World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Interest in the SEP's presidential campaign in Sri Lanka's north

இலங்கையின் வடக்கில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் பற்றி ஆர்வம் ஏற்பட்டுள்ளது

By our correspondent
5 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் நவம்பர் 17 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) பிரச்சாரம் பற்றி, யுத்தத்தால் அழிவுற்றுள்ள தீவின் வடக்கில் உள்ள பிரதான நகரமான யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள் சிறப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சோ.ச.க யின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான விஜே டயஸ் போட்டியிடுகின்றார்.

தமிழ் நாளிதழான உதயன், சோ.ச.க செப்டெம்பர் 22 கொழும்பில் நடத்திய ஆரம்ப பத்திரிகையாளர் மாநாட்டைப் பற்றி முன்பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தியில்: "சமாதானத்தை அடைவதற்கான ஒரே வழி வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதே. சோ.ச.க யின் பிரதான இலக்கு முதலாளித்துவ அமைப்பை தூக்கிவீசுவதே என விஜே டயஸ் விளக்கினார்," எனத் தெரிவித்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இன்னுமொரு செய்தித்தாளான வலம்புரி, சோ.ச.க பிரச்சாரத்தின் குறிக்கோள் "வாக்கு சேகரிப்பதல்ல, மாறாக தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றிய ஒரு அரசியல் கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதே," என்ற விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தது. ஈழநாடு பத்திரிகை, சோ.ச.கட்சியானது, யுத்தத்தையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்ப்பதற்காகவும் மற்றும் உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தேர்தலில் போட்டியிடுகிறது என செய்தி வெளியிட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு பிரதான முதலாளித்துவ வேட்பாளர்களது பிரச்சாரங்களையிட்டு பரந்த வெகுஜன அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலைமயின் மத்தியிலேயே ஊடகங்கள் சோ.ச.க பற்றி ஆர்வம் காட்டுகின்றன.

செப்டெம்பர் 23ல் வெளியான உதயன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இந்த உணர்வுகளை வெளிப்படுத்தியது. "பச்சை (ஐ.தே.க) மற்றும் நீலம் (ஸ்ரீ.ல.சு.க) என்ற நிறங்கள் மாத்திரமே வித்தியாசமானவை, ஆனால் அவர்கள் இருவரும் இனவாதிகளே," என அது குறிப்பிட்டுள்ளது.

29 வயதான யாழ்ப்பாண மீனவர் ஒருவரிடம் இந்தத் தேர்தல் பற்றி கேட்டபோது, அவர் தனது மனக்கசப்பை வெளிப்படுத்தினார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவித்த போது: "யார் அதிகாரத்திற்கு வந்தாலும் (இந்த இரு கட்சிகளிடம் இருந்து) எமக்கு என்ன கிடைக்கப் போகிறது? எனக் கேட்டார்.

ஏனையவர்கள், ஜாதிக ஹெல உறுமய மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உடனான இராஜபக்ஷவின் தேர்தல் கூட்டணி குறித்து கவனம் செலுத்தினர். இந்தக் கட்சிகள், தற்போதைய யுத்த நிறுத்தத்தையும் மற்றும் டிசம்பர் 26 சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை கூட்டாக விநியோகிப்பதற்காக கொழும்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையையும் எதிர்க்கின்றன.

"ஜே.வி.பி அல்லது ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுடன் இராஜபக்ஷ என்ன செய்யப் போகின்றார்? அவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதைக் கொடுத்தாலும் எதிர்க்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளை தாக்குகிறார்கள். நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல. ஆனால் இந்தக் கட்சிகள் தமிழர்களுக்கு எதிரானவை. அவர்கள் அவசரகால சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வாக்களித்தார்கள். தமிழ் மக்களாகிய நாங்களே துண்பப்பட வேண்டும்," என ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார்.

விக்கிரமசிங்க பற்றியும் அதே அளவு நம்பிக்கையிழந்துள்ள அவர்: "அவர் ஒரு வஞ்சகர். அவர் சொல்வதொன்று செய்வதொன்று. விக்கிரமசிங்கவும் அவசரகால சட்டத்திற்கு வாக்களித்தார். எங்களுக்காக எவரும் எதுவும் செய்வதில்லை," என்றார்.

யாழ்ப்பாண மக்கள், மூன்று வருட கால யுத்த நிறுத்தம் முறிவடைந்து மீண்டும் வெடிக்கவுள்ள யுத்த ஆபத்து பற்றியே கூடுதலாக சிந்திக்கிறார்களே அன்றி, ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி அல்ல. யாழ்ப்பாண பொலிஸ் அத்தியட்சகரான சார்ஸ் விஜேவர்தன ஜூலையில் கொலை செய்யப்பட்டதை அடுத்தும், ஆகஸ்ட் 12 வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்தும் தீவின் வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் வளர்ச்சியடைந்து வருவதையிட்டு பலர் அக்கறை காட்டினர்.

கதிர்காமர் கொலையின் பின்னர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இராணுவத்திற்கு விரிவான பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக அமுல் செய்தார். இந்த அவசரகால அதிகாரங்கள், அடுத்தடுத்து தேவையான பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

உக்கிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே இந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் 18 பொலிஸ் நிலையங்களிலும் இப்போது சிறப்பாக ஆயுதபாணிகளாக்கப்பட்ட துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ சிப்பாய்கள் பொலிஸ் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அரன்களில் மட்டுமன்றி, போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை பரிசோதனை செய்யும் போதும் அவர்களுடன் காணப்படுகின்றனர். இராணுவமும் கடற்படையும் தமது ரோந்து நடவடிக்கைகளை இரவிலும் பகலிலும் அதிகப்படுத்தியுள்ளதுடன் சோதனைச் சாவடிகளையும் மீள்நிர்மானித்து வருகின்றனர்.

கடுமையாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், 2002 பெப்பிரவரியில் விடுதலைப் புலிகளுக்கும் கொழும்பு அரசாங்கத்திற்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலகுவாக்கப்பட்டன. ஒப்பீட்டுப் பார்க்கும் வகையில் அண்மைய காலம் வரை, காரைநகர், ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு போன்ற அருகில் உள்ள தீவுப் பகுதிகளில் இருந்து மக்கள் யாழ்ப்பாணத்திற்கு பயணிக்கும் போது மேலீடான சோதனைகளுக்கே உட்படுத்தப்பட்டனர். பஸ் வண்டிகளுக்குள் ஏறும் இராணுவ மற்றும் கடற்படை சிப்பாய்கள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இறங்கிவிடுவார்கள். இப்போது அவர்கள் அடையாள அட்டைகளையும் பொதிகளையும் பரிசோதிப்பதோடு மக்களை விசாரணைக்கும் அழைத்துச் செல்லக்கூடும்.

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான பிரதான வீதியில் பயணிப்பவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கடந்தே செல்லவேண்டும். விடுதலைப் புலிகளும் இராணுவமும் தென்பகுதியில் ஓமந்தையிலும் வடக்கில் முகமாலையிலும் பரிசோதனை நிலையங்களை வைத்துள்ளன. அதனூடாக பயணிப்பவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய இரு சாவடிகளிலும் தங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள முகவரியை உடைய அடையாள அட்டையைக் கொண்ட எவரும் உடனடியாக ஒரு சந்தேக நபராக கருதப்படுவதோடு கடுமையான சோதனைக்கும் விசாரணைக்கும் உள்ளாக்கப்படுகிறார். எந்தவொரு இளம் தமிழரையும் விசாரிப்பதற்காக புலணாய்வு அதிகாரிகளும் உள்ளனர். விடுதலைப் புலகளும் அவர்களது சோதனை நடவடிக்கைகளை உக்கிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதங்களாக, விடுதலைப் புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டு பிரதேசங்களில் இருந்து தமது அரசியல் அலுவலர்களை திருப்பி அழைத்துக்கொண்டனர். கிழக்குப் மாகாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. பகிரங்கமாக எந்தவொரு காரணத்தையும் அவர்கள் வெளியிடாத போதிலும், இராணுவத்தைப் போல் விடுதலைப் புலிகளும் தெளிவாகவே சாத்தியமான ஒரு மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில், விடுதலைப் புலிகளுக்கும் அவர்களில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவுக்கும் இடையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் குழு இராணுவத்தின் இரகசியமான ஆதரவைப் பெற்றுள்ளது.

இராணுவம் பருத்தித்துறையில் செப்டெம்பர் 19ல் ஒரு கூட்டத்தை நடத்தியதை அடுத்து கரையோரப் பிரதேசங்களுக்கு ஒரு பாஸ் (pass) நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறு யுத்த கால நடைமுறைக்கு மீண்டும் திரும்புவதால், இப்போது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது நிழற்படத்துடனான ஒரு அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். செப்டெம்பர் 29ல் காரைநகர் தளத்தில் உள்ள கடற்படை அலுவலர்கள், மீனவர்களை நிழற்படம் எடுப்பதற்கான அவர்களது திட்டத்தைப் பற்றி அறிவிப்பதற்காக பத்து மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு ஒரு கூட்டம் நடத்தினர்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதனாது, பரந்த அதிருப்தியை உக்கிரமாக்கியுள்ளது. உள்ளூர் வெகுஜனங்கள் மூன்று வருடகால யுத்த நிறுத்தத்தில் பெரிதாக இலாபயமடையவில்லை. துப்பாக்கிகள் அமைதியாக இருந்த போதிலும், அன்மைய வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த போதிலும், வாழ்க்கை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவேயில்லை. மீனவர்களைப் பொறுத்தளவில் பாஸ் நடைமுறையை மீண்டும் ஸ்தாபிப்பதானது அவர்களது வேலைக்கு தடங்கலாக இருப்பதோடு குறைந்த வருமானத்திற்கும் வழிவகுக்கும்.

யுத்த நிறுத்தத்திலும் கூட இராணுவம் பரந்த உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்துக் கொண்டுள்ளது. இந்த உயர் பாதுகாப்பு வலயங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகள், பண்னைகள் மற்றும் வியாபார நிலையங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள். மூன்று வருடகால எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எதுவும் தீர்க்கப்படவில்லை. பத்தாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அகதி முகாம்களில் துன்பப்படுகின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடற்கரைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் டிசம்பர் 26 சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும், ஒன்பது மாதங்களின் பின்னரும், அங்கு மீள் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை. தீவின் ஏனைய பிரதேசங்களைப் போலவே, யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்க அதிகாரிகளாலும் மற்றும் விடுதலைப் புலிகளாலும் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் நேரடியாகவோ அல்லது கொழும்பு பாராளுமன்றத்தில் அவர்களது அரசியல் துணைக் கருவிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவோ எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் நிறுத்தவில்லை. விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வன், விடுதலைப் புலிகள் "ஜனாதிபதி தேர்தலில் ஆர்வங்கொள்ளவில்லை," எனத் தெரிவித்தார். எல்லாவகையிலும் பார்க்கும் போது, விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ தேர்தலின் பின்னர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் எதிர்பார்ப்பில் இரு பிரதான கட்சிகளில் ஏதாவதொன்றிற்கு வாக்களிக்குமாறு தமிழ் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவார்கள் என்ற சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க யைப் போலவே, தமிழ் முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் விடுதலைப் புலிகளுக்கும் சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை அடைவதற்கான முன்னோக்கு கிடையாது.

Top of page