World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Leading Indian daily calls for suppression of strikes and unions வேலை நிறுத்தங்கள், தொழிற்சங்கங்களை அடக்குவதற்கு முன்னணி இந்திய நாளேடு அழைப்பு By Keith Jones இந்தியாவில் உள்ள முக்கிய ஆங்கில மொழி நாளேடுகளில் ஒன்றாகிய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (The New Indian Express), வேலைநிறுத்தங்களும், தொழிற்சங்கங்களும் சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கப்படவேண்டும் என்ற அசாதாரண தலையங்கத்தை அதன் செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமை இதழில் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் வலதுசாரி பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டுகள்), மற்றும் அதன் கூட்டாளிகள் ஆதரித்து நடத்திய ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்காக, அவற்றை நீண்ட வடிவில் கண்டனத்திற்கு உட்படுத்திய பின்னர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்ததாவது: "...தன்னை நன்கு நிதானப்படுத்திக் கொண்டு உண்மையில் சில 'புதிய-தாராளக் கொள்கைகளை' செயல்படுத்தவேண்டிய நேரம் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டது. அதன் தொடக்கமாக அது தொழிற்சங்கங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை தடை செய்வதில் ஆரம்பித்து, இந்தியாவை இப்பெரும் கொள்ளைநோயில் இருந்து எப்பொழுதுமே விடுவித்திவிடும் முயற்சியில் ஈடுபடலாம்." 60 மில்லியன் மக்கள் வேலையை விட்டு வெளியேறியதை கண்ட செப்டம்பர் 29 பொது வேலைநிறுத்தம், இந்திய முதலாளித்துவத்தின் பொருளாதார "சீர்திருத்த" செயற்பட்டியலுக்கு இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் தொடர்ந்து வரும் பரந்த எதிர்ப்பிற்கு தக்க சான்றாக இருக்கிறது. இந்தியாவின் முந்தைய ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி, வெளிநாட்டு மூலதனம், இலாபங்கள் மற்றும் பங்குகள் விலைகளிலான திடீர் பெருக்கத்தை இந்தியா "ஒளிர்கிறது" என்று கூறியதற்கு சாதாரண இந்தியர்கள் தங்கள் தீர்ப்பை கொடுக்குமாறு தேர்தல்கள் நடந்தபோது, அக்கூட்டணி, தேர்தல்களில் சிதறடிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமை வகிக்கும் UPA இன்று பதவியில் தப்பிப் பிழைத்திருப்பதற்கு காரணமே அது பாராளுமன்றத்தில் இடது முன்னணியின் ஆதரவை பெற்றிருப்பதால்தான்; இக்கூட்டணி, பொதுச் சுகாதார நலம், கல்வி, ஏழைகளின் அச்சுறுத்தும் நிலைபற்றி எச்சரிக்கையை கொண்டிருப்பதாக வெளிப்படையாக கூறுகின்றது. ஆனால் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி அமல்படுத்திய தனியார் மயமாக்குதல், வேலைநீக்கம், ஒப்பந்தப்பணி ஆகியவற்றின்மீது இருந்த தடைகளை அகற்றுதல், விவசாயப் பொருட்கள் விலைக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அரசாங்க செலவினங்கள் இருந்ததை அகற்றுதல், தனியார்-அரசாங்க கூட்டுக் கட்டுப்பாட்டை நிறுவனங்கள்மீது கொள்ளுதல், பெருமளவில் புதிய இராணுவச் செலவினங்கள் செய்தல் போன்ற பெருவணிகத்திற்கு ஆதரவான அதே செயற்பட்டியலைத்தான் இதுவும் தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது. ஆயினும்கூட, நியூ இந்தியன் எக்ஸ்பிரசின் தலையங்கம் சான்று கூறுகிறவாறு, இந்திய பெருவணிகத்தின் சில பிரிவுகள் "சீர்திருத்தத்தின்" முன்னேற்ற வேகத்துடன் பொறுமையை இழந்துவருகின்றன. சந்தைகள், இலாபங்கள், முதலீடுகள், வளங்கள் ஆகியவற்றிற்கான என்றும் உக்கிரம் அடைந்துவரும் போட்டியில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில், பெருவணிகர்கள், சர்வதேச மூலதனத்திற்கு குறைவூதிய உழைப்புக்கான சொர்க்கமாக இந்தியா மாறுவதற்கு பொதுமக்களுடைய எதிர்ப்பு, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அனைத்தும் நசுக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர். இந்திய அரசு