன் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின், ஓய்வூதிய திட்டங்களை தாக்கும் கொள்கைகளுக்கு எதிராக பெல்ஜியத்தில் ஒரு பொதுவேலை நிறுத்தம் நிகழ்ந்து, அந்நாட்டை மூன்று நாட்களுக்கு முடக்கியது. கடந்த 10 ஆண்டுகளில் இப்பொழுதுதான் முதன்முதலாக பெல்ஜியத்தின் பொது வேலைநிறுத்தும் ஒன்று நடந்தது. ஹார்ட்ஸ் IV தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈர்த்திருந்தது; இவை அனைத்தும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரான்சிலும் நெதர்லாந்திலும் ஐரோப்பிய அரசியல் அமைப்பிற்கெதிரான வாக்கெடுப்பில் உச்சக் கட்டத்தை அடைந்த ஐரோப்பிய அபிவிருத்தியின் ஒரு பகுதியே ஆகும். அரசியல் உயர் செல்வந்த தட்டு கீழிருந்து வந்த இந்த அழுத்தத்திற்கு விடை கொடுக்கும் வகையில் இன்னும் உறுதியாக தன்னுடைய இலக்குகளை காணவேண்டும் என்ற முடிவிற்கு வந்தன. அதிபர் மெர்க்கலுடைய பெரும் கூட்டணியில் அமைக்கப்படும் அரசாங்கம் முதலாளிகள் சங்கத்தின் நலன்களை தொடரும் என்றும் இன்னும் கூடுதலான வகையில் சமூக நல வெட்டுக்களை அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே தெளிவாகியுள்ளது. மெர்க்கல் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்த அரசியல் பாதை உறுதியான எதிர்ப்பிற்கு உட்பட்டிருந்ததால், சமூக ஜனநாயகவாதிகள் சமூக நலன்களை தாக்குவதன்மூலம் அரசாங்கத்தின் திறனை உத்திரவாதப்படுத்துவதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றின. அண்மையில் வந்துள்ள தகவல்களின்படி, சமூக ஜனநாயகக் கட்சி முக்கிய மந்திரிசபை பொறுப்புக்களை கொள்ளும் என்றும் மந்திரி சபையில் சம பங்கு பிரதிநிதித்துவத்தையும் பெறும் என்றும் தெரிகிறது. "கூட்டாட்சி பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படை" என்ற ஆவணத்தின்படி, அதிபர் பதவி, மந்திரிசபை தலைமை, ஒரு காபினெட் அந்தஸ்து இவற்றைத் தவிர, CDU கீழ்க்கண்ட 6 அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்கும்: பொருளாதாரம்-தொழில்நுட்பம், உள்துறை, பாதுகாப்பு, குடும்பம்-மகளிர், இளைஞர்-கல்வி-ஆராய்ச்சி, உணவு, வேளாண்மை என்பவையே அவை. வெனியுறவுத் துறை, துணை அதிபர் பதவி மற்றும் ஏழு காபினெட் மந்திரிகளுக்கான இடங்களை SPD க்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியங்கள், நீதித்துறை, தொழிலாளர் சமூக விவகாரங்கள், சுகாதாரம், வளர்ச்சி உதவி மற்றும் சுற்றுச் சூழல் ஆகியவையே அவை. பதவி விலகும் ஷ்ரோடர் வெளியுறவுத்துறை மந்திரியாக மெர்க்கலுடைய அரசாங்கத்தில் சேர்ந்து, துணை அதிபராகவும் வருவாரா என்ற ஊகங்கள் கடந்த சில தினங்களாக அதிகமாக உள்ளது. இதைப்பற்றி உறுதியான அறிக்கை எதையும் ஷ்ரோடர் இதுகாறும் வெளியிடவில்லை; ஆனால் தான் அதை விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார். மாறாக, முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி Peter Struck (SPD) இப்பதவிற்கு வரக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஷ்ரோடருடைய நெருங்கிய, நம்பிக்கைக்கு உகந்த நண்பரான ஸ்ட்ருக் அரசாங்கத்தின் தீர்மானங்களை செயல்படுத்தும்போது இரக்கமின்றி இருப்பார் என்பதை அனைவரும் அறிவர். அவர் பாதுகாப்பு மந்திரியாக இருந்தபோது, சர்வதேச இராணுவ செயற்பாடுகளில் ஜேர்மன் பங்களிப்பை விரைந்து ஏற்க வைத்ததன் மூலம் நாட்டின் இராணுவத்தின் பாத்திரத்தை நிலப்பரப்பை பாதுகாக்கும் பிரிவு என்பதில் இருந்து மிக வளர்ச்சியுற்ற குறுக்கீடுகள் செய்யக் கூடிய படையாக மாற்றினார். வருங்கால வெளியுறவு மந்திரி என்னும் முறையில் ஷ்ரோடர் ரஷ்யாவுடன் கொண்டுள்ள நட்பை ஐயத்திற்கு இடமின்றி