ஏற்கனவே கணிசமான முறையில் இந்த இலக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது; நீதிமன்றங்கள் ஹர்த்தால்கள் நடத்துவதற்கான உரிமைகள் அல்லது, அரசியல் வேலநிறுத்தங்கள் உள்பட ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் தொடர் சட்டங்களை வெளியிடுகின்றன. 2003 கோடையில், தமிழ்நாடு மாநில அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்திருந்த 200,000 அரசாங்க ஊழியர்களை வேலையில் இருந்து அகற்றி, அவர்களுக்கு பதிலாக கருங்காலிகளை நியமிக்க முயன்றபொழுது இந்திய உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மாநில அரசாங்கம் அதன் உரிமைகளுக்குட்பட்டு நன்கு இயங்குகிறது என்று தீர்ப்பு அளித்தது. அரசு ஊழியர்கள், மற்றும் எதிர்காலத்தில் மற்ற தொழிலாளர்களும் அரசியலமைப்பு ரீதியாக வேலைநிறுத்தம் செய்யும் உரிமை படைத்தவர்கள் அல்லர் என்றும் நீதிமன்றம் மேலும் கூறியது. சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் பதிப்பகப் பேரரசான "நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கம்பெனிகளின் குழுமம்" என்பதின் பிரதான நாளேடாக புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் சேவைசெய்து வருகிறது. அதன் செல்வாக்கும் இந்திய பெருவணிக நடைமுறையுடனான தொடர்புகளும் இது குறிக்கும் தன்மையைவிடக் கூடுதலாகும்; புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் என்ற இரண்டும் இன்னும் நெருக்கமான தொடர்பை மும்பையை தளமாக கொண்ட இன்னும் பெரிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸுடன் கொண்டுள்ளன. (இந்த இரண்டு எக்ஸ்பிரஸ் குழுமங்களும் 1990களின் கடைசிப் பகுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம் நாத் கோயங்காவின் பேரப்பிள்ளைகள் அவரது பேரரசை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தோன்றியவை). இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாட்கள் பெரும் செல்வாக்குப் படைத்த இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் உட்பட மொத்தம் 5 மில்லியனுக்கும் மேலான மொத்த வாசகர்களை கொண்ட ஏடுகளை பிரசுரிக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பகிர்ந்துகொள்கின்றன. செப்டம்பர் 30ம் தேதி இரண்டு நாளேடுகளுமே அவர்களுடைய முக்கிய தலையங்கத்தில் இடது கூட்டணிக்கு எதிராக ஒரு வசைமாரியை "தீவிர பாசாங்குத்தனம்: இந்த மரண ஓலத்தை இடதுகள் நிறுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. கடைசி பந்தியை தவிர, இரண்டு தலையங்கங்களுமே ஒன்றாகத்தான் உள்ளன. புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வேலைநிறுத்தங்களையும் தொழிற்சங்கங்களையும் சட்டத்திற்கு புறம்பு என அறிவித்து நிறுத்தப்படவேண்டும் என்ற "மனவேதனைக்காக" கோரியுள்ளபோது, இந்தியன் எக்ஸ்பிரசில் உள்ள தலையங்கம் இடது கூட்டணி UPA அரசாங்கத்திற்கு ஆதரவை நிறுத்திக் கொண்டால் "மேலும் நேர்மையாக இருக்கும்" என்று கூறி முடித்துள்ளது. வேறுவிதமாகக் கூறினால், மும்பை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழுவும் கோயங்கா வணிகப் பேரரசின் கிளையும், சென்னை ஆசிரியர் குழுவும் சென்னை கிளையும் ஆசிரிய தலையங்கத்தில் கிளர்ச்சியூட்டிய ஜனநாயக விரோத பகைமை நோக்கிற்கு கூடுதலான வகையில் இடம் கொடுத்துவிட்டதாகக் கருதி, இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் என்ன நினைக்கின்றன என்பதை வெளிப்படுத்திவிட்டதாகவும் உணர்ந்தன. எனவே அவை தொழிற் சங்கங்களும், வேலநிறுத்தங்களும் தடைசெய்யப்படவேண்டும் என்று கோரும் கடைசி வாக்கியங்களை பதிலீடு செய்திருக்கின்றன, அதாவது சர்வாதிகார ஆட்சி வடிவமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதை வேறுவிதமாக அதே தலையங்கத்தில் சொல் வடிவில் மாற்றிக்கூறியுள்ளன. "உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில்" வர்க்க உறவுகளின் நிலை இதுதான். |