ஸ்ட்ருக் தொடர்வார்; அதேநேரத்தில் அமெரிக்க அரசாங்கத்துடனும், குறிப்பாக வாஷிங்டனில் உள்ள அவரது எதிரணி உறுப்பினரான பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்டுடன் தான் மிகுந்த நட்புறவு கொண்டுள்ளதாகவும் பெருமைப்பட்டுக் கொள்ளுவார். வேறுவிதமாகக் கூறினால், ஸ்ட்ருக் ஒரு சமரசநிலை வேட்பாளர் ஆவார்; வரவிருக்கும் அரசாங்கத்தின் தெளிவற்ற வெளியுறவுக் கொள்கையின் உருவாய் இருப்பார். தொழிற் துறையில் இருக்கும் முக்கிய பிரதிநிதிகள் ஷ்ரோடருக்கும், மற்றும் அவர் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் கொண்டுள்ள நட்பிற்கும் உறுதுணையாக இருந்தாலும், அமெரிக்க அரசாங்கத்தின் பெருகிவரும் தன்மையற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரித்தாலும், வருங்கால அதிபர் மெர்க்கலும் அவருடைய CDU தலைமையில் துணைவரான Wolfgang Schäuble ம் அமெரிக்க அரசாங்கத்துடன் பிணைப்பை பழையபடி கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். செய்தி ஊடகங்களின் தகவல்படி, Wolfgang Schäuble புதிய அரசாங்கத்தின் உட்துறை மந்திரியாக இருப்பார் என்று தெரிகிறது. 1980 களிலும், 1990 களிலும், ஹெல்முட் கோலின் CDU தலைமையில் இயங்கிவந்த அரசாங்கத்தில் நீண்டகாலம் மந்திரியாக இருந்தவர் என்ற முறையில் அவர் முன்னாள் கிழக்கு ஜேர்மனி கலைப்பிலும், ஜேர்மனிய மறு ஐக்கியத்திலும் முக்கியமாக சம்பந்தப்பட்டிருந்தார்; கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் தீவிர பழமைவாத பிரிவில் அவர் உள்ளார். CDU வின் அனுபவம் நிறைந்த அரசியல்வாதிகளில் அவரும் ஒருவராவார். Schäuble உடன் கூட, பவேரிய CSU இன் தலைவர் எட்முண்ட் ஸ்ரொய்பர், ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஆதரவாக இருக்கும் மற்றொரு முக்கிய அரசியல் புள்ளியாவார். போருளாதாரத்துறை மந்திரியாக வந்து தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவர் பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல்களில் ஷ்ரோடருக்கு வெகு சமீபத்தில் வந்திருந்த ஸ்ரொய்பர் 40 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய அரசியல் வாழ்வை, வலதுசாரி பழமைவாத பவேரிய மாநில முதல்வர் Franz-Joseph Strauss இடம் அலுவலக மேலாளராக தொடங்கியிருந்தார்.Suddetsche Zeitung க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் பெரும் கூட்ணியை "ஒரு மகத்தான வாய்ப்பு" என்று கூறியுள்ளார். SPD மற்றும் CDU/CSU இணைப்பு கூட்டணி அரசாங்கம், இரு கட்சிகளும் ஒன்றோடொன்று பூசலிடும் வகையில் அரசியல் தேக்கநிலை ஏற்படலாம் என்று முதலாளிகள் சங்கம் கொடுத்த எச்சரிக்கைகளுக்கு மாறாக, ஸ்ரொய்பர் புதிய கூட்டணி அரசாங்கம் அரசியலில் பெரும் வாய்ப்புக்களை நல்கும் என்று கூறியுள்ளார்."பல முக்கியமான விவாதப்பொருட்கள் உள்ளன", என்றும் அடுத்த அரசாங்கம் குவிப்புக் காட்ட வேண்டிய பிரிவுகள் மூன்று உள்ளதாக அவர் குறிப்பட்டார். அவை, "நீண்டகால சேமிப்பைப் பெறும் வகையில் வரவுசெலவுத் திட்டச் சீர்திருத்தம்" -இதன் பொருள் இன்னும் கூடுதலான வகையில் சமூக நலச் செலவுகளில் குறைப்பு. இரண்டாவதாக, "சமூக பாதுகாப்பு முறையில் சீர்திருத்தம்", அதாவது ஓய்வூதியங்கள், மற்றும் சமூக பாதுகாப்பு செலவுகளில் இன்னும் வெட்டுக்கள். மூன்றாவதாக, "பெரும் கூட்டணி விரைவான கூட்டரசு சீர்திருத்தத்திற்கு சிறந்த அரங்கு." எல்லாவற்றிற்கும் மேலாக, இது மாநில சட்டமன்ற தேவைகளுக்கான இழப்பீட்டு தொகை பெரிதும் அகற்றப்படுவது, பல மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் இடையே கூடுதலான போட்டியை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது உள்பட அரசாங்க நிதியங்கள் மிகப் பெரிய அளவில் மறுசீரமைப்பிற்கு உட்படும். வறுமை சம்பந்தப்பட்ட பெருக்கம் மற்றும் பகுதிச் சமத்துவமற்ற தன்மையின் வளர்ச்சி வலுவான மையப்படுத்தல் மூலம் ஈடு செய்யப்படும். அதே நேரத்தில், ஷ்ரோடரின் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட "வேலைகளுக்கான உடன்படிக்கைகள்" என்ற முறையில் தொழிற்சங்கங்களை புதுப்பித்து, அரசாங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகக் குழுக்கள் இவற்றிடையே ஒத்துழைப்பை வளர்க்க விரும்புவதாக ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்துள்ளார். இதன் நோக்கம் SPD உடனான கூட்டணியின் ஒத்துழைப்பை பயன்படுத்தி, தொழிற்சங்க தலைமையை அரசாங்க திட்டத்திற்குள் கரைத்து, தொழிலாளர்கள் நிலைமைகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதாகும். வேலைப் பாதுகாப்பு மற்றும் இப்பொழுது நடைமுறையில் இருக்கும் காப்புவரி உடன்படிக்கைகள் படிப்படையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும். பெரும் கூட்டணி உருவாக்கத்தை சூழவுள்ள துவக்க அறிவிப்புக்களும் நடவடிக்கைகளும் பெருவணிகக் கூட்டமைப்புக்களின் நலன்களை செயல்படுத்தும் பெரும் பழமைவாத அரசாங்கமாகத்தான் இது இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் அரசியல் உரிமைகள்மீது வன்முறைத் தாக்குதல்கள் வருவதை எதிர்கொள்ள கட்டாயம் தயாராக இருக்க வேண்டும். இந்த விதத்தில் இடது கட்சி ஒரு பெருங்கேடு பயக்கவல்ல பங்கைக் கொண்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் இருந்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை. SPD பெரும் கூட்டணியில் இருப்பது யூனியன் கட்சிகளால் திட்டமிடப்படும் மோசமான தாக்குதல்களை குறைக்கும் என்று Oskar Lafontaine மற்றும் Gregor Gysi இருவரும் பலமுறை தெரிவித்துள்ளனர். இடது கட்சியை அமைக்க ஜனநாயக சோசலிசத்திற்கான கட்சி (Party of Democratic Socialism) உடன் உடன்பாடு கொண்டிருந்த WASG (தேர்தல் மாற்றீடு) இன் தலைவரான Klauss Ernst, ஞாயிறன்று ஜேர்மன் தொலைக்காட்சியில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் SPD, யூனியன் கட்சி கூட்டணியில் இருக்கும்போது சமுகரீதியாய் மிதமான கொள்கையை தொடரும் என்று அறிவித்துள்ளார். உண்மை முற்றிலும் மாறாக உள்ளது. இத்தகைய அறிக்கைகளினால், இடது கட்சி தொழிலாளர்களையும் வேலையில்லாதோரையும் திசைதான் திருப்பியது; அதேநேரத்தில் பெரும் கூட்டணியை அறைகூவலுக்கு உட்படுத்தும் தன்னுடைய திறனற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது. SPD- பசுமைக் கட்சி கூட்டணியின் ஏழாண்டுகாலம் இரண்டு கட்சிகளையும் வலது போக்கிற்கு தொடர்ந்து மாற திட்டமிடுவதற்கு போதுமான கால அவகாசமாக மாற்றிவிட்டது; இது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளின் மீதான மிகக் கடுமையான தாக்குதல்களில் பொதிந்திருக்கிறது. அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் கிழக்கு மாநிலங்களில், PDS கட்சியானது இத்தகைய தாக்குதல்களின் முன்னணியில்தான் உள்ளது. தேர்தலும் பேர்லினில் புதிய அரசாங்கக் கூட்டணி அமைப்பும், SPD மற்றும் இடது கட்சியில் இருந்து சுயாதீனமாகவே தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு ஒரு புதிய அரசியல் நோக்குநிலையை கொடுக்க முடியும் என்பதை தெளிவாக்கியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஒன்று மட்டுமே சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு அத்தகைய மாற்றீட்டை கொடுக்கக் கூடிய கட்சியாக தேர்தலில் தலையீடு செய்திருந்தது